Friday, May 7, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

4


கண்களை மெல்ல மூடி இருந்தான். அவன் சிந்தனைக்கு வேலை கொடுப்பது போல் திருவள்ளுவர் முன்னே நின்றார். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’, என்றொரு வினாவைக் கேட்டுவிட்டு வள்ளுவர் வந்த வழியே சென்று மறைந்துவிட்டார். சிந்தனை விரிந்தது. மூளை துருவித் துருவி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தப் பரந்த உலகில் ஒரு பெண்ணைவிடவும் உயர்ந்தது இல்லையா? வேறு ஏதேனும் உண்டா? ஏன் இந்த வினாவைக் கேட்டார்?;.

அவர் கூறிய விடையும் திருக்குறளில் உண்டு. அவரது விடை ‘கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்’;, என்பதாகும். ஆனால் அவரது விடை சரியான விளக்கத்தை உடையதா? இன்றைய நவீன யுகத்தில் வேறுவகையான விளக்கங்கள் உண்டா? ஆனால் அந்த வினாவினுக்கு ஏதோ ஒரு புது வடிவத்தைக் காணவேண்டிக் கேட்டிருக்கலாம். பெண்ணாகப் பிறப்பதற்குப் பெருந்தவம் செயதிருக்க வேண்டும் என்பது கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களது கருத்தாகும்.

மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா.

ஒரு பெண் இந்த உலகின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணம் ஆகின்றாள். நமது இதிகாச புராண வரலாறுகள் இதற்குச் சான்றுகளாகின்றன. இந்த மண்ணில் அறம் தழைத்தோங்கப் பெண்ணின் தயவு தேவைப் படுகிறது. இல்வாழ்வில்தான் இன்பத்தைக் காணமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த இன்பம் இருவகைத்து. ஒன்று சிற்றின்பம். அது உடலாலும் உள்ளத்தாலும் பெறுவது. அல்லது அடைவது. இது நிலையில்லாதது. அடுத்தது பேரின்பம். முக்தி நிலைக்கு வித்திடுவது. இவை இரண்டும் ஒரு நல்ல பெண் மூலம்தான் பெறமுடியும். நாட்டில் அறம் ஓங்கவும், அமைதி நிலவவும், நன்மக்களைப் பெற்று நலம்காணவும் பெண்களே பெருந்துணை ஆகின்றார்கள். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என வள்ளுவர் கேட்டார் போலும்.

“நித்திரைபோல் தெரியவில்லை. அப்படி என்ன கடும் யோசனை”? மேரிதான் கேட்டாள். ஆனந்தன் அதளபாதாளத்தில் விழுந்தெழும்பிய உணர்வினைப் பெற்றான். மெல்லத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “ அப்படி ஒன்றுமில்லை. சும்மா கண்ணை மூடியபடி யோசித்தேன் அவ்வளவுதான்.;.” ஒருவாறு சமாளித்தான். மேரி புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில்தான் எத்தனை கோடி அர்த்தங்கள் புரண்டோடின. அவற்றுள் எதனை அவன் பற்றிக் கொள்வது? ஏதாவது சொல்ல வேண்டும்போல் தோன்றியது. “நீங்கள் ரீச்சரோ”? ஆனந்தன் உளறிவிட்டான்.. “பார்த்தால் அப்படித்தான் தெரிகிறதா”? மேரி தொடர்ந்தாள். “உங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.” சமாளித்தான். “ரீச்சராகத்தான் நினைத்தேன். சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நான் வேலை செய்வது அம்மம்மாவுக்குப் பிடிக்காது. அதனால் வேலைக்குப் போவதில்லை. வீட்டில்தான் இருக்கிறேன்.” மேரி பதிலளித்தாள்.

“எப்படிப் பொழுது போகிறது”?. ஆனந்தன் தொடர்ந்தான். “ “நமக்காகப் பொழுது ஒருநாளும் காத்திருக்காது. அது தானாகவே போகும். அதன் அசைவில்தான் உலகின் இயக்கம் இருக்கிறது.” ஒரு வேடிக்கைக்காகச் சொன்னாள். பின்னர் அவளே தொடர்ந்தாள். “வீட்டில் எனது பொழுது போக்கு தையல் தைப்பது. அருமையான, பயனுள்ள பொழுது போக்கு. அக்கம் பக்கமுள்ள ஏழைகள் தைப்பதற்கு வழியில்லாது தவிப்பார்கள். தைத்துக் கொடுப்பேன். அதற்கும் அம்மம்மா ஏசுவார்”.?
“ஏன்.”?
“காசு வாங்கித் தைத்துக் கொடு என்பார். நான் அதற்கு உடன்படுவதில்லை. அதனால்.” மெல்லென மின்னல் வெட்டியது போன்ற பிரமை. அவளது செவ்விதழகள்; அசைந்து மூடிக்கொண்டன. அதனை வெகுவாக இரசித்தான்.
“அவர் சொல்வதும் ஒருவகையில் சரிதானே”? ஆனந்தன் பதிலிறுத்தான்.

“எது சரி? வசதியுள்ளவர்களிடம் வாங்கலாம். ஆனால் அன்றாடம் காய்சிகளிடம் வாங்குவது சரியா? போடுவதற்கே உடுப்பில்லாத சனங்கள். அவர்களிடம் வாங்கலாமா”? மேரி கேள்வி மூலம் விடையளித்தாள். ஆனந்தன் மேரியின் காருண்ய மனதை வியந்தான். “உங்களுக்குத் தாராள மனது”. புன்னகையூடே பதிலளித்தான். அவர்களது உரையாடலை பெரியவர் ரசித்திருக்க வேண்டும். அவர் குறுக்கிட்டார். “தம்பி மேரி இரக்க சுபாவமுள்ளவள். அவளோட கதைக்க முடியாது. பெரிய மாக்சிஸ்சியவாதி போல் கதைப்பாள்.” ஆனந்தன் பெரியவரை ஆச்சரியமாகப் பார்த்தான். பெரியவர் மாக்சிஸ்யம் பற்றிப் பேசுகிறாரே.

“அப்பா நான் உண்மையைத்தான் சொன்னேன்.”
“அதைத்தான் நானும் சொல்லுறன்.” அவர் சிரித்தவாறே சொன்னார். ஆனந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான். புகைவண்டியின் இரைச்சல் செவிப்பறைகளை அதிரச் செய்தது. றெயிலின் கூவல் நீண்டொலித்தது. அவர்கள் கதைப்பதைக் காற்றும் இரைச்சலும் இழுத்துச் சென்றன. மேரி காதுகளில் கைகளை வைத்து அழுத்திப் பொத்திக் கொண்டாள். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். பயணிகள் தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சநேர அமைதி நிலவியது.
மேரியின் பதில்களும், சொல்லும் அழகும் ஆனந்தனை வசீகரித்தன. அவன் தன்னை மறந்து வேறு உலகத்தில் சஞ்சரித்தான்.

இதிகாச புராண வரலாறு போற்றும் பெண்களை நினைவு கூர்ந்தான். தான் வாழும் சமுதாயத்தில் உள்ள பெண்களையும் மேரியோடு இணைத்துப் பார்த்தான். வரலாற்றில் இடம்பெற்ற மொண்டிசோரி அம்மையார், புலோறன்ஸ் நைற்ரிங்கேல், அன்னை திரேசா, சமகாலத்தில் வாழும் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி போன்றோரும் வந்து நின்றனர். இந்த உலகத்தில் உள்ள உன்னதமான அத்தனை பெண்களையும் எண்ணிப்பார்த்தான். தனது சிந்தனையில் அரசியலில் ஈடுபட்ட, அல்லது ஈடுபடும் பெண்கள் பற்றிய பட்டியல் மெல்ல மறைந்து போய் விட்டது. சமூக நலனுக்காக, நலிவுடையோருக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் பெண்களின் பெருந்தன்மையை எண்ணிக் கொண்டான். விழிப்புலனற்ற ஹெலன்கெல்லர், விழிப்புலன் அற்றோருக்காகச் செய்த சேவையை எண்ணிப் பார்த்தான். மொண்டிசோரி அம்மையாரின் குழந்தைகளை நற்குடிகளாக ஆக்க வேண்டிய கல்வித் திட்டத்தை முன்வைத்தமை பற்றியும் சிந்தித்தான்.

உலகப் போரின்போது காயப்பட்ட போர்வீரர்களைக் கண்துஞ்சாது தனது கைகளிலே விளக்கொன்றை ஏந்தி அவர்களது துயர்களைந்த புளோறன்ஸ் நைரிங்கேலின் வரலாற்றையும் எண்ணினான். யாழ்ப்பாணத்தில் போரினால் அனாதைகள் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்யும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும் நினைவு கொண்டான். தமிழ் மக்களுக்காய், அவர்களது உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து தனது உயிரை விட்ட அன்னை பூபதியையும் கருத்தில் கொண்டான். அன்னை திரேசா கன்னியர் மடத்தில் சேர்ந்து துயருறும் அடிமட்ட ஏழைகளுக்காய் உழைத்ததையும், அவர் மறைந்தபின், அவருக்கு ரோமாபுரியில் வத்திக்கான் நகரில் போப்பாண்டவர் சின்னப்பர் அருளப்பரால் முத்திப்பேறு பட்டத்தை வழங்கி கௌரவித்ததையும் வியந்து ஒப்பு நோக்கினான்.

இவற்றை எல்லாம் தன்மனக் கண்முன் நிறுத்தி ஒரு தேடலில் ஈடுபட்டான். தனது நாட்டில் தனது கண்முன்னே திடமான நல்ல பயனுள்ள செயற்கரிய செயல்களில் ஈடுபட்டு உழைக்க உந்து சக்தியான உதவக்கூடிய ஒரு பெண்ணைக் கண்டு கொண்டான்.; தான் தேடிய அந்தப் பெண்ணை தனக்குத் தெரிந்த அல்லது அறிந்த பெண்களை விடவும் பலவழிகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் கண்டுகொண்டான். அகத்தின் அழகை முகத்தில் காணும் சக்தி கொண்டவன். மேரியை அவன் தேடும் பெருந்தகைப் பெண்ணாகக் கண்டு கொண்டான்..

மேரி ஒரு சமூகசேவகியாய், தனது கணவன் கொள்கையில் வீறுநடை போட்டு வெற்றி வீரனாய் உலகில் உலாவர உழைக்கும் நல்லதொரு மனைவியாய், தான்பெற்ற பிள்ளைகளை சமூகசேவைகளில் ஈடுபடுத்தி, செயற்கரிய செயல்கள் பல செய்யப் பாடுபட்டு உழைக்கும் அன்புடன் கூடிய தாயாய், ஆதரவற்ற பெண்களினதும், பிள்ளைகளினதும் பாதுகாவலுக்கான அடைக்கலத் தாயாய், வலது குறைந்த பிள்ளைகளின் ஊன்று கோலாய், முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் அன்னையாய், செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருக்கும் இல்லத் ;தரசியாய், சிறப்பாகக் கூறின் இனியன பேசி, இனியன செய்து, யாவுமாகி எங்கும் நிறைந்து நிற்கும் பெரும் சக்தியாய்த் திகழும் ஒரு பெண்ணாகக்; கண்முன்னே கண்டுகொண்டான். இந்தக் ‘கனவு மெய்ப்பட வேண்டும’;. அப்படி மெயப்பட்டால் நான் பாக்கியசாலிதான். நல்ல எண்ணங்கள் மனிதவாழ்க்கையில் நிறைவேறும் வல்லமையுடையன.

“என்ன இன்னும் கொஞ்சம் தேனீர் தரட்டுமா?” குரல்கேட்டு மீண்டும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். விழிகள் அவனையே நோக்கியிருந்தன. அவன் அந்தப் பார்வையில் சிக்குண்டுவிட்டான். “நன்றி. இப்போது வேண்டாம்.” அவன் சமாளித்தான். புகைவண்டி தடபுடத்து ஓடிக்கொண்டிருந்தது. பயணிகள் அதன் அசைவுக்கும், இரைச்சலுக்கும் ஏற்றவாறு தள்ளாடிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் மணிக்கூடு கட்டுவதில்லை. நேரத்தை எப்படி அறிவது? மேரியைப் பார்த்தான். அவனது செயலை அவனது பார்வை காட்டியது. “சரியாக நாலு மணி” சட்டென்று பதில் வந்தது. நான் நினைத்ததை இவள் எப்படிப் புரிந்து கொண்டாள். நன்றி கலந்த புன்னகையை வீசினான். அவள் அதனை பெற்று உள்ளத்தில் ஏற்றுக் கொண்டாள். “இப்போது கல்லோயாச் சந்தி வரும். எப்படியும் ஐந்து மணிக்குத்தான் கல்லோயாவில் இருந்து புறப்படும்.” சொல்லியவாறு யன்னலைத் திறந்து எட்டிப்பாரத்தான். கல்லோயாச் சந்தி நிலையம் தெரிந்தது. ஆனந்தன் சலித்துக் கொண்டான். வண்டி கிறீச்சிட்டு முன்னும் பின்னும் அசைந்து நின்றது.

“சரியாக ஐந்துமணிக்குப் புறப்படும்.” எழுந்து கைகால்களை அசைத்தான். வெளியில் இறங்கினால் நல்லது. இறங்கினான். பெரியவரும் எழுந்து நின்றார். இறங்கிப் பார்த்தால் என்ன? இறங்கினார். “அப்பா கவனம்.” மேரி தந்தையை எச்சரித்தாள். “நானும் வரட்டா அப்பா? சின்னவள் கேட்டாள். “சரி வா.” அழைத்தார். இறங்கினார்கள். “இவவின் பேரென்ன?” “எலிசபெத்” சின்னவள் தனது பெயரைச் சொன்னாள். “எலிசபெத்.. ரீ விருப்பமா? குடிப்பமா?” கேட்டான். “ஓம் குடிப்பமே..” பதில் வந்தது. “அக்காவிடம் பிளாஸ்கை வாங்கி வாங்கோ”. அதுக்குள்ள ரீ இல்லை. முடிஞ்சிட்டு” “அதுதான் வாங்கி வாங்க. நாங்க ரீ குடிச்சிட்டு அதற்குள் ரீ வாங்கிக் கொண்டு வருவம். சரியா”? எலிசபெத் ஓடினாள். “அக்கா பிளாஸ்கைத் தாங்க. ரீ வாங்கி வாறம்.” “அப்பா கேட்டாரா”? கேள்வி வந்தது. தயங்கினாள். என்ன சொல்வது. தீர்மானித்துவிட்டாள். “ஓமோம்” என்றாள். மேரி பெரிய பிளாஸ்க்கை எடுத்துக் கொடுத்தாள். எலிசபெத் பிளாஸ்க்கோடு வந்தாள். கன்ரீனை நோக்கி நடந்தார்கள். கன்ரின் பயணிகளால் நிறைந்து வழிந்தது.

பனி கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் சேர்ந்து உறைத்தது. புகைவண்டி. முன்னால் போவதும், பின்னால் நகர்வதுமாக இரைந்து கொண்டிருந்தது. மட்டக்களப்புக்கும் .திருகோணமலைக்கும் ஓரு புகையிரத வண்டிதான் உண்டு. திருகோணமலைப் பயணிகளுக்குச் சில பெட்டிகளும், மட்டக்களப்பிற்குச் சில பெட்டிகளும் இருக்கும். திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்குச் செல்வதற்கு ஒரு பெட்டி கொழுவப்பட்டிருக்கும். மட்டக்களப்பிருந்து திருகோண மலைக்கு ஒரு பெட்டி போடப்பட்டிருக்கும். இவை இரண்டு பெட்டிகளும் கல்லோயா சந்திவரை சென்று தரித்து நிற்கும். கொழும்பிலிருந்து வரும் பகைவண்டி மட்டக்களபபு நோக்கிப் புறப்படும். அப்போது திருகோணமலையிலிருந்து வந்த பெட்டி அதில் கொழுவப்படும். அதோபோல் மட்டக்கப்பில் இருந்து வந்த பெட்டி திருகோணமலை என்ஜினோடு கொழுவப்படும். இந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இருக்கைகள் கிடையாது போகும். அப்போது வேறு பெட்டிகளில் பயணம் செய்வார்கள். கல்லோயாவில் இறங்கிவிடுவார்கள். கல்லோயாவில் பிரிந்து செல்லவிருக்கும் பயணிகள் இருக்கைகளைத் தேடிப்பிடிப்பதில் இறங்கினார்கள்.

தேநீரோடு சுடச்சுட அப்பமும் வாங்கினான். எலிசபெத்தின் கைகளில் அப்பத்தைக் கொடுத்தான். அவளுக்கு அது கனத்தது. பெரிய பார்சலாக இருந்தது. தான் பிளாஸ்கை எடுத்துக் கொண்டான். சனநெருக்கடி அதிகம். பெரியவரால் முண்டியடித்து முன்னேற முடியாதிருந்தது. ஆனந்தன் இளைஞன். அவன் புகுந்து விளையாடினான். பணத்தையும் அவனே கொடுத்தான். பெரியவர் பணத்தை நீட்டினார். பிறகு பார்க்கலாம் என்று மழுப்பி விட்டான். எலிசபெத் பார்சலோடு விரைந்து நடந்தாள். யன்னலூடாகப் பார்சலைக் கொடுத்தாள். “இது என்ன இவ்வளவு பெரிய பார்சல்.” மேரி வாங்கிக் கொண்டே கேட்டாள். அப்பாதான் வாங்கினார். எலிசபெத் வண்டியினுள் ஏறி இருக்கையில் இருந்தவாறே பதிலிறுத்தாள். “சுடச்சுட அப்பம். சாப்பிடுவோம்”. பெரியவரும் இருக்கையில் இருந்தவாறே கூறினார். “அப்பா முகம் கழுவாமல் சாப்பிடுவதா? எனக்கு வேணாம்.” மேரி பின்னிழுத்தாள். “வண்டி இப்போது புறப்படாது. அது புறப்பட நேரமிருக்கு. பக்கத்தில் பைப் இருக்கு. தண்ணீர் தாராளமாக வருது. இறங்கிக் கழுவுங்க. பிறகு சாப்பிடலாம்.” ஆனந்தன் ஆலோசனை வழங்கினான். அம்மா மார்க்கிரட் பிள்ளைகளோடு இறங்கினார். மேரியும் இறங்கிக் கொண்டாள். குழாயடிக்குப் போய் முகம் கழுவி வந்தார்கள்.


தொடரும்…

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP