Wednesday, May 12, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

11

நல்ல அமைதியான சூழலில் விலங்ககம் இருந்தது. அம்புக்குறிகளைப் பொருத்தமாக இட்டு வழிகாட்டியிருந்தது. அதனைப் பின்பற்றிச் சென்றார்கள். எத்தனை வகைப் பறவைகள், விலங்குகள். ஓவ்வொன்றாகப்பார்த்துச் சென்றனர். மயூரி தனது சாதுரியத்தைக் காட்டினாள். மெதுவாக மேரியையும் ஆனந்தனையும் நெருக்கமாக்கினாள். அவர்களை கலந்துரையாட வழிசெய்தாள். புரிந்து கொண்ட பாத்து, லதாவைத் தன்பக்கம் இழுத்து மெல்ல மெல்ல பார்த்தபடி சென்றாள். சிம்பன்சியின் கேளிக்கை சந்தோசத்தை ஊட்டியது. எவ்வளவு சனக்கூட்டம். பொழுது போனதே தெரியவில்லை. மேரி முன்னாள் சென்றாள். மயூரி நடுவில் சென்றாள். ஆனந்தன் பின்னால் நடந்தான். மயூரி இப்போது மேரியின் முன்னால் விலகி நகர்ந்தாள். மேரியின் பின்னால் ஆனந்தன். "என்ன பேசாமல் வாறீங்க.“ "இல்லையே நான் உங்களோடு பேசிக்கொண்டுதான் வாறன.;“ புன்னகையோடு பதிலை வீசினான். "என்னோடவா...அது எப்படி? எனக்குக் கேக்கல்லையே.“ அவள் சொன்னாள். "பொய் சொல்லாதீங்க.. உங்க மனதக் கேளுங்க... நான் பேசியதைச் சொல்லும்.“ மேரிக்குக் குழப்பமாக இருந்தது. "மேரி நீங்க போகும்போது என்ன நினைச்சீங்க...அதில ஒன்டச்சொல்லுங்க..“ அவன் சொல்ல மேரி யோசித்தாள்.

"உங்களப் பற்றித்தான் நினைத்தன்“. சட்டெனச் சொன்னாள். "சரி நான் சொல்லட்டா..“? மெதுவாகச் சொன்னான். "ம்...சொல்லுங்க...“ அவள் சொன்னாள். "மேரி உங்கள் அழகு, குணம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு“. கேட்டதும் மேரியின் முகம் குப்பென்று நாணத்தால் சிவந்தது. அவன் தொடர்ந்தான். "அதவிட மயூரிக்குப் பிடிச்சிருக்கு. மயூரி என்ர உடன்பிறவாத தங்கச்சி. அவ உங்களப்பற்றி நிறையவே சொல்லியிருக்கா. இங்க வாறதுக்கான ஏற்பாடும் அவதான் செய்தவ. டேவிட் ஐயா என்ர அப்பா மாதிரி. அவர் என்னில நல்ல கரிசன கொண்டிருக்கிறார். உங்கட சமயத்தப்பற்றி எல்லாம் எனக்குக் கவலயில்ல. மனம்தான் எல்லாம்.“

நமது மனங்கள் நல்லாயிருந்தால் போதும். "சரி...ஒன்டுகேக்கிறன். சொல்லட்டா? கோவிக்கக்கூடாது..“. "சொல்லுங்க...“ அவள் சொன்னாள். "என்னை உங்களுக்குப் புடிச்சிருக்கா“? தயங்கியபடியே சொன்னான். மெதுவாக ஆனந்தனின் பக்கத்தில் சென்றாள். அவனது கைகளை இறுகப் பற்றினாள். "எப்ப உங்களச் சந்தித்தேனோ அன்றே தீர்மானித்து விட்டேன்.“ கலங்கிய கண்களுடன் கூறினாள். "என்னென்று“? கேட்டான். "வாழ்வதென்றால் உங்களோடுதான் வாழ்வதென்று“ சொல்லிக்கொண்டு தலை கவிழ்ந்தாள். அவளது முகத்தையே பார்த்தவாறு நின்றான்.

"அண்ணா... நாங்க இங்க நிக்கிறம். வாங்க..“ மயூரி அழைத்தாள். தங்களைச் சுதாகரித்துக் கொண்டு விரைந்தார்கள். 'அண்ணி.... என்ன இடம் பொருள்...ஏவல் மறந்த நிலையோ“? மயூரி கிண்டலடித்தாள். "என்ன மயூரி.. இதுதானே கூடாது“. மேரி சிணுங்கினாள். "சரி..சரி.. என்ன செய்யலாம். சிலநேரங்களில் அது தானே வந்திரும் அண்ணி. ஆமா..அண்ணன் என்னவாம்“? கேள்விக் கணை தொடுத்தாள். பதிலிறுக்கமுன் பாத்திமா நெருங்கினாள். "மேரி.. உங்க 'போய்பிறண்ட்’ நல்ல சிமாட். நல்ல பொருத்தம். வாழ்த்துக்கள். எப்ப வெடிங்கேக் கிடைக்கும்.“ கைலாகு கொடுத்து வாழ்த்தினாள். லதா மேரியின் காதுக்குள் குசிகுசித்தாள். மேரி கொடுப்புக்குள் குமிண்சிரிப்பை உதிர்த்தாள்.

டேவிட் செபஸ்தியாரோடும் மாகிரட்டோடும் அளவளாவினார். மாகிரட் சமயத்தில்தான் கண்ணும் கருத்துமாக இருந்தார். அத்துடன் அயலவர்களின் விமர்சனங்களுக்கும் மதிப்புக் கொடுத்தார். "இஞ்சபார் மாகிரட்... வாழப்போறது அந்தப்பிள்ளயள். நீயேன் அயலவரப் பற்றிக் கவலப்படுறாய். எல்லாம் நல்லாகத்தான் நடக்கும். ஆனந்தன் மிச்சம் நல்லபிள்ள. அவனுக்கு சமயத்தால பிரச்சின இல்ல. நீ விரும்புறமாதிரி கொழும்பிலேயே கலியாணத்த வைப்பம். ஆனால் இன்னும் இரண்டொரு மாதம் செல்லவேணும். மேரியின்ர விருப்பம் என்னவாம்.? கேட்டியளே“? டேவிட் விளக்கத்தோடு வினாவையும் தொடுத்து விடைக்காகப் பார்த்திருந்தார். மேரிக்கு நல்ல விருப்பம். பார்த்தாலே தெரியுதே. கேட்டும் பார்த்திட்டன். மாகிரட் பதில் சொன்னார்.


அரிய பல காட்சிகளைப் பார்த்து ரசித்த கலகலப்போடும் கூடவே நடந்த களைப்போடும் வெளியேறும் வாசலுக்கு வந்தார்கள். "நேரம் ஏழுமணியாகிறது. போவம்“. செபஸ்தியார் ஆயத்தமானார். வெளியில் வந்தார்கள். வஸ்வண்டி ஆயத்தமாக நின்றது. ஏறிக்கொண்டனர். இறுதியாக ஆனந்தன் ஏறினான். மேரிக்குப் பக்கத்தில் மட்டும்தான் இருக்கை இருந்தது. தயங்கினான். "பரவாயில்லை. வாங்க“ மேரி அழைத்தாள். பக்கத்தில் அமர்ந்தான். வஸ்வண்டியின் ஓட்டத்தில் உடல்கள் உரைசிக் கொண்டன. உரைசல் உறவுக்குப் பாலமிட்டது. "மேரி நாளைக்கு நாங்கள் போகவேணும். எனக்கு ஒரு 'இன்ரவியு’ இருக்கு. நான் எதிர்பார்த்த வேலையது. மனதுக்குச் சந்தோசத்தைக் கொடுக்கும். மெதுவாகச் சொன்னான்.

"நாளைக்கே போகவேணுமா? எப்ப இன்ரவியு“? மேரி கேட்டாள். " ஓம். போறதுதான் நல்லது. புதன்கிழமை இன்ரவியு. அதோட ஞாயிறு இரவு போவதற்கான இருக்கை வசதியும் செய்தாகிவிட்டது. இன்ரவியு பற்றி டேவிட் ஐயாட்டக்கூடச் சொல்லல்ல. மயூரிக்குத் தெரிந்தால் சந்தோசப்படுவாள். இனித்தான், திருகோணமலைக்குப் போய்த்தான் சொல்லவேணும்.“ ஆனந்தன் விளக்கினான். "இரண்டு மூன்று நாட்களாவது நிற்பீங்க என்றுதான் எதிர்பாத்தன். ஞாயிறு இரவு போவதற்கான இருக்கை வசதியும் செய்து விட்டிங்க. பரவாயில்ல. நமக்கு வேலையும் முக்கியம்தான். நீங்க விரும்பும் நல்ல வேலையென்ற படியால் போகத்தான் வேணும். மறக்கமாட்டிங்கதானே“? "எதைச் சொன்னீங்க மறக்க மாட்டிங்கதானே என்று“? கிண்டல் வினாவை வீசினான். "அதுக்குள்ள மறந்திட்டிங்களா? என்னைத்தான்“. நிலத்தைப் பார்த்தவாறே கூறினாள்.

அவளை உற்றுப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் திருமணப்பேச்சே வரவில்லை. அதற்குள் "நமக்கு வேலைதான் முக்கியம்“ என்றாளே. இருவரையும் ஒன்றாக்கிவிட்டு மறக்கமாட்டிங்கதானே என்று கேட்கிறாளே. அவளை நினையும் தோறும் வேதனையாகவும் அதேவேளை சந்தோசமாகவும் இருந்தது. வஸ்வண்டியில் சனம் முட்டிமோதி வழிந்தது. "அடுத்த தரிப்பில் இறங்கவேண்டும்“. ஆனந்தனைச் சுயநினைவுக்கு இழுத்தாள். செபஸ்தியார் மணியை ஒலிக்கச் செய்தார். வஸ் நின்றது. இறங்கினார்கள். இறங்கியதும் லதா விடைபெற்றாள். அவளது வீடு அதேதெருவில் வேறுபக்கம் இருந்தது.

சற்றுத் தூரம் நடந்தார்கள். வீடு வந்தது. பாத்திமா கையசைத்துத் தனது வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். மாகிரட் அடுக்களைக்குள் போனார். பிள்ளைகளும் பின் தொடர்ந்தனர். சுடுநீர்ப் போத்தலில் தேநீர் இருந்தது. மேரி தேநீரைக் கோப்பைகளில் ஊற்றிப் பரிமாறினாள். "களைப்புக்கு எங்கள் அக்கா தரும் ஒருகப் ரீயைச் சுவையுங்கள்“;. எலிசபெத் விளம்பரம் செய்தாள். கலகலத்துச் சிரித்தவாறே குடித்தார்கள். சற்று களைப்பாறியதும் குளியல் தொடங்கியது.

எந்தவிதக் களைப்பையும் ஒரு குளியல் குணப்படுத்தும் என்பது எவ்வளவு உண்மை. ஆனந்தனுக்குச் சுகமாக இருந்தது. உற்சாகத்தோடு ஒன்று கூடினார்கள். பார்த்து ரசித்தவற்றை அவரவர்களுக்கு ஏற்றவற்றைச் சொல்லி ரசித்தார்கள். மாகிரட் சமையலில் ஆர்வமாக இருந்தார். அடிக்கடி மேரியும், மயூரியும் உதவினார்கள். "சாப்பிடலாம்.“ அறிவித்தல் வந்தது. மேரி வந்து ஆனந்தனை அழைத்தாள். மயூரியும் எலிசபெத்தும் சாப்பாட்டு மேசையில் ஆயத்தமாக நின்றார்கள். களைப்பு பசியைக் கொடுத்தது. சுவையான உணவு பசியைத் தணித்தது.

உணவின் பின் மண்டபத்தில் அமர்ந்து உரையாடினார்கள். டேவிட் வெற்றிலைப் பிரியர். எந்தநேரமும் வெற்றிலை போடுவார். அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் பார்த்தவர். ஆங்கிலத்தில் வல்லவர். ஷேக்ஸ்பியரின் புலமையில் நாட்டங்கொண்டவர். சிவந்த மேனியை வேட்டி, சேட், சால்வை அலங்கரிக்கும் ஆங்கிலேயரின் உடையை அவர் உடுத்ததே இல்லை. வெற்றிலையைப் போட்டபடி கதைத்தார். "நாங்க வந்த விசயம் ஒருமாதிரி முடிஞ்சிற்றுது. நல்ல சந்தோசம். நாளை இரவுக்குப் புறப்பட இருக்கிறம்“. அவர் முடிக்கவில்லை. மாகிரட் "அதுக்குள்ளாகவா“? ஆச்சரியத்தோடு கேட்டாள். "அங்க வேல கிடக்கு மாகிரட். போட்டது போட்டபடி விட்டிட்டு வந்திற்றம். ஆனந்தனுக்கும் வேலையிருக்கு. போய் மிச்சவேலைகள முடிச்சிற்று ஆறுதலாக வாறம்“;. டேவிட் ஆறதலாக விளக்கினார்.

"அவருக்கும் இன்ரவியு இருக்காம்“ மேரி சொல்ல வாயெடுத்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஆனந்தன் அதனைக் கண்டுகொண்டு புன்னகைத்தான். தான் இன்ரவியு பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை. இவள் சொல்லிவிட்டால்... என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? ஆனந்தனின் கவலை பறந்தோடியது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான். மயூரி "அண்ணி என்ன யோசனையா? கவலைப்படாதிங்க. உங்களுக்காகத்தான் வந்தநாங்க. வந்த வேலை முடிஞ்சிவிட்டது. இனி நடக்கப் போறதக் கவனிக்க வேண்டும்“. கண்களை உருட்டி நெளித்து சொற்களை உதிர்த்தாள். சந்தோசம் குடிகொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் கதைப்பது? எல்லோருக்கும் களைப்பு. உறக்கம் கண்களை ஆட்கொள்ளத்துடித்தது. மயூரியும், மேரியும் ஒரு அறையுள் சென்றார்கள். அந்த அறையில் இரண்டு படுக்கைகள் இருந்தன. படுக்கையை உதறி விரித்தார்கள். அவர்களுக்குரிய படுக்கை தயாரானது. "அப்பா! என்ன உறக்கம் வருதா?. படுக்கை ரெடி.“

"அப்பா தண்ணீர் மேசையில் இருக்கு. நாங்க நித்திரைக்குப் போறம். விடியவும் ஐந்துமணிப் பூசைக்குப் போகவேணும். அண்ணா நீங்களும் வாறீங்களா“? சிரித்துக் கொண்டே மயூரியும், மேரியும் வந்தார்கள். "ஆட்சேபனை இல்லை. நீங்க அழைத்தால் நான் வருகிறேன்“;. நயம் நெளியக் கூறினான். " சரி நானும் வாறன். எல்லாரும் போவம். என்ன“? டேவிட் கூறிக்கொண்டே எழுந்தார். "தம்பி ஆனந்தன் நித்திரை வருது. படுப்பமே“ டேவிட் களைத்துத்தான் இருந்தார். அறுபத்திரெண்டு வயது இளைஞன் அவர். ஆனந்தனும் எழுந்து அவரின் பின்னால் அறையுள் சென்றான்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP