கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
9.
ஆன்மயூரி அழைத்திருந்தாள். ஆனந்தன் அங்கே சென்றான். "அண்ணா அப்பா உங்களைப் பார்க்கவேணும் என்று சொன்னவர். அப்பா கடைக்குப் போயிருக்கார். இப்ப வருவார். இருங்க தேநீர் கொண்டு வாறன்“;. சொல்லிவிட்டுப் போனாள். ஒரு நொடிப்பொழுதில் தேநீரோடு வந்தாள். தேநீரைக் கொடுத்தாள். "நல்ல ருசி“ பாராட்டினான். "அண்ணா.. மேரி உங்கட சுகம் கேட்டு எழுதியிருந்தா... என்ன பதில் எழுதுவதென்று யோசித்தேன். என்ன எழுதுவது? சொன்னால் எழுதுவேன். அண்ணா ... மேரி உங்களை நம்பியிருக்கிறாள். உங்கட விருப்பத்தச் சொல்லுங்க... பிளீஸ். அண்ணா..“ மயூரி ஆவலோடு காத்திருந்தாள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. டேவிட் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். ஆனந்தன் அவரது சைக்கிளை வாங்கி ஓரமாக வைத்தான். "தம்பி ஆனந்தன் உன்னோட கதைக்கவேணும். அதுதான் வரச் சொன்னனான். வா இருந்து கதைப்பம்“. கூறிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.
"தம்பி ..நீ என்ர பிள்ளை மாதிரி. நான் சொல்வதைத் தப்பாக எடுக்காதே.. என்ன“? நிறுத்தினார். "மயூரி அண்ணனுக்குத் தேத்தண்ணி கொடுத்தனியோ“? அக்கறையுடன் கேட்டார். "ஓமப்பா“ பதில் மயூரி சொன்னாள். "ஆனந்தா... இதுதான் சொல்லப் போறன். மேரி ...என்ர பேர்த்தி. நல்ல குணமான பிள்ளை. அவள் உன்னை விரும்புறாள். உன்ர கருத்த அறியவேணும். என்ன சொல்லுறாய்.? விருப்பமில்லாட்டிச் சொல்லிப்போடு. பிரச்சினை இல்ல. அண்ணனுக்கு மேரியைக் கட்டி வைக்க வேணுமெண்டு இவள் மயூரிதான் ஒத்தக்காலில நிற்கிறாள். எனக்கும் அவள் சொல்வது சரியாகப் பட்டது. அதனாலதான் கேட்கிறன். குறை எண்ணாதே...சரியா“? கேட்டுவிட்டுப் புன்னகைத்தார். ஆனந்தன் அமைதியானான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாது தவித்தான். மேரியை நினைத்தான். அவளது குணநலன்களையிட்டு அலசினான். அவன் ஏற்கனவே தீர்மானித்ததுதான். எனினும் அவனுக்குச் சொல்லத் தைரியம்மில்லை.
"என்ன அண்ணா யோசனை? மேரி வடிவில்லையா? அல்லது அவவப் பிடிக்கல்லையா“? ஆன்மயூரி அவனையே உற்றுப்பார்த்தாள். மயூரியின் முகத்தைப் பார்க்க ஆனந்தனுக்குக் கூசியது. "மயூரி ... என்னைப் புரிந்த என்ர தங்கைதான் நீ. மேரியை எனக்குப் பிடித்திருக்கிறது என்பது தெரியும்தானே? பிறகு ஏன் என்னிடம் கேட்கிறாய்“?. "இல்லையண்ணா. எனக்குத் தெரியும். ஆனாலும் உங்களிடம் ஒருசொல் சொல்லிப் போட்டு அவவிட்டச் சொல்வது நல்லதல்லவா? அதுதான் கேட்டேன். கோபம் இல்லையே அண்ணா“. அன்போடு கேட்டாள். "என்ன மயூரி நான் எப்பவாவது கோபித்திருக்கிறேனா“? "ஆனந்தா... எங்களுக்குத் தெரியும். மேரி நல்ல பிள்ள.. நீயும் எங்கட பிள்ளதான். நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழவேணும் என்பதுதான் எங்கட விருப்பம்“. டேவிட் சந்தோசத்தோடு சொன்னார்.
"உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கும் சம்மதந்தான். நீங்க முடிவெடுத்தால் சரி. ஆனால் ஒரு சிக்கல் வரும் என்று யோசிக்கிறன“;. ஆனந்தன் கவலையோடுதான் சொன்னான். "என்ன அண்ணா சிக்கல்.? சிக்கல் ஒன்றும்வராது. எல்லாம் சரியாய் வரும். அப்பா இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார். அப்பா! என்ன சிக்கல் வரும்? சொல்லுங்கோ“? அப்பாவைப் பார்த்தாள். "ஆனந்தன் சொல்லுறது எனக்கு விளங்குது. அதப்பற்றி பெரிது படுத்தத் தேவயில்ல. சமயம் ஒரு தடையாக அமையாது. அதுக்கும் வழியுண்டு.“ டேவிட் இழுத்து இழுத்து முடித்தார். "இதைப்பற்றி நான் செபஸ்தியாரிடம் விசாரிக்கிறன். மார்கிரட் சம்மதிப்பாள். நல்ல முடிவு கிடைக்கும்." கூறிவிட்டு அறையினுள் சென்றார். "ஓ...இதுதானா“? அவள் மனதினுள் நினைத்துக் கொண்டாள். ஆனந்தன் இதைப்பற்றி ஏற்கனவே புரிந்திருந்தான்.
"அண்ணா மேரிக்காக எதையும் செய்யத் தயார்தானே“? நேரடியாகவே மயூரி கேட்டாள். மயூரியின் அந்தத் துணிச்சலான கேள்வியை ஆச்சரியத்தோடு பார்த்தான். "அண்ணா நான் எங்கட வேதத்தச் சொல்லித்தாறன். படித்தால் என்ன? சமயங்கள் எல்லாம் ஒன்றுதான். மனிசனாக வாழவேணும் என்பதற்காகத்தான் சமயங்கள் தோன்றின. சமயங்கள் என்பது ஒரு வாழ்க்கை முறைதானே? நாளையில் இருந்தே படிப்பம். சரியா?. நான் அருட். தந்தை ஜெபநேசனிடம் விசாரிக்கிறன்.“ அவள் கூறிக் கொண்டே சென்றாள். மயூரியின் துணிச்சலை மனதுக்குள் வியந்தான். அவனது உள்ளத்தில் அவளை எடைபோட்டான். இவள் ஏன் மேரிக்காகவும், எனக்காகவும் வாதாடுகிறாள். ஒரு சீண்டலை விட்டுப் பார்த்தான்.
"அன்பான தங்கச்சியே! சும்மாதான் கேட்கிறன். இதில உனக்கேன் அதிக அக்கறை"? கூறிவிட்டு அவளது முகத்தையே உற்றுப் பார்த்தான். "அண்ணா.... வீணான கற்பனைக்குப் போகாதீங்க. சத்தியமாகச் சொல்லுறன். எனது அண்ணனுக்கும், அண்ணிக்காகவும்தான் இதனைச் செய்யிறன். நீங்க என்ன நினைக்கிறீங்க என்பது எனக்குத் தெரியும். அண்ணா...நீங்க ..எங்கட அப்பா ஆஸ்பத்திரியில இருக்கும்போது செய்த உதவிய என்னால் மறக்க முடியாது. தன்ர பிள்ளயள் செய்யாத உதவிய நீங்க செய்ததை அப்பா என்றும் சொல்லிக்காட்டுவார். என்னோட கூடப்பிறந்த சகோதரங்களைவிடவும் உங்களை என்ர அண்ணனாக மதிக்கிறன். அதுமட்டுமல்ல.. அப்பாவின் சொந்தங்களை எங்களோடு சேர்த்து வைத்த பெருமை உங்களுடையதே. அண்ணா... என்னை வித்தியாசமாக எண்ணவேண்டாம்.“ மயூரியின் கண்கள் கலங்கி விட்டன.
ஆனந்தனுக்குச் சங்கடமாகிவிட்டது. "என்ன மயூரி.. சும்மாதான் கேட்டேன். உன்னத் தெரியாதா ..எனக்கு? சரி...மேரியைச் சேர்த்து வைப்பது உன்ர பொறுப்பு.. சரிதானே? அப்பாவிடம் சொல்லிவிடு“ அவன் சொல்லி முடிக்குமுன் டேவிட் அறையினுள் இருந்து வெளியே வந்தார். "ஆனந்தா.. நான் எல்லாத்தையும் கவனிப்பன். இப்ப செய்யிற வேலையெப்படி? ஆனந்தனைப் பார்த்தார். "அந்த வேலை எனக்குப் பிடிக்கல்ல. என்ன செய்வது. வேற வேலையும் தேடுறன்". "வனத்திணைக்களத்தில் நல்ல வேலைதானே? ஏன் பிடிக்கல்ல? டேவிட் வினாவினார். "ஐயா கஞ்சிமடச் சந்திக்கு அப்பால் குடிசனமே இல்லை. நாலாங்கட்டச் சந்தியில இருந்து மங்கிபிறிஜ் வரை சைக்கிளில் விடியவும் போகவேணும். ஒரே காடுதான். பனியும் குளிரும் வாட்டும். காட்டு யானைகள் கூட்டமாக நிற்கும். எனது மனதுக்குப்பிடிக்காத வேலை. சந்தோசமில்லை. அதுதான் வேறு வேலை தேடுறன்“ விளக்கினான்.
"என்ன வேலையை எதிர்பார்க்கிறாய்?
"எனக்கு ஆசிரிய சேவைதான் பிடிக்கும். அதற்காகத்தான் மனுப்பண்ணியிருக்கிறன். அது கிடைக்கும்“. உறுதியாகச் சொன்னான். "வருங்காலத் தலைவர்களான சிறார்களுக்குச் சேவை செய்வது பெருந்தொண்டல்லவா? அதோடு நான்பிறந்த கிராமத்துக்கு ஏNனும் செய்யவேணும். நான் பட்ட கஸ்டத்தை என்ர ஊர்பிள்ளைகள் படக்கூடாது. அதுக்காக நாங்க நாலஞ்சு பேர் உழைக்கப் போறம். அதுக்கு ஏற்றது ஆசிரியர் சேவைதான். அது எனக்குப் பிடித்தது". தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினான். "உன்ர குறிக்கோள் நல்லதுதான். நமது மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வதுதான் நிம்மதி. சந்தோசமாகவும் இருக்கும். "சரி நடப்பது நல்லதாகவே நடக்கும். நான் செபஸ்தியாருக்கு அறிவிக்கிறன். டேவிட் முடித்தார். "அண்ணா நாளைக்குப் பின்னேரம் வாங்கோ என்ன“? ஆன்மயூரி விடைகொடுத்தாள். ஆனந்தன் சைக்கிளில் ஏறிப் புறப்பட்டான்.
இரண்டு வாரங்கள் பறந்தோடின. பிபிலிய வேதம் தண்ணிபட்ட பாடமாக வந்துவிட்டது. அதனை மயூரி மேரிக்கு அறிவித்தாள். மேரிக்குத் தலைகால் தெரியாத சந்தோசம். கொழும்புக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார்கள். திடீரெனப் போய் இறங்கி அதிர்ச்சியைக் கொடுக்க மயூரி வியூகம் வகுத்து விட்டாள். வெள்ளிக்கிழமை இரவு புறப்படுவது என்று தீர்மானிக்கப் பட்டுவிட்டது. ஸ்ரனிஸ்லாஸ் இருக்கைகளைப் பதிந்து கொடுத்திருந்தார். அத்துடன் ஞாயிறு திரும்புவதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். மாலை எட்டு மணி. திருகோணமலை புகைவண்டி நிலையம் பயணிகளால் தன்னை நிறைத்துக் கொண்டு களைத்திருந்தது. வண்டி புறப்படத் தயாராய் நின்றது. மயூரி முதலில் ஏறிக் கொண்டாள். டேவிட்டைத் தொடர்ந்து ஆனந்தன் ஏறினான். குதூகலத்தோடு வண்டி கூவிக்கொண்டு புறப்பட்டது. மூன்று பேர்களது மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.
ரெயில் மெதுவாகவே போவதான ஒரு பிரமை. சீனக்குடா புகைவண்டி நிலையத்தில் ஸ்ரனிஸ்லாஸ் காத்திருந்தார். ஒரு பொட்டலத்தை மயூரியிடம் கொடுத்தார். தனது கடமைகளோடு வழியனுப்பி வைத்தார். "அப்பா தம்பலகாமத்தில் தயிரருக்குச் சொல்லியிருக்கிறன். ஸ்ரேசன் மாஸ்ரர் தருவார். காசு கொடுக்கவேணாம். எஸ்ஸெம்முக்கு உங்களத் தெரியும். மறக்காம வாங்கிக்கொள்ளுங்க. சரியா? போயிற்று வாங்க“. வண்டிநகர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரனிசும் நடந்தவாறே கூறிக் கையசைத்தார். "சரி நாங்க வாறம்“. டேவிட் விடைபெற்றார். அண்ணா உடம்பப் பாத்துக் கொள்ளுங்க. சரியா“? மயூரி கையசைத்தாள். ஆனந்தனும் புன்னகையூடாக தனது கருத்தைத் தெரிவித்தான்.
தம்பலகாமத்தில் எஸ்ஸெம் சொல்லி வைத்ததுபோல் தயிரோடு காத்திருந்தார். நன்றியோடு மயூரி பெற்றுக் கொண்டாள். தம்பலகாமத்துத் தயிர் நல்ல ருசி. தயிர் முட்டிகளை இருக்கையின் கீழ் வைத்தாள். ஆனந்தன் உதவினான். தயிர் கமகமத்தது. பாலைக்காய்ச்சி உறைபோட்டுவிட்டால் தயிர். கறந்தபாலில் ஒருவித மணம் இருக்கும். அதனைக் காச்சியதும் இன்னும் மணக்கும். தயிராக உறைந்ததும் கமகமக்கும். இளமுறைத் தயிர் நல்லருசியானது. ஆனந்தன் வீட்டில் ஒவ்வொரு நாளும் தயிர் இருக்கும். தனது அம்மாவை நினைந்து கொண்டான். "அண்ணா நீங்க கொண்டுவரும் தயிர் இதைவிட கமகமக்கும். அது எப்படி? எப்படி பெரியம்மா தயிர் காச்சிறவர்“?;. மயூரி கேட்டாள். மெல்லெனச் சிரித்தான்.
அரும்பு மீசை நீண்டு குறுகியது. "அம்மா பாலைக் காய்ச்சுவது புதுமையாக இருக்கும். பெரியமண் சட்டியிருக்கும். அதை நாங்க குண்டான் என்று சொல்லுவம். பாலை அதற்குள் முறுகக் காய்ச்சியதும், அகப்பையால் அள்ளி உயர்த்தி குண்டானுக்குள்ளேயே விடுவார். பால் நுரைத்துப் பரவும். பால் குண்டான் அடுப்பிலேயே இருக்கும். நெருப்பைக் குறைத்துவிடுவார். விறகை எடுத்து விடுவார். தணல் மட்டும் தகிக்கும். வீட்டில் உமியிருக்கும். உமியில் கொஞ்சம் எடுத்து அடுப்பில் போட்டுவிடுவார். தணலில் உமிபுகையும். உமிப்புகை பாலின் மணத்துக்கு மெருகேற்றும். வெப்பம் கைச்சூடு அளவுக்கு வந்ததும் உறையைப் போடுவார். பின்னேரம் தயிர் தயார். இதுதான் அம்மாவின் தொழில் நுட்பம்“. ஆனந்தன் விளக்கினான். “ஓ... இவ்வளவு இருக்கா... பெரியம்மாட்டத்தான் படிக்கவேணும்“. சொல்லிக் கொண்டே எட்டிப்பார்த்தாள். கல்லோயாச் சந்தி வந்து விட்டது.
கல்லோயாச் சந்தி கலகலத்தது. மட்டக்களப்பிலிருந்து புறப்படும் வண்டி வந்து விட்டது. இரண்டு வண்டிகளின் பயணிகளும் ஒரு இடத்தில் சந்திப்பதால் ஆரவாரமாக இருந்தது. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேரியோடு கதைத்துக் கொண்டிருந்த பசுமை நினைவுகள் துள்ளி வந்தன. அவளது முகம் மனத்திரையில் மலர்ந்து விரிந்தது. கற்பனையில் மூழ்கினான். "அண்ணா என்ன யோசனை..“? திடுக்கிட்டு உசாரானான். தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். "எவ்வளவு சனம். ஓவ்வொரு நாளும் சனங்கள் பிரயாணம் செய்கிறார்கள். எல்லாருக்கும் ஏதோ ஒரு வேலையிருப்பதை எண்ணிக் கொண்டேன்“. சமாளித்துக் கொண்டான். அவள் புன்னகைத்தாள். அண்ணியை நினைச்சிங்களோ என்று எண்ணினன். எங்கோயோ பார்த்தவாறு கூறினாள். மயூரிக்கு மனித உளவியல் தெரியுமோ? வியந்து கொண்டான்.
வண்டி நெடுநேரத்தின்பின் புறப்பட்டது. ஆடியசைந்து கூவியபடி விரைந்தது. வண்டியின் ஆட்டம் தாலாட்டியது. மெல்லக் கண்கள் அயரத் தொடங்கின. கண்களை மூடியபடி கற்பனைத் தேரை ஓடவிட்டான். வண்டி நிற்பதும் ஓடுவதுமாகச் செயற்பட்டது. அவனது மனமும் அப்படித்தான். புகைவண்டி நிலையங்களில் வண்டி நிற்கும்போது விழிப்படலைகள் திறக்கப்படும். பின்னர் மூடிவிடும். கண்கள் மூடுவதும் கனாக் காண்பதுபோல் தெரிவதும், பின்னர் அவை திறபடுவதுமாக இரவு பயணத்தில் கழிந்தது.
அதிகாலை ஐந்து மணி. 'கொழும்புக் கோட்டையை வெற்றிகரமாக அடைந்துவிட்டேன்“ என்ற கூவலோடு வண்டி நின்றது. வாடகைக் காரில் ஏறினார்கள். போகவேண்டிய இடத்தை டேவிட் சொன்னார். கார் விரைந்தது. வீட்டின் வாசலில் நின்றது. செபஸ்தியார் காலை ஆறரை மணிக்கு வேலைத்தலத்தில் நிற்பவர். ஆறுமணிக்கே புறப்பட்டு விடுவார். கணவனை வேலைக்கு அனுப்பவேண்டும். நகராட்சி மன்றத்தில் சுப்பவைசராகக் கடமை பார்ப்பவர். அவர் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். ஆட்கள் இறங்கும் சத்தம் கேட்டு மார்கிரட் கதவைத் திறந்தார். மாகிரட்டுக்குப் பெரிய அதிர்ச்சி. "மாமா! மயூரி வாங்க வாங்க“. மாக்கிரட் வாய்மலர வரவேற்றார்.
தொடரும்
0 comments:
Post a Comment