Tuesday, May 11, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

10

செபஸ்தியார் புன்னகையோடு அதிசயித்தார். ஆனந்தன் வெளியில் நின்று கொண்டான். அம்மாவின் குரல் மேரியைச் சுறுசுறுப்பாக்கியது. வரவேற்பறைக்கு ஓடிவந்தாள். "மயூரி எப்பவந்தீங்க? சொல்லியிருந்தால் ஸ்ரேசனுக்கு வந்திருப்பம்.“ ஒரு துள்ளலோடு குதூகலித்தாள். அவள் கண்கள் பேசின. "அவர் வரவில்லையா“? மயூரி புரிந்து கொண்டாள். மயூரியின் கண்கள் விளையாடின. தெரியாததுபோல் வேறுதிசையில் துளாவின. சிரிப்பும், பரிதாபமும் ஏற்பட்டது. செபஸ்தியார் நேரத்தைப் பார்த்தார். "மார்கிரட் எனக்கு நேரமாகிறது. தெரிந்திருந்தால் லீவு போட்டிருக்கலாம். ஒருக்காப் போய் சமாளிச்சிட்டு பத்து மணிபோல வந்துவிடுவேன். எல்லாத்தையும் கவனித்துக் கொள்“. செபஸ்தியார் டேவிட்டிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.

டேவிட் விடைகொடுத்தார். செபஸ்தியார் வெளியில் வந்தார். அதிசயித்துப் போனார். "மார்கிரட் இங்கபார் ஆனந்தன் வந்திருக்கார். ஆனந்தன் உள்ள வாங்க“ மேரி பாய்ந்து வெளியில் வந்தாள். ஆனந்தன் நின்றிருந்தான். கண்டதும் பூரித்துப் போனாள். "என்ன வெளியிலேயே நிக்கிறீங்க...உள்ள வாங்க“ அவனது சூட்கேசை வாங்கிக் கொண்டாள். வீட்டினுள் அழைத்தாள் பெட்டிப்பாம்பாக ஆனந்தன் உள்ளே சென்றான். பெரிய அதிசயம் நடந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் விழித்துக் கொண்டார்கள். வீடு கலகலப்பாகியது. சூரியன் போகும் திசையெல்லாம் சூரிய காந்திப்பூ திரும்புவது போல் மேரியின் முகமும் கண்களும் ஆனந்தனில் மொய்த்தன.

ஆளுக்கொரு வேலை என அள்ளிப்போட்டுச் செய்தார்கள். தேநீர் பரிமாறப்பட்டது. கதைத்துக் கொண்டே குடித்தார்கள். குளியல் அறையைக் காண்பித்தார்கள். இரண்டு குளியல் அறைகள் இருந்தன. குளியலுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இருந்தன. முதலில் ஆனந்தனைக் குளிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். டேவிட் ஆறுதலாகக் குளிக்கச் சென்றார். மயூரி மேரியோடு கதைத்துக் கொண்டே குளித்து முடித்தாள். குளியல் முடிந்ததும் உணவு தயாராக மேசையில் இருந்தது. சாப்பிட்டார்கள். அடுக்களையில் மேரியும், மயூரியும் கதையில் மூழ்கியிருந்தார்கள். கதையும் சிரிப்பும் கலந்தினித்தது.

"மயூரி! இன்டைக்குத்தான் வீடு கலகலக்குது. இவ்வளவு நாளும் சோம்பலாக்கிடந்தது.“ மேரியின் உள்ளத்தின் வெளிப்பாடு புரிந்தது. நாம் விரும்பியவர்கள் நமது வீட்டுக்கு வந்தால் இந்த மனம் என்னமாதிரித் துள்ளுது. உள்ளம் பூரித்து உவகை கொள்கிறது. அடுக்களையில் சமையல் ஆகிக்கொண்டிருந்தது. சமையலுக்கு வேண்டிய ஒத்தாசைகளை அம்மாவுக்குச் செய்து கொடுத்தார்கள். அடிக்கடி ஆனந்தனிடம் வந்தார்கள். எதைக்கதைப்பது? ஆனந்தன் அந்தப் பெரிய அறையின் ஓருமூலையில் இருந்து அன்றையத் தினசரியில் மூழ்கினான். மேரி மயூரியோடு ஆனந்தனிடம் வந்தாள். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தான். நினைப்பவற்றைச் சொல்ல வார்த்தைகளைத் தேடினாள். ஆனந்தனைக் கண்டதும் அவை மறந்து பறந்து போயின. ஏதேதோ கதைத்தார்கள்.

"தனியாக இருக்கிறீங்க... எப்படிச் சுகம்? அப்பா நலமா“? மேரி விசாரித்தாள். அவளே தொடர்ந்தாள். "நான் எதிர்பாரக்கல்ல...“ மேரி தொடங்கினாள்.
"எதை....எதிர்பார்கல்ல“? கடைக்கண்ணால் மேரியை அளந்தவாறே மயூரி கேட்டாள்.
"நீங்கள் வாறதைத்தான்... "
"நீங்கள் என்றால்.... யாரை“?
"என்ன மயூரி ...... ?.“
"அண்ணி ... பொய் சொல்லாதீங்க ... அண்ணனைத்தானே ...எதிர்பார்கல்ல... நான் எவ்வளவு கஸ்டப்பட்டுக் கூட்டி வந்திருக்கிறன். அதப்பற்றிச் சொல்லாமல் ....“
"ஐயய்யோ... மறந்தேவிட்டன். ...என்ன இப்படி என்னைக் குழப்புறீங்க.. வாறதப்பற்றி தகவல் ஏதும் இல்லையே.. அதுதான்“ சொல்லிக் கொண்டே கரம்போட்டைக் கொண்டுவந்தாள். ரீபோவில் வைத்துவிட்டுக் காய்களை அடுக்கினாள். இப்போது கதைப்பது சுலபமாக இருந்தது. நேரம் பறந்து போனது.

ஆனந்தன் பேப்பரில் மூழ்கியிருந்தான். "அண்ணா ஒருகை ஆடுவோம் வாங்க...“ அழைத்தாள். ஆனந்தனுக்கு அசதியாக இருந்தது. மேரி கண்களால் அழைத்தாள். அந்தக் கண்கள் அவனைக் கவ்வி இழுத்தன. எலிசபத் வந்து சேர்ந்தாள். அவள் ஆனந்தனுக்கு சோடி. மேரியும், மயூரியும் ஓரு சோடி. விளையாடினார்கள். மேரியின் ஓரவிழிப் பார்வை ஆனந்தனைக் கிறங்கடித்தது. அவளது விரல்கள் காய்களில் மொய்ப்பதை அழகுபார்த்தான். மோதிரவிரலை காயின் பக்கம் வைத்தாள். சுண்டுவிரலை மோதிரவிரல்மேல் வைத்து சுண்டித் தட்டுத்தட்டினாள். இரண்டு விரல்களும் அசையும்போது மற்ற விரல்கள் நர்த்தனமாடின. ஓவ்வொரு விரலும் பேசின. ஆனந்தனின் கண்கள் விரல்களை மேய்ந்தன. நகத்தின் அழகில் சொக்கிப் போனான். எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறாள். அளவாக வெட்டி, நிறத்துக்கேற்ற கியூரெக்ஸ் பூசி பளபளப்பாக வைத்திருந்தாள். விரல்கள் பட்டதும் காய் சரியாக எதிர்மூலைக் குழியில் விழுந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நேரம் பறந்து போனது.

செபஸ்தியார் சொன்னதுபோல் பத்து மணிக்கே வந்துவிட்டார். முன் மண்டபத்தில் டேவிட் இருந்தார். அந்த இடத்துக்குச் செபஸ்தியார் சென்றார். வரவேற்பறையில் டேவிட்டும் செபஸ்தியாரும் இருந்து கதைத்தார்கள். கதையோடு கதையாகத் தொடங்கினார். செபஸ்தியாரிடம் கொழும்பு வந்ததற்கான காரணத்தைக் கூறினார். "நான் மேரிவிசயமாகக் கதைக்கத்தான் வந்தனான். ஒருமாதிரியாகச் சமாளித்து ஆனந்தனையும் கூட்டிவந்திருக்கன். நல்ல பொடியன். சந்தர்ப்பத்த விடக்கூடாது. நல்ல சோடிப் பொருத்தம். உங்கட சம்மதம் தெரிந்தால் போதும். மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவன்“. டேவிட் அடுக்கிக் கொண்டு போனார். செபஸ்தியாருக்கு மனம் துள்ளி ஆடியது. செபஸ்தியார் சமையலறைக்குச் சென்று வந்தார். மார்கிரட்டின் முகத்திலும் சந்தோசம். இவர்கள் என்ன கதைக்கிறார்கள்? அடிக்கடி அப்பா சமையலறைப்பக்கம் போய்வருவதையும் மேரி அவதானித்தாள். அறியும் ஆவலில் உள்ளம் செவிப்பறையில் குந்தியது.

"மேரி...“ மார்க்கிரட்டின் அழைப்பு. "இதோ வந்திற்றன் அம்மா“. எழுந்து சென்றாள். தேநீர் தயாராக இருந்தது. தேநீர்த் தட்டில் வைத்து எடுத்துவந்தாள். மண்டபத்தில் இருந்தவர்களுக்குப் பரிமாறினாள். அப்படியே ஆனந்தன் பக்கம் வந்தாள். "எடுங்க“. ஆனந்தனிடம் நீட்டினாள். எடுத்துக் கொண்டான். எலிசபெத்தும் எடுத்தாள். தானே தன்கையால் எடுத்து மயூரியிடம் கொடுத்தாள். அவள் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள். "என்ன அண்ணி... எனக்குமட்டும் தனிமரியாதை? இதெல்லாம் சரிவராது“. சீண்டினாள். "என்ன மயூரி... கிண்டல். இது அன்பின் அடையாளம்“;. கொடுத்துவிட்டு இருந்தாள். "என்ன அண்ணி உங்கள மறந்திட்டிங்க.. எங்க உங்கட பங்கு? ...நான் எடுத்து வாறன்“. மயூரி எழுந்து அடுக்களைப் பக்கம் சென்றாள்.

"ஏன் நீங்க தேநீர் குடிக்கல்லயா“? ஆனந்தன் திருவாய் மலர்ந்தான். ஓரு புன்னகையை எறிந்து "குடிக்கிறதான். ஆறட்டும் என்று குசினியில் வச்சிப்போட்டு வந்திற்றன்“. "ஏன் எங்களோட சேர்ந்து குடிக்க விரும்பல்லையோ“? தைரியமாகக் கேட்டான். "என்ன அண்ணனும் தங்கையும் ஒரேவிதமாகச் சொல்லுறீங்க. அப்படியில்ல ஆறட்டும் என்டுதான்“. பதில்வரமுன் மயூரி தேநீரோடு வந்தாள். "அண்ணி இதைப்பிடியுங்க. சேர்ந்து குடிப்பம். கொடுத்துவிட்டு இருந்தாள். நால்வரும் சேர்ந்து குடித்தார்கள். எலிசபெத்துக்கு வேடிக்கையாக இருந்தது. வேலை செய்வதும் விளையாடுவதுமாக நேரம் விரைந்தது. சமையல் முடிந்து விட்டது.

மார்கிரட் மண்டபத்தினுள் வந்தார். அவரும் சேர்ந்து கொண்டார். டேவிட் தொடக்கத்தில் இருந்து விபரித்தார். "மாமா! சமயம்பற்றித்தான் யோசிக்கிறன். ஏனென்டால் எங்கட சனங்களும், சூழலும் அப்படி. வாய்க்கு வந்தபடி தூற்றுவாங்க“. கவலையோடு மனத்தாங்கலை இறக்கினார். "இதொன்டுக்கும் கவலப்படாத. அதெல்லாம் சரியாய் நடக்கும். ஆனந்தன் நல்ல குணசாலி. அனுசரித்துப் போகக் கூடிய பிள்ள. உங்கட சம்மதம்தான் தேவை. உங்களுக்குப் பூரண சம்மதமென்றால் சொல்லுங்க. மிச்சத்த நாங்க பார்த்துக் கொள்ளுவம். என்ன சொல்லுறீங்க“ டேவிட் நிறுத்தினார். "எங்களுக்கு நல்ல விருப்பம். கொழும்பில கலியாணத்த வச்சால் நல்லது. இஞ்சதான் எங்களுக்கு வசதி“. செபஸ்தியார் சொல்ல மார்கிரட் ஆமோதித்தார். டேவிட் சந்தோசத்தோடு சிரித்தார். "அந்தக்கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடி நடக்கும். இனி கவலய விடுங்க. ஒருக்கா மேரியையும் கேட்டுப்பாருங்க“. சொல்லிவிட்டு எழுந்து வெளியில் போனார்.

விளையாட்டு முடிந்து எழுந்து உலாவினார்கள். ஆனந்தன் வெளியில் வந்து பார்த்தான். வீடுகள் புறாக்கூடுகள்போன்று தெரிந்தன. காற்றுப்புக முடியாத சந்துகள். எப்படி இந்தச் சனங்கள் வாழுதுகள்.? கொழும்பு வித்தியாசமான நகரம்தான். மயூரியும் வெளியில் வந்தாள். "அண்ணி“ மேரியை அழைத்தாள். குரல் கேட்டதும் ஓடோடி வந்துநின்றாள். பக்கத்து வீட்டுப் பாத்திமா எட்டிப்பார்த்தாள். ஒரு புன்னகையை எறிந்து கண்களால் வினாவினாள். இரண்டு வீடுகளையும் ஒரு சுவர்தான் பிரித்திருந்தது. "என்ன மேரி. இன்டக்கி விருந்தாளிகள் போல. கலகலப்பாகக் கிடக்கு. என்ன விசேசம்? கேள்வியாக விரித்தாள். "ஆமா பாத்து. பகல் சாப்பாட்டுக்கு வாறீங்களா? எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவம்“;. மேரி அழைத்தாள். "வரலாம்தான் நம்மட பிறன்ட் இவள் லதா வாறன்டு சொன்னதுதானே... அதுதான் பார்க்கிறன்.“ பாத்திமா பதிலிறுத்தாள். "நல்லதாச்சி. அப்ப எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம். சரியா“? மேரி அழைப்பு விடுத்தாள். "அதோ லதா வாறா" லதாவைக் காட்டி பாத்திமா சொன்னாள்.

லதா வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் ஒரு நடனம் துள்ளியது. மேரி மெல்லெனப் புன்னகை எறிந்தாள். "பாத்து! லதாவையும் கூட்டிவாங்க.. என்ன..“? லதாவுக்குச் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். அம்மா உணவு மேசையை ஒழுங்கு செய்தார். உதவிக்கு மேரியும், மயூரியும், எலிசபெத்தும் உதவினார்கள். பத்துப்பேர் இருந்து சாப்பிடக்கூடியதாக அமைப்பு இருந்தது. “சாப்பிடலாம் வாங்க“ மாகிரட் சாப்பிட அழைத்தார். டேவிட்டும் செபஸ்தியாரும் மேசைக்கு வந்துவிட்டார்கள். "எலிசபெத்... எல்லோரையும் கூப்பிடு“ அம்மா கனிந்தார். "அம்மா சாப்பிட வரட்டாம்“ எலிசபெத் செய்தியைப் பரப்பினாள். "வாங்க சாப்பிடுவம்.மேரி ஆனந்தனையும், மயூரியையும் அழைத்தாள்.

"பாத்து~ லதா எங்கே?...கூட்டிட்டு வாங்க எல்லாம் ரெடி...“ மேரி சத்தமிட்டாள். பாத்திமா லதாவோடு வந்தாள். வாசலில் நின்றபடியே வரவேற்று அழைத்தாள். நேரே சாப்பாட்டு மேசைக்குச் சென்றார்கள். மேரி தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஆனந்தனுக்கு வியப்பாக இருந்தது. இந்த சாப்பாட்டு மேசையில் மூவினப் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். இங்கு ஒருதாய்ப் பிள்ளைகளாய் வாழ்கிறார்கள். ஏன் தமிழர்கள் பெரும்பான்மையாய் வாழுமிடங்களில் இந்தக் கெடுபிடி. பாத்திமா ஒரு முஸ்லிம். லதா ஒரு சிங்கள யுவதி. தமிழர் வீட்டில் ஒருகூரையின் கீழ் சந்தோசமாய் உணவை உண்கிறார்கள். அந்த முகங்களைப் பார்வையிட்டான். எந்தவித வித்தியாசமும் இல்லை. அன்புதான் சேர்த்து வைத்துள்ளது. இதைத்தானே புத்தரும், யேசுவும், நபிகள்நாயகமும், நாயன்மார்களும், பல்வேறு சித்தர்களும் போதித்தார்கள். இதைத்தானே சமயங்களும் வற்புறுத்துகின்றன. வழிகாட்டுகின்றன. இந்த நிலை நமது நாட்டில் தொடர்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும். சாப்பிடும்போது சிந்தனையில் ஆழ்ந்தான்.

"நல்லாச் சாப்பிடுங்க“ செபஸ்தியாரின் குரல் அவனை நினைவுக்குக் கொண்டு வந்தது. மேரியின் நடத்தையில் மாற்றத்தைக் கண்டுகொண்டார்கள். பாத்திமாவும், லதாவும் கண்களால் கதைபரிமாறினர். அதனை மயூரி அவதானித்துச் சிரித்தாள். "பாத்திமா உங்கள் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கிவிட்டது“. எனச் சிரித்தாள். லதாவுக்கும் மயூரி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கூறினாள். லதா கொஞ்சம் தமிழ் தெரிந்தவர். பாத்திமாவுக்கு மூன்று மொழிகளிலும் பரீச்சயம் இருந்தது. சில விசயங்களைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் படுகில்லாடிகள். காதல் என்பதை எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து மனதுக்குள் ஒளித்து வைத்தாலும் அது விஸ்வரூபம் எடுத்து மற்றவருக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

மயூரியும், மேரியும் பரிமாறினார்கள். அந்தப் பரிமாற்றத்தில் கனிவும் சேர்ந்து கொண்டது. கனிவும் கவனிப்பும் பரிவோடு சேர்ந்து கொள்ளும். இவற்றை உற்றுக்கவனிப்பவர்கள் இனங்கண்டு கொள்வார்கள். தனிப்பட்டவர்மேல் கொண்ட பரிவு வெளியாகப் பரவி நிற்கும். எவரிடம் அன்பு அதிகம் காட்டப்படுகிறதோ, அவர்மேல் கரிசனையும், கவனிப்பும் அலாதியாக இருக்கும். இது சிறப்பாக ஆண்பெண் இருபாலாரிடைத் தோன்றும் ஒரு பிடிப்பு. இதனை மற்றவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அது தானாகவே வெளிப்பட்டு நிற்கும். அதுதான் காதலோ? அதனைத்தான் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். பெண்களை எடைபோடுவதில் பெண்கள் கெட்டிக்காரர்கள்தான். பாத்திமாவும், லதாவும் சாப்பிடும்போது கவனித்துக் கொண்டார்கள். பரிபாசையில் புன்னகையுடன் பரிமாறினார்கள். மேரி நாணத்தோடு பொய்க்கோபம் காட்டினாள்.

பாத்திமா அழகாயிருந்தாள். அவளது பார்வை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக இருந்தது. லதா விழிகளாலேயே பேசினாள். இருவரில் யார் அழகுடையவர் என்று மதிப்பிட முடியாத அளவோடு பளீச்சிட்டார்கள். ஆனந்தனுக்கு மேரிதான் அழகுச்சிலையாகத் தெரிந்தாள். "நல்ல சாப்பாடு“ பாத்திமா புகழ்ந்தாள். ~ ஹொந்த காம. ஹறிம ரசாய்“ லதா நன்றியுடன் சொன்னாள். மேரி அம்மாவைப் பார்த்தாள். "மாக்கிரட்டின் கைவண்ணம் எனக்குத் தெரியும். ருசியான சாப்பாடு“ டேவிட் புகழ்ந்தார். "இண்டைக்குத்தான் ருசியாக நானும் சாப்பிட்டன்“. நகைச்சுவையுடன் செபஸ்தியார் கூறினார். "அம்மாக்கு இண்டைக்கு உச்சி குளிரும். அப்பாவும் ருசியெண்டு புகழ் பாடுறார்“. மேரி சிரித்துச் சிரித்துச் சொன்னாள். "உங்கட அப்பா எப்பதான் ருசியெண்டு சொன்னவர்“. மாகிரட் பொய்க்கோபத்தோடு விளாசினார். "எங்கட அக்கா இதவிட ருசியாகச் சமைப்பா“ எலிசபத் இடையில் புகுந்து கொண்டாள். மரியாவும், ஏஞ்சலும் ஆமோதித்தார்கள். ஆனந்தனின் புருவங்கள் நிமிர்ந்து நெளிந்தன. மேரி நாணினாள்.

அவளது நாணத்தை வெகுவாக ரசித்தான். "தம்பி எப்படிச் சாப்பாடு? சத்தமில்லாமல் சாப்பிடுறீங்க“. ஆனந்தனின் அமைதியை செபஸ்தியார் கலைத்தார். "சொல்லவா வேண்டும்? சாப்பாடு மிகவும் நல்லது.“ அளவோடு சாப்பிட்டதுபோல் அளவோடு பதிலளித்தான். "அண்ணி இன்னும் கொஞ்சம் அண்ணனுக்குப் போடுங்க“. மயூரி சீண்டி விளையாடினாள். "அய்யய்யோ...போதும். இதற்குமேல் தாங்காது“. கூறிக்கொண்டு எழமுயன்றான். மேரி கையலம்பும் பாத்திரத்தை நீட்டி "இதற்குள் கழுவுங்கள்“ என்று கொடுத்தாள். மயூரி ஐஸ்கிறீம் நிறைந்த கோப்பைகளைப் பரிமாறினாள். சுவைத்துச் சாப்பிட்டார்கள்.

"அப்பா எல்லோரும் பின்னேரம் தெஹிவள போவமா.“? எலிசபத் தூபம்போட்டாள். "நல்ல ஐடியா.. எனக்கும் மிருகக் காட்சிச் சாலை பார்க்கச் சரியான ஆசை“. கூறிக்கொண்டே மயூரி ஆனந்தனைப் பார்த்தாள். அவன் புன்னகைத்தான். "அதற்கென்ன...போவம்“. செபஸ்தியாரின் அனுமதி கிடைத்தது. "சரியாக மூன்று மணிக்குப் புறப்படுவோம். ஆயத்தமாக இருங்க.“ செபஸ்தியார் கூறிவிட்டு எழுந்தார். சாய்மனைக் கதிரையைக் காட்டி "இதிலகொஞ்சம் ஓய்வெடுங்க...பிரயாண அலுப்புப் பொல்லாதது“. கூறிக்கொண்டே சாய்கதிரையை நகர்த்திக் கொடுத்தார். டேவிட் அதில் ஓய்வெடுத்தார். பாத்திமாவும் லதாவும் புறப்பட்டார்கள். "பாத்து.. மூன்றுமணிக்கு எங்களோட வாங்க. ஜொலியாக இருக்கும். லதாவும் வருவா. கூட்டி வாங்க என்ன“? மேரி அழைப்பு விடுத்தாள்.

மேரியின் நெருங்கிய நல்ல நண்பிகள். ஏற்கனவே பரிமாறப்பட்ட பல இரகசியங்கள் அவர்களது மனக்கிடங்;கு களுக்குள் புதைந்து கிடந்தன. திருகோணமலைக்குப் போய்வந்த செய்திகளையும் பரிமாறியிருந்தாள். ஆனால் ஆனந்தனைப் பற்றிய செய்தியை அந்தரங்கமாகவே மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைத்திருந்தாள். அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். புறப்பட்டார்கள். மயூரியும் சேர்ந்து வழியனுப்பி வைத்தாள். பாத்திமா வீட்டுக்குள் போகும்வரை காத்திருந்தாள். மண்டபத்தில் வானொலி மெல்லிய இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனந்தன் ஒரு இருக்கையில் அமர்ந்தான். குட்டி உறக்கம் வந்தது. சற்றுநேரம் இருந்தபடியே கண்களை மூடினான். கலகலப்போடு மயூரி மேரியுடன் வந்தாள். அவனை எலிசபத், மரியாவுடன் ஏஞ்சலும் சூழ்ந்துகொண்டார்கள். செபஸ்தியார் மாக்கிரட்டோடு விவாதித்தார்.

"மூன்று மணியாகப் போகிறது. வெளிக்கிடுவம்;. என்ன..“? மயூரி முதல்மணியை ஒலித்தாள். அவளுக்கு மிருகக் காட்சிச் சாலையைப் பார்க்க ஆசை. ஆனந்தன் அறையினுள் சென்று ஆயத்தமானான். அவன் கொழும்புக்கு வந்திருந்தாலும் மிருகக்காட்சிச் சாலையைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவனுக்கும் மனதினுள் சந்தோசந்தான். பாத்திமாவும் லதாவும் வந்துவிட்டார்கள். எல்லோரும் புறப்பட்டார்கள். தெகிவளை போகும் வஸ்வண்டி வந்தது. ஏறிக்கொண்டார்கள். அரைமணி நேர ஓட்டம். தெகிவளை விலங்ககத்தின் முன்னால் வஸ்வண்டி நின்றது. கட்டணத்தைச் செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெற்று உள்ளே சென்றார்கள்.


தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP