Friday, May 21, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

30

இன்ஸ்பெக்டர் திசநாயக்க அருகில் வந்தார். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார். "மிஸ்ரர் ஆனந்தன். நீங்க இப்படியே வெளியில் போனால் உங்களப் புலி என்று மீண்டும் பிடித்துக் கொண்டு வருவாங்கள். வாங்க ஜீப்பில போவம். ஏறுங்க“ அவரது கட்டளை சரியாகப்பட்டது. ஏறினான். ஜீப் சலூனுக்குச் சென்றது. அவர் இறங்கச் சொன்னார். "முதலில் சேவ் எடுப்போம். பிறகு குளிப்போம். ஒரு இடத்தில் சாப்பிடுவோம். பிறகு உங்கள் அலுவலகத்தில் விட்டுவிடுகிறேன். சரியா“? விளக்கினார். சலூனுக்குள் சென்றார். சேவ் எடுத்து விடுமாறு சொன்னார். அவர் தானும் சேவ் எடுத்தார். கண்ணாடியில் அப்பொழுதுதான் தனது முகத்தை ஆனந்தன் பார்த்தான். ஒவ்வொரு நாளும் சேவ் எடுத்துப் பழகியவன். இப்போது தாடி மீசை தன்பாட்டில் விருப்பம்போல் வளர்ந்திருந்தது. அவனை அவனாலேயே நம்பமுடியாதிருந்தது. பயங்கரத் தோற்றத்தில் இருந்தான்.

சலூன்காரர் முதலில் அடையாளம் காணவில்லை. சேவ் எடுத்தபின்தான் கவனித்தார். "சேர் நான் முதல் மட்டுக்கட்டல்ல இப்பதான் தெரியுது“. அனுதாபத்தோடு சொன்னார். இன்ஸ்பெக்டரே காசைக் கொடுத்தார். முதலில் சலூன்காரர் வேண்டாமென்றார். இன்ஸ்பெக்டர் வற்புறுத்திக் கொடுத்தார். பெற்றுக்கொண்டார். முடிந்ததும் வாடிவீட்டுக்கு ஜீப் சென்றது. கருணாமுர்த்தி காத்திருந்தார். ஆனந்தனை "வாங்க சேர்“ என்று வரவேற்றார். "சேர் இந்த அறையைப் பாவியுங்க. குளிப்பதற்கு ஏற்றவசதிகள் இருக்கு. நல்லாக்குளிச்சிட்டு வாங்க. உங்கட உடுப்பும் இருக்கு. யோகதாஸ் கொண்டு வந்து வெச்சவர்“;. அன்புடன் கூறினார். ஆனந்தன் அறையினுள் புகுந்து குளித்தான். உடல் சுகமாக இருந்தது. பாவம் அலெக்ஸ் நினைத்துக் கொண்டான். தனக்காக எத்தனைபேர் உதவுகிறார்கள். அவர்களை அடிமனதிருத்தி நன்றி நவின்றான். குளித்து உடைகளை மாற்றி வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் ‚பியரில’; லயித்திருந்தார். "மிஸ்ரர் ஆனந்தன் இது நல்லது கொஞ்சம் எடுங்க“. இன்ஸ்பெக்டர் அழைத்தார். "நோ..தாங்கியு பழக்கமில்லை இன்ஸ்பெக்டர். நீங்க எடுங்க“ பதிலளித்தான்.

பகல் சாப்பிடும் போது இரண்டு மணியாகியிருந்தது. சாப்பாடு முடிந்தது. கருணாமூர்த்தியை அழைத்தான். பில்லைக் கேட்டான். "சேர் மன்னச்சிக் கொள்ளுங்க... இதெல்லாம் எனது கணக்கு. உங்களுக்குச் செய்யாட்டி யாருக்குச் செலவழிக்கிறது“. சொல்லிக் கொண்டே தனது வேலைகளில் கருணாமூர்த்தி ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏற்றி கல்வித் திணைக் களத்தில் விட்டு விடைபெற்றார். யோகதாஸ் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழத்தொடங்கி விட்டார். ஆனந்தனுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. அலுவலகத்தில் உள்ளவர்கள் எழுந்து ஓடிவந்து நலம் விசாரித்தார்கள். பிரதிக் கல்விப்பணிப்பாளர் செல்வம் பாய்ந்து வந்தார். அவரது கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. பெரிய கூட்டமே கூடியிருந்தது. „அரசினரின் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். நல்ல விருந்து தந்தாங்க. போதும போதும் என்றாகியது. அலுத்து விட்டது. அனுப்பிவிட்டாங்கள். வந்திற்றன்“. தனது நகைச்சுவையோடு அனுபவத்தை எடுத்து விட்டான்.

நேரே கல்விப் பணிப்பாளரிடம் சென்றான். ஆனந்தனைக் கண்டதும் அவருக்குச் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. "வாங்க மிஸ்ரர் ஆனந்தன். எப்படி இருக்கிறீங்க“?. மேசையில் இருந்த மணியை அழுத்தினார். கேட்டதும் சந்திரன் வந்தார். சந்திரன் ஆனந்தனோடு மிகுந்த பாசமுடையவர். அவரது மனைவி கலா பொலிஸ் நிலையத்துக்கு வந்து அழுதேவிட்டார். "சந்திரன்! ஏ.ஓ.வைக் கூப்பிடுங்க“. சந்திரன் அவரை அழைக்கப் போனார். ஏ.ஓ பாலசிங்கம் வந்தார். பாலசிங்கம் மிக நல்லமனித நேயங்கொண்ட நிர்வாகி. எல்லாரோடும் அன்பாகப் பழகுவார். "ஏ.ஓ. மிஸ்ரர் ஆனந்தன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார் என்று கல்வி அமைச்சுக்கு அறிவியுங்க. எக்கவுண்டன் இல்லையா? வரச் சொல்லுங்க. ஆனந்தனது சம்பளப் பட்டியலைத் தயாரித்து சம்பளத்தைக் கொடுக்கச் சொல்லுங்க“. ஒரு கனவுபோல் நடந்தேறிக் கொண்டிருந்தது. ஆனந்தன் கேட்கமுதலேயே கல்விப் பணிப்பாளர் யாவற்றையும் செய்து விட்டார். நன்றி கூறி வெளியில் வந்தான். தான் கடமையேற்றுள்ளதாகக் கடிதம் தயாரித்துக் கொடுத்தான்.

அலுவலகக் கடமைகள் முடிந்து அனைவரும் போய்விட்டார்கள். ஆனந்தன் தனது அறையில் இருந்தான். அதிபர் பாலசிங்கம் தேடிக்கொண்டு அலுவலகம் வந்து விட்டார். "சேர் அலெக்ஸ் தனியத்தான் இருக்கிறார். கண்டதும் கண்கலங்கினார். வருத்தம்தான். என்ன செய்யிறது? ஆறுதல் சொல்லி உணவும் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன். அவரின் கோவையை உரிய பொலிஸ்காரர் வந்து பூரணப்படுத்துகிறார். கதைச்சனான். நாளைக்குக் கட்டாயம் விடுவார்களாம். பாலசிங்கத்தின் சொற்கள் சற்று ஆறுதலாக இருந்தது. "இப்ப பொலிஸ் நிலையம் போகேலாது. காலையில போய் பாருங்க சேர்“. கூறியதும் பாலசிங்கம் வடைபெற்றுச் சென்றார்.

யோகதாஸ் வந்தார். "யோகதாஸ் .... வாங்க... என்ன புதினம்“? விசாரித்தான். "இப்ப கந்தோர் முன்னமாதிரி இல்ல சேர். எல்லாரும் பயந்து பயந்து இருக்கிறாங்க. எங்கும் பிரச்சினைதான். இளைஞர்கள்தான் கஸ்டப்படுகிறார்கள். தாய் தந்தைமார் அதைவிடப் பயந்து சாகிறார்கள். தங்கட பிள்ளயள வெளிநாட்டுக்கு அனுப்ப ஓடித்திரியுறாங்க. ஏழைகள் எங்க சேர் போகுங்கள்“? கவலையோட நாட்டு நடப்பைக் கூறினார். எப்படி இருந்த நாடு. இப்படிப்போயிற்று. மாலை ஐந்து ஆறுமணிக்கு ஊரெல்லாம் அடங்கி விடுகிறது. நகரிலும் சனநடமாட்டம் குறைந்து வருகிறது. இராணுவ நடமாட்டம்தான் அதிகரித்திருந்தது. யோகதாஸோடு சேர்ந்து உண்டான். சரியான அயர்வாக இருந்தது. உடலெங்கும் வலித்தது. நீட்டி நிமிர்ந்து உறங்கிவிட்டான். வழமைபோல் உறக்கம் கலைந்தது. நேரத்தைப் பார்த்தான். அதிகாலை நான்குமணி. கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்தான். இரவு முழவதும் விடாத மழை பெய்தது. எங்கும் மழைநிர் வெள்ளமாக ஓடியது.

தியானம் முடிந்து கண்களைத் திறந்தான். கதவு தட்டப்பட்டது. மெதுவாகத் திறந்தான். "குட்மோர்னிங்.. காவ் சம் ரீ.“ இரண்டு கைகளிலும் தேநீரக்; கோப்பைகளோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வம் நின்றார். அவரைப் பார்த்தும் சிரிப்பாக இருந்தது. தலையில் துவாயால் மூடியபடி மழையில் நின்றார். "நல்லமழை பெய்திருக்கு என்ன சேர்?. உள்ளே வாங்க சேர்“ அழைத்தான். அவர் தேநீர் கோப்பைகளோடு வந்தார். ஒன்றை அவன் பெற்றுக் கொண்டான். கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டுத் தலையைத் துடைத்தார். கதிரையில் இருந்து உரையாடிக் கொண்டே தேநீரைக் குடித்தார்கள். "வீட்டுக்குப் போகவில்லையா“? செல்வம் கேட்டார். "நாளைக்குப் போகவேணும் சேர். இன்றைக்கு நிறைய வேலையிருக்கு. பொலிஸி;ல் ‚றிளீஸ்’ கடிதம் எடுக்கவேண்டும். சம்பளம் எடுத்துக் கொண்டுதான் போகவேணும்“. பதிலளித்தான்.

"வீட்டுக்கு அறிவிச்சிங்களோ“? அடுத்த வினாவைத் தொடுத்தார். "இல்லை சேர். அதிர்ச்சி இன்பம் கொடுக்க வேணும். அதிலதான் ஒரு சுகமிருக்கு சேர். சிரித்தவாறே கூறினான். "நல்லா அடிச்சவங்களோ“? தொடர்ந்தார். "அங்குள்ள இளைஞர்களோடு ஒப்பிடுகையில் அவ்வளவு இல்லை. என்டாலும் சும்மா சொல்லக்கூடாது சேர். நல்ல .சாப்பாடு தந்தாங்க“. சுவையோடு சொன்னான். "நல்லா மெலிஞ்சிட்டிங்க“. கவலையோடு சொன்னார். நேரம் போனது தெரியவில்லை. அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார். அலுவலகம் தொடங்கி விட்டது. கல்விப் பணிப்பாளர் சிவபாதம் அழைத்தார். அவரது அறைக்குள் சென்றான். "மிஸ்ரர் ஆனந்தன், ஒருகிழமைக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போய்வாங்க. அது டியு_ட்டி லீவாக இருக்கட்டும். அதச்சொல்லத்தான் கூப்பிட்டனான். சம்பளம் இன்றைக்கு எடுக்கலாம்“. அவர் முடித்தார்.

"சேர்.. இன்றைக்கு பொலிஸில் ‚றிளீஸ்’; கடிதம் எடுக்க வேணும். பழைய கோவைகள் கிடக்கு அவற்றை முடித்ததும் நாளைக் காலையில வீட்டுக்குப் போகிறேன் சேர்“. விளக்கினான். "நல்லது. உங்கட விருப்பம் போல் செய்யுங்க“. கூறிவிட்டு அவர் தனது கடமையில் மூழ்கினார். சில கோவைகளைப் பார்வையிட்டு ஒன்பதரை மணிக்கு வெளியில் வந்தான். யோகதாஸின் சைக்கிளையும், குடையையும் எடுத்தான். மழை பெய்து கொண்டிருந்தது. சைக்கிளில் ஏறி பொலிஸ் நிலையம் சென்றான். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை அவனுக்காகக் காத்திருந்தார். ‚றிளீஸ்’ கடிதத்தைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தான். கடிதத்தில் ‚சந்தேகத்தின் பேரில் வசாரணைக்காகக் கைது செய்து விசாரணையின் பின் எந்தவிதக் குற்றமுமில்லை என்பதால் விடுவிக்கப் பெற்றுள்ளார். அவரது பணியைத் தொடரலாம். ஆட்சேபனையில்லை. என்று எழுதியிருந்தது. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை புன்னகைத்தார். சேர் நீங்க செய்த உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி“. மனமுருக நன்றி சொன்னான். "சேர் உங்களுக்கு உதவிகள் செய்வதற்கு நாங்க கொடுத்து வைச்சிருக்க வேணும். அவ்வளவுதான் எனக்குச் சொல்லமுடியும“;. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை கூறினார்.

"அலெக்ஸாந்தர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார். கோவையை கையெழுத்துக்குப் போட்டாச்சு“. அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பொலிஸ்காரர் அவரிடம் கோவையைக் கொடுத்தார். அது அலெக்ஸாந்தரின் கோவை. "நில்லுங்க அவரைக் கூட்டிவாறன்“. சொல்லிக் கொண்டே சென்றார். சற்றுநேரத்தில் அலெக்ஸாந்தர் புன்னகையோடு ஓடிவந்து ஆனந்தனைக் கட்டித்தழுவினார். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாய் ஓடியது. "இந்தாங்க உங்கட றிளீஸ் கடிதம்“;. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை கடிதத்தையும் கொடுத்தார். "சந்தோசமாய்ப போய்வாங்க“. விடை கொடுத்தார். அலெக்ஸாந்தரின் மனைவி வந்திருந்தார்.

"அலெக்ஸ் நான் நாளைக்கு ஒரு கிழமை லீவில வீட்டுக்குப் போய்வரப்போறன். நீங்க சுகமாக வீடுபோய்ச் சேருங்க“. அலெக்ஸாந்தரின் மனைவியைப் பார்த்து "அலெக்ஸாந்தரை நல்லாப் பார்த்துச் சாப்பாடு கொடுங்க. நான் பிறகு வாறன்“. புன்னகைத்தவாறே சொன்னான். அலெக்ஸாந்தரின் தம்பி யோகன் வானில் வந்தார். அலெக்ஸ் மனைவியுடன் அதில் ஏறிக் கொண்டார். கையசைத்து வழியனுப்பினான். நேரே அலுவலகம் சென்று ஏ.ஓ. பாலசிங்கத்திடம் ‚றிளீஸ்’; கடிதத்தை ஒப்படைத்தான். "இதூன் அவசியமானது. இதன் பிரதிய இப்பவே கல்வி அமைச்சுக்கு அனுப்பிவிடுறன். இனிப்பயமில்லை“. அவர் கடிதத்தைப் பெற்று அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டார். தனது அலுவலக அறையினுள் புகுந்து கடமைகளில் மூழ்கினான். பல அதிபர்களும், ஆசிரியர்களும் அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் நன்றி கூறினான். அடுத்த கிழமை பாடசாலைகளுக்கு வருவதாக வாக்குறுதியளித்தான். அவர்கள் சென்றபின் நிதிப்பகுதிக்குள் நுழைந்தான்.

கணக்காளர் திருநாவுக்கரசு அருமையான மனிதர். அவர் ஆனந்தனின் சம்பளக் காசோடு காத்திருந்தார். "வாங்க மிஸ்ரர் ஆனந்தன்! சம்பளத்தை அவனிடம் கொடுத்தார். மூன்று மாதச் சம்பளம் அவனை எட்டிப் பார்த்தது. நன்றி கூறினான். "மிஸ்ரர் ஆனந்தன்! உங்களுக்கு ஒன்று சொல்லுறன். என்ன காரணம் கொண்டும் இப்ப இடமாற்றம் கேட்கவேண்டாம். இடமாற்றம் கேட்டால் ‚சட்டி சுடுதென்டு, அடுப்புக்குள் பாய்ந்த கதையாகும்’ என்றார். "ஏன் அப்படிச் சொல்லுறீங்க. நான் இடமாற்றம் கேட்கல்லையே“ வியப்போடு கேட்டான். "காரணத்தோடதான் சொல்லுறன். உங்கள அனுப்பிப் போட்டு இப்ப ‚அக்ரிங்கா’ பார்க்கிறவர் அதற்கான வேலையில ஈடுபட்டிருக்கார்“;. ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். "அப்படி நடக்காது. பயப்படாதீங்க. எனக்குப் பலகனவுகள் இருக்கின்றன. அவற்றை மெய்ப்பட வைத்து விட்டுத்தான் இந்த மாவட்டத்தை விட்டுப் போவன்“. ஒரு புன்னகையுடன் கூறினான்.

"உண்மையில நான் சந்தோசப்படுறன்“;. திருநாவுக்கரசு நன்றியுடன் கூறினார். அவருக்கு ஆனந்தனின் செயற்பாடுகள் பிடித்திருந்தன. கணக்காளரைப் பலருக்குப் பிடிக்காது. எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கொஞ்சம் கெடுபிடிதான். நிதி மிகவும் முக்கியமானது. அதில் குளறுபடிகள் ஏற்பட்டால் மோசடிகள் உருவாகும். அதனால் அவர் இறுக்கமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவரது செயற்பாடுகள் ஆனந்தனுக்குப் பிடித்திருந்தன. ஏதாவது ஒரு வழியில் ஒத்தகருத்து இருந்தால்தானே நட்பு உருவாகும் அல்லது முரண்பாடு முறுக்கி முன்னால் நிற்கும். மழை விடாது பெய்து கொண்டிருந்தது. வானம் இருண்டு கிடந்தது. இந்த மழையிலும் அதிபர், ஆசிரியர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். அதிபர் முருகப்பா அழுதேவிட்டார். அவரைத் தேற்றுவதில் படாத பாடுபட்டான். ஒருவாறு நன்றி கூறி அனுப்பி வைத்தான்.

வீட்டுக்குப் போகும் வேலைகளில் ஈடுபட்டான். ஆயத்தங்களைச் செய்தான். குளிர்காற்றோடு மழை பொழிந்தது. விடியும்வரை காத்திருந்தான். உணவின்பின் உறங்கினான். அதிகாலை வேளைக்கே எழும்பி விட்டான். ஆறரை மணிக்கு ஆயத்தமானான். யோகதாஸ் பஸ்நிலையத்துக்கு வர உதவினார். ஏழுமணிக்கு திருகோணமலைக்குப் போகும் பஸ் இருந்தது. ஏறிக் கொண்டான். பஸ் புறப்பட்டது. ஈரற்பெரியகுளத்தில் நின்றது. பயணிகள் இறங்கினார்கள். தங்கள் மூட்டைமுடிச்சுக்களைச் சுமந்து கொண்டு ஒருவர்பின் ஒருவராக நடந்தார்கள். இராணுவமும், பொலிஸ்காரரும் மூட்டைமுடிச்சுக்களைப் பரிசோதித்தார்கள். தனித்தனியாக ஆட்களைத் தடவிப் பார்த்தார்கள். அடையாள அட்டைகளைப் பார்த்துப் பதிந்தபின் நடக்கச் சொன்னார்கள். பல இராணுவத்தினர் வரிசையாக நின்று பார்த்தனர்.

ஆனந்தனுக்கும் பரிசோதனை நடந்தது. அடையாள அட்டை பதியப்பட்டது. முடிந்ததும் ஆனந்தன் நடந்தான். இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அடித்தவர்கள் யாரையும் அங்கு காணவில்லை. இறுதியாக ஜீப் நின்றது. ஜீப்பின் முற்பகுதியில் அவன் ஏறியிருந்தான். தூரத்தில் போன வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. லொறிகள் மட்டும் போய்க்கொண்டிருந்தன. வெள்ளம் வீதியைப் பரவி ஓடுகிறது. பஸ் போகமுடியாது என்ற செய்தி பரவியது. எப்படியும் போகவேண்டும் என்று பலர் தீர்மானித்தார்கள். நடத்துனர் பஸ் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்தார். நடந்து மதவாச்சிவரை போனால் அதிலிருந்து பஸ் பிடிக்கலாம். கதைத்துக் கொண்டார்கள். ஆனந்தன் தீர்மானித்து விட்டான். அவர்களோடு சேர்ந்து நடந்தான்.

சில வழிப்பறிகள் நடந்து கொண்டிருந்தன. பலரின் பொருட்கள் சூறையாடப்பட்டன. வவுனியாப் பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து பலபொலிஸ்காரர்கள் லொறிகளில் வந்து கொண்டிருந்தனர். மழை தூறிக்கொண்டிருந்தது. அந்தக் கொமாண்டரின் கழுகுக்கண்கள் ஆனந்தனைக் கண்டு கொண்டன. "ஹலோ பிறன்ட் கோமத சப்ப சனிப்ப? எப்படி சுகம்“;? நக்கலாகக் கேட்டான். ஆனந்தன் மௌனியானான். அவன் ஏதோ கெட்ட வார்த்தைகளைக் கொட்டினான். "உன்ர அதிர்ஸ்டம் இப்ப தப்பிட்டாய். எப்பயாவது உன்ன வேட்டையாடுவம். போ“. என்றான்.

ஆனந்தனுக்குக் கண்கள் சிவந்து கோபம் பொங்கியது. மேரியை நினைத்துக் கொண்டான். "அவளைப் போய் பார்த்து ஆறுதல் கூறவேண்டும். எனது பிள்ளைகளைப் பார்க்கவேணும“;. மனம் கூறிக்கொண்டிருந்தது. "இவன் மடையன் கிடக்கிறான்“. ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு நடந்தான். அவனால் சரியாகக் கால்களைப் பதித்து நடக்க முடியாதிருந்தது. அடிபட்ட கால்கள் வலித்தன. கல்நாவ கிராமவீதியால் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. ஆட்களை இழுத்துக் கொண்டு வெள்ளம் பாய்ந்தது. போகமுடியாது என்ற நிலை வந்து விட்டது. சனங்கள் குழுமி நின்றார்கள். வெள்ளம் வடிந்தபாடில்லை.

மழை விட்டிருந்தது. நேரம் பகல் ஒருமணியைத் தாண்டியிருந்தது. வவுனியாவில் இருந்து லொறிகளில் பொலிஸ்காரர்கள் வந்து குவிந்தார்கள். சனங்களிடம் விசாரித்தார்கள். வழிப்பறி வெள்ளம் பாய்வதற்கப்பால் நடைபெறுவதாகச் சனங்கள் கூறினார்கள். லொறிகள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்தன. ஒரு லொறியில் இருந்து „மாத்தயா கொகத யன்ன. எங்க போறது“? குரலொன்று ஒலித்தது. ஆனந்தன் பார்த்தான். அவன் அடையாளம் கண்டுகொண்டான். தனது முறைப்பாட்டை அனுதாபத்தோடு பதிந்த பொலிஸ்காரர் பிரியாங்க. "மதவாச்சி“ என்றான். லொறி சற்று நின்றது. "நகின்ட. ஏறுங்க“ பிரியாங்க சொன்னான். ஆனந்தன் ஏறிக் கொண்டான். லொறி ஊர்ந்து சென்றது. மதவாச்சிக்கு வந்து விட்டான். லொறி திரும்பியது. நன்றி கூறி இறங்கிக் கொண்டான்.

மதவாச்சியில் இருந்து திருகோணமலைக்கு பஸ் இல்லை. அனுராதபுரத்துக்குப் போய் அங்கிருந்து போகலாம் என்ற செய்தியை அறிந்தான். அனுராதபுரம் சென்றான். பஸ் மூன்று மணிக்கு வரும் என்றார்கள். மூன்றரை மணிக்கு பஸ் வந்தது. ஏறிக் கொண்டான். ஆறரை மணிக்குத் திருகோணமலையை அடைந்தது. அங்கிருந்து கிண்ணியா பஸ்சில் ஏறினான். ஏழரை மணிக்குக் கிண்ணியாத்துறையைக் கடந்து இருளில் நடந்தான்.
எட்டரை மணியிருக்கும். மெதுவாக வீட்டை எட்டிப் பார்த்தான். வீட்டில் பிள்ளைகள் சூழ மேரி அழுதகண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தாள்.

அசோக வனத்தில் சீதைசிறையிருந்ததைக் கம்பர் அழகாகச் சொல்வார். புகைபடிந்த ஓவியமாகக் காட்டுவார். அதனை நிஜமாகக் கண்டான். அவனது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அடக்கிக்கொண்டான். அவன் இருளில் நின்றதை யாரும் கவனிக்க வில்லை. அங்கிருந்து திரும்பி படலைவரை சென்றான். மீண்டும் நேரே வெளிச்சம் படும்படி நடந்து வந்தான். "மேரி“ அழைத்தான். மேரி திடுக்கிட்டுத் திரும்பினாள். ஆனந்தன் அவள் முன்னே நின்றான். தூன் காண்பது கனவா? அல்லது நிஸமா? "அத்தான் வந்திற்றிங்களா“? ஓடோடி வந்து அவனது கால்களைக் கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள். „எனது உடல்பொருள் ஆவியெல்லாம் நீங்கதான். என்ர கனவெல்லாம் நீங்கதான். என்ர கனவு மெய்ப்படணேடும் என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை. அந்தக் கனவு எனக்கு முன் மெய்ப்பட்டு நிற்கிறது. இறைவனே இணைபிரியாத வரம் வேண்டும்.“ இறைவனை மன்றாடினாள்.

பிள்ளைகள் அவனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள். மேரியின் அழுகை ஓயமட்டும் அப்படியே நின்றான். ஓய்ந்தபிறகு அவளைத் தூக்கிவாரி அணைத்தான். அந்த அணைப்பில் தனது துயரங்கள் எல்லாம் தவிடுபொடியாகின. "அப்பா வந்திட்டார்“. பிள்ளைகள் கூத்தாடினார்கள். வாங்கி வந்த பொருட்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்தான். அரைநொடியில் செய்தி ஊரெல்லாம் பரவியது. சொந்தங்கள் ஒன்று கூடினார்கள். தனது அனுபவங்களை மனதுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு அவர்களோடு அளவளாவினான். இன்றுதான் மேரியின் முகத்தில் புன்னகை பூத்தது.

நிறைவு


என்னுரை

இந்த நாவலை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக முனைந்தேன். சந்தர்ப்பம் கிடைக்காது போயிற்று. இது கற்பனைகலந்த உண்மை. இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. இக்கதையில் வரும் வதைபட்ட காதாபாத்திரங்கள் உங்களில் ஒருவராகவும் புலம்பெயர்ந்து இருக்கலாம். பலர் விதக்கப்பட்டும் இருக்கலாம். ‘நான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’ என்பதற்காக இதனை எழுதத் துணிந்தேன். என்னுடன் 1983 தொடக்கம் 1991 வரை வவுனியாவில் வட்டாரக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. செல்வராசா கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை நாவலாக எழுதும்படி வற்புறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள் இந்த நாவல்மூலம் நிறைவேறுகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை நானறியேன்.

சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளயும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம்.

இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் 1984 - 86 வரையான காலப்பகுதிக்குரியன. அக்காலப் பகுதிக்குள் நமது நாட்டுநிலையைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் 1959-1976 வரையான காலப் பகுதிகளிலும், பின்னரும் நடந்தேறிய சில சம்பவங்களும் சுவையூட்டுவனவாக உள்ளன. நமது இளைஞர்களின் துயரங்களும் அதனால் அல்லலுற்ற பெற்றோரின் அவலங்களும் விபரிக்கப் படுகின்றன. இந்த நாவலூடாகச் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்து அறிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களது கடமையாகும். ‘நான் பட்ட துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’. சிறப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெறாதிருக்கப் பிராத்திக்கின்றேன். ‘சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழா’த தமிழினத்தில் ‘தமிழனுக்குத் தமிழனே எதிரி’ என்பதனையும் ‘தமிழர்கள் என்று ஒன்று படுவார்களோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவுநாளாகும். என்பதனையும் உணர்ந்து செயற்படுங்கள்.

உலகெங்கும் செறிந்து வாழும் தமிழர்களுக்கு இந்த நாவல் கொண்டுள்ள கருவைப் புரியவைக்க வேண்டும் என்ற பேரவாவினால் உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். தமிழர் போராட்டம் தொடங்கியதற்கான காரணங்கள், தமிழ் இளைஞர்களை எவ்வாறு திட்டமிட்டுச் சித்திரவதை செய்து அழித்;தார்கள், எத்தனை இளைஞர்களும், யுவதிகளும் இன்றும் சிறைக்கைதிகளாகக் கூண்டில் கிடந்து வாடுகிறார்கள் என்பதனை நானறிவேன். அவர்களுக்காகக் குரல் எழுப்புவதற்கு நமது தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களைத் தேடுகிறேன். இக்கதையில் உயிரோட்டமாக உள்ளே புதைந்துள்ள கருவைப் படியுங்கள். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துள்ளும் புதையுண்டு கிடக்கும் சோகம் இழையோடும். பிள்ளைகளைப் பறிகொடுத்து ஏங்கும் பெற்றோர்களது உள்ளக் குமுறல்கள் புரியும். இதில் வரும் கதாபாத்திரங்கள் அடிபட்ட அனுபவத்தோடு புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்போன்றவர்கள் இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் படித்து இப்படித்தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை முறை என்பதைப் புரிந்து கொள்ளட்டும். நாங்கள் செத்துக் கொண்டே வாழ்கிறோம். ஆனந்தவெளியில் உள்ள கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பெரிதும் வரவேற்கிறேன்.

நன்றியுடன்

ச.அருளானந்தம்
(கேணிப்பித்தன்)

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP