Friday, May 21, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

29

ஒருகிழமை கடந்துவிட்டது. அதிபர்கள், ஆசிரியர்கள் என்று பொலிஸ் ஸ்ரேசனுக்குப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்குப் பதில் சொல்வதே பெரும்சிரமமாக இருந்தது. "எப்பசேர் விடுவாங்களாம். ஏன் இன்னம் விடல்ல.“ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் திண்டாடினான். பலர் பொலிஸ் நிலையத்துக்கு வருவதில் இருந்து தவிர்த்திருந்தார்கள். துணிவுள்ளவர்கள் மட்டும் வந்தார்கள். யோகதாஸ் மாலை வந்து "சேர் உங்கட வீட்டயிருந்து வந்தது“. ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதனை வாங்கிப் பார்த்தான். கடிதத்தில் முத்திரை இல்லை. விலாசமும் இல்லை "யார் தந்தது“. கேட்டான். "செல்வராசா அதிபர் தந்தவர்.“ யோகதாஸ் பதிலளித்தான். ஆறதலாகப் பார்க்கலாம். அதனை வைத்துக் கொண்டான்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பவர்களை எந்தநேரமும் பார்க்கமுடியாது. காலையில் ஆறுமணியிலிருந்து ஏழமணி வரை பார்க்கலாம். மாலையில் ஐந்து மணியிலிருந்து ஆறுமணிவரையும் பார்க்க வரலாம். இப்போது யாரும் பார்க்கவர முடியாத நேரம். கடிதத்தைப் பிரித்தான். அவன் கண்கள் குளமாயின. மேரி எழுதியகடிதம். வாசிக்க வாசிக்கக் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி நெஞ்சுச் சட்டையை நனைத்தது. ஆனந்தன் இப்படித் தேம்பி அழுததைப் அலெக்ஸ் பாரத்ததில்லை. அவரது கண்களும் கலங்கின. "எல்லாவற்றையும் அதிபர் செல்வராசா வந்து கூறினார். என் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் விரைவில் வருவீர்கள் என்று சொன்னார்கள். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் காத்திருக்கிறன்“. அப்படியே மேரி எதிரே நின்று ஒப்புவித்துக் கொண்டிருந்த உணர்வினைப் பெற்றான்.

மேரி வந்தால் தனது இந்தப்பரிதாப நிலையைக் கண்டால் துடிதுடித்துப் போவாள். அவள் தாங்க மாட்டாள் என்பதை அறிவான். அதனால் அவள் அதனைப் பார்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அத்துடன் அவளையும் மிரட்டுவார்கள். அதனால் என்னகாரணம் கொண்டும் தன்னோடு தொடர்பு கொள்ளவேண்டாம் என்று அறிவித்திருந்தான். ஆனால் அதிபர் செல்வராசாவும், இரத்தினராஜாவும் திருகோணமலைக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஆனந்தன் வீட்டுக்கே சென்று மேரியிடம் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கிறார்கள். அவள் வெந்து, மனம் நொந்து, அழுது புரண்டு கடிதம் எழுதியிருக்கிறாள். "எனது மனைவிக்குத் துயரத்தைத் தூண்டிவிட்டார்கள். அவளை அழவைத்துவிட்டார்கள்“ என்று ஒருபக்கம் கோபம் வந்தது. மறுபக்கம் அவர்கள்மேல் பேரன்பு துளிர்த்தது. "என்மேல் உள்ள அன்பின் காரணத்தினால்தானே அவ்வளவு தூரம் சென்று அறிவித்துள்ளார்கள்“. அவர்களை எண்ணி நெக்குருகினான்.

கணபதிப்பிள்ளை வந்தார். "சேர் எப்படி இருக்கிறீங்க. நாளைக்கு எஸ்.பி. வருவார். ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் நல்ல மனுசன். இரவு கதைச்சவர். தான் எஸ்.பி யோட ரெலிபோனில கதைச்சவராம். பொய்யான பிட்டிசமாம். உங்களி;ல குற்றமில்லையாம். அவர் வந்ததும் விடுவதாகச் சொன்னார். பயப்பிடாமல் இருங்க“. கூறிவி;ட்டுச் சென்றார். மூவரும் ஆளையாள் பார்த்தார்கள். "சேர், நீங்க இப்படிக் கவலைப்பட்டதை நான் பார்த்ததேயில்ல. எனக்கும் அழுகை வந்தது.“ அலெக்ஸாந்தர் கவலையோட கூறினார். வாழ்க்கை என்பது, உண்டு உறங்கியிருப்பது மட்டுமில்லை. அதனை ரசித்து அனுபவிக்கவும் வேண்டும். மனிதனுக்கு மட்டும்தான் வாழத்தெரியும். பிறவிப் பயனையிட்டுச் சிந்திக்கவும் செய்;கிறான்.

விலங்குகளின் வாழ்க்கை வட்டம் குறுகியது. இவ்வுலகில் பல்லாயிர உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை உண்டுறங்கி, இனப்பெருக்கம் செய்து மாண்டு மடிந்து போகின்றன. மனிதர்கள் பலர் விலங்குகளாகவே இருந்துவிட்டுச் செல்கின்றனர். காக்கிச் சட்டை போட்டவர்கள் எல்லோரும் இரும்பு மனம் படைத்தவர்கள் இல்லை. அவர்களுள் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலவேளைகளில் அவர்கள் இரும்பாக இதயத்தை மாற்றிக் கொள்கிறார்கள். கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இரும்பான இதயங்களைக் கொண்டவர்களிடம் சட்டம் கைமாறி விடுவதால் மனித அவலங்கள் உருவெடுக்கின்றன. ஆனந்தன் சற்று நிம்மதியானான். கனவுகளை மெய்ப்படுத்துவதில் அவனுக்கு இறைவன் பக்கபலமாக இருந்து உதவுகிறான். நல்லனவற்றைச் சிந்நித்து, நலிவுற்றோருக்கு நல்லனவற்றைச் செய்வதற்கு முனையும்போது வெற்றி வருவது உறுதி.

"சேர் நம்ம மூன்றுபேரையும் ஒன்றாக விடுவாங்களோ தெரியாது. நான் பிந்தி வந்தபடியால் என்னைப் பிந்தித்தான் விடுவாங்கபோலத் தெரியுது. அலெக்ஸ் கவலையோடு சொன்னார். "ஏன் வீணாகக் கவலைப்படணும். வருவதை எதிர் கொள்ளவேணும். கவலைய விடுங்க. மூன்றுபேரையும் விடுவாங்க“. ஆனந்தன் ஆறுதல் கூறினான். நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். குந்தியிருக்க ஒருசிறு மேடை. எழும்பி கைகால்களை அசைக்க இன்னொரு சிறிய இடம். வேளைக்கு உணவு. ஒரு வேலையும் செய்யவேண்டியதில்லை. நல்ல ஓய்வு. வேறென்ன வேண்டும். அதனால்தான் இதனை மாமியார் வீடு என்று சொல்கிறார்களோ?

மனிதர்கள் தங்கள் இன்பத்துக்காகப் பறவைகளைப் பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்டிக் கூண்டுக்குள் அடைத்து பாலும், பழமும், உணவும் கொடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் அந்தப் பறவைகள் மகிழ்கின்றனவா? அதைப்பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? மனிதர்களை இப்படிக் கூண்டுகளில் போட்டு உணரவைத்தால் பறவை இனங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். இங்கு எல்லாம் கிடைத்தாலும் மனதில் சுதந்திர உணர்வும், மகிழ்ச்சியும் இல்லையே. வருடக்கணக்காகச் சிறையில் வாடும் இளைஞர்களையிட்டுச் சிந்தித்தான். அவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிட்டும்?

பொழுது விடிந்து மணி ஒன்பதாகியது. போலிஸ் நிலையம் உசாரானது. சிங்களத்தில் "உசார். ஹேட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் வருகிறார்“;. போலிஸ்காரர்கள் உசாராகி சலூற் அடித்து நின்றார்கள். அவர் அறைக்குள் போனதும் கடமைகள் தொடங்கின. இன்ஸ்பெகட்ர் திசநாயக்க வந்தார். "பரமன் என்ட“ அழைத்தார். பரமன் ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றான். ஏன் அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியாது. சற்று நேரத்தில் பரமன் வந்தான். விசாரித்தார்கள். "நீ வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்துப் போட்டன். போகச் சொன்னார்கள். எனக்குக் கவலையாயிருக்கு சேர். நான் வாறன் சேர்“;. பரமன் கூறிவிடை பெற்றான். "பரமன் இங்கிருந்து போகவேணும். மீண்டும் வரக்கூடாது. போங்க. நாளைக்கு அல்லது நாளை மறுநாள் நாங்களும் வெளியில் வந்துவிடுவம“;. வாழ்த்துக் கூறினான். பரமன் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பரமனின் சகோதரர்கள் பணத்தை அள்ளி வீசியிருந்தார்கள். பரமனுக்கு எதிரான குற்றங்கள் ஏதுமில்லை. பரமனை எப்பவோ விட்டிருக்கலாம். இன்ஸ்பெக்டர் திசநாயக்காதான் இழுத்தடித்ததை அறிந்து கொண்டான். அவனுக்குரிய கோவையை ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டருக்குச் சமர்ப்பிக்கவில்லை. இன்றுதான் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுள்ளார். பரமனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது.

இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "உங்கட விளக்கத்தை எழுதியவர்களாலதான் உங்களுக்கு பிந்துதுபோலக் கிடக்கு. நான் அதைப் பார்த்துச் சொல்லுறன். ஏஸ்.பி.நாளைக் காலை வந்ததும் கோவைகள் மேசையில் இருந்தால் கையெழுத்துப் போடுவார். இனிக்கவலப்படத் தேவையில்ல. கஸ்டகாலம் எல்லாம் கடந்து போச்சு. நான் பின்னேரம் வாறன்“. அவர் போய்விட்டார். விடுதலை உறுதியாகியது. இருவரும் ஆளையாள் பார்த்தபடி இருந்தார்கள். மதிய உணவு வந்தது. உண்டார்கள். குந்தியிருந்து உரையாடினார்கள். சீமேந்து மேடையில் சாய்ந்தார்கள். நாளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

"சேர் எப்படி புதிய பாடசாலைகளுக்கு அனுமதியெடுத்தீர்கள்“? அலெக்ஸ் கேட்டார். "பாடசாலை திறப்பதற்கென்று சில படிவங்கள் உள்ளன. அவற்றைச் சரியாக நிரப்பி, கேட்கப்பட்ட ஆவணங்களைச் சரியாகக் கொடுத்தால். அனுமதி கிடைக்கும். கல்வி அமைச்சில் எனது நண்பர் இருக்கிறார். அவரும் உதவி செய்தார். பரீட்சை நிலையத்துக்குரிய அனுமதியும் அப்படித்தான். வெளியில் போனதும் முதல்வேலையாகக் கிராமங்களில் புதிய பாடசாலைகளைத் திறக்க வேணும். 'தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம். கல்வி இல்லாத பேர்களை இல்லாது செய்வோம்’; என்று பாரதி கண்ட கனவை மெய்ப்படச் செய்ய வேணும். வவுனியா மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிறையவே உண்டு. அதனை கல்வி அமைச்சுக்கு எடுத்துச செல்லவேண்டும். இவற்றை விரைவில் முடிக்க வேண்டும்“. ஆனந்தன் அடுக்கிக் கொண்டே சென்றான்.

கதைத்துக் கொண்டே சற்றுக் கண்ணயர்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "சேர் வாக்குமூலம் எடுத்த பொலிஸ்காரரிட்ட சொல்லி இருக்கிறன். அவங்க இன்னும் கோவையை முடிக்கல்ல. கெதிபண்ணிச் செய்யச் சொல்லியிருக்கிறன். அனேகமாக இரவுக்கு முடிச்சிருவாங்க என்று நினைக்கிறன். அப்ப இருங்க நான் வாறன்;“. அவர் சென்றுவிட்டார். அவர் அடிக்கடி வந்து பார்ப்பது பெரிய ஆறுதலாக இருந்தது. மாலையானதும் வழமைபோல் பாலசிங்கம் வந்தார். உரையாடினார்கள். நடந்த விடயங்களைக் கூறினார்கள். பாலசிங்கத்துக்குச் சந்தோசம். "நல்ல காலம் சேர். டி.ஓ போடாதது. நான் கோயிலுக்குப் போய் ஒவ்வொரு நாளும் மன்றாடி வாறன். இறைவன் அருள்பாலிப்பான்“. உணவைக் கொடுத்தபடியே கூறினார். அவர் சென்றுவிட்டார்.

உணவின் பின் அதிபர்களைப் பற்றிய சிறிய உரையாடல் வந்தது. அதிபர் முருகப்பாவின் வீரதீரத்தைப் பற்றி உரையாடினார்கள். அவர் வந்து தனது கதைத்த முறைகளைப் பற்றிக் கூறினான். ஆனால் கால்களைப் பிடித்ததைப் பற்றிக் கூறவில்லை. "அதுவும் ஒரு வழியில் உதவி செய்திருக்குச் சேர். இல்லாட்டி விளையாட்டுப் போட்டிக்கு உணவு கிடைத்திருக்காது“. அலெக்ஸாந்தர் சொல்லிச் சிரித்தார். அந்த வேதனைகள் மத்தியிலும் சிறிது சிரிப்பு வந்து தலைகாட்டிச் சென்றது. கதைத்துக் கொண்டே சற்று உறங்கினார்கள். உறங்குவதும், விழிப்பதுமாக இரவு கழிந்தது.

காலை வழமைபோல் வந்தது. சொல்லி வைத்ததுபோல் பாலசிங்கம் தேநீர், காலை உணவோடு வந்தார். "நான் ஒருவகையில் கொடுத்து வைத்தவன்தான். அன்பான தாய்தந்தை கிடைத்தார்கள். எனது மனதுக்கேற்ற மனைவி கிடைத்தாள். இரண்டு குழந்தைகள் கிடைத்தார்கள். துன்பத்திலும் உதவும் நல்ல மனிதர்கள் கிடைத்திருக்கிறார்கள். கடவுள் துன்பத்தைக் கொடுப்பதும் ஒருவகையில் ஒரு பரீட்சைதானோ? அப்போதுதானே இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது“. மனதுள் சிந்தனை வளர்ந்தது. "இன்று ஏதும் விஷேசம் நடக்குமா“? மனதுக்குள் கேட்டுக்கொண்டான். "சேர்..இன்றைக்கு அல்லது நாளைக்கு விடுவார்களாம். நான் சார்ஜனிடம் விசாரித்தன்“. பாலசிங்கம் தேநீரை ஊற்றிக் கொடுத்தார்.

"இரண்டு பேரையும் ஒன்றாக விடுவது சாத்தியப் படாதாம்“;. பாலசிங்கம் சொன்னார். "ஏனாம்?“ அலெக்ஸ் கேட்டார். "ஓரு கோவை செய்யிற பொலிஸ்காரர் இன்றைக்கு வரல்லையாம். லீவாம். யாருடையதென்று தெரியாது. ஒருவரை விடுவார்களாம். நான் பின்னேரம் வந்து பாரக்கிறன் சேர்“. கூறிவிட்டுச் சென்றார். இப்போது இருவருக்கும் யோசனை பிடித்து விட்டது. "முதலில் அலெக்ஸ் போகவேண்டும். அலெக்ஸ் பாவம். இளகிய மனம். நான் பிறகு போகலாம்“;. மனதினுள் எண்ணிக் கொண்டான்.

அலெக்ஸ் யோசனையில் ஆழ்ந்தார். "சேர் நீங்கள் முதலில் போனால் நல்லது சேர். வெளியில் இருந்து எனது கோவை வேலையை முடிப்பீர்கள்“;. அலெக்ஸ் கூறினார். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. "நமக்குள்ள ஒற்றுமையைப் பார்த்தீர்களா? நான் நீங்க போகவேணும் என்று எண்ணுறன். நீங்க, நான் போகவேணும் என்று எண்ணுறீங்க. சரி யார் முதலில் போனாலும் சரிதான.; முந்தினாலும், பிந்தினாலும் எப்படியும் வெளியில் போனால் போதும்“ ஆனந்தன் கூறினான். பொலிஸ் ஸ்ரேசன் உசாரானது. ஹேட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் முதலில் வந்தார். வேலைகள் தொடங்கின. பத்து மணிக்கு மீண்டும் உசாரானது. ஏஸ்.பி வந்துவிட்டார்.

சற்று நேரத்தால் இன்ஸ்பெக்டர் திசநாயக்கா வந்தார். அறைத்திறப்பை வைத்திருந்த பொலிஸ்காரரை அழைத்தார். அவர் வந்து கதவினைத் திறந்தார். "குட் மோர்னிங் மிஸ்டர் ஆனந்தன். கம் அவுட். யூ ஆர் றிலீஸ் ருடெ“ வெளியில் வரும்படி அழைத்தார். ஆனந்தனின் முகம் கறுத்துவிட்டது. அலெக்ஸாந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அழத்தொடங்கி விட்டார். அலெக்ஸாந்தரின் விடுதலையைப் பற்றிக் கேட்டான். கோவை தயாரில்லை. நாளைக்கு அவர் விடுதலையாவார். இன்ஸ்பெக்டர் ஆங்கிலத்தில் சொன்னார். "இன்ஸ்பெக்டர் நானும் நாளைக்குப் போகிறேனே. அனுமதி தருவீங்களா“? இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார். "மிஸ்டர் ஆனந்தன் உங்களுக்கு நான் சட்டத்தைச் சொல்லித் தரத்தேவையில்லை. அப்படிச் செய்யேலாது. அவர் ஆங்கிலத்தில் விளக்கினார். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார்.


"சேர்..நீங்க போங்க. நான் அவரைப் பார்த்துக் கொள்ளுவன். இன்றைக்கு இரவுக்கு அந்தப் பொலிஸ்காரரை வரச் சொல்லிப்போட்டன். ஹெட்குவாட்டரஸ் இனஸ்பெக்டரும் ரெலிபோனில இப்ப கதைச்சவர். நாளைக்கு வந்து கூட்டிப்போங்க“. விளக்கமாகச் சொன்னார். ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது. "சேர் நீங்க போங்க. நளைக்கு வாங்க. நான் சமாளித்துக் கொள்ளுவன்“. அலெக்ஸ் கூறினார். திசநாயக்கா அவசரப் படுத்pனார். காலையில் வருவதாகச் சொல்லிப்புறப்பட்டான். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளையின் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றி விடைபெற்றான். வெளியில் வந்தான். காலையில் வந்து றிளீஸ் கடிதத்தை எடுங்க. நான் எச்.கியுவிடம் கையெழுத்து எடுத்து வைக்கிறன்“ அவர் விடை கொடுத்தார்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP