கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
22
சற்று நேரத்தால் கதவு திறபட்டது. ஆமிக்காரர் உள்ளே வந்தார்கள். பெரிய அட்டைப் பெட்டியுள் பாண் இருந்தது. வாளியில் சம்பல் வந்தது. ஒவ்வொருவராக வரிசையில் தட்டோடு வரும்படி பணித்தார்கள். ஆனந்தனும் வரிசையில் நின்றான். மற்றவர்களைப் பின்பற்றிக் கொண்டான். ஒரு இறாத்தல் பாணை மூன்றாக வெட்டியிருந்தார்கள். ஒருதுண்டுப் பாணைப் பெற்றதும் சம்பல் உள்ள இடத்துக்கு நகரவேண்டும். அங்கு சம்பல் வழங்கப் பட்டது. பெற்றுக்கொண்டான். பாணை இரண்டாக பிய்த்து ஒருதுண்டை பக்கத்தில் இருந்த இளைஞனுக்கு நீட்டினான். "சேர்..நீங்க சாப்பிடுங்க..“ அவன் கூறினான். பரவாயில்ல.. எனக்கு இது அதிகம். நீங்க சாப்பிடுங்க.. சொல்லிக் கொடுத்தான். அவன் நன்றியோடு பெற்றுக் கொண்டான்.
உயிரை உடம்பில் தக்கவைப்பதற்காக உண்டார்கள்.. விடுதலையாகி வெளியில் போய் உறவினர்களோடு சேர்ந்து சந்தோசமாக வாழக் கனவு கண்டார்கள். அந்தக்கனவுகள் மெய்ப்படுமா? இந்த அப்பாவிகளின் 'கனவு மெய்ப்பட வேண்டும். இறைவனைப் பிரார்த்தித்தான். இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் இந்த இலங்கைத்தீவு. இங்குவாழும் மக்கள் அனைவரும் சகோதரர்களாக வாழக்கற்றுக் கொண்டால் இங்கு சொர்க்கத்தைக் காணலாம். மனிதன் பிறக்கும்போது என்னசாதியில் பிறக்கிறான். என்ன மொழியைக் கற்றுவந்தான். எந்தச் சமயத்தைத் தழுவி வந்தான். எந்தக் கடவுளரைத் தரிசித்து வந்தான்?;. விலங்குகள் போல்தானே மனிதனும் கருவறையில் இருந்து பிறந்தான்.
தனது உணர்வுகளைப் புரியவைக்கவும், மற்றவர்களின் எண்ணங்களை விளங்கிச் செயற்படவும், தொடர்பாடவும்தான் மொழியினை தனது சூழலுக்கேற்பவும், வல்லமைக்கேற்பவும் ஏற்படுத்திக் கொண்டான். நல்ல வழிமுறையில் வாழவேண்டும் என்பதற்காகச் சமயங்களை ஏற்படுத்தி வாழப்பழகிக் கொண்டான். போட்டி பொறாமையில்லாது எல்லோரும் உரிமையோடு வாழ்வதற்காகப் பல்வேறு தொழில்களைக் கற்றுக் கொண்டான். அவற்றைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தியதாலேயே சாதிப்பாகுபாடு, சமய, மொழி முரண்பாடுகள் தோன்றின. சைவமும், சமண, புத்த,கிறிஸ்தவ இஸ்லாம் சமயங்கள் கூறுவதென்ன? அருவமும் உருவமும் இல்லாத பரப்பிரம்மத்துக்கு உருவத்தையும் கொடுத்து, பலபெயர்களுமிட்டு, கோயில்களை அமைத்து அடிதடி சண்டையிட்டு மாய்கின்றார்களே. பிரபஞ்சத்தில் எது நிலையானது? எல்லாம் மாற்றத்துக்குரியது. நிலையில்லாதது. இதனை மனிதன் மறந்து விட்டான். ஒரு கருவியால் ஒரு உயிரைக் கொல்லும் மனிதன் தனக்கும் மரணம் உண்டு என்பதை ஏன் சிந்திக்க மறந்தான்?.
'வானாகி மண்ணாகி, வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய், கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே’ என அற்புதமாகச் சொன்ன மணிவாசகப் பெருமானை நினைந்து நெக்குருகினான். மனிதனுக்கு மொழி தேவைதான். அவரவருக்கு அவரது மொழி சிறந்ததுதான். சமயமும் சிறந்ததுதான். அதனை மற்றவர்கள்மேல் திணித்து அவர்களைப் பின்பற்ற வற்புறுத்துவது என்ன நியாயம்.? ஆனந்தனின் மனம் போர்க்களமானது.
இந்தக் கூட்டுப்படை முகாமுக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாட்கள் மெல்லமெல்ல நகர்ந்துவிட்டன. இன்று விடிந்தால் ஐந்தாம் நாள். அவனது சிந்தனை விரிந்தது. இந்த நாட்களில் அவன் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். மனிதன் விலங்குகளைவிடவும் மோசமானவன் என்பதனைக் கற்றுக் கொண்டான். இன மத மொழி வெறி பிடித்தவன் என்பதனைக் கற்றுக் கொண்டான். வாழ்வதற்கு நல்வழிகளைக் கூறிய மகான்களின் அறிவுரைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றியெடுப்பதில் மனிதன் கைதேர்ந்தவன் என்பதனைக் கற்றுக் கொண்டான்.
மனிதனை மனிதன் அடித்துத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் என்பதனைக் கண்டு கொண்டான். மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு கொண்ட மனிதர்களும், எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்ற கொள்கையுடையவர்களும் நிறையவே இருப்பதையும் கற்றுக் கொண்டான். வீட்டில் தாய்தந்தையோடு இருக்கும்போது, அவர்களது சொற்களைக் கேட்காது தமது போக்கில் திரிந்த இளைஞர்கள் அதற்காக வருந்துவதையும் கண்ணாரக் கண்டு கொண்டான். குற்றமேதும் செய்யாமலேயே கைது செய்து கொண்டுவந்து சித்திரவதைக்குள் சிக்கி வருந்தும் இளையோரையும் கண்டு கொண்டான். வாழ்க்கையை அனுபவித்தது போதும், இனி இறையடியை நோக்கித் தவமிருக்க வேண்டிய முதியோரையும் கொண்டு வந்து வருத்துவதையும் கண்டு கொண்டான்.
கண்களை மூடி நினைவுகளில் மூழ்கி, அந்த நினைவுகளால் எத்துண்டு, இடறிவிழும்போது கண்களை மெல்லத் திறந்து, தான் இருக்கும் சூழலைப் புரிந்து சுதாகரித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சூழலை அவதானித்தான். இன்று ஐந்தாம் நாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்க்கை? என்னைப்போல் கௌதம புத்தர் இவர்கள் கையில் அகப்பட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? இப்படித்தானே யேசுநாதரைச் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்தார்கள். வித்தியாசமான கற்பனையில் நீச்சலடித்தான். இன்றோடு இரண்டு மாதங்கள் பறந்தோடிவிட்டன. எனது மேரியும், பிள்ளைகளும் எப்படி இருந்து வருந்துவார்களோ தெரியாது. அவனுக்கு மேரியின் எண்ணம் விஸ்வரூபமெடுத்தது.
"ஆனந்தன்...கவுத..?.எலியட்ட என்ட..“ கதவில் தட்டி இராணுவச் சிப்பாய் சத்தமிட்டான். கதவு திறந்து கொண்டது. ஆனந்தனுக்கு நெஞ்சடித்தது. அடிவிழாமல் கொஞ்சநாட்கள் இருந்து விட்டான். இன்றைக்கு என்ன செய்யப்போறாங்களோ? நினைவோடு வெளியில் வந்தான். முன்னால் கப்ரன் செனிவரத்ன நின்றான். ஆனந்தனைக் கண்டதும் "யாளுவோ...கோமத? நண்பனே ..எப்படி..“? ஒரு நக்கலோடு கேட்டான். தன்னோடு வரும்படி அழைத்தான். அவன் முன்னால் சென்றான். ஆனந்தன் அவனைத் தொடர்ந்து சென்றான். "எங்கே கூட்டிச் செல்கிறான்.“? மனதுக்குள் தீப்பற்றிக் கொண்ட உணர்வு.
அறையொன்றுக்குள் சென்றான். ஆனந்தனும் பின்னால் சென்றான். அந்த அறையினுள் அமைதியாக வாட்டசாட்டமாக ஒருவர் இருந்தார். கப்ரன் அவருக்கு மரியாதையாக சலு{ற் அடித்தான். பின் ஒரு கோவையை அவர்முன் வைத்தான். அவர் கோவையைப் புரட்டினார். புரட்டும் போது ஆனந்தனையும் நோட்டம் விட்டார். ஒரு பத்து நிமிடங்கள் அந்தக் கோவையைப் பார்வையிட்டார். அவரது பார்வை ஆனந்தனின் விழிகளில் மொய்த்ததை உணர்ந்தான். அவரது செயல்களை உன்னிப்பாக அவதானித்தான். கோவையினை மூடிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார். பின் திறந்து ஆனந்தனை நோக்கினார்.
அவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்."மிஸ்டர் ஆனந்தன்! உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்“ அவர் விசாரித்தார். "சேர்.. எனது பெயர் ஆனந்தன்... நான் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுகிறேன்...“ சுருக்கமாக சிலவற்றைக் கூறினான். நடந்தவற்றை விளக்கினான். "எனக்கு எல்லாம் தெரியும். உங்களைப்பற்றிய தகவல்கள் என்னிடம் இருக்கின்றன“. கப்ரனைப் பார்த்தார். அவன் நிமிர்ந்து நின்றான்.
" சரி.......கப்ரன் செனிவரத்ன, இவரை எதற்காக, ஏன் கைது செய்தீர்கள்.“? சிங்களத்தில் வினாவினார். கப்ரன் குற்றங்களை அடுக்கிக் கொண்டு போனான். அவர் கையை உயர்த்தி நிற்பாட்டினார். "பிட்டிசன் என்பதற்காக ஒருவரைக் கைது செய்யக்கூடாது. தண்டிக்க உங்களுக்கு உரிமையில்லை. ஆனந்தன் உங்களைப் போல் ஒரு அரசஉத்தியோகத்தர். உங்கள் தரத்தைவிட அவர் உயர்பதவி வகிக்கிறார். அதுவும் புனிதமான கல்விப் பணியில் சேவையாற்றுகிறார். அவர் தமிழர் என்பதற்காக அவர் இந்தநாட்டுப் பிரஜையில்லையா? நான் உங்களைப்போல் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்தான்“. சற்று அமைதியானார்.
"எனக்கும் மனச்சாட்சியுண்டு. இப்படி நீங்கள் தொடர்ந்து கொண்டு போனால் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும். இதற்கு நீங்க, நாங்க, ஏன் நாமெல்லோருமே பதில்கூறவேண்டிய நாள் வரும். அப்போது நமது தீவில் இரத்த ஆறு ஓடும். அநியாயமாக அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவிகளை வருத்தக் கூடாது. நீங்கள் உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவேண்டும். அவரது முகத்தைப் பாருங்கள். அவர் ஒரு கல்விமான். அவரைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும். இனமத மொழி வேற்றுமைகளுக்கு அப்பால் அவர் சேவை செய்கிறார். தெரியுமா உங்களுக்கு.“ ஆனந்தனுக்கு மனம் நிறைந்ததுபோல் இருந்தது.
"இப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த நாட்டில் இருக்கவேண்டும். இருந்தால் நீதி நிலைத்திருக்கும்.“ மனதினில் நினைந்துகொண்டான். "நீங்கள் தீர விசாரித்திருக்க வேண்டும். எத்தனை சிங்களப் பாடசாலைகளில் இவரைப் பற்றி விசாரித்தீர்கள்.? எத்தனை தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் விசாரித்தீர்கள், இவரது மேலதிகாரிகளிடம் விசாரித்தீர்களா“? அவரது குரல் கண்டிப்பானதாக இருந்தது. "இல்லை. பிட்டிசன் வந்தது. அவரை கைது செய்து விசரிக்கும்படி மேலதிகாரி என்னைப் பணித்தார். நான் கைது செய்தேன்“;. கப்ரன் செனிவிரத்ன ஒப்புவித்தான். " இவரைப் பார்த்த டாக்டரின் றிப்போட்டைப் படித்தீர்களா? நீங்கள் சட்டத்தை மீறியிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கு. சரி உங்கள் வேலை முடிந்தது. நீங்கள் போகலாம்“. அiனை அனுப்பினார். செனிவரத்ன சலூற் அடித்துக் கிளம்பிவிட்டான்.
அந்த அதிகாரி ஆனந்தனைப் பார்த்து "உங்களை நான் நேரடியாக றிளீஸ் செய்ய முடியாது. அதற்குச் சில விதி;முறைகள் உண்டு. உங்களை பொலிசில் ஒப்படைக்கிறேன். அவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள். விரைவில் பொலிசார் அதனைச் செய்வார்கள்“;. ஆனந்தனைப் பார்த்துச் சொன்னார். ஆனந்தன் நன்றியுணர்வோடு அவரைப் பார்த்தான். அவர் முன்னால் இருந்த மணியை அழுத்தினார். ஆயத்தமாக நின்ற பொலிஸ் அதிகாரி உள்ளே வந்தார். அவரும் சலூற் அடித்து முன்னே நின்றார். அவரிடம் கோவையைக் கையளித்துப் பலபடிவங்களில் ஒப்பத்தைப் பெற்றுக் கொண்டார். "மேக்க பளலா இக்மனிட்ட நிதாஹஸ் கரண்ட...இதனைப் பார்த்து விரைவில் இவரை விடுவியுங்கள்“ அவர் எழும்பினார். ஆனந்தன் அவருக்கு நன்றி கூறினான். அவர் போய்விட்டார்.
போலிஸ் அதிகாரி தன்னோடு வரும்படி அழைத்தார். போலிஸ் ஜீப் காத்திருந்தது. அதில் ஏறும்படி கட்டளை வந்தது. ஜீப் இரைந்தவண்ணம் வவுனியா போலிஸ நிலையம் வந்து நின்றது. ஆனந்தனை இறங்கும்படி கூறினார்கள். இறங்கியதும் நேரே கூட்டிக்கொண்டு சென்றார்கள். கூடுபோல் இருந்த அறையைத் திறந்து அடைத்துவிட்டார்கள். இப்போது மூன்றாவது இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டான்.
அந்த அறையை நோட்டம் விட்டான். மிகச்சிறிய அறை. ஒரு ஆள் நடமாடக்கூடிய வெற்றிடம். ஆறடி அகலம். ஆறடி நீளம் கொண்ட அறை. இரும்புக் கம்பிகளினால் ஆனகதவு. மீண்டும் கம்பி எண்ணும் படலமா? விதியை நொந்து கொண்டான். ஒரு கட்டில்போன்று உயரமான சிமென்றினால் செய்த மேடை. கதவு திறந்து மூடக்கூடிய இடைவெளி. இன்னுமொரு மேடைபோடக்கூடிய வெற்றிடம். ஒருமூலையில் சிறுதுவாரம். அது சிறுநீர் கழிப்பதற்கான இடம். சிறிய வாளியினுள் கொஞ்சம் தண்ணீர். சிறுநீர் கழித்தபின் தண்ணீரை அடித்தால் துவாரமூடாகச் சென்றுவிடும். மனிதவிலங்குகள் மனிதனுக்கு அமைத்துவைத்த வலையமைப்பை எண்ணிச் சிரித்தான். ஆனந்தன் தனது ஆச்சியை நினைத்துக் கொண்டான். ஆச்சி மாணிக்கத்தார் பாடசாலைப்பக்கம் சென்றிருப்பாரோ தெரியாது. ஆனால் கதைகளை அற்புதமாகச் சொல்லுவார். அந்தக் கதை இப்போது மனத்திரையில் விரிந்தது.
உடும்பு இறைவனை நோக்கித் தவம் செய்ததாம். இறைவன் வந்தார். "என்ன வரம் வேண்டும்“ இறைவன் கேட்டாராம். "நான் விரைந்து மரங்களில் ஏறவேண்டும். என்னை யாரும் பிடித்து இழுத்தாலும் பிடிதளராதபடி இருக்கக்கூடிய கூரிய நகங்களும், எதிரிகளைத் தாக்கக் கூடிய நெடிய வாலும், வளைந்து ஓடக்கூடிய வல்லமையும் வேண்டும். நான் ‚உறுதிக்கு உதாரணமாக’ விளங்க வேண்டும்“. என்று கேட்டதாம். கடவுள் தனக்குள் சிரித்து "அப்படியே ஆகட்டும். உனது பிடியை உடும்புப்பிடி என்று பிறர் பின்பற்றட்டும்“;. என்றாராம். உடும்புக்குச் சந்தோசம். உடும்பு இனம் இறுமாப்புடன் உலா வந்ததனவாம்.
ஒருநாள் ஒரு வேடன் வேட்டையாட வந்தான். உடும்பைக் கண்டுகொண்டான். துரத்தினான். அது விரைந்து ஓடியது. மரத்தில் விறுவிறு என்று ஏறிப் பொந்தில் ஒளிந்தது. வேடனுக்கு அதன் நீண்ட வால் தெரிந்தது. வாலைப்பற்றி இழுத்தான். உடும்பு மரத்தைப் பற்றிக் கொண்டது. எனது வாலும், கூரிய நகங்களும் இருக்கும்வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என இறுமாந்தது. மரப்பொந்தில் உடும்பைக் கண்டு கொண்டான். வேடன் மரத்தைப் வெட்டிப்பிளந்து உடும்பைப் பிடித்தான். அதன் வாலின் மேற்புறத்தில் கூரிய கத்தியால் சரித்துத்தோலை சீவினான். பின்னங்கால்; இரண்டையும் இழுத்துக் கூரிய நகங்களை ஒன்றோடொன்றை இலகுவாகக் குத்திக் கொழுவினான்.
வால்வெட்டுத் தடத்தில் காலைப்புரட்டி மாட்டினான். அது வளையமாக வந்தது. அந்த வளையத்துள் உடும்பின் தலையை மாட்டி இழுத்தான். அதன் முன்னங்கால்கள் இருண்டும் வளையத்தினூடாக வந்தது. இறுக்கினான். தவணையாடிய உடும்பை அப்படியே போட்டான். அதனால் அசையமுடியவில்லை. உடும்பு கேட்டவரத்தினால் தனக்குத்தானே போட்டுக்கொண்ட முடிச்சுத்தான் அந்தத் தவணை. மனிதனும் பல முடிச்சுக்களைத் தனக்குச் சாதகமாகப் போட்டுக் கொள்கிறான். முடிச்சுப் போட்டவனும் அதில் விழுந்துவிடுவதும் உண்டு. ஆனால் இருக்கும் அப்பாவிகள் அவற்றினால் பாதிக்கப் படுகிறார்கள். தந்திரசாலிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
தொடரும்
0 comments:
Post a Comment