Wednesday, May 12, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

13


" மே.. மாத்தயோ... நகின்ட. என்ட எலியட்ட.“ ஒரு சிப்பாய் கதவைத் திறந்தவாறே அழைத்தான். அது கோப்ரல் ராஜபக்ச. மனதினில் சற்றுத்தெம்பு பிறந்தது. அவனது கனவு கலைந்ததுபோல் கண்களைத் திறந்தான். அடியின் வேதனை இன்னும் ஆறவில்லை. உடலை அசைக்க முடியாதிருந்தது. மெதுவாகப் புரண்டு, கால்களை நிமிர்த்திப் பார்த்தான். கைகளைச் சுவரில் அழுத்தி எழுந்திருந்தான். "மேக்க பொண்ட’ இதக்குடிங்க“ சுடச்சுடத் தேநீர் கொடுத்தான். குடித்தான். தேநீர் தெம்பைக் கொடுத்தது. மனதார நன்றி சொன்னான். "நேற்று என்ன நடந்தது? அடிச்சாங்களா“? அக்கரையோடு கேட்பவனுக்குச் சொல்லத்தானே வேண்டும். "அடிச்சாங்க“ கலக்கத்தோடு நடந்ததைச் சொன்னான்.

அப்பாவிகளுக்குத்தான் துன்பங்கள் தொடரும் என்பது எவ்வளவு உண்மை. ஆனந்தன் தன்னை நொந்து கொண்டான். கழிவறைக்குப் போவதற்கு முற்பட்டான். ராஜபக்ச உதவினான். முடிந்ததும் மீண்டும் அதே அறையில் புகுந்து கொண்டான். விடிந்து விட்டிருந்தது. இராணுவ வீரர்கள் வருவதும் போவதாகவும் இருந்தார்கள். ஒருபுறம் அவர்களது பயிற்சி நடந்து கொண்டிருந்ததற்கான சத்தங்கள் கேட்டன. வாகனங்களின் இரைச்சல். ஒரு சிப்பாய் வந்து கதவினைத் திறந்தான். "என்ட“ கூறிவிட்டு நடந்தான். அவன் பின்னால் போனான். வெளியே ஒரு ஜீப் தயாராக இருந்தது. "நகின்ட.. ஏறு“ என்றார்கள். தடுமாறி ஏறிக் கொண்டான். அந்த ஜீப்பினுள் இரண்டு இருக்கைகள் இருந்தன. அவை இருபக்கங்களிலும் நீள்வாட்டில் அமைந்திருந்தன. முன்னால் கப்ரன் செனிவரத்ன இருந்தான். அவன் பக்கத்தில் ரைவர். ஒவ்வொரு இருக்கையிலும் மூன்று இராணுவ வீரர்கள் வீதம் ஆறுபேர் இருந்தனர். ஆனந்தனுக்கு இருக்கை இல்லை. அவனைக் கீழே இருக்கும்படி சொன்னார்கள். எங்கே ஜீப் போகிறது? யாரிடம் கேட்பது? தடுமாறினான். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டான்.

ராஜபக்ச ஒரு குறிப்புப்புத்தகத்தைக் கொண்டு வந்தான். அதனை கப்ரன் செனிவரத்னவிடம் கொடுத்தான். அவன் கையொப்பமிட்டான். ராஜபக்ச பெற்றுக் கொண்டு அனுதாபத்துடன் ஆனந்தனைப் பார்த்தான். கப்ரன் "யமு. போவேம்“ என்றான். ஜீப் இரைந்து புறப்பட்டது. வீதியில் மக்கள் கூட்டம் அதிகமில்லை. அவனை யாரும் கவனிக்கவில்லை. இராணுவ வாகனத்தைப் பார்ப்பதற்கே மக்கள் அஞ்சினார்கள். ஜீப் பறந்து போனது. மழை விட்டபாடில்லை. பெய்து கொண்டிருந்தது. வன்னிநிலம் மழைநீரில் நீந்திக் கொண்டிருந்தது. ஜீப் கண்டிவீதியால் சென்று மன்னார் வீதியுடாக விரைந்தது. பரீட்சை முடிந்துவிட்டது. மாணவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தார்கள். பாடசாலைகள் உறங்கிக் கொண்டிருந்தன. பாடசாலைகள் இயங்கினால்தான் ஊரெங்கும் கலகலக்கும். வீதிகள் மாணவப் பூக்களால் நிறைந்திருக்கும். பட்டாம் பூச்சிகளாகப் பரந்து வண்ணச் சீருடையில் புத்தகப் பைகளோடு பவனிநடக்கும். நகர்புறங்களும். கிராமங்களும் இயக்கம் கொள்வது பாடசாலைகள்தான்.

வீதிகளில் மாணவர்களைக் காணவில்லை. அவனைப் போல் ஊர்களும் கவலையிலும், துன்பத்திலும் ஆழ்ந்து கிடப்பதாகத் தெரிந்தது. இரண்டு சிப்பாய்கள் இரவு உரையாடியது நினைவுக்கு வந்தது. அரைகுறையாகத்தான் விளங்கியது. "இப்படியே தமிழ் இளைஞர்களை வதைத்தால் பெரிய பிரளயமே உருவாகி விடாதா? எத்தனைக்குத்தான் அவர்கள் பொறுப்பார்கள். ஒருநாளைக்குப் பெரிய இயக்கமே உருவாகும். அரசினால் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம்“. ஒரு குரல் ஒலித்தது. "நீ சொல்வது உண்மைதான். பார்த்துப் பேசு. இரவில் சுவருக்கும் காது முளைத்துவிடும். பிறகு இருக்கிற இந்த வேலையும் பறிபோய்விடும்.“ மற்றவன் ஒத்துப்பாடினான். நமது நாட்டில் தமிழர் ஆட்சி நடந்தது. பின் சிங்கள மன்னர் ஆட்சி நடந்தது. இது மாறி மாறி நடந்திருக்கு. இப்ப ஜனநாயக ஆட்சி. தமிழரும், சிங்களவரும் ஒற்றுமையாய் இருக்கலாம்தானே? அடிபட்டுச் சாவதற்கா புத்தபகவான் நமக்குப் போதித்தார்? எனக்கு இந்த துப்பாக்கி பிடிக்கவே விருப்பமில்லை மச்சான்.“ மனஉளைச்சலை மற்றவன் அள்ளிக் கொட்டினான்.

அந்த உரையாடலில் புதைந்துள்ள உண்மைத்தன்மைகளை உணர்ந்து கொண்டான். அவன் மனதிலும் அந்த உண்மைத்தன்மை ஊன்றிக் கொண்டது. ஒரு பலூனில் காற்றை ஊதியபின் அதனை அமுக்கினால் என்ன செய்யும்? காற்று ஒருபக்கம் தள்ளி பலூன் வெடிக்கும். அதனை எண்ணிக்கொண்டான். அந்தநிலை இந்தநாட்டில் ஏற்படத்தான் போகிறது. இந்நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறார்கள். மக்கள் அனைவரையும் இந்நாட்டு மக்களாகக் கருதி ஒற்றுமையை வளர்த்தால் இந்த நாடு வளம் பெறும். இதனை எந்த அரசியல் கட்சிகளும் சிந்திப்பதாக இல்லை. அவனது மனம் வெதும்பியது.

வாகனம் நெலுக்குளம் சந்தியால் திரும்பி பாவற்குளம் நோக்கி விரைந்தது. பாவற்குளம் மகாவித்தியாலயம் உறங்கிக்கிடந்தது. பரீட்சை முடிந்து மார்கழி விடுமுறைக்காகப் பாடசாலைகள் அனைத்தும் வெறுமையாகக் கிடந்தன. மழையில் நனைந்து, வெயிலில் தலைதுவட்டி தனிமையில் உறங்கின. இனி தைபிறந்தால்தான் அவை விழித்துக் கொள்ளும். பாவற்குளம் விரைந்து மறைந்தது. பாவக்குளத்தின் மிகைநீர் வழிந்தோடுவதற்கு வடிகால் அமைப்பு இருந்தது. அந்த இடத்தில் சிறுபாலம் இருந்தது. அப்பாலம் பாவற்குளத்துக்கும் உலுக்குளத்துக்கும் எல்லையாக இருந்தது. உலுக்குளம் அழகான கிராமம். அங்கு தனியே சிங்கள மக்களைக் குடியேற்றியிருந்தார்கள். உலுக்குளம் மகாவித்தியாலயம் சிங்கள மாணவர்களைக் கொண்டிருந்தது.

அதிபர் பெரேரா 'அரசியல் பழிவாங்கல்’ என்ற போர்வையில் இடமாற்றம் பெற்று வந்தவர். பாடசாலையில் கண்ணும் கருத்துமாக வழிநடத்தினார். ஏழைமக்களை நேசித்தவர். அவரது மனைவியும் ஒரு ஆசிரியர். அவரையும் அதே பாடசாலைக்கு இடமாற்றத்தைப் பெற்று அழைத்து வந்திருந்தார். அவர்கள் தங்கள் முழுநேரத்தையும் பாடசாலையில் செலவழித்தார்கள். காலையில் கற்பித்தல். பிள்ளைகள் கல்வியில் நாட்டங் கொண்டு படிப்பார்கள். மாலைமுழுதும் விளையாட்டு. எந்தநேரமும் பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கும். அடுத்த கிராமத்துக்கே தெரியாதிருந்த பாடசாலையை அகில இலங்கை மட்டத்தில் விளையாட்டில் புகழ்பெறச் செய்தார். ஆனந்தன் அவருக்கு வேண்டியபோது உதவிகள் செய்தான். அடிக்கடி பாடசாலைக்குச் சென்று உற்சாகப் படுத்துவான். அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருந்தான். விடுமுறையில் அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான வென்னப்புவ சென்றிருந்தார். பாடசாலை உறங்கிக் கிடந்தது.

நேரியகுளம் சந்தியில் வலப்பக்கமாகத் திரும்பி மதவாச்சி மன்னார் வீதியால் செட்டிகுளம் விரைந்தது. கரிய தார்வீதியின் மழைநீர் பரவிக் கழுவியோடியது. ஓரங்களில் தண்ணீர்; சிற்றாறாய் ஓடியது. வீரமரங்களும், பாலை மரங்களும் மதாளித்து நீராடி நின்றன. மக்களும் மழைக்காக வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் ஜீப் நின்றது. பாடசாலையில் யாரையும் காணவில்லை. ஆனந்தனில் உப அலுவலகம் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இருந்தது. ஒரு கிழமையில் இரண்டு நாட்கள் இந்த அலுவலகத்தில் வேலைசெய்வான். அப்போது அப்பகுதிப் பாடசாலைகளுக்குச் சென்று கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவான். ஆசிரியர்களுக்கு வழிகாட்டி நெறிப்படுத்துவான். செட்டிகுளம் பெரியதொரு கிராமம். அது கிராமமுல்ல. பெரிய நகரமும் இல்லை. நடுத்தரமான சிறியதொரு நகரம்.

சுறுசுறுப்பாக இயங்கும் மக்கள். இருபோக விளச்சலைக் கொடுக்கும் வளமான வயல்நிலங்கள். உளுந்து போன்ற பல்வேறு தானியங்கள் விளையும் மேட்டுநிலங்கள் கொண்ட பிரதேசம். பாலுக்குப் பஞ்சமில்லை. தேன் நிறையவே கிடைக்கும். அன்பும் பண்பும் கொண்ட மக்கள் நிறைந்த பெருநிலப்பரப்பு. மதவாச்சி - மன்னார் வீதிக்குச் சமாந்திரமாக மன்னாரை இணைத்து நீண்டு வளைந்து படுத்திருக்கும் புகைவண்டி இருப்புப் பாதை. இரண்டையும் இணைத்து வைக்கும் பாதையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் குந்தியிருந்தது. அதற்கு எதிர்புறமாக கிறிஸ்தவ ஆலயம். ஆலயத்துக்குப் பின்புறமாகத் திருக்குடும்பக் கன்னியர் மடம். அங்கும் சிறு பாடசாலை நடைபெற்றது. அது அருட்சகோதரிகளால் நடத்தப்பெற்றது.

செட்டிகுளத்துக்கு வருகைதரும் நாட்களில் பங்குத்தந்தை அருட்திரு பிலிப் அவர்களின் ஆசியைப் பெறத் தவறமாட்டான். ஓய்வு நேரங்களில் அவரோடு கதைத்துக் கொண்டே இருப்பான். அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆண்டவர் உழைத்தமை பற்றி உரையாடுவார். அவனை அறியாமலேயே அவர்மேல் ஒரு மரியாதை வளர்ந்தது. அவன் செட்டிகுளம் பிரதேசத்தைப் பொறுப்பெடுத்தபின், அப்பகுதிப் பாடசாலைகள் எழுச்சி கொண்டன. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் புத்துயிர் பெற்றன. பாடசாலைகளில் மேற்பார்வைக்காகச் சென்றால், பாடசாலை விடும் வரை அதிபரோடும், ஆசிரியர்களோடும் சேர்ந்து இயங்குவான். தானும் சக ஆசிரியராக வகுப்புகளுக்குச் சென்று பாடம் புகட்டுவான். மாணவர்கள் மத்தியிலும் அவனுக்குச் செல்வாக்கு வளர்ந்தது.

அதேநேரம் அவனுக்கு எதிர்ப்பும் வளர்ந்தது. பல ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போய்விடுவார்கள். திங்கள் வந்து விடுவார்கள். அப்போது அடிக்கடி புகைவண்டிச் சேவையும், வேண்டிய நேரத்தில் வஸ்வண்டிச் சேவைகளும் இருந்தன. வவுனியா நகர் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கல்வியில் அவ்வளவு நாட்டம் இருக்கவில்லை. எழுத வாசிக்கத்தெரிந்தால் போதும் என்ற நிலைப்பாடு பெற்றோர் மத்தியில் நிலவியது. இதனைப் பல ஆசிரியர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். சில ஆசிரியர்கள் வியாழன் பகலே புறப்பட்டு விடுவார்கள். செவ்வாய் காலை பத்து மணியளவில் வந்து விடுவார்கள். இச்செயல் ஆசிரியர் களிடையே முறுகலைத் தோற்றுவித்தது. சில அதிபர்கள் வியாழன் கல்வித் திணைக்களத்துக்குச் செல்வதாக 'லொக்’; புத்தகத்தில் எழுதுவார்கள். அப்படியே வீடு சென்று விடுவார்கள். செவ்வாய் பகல் வருவார்கள். திங்கள் கல்வித்திணைக்களம் சென்று வந்ததாக 'லொக்’ புத்தகத்தில் பதிவார்கள்.

இவர்களது இச்செயற்பாடுகளினால் இடைவிலகல் ஏற்படுவதையும். பிள்ளைகள் கல்வியில் பின்தங்கியுள்ளதையும் ஆனந்தன் ஆய்வுகள் மூலம் கண்டு கொண்டான். அதிபர்களது கூட்டங்களைக் கூட்டி, பாடசாலைத்தேவைகள், ஆசிரியர்களது தேவைகளை எழுத்து மூலம் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு;க் கொண்டான். தனது அனுமதிக் கடிதமின்றி கல்வி அலுவலகம் சென்றால் உங்களை அங்கு கவனிக்கமாட்டார்கள். அத்துடன் அங்கு செல்பவர்கள். தங்களது கையெழுத்தினை அதற்கென வைத்திருக்கும் கையேட்டில் இடவேண்டும் எனவும் விளக்கினான். கல்விப் பணிப்பாளர்களதும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களதும் கூட்டங்களில் அதிபர், ஆசிரியர்களது தேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ கல்வி அலுவலகத்துக்கு வருவதில்லை என உத்தியோகத்தர்கள் பதிலிறுத்தனர். அப்படி வருவதாயின் புதன்கிழமை மட்டும்தான் வரலாம் எனத் தெரிவித்தனர்.

இந்த இறுக்கமான தடை சிலரைப் பாதித்தது. ஆனால் கிராம மக்கள் வரவேற்றனர். ஓவ்வொரு பாடசாலையிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை இயங்கச் செய்தான். பழைய மாணவர் சங்கங்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த இறுக்கம் ஒருசில ஆசிரியர்களை மட்டுந்தான் பாதித்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேக வகுப்புக்களில் பணியாற்றுபவர்கள் என்பது தெரிய வந்தது. அருட்திரு.பிலிப் அடிகளார் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றார். ஆசிரியர்கள் திங்கள் முதல் வெள்ளிவரை கடுமையாக உழைத்தார்கள். அத்துடன் கஸ்டமான பிரதேசங்களுக்குரிய மேலதிக கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்தான். பல ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் வகுப்புக்களை நடத்தினார்கள். தமிழ் மொழித்தினப் போட்டிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கு ஊக்கமூட்டினான். பாடசாலைகள் கலகலத்தன. நாடகம், நாட்டுக்கூத்து, நடனநிகழ்ச்pகள் பாடசாலை மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் மேடையேறின. டிசம்பர் விடுமுறை மட்டும் விதிவிலக்காக அமைந்தது.

பாடசாலைக் கேற் பூட்டப்படாமல் மூடியிருந்தது. ஜீப் நின்றது. ஒரு சிப்பாய் இறங்கித் திறந்துவிட்டான். ஜீப் உட்சென்றது. ஆனந்தனின் அலுவலகம் பூட்டியிருந்தது. பாடசாலைக் கட்டிடங்கள் அழகாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன. 'கல்விப் பணிப்பாளரின் பணிமனை’ தனியாக இருந்தது. அது ஒரு பழங்காலத்துக் கட்டிடம். போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்டதாம். நிலத்திலிருந்து சுமார் நான்கடி உயரத்தில் அதன் அத்திவாரம் இருந்தது. நான்கு படிக்கட்டுகளில் ஏறினால்தான் கட்டிடத்துள் செல்லலாம். இரண்டு பெரிய அறைகளைக் கொண்டது. சுற்றிவர ஐந்தடி அகலமான விறாந்தை இருந்தது. ஒரு அறை செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அலுவலகமாகப் பாவிக்கப்பட்டது. அடுத்த அறைதான் பிரதேசக் கல்வி அலுவலகமாக இயங்கியது. இந்தக் கட்டிடம் ஒரு சுற்றுலா விடுதியாக போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. போர்த்துக்கேயத் துரைமார் தங்குவதற்காகக் கட்டப்பட்டதாக மக்கள் கூறுவார்கள்.

அவர்கள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக பேசாலை, மன்னார் ஊடாகக் குதிரையில் வருவார்கள். குதிரைகளைக் கட்டிவைப்பதற்காகத் தனியாகக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. இவ்வாறான கட்டிடங்கள் பல வன்னி நிலப்பரப்பில் இருந்தன. கப்ரன் செனிவரத்ன அறையைத் திறக்கும்படி கூறினான். அவன் அதனது திறப்பை வளையிடுக்கில் வைத்திருந்தான். ஒரு மேசையை அரக்கி அதன்மேல் ஏறிநின்று திறப்பை எடுத்துத் திறந்தான். சிப்பாய்கள் உள்ளே சென்று தேடினார்கள். ஜனவரியில் மாணவருக்குக் கொடுப்பதற்காக எண்ணிக்கட்டி அடுக்கியிருந்த புத்தகங்கள் சிதறின. கோவைகள் அங்குமிங்கும் எடுத்தெறியப்பட்டன. "எதனைத் தேடுகிறார்கள்“. ஆச்சரியத்துடன் பார்த்தான். "அடோவ். .கோ.. அத்பொத் ...கொட்டியாகே...லியுங். கியாப்பாங் ... எங்கேயடா குறிப்புப் புத்தகம்..புலிகளின் ..துண்டுப் பிரசுரங்கள்..சொல்“ செனிவரத்ன தீப்பறக்கும் கண்களோடு தேடித்தேடிக் கேட்டான். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது.

"ஏய்...மீற்றிங்;;;....எங்க...வைக்கிறது“? ஒரு சிப்பாய் துருவினான். "என்ன மீற்றிங்? இது என்ர 'சப்ஒபிஸ்’ இங்க மீற்றிங் நடக்காது“. "என்னடா சொல்றது? அப்ப எங்க நடக்கும். சொல்“ அடுத்து நி;ன்ற சிப்பாய் சத்தமிட்டான். 'அடோவ்... யாரு யாரு..மீற்றிங் வைக்க வாறது? என்ன கதைச்சனீங்க எல்லாம் சொல்லு.. சரியா? உத வாங்காம உண்மயச் சொல்.“ செனிவரத்ன சத்தமிட்டான். "கப்ரன் சேர்! இது ஒரு ஒபிஸ். இங்க அதிபர், ஆசிரியர்கள் மட்டுந்தான் வருவார்கள“;. ஆனந்தன் சொல்லி முடிக்கவில்லை. எதிர்பாராதது நடந்து விட்டது. ஆனந்தன் சுவரில் சாய்ந்தான். அவனது கன்னம் ஐந்து விரல்களின் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டது. கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது. ஒரு சிபாய் முன்னால் தள்ளினான். அற்றவன் அடித்தான். அடிமேலடி விழுந்தது. ஆனந்தன் துடிதுடித்தான். அப்படியே விட்டுவீட்டு ஜீப் பக்கம் சென்று வந்தார்கள்.

ஒரு சிப்பாய் வந்தான். ஆனந்தனின் நீள்கால்சட்டையை மேல்நோக்கிச் சுருட்டுமாறு கூறினான். ஆனந்தனுக்கு விளங்கவில்லை. அவன் காத்திருக்காமல் செய்து காட்டினான். ஆனந்தன் சுருட்டினான். முழங்காலுக்கு மேல் சுருட்டப்பட்டது. கிறேவல் சிறுகற்களை சிமென்ற் தரையெங்கும் பரப்பினான். முழங்காலில் நடக்குமாறு பணித்தான். கற்கள் மேல் எப்படி நடப்பது.? தயங்கினான். கதவுக்குப் போடும் பெரிய குறுக்குத் தடி சிப்பாயின் கையில் இருந்தது. அந்தத் தடி விளையாடியது. கற்கள் மேல் முழங்காலில் நடந்தான். கற்கள் குத்தின. அவனால் நடக்கமுடியவில்லை. கைகளை நிலத்தில் ஊன்றினான். கைகளில் அடிவிழுந்தது. நடந்தான். முழங்கால் தோல் கிழிந்து இரத்தம் கசிந்தது. பின்னால் நின்று அடித்தார்கள். அவனால் மேற்கொண்டு நடக்கமுடியாதிருந்தது. ஒரு சிப்பாய் ஆனந்தனின் கையினைப் பற்றி வேகமாக இழுத்தான். சிமென்ற் தரையில் இரத்தம் கோடு வரைந்தது. கற்களும் சிவந்து அழுதன. சிப்பாய்கள் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒரு சிப்பாய் திறப்பை எடுக்கப் பாவித்த மேசைமேல் ஏறும்படி கூறினான். ஆனந்தன் சொன்னபடி செய்தான். வளையினைப் பிடிக்கும்படி கூறினான். வளையில் பிடித்தான். சிப்பாய் சட்டென மேசையை அரக்கிவிட்டான். ஆனந்தன் வளையில் தொங்கிக் கொண்டிருந்தான். கூரிய கற்களைக் கீழே போட்டார்கள். அதனைக் கண்டு கொண்டான். எவ்வளவு நேரம் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கலாம். கைகள் வலித்தன. கைகளை விட்டால் அவ்வளவுதான். கற்களில் விழுந்து கைகால்களில் அடிபட்டு உடைவுகள் ஏற்படும். என்ன செய்வது? மெதுவாகக் கீழே பார்த்தான். சிறிய இடைவெளி தெரிந்தது. உடலை ஊஞ்சல் ஆடுவதுபோல் அசைத்தான். கைப்பிடி வலுவிழந்து வழுக்கியது. கற்கள் இல்லாத இடைவெளியில் வீழ்ந்தான். அப்படியே மயங்கியது போல் கிடந்தான்.

அறையினுள் இழுத்தார்கள். புத்தம்புதுப் புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அவன் பாடவாரியாகவும், வகுப்பு வாரியாகவும் பிரித்து அடுக்கியிருந்தான். எல்லாம் சிதறிக் கிடந்தன. மெதுவாகச் சுருண்டு எழுந்தான். சிப்பாய் எழும்பி நிற்க உதவினான். ஆனந்தன் நிமிர்ந்து நின்றான். சிப்பாய்கள் சுற்றி நின்றார்கள். கப்ரன் செனிவரத்ன முன்னால் நின்றான். ஆளுக்கொரு கேள்வி கேட்டார்கள். கேள்வி வரும் பக்கம் திரும்ப முயல்கையில் கப்ரனின் அறை கன்னத்தைப் பதம் பார்த்தது. உள்வாயில் இரத்தம் கசிந்து நாவில் பட்டு உவர்த்தது. சூழ்ந்து நின்றவர்களின் விளையாட்டு ஆனந்தனின் உடலைப் பதம்பார்த்தன. எங்கும் காயங்கள். உடல் தடித்துத் தழும்புகளாகப் புடைத்தன. நீலமும் சிவப்பும் கலந்த கலவையாக அவனது உடல் தெரிந்தது. மனிதனை இப்படியும் வதைப்பார்களா? காட்டு மிராண்டிகளா இவர்கள்?;. கட்டிலிருந்து விடுபட்ட வேட்டை நாய்களாக உதறித்தள்ளினார்கள்.

றொபின்சன் குருசோ கப்பல் உடைந்து தீவில் தஞ்சமானான். அவனது கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. அந்தத் தீவைச் சுற்றிப் பார்த்து வந்தான். நரமாமிசம் உண்ணும் ஒரு மனிதக் கூட்டம் ஆடிப்பாடி சந்தோசிப்பதைப் பார்த்தான். அங்கே ஒரு மனிதனை வதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனைக் கொண்று உண்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று நம்பினான். துப்பாக்கியைப் பயன் படுத்தி அந்த மனிதனைக் காப்பாற்றினான். அவனுக்கு 'பிறைடே’ என்று பெயரிட்டுத் தன்னோடு வைத்துக் கொண்டான். அந்தக் காட்டு மிராண்டி மனிதர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.?

மணி நான்கிருக்கும். இராணுவ வாகனம் பாடசாலையினுள் நின்றதால் பயத்தில் யாரும் வரவில்லை. "யமுத?“ கப்ரன் சத்தமிட்டான். ஆனந்தனைக் கைத்தாங்கலில் இழுத்து வந்தார்கள். "அடோவ் நகின்ட....அடேய் ஏறுடா“ என்றார்கள். ஆனந்தனுக்கு என்ன நடக்கிறதென்ற நினைவே இல்லை. அவன் மயங்கிக் கிடந்தான். அவனை இழுத்து ஜீப்பினுள் போட்டார்கள். எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். ஜீப் வந்த வழியே சென்றது. ஆனந்தனை வாகனத்தில் இருந்து இழுத்து காவல் அறையினுள் போட்டார்கள். கதவினைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனந்தன் அப்படியே சுயநினைவிழந்து கனவினில் மிதந்தான்

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP