Saturday, September 25, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
2
“அன்பு என்பதென்ன? மனதிலே உருவாகும் ஒரு உணர்வுதானே? அந்த உணர்வு எவ்வளவு பிணைப்பினை ஏற்படுத்தி விடுகிறது. மனித மனங்களைப் பிடித்து ஆட்டிப்படைக்கிறது. அன்புதான் பாசத்தின் அடித்தளமா? அன்புக்காக ஏங்கும் உள்ளங்கள்தான் எத்தனை? அன்பு கிடைக்கும்போது இன்பத்தால் உள்ளம் துள்ளுகின்றது. அன்பு கிடைக்காது விடில் அதன் பாதிப்பு அதிகமாகின்றது. மனித மனங்கள் இந்த அன்புக்காகத்தானே ஏங்கிக்கிடக்கிறன. அன்புதான் உயிர்களைப் பிணைக்கும் சக்தியா? அன்பின் நிமித்தம் ஒன்றாகப் பழகிவிட்டுப் பின் பிரியும் போது எவ்வளவு கவலையடைகிறோம். என்ன விசித்திரமான மனம்.”? கயல்விழியின் உள்ளம் ஏதோ விசித்திரமான சிந்தனைகளில் சிக்கித் தவித்தது. கயல்விழி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பாள். எந்தநேரமும் அவள் இதழ்களில் ஒரு கவர்ச்சிப் புன்முறுவல் இழையோடும். ஒருமுறை கயல்விழியைப் பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தவிப்பார்கள்.
பல்கலைக்கழகத்தில் பேரழகியாக வலம்வந்தாள். அவள் உரையாடும்போது ஓரு கலையாடும். அவளது பேச்சில் பொருளிருக்கும். அனைவரோடும் அன்பாகப் பழகும் பக்குவம் வாய்ந்தவள். கலகலத்து உரையாடுவாள். அவளைச் சூழப் பல தோழிகள் இருந்தார்கள். அப்பொழுது அலர்ந்த செந்தாமரையாக ஜொலிப்பாள். சிரிக்கும்போது கன்னங்களில் கவர்ச்சியான குழிகள் உருவாகும். “ஏய் கயல்விழி! உண்மையில் நீ வடிவானவள்தான். எனது கண்களே பட்டுவிடும். உனக்குத் திருஸ்டி கழிக்க வேண்டும்.”? சிரிப்போடு மங்கை கூறுவாள். “ஏய் மங்கை! உண்மையில் உன் பெயருக்கேற்றமாதிரி நீதான் அழகி. உன் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.” கயல்விழி சொல்லும்போது மங்கை குறுக்கீடு செய்தாள். “எதற்கு”? என்று. “உனக்குக் பொருத்தமான ‘திருமங்கை’ என்று பெயர் வைத்ததற்கு”. கலகலத்துச் சிரித்துக் கயல்விழி பதிலளிப்பாள். கன்னக்குழிகள் அவளது சிரிப்புக்காக காத்திருந்ததுபோல் ஓடிவந்து கன்னத்தில் குந்திக் கொண்டன. இருவரும் ஒரே சாயலில் இருந்தார்கள். இரட்டையர்கள் என்றே தோழிகள் அழைத்தார்கள்.
இரவு அவர்களுக்கு உறக்கமில்லை. அழுவதும் ஆளுக்காள் ஆறுதல் கூறுவதுமாகக் கழிந்தது. மங்கை மெதுவாகக் கண்களைத் திறப்பாள். “கயல்விழி உறக்கமா”? அவள் புரண்டு படுத்தபடி “இல்லை. என்ன மங்கை”.? கேட்டாள். “ஒன்றுமில்லை. உண்மையில் உன்னை எனது தோழியாகப் பெற்றதற்காகப் பெருமைப் படுகிறேன்”. அமைதியாகக் கூறினாள். “மங்கை நான் நினைத்ததை நீ சொல்கிறாய். நானுந்தான் நினைத்தேன்”.கயல்விழி சிணுங்கினாள். “எப்படி” மங்கை முணுமுணுத்தாள். “நீ எனக்குத் தோழியானது நான் செய்த புண்ணியம்தான். நம்மிருவருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. நான் நினைப்பதையே நீயும் நினைக்கிறாய். எனக்கு விருப்பமான அத்தனையும் உனக்கும் விருப்பமாக இருக்கிறது. இருவரது குணங்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நமக்குள் அன்புப் பிணைப்பு ஏற்பட்டு விட்டது”. கயல்விழி விபரித்தாள்.
கதைத்தவாறே உறங்கிவிட்டார்கள். சரியாக ஐந்து மணிக்கு எலாரம் அடித்தது. எழுந்து கொண்டார்கள். குளித்து உடை களை மாற்றிப் புறப்பட்டார்கள். தங்கள் உடைமைகளைப் பொதிகளாக்கி வைத்திருந்தனர். அனைத்தையும் எடுத்துக் கொண்டு முன் மண்டபத்துக்கு வந்தார்கள். தங்களது அறையின் திறப்பை முறைப்படி விடுதி மேற்பார்வையாளரிடம் கொடுத்து “நாங்கள் போய்வருகிறோம். நாங்கள் பிழைவிட்டிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்”. என்றார்கள். அவர்களது செயல் விடுதி மேற்பார்வையாளருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அவர்களது கைகளைப் பற்றி “நீங்கள் இருவரும் எனது பிள்ளைகள் மாதிரி. உங்கள் வாழ்க்கையில் நல்லாயிருப்பீர்கள். எனது வாழ்த்துக்கள்”;. கண்கலங்க வாழ்த்துக் கூறி வழியனுப்பினார். வெளியில் வந்தார்கள். எங்கும் மாணவர்கள் கூட்டம். பலர் அழுதவண்ணம் நின்றிருந்தார்கள். பிரிய மனமில்லாது நின்றார்கள். அவரவர்கள் போகவேண்டிய வஸ் வண்டிகள் வந்ததும் ஏறிக் கொண்டார்கள். பிரிந்து தம்வழியே சென்றார்கள்.
திருமங்கை மட்டக்களப்பு வஸ்ஸில் ஏறிக் கொண்டாள். “கயல்விழி! ;போனதும் பக்கத்து வீட்டுக்குப் போன் பண்ணு. என்ன? நான் வாறன்”. மங்கையின் வஸ் புறப்பட்டது. கயல்விழியின் கண்கள் குளமாயின. ஏதோ பறிகொடுத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வஸ்ஸில் ஏறிக் கொண்டாள். வீடு வரும்வரை அவளது மனம் கனத்தது. பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து விட்டது. இனி வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கிறன. இனித்தான் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த உலகத்தில் பிறந்து விட்டால் அனுபவிக்கத் தானே வேண்;டும். வரும் சவால்களை ஏற்று வெற்றி கொள்ளத்தான் வேண்டும்.
அம்மாவை நினைத்துக் கொண்டாள். “என்னால எத்தனை பேருக்குத் தொல்லைகள்? அப்பா எனக்காக எவ்வளவு பாடுபட்டார். அவரது மனங்குளிர நல்லநிலைக்குக் கொண்டு வரவேண்டும். என் கண்முன்னால் அவர் தலைநிமிர்ந்து வாழவேண்டும். உழைத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். புதுத் தெம்பு வந்தது. உற்சாகமானாள். இந்தப் பிறவி எப்படி வந்தது.? இனி எந்தப் பிறவி வாய்க்குமோ? விலங்குகள் போல் வாழ்ந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனிதன் மட்டும் தனக்குத்தானே விலங்கினை மாட்டிக் கொண்டு தவிப்பதேன்?.
சமூகத்தில் வாழ்வதற்குச் சில சட்டதிட்டங்கள் வேண்டும்தான். ஆனால் சாதி, சமயம், ஏற்றத்தாழ்வு தேவைதானா? பணம் மட்டும் இருந்தால் போதுமா? பணந்தானா எல்லாம். பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத் தயாராயிருப்பதேன்.? தனக்குத்தானே கேள்விக் கணைதொடுத்து, விடைதெரியாது தவித்தாள். திருகோணமலை வந்து விட்டாள்.
அப்பா வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார். மகளைக் கண்டதும் அவரது கண்கள் அகல விரிந்து கொண்டன. சந்தோசம் பெருக்கெடுத்தது. அவளது பொருட்களை எடுத்துக் கொண்டார். அப்பாவை பாசத்தோடு பார்த்தாள். அவளது உள்ளம் உடைந்துபோனதுபோல் ஒரு பிரமை. அப்பா எவ்வளவு திடகாத்திரமான உடற்கட்டு உடையவர். இப்போது இப்படி மெலிந்து உடைந்து விட்டாரே. இந்த நாட்டில் நடந்து முடிந்த அழிவுகளை எண்ணிப்பார்த்தாள். அவளை அறியாமலேயே மூச்சுக் கனலாகப் பறந்தது. “அப்பா மெலிந்து விட்டீர்களே” சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அதனைச் சொல்லமுடியவில்லை. “அப்பா எப்படி இருக்கிறீர்கள்”;? மாற்றிச் சொன்னாள். “இருக்கிறனம்மா. வா வீட்டுக்குப் போய்க் கதைப்பம். அம்மா காத்திருப்பா”? கூறியவாறே ஆட்டோவை அழைத்தார்.
ஆட்டோவில் ஏறி வீட்டின் வாசலில் இறங்கினார்கள். அம்மா படலைக்கு ஓடோடி வந்து வரவேற்றார். அவளைப் பார்த்ததும் “என்னம்மா கயல்! நேரத்துக்குச் சாப்பிடுவதில்லையா”? நல்லா மெலிந்து விட்டாய்”. கவலையோடு மகளை வரவேற்றார். “அம்மா நான் மெலியல்ல. நீங்கதான் இரெண்டு பேரும் மெலிஞ்சிட்டிங்க”. கவலையோடு சொன்னாள். “என்ன செய்யிறது. நாட்டு நடப்பு அப்படி. எப்ப நமது சொந்த ஊருக்குப் போகப்போறமோ தெரியாது. அங்க போனால்தான் நிம்மதி கிடைக்கும். இஞ்ச வாடவீட்டில இருந்து கொண்டு வாழலாமா”? அம்மா புராணம் பாடினார். “இஞ்சார் தங்கம்! உன்ர புராணத்தப் பிறகு பாடு. இப்ப பிள்ள களைச்சி வந்திருக்கு. சாப்பிடக் குடு. மகள் கயல்! முகத்த அலம்பிற்று வந்து சாப்பிடம்மா. பிறகு கதைப்பம்”. அப்பா உசார் படுத்திவிட்டு வெளியில் போனார்.
கயல்விழி சுறுசுறுப்பானாள். கிணற்றில் தண்ணீரை அள்ளி பெரியவாளிக்குள் ஊற்றினாள். முகத்தில் தண்ணீரை விசிறியடித்துக் கழுவினாள். தண்ணீர் பட்டதும் சில்லென்று இருந்தது. உடலையும் கழுவினாள். சுகமாயிருந்தது. துவாயை எடுத்துத் துடைத்துக் கொண்டு வந்தாள். அம்மா உணவோடு தயாராயிருந்தார். “வாம்மா சாப்பிடுவம்.” அம்மா அழைத்தார். “அப்பா எங்க? அவர் சாப்பிட்டாரா”? கயல்விழி; வினாக்களைத் தொடுத்தாள். சுந்தரத்தார் வந்துகொண்டே “இதோ வந்திற்றன் மகள். நீ சாப்பிடு”. கூறிக்கொண்டு வாங்கி வந்த வாழைப்பழச் சீப்பைச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். “அப்பா! வாங்க எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவம்”. கயல் அழைத்தாள். அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அவளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருபுறம் துயரமாகவும் இருந்தது. மங்கையை நினைத்துக் கொண்டாள்.
“பாவம் மங்கை. இப்போது என்ன செய்வாளோ? அவள் சொன்னவை நடக்குமா”? மனதில் நினைத்துக் கொண்டாள். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக இருந்ததை மீண்டும் எண்ணிக் கொண்டாள். பல்கலைக் கழகத்தில் முதல்நாள் சந்திப்பிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். தங்களது குடும்பங்கள் பற்றிப் பரிமாறிக் கொண்டனர். திருமங்கையின் அப்பா நிரந்தர வேலையற்றவர். தினக்கூலி வேலைக்குச் செல்பவர். வறுமையில் வாழும் குடும்பம். ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்தியடைந்தமையால் ஒருவாறு மேற்படிப்புப் படிக்க முடிந்தது. மகாப்பொல பணமும் அவளுக்குக் கிடைத்தது. அதற்குள் சமாளித்துப் படிப்பை முடித்தவள். படிப்பிலும் கெட்டிக்காரி.
நல்ல குணம்படைத்தவள். பார்த்தவர்கள் அவளைப் பணக்கார வீட்டுப்பிள்ளை என்றுதான் நினைப்பார்கள். அப்படி அவள் நடந்து கொள்வாள். தனது வறுமையைக் காட்டமாட்டாள். அவள் தனக்குத் தோழியாகக் கிடைத்ததையிட்டுப் பெருமைப் பட்டுக் கொண்டாள். சாப்பிட்டதும் அப்பாவோடு அளவளாவினாள். நாட்டு நடப்பைக் கேட்டறிந்தாள். அரசியல் லாபம் தேடும் தலைவர்களால் நாடு குட்டிச் சுவராய் போனதையிட்டுக் கவலையாய் இருந்தது இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் எண்ணிலடங்கா. இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக யார் பாடுபட்டார்கள்?. எத்தனைபேர் இரத்தம் சிந்தினார்கள்? சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள் இலங்கையில் யாரும் இல்லை. இலங்கைக்குச் சுதந்திரம் தானாகத்தான் கிடைத்தது. அதனால் அந்தச் சுதந்திரத்தின் மகிமையை நம்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக உணரவில்லை.
நாட்டைக் கூறுபோட்டு இன மொழி ரீதியாகப் பிரித்து அரசியல் லாபம் தேடுகிறார்கள். நாட்டுப்பற்று இல்லாத தலைவர்களினால் நாடு சின்னாபின்னமாகி விட்டது. தமிழர் வாழும் பிரதேசங்களில் வன்செயல் அதிகரித்து விட்டது. மக்கள் இடம்பெயர்ந்து தவிக்கும்நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் சுனாமியினாலும், வன்செயலினாலும் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்தின் கிராமங்கள் அழிவுற்றன. பொருளாதாரம் சூறையாடப் பட்டுவிட்டது. பல்லாயிhக்கணக்கான மக்கள் உயிர் துறந்தனர். பலர் காணாமல் போயினர். திருகோணமலை மாவட்டக் கிராமங்கள் சிதைந்தன. சில கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து திருகோணமலை நகரில் வாடகை வீட்டில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது.
நகர்ப்புறங்களில் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாவிடினும் சற்றுப் பயம் குறைந்திருந்தது. ஷெல்லடி நகர்ப்புறத்தில் இல்லை. சுந்தரத்தார் குடும்பமும் வன்செயலினால் பாதிக்கப்பட்டு அகதியாகி முகாமில் தஞ்சமாகியது. பின்னர் வாடகை வீட்டில் வாழுவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். கயல்விழிக்குப் பொழுது போவது கடினமாக இருந்தது. நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
கட்டைபறிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றம் என்றதும் சுந்தரத்தார் பலமுறை ஊரைப் போய்ப் பார்த்து வந்தார். அவரது வீட்டை அவராலேயே அடையாளம் காணமுடியவில்லை. இடையிடையே போய் வளவினைத் துப்பரவாக்குவார். வேலியைச் சரி செய்வார். பற்றைகளை அகற்றுவார். வீட்டைப் பார்ப்பார். அலுப்புத் தட்டும் வந்து விடுவார். சனங்கள் குடியேறிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களாக அவர் போகவில்லை.
கதவில் தட்டும் சத்தம் கேட்டது. சுந்தரத்தார் வாசலடிக்குச் சென்றார். கதவைத் திறந்தார். செல்லச்சாமி நின்றிருந்தார். அவரை வரவேற்று இருக்கையில் அமரச்செய்தார். “அண்ணன்! நாங்க நாளைக்கு ஊருக்குப் போறம். உடைஞ்ச வீட்டைத்திருத்த நிறுவனங்கள் வந்திற்று. வீடுகளைத் திருத்தி குடியேற்றம் நடக்குது. உங்கட வீட்டைப் பார்த்துச் செலவு விபரத்தைத் தயாரித்துப் போட்டாங்க. நீங்க வந்தாச் சரி. எப்ப வரப்போறிங்க”? செல்லச்சாமி விசயத்தை மெல்ல விட்டான்.
“அப்படியா, நாளைக்கு நானும் வாறன். போய் வளவை வெளியாக்குவம். இஞ்ச வீட்டு வாடகை கொடுத்துக் கட்டாது. வீட்டுக்காரரின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுபடேலாது. தவித்த முயலடிக்கும் சந்தர்ப்பவாதிகள். உழைப்பும் இல்ல. நாளைக்கு முதல் லோஞ்சிக்குப் போவம். என்ன”? சுந்தரத்தார் செல்லச்சாமியிடம் கூறிவைத்தார். அவரும் சரி யென்று எற்றுக் கொண்டார். ஊருக்குப் போவதையிட்டு விவாதித்தார்கள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP