நாவல்
நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்.
1
அந்திவானம் செம்மைசூடித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. மேற்கு வானம் வண்ணக்கோலம் பூண்டு பருவமங்கையாய் ஜொலித்தது. சூரியக்கதிர்கள் வெம்மை குறைந்து இதமான வெப்பத்தைத் தந்து கொண்டிருந்தது. வானம் நிர்மலமற்றதாய் பிரவாகித்தது. மனிதப் பருவத்தில் பதினெட்டுத் தொடக்கம் இருபத்தைந்து வயதுவரை இளமையின் இரகசியங்கள் துள்ளி நிற்கும் பருவம். இன்பச்சுரங்கத்தின் எழிலகம். செம்மஞ்சள் மாலைப் பொழுது அற்புதமானது. வேலைகளை முடித்துவிட்டுக் குளித்து வந்தால் உண்டாகும் சுகம் இருக்கிறதே இன்பமயமானது. இளவயதினர் சேர்ந்து கும்மாளமிடும் நேரமல்லவா இம்மாலைப் பொழுது?. இவ்வளவு நாட்களும் இந்த நேரத்தில் கலகலப்பாக இயங்கும் இளவட்டங்கள் இன்று வழமைக்கு மாறாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் ஓரு சோகம் குடிகொண்டிருந்தது. பல ஆண்டுகளாக வரவின்றிச் செலவு மட்டும் செய்து மகிழ்ந்திருந்த வாழ்க்கை ஒரு பகுதியினருக்கு முடிவுக்கு வந்து விட்டது. ஒன்றாகப் பழகியவர்களை விட்டுப்பிரிவது எல்லோருடைய உள்ளங்களிலும் இனங்காண முடியாத துயரப்போர்வையை மூடிவிட்டிருந்தது. ஒவ்வொரு வருடத் தொடக்கத்தில் பல்கலைக் கழகம் மாணவர்களை உள்வாங்கும். அதேபோல் ஒவ்வொரு வருடம் முடிவிலும் வெளியனுப்பும். இது மாறி மாறி வரும் ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது. ஒரு நியதியாகி விட்டது. பல்கலைக் கழகத்திற்கு வந்தால் தனது படிப்பை முடித்தவர்கள் போய்த்தான் ஆகவேண்டும். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்’? என்ன அழகாக வள்ளுவர் கூறியிருக்கிறார். உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த அன்பு தோன்றிவிட்டதோ? கயல்விழி தனிமையில் இருந்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தாள். நாளை அவள் தனது தோழிகளை விட்டுப் பிரியும் நாள். அவள் மட்டுமல்ல. அவளோடு பல்கலைக் கழகத்தில் ஒன்றாக சேர்ந்தவர்கள் அனைவரும் பிரிந்து செல்லவேண்டும். வந்த வேலை முடிந்ததும் வந்தவழியே செல்லத்தானே வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாகப் பழகிய அனைவரும் ஒவ்வொரு திக்கில் கலைந்து விடுவார்கள். எங்கிருந்து வந்தார்களோ அங்கே திரும்பிப் போய்விடுவார்கள். இனிமேலும் இந்த இடத்தில் கூடியிருந்து கும்மாளம் அடிக்கமுடியாது. இந்த இடங்களில் புதியவர்கள் நிறைந்து விடுவார்கள். இதுதான் வாழ்க்கையின் ஆரம்பமா? எங்கெங்கு சந்திப்பார்களோ தெரியாது.
கயல்விழி அந்தப்பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்த நாள்முதல் திருமங்கை அவளது உயிர் தோழியாய் ஆகிவிட்டாள். விடுதி அறையிலும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். கயல்வழி உயிரியல் விஞ்ஞானம் கற்று இறுதிப் பரீட்சையையும் எழுதிவிட்டாள். திருமங்கை கலைப்பிரிவில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றாள். புல்நுனியில் ஒரு எறும்பு ஊருவதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பண்பு இருவரிடத்தும் இருந்தது. அந்த ஒத்த இயல்பு இருவரையும் தோழிகளாக்கி விட்டது. ஒரு மாலைப் பொழுதில் இருவரும் உலாவந்தார்கள். ஒரு எறும்பு புல்நுனியில் ஊர்ந்து கொண்டிருந்தது. “மங்கை இந்த எறும்பு இருக்கிறதே, இதனிடம் மனிதன் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு”. எறும்பைப் பார்த்தவாறே கயல்விழி விளக்கினாள்.
“அப்படி என்ன விஷேசம் அதனிடம் உண்டு”? மங்கை அவளைப் பார்த்தவாறே கேட்டாள். “நமது உடல் நமது கையால் எண்சாண்தான். அதேபோல் எறும்பும் தன்கையால் எண்சாண்தான். ஆனால் மனிதனைவிட அது ஆற்றல் மிக்கது. தனது எடையைவிட பல மடங்கு எடையைத்தூக்க வல்லது. எந்தநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும்”;. கூறிவிட்டு ஒரு துரும்பை எடுத்து எறும்பின் உடலைத் தீண்டினாள். அது தனது உடலில் பட்ட துரும்பை உணர்கொம்பால் உணர்ந்து கொண்டது. அது நெளிந்து அதற்கேற்பத் துலங்கியது. அந்த எறும்பைத் தொடர்ந்து பல எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. மற்ற எறும்புகளுக்குச் செய்தி பரவியதால் ஊர்வதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவை வேலைகளில் ஈடுபடத் தொடங்கின.
“ஒட்டகம் தனது சூழலுக்கேற்பத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தண்ணீரைச் சேமித்து வைக்கும். கங்காரு இனத்துக்குத் தமது குட்டிகiளைப் பாதுகாப்பதற்கு ஒரு பையை இயற்கை கொடுத்துள்ளது. எறும்புக்கு வயிற்றில் இரண்டு அறைகள் உள்ளன. ஒன்றில் தனக்கென உணவினைச் சேர்த்துக் கொள்ளும். அதனை வேண்டியபோது பயன்படுத்தும். மற்றய அறையில் தனது சகபாடிகளுக்காக உணவினைச் சேர்த்துக் கொள்ளும். நன்றாக வேலை செய்த எறும்பு ஒரு நாளைக்கு ஏழு மணித்தியலங்கள் உறங்குமாம். வேடிக்கையாக இல்லை”? மங்கையைப் பார்த்து வினவினாள். மங்கை புன்னகைத்தாள்.
“மங்கை! நமது மனித குலத்தில்தான் ஆண்டான் அடிமை உள்ளதாக நாம் நினைக்கின்றோம். இந்த எறும்புகளின் வாழ்க்கையிலும் ஆச்சரியமான செய்திகள் அடங்கியுள்ளன. எறும்புகள் தங்களுக்கென கூடமைத்து வாழும். பெரிய கூட்டமே இருக்கும். இராணி எறும்புதான் தலைமைதாங்கும். பிறக்கும்போதே இராணி எறும்புக்குச் சிறகுகள் இருக்கும். வளர்ந்து பெரிதாகி தான் வாழந்த கூட்டத்தைவிட்டு வேறாகச் சென்று தனதுகூட்டத்தோடு வாழும். அதன்பின்னர் சிறகுகள் விழுந்துவிடுமாம். போராளி எறும்புகள் கூட்டையும், மற்றைய எறும்புகளையும் பாது காக்கும். வேலையாட்கள் எல்லா வேலைகளையும் செய்யும். உணவு சேகரித்துவரவேண்டும். வாழும் கூட்டைச் சுத்தம் செய்வேண்டும். ஒவ்வொரு நாளும் எறும்புகள் வாழும் கூட்டைச் சுத்தம் செய்யும். தங்களுக்குப் போதிய வேலையாட்கள் இல்லாது விடின் பக்கத்தில் உள்ள எறும்புக் கூட்டை வேவுபார்க்கும். வேவு பார்ப்பதற்குகென்றே எறும்புகள் உண்டு. எந்த எறும்புக் கூட்டில் முட்டைகள் உள்ளனவா என்று வேவு பார்க்கும்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது படையுடன் சென்று முட்டைக்கூட்டைக் கவர்ந்து வரும். தமது கூட்டில் வைத்துப் பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகள் பொரித்ததும் அவைகள்தான் இக்கூட்டின் வேலையாட்கள். இது எறும்புகளின் வாழ்க்கை முறை”. கயல்விழி விளக்கிக் கொண்டு போனாள். மங்கை அதிசயித்து நின்றாள். தனது குறிப்புப்புத்தகத்தை எடுத்தாள். பேனாவினால் கிறுக்கினாள். கயல்விழி அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “நீ சொன்னதைச் சிறுவருக்குச் சொல்லவேண்டும். சிறுவருக்கான பாடல் இது. சரி, படிக்கட்டா”? மங்கை கேட்டாள். “எங்கே படி பார்க்கலாம்.? கயல்விழி கன்னத்துக் கூந்தலை ஒதுக்கியவாறே சொன்னாள்.
சின்ன வண்ண உருவத்தில்திரியும் எறும்பு தன்னைப்பார்உன்னைப் போல உயிருண்டுஉழைக்கும் சக்தி அதற்குண்டு வலிமை கொண்ட ஆறுகால் விரைந்து செல்ல உதவுமாம்எளிதில் பளுவைத் தூக்குமாம்எடுத்துச் சுமந்து விரையுமாம்
வயிற்றில் இரண்டு அறையுண்டுவயிற்றை நிறைக்க வழிகண்டுஅயரா துழைக்கும் எறும்புகள்அபார மூளை கொண்டவை
உழைத்த களைப்பைப் போக்கவேஉறங்கும் ஏழு மணிவரைபழமை வாய்ந்த எறும்பினம் பரந்து எங்கும் வாழுமாம்.
“சா… அற்புதமான பாடல். இப்படி இசையோடு பாடினால் சிறுவர்கள் மெய்மறந்து இரசிப்பார்கள். சிறுவருர்களுக்குத்தான் நாங்கள் சொல்லித்தர வேண்டும். அவர்கள்தான் இந்நாட்டின் வருங்காலத் தலைவர்கள். இந்தப் பாடலைத் தொலைத்து விடாதே. விரைவில் நாம் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்”. மங்கையைத் தழுவிப் பாராட்டிக் கூறினாள். மங்கை நெகிழ்ந்து போனாள். இப்படி இருவரும் பேசி மகிழ்ந்த நாட்கள் ஏராளம். ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து கடந்த காலத்தை அலசினாள்.
அவள் முதன்முதல் பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்த நாள். அவளைச் சூழ்ந்து பலர் ‘ராக்கிங்;’ செய்யத் தொடங்கினார்கள். அவள் அழுதே விட்டாள். ஊரில் நடந்த அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட அவளது உள்ளம் கொதித்தது. அவள் தனது அண்ணனை இழந்திருந்தாள். ஊரிலிருந்து விரட்டியடிக்கப் பட்டாள். அப்பா அம்மாவோடு ஓடிக் களைத்து திருகோணமலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்தாள். உள்ளம் ஒடிந்திருந்தது. மனவடுவால் துவண்டு போயிருந்தாள். படித்தால் ஒரு விடிவு கிடைக்கும் என்ற ஆதங்கத்தில் பல்கலைக் கழகம் வந்தாள். ஆனால் இங்கே உலகத்தைப் பற்றிய கவலையற்ற படித்தவர்கள் ராக்கிங் செய்கிறார்கள். ஆவேசத்தோடு அவர்களைச் சாடினாள்.
“நாங்க வாழ்வதா சாவதா என்ற நிலையில் கிடந்து செத்து வாறம். நீங்க ராக்கிங் செய்யிறீங்களா? உங்களுக்கு நமது நாட்டில என்ன நடக்குது என்று தெரியாதா? நீங்களெல்லாம் மனிதர்கள்தானா? இனிமேலும் ‘ராக்கிங்’; என்று வந்தால் புலிவேட்டை நடக்கும்”. அவள் ஆவேசமாக நின்றாள். அவளது கையில் தோளில் தொங்கிய பை இருந்தது. வேட்டைக்குப் பேகும் புலிபோல்தான் தெரிந்தாள். பல நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாயைத் துரத்தும் போது ஓடும் நாய் திரும்பி வாலை பின்னங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு குந்தியிருந்தால் எந்த நாயும் கிட்ட நெருங்காது. அந்த நிலையில் இருந்தாள். கண்கள் சிவந்து கனல் பறந்தது. “ஏய் இவள் புலியாம். கிட்டப் போகாதீங்க”. சுற்றி நின்றவர்கள் பரிகாசம் செய்தார்கள். அப்போதுதான் அருண் அந்தப் பக்கம் வந்தான். குழுமி நின்றவர்களே புலி என்று சொல்லி விபரீதத்தை உண்டு பண்ணிவிடுவார்கள் போல் தெரிகிறது. விரைந்து அவ்விடம் புகுந்து சூழ்ந்து நினறவர்களிடம் கதை கொடுத்தான்.
“ ஹலோ இஞ்ச பாருங்க, நாட்டு நிலை தெரியாமல் சத்தம் போடாதிங்க. இங்க பெரும்பான்மை இனத்து மாணவர்கள் இருக்கிறார்கள். நீங்க இப்ப சொன்னத அவர்கள் கேட்டால் என்ன நடக்கும்?; நீங்களே உங்களக் காட்டிக் கொடுத்த மாதிரிப் போய்விடும். அவயின்ர நிலையை நீங்கள் யோசியுங்க. அகதியாக முகாமில இருந்து அவதிப்பட்டு படிக்கவேணும் என்ற எண்ணத்தோட வந்தவர்களுக்கு நாங்க உதவியாக இருக்க வேணும். அதைச் செய்யுங்க”. அவன் பரிந்து பேசினான். “ஆமாடி. இவர் பெரிய இவர”. சொல்லிக் கொண்டு போனார்கள். அவன் அவள் பக்கம் போனான். கோபத்திலும் அவள் அழகாய்த்தான் இருந்தாள். “உங்கட பேரென்ன”? என்றான். அவளது ஆத்திரம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்தது. “கயல்விழி” என்றாள். “அழகான பெயர். ஆனால் அவை இப்போது கனல்விழிகளாக ஆகிவிட்டன. சரி இப்படி வாங்க.. அந்த கதிரயில் இருப்போம். கோபம் அடங்கியதும் உங்கள் அறைக்குப் போகலாம்.” அவன் முன்னால் போய் அமர்ந்தான். அவள் பின்னால் சென்றாள்.
“எந்த ஊர்”? அடுத்த வினாவைத் தொடுத்தான். “திருகோணமலை”. சுருக்கமாகப் பதில் சொன்னாள். “நானும் திருகோணமலைதான். நடந்ததை மனதில வைக்காதீங்க. உடனே மறந்திடுங்க. உங்கட நோக்கத்த நிறைவேற்றப் பாருங்க. அது சரி.. நீங்க எந்தப் பீடம்”? அருண் கேட்டான். “உயிரியல் விஞ்ஞானம்” பதிலளித்தால். எனது பெயர் அருண். நான் சமூகவியல் மூன்றாம் வருடம். கெதியாகப் படித்து முடித்து விட்டு அம்மாவுக்கு உழைச்சிக் கொடுக்க வேணும். ஏதும் தேவை என்றால் எனக்கு அறிவியுங்க”. நான் உங்களப்பற்றி எங்கட சிரேஸ்ட மாணவரிடம் சொல்லி வைக்கிறன். நான் பிறகு சந்திக்கிறன். அவன் வந்த வழியே சென்றுவிட்டான். அதன்பின் எப்பொழுதாவது சந்தித்தால் “எப்படி கனல்விழியே நலம்.”? என்று நலம் விசாரிப்பான். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.
அவன் தமாசாகப் பேசுவான். எப்போதும் கலகலப்பாக இருப்பான். உதவி செய்வதற்கு முன்னிற்பான். இவை அவளுக்குப் பிடித்தவை. அதனால் அவன்மேல் ஒரு மதிப்பு இருந்தது. எப்படித்தான் அந்த நாட்கள் ஒடினவோ தெரியாது. நூலகத்தில் படிப்பில் ஆழ்ந்திருந்தாள். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அருண் ஓரு மூலையில் இருந்து படித்துக் கொண்டிருந்தான். மழை விடுவதாயில்லை. அருண் வெளியில் வந்தான். நூலகத் தரையெங்கும் மாபிள் பதிக்கப்பட்டிருந்தது. நூலகத்துக்குள் வருகின்றவர்களின் குடையில் இருந்து வடிந்த மழைநீரினால் தரை ஈரமாக இருந்தது. பொதுவாக நூலகத்துக்கும் பாட்டா செருப்போடுதான் மாணவர்கள் வருவார்கள். அருண் நூலகவாசலுக்கு வந்தான். அவனைத் தொடர்ந்து கயல்விழியும் வந்தாள்.
அவனிடம் குடையில்லை. தனது குடையைக் கொடுக்க நினைத்தாள். ஆனால் அதற்கு இடம் கிடைக்கவில்லை. விடுதிக்கு ஓடுவதற்காக முனையும்போது செருப்பு வழுக்கி விட்டது. அப்படியே வழுக்கித் தூரத்தில் ‘தொப்’ என்;று விழுந்தான். மாணவியர் ஓவென அலறினார்கள்;. கயல்விழி ஓடிச்சென்று அவனைத் தூக்கமுயன்றாள். மற்றவர்களையும் உதவிக்கு அழைத்துத் தூக்கி மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றாள். டாக்டரிடம் சொல்லி மருந்து கட்டி அவனது விடுதி அறையில் கொண்டு போய்விட்டாள். அவனது காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அடிக்கடி அவனைப் பார்த்துச் சுகம் விசாரிப்பாள். அவளை அறியாமல் அவன்மேல் ஒரு அனுதாபம் ஏற்பட்டது.
அவன் பரீட்சை முடிந்து பிரிந்து செல்லும்போது கயல்விழியிடம் வந்தான். அன்று இருவரும் ஆளையாள் பார்த்தபடி இருந்தார்கள். யார் முதலில் பேசுவது? எப்படிப் பேசுவது? ஊமைகண்ட கனவாக “நான் ஊருக்கப் போகிறேன். உங்கள வீட்டில சந்திக்க வருவன்.” சொல்லிவிட்டுச் சென்றான். அவன் போனதும்தான் மனது வருந்தியது. “நான் ஏதும் கதைத்திருக்கலாம். நானொரு மடச்சி.” தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். அவன் போகும்போது “நான் மனதில உள்ளத அவளிடம் சொல்லியிருக்கலாம். நான் சொல்லவில்லையே. சே.. நானொரு மடையன்.” தனக்குத்தானே நொந்து கொண்டான். அதனை இன்று நினைந்து கொண்டாள்.
கதவில் ஒரு தட்டுக் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு மங்கை களைத்து வந்தாள். உற்சாகமின்றி வந்தவள் தன்னைக் கட்டிலில் தூக்கியெறிந்தாள். அவளை ஏந்திய கட்டில் இருமுறை மேலுயர்ந்து தாலாட்டியது. கயல்விழி மின்விசிறியைத் சுழலவிட்டாள். காற்றுத் தாலாட்டிவிட்டது.
கயல்விழி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் மங்கை ஏனின்று இப்படிச் சோர்வாக இருக்கிறாள். மெதுவாக எழும்பி மங்கையின் பக்கம் சென்று “ மங்கை! என்ன நடந்தது? ஏன் சோர்வாக இருக்கிறாய்”? கேட்டவாறே அவளருகில் அமர்ந்தாள். கயல்விழியின் மடியில் தலையைப் புதைத்து விம்மத் தொடங்கினாள். அவளைப் பார்த்ததும் கயல்விழியின் கண்கள் பனித்தன. “என்னம்மா நடந்தது? சொல்”. பதிலுக்காகக் காத்திருந்தாள். “கயல் இன்றுமட்டும் ஒன்றாக இருப்போம். நாளை மாலை நீ எங்கோ நான் எங்கோ இருப்போம். ஏன் நாம் தோழிகளானோம்? இப்போது நெஞ்சு வெடிக்கும்போல் இருக்கிறது”? அழுகையின் ஊடே சொற்கள் பறந்தன.
கயல்விழியின் உள்ளத்தில் தெம்பு பிறந்தது. தன்னைச் சதாகரித்துக் கொண்டாள். “மங்கை இதற்காகவா அழுகிறாய்? நீ என்ன சின்னப்பிள்ளையா? நாம் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். நாம் சந்திக்கமுன் எப்படி இருந்தோம்? இடையில் வந்த இந்த உறவு இடையில் போய்விடும். பல்கலைக் கழகக் காலநட்பு படலையோடு போய்விடும். இது உண்மை. ஆனாலும் நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம். நமக்கென்று கடமைகள் காத்திருக்கின்றன. நாம் போய் ஏதாவது வேலையைத் தேடவேண்டும். நம்மை நம்பியிருக்கும் ஏழைப் பெற்றோரை வாழவைக்க வேண்டும். நீ இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே”. அவளது மனதும் அழுதது. ஆனாலும் மங்கையைத் தேற்றவேண்டும் என்பதற்காக நடிக்க முயன்றாள். அவள் அப்படிப் பேசினாளேதவிர அவளது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து உடைந்து சிதறின.
மங்கை அதனைக் கண்டு கொண்டாள். “கயல்விழி நீ என்ன சொன்னாலும், நீயும் அழுவது எனக்குத் தெரியும். எனக்கு ஆறுதல் சொல்கிறாய். ஆனால் நீ அழுவதை நான் கண்டு கொண்டேன். தோழி! இந்த நான்கு வருடங்களில் நாம் இணைபிரியாமல் இருந்தோம். நமது நட்பைத் தொடர்ந்து காப்பாற்றுவோம். என்ன”? இப்போது மங்கை கயல்விழியைத் தேற்றினாள். இருவரும் ஆளையாள் பார்த்து ஏங்கி அழுதார்கள். “சரி நாம் வளர்ந்து விட்டோம். இப்போது பட்டதாரிகளாக ஆகிவிட்டோம். இன்னும் ஒருமுறை பட்டமளிப்பு விழாவிலே இந்தப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் சந்திப்போம். இப்போது நமது தோழிகளைச் சந்தித்து வருவோம். முகத்தைக் கழுவிப் புறப்புடு” கூறிவிட்டு கயல்விழி எழுந்தாள்.
டைனிங் ஹோல் கலகலத்தது. வண்ண விளக்குகள் அலங்கரித்தன. வெளிச்சங்கள் இருந்தாலும் ஆளையாள் அடையாளம் காணக்கூடிய வெளிச்சம் இல்லாதிருந்தது. அந்த விடுதி பெண்களுக்கானது. டைனிங் ஹோல் வழக்கமான சோபையை இழந்திருந்தது. அவர்களது உள்ளங்களைப் போல் டைனிங் ஹோலும் உற்சாகமில்லாது களைத்திருந்தது. தோழிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாட முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. கண்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டன. கண்களைப் பார்க்கவிடாது கண்ணீர் பொங்கி மறைத்தது. சாப்பிட வேண்டும் என்பதற்காக வாயினுள் திணித்துக் கொண்டார்கள். கவலையுடன் தமது அறைகளுக்குத் திரும்பினார்கள். கயல்விழிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மங்கை அழுது கொண்டே இருந்தாள்.
தொடரும்.
0 comments:
Post a Comment