நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
3
கட்டைபறிச்சான் நல்ல அழகான கிராமம். கொட்டியாரக்குடாக் கடல் நிலத்தைக் குடைந்து சிற்றாறைத் தூதனுப்பி நிலம்பிடிக்க முயற்சித்தா? உப்புநீர் சிற்றாறு ஊரைச் சுற்றி ஓடுகிறது. வெண்கண்ணா மரங்களின் மூச்சுவேர் வெளிக்கிளம்பிக் குத்தீட்டிகளாக நிமிர்ந்து நிற்கும். கண்டல் கண்ணாவின் நீண்ட காய்கள் நீரிலாடி நீந்தி வரும். காய்கள் ஆற்றோரத்தில் அடைந்து அங்கேயே முளைவிட்டு நிமிர்ந்து நிற்கும். உச்சிக் கிளையில் மீன்கொத்திப் பறவைகள் காவலிருக்கும். கொக்குநிரை உப்புநீர் சிற்றாற்றின் கரையோரம் தவமிருக்கும். சிறு தோணிகள் உலாப்போகும். நீரின்மேல் மிதக்கும் மிதவைகளைப் பிடித்து இழுப்பார்கள். மீன் நண்டு வலையோடு வரும். இறால் மலிவாகக் கிடைக்கும். தோட்டம் நிறைந்து பயிர்கள் சிரிக்கும் இராசவள்ளிக் கிழங்கு நிலத்தடியில் அடைகாக்கும்.
வாழை, கமுகு மரக்கறிவகைகள் விளைந்து நிற்கும். சிறுகுளங்களில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழி பாய்ந்து வயல்விளைந்து கிடக்கும். செல்வச்செழிப்போடு திளைத்த கிராமம். வந்தார்க்கெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மக்கள், இன்று யாரும் கிள்ளிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். கயல்விழியின் மனக்கண்முன் கட்டைபறிச்சான் கிராமம் படமாக விரிந்து ஓடியது.
இறால் பாலத்துக்கப்பால் இருக்கும் அம்மன்கோயிலில் வருசத்துக்கு ஒருமுறை வேள்வி நடக்கும். மடைபோட்டுச் சாமியாடி, பொங்கல் பொங்கி மக்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்வார்கள். இளைஞர்களிடையே மந்திரப் போட்டிகள் நடக்கும். சிவம் சாமியாடி ஆசிரியர்களுக்கு வாழைப்பழங்களைச் சீப்போடு தூக்கி வந்து “ ம்..இந்தா” என்று கொடுப்பார். பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். இறால் பாலத்தில் தட்டையான கற்களைத் தண்ணீரில் சாய்வாக எறிந்தால் அது தெத்தித் தத்தித் தூரத்துக்குப் போகும். அதை ரசிப்பது வேடிக்கையாய் இருக்கும். அநற்றை நினைந்து மகிழ்ந்தாள். எல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரத்தார் எழுந்து விட்டார். அவருக்கு அது பழக்கப்பட்டதுதான். தங்கம் வீடு வாசலைப் பெருக்கித் தேநீர் தயாரித்து விட்டார். கயல்விழி அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆனால் அவள் படுக்கையிலேயே இருந்தாள். அவளது எண்ணமெல்லாம் எதிர்காலம் பற்றியதாக இருந்தது. கிராமத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்கள். சுறுசுறுப்பாக வேலைசெய்வார்கள். உடல் உறுதியாக இருக்கும். மனம் தூய்மையாக இருக்கும். வன்செயல்களினால் அவர்கள் தளர்ந்து நொடிந்து விட்டார்கள். அவளது அசைவை தங்கம் உணர்ந்து கொண்டார். “கயல் தேநீர் தரட்டா பிள்ள”. கேட்டவாறே ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தார். எழுந்து அவளும் புறப்படத் தயாரானாள். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து பலநாட்களாகிவிட்டன. திருமங்கையிடம் இருந்து செய்தியொன்றும் வரவில்லை.
சமதரையில் கிராமத்தில் காலாற நடந்து திரிந்தவளுக்குப் புறாக்கூட்டு வாழ்க்கை வெறுத்தது. படிக்கும் வரைக்கும் தோழிகளோடு அரைட்டையடித்து மகிழ்ந்தவளுக்கு வாழ்க்கை ‘போர்’ அடித்தது. பகலில் நூல்நிலையம் செல்வாள். பத்திரிகைகளைப் புரட்டி வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதிகளில் கண்களைச் செலுத்துவாள். தெரிந்த முகங்களைத் தேடுவாள். குறிப்பாக அந்தப் பழகிய முகத்தைத் தேடுவாள். தேடும் பொருள் கண்களில் படாது. கவலையோடு திரும்புவாள்.
வீட்டில் அம்மாவுக்கு உதவிகள் செய்வாள். உணவின்பின் வீட்டில் அடைந்து கிடப்பாள். புத்தகங்கள்தான் அவளுக்கு தோழிகள். நல்ல நூல்களைத் தேடி வாசித்தாள். நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கையின் சுழிவு நெளிவுகளை படிப்படியாக அறிந்து கொண்டு வந்தாள். காற்று வசதியற்ற நகரத்து வாழ்க்கை அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது. தனது பொழுது வீணே கழிவதை உணர்ந்தாள். ஊருக்குப்போனால் பயனுள்ள வழிகளில், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். ஒருமுடிவுக்கு வந்தாள்.
“அப்பா நானும் ஊருக்கு வரப்போறன். எனக்கு ஊரைப்பார்க்க ஆசையாய்க் கிடக்கு. நான் வந்தால் உதவியாகவும் இருக்கும்”. கயல்விழி ஆசையோடு கேட்டுக்கொண்டாள். மகளின் சொல்லைத் தட்டவும் மனமில்லை. “இஞ்சாருங்க. நானும் வாறன். எல்லாருமாய்ப் போய் வருவம். வீடுவாசலைப் பார்த்து துப்பரவு செய்தால் நிம்மதியாக போய்க் கிடக்கலாம்.” தங்கம் சொல்லிக் கொண்டே காலைச் சாப்பட்டைத் தயாரித்தார். “எதுக்கும் கொஞ்சம் உண்டனச் சமையுங்க. பகலுக்கும் உதவும்.” சுந்தரர் முன்னெச்சரிக்கையாகச் சமிக்ஞை கொடுத்தார். தாய்க்குக் கயல்விழி உதவினாள். “நீ அங்கால போ பிள்ள. நான் ஒரு நொடியில செய்துபோடுவன். நீ வெளிக்கிடு”. கூறிக்கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார். சுந்தரத்தார் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டார். “தங்கம்! சிலநேரம் வேலைகள் முடியாட்டி ஒரு நாளைக்கு நிற்கவேண்டி வரலாம். நான் நின்று வேலைய முடித்துத்தான் வருவன். நீங்க திரும்பிட வேணும்.” சுந்தரத்தார் சொல்லிக் கொண்டு ஆயத்தமானார்.
ஆட்டோவில் ஜெட்டிக்குப் புறப்பட்டார்கள். செல்லச்சாமி ஜெட்டியில் காத்திருந்தார். பெரிய கியு நின்றது. “இன்டைக்குச் சந்தோசமாயிருக்கு. கயல்விழியும் ஊருக்கு வாறதால லோஞ் இல்லை. கப்பல்சேவைதான் இருக்காம். அது எட்டு மணிக்குப் புறப்படுமாம்”. செல்லச்சாமி உற்சாகத்தோடு விளக்கினான். சுந்தரத்தாருக்கு உள்ளுறச் சந்தோசம். கப்பலில் போவது பயமில்லை. பாதாளமலைப் பகுதி சுழியுள்ள இடம். காற்றும் வீசும். பயங்கர அலையும் மோதும். லோஞ் நடுக்கடலில் அலைகளில் மோதுண்டு ஆட்டும். மகள் பயந்து விடுவாள். பயம் அவரை உறுத்தியது. பெற்ற மனம் பித்து என்பார்கள். மனித மனத்தின் இயல்புகள் அப்படித்தானே. அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிந்தார்கள். பணத்தைக் கொடுத்து ரிக்கட் எடுத்தார்கள். ஏறுவதற்கு வசதியாகக் கப்பல் ஜெட்டி ஓரத்தில் தரித்து நின்றது. அப்படியே கப்பலின் உள்ளே ஏறிப் பார்த்தார்கள். சுமார் இருநூறு பயணிகள் பயணிக்கலாம். கயல்விழிக்குக் கப்பல் பயணம் புதியது. லோஞ்சில் பயணம் செய்திருக்கிறாள். ஓவ்வொரு முறையும் பயணம் செய்யும் போதும் உயிர் போய் திரும்பி வரும் உணர்வைப் பெறுவாள். எனினும் பயணம் செய்யத்தானே வேண்டும். இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. கப்பலில் யன்னல் ஓரமாக இருக்கையில் இருந்தாள். அம்மா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். யன்னலின் ஊடாகத் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். பயணிகள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அப்பா முன்னால் இருக்கையில் இருந்தார். எட்டரை மணிக்குக் கப்பல் புறப்பட்டது. பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன் துறைமுகத்தின் வழியே பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. அது குறுகிய தூரம். ஆனால் பிரச்சினை தொடங்கியதும் அவ்வழி மூடப்பட்டுவிட்டது. தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இப்போது பிறிமா ஜெட்டிவரை சென்று மலைத்தொடரைச் சுற்றித் திரும்ப வேண்டும்.
கப்பல் நிறையப் பயணிகள் இருந்தனர். பலர் பெரும்பான்மை இனத்தவர்கள். நம்நாட்டுப் பிரசைகள். அவர்களுக்கு ‘ரூறிஸ்ற்’; அந்தஸ்த்துக் கொடுத்து ஒரு மாயையைத் தோற்றுவித்திருந்தனர். அவர்களும் வெளிநாட்டு மக்களைப் போல் தமது கலாசாரத்தை மறந்து சுற்றுலாப் பயணிகளாக கப்பலில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டைமீட்டு விட்டோம். பயங்கரவாதம் முடிந்து விட்டது. நாட்டைக் கைப்பற்றி விட்டோம். என்ற அரச அறிவிப்புப் பரவியது. அதனைத் தொடர்ந்து ‘ இலங்கையின் வடக்குக் கிழக்கு’ வேறொரு பிரதேசமாக விளக்கம் கொடுபட்டுள்ளது. வேறொரு நாட்டினைக் கைப்பற்றி வெற்றிகொண்டதாக ஒரு எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. இப்போது திருகோணமலை உள்நாட்டுப் பெரும்பான்மை இன மக்களுக்குச் ‘சுற்றுலா மையமாக’ ஆகிவிட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலில் பயணிக்கிறார்கள். கப்பல் ஆட்டம் இல்லாது சென்றது. பாதாளமலையடியில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கப்பலும் மெதுவாக அசைந்தது. தொட்டிலில் இட்ட பிள்ளைகளாக பயணிகளும் அசைந்தனர். அலைகள் கப்பலில் மோதின. மோதிய வேகத்தில் அலை உடைந்து நீர்த்திவலைகள் மேலெழுந்து தூறலாய்ப் பரந்தது. நீலக்கடலில் பால்போல் நுரை பரவிச்சிரித்தது. கயல்விழி பார்த்து ரசித்தாள். பாளைச் சிரிப்பு உதிர்ந்தது. அவளது அதீத கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. அவளது மனம் கட்டைபறிச்சானை நோக்கிப் பறந்தது.
சுந்தரத்தாரின் வீடு அழகானது. அவரது காணியின் கிழக்கெல்லையாக உப்பு நீர்ச்சிற்றாறு ஓடுகிறது. ஆறுதான் கிழக்கெல்லையின் வேலி. தென்னைகள் வரிசையாகக் காட்சி தரும். மா, பலா, வாழையென எங்கும் கனிதரு மரங்கள். ‘தெங்கும் இளநீரும், தேமதுர முந்திரியும்’ என யாழ்நூலில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் குறிப்பிடுவது போல, இரண்டு ஏக்கர் காணியில் அவரது இராச்சியம் அரசோச்சியது. சுற்றிவரத் தோட்டப்பயிர்கள் காய்த்துப் பூத்துக் கலகலக்கும். காணியில் ஆழமான கிணறு இருந்தது. நிலத்தடி நீர் பயிர்களுக்குச் செழிப்புட்டியது. வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம். வண்ண வண்ண ரோஜாச் செடிகளை கயல்விழி வளர்த்திருந்தாள். குரோட்டன் செடிகளைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நட்டிருந்தாள். பூஞ்செடிகள் பூத்திருக்கும். இடையிடையே கத்தரி, மிளகாய் கண்சிமிட்டும். கலப்புப் பயிர்ச்செய்கையில் நாட்டம் அவளுக்கு. மரவள்ளிச் செடிகள் ஒரே மட்டமாக அழகாக வளர்ந்திருக்கும். இராசவள்ளிக் கொடிகள் சிறு தடிகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும். வீட்டுத்தோட்டம் மேலதிக வருவாயைக் கொடுத்தது.
கட்டைபறிச்சான் நாகதம்பிரான் கோயில் பெருமைவாய்ந்தது. உற்சவ காலங்களில் திருகோணமலை மாவட்டக் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். நேர்த்தி வைத்தவர்கள் பயபக்தியோடு விரதமிருந்து பொங்கலிடுவார்கள். இனசனங்கள் தங்கள் உறவுகளோடு சேர்ந்து கொள்ளும் நிகழ்வாக விளங்கியது. இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். வீரசிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டு ஊரைக்கலக்கி எடுக்கும். அன்னலக்சுமி, சந்தானலெக்சுமி குழுவினரின் இசைமழை உள்ளங்களைக் கவர்ந்தெடுக்கும். அந்தக்குழுவில் அம்பிகாவோடு கயல்விழியும் சேர்ந்து பாடுவாள். பல்லிசை விற்பன்னர் விபுணசேகரத்தின் பல்லிய வாத்தியக் கருவிகளின் இன்னிசை காற்றில் பரவும்.
‘கத்தும் கடலும் கவிபாடித் தாலாட்டும்முத்தம் எங்கள் மூதூர் பிரதேசத்தின் கட்டைபறிச்சானில்காலிடறும் பக்கமெல்லாம்இசைபரந்து களிப்பூட்டும்.இளந்தென்றல் பரவிவரும்கட்டை பறிச்சானைத் தழுவிவரும் பூங்காற்றுப்பட்டாலே போதும் பாட்டு வந்து கூத்தாடும்காலாற வீதிகளில் கதைத்து நடந்தாலே கொண்ட மனக்கவலைகுலைந்தோடிப் போய்விடுமாம்’
எனக் ‘கேணிப்பித்தன் கவிவரி’களைக் கட்டைபறிச்சான் கனகசிங்கம் பாடி அசத்துவார்.
அந்தக் கவிதை வரிகளை அசைபோட்டுப் பார்த்தாள். என்ன அற்புதமான காலம். எல்லாம் கனவாகிப் போய்விட்டன. கிராமத்தின் வாழ்க்கை முறை ‘கல்லெறிபட்ட தேன் கூடாகக்’ கலைந்து போயிற்று. அவளது எண்ணத்தறி கப்பலின் அசைவால் சிதறியது. “அம்மா! இந்த இடத்தில்தான் லோஞ் புரண்டது. கனபேர் செத்தவங்கள்.” கயல்விழி நினைவு கூர்ந்தாள். தங்கத்துக்குப் பயம். “அதையேன் நினைக்கிறாய். அந்தக் கோணேசரை நினைத்துக் கொள். ஓன்றும் வராது”. அவளுக்கு உள்ளுரப் பயம். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது மகளின் சிந்தனையை வேறு பக்கம் திசைதிருப்ப முனைந்தாள்.
தொடரும்.
0 comments:
Post a Comment