Wednesday, January 19, 2011

சிறுகதை

சிறுகதை
ஆனந்தரின் துள்ளல்
ஆனந்தர் அபார மூளைகொண்டவர். தன்திறமையினால் முன்னுக்கு வந்தவர். வன்னி மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர். நல்ல சம்பளம். மலிவாகக் கிடைக்கும் காணிகளை வாங்கியும் காணி உத்தியோகத்தர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு சில ஏக்கர் நிலங்களையும் பெற்றும் கொண்டார். காணி உத்தியோகத்தர்களாக வருபவர்களும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் காணிகச்சேரி நடத்தி ‘பேமிற்’ எடுத்துக் கொடுத்து விடுவார்கள். வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறுபவர்கள் குறைவு. யாழ்ப்பாணம் பாதுகாப்புக்கும் கல்வி போன்ற ஏனைய வசதிகளுக்கும் பெயர்போன பிரதேசம். ஆனந்தர் அரசாங்க உத்தியோகம் பார்த்தாலும் அரசியல், சமூகசேவைகள் போன்றவற்றிலும் கரிசனை காட்டினார்.ஆனந்தரின் உதவி இளைஞர்களுக்குத் தேவைப் பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அது உலகமெல்லாம் கேட்கும் என்பார்கள். அதற்குக் காரணம் கல்விதான். யாழ்ப்பாணத்தவர்களின் மூலதனம் கல்விதான். அதனால்தான் அரச உத்தியோகங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் அதிக இடம்பிடித்தார்கள். ஆனந்தரும் வன்னிக்கு வந்தபின் வசதிபடைத் தவராகிவிட்டார். ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்தான் ஆனந்தர் யாழ்ப்பணத்தில் பிரசன்னமாவார். அதிகாலை ‘இன்ரசிற்றி’ றெயிலில் எறினால் ஒன்பது மணிக்கு வன்னியில் கந்தோரில் இருப்பார். மாலை நாலரைக்கு மீண்டும் றெயில் எறினால் ஏழுமணிக்கு வீட்டில் இருப்பார். ஒவ்வொரு நாளும் கோச்சியில் வந்து போவார்.
சனிக்கிழமைகளில் ஆனந்தர் வீட்டில் பல பிரமுகர்கள் கூடுவார்கள். பின்னர் பக்கத்துக் கோயில் வெளியில் மெதுவாக நகர்ந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை அரசியல் சமூக பலதும் பத்தும் அலசப்படும்.
அரசாங்கம் பல்கலைக்கழகப் புகுமுகத்துக்காக, மாவட்டங்களுக்குக் கோட்டாமுறையையும், வெட்டுப்புள்ளியில் மாற்றங்களையும் கொண்டுவர ‘தரப்படுத்தல்’ என ஒரு சரத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. அதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களும், கண்டனக் கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறமாவட்டங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களும். எனையவர்களும் தமது குடும்பத் தரவுகளை அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் பதிவேட்டில் பதிந்து வைத்துவிடுவார்கள். யாழ்ப்பாணத்திலும் பதிவுகள் இருக்கும். ஆனந்தரும் இந்த நடவடிக்கைகளில் கெட்டிக்காரர். அவருக்கு அரசின் கொள்கையை எந்த ஆர்ப்பாட்டங்களும் மாற்றியமைக்க உதவாது என்பது தெரியும். உண்மையில் தரப்படுத்தலையும், கோட்டாமுறையையும் மனதினுள் ஆதரித்தவர்கள் பலர். அவர்களில் ஆனந்தரும் ஒருவர்.
ஒலிபெருக்கி ‘தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு’ போன்ற உணர்ச்சியூட்டும் பாடல்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. பிரசாரக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனந்தரின் ஆவேசமான பேச்சைக் கேட்டு மேடையே அதிர்ந்துவிட்ட மாதிரியான ஒரு உணர்வு. கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரின் மெய் சிலிர்த்து ரோமமயிர் கால்கள் குத்திட்டு நின்றன. புள்ளி விபரங்களை மனப்பாடம் செய்து மக்களைத் தூண்டிவிடும் உணர்வு பூர்வமான பேச்சைப் பேசுவதில் வல்லவர். பேசிவிட்டு மேடையால் இறங்கி வந்தவரை கைகொடுத்து, “அண்ண! நல்ல பேச்சு. ஆட்சியாளருக்குச் சரியான சவுக்கடி’ எனப்புகழ்ந்தார்கள். வீடுவரைக் காரில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர்.
மாலையும் கையுமாக வந்தவரை மனைவி பார்த்த பார்வையும் “உங்களுக்கு ஏனிந்தவேலை”?என்ற கமலத்தின் வரவேற்பும் கூனிக்குறுக வைத்துவிட்டது. ஆனந்தர் வழமையான அந்தச் சிரிப்பை ஓடவிட்டு அதனைக் கொடுப்புக்குள் அடக்கிக் கொண்டார். எந்தக் கைதேர்ந்த வீரனாக இருந்தாலும் அவன் தனது மனைவிக்குக் கட்டுப்பட்டவனாகவே இருப்பான். என்பது ஆனந்தரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். “அரசியல் கூட்டங்களுக்குப் போகவேணாம் என்று எத்தனை தடைவ சொல்லியிருக்கிறன். நாளைக்கு ஏதேச்சும் நடக்கக்கூடாதது நடந்தால் நானும் என்ர பிள்ளையளும் நடுரோட்டிலதான் நிக்கவேணும்.” அவளின் தொணதொணப்பை அவரால் பொறுக்கமுடியவில்லை. கமலம்! விசயம்புரியாமல் கதைக்காத. என்னை நாலுபேர் நம்பவேணும். நானும் இந்தக் கூட்டங்களில் பங்குபற்றினதில என்ன குற்றம் கண்டனி.” சற்றுக் கடுகடுத்த குரலில் பொரிந்து தள்ளினார்.
“இது அரசியல் கூட்டமப்பா. தரப்படுத்தல், அது, இது என்டு பேசி, ஏன் வீண்பிரச்சினையை விலைக்கு வாங்குறியள்?”. கமலம் மேலும் மேலும் தொணதொணத்துக் கொண்டிருந்தாள். இவளோட பேசிப்பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டு பேச்சை மாற்றினார். “என்ர மனதில உள்ள கனவை இவள் எப்ப புரியப் போகிறாள். ஒருநாளைக்குப் புரியத்தானே வேணும். அப்ப இந்த ஆனந்தர் ஆர் என்பது புரியும்”.; மனதினுள் நினைந்தவாறே வேலைகளில் இடுபட்டார்.
ஆனந்தரின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கற்றார்கள். அவர்களால் மிகத்திறமையான பிள்ளைகளுடன் போட்டி போடமுடியாது போய்விட்டது. தனது பிள்ளைகளின் தரத்தை அவர் எடைபோட்டிருந்தார். இதற்கு மாற்றுவழியைத் தேடினார். யாழ்ப்பாணத்து வீட்டை வாடகைக்கு விடவும், குடும்பத்தை வன்னியில் தான் வேலை செய்யுமிடத்துக்கு அழைத்துச் செல்வதும், பிள்ளைகளை வன்னியில் உள்ள பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதும் என்றும் முடிவெடுத்து விட்டார். இது பலநாட்களின் ஆலோசனையின் பின் எடுக்கப்பட்ட முடிவாகும்.
மாலைப் பொழுது ஒர் இங்கிதமானதுதான். பலர் கூடிப்பேசவும், உறவு கொண்டாடவும், மனம் விட்டுப் பழையனவற்றை நினைவு கூரவும், அதில் மகிழ்ந்து திளைக்கவும் ஏற்றதுதான் இந்த மாலைப் பொழுது. மெல்லிய இளங்காற்றுப் பனைகளை உசுப்பிக் கூத்துக்காட்டியது. அந்த உசுப்பில் உயர்ந்த பனைகள் குளிர்ந்து ஓலைகளை உரச, அந்த உரசலில் எழுமோசை நாதமாகக் கலந்து இன்பத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அந்தக் கோயில் மணியோசை பூசை முடிந்ததும் ஓய்வு கொண்டது. கோயிலுக்குவந்து பூசை முடிந்ததும் குழந்தைகள் முதல் முதியோர் வரை வீடுகளுக்குச் சென்று கொண்டிரந்தனர். ஆனந்தரின் கூட்டம் கோயில் வெளிவீதியில் அமர்ந்து கொண்டது. கும்பல் கும்பலாக இளைஞர்கள் கூட்டமும் முதியோர் கூட்டமுமாக அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.
அண்ணே! ..நீங்க வன்னிக்குப் போறியளாமே..மெய்யே..? அந்த இளைஞன் கந்தசாமி கதையோட கதையாகக் கேட்டான். “ஆர் சொன்னது”? “இஞ்ச எல்லாரும் கதைக்கின.” தாங்க முடிவெடுக்கமுதல் செய்தி பரவிவிட்டதை உணர்ந்தார். “ இன்னும் சரியான முடிவு எடுக்கல்ல … தை பிறக்கத்தான் ஒரு முடிவுக்கு வரவேணும். யோசிப்பம். என்ன தம்பி செய்யிறது? உத்தியோகம் பார்க்கிற இடத்தில இருந்து மூன்று மைலுக்குள் இருக்கவேண்டும் என்று சட்டமாம். சொல்லிப்போட்டாங்கள். அதோட என்ர உத்தயோகம் எழரை மணிக்குத் தொடங்கிவிடும். அதுதான் இந்த முடிவு.” மெதுவாக இழுத்து இழுத்துக் கூறிக்கொண்டிருந்தார்.“அண்ணே! ..நீங்க ..அங்க போனால் எங்களுக்குப் புத்தி சொல்லி வழிகாட்ட ஆர் இருக்கினம்.? அண்டைக்கு எங்கட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கூட்டம் உங்களாலதானே வெற்றி பெற்றது.” கலக்கத்தோடு கந்தமசாமி கூறினான். ஆனந்தருக்கு மனதுக்குள் மத்தாப்பு வெடித்து மெய்சிலிர்க்க வைத்தது.
“தம்பிமார்! நான் அங்க போனாலும் அடிக்கடி வருவன்தானே. ஏன் கவலைப் படுறியள்”. ஆனந்தர் அவர்களைத் தேற்ற முயன்றார்.“குடும்பமும் அங்க போறதால உங்களால வரமுடியுமா என்பது சந்தேகம்தான்”;. கந்தசாமி தனது சந்தேகத்தை முன்வைத்தான்.“அப்படி நினைக்கக் கூடாது தம்பி” “ அண்ணே! வன்னியில வேலைசெய்யிறவை எல்லாரும் இங்க யாழ்ப்பாணத்தில் இருந்துதானே ஒவ்வொரு நாளும் போய் வருகினம்” ஒரு போடு போட்டான் சந்திரன். “அண்ணே! காலையில கோச்சியில போய்…பின்னேரக் கோச்சியில அரசாங்க உத்தியோகத்தர்மார் வந்துவிடுவினம். இவ்வளவு நாளும் நீங்களும் அப்படித்தானே போய்வந்தீங்கள். இப்ப அதையேன் மாத்துறீங்கள்.” ஆனந்தரின் மனதை மாற்ற கணேசன் அதிரடி வழிகளைப் பயன்படுத்தினான். எப்படியாவது ஆனந்தரின் மாற்றத்தைத் தடுத்துவிட வேண்;டும் என்ற நோக்கத்தோடு கூறிக்கொண்டிருந்தான்.
ஆனந்தர் தனது பயண அனுபவங்களை நினைவில் கொண்டார். அதிகாலையில் ஐந்து மணிக்கு ‘இன்ரசிற்றியில்’ எறினால் வன்னியில் எட்டரை மணிக்குக் கந்தோருக்குப் போய் கடமைகளை முடித்து விட்டு மாலை நாலரை மணிக்கு ஏறினால் ஏழுமணிக்கு வீடு. கடந்த பல ஆண்டுகளாக ஆனந்தரின் வாழ்க்கை இது. யாழ்ப்பாணத்தரில் இருந்து வந்து வன்னி மாவட்டத்தில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர் முதல் சிறூழியர் வரை அனைவரும் காலையில் வந்து மாலையில் வீடு போய்வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
ஆனந்தர் இப்போது தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டார். அவரின் அபார மூளைக்குச் சோதனை வந்து விட்டது. உடனே கதையை திசைதிருப்பி விட்டார்.“ தம்பி..கணேசன்.. நாங்க இப்படியே இருக்கேலா…இங்கேயும்..அங்கேயும் தரப்படுத்தலுக்கு எதிராகக் குரல் குடுக்கவேணும். தரப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விடவேணும். அங்கயும் இதற்காக ஆரும் இல்ல. வன்னியிலும் தொடங்கப் போறன்….ஓம். அதுதான் இப்ப என்ர மூளையப் போட்டுக் குழப்புது. உங்களுக்குச் சொன்னாலென்ன? உண்மையான காரணமும் அதுதான்”. சாதனை புரியும் வீரனைப் பொல் நிமிர்ந்திருந்தார்.
“நான் வன்னிக்குப் போனதும் ..உங்களையும் கூப்பிடுவன். ..நாங்கள் சேர்ந்து போராட வேணும். இங்கும். அங்கும். எங்கும் போராட வேணும். இதற்கெல்லாம் அங்க ஆர் இருக்கினம். நாங்கதானே பார்க்கவேணும்”;. ஆனந்தரின் சாணக்கியப் பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களைச் சாந்தப்படுத்தியது. அவர்கள் அமைதியானார்கள். தாங்களும் வன்னிப்பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்திப் பிரபலமடையலாம் எனக் கனவுகாணத் தலைப்பட்டனர். ஒருவாறு அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.
வன்னியில் தனது காணியில் ஏற்கனவே ஒரு வீட்டை அமைத்து விட்டார். நல்ல பாடசாலைகளாகப் பார்த்துப் பிள்ளைகளுக்கு அனுமதியும் பெற்றுவிட்டார். வன்னி மக்களைப் பற்றி ஆனந்தர் நன்றாகவே அறிந்திருந்தார். அவர்களுக்குக் கல்வியில் நாட்டமில்லை. குளம் தொட்டு வளம் பெருக்கும் பெருங்குடி மக்கள். தண்ணீர் நிறைந்த குளங்களும். பரந்த வளமான நிலமும், நிறையவே உண்டு. நெல். தானியச் செய்கையிலும் ஈடுபட்ட மக்களுக்குக் கல்வி இரண்டாம்பட்சமாகவே இருந்தது. மாவட்டக் கோட்டாமுறை வந்தது தனக்குச் சாதகமாகவே இருப்பதை எண்ணிச் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார். கமலத்துக்கு வன்னிக்கு வரவே விருப்பமில்லை. அவளைச் சமாதானப் படுத்தி ஒருவாறு குடும்ப சகிதம் வந்து விட்டார். பிள்ளைகளை நல்ல பாடசாலைகளில் சேர்த்தும் விட்டார்.
காணி நிறையப் பயிர் செய்தார். பசுக்கள் பாலைக் கொடுத்தன. ‘என்ன இல்லை இந்த வன்னிவளநாட்டில்’ என்று அடிக்கடி கமலத்திடம் சொல்லிக் கொள்வார். ஆனந்தர் வன்னிக்கு வந்து சில வருடங்கள் உருண்டோடி விட்டன.
ஆனந்தர் வெற்றிக் களிப்போடு வீட்டினுள் நுழைந்தார். வரும்போதே “கமலம்…இஞ்ச வா.” பெரிய ஆர்ப்பாட்டமான உரத்த சத்தத்துடன்தான் வந்தார். வழமையாக வெளியில் போய்வந்தால் உடனே ஒருகோப்பைத் தேநீர் கொடுத்தாக வேண்டும். ஆனந்தரின் குரல் கேட்டதும் தேநீரோடுதான் கமலம் வந்தாள்.
ஆனந்தரின் துள்ளலைக் கண்டு கமலம் அதிர்ந்து போனாள். அவளுக்கு ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியம். “வெளியில போகும்போது அமவாசை முகத்துடன் கடுகடுத்துத்தான் போனவர், இப்ப இப்படித் துள்ளுறார். இன்டைக்கு இந்தாளுக்கு என்ன வந்தி;ற்று. ஒருநாளும் இவ்வளவு சந்தோசமாய் இந்த மனிசன் இருக்கல்ல. அதிசயமாக்கிடக்கு”. மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். “ இந்தாங்க தேநீர். என்னப்பா இண்டைக்கு உங்களுக்கு” தேநீரை நீட்டியவாறே மனைவி கமலம் கேட்டாள். “இஞ்ச தா அதை”. அவர் பெரிய அட்டகாசமாய் கதிரையில் கால்மேல் கால்போட்டு இருந்து தேநீரை உறிஞ்சினார். ஒரு புன்னகையை எறிந்து “கமலம் என்னை என்னென்டு நினைச்ச நீ. உன்ர சொல்லயும். அந்தப் பொடியளின்ர சொல்லையும் கேட்டு நான் இங்க வராமல் இருந்தால் என்ன நடந்திருக்கும். ஆனந்தர் ஒரு புதிரை உதிர்த்துவிட்டு தேநீரை வாயில் வைத்து இன்னொரு முடரை உள்ளிழுத்து விழுங்கினார். “தேத்தண்ணி நல்லாத்தான் இருக்கு. பத்தியமாயும் இருக்கு”. சிரிப்போடு சொன்னார்.
“என்ன விஷேசம் என்று சொல்லுங்கவன். சொன்னாத்தானே தெரியும்”. கமலம் துருதுருத்தாள். “இன்டைக்கு அட்வான்ஸ் லெவல் சோதின முடிவு வந்திருக்கு தெரியுமாஃ அதுதான் பாத்திட்டு வாறன். மகளும் பாஸ்பண்ணிட்டாள்”. இறக்கி வைத்தார்.“என்னப்பா றிசல்ட்”“ நாலு எஸ்தான்”கமலம் அதிர்ந்து போய்விட்டாள். “நாலு ‘எஸ்’ காணுமே. இவளப் படி படியென்டு படிக்கச் சொன்னனான். வீட்டில கிடக்கிற வேலையள நான் ஒருத்தியாத் தனியக்கிடந்து செத்து இவளப் படிக்க வைச்சால் அவள் நாலு ‘எஸ்’ எடுத்திருக்கிறாள். நாலு ‘எஸ்’ என்னத்துக்குக் காணும். வாசிற்றிக்குப் போறதுக்கு இது காணுமே.? அவன் மூத்தவன் நாம யாழ்ப்பணத்தில் இருக்கேக்க நாலு ‘சியும்’ எடுத்தே வாசிற்றிக்குப் போகல்ல. இவள் நாலு ‘எஸ்’; எடுத்திற்று எப்படி வாசிற்றிக்குப் போப்போறாள்? வீட்டில ஒரு வேலையும் செய்யிறதில்ல. ரியூசனுக்கும் போறவள். இவள என்ன செய்யிறது. பழையபடி யாழ்ப்பாணத்துக்கு எங்கட வீட்ட போவமம்பா”. கமலம் ஒப்பாரி வைத்தாள்.
“இஞ்ச நிப்பாட்டும் உம்முடைய தொளவாரத்த. உமக்கு என்ன தெரியுமென்று கதைக்கிறீர்;? மாவட்டக் கோட்டா முறை வந்ததால நமக்கு எவ்வளவு நன்மை தெரியுமா? இஞ்ச கொஞ்சம் கேள். அவளுக்கு நாலு ‘எஸ்’ போதும். எல்லாப் பாடசாலைக்ளுக்கும் போய்த்தான் வாறன். இந்த மாவட்டத்தில அஞ்சிபேருக்கு மெடிசின் கிடைக்கும். இந்த மாவட்டத்தில என்ர பிள்ளைக்குத்தான் மூன்றாமிடம். யாழ்ப்பாணத்தில இது கிடைச்சிருக்குமே? இந்த ஆனந்தன்; சரியான நேரத்தில சரியான முடிவெடுப்பான். ஏன் பயப்பிடுறாய். என்ர மகள் டாக்குத்தர்தான்.” சொல்லிப்போட்டு வெற்றிக் களிப்போடு துள்ளி ஆடினார். அவளுக்கும் சந்தோசம்தான். ஆனாலும் அது உண்மையாக இருக்கவேண்டுமே என்று மனம் அடித்துக் கொண்டது.“உண்மையே அப்பா. எனக்கென்ன தெரியும்”? கமலம் ஆனந்தரை பார்த்தபடியே சிலையாய் நின்றாள்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP