Friday, January 28, 2011

சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்
வானம்பாடியும் கரிக்குருவியும்
கிழக்கில் சூரியனின் ஒளிக்கீற்று எட்டிப்பார்க்கும் வேளை. வானில் வர்ண ஜாலங்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தன. பசுந்தரையில் பயிரின் ஆட்டம். பனித்துளிகளின் மேல் ஒளிக்கதிர் பரவி அழகூட்டியது. இன்னிசையைப் பரவ விட்டபடி கரிக்குருவி குதூகலித்தது. அதன் கருமை உடலில் வெள்ளைக் கோடுகள். அடிவயிற்றுப் பக்கம் வால்வரை வெண்மை பரவியிருந்தது. நிமேசிக்கா அதன் அழகில் தன்னை மறந்திருந்தாள். “அக்கா கரிக்குருவியின் குரல் என்ன இனிமை. அதன் இசையைக் கவனித்தாயா? இந்தக் கரிக்குருவிக்கு சங்கீதத்தை யார் சொல்லிக் கொடுத்தார்கள்.”? சுலக்சிக்கா ரசனையோடு கேட்டாள். கரிக்குருவி வீட்டின் முற்றத்தில் உள்ள வேப்பை மரத்தின் உச்சியில் இருந்து பாடிக் கொண்டிருந்தது.
“ருவீற் ரூ… ருவீற்.. ருவீற் ரூ… ருவிற். ருவிற்”. விட்டு விட்டுப் பாடிய கரிக்குருவியின் ஒலிக்கேற்ப சொற்கட்டைச் சேர்த்தாள். “என்ன இராகத்தில் பாடுது. சா….. சங்கீதம் தெரிந்திருக்க வேண்டு;ம். ‘நமது மனதை இசைய வைப்பதுதான் இசை’. அனுஜா ரீச்சர் சொன்னது நினைவுக்கு வந்தது. “சுலக்சி … அங்கே பார்…” நிமேசிக்கா கையை நீட்டிக் காட்டினாள். இன்னுமொரு கரிக்குருவி அதேபோல் முருங்கைமர உச்சியில் இருந்து பாடிக் கொண்டிருந்தது.“ருவீற் ரூ…. ருவீற் ரூ.. ருவீற் - ரூ ரூ… ருவிற் ரூ…. ருவிற்”. ருவீற் ரூ…. ருவீற். ரூ. ருவீற் - ரூ… ரூ… ருவிற் ரூ…. ருவிற்”.
காது கொடுத்துக் கேட்டாள். அந்தக் குருவியின் இசை வித்தியாசமானதாக இருந்தது. குருவிகள் என்ன சொல்லிப் பாடுகின்றன?
‘வானம் வெளுத்து வருது – தெரியும் வண்ணக் கோலம் அழகு கானம் பாடி மகிழ்வோம் - அதில் காணும் சுகத்தில் வாழ்வோம்’
அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. ஒரு குருவி பாடி முடிந்ததும் சற்று அமைதி நிலவும். ஒரு இடைவெளி விட்டு மற்றக் குருவி பாடும்.
இடையில் குயிலின் கூவல் குழப்பியது. “கூஊ. கூ.ஊ... இசையே – சுகம் கூவிப் பாடி மகிழ்வோம். ஆஹா ஹா ஹா அழகு – எங்கும் அழகு வீசிக் கிடக்கு”
குயில் கூவலோடு அது பறந்து விட்டது.
மீண்டும் கரிக்குருவிகளின் பாடல் தொடங்கியது. பொழுது புலர்ந்து மரங்களின் நிழலை நீளமாகக் காட்டியது. தூரத்தே உயர்ந்த வேம்பு காற்றில் ஆடித் தனியே நின்றது. அதிலிருந்து புறப்பட்ட துப்பாக்கிக் குண்டுபோல் வானம்பாடி வானில் பறந்து வட்டமடித்தது. மீண்டும் மரக்கிளையில் போயிருந்து பாடியது.
அதன் குரல் வளம் இனிமையானது. உற்றுக் கேட்டார்கள். “சுலக்சி.. கவனமாகக் கேள். அந்த மெட்டுக்குப் பாடல் வரும். வானம்பாடி எப்படிப் பாடுது. அதைப்போல் ஒலியுடன் நீ மெட்டுப் போடு நான் பாடலைச் சொல்லுறன்”. சுலக்சிகா மெட்டைத் தொடங்கினாள்.
‘டியூடி… டியூடி… டியூடி - டிட். டிய+டி… டியூடி… ட்டிடி…. டியூடி… டியூடி… டியூடி - டிட். டிய+டி… டியூடி… ட்டிடி….”
“இப்படித்தான் எனக்கு விளங்கியது. சரி நீ பாடலைச் சொல்” சிரிப்போடு நின்றாள். நிமேசிகா பாடினாள்.
“காலை பறந்து வானில் - இளம்காற்றில் சுற்றி வந்தால்சோலை அழகு சொட்டும் - எங்கள்சோம்பல் பறந்து போகும்”
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாடலைக் கேட்டதும் வானம்பாடியின் குரல் இன்னும் இனித்தது. இருவரும் சிரித்துக் கொண்டார்கள். கரிக்குருவி காது கொடுத்துக் கேட்டது. “பறவைகளின் மொழி தெரிந்தால் எவ்வளவு விசயங்களை அறியலாம். நாமும் பறவைகளாகப் பிறந்திருக்கலாம். வானத்தில் சிறகடித்துப் பறந்து பாடி மகிழலாம். மலையின் சிகரங்களைப் பார்க்கலாம். மலையருவிகளில் குளிக்கலாம். பசுஞ்சோலைகளில் இருந்து இசைபாடலாம். நீலக்கடல்மேல் பறந்து ரசிக்கலாம்”. நிமேசிக்கா மனதில் நினைத்துக் கொண்டாள்.
“அக்கா நீ நினைப்பதைத் தான் நானும் நினைக்கிறேன். பறவைகளாய் நாம் பிறந்திருக்கலாம். என்ன”? நிமேசிக்கா சுலக்சிகாவை அதிசயித்தோடு பார்த்தாள்.“ருவீற் ரூ…ரூ..ரூ. ருவீற்.. ருவீற் ரூ…ரூ ரூ…ருவிற். ருவிற்”.பாடிய கரிக்குருவி உற்றுக் கேட்டது. இரண்டு குருவிகளும் வானம்பாடி இருந்த மரத்தை நாடிப் பறந்தன. அந்த மரத்தில் ஏராளமான வானம்பாடிகள் இருந்து பாடின. ஆண் வானம்பாடிகள் கூடுகட்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பெண்குருவிகள் பார்த்துத் திருத்தங்களைச் செய்தன. சில நிலத்தில் தெத்தித் தெத்திப் பாய்ந்து விளையாடின. கரிக்குருவிக்குச் சந்தோசம். மரத்தின் சூழல் அழகாயிருந்தது.
வானம்பாடிகள் கும்மாளம் கொட்டி மகிழ்ந்தன. வானில் பாடிப்பறந்து வந்தன. பல கரிக்குருவிகளும் வந்து சேர்ந்து
கொண்டன. அந்தப் பெரிய மரத்தில் பல கிளைகள் இருந்தன. குருவிகள் விரும்பிய கிளைகளில் கூடுகளை அமைத்தன. முட்டைகளை இட்டு அடைகாத்தன. குஞ்சுகள் பொரித்துச் சந்தோசமாக வாழ்ந்தன.
“அக்கா பறவைகளைப் போல் ஏன் மனிதர்களும் வாழக்கூடாது? இந்த மரத்தில் எத்தனை வகைக் குருவிகள் வாழுகின்றன.? வேண்டிய கூடுகளை அமைத்துச் சந்தோசமாக இருக்கின்றன. இந்தக் குருவிகளுக்குக் கூடு கட்ட யார் சொல்லிக் கொடுத்தார்கள்.? எப்படிக் கற்றுக் கொண்டன.? மனிதர்கள் மட்டும் ஒரே சண்டை பிடிக்கிறார்களே. ஏன்”;? சிந்தித்தார்கள்.
“இப்ப என்ன நேரம்?. பாடசாலைக்கு நேரமாகிவிட்டது. குளிப்பதற்கு இவ்வளவு நேரமா? கெதியா வாங்க”. அம்மாவின் குரல் அவர்களை அவசரப்படுத்தியது. கடமைகளை முடித்துப் பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். அவர்களது உரையாடலைக் குருவிகள் கேட்டன. தமக்குள் அவை சிரித்துக் கொண்டன. வானம்பாடி கரிக்குருவியைப் பார்த்தது. “நமது வாழ்க்கையின் கஸ்டம் இந்தப் பிள்ளைகளுக்கு எங்கே தெரியப் போகிறது. அவரவர் கஸ்டம் அவரவர்களுக்குத்தான் தெரியும். எங்களுக்கும் நோய் வருவதுண்டு. இளமையும் மூப்பும் உண்டு. பசி பட்டினி வழக்கமாக உள்ளவைதான். எங்கள் கஸ்டத்தையும் துயரங்களையும் இந்தப் பிள்ளைகள் அறிவார்களா? இக்கரைக்கு அக்கரை பச்சைதான்”. கரிக்குருவி சிறகை அலகால் கோதியபடி சொன்னது.
“ஏய் பின்னாலே பார்”. வானம்பாடி எச்சரித்தது. கரிக்குருவியைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகப் பாம்பு சுருண்டது. பாம்பு அதனை வேட்டையாடப் பின் தொடர்ந்தது. கரிக்குருவி உசாராகியது. பறந்து மறுகிளையில் தாவி இருந்தது. குறி தவறிய பாம்பு நிலத்தில் விழுந்தது.
“எந்த நேரமும் உசாராய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எத்தனை ஆபத்துக்கள் காத்திருக்கும்? நமது கவலை நமக்குத்தான் தெரியும். குஞ்சுகளுக்குப் பசிக்கும். இரைதேடப் போகிறேன்”. கரிக்குருவி பறக்கத் தயாரானது. பிள்ளைகளின் சத்தம் கேட்டது. குருவிகள் உற்றுக் கேட்டன. “அம்மா நேற்று ரீச்சர் அடிச்சிப்போட்டா. இங்க பாருங்க”. சுலக்சிகா கையை விரித்து அம்மாவிடம் காட்டினாள். அம்மா சுலக்சிகாவின் கையை விரித்துப் பார்த்தார்.
உள்ளங்கையில் பிரம்படி பதிந்து சிவந்திருந்தது.? “நீ வீட்டு வேலை செய்யவில்லை. ரீச்சர் அடிப்பதில் தப்பில்லை”. அம்மா ரீச்சருக்காகப் பாடினார். ஆனால் தனது பிள்ளையின் கையில் பதிந்திருந்த தழும்பு அம்மாவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. அவரது கண்கள் பனித்தன. கையை மெதுவாகத் தடவி விட்டார்.
குருவிகள் கண்டு கொண்டன. “ரீச்சர்மார் இப்படியும் பிள்ளைகளுக்கு அடிப்பதா? அன்பால் பிள்ளைகளின் உள்ளங்களை வெல்ல வேண்டும். நாங்கள் எங்கள் குஞ்சுகளுக்கு அடிப்பதே இல்லை. அன்பைக் கொட்டி வளர்த்து விடுகிறோம். அவை தங்களாகவே கற்றுக் கொண்டு வாழ்கின்றன. பாவம் இந்தப் பிள்ளைகள்”;. வானம்பாடி வருந்தியது. சுலக்சிகாவும், நிமேசிக்காவும் புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு நடந்தார்கள். அவற்றை அவர்களால் தூக்க முடியவில்லை. முன்னால் குனிந்து வளைந்து சென்றனர்.
ஆக்காண்டி கவலையோடு பார்த்த வண்ணம் இருந்தது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்று அப்போது சொன்னார்கள். இப்போது “ஐந்தில் வளைந்தது ஐம்பதில் நிமிருமா”? என்று இந்த மனிதர்களிடம் கேட்கவேணும் போல் தெரிகிறது. “இந்தப் பிள்ளைகள் இப்பொழுதே புத்தக மூடைகளைச் சுமந்து கூனி நடக்கிறார்கள். என்ன மனிதப் பிறவிகள்”. குருவிகள் கூறியபடி வானத்தில் பறந்தன. பின் தொடர்ந்து குஞ்சுகளும் பறந்தன.
மரமும் கிளியும்
அந்தப் பிரதேசம் மலைப்பாங்கானது. கற்பாறைகள் நிறைந்து கிடந்தன. அவை சிறிய குகைகளைக் கொண்டிருந்தன. அந்தக் குகைகள்தான் பறவைகளின் வாழ்விடங்கள். கூடுவைத்துக் குடும்பமாக வாழ்ந்து வந்தன. ஆண்டாண்டு காலமாக அங்கேதான் வாழ்கின்றன. கிளிகள் களைத்து வந்து கொண்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் நிம்மதியாய் ஓய்வெடுப்பதில் அலாதியான சந்தோசம். பாடிக் கூச்சலிட்டுப் பறந்து வந்தன.
‘டும் டுமீல்…’ பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டன. பறவைகள் கூச்சலடித்துப் பறந்தன. மலைப்பிரதேசத்தை வட்டமிட்டுப் பறந்து திரிந்தன. மீண்டும் அதே சத்தங்கள். மலையடிவாரம் சிதைந்து கிடந்தது.
மலையடிவாரம் அல்லோல கல்லோலப் பட்டது. மனிதர்களின் நடமாட்டம் கூடியது. கற்பாறைகளை இடித்துக் கீழே தள்ளினார்கள். பாரிய வாகனங்களி இரைந்து கொண்டு நினறன.அமைதி குலைந்தது. பறவைகள் நிம்மதியற்று அலைந்தன. மனிதரின் ஆரவாரம் கூடியது. “இன்றைக்கு இங்கே தங்;கேலாது. இருண்டு வருது. பாதுகாப்பான இடத்துக்குப் போவோம். நாளைக்கு வந்து என்ன நடக்குது என்று பார்ப்போம். வாங்க..என்பின்னால்.” கூறிக் கொண்டு பெரிய கிளி பறந்தது. கிளிக்கூட்டம் பின்னால் தொடர்ந்தது. அவற்றின் மனங்களிலே கவலை.
துரத்தே அமைதியாக ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இருகரைகளிலும் மரஞ்செடிகள் செழித்திருந்தன. கரையோரமாக விசாலித்த ஆலமரம் தெரிந்தது. கிளைகள் பரப்பி உயர்ந்து வளர்ந்திருந்தது. மாலை வெளிச்சத்தில் ஆலம்பழங்கள் தெரிந்தன. “இது பொருத்தமான இடம். வாங்க இன்றைக்கு இங்கே தங்கலாம்.” பெரிய கிளி மெதுவாக உச்சங்கிளையில் இறங்கியது. கிளிக் கூட்டம் ஆரவாரித்து இறங்கின. மரத்துக்குச் சந்தோசம். புதிதாக வந்த நண்பர்களை வரவேற்றது.
“என்ன கவலையா? எங்கிருந்து வருகிறீர்கள். களைப்புத் தெரிகிறது. பசியாக இருந்தால் எனது கிளைகளில் பழங்கள் உள்ளன. அதோ குயில் சாப்பிடுகிறது. நீங்களும் சாப்பிடுங்கள். உறங்குவதற்கு அருமையான பொந்துகளும், பெரிய கிளைகளும் இருக்கின்றன. சந்தோசமாயிருங்கள்.” மரம் காற்றில் அசைந்தவாறே கூறியது. கிளிகளுக்குச் சந்தோசம். பெரியகிளி தங்கள் கதையைக் கூறியது. ஆலமரம் கவலைப்பட்டது. “மனிதர்கள் எப்போதும் இப்படித்தான். தங்கள் தேவையை மட்டுந்தான் சிந்திப்பார்கள். இனிமேல் உங்களால் அங்கு போகமுடியாது. இங்கேயே இருந்து விடுங்கள்”. அமைதியாக மரம் கூறியது.
கிளிக்குஞ்சுகள் சண்டையிட்டுக் கொண்டன. “ஏய் …அங்கென்ன சண்டை. எங்கே போனாலும் உங்கள் சண்டை போகாது. அமைதியாக இருங்கள்.” உரத்துக் கட்டளையிட்டது. மனதுள் சலித்துக் கொண்டது.
“வசதியான இடமாகப் பாருங்கள். நன்றாக ஓய்வெடுங்கள். சொந்த இடத்தை இழப்பது சோகம்தான். பிறந்து வாழ்ந்த இடம் யாருக்கும் சொர்க்கம்தான். என்ன செய்வது? மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”. மரம் ஆறுதல் அளித்தது. கிளிகள் வசதியான கிளைகளில் அமர்ந்து கொண்டன. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. தூரத்து மரங்களில் பழங்கள் தெரிந்தன. இரண்டு கிளிகள் தனிமையில் இருந்து கதைத்தன. “அங்கே பார். அந்த மரங்களில் எவ்வளவு பழங்கள்”. காட்டியது. “பழங்கள் அங்குமிங்கும் அசைகின்றன. என்ன விநோதமிது”. கிளி அதிசயித்தது.
“ஐயோ பிள்ளைகள்!. நீங்கள் நினைப்பது போல் அவை பழங்கள் இல்லை. அவை அனைத்தும் வெளவால்கள். இன்னும் கொஞ்ச நேரத்தால் பாருங்கள். ‘கீரடி மாரடி’ என்று எனது கிளைகள் கிடுகிடுக்கும். விடியவிடியக் கூத்துத்தான”;. மரம் விளக்கியது. “விடியவிடியக் கிடுகிடுக்குமா? அப்படியென்றால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா”? கிளிகள் கேட்டன. மரம் சிரித்துக் கொண்டது. “இதிலென்ன தொந்தரவு இருக்கிறது. அதிலேதான் எனக்குச் சுகம் இருக்கிறது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்கின்றன”.
“என்னைப் பாருங்கள். பூமாதேவி நிற்பதற்கு இடம் தந்திருக்கிறது. நிலத்தடியில் கனிப்பொருளை நிறைத் திருக்கிறது. மின்னல் வெட்டிப்படர்வதால் நைதரசன் பூமியினுள் பரவுகிறது. எனது வேர்களினால் கனியநீரினை உறிஞ்சிக் கொள்கிறேன். கனியநீர் எனது உடலில் உள்ள உறுப்புகள் ஊடாக இலைகளுக்குச் செல்கிறது. சூரியன் வானத்தின் வழியாக மழையைத் தருகிறது. சூரிய ஒளியைத் தருகிறது. எனது இலைகளில் ‘பச்சையம்’ இருக்கிறது. பச்சையம் மாப்பொருள் தயாரிக்க உதவுகிறது. இலைகள் சூரிய ஒளியின் உதவியால் மாப்பொருளைத் தயாரித்து அதற்கென உள்ள உறுப்புகள் ஊடாக எனது உடற் பகுதிகளுக்கு அனுப்புகிறது. நிலத்தின் கனியமும் சூரியனின் வெயிலும் எனக்கு சக்தியை தருகின்றன. பருவகாலங்களில் பூத்துக் காய்த்துப் பழங்களை உயிரினங்களுக்கு வழங்குகிறேன்” காற்றில் அசைந்தவாறே மரம் தொடர்ந்தது..
“பழங்கள் உள்ள காலங்களில் பசியாறப் பறவைகள் வரும். மற்றறைய காலங்களில் உயிரினங்களுக்கு உறைவிடத்தை வழங்குகிறேன். மனிதரைத் தவிர எனக்கு தீங்கு எந்த உயிரினங்களும் செய்வதில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்கள். வெளவால்கள் வந்துவிடும்”. ஆலமரம் காற்றில் அசைந்தவாறே கூறிக் கொண்டிருந்தது. “அதோ பாருங்கள் முதலாவது வெளவால் வருகிறது”. கிளிகள் அதிசயத்துடன் பார்த்தன.
பெரிய கிளி பார்த்தது. “உச்சங்கிளைகளில் வெளவால்களின் தொந்தரவு இருக்கும். நீங்கள் அடிமரத்துக் கிளைகளில் நிம்மதியாய் ஓய்வெடுங்கள்”. ஆலமரம் கூறியதும் கிளிகள் இடங்களைத் தேடி ஒதுங்கின.
பெரிய கிளி மரத்தின் கீழ் பார்த்தது. பல விலங்குகள் ஓய்வெடுக்க மரத்தை நாடி வந்து கொண்டிருந்தன.. பறவைகள் ஏராளமாக வந்து தங்கின. வெளவால்கள் பாட்டம் பாட்டமாக வரத்தொடங்கின. உச்சங்கிளைகள் ஆடியசைந்தன. வெளவால்களின் கொண்டாட்டம் தொடங்கி விட்டது. கிளிகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “என்ன மாதிரித் துள்ளுதுகள். இரவில் நிம்மதியாக உறங்கத்தெரியாதா”? தமக்குள் கதைத்துக் கொண்டன. மரம் கிளிகளை எண்ணிச் சிரித்துக் கொண்டது.
“வெளவால்கள் பகலில் ஓய்வெடுத்து உறங்கும். இரவில்தான் அவை உணவு தேடும். மாலை தொடக்கம் காலைவரை உணவுதேடி அலையும். பறக்கும் உயிரினங்களில் வெளவால் மட்டுந்தான் குட்டி போட்டு பால்கொடுக்கும் விலங்கினம். உங்களைப்போல் கால்களை கிளைகளில் ஊன்றியிருந்து உறங்குவதில்லை. அவை தலைகீழாகத்தான் தொங்கி உறங்கும்” ஆலமரம் அதிசயங்களை அறிந்து வைத்திருப்பதைக் கிளிகள் மெச்சின. “தலைகீழாகத் தொங்கினால் உறக்கத்தில் விழுந்துவிடுமே ”? ஆச்சரியத்துடன் ஒரு கிளி கேட்டது. “அதுதான் இல்லை. வெளவால்களின் உடலமைப்பு பறப்பதற்கு ஏற்றவாறு உள்ளது. வெளவாலின் முன்னங்கால்களில் உள்ள விரல்கள் தோலினால் இடைவெளி இல்லாமல் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு உங்கள் சிறகினைப்போல் பறக்க உதவுகின்றன. தோலமைப்பு உடலின் பக்கத்தசையோடு, பின்னங்கால்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்னங்கால்கள் தலைகீழாகத் தொங்குவதற்கு உதவுகிறது.”
“வெளவால்கள் உறங்கும்போதும் தலைகீழாகவா தொங்கும்.? அவை கீழே விழுந்து விடுமே!” ஆச்சரியத்துடன் கிளிகள் கேட்டன.“வெளவால்கள் தலைகீழாகத் தொங்கும். ஆனால் கீழே விழுவதில்லை. அப்படித் தொங்கும்;போது உடலின் எடையினால் பின்புறக் கால்களின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று தனாகவே கோர்த்துக் கொள்ளுகின்றன. விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிக் கொள்ளும். இதனால் சிரமமின்றி உறக்கத்தில் ஈடுபடுகின்றன. சக்தி இழப்பும் இல்லை”. ஆலமரத்தின் அறிவைக் கிளிகள் பாராட்டின.“வெளவால்களினால் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இது தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. வெளவால்களின் கழிவுகளில் நைதரச்கலவை உள்ளது. இது பூமிக்கு உரமாகிறது.” ஆலமரம் கூறிக் கொண்டே சென்றது. கிளிகளுக்கு உறக்கம் வரவில்லை. குகைக்குள் புகுந்து உறங்கிய சுகம் இங்கில்லை. இது புது இடம். வெளவால்கள் போடும் இரைச்சல். ஆலமரத்துக்கு வழமையாக வரும் பறவை விலங்குகள் உறங்கின. இரண்டு கிளிகளும் மெதுவாகக் குசுகுசுத்தன. “இந்த ஆலமரம் எவ்வளவு தியாகத்தைச் செய்கிறது. வெளவால்களும் பூமிக்கும் மனிதருக்கும் உதவுகின்றன. நம்மால் யாருக்கு என்ன லாபம்”? கவலையோடு உரையாடின. “ஏன் வீணாகக் கவலையடைகிறீர்கள். ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிசெய்கின்றன. அது உங்களுக்கு விளங்காது. என்னைப் பாருங்கள். நான் தாவரக்குடும்பத்தின் ஒரு உறுப்பினர். நாங்கள் பகலில் ஒக்சியினை வெளியிட்டுக் காபனீரெக்சைட்டை உட்கொள்கிறேன். உலகில் உயிரினம் வாழ்வதற்கு ஒக்சிசன் அவசியமானது. இரவில் கானீரொட்சைட்டை வெளியிடுகிறோம். தாவரங்கள் அனைத்தும் இதனை மேற்கொள்கின்றன. தாவரங்கள் இல்லையென்றால் உலகம் சூனியமாகிவிடும். உயிரினங்கள் வாழமுடியாது. இரவில் மனிதர்கள் மரங்களின் கீழ் உறங்குவதில்லை. அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். பகலில் மரங்களின் கீழ் களைப்பாறுவார்கள்.” மரம் விளக்கமாகக் கூறியது.“எங்களால் ஒரு பயனும் இல்லை. கிளி கவலையுடன் கூறியது. “ஏன் இல்லை. நீங்கள் உண்பதில்லையா? எவற்றைச் சாப்பிடுகிறீர்கள்.? மரம் விசாரித்தது. “பழங்கள். பூக்கள், தளிர்கள், தானியங்கள்” கிளி அடுக்கிக் கொண்டு போனது. சரி பழங்களைச் சாப்பிட்டு அவற்றின் விதைகளை வீசிவிடுவதில்லையா”? “வீசி விடுகிறோம்.” கிளி சட்டென்று பதிலளித்தது. “நீங்கள் பூக்களில் உள்ள தேனைக் குடிப்பதில்லையா? “குடிக்கிறோம்”. “நீங்கள் உங்களுக்குத் தெரியாமல் தாவரங்களின் பரம்பலுக்கு உதவுகிறீர்கள். பழங்களை உண்டு, விதைகளை வீசுவதால் அவை தூர இடங்களில் விழுந்து முளைவிடுகின்றன. அதனால் தாவரங்கள் பரந்து முளைக்கின்றன. பூக்களில் தேனை நீங்கள் குடிப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கு வழிபிறக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தெரியாது உதவி செய்கிறீர்கள். கவலையை விடுங்கள். உங்களால் தாவரங்கள் பரந்து முளைக்கின்றன. நீங்கள் மகத்தான சேவையைச் செய்கிறீர்கள். இப்போது நிம்மதியாய் உறங்குங்கள”;. மரம் ஆதரவாகச் சொல்லியது. கிளிகளுக்கு ஞானம் பெற்ற உணர்வு. சந்தோசத்தில் குதூகலித்தன. “நீங்கள் உறங்குவதில்லையா”? கிளிகள் வினவின. “நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது உறங்குவேன். நாங்கள் அதிகம் ஒக்சிசனை உற்பத்தி செய்து உலகுக்குக் கொடுக்கிறோம். நாங்கள் ஞானிக்கும் ஞானம் உணர வழிகாட்டுபவர்கள். அரசமரம்தான் புத்தருக்கு ஞானத்துக்கு வழிகாட்டியது. அரசமரத்தின் கீழ் புத்தர் சிலைகளை வைத்து வணங்குகிறார்கள். ஆலமரத்தின் கீழ் விநாயகரை வைத்து வணங்குகிறார்கள். நாங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டே உழைத்து அனைத்து உயிர்களுக்கும் உதவுகிறவர்கள். கூறிக்கொண்டது. கிளிகள் கவனமாகக் கேட்டன.“ஆனால் மனித இனம் மட்டும் இவற்றை உணர்வதில்லை. மரங்களை வெட்டுகிறான். காடுகளை அழிக்கிறான். நாங்கள் இல்லாவிடில் மழையும் இல்லை. ஒக்சிசன் குறைந்துவிடும். உயிரினங்கள் அழிந்து விடும்.;” மரம் மெதுவாக அசைந்து கொண்டு தொட்டிலாட்டியது. அதன் சுகத்தில் கிளிகளும் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தன.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP