Saturday, January 29, 2011

சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்
காகமும் பறவைகளும்
உப்பாறு கிராமம் அழகானது. அமைதியான சிறியதொரு கிராமம். அந்தக் கிராமத்துக்கு அழகூட்டுவது கொட்டியாரக் குடாக்கடலின் கடற்கரைதான். கடற்கரையில் பெரிய அலைகள் இல்லை. மாரிகாலத்தில் அலைகள் சுழன்றடிக்கும். கடல் இரைந்த வண்ணம் இருக்கும். கடற்கரை அண்மித்து வீதியிருந்தது. வீதிக்கு அப்பால் மக்கள் குடியிருந்தார்கள். மீன்பிடிதான் அக்கிராம மக்களினது வாழ்வாதாரம். கரைவலை இழுத்து மீன் பிடிப்பார்கள். இன்பமும் துன்பமும் கடலே கொடுத்தது. உப்பாற்று மக்களுக்கு யாவுமாகி நிற்பது அந்த ஆலமரம்தான். பகல்பொழுதில் மக்கள் ஆலமரத்தின் நிழலில் ஓய்வெடுப்பார்கள். இரவில் பல்லுயிரும் பயன்கொள்ளும் ஒரு சத்திரமாக விளங்கியது. காகங்கள் விசித்திரமான பறவைகள். அவை மனிதரோடு சேர்ந்து வாழும் பண்பைக் கொண்டன. மனிதர் இல்லாத இடங்களில் காகங்களைக் காணமுடியாது. அதிகமாக மீன்பிடிக் கிராமங்களில் மனிதரோடு கலந்து வாழும்.
உப்பாறு மீன்பிடிக் கிராமம். ஆதலால் காகங்களும் வாழ்ந்தன. ஆலமரத்தில் பல்வேறு பறவைகளும் கூடுகள் கட்டி வாழ்ந்தன. எந்த நேரமும் ஆலமரத்தில் ஆரவாரமா யிருக்கும். காலையில் கரைவலையில் வேலை நடக்கும். அப்போது காகங்களுக்கு நிறையவே உணவு கிடைக்கும். பகலில் மனிதர்கள் மரநிழலில் ஒதுங்குவார்கள். பறவைகள் மரத்துக் கிளைகளில் சந்தோசிக்கும். இரவில் வெளவால்களின் திருவிழா.
ஒருநாள் உப்பாறு அல்லோல கல்லோலப் பட்டது. மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கடலில் இருந்து குண்டுகள் சீறிப் பாய்ந்தன. கரையில் விழுந்து வெடித்தன. கிராமம் அதிர்ந்தது. மக்கள் சிதறி ஓடினார்கள். ஆலமரத்தில் குண்டுகள் பாய்ந்தன. கிளைகள் முறிந்து வீழ்ந்தன. பறவைகள் சிதறிப் பறந்தன. பலநாட்கள் செல்லடிகள் தொடர்ந்தன. உப்பாறு வெறிச்சோடிக் கிடந்தது.
நாட்கள்; உருணN;டாடின. கூடுகட்டி வாழ்ந்த ஒரு காகம் திரும்பி வந்தது. வந்தது. ஆலமரக் கிளையில் அமர்ந்தது. ஆலமரத்தைப் பார்த்தது. “எப்படி நலம்? தன்னந்தனியாக நிற்கிறாய். நானும் உயிர்தப்பிப் பிழைத்தேன்உன்னைப் பார்த்துப் போக வந்தேன்.” காகம் நலம் விசாரித்தது.“எனக்கும் கால்கள் அல்லது சிறகுகள் இருந்தால் நானும் ஓடிஒளிந்திருப்பேன். எல்லாத் துயரங்களையும் தாங்கிக்
கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கிறேன்”;. ஆலமரம் அழுதது. காகம் உற்றுக் கேட்டது. எங்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆதரிக்கும் நீயே அழலாமா? உன்னைப் பார்த்துப் பேசத்தானே பறந்து வந்தேன்”;. காகம் தேற்றியது.
“கேட்க மனதுக்குச் சந்தோசமாக இருக்கிறது”. நான் எப்படியோ உயிர் வாழ்வேன். எனது தாங்கும் வேர்கள் இருக்கின்றன. அவை என்னைத் தாங்கி நிமிர்த்தி விடும். அடி வேர்கள் பூமித்தாயின் கனியநீரை உறிஞ்சித்தரும். இலைகள் சுவாசித்து உணவைத் தயாரிக்கும். நான் நீண்ட காலம் உயிர்வாழ்வேன். ஆனால் உன்னால் முடியாது. உனது உடலில் இருந்து ஒரு பகுதி சிதைந்தாலும் உயிர் வாழ்வது நிச்சயமில்லை. நீ எங்காவது ஓடத்தான் வேண்டும்.” ஆலமரம் அசைந்தவாறே விளக்கியது. காகம் ஓரு முறை ஆலமரத்தைப் பார்த்தது. இலைகள் உடைந்த கிளைகளை உதிர்த்து விட்டுப் புதிய தளிர்களைப் பரவ விட்டிருந்தது. காகத்துக்குச் சந்தோசம்.
“மனிதர் செய்யும் கொடுமைக்கு நாமெல்லாம் ஆளாகிறோம். இந்த மனிதர் ஏனிப்படிச் செய்கிறார்கள”;? மீண்டும் ஆலமரம் தனது ஆதங்கத்தை வெளியிட்டது. காகத்துக்குக் கவலை. பேசாதிருந்தது. சடுதியாக எங்கிருந்தோ ஒரு வெடிச்சத்தம். காகம் கதிகலங்கிப் பதறியது. “சுணங்காமல் நீ ஓடு. நான் எப்படியும் உயிர்வாழ்ந்து கொள்வேன். உனது உயிர் போனால் மீண்டும் வராது. ஓடு” ஆலமரம் காகத்தை விரட்டியது. காகம் விரைந்து பறந்தது.
கடலைக் கடந்து பறந்தது. சனங்கள் நெருங்கி வாழும் நகரை அடைந்தது. சுற்றிச் சுற்றிப் பறந்து பார்த்தது. புறாக்கூடுகள் போல் எங்கும் சிமெந்துக் கட்டிடங்கள். சாலையோரங்களில் ஓரிரு சடைத்த வாகைமரங்கள் தெரிந்தன. மரங்களில் பல்வகைப் பறவைகள் வாழ்ந்தன. பறவைகள் தங்குவதற்குப் போதிய இடமில்லை. புறாக்கள் மனிதரோடு ஐக்கியமாகி விட்டன. அவை வீட்டுக் கூரைகளுக்குள் குடியிருந்தன. நகரத்தில் உள்ள காகங்கள் மனிதரைப் போல் வாழ்க்கையை மாற்றிக் கொண்டன. உப்பாற்றுக் காகம் களைப்போடு இறங்கியது. மரக்கிளையில் வந்திருந்தது. அதனை மற்றக் காகங்கள் கண்டு கொண்டன. “என்ன புதியமுகமாயிருக்குது”? இரண்டு காகங்கள் பேசிக் கொண்டன.
“பாவமாய்க்கிடக்குது, எங்களிட்ட இருக்கிற மேலதிகப் பாண்துண்டைக் கொடுப்பம்.” இரண்டும் தீர்மானித்தன. “என்ன நண்பரே! ஊருக்குப் புதுசா. பசிபோல் தெரிகிறது. இப்படி வாங்க. இந்தப் பாண்துண்டைச் சாப்பிடுங்க”. கொடுத்தன. உப்பாற்றுக் காகத்துக்குச் சந்தோசம். காகங்களுக்குக் கிட்டப்போய் பாண்துண்டை எடுத்துக் கொண்டது. நன்றிப் பெருக்குடன் “காகா” என்றது. பசியுடன் பாண்துண்டைக் கொத்தியது. எவ்வளவு கொத்தினாலும் அத்துண்டிலிருந்து ஒரு துண்டுதானும் வரவில்லை. இரண்டு காகங்களையும் பார்த்தது. அவையும் கொத்திக் கொத்தி அலுத்துக் கொண்டன. சில காகங்கள் தண்ணீர் இல்லாத தொட்டியில் குந்தியிருந்தன.
ஏதோ முடிவோடு “ பாண் துண்டையும் தூக்கிக் கொண்டு எங்கள் பின்னால் வா” கட்டளையிட்டுப் பறந்தன. சொன்னபடி காகம் பாண் துண்டைக் கௌவிக் கொண்டு பறந்தது. ஒரு வீட்டுப்பின்புறமாக தண்ணீர் நிறைந்த தொட்டி இருந்தது. தொட்டியடியில் யாரும் இல்லை. காகங்கள் தொட்டியில் உள்ள தண்ணீரில் பாணைத் தோய்த்து நனைத்தன. புதுக்காகமும் அவ்வாறே செய்தது.
வீட்டுக்காரர் சத்தமிட்டவாறே வந்தார். பாணைத் தூக்கிக் கொண்டு பறந்தன. வீட்டுக் கூரையில் வைத்துக் கொத்தின. பாண்துண்டு அலகில் நிறைந்தது. “பட்டணத்துக் காகங்களுக்கு நல்ல மூளையிருக்கு”. உப்பாற்றுக் காகம் மனதில் நினைந்து கொண்டு உண்டது. பசியடங்கியது. அத்துடன் தாகமும் சற்றுக் குறைந்தது. புதுக் காகத்துக்குப் புதுமையாக இருந்தது. பட்டணத்துக் காகங்கள் புத்தி சாலிகள்தான். மனதில் பெருமை கொண்டது.
“எனக்குத் தாகமாய் இருக்கிறது. குழாயடிக்குப் போவம். வா” கூறிக்கொண்டு பறந்தன. உப்பாற்றுக் காகமும் சென்றது. குழாய் மூடியிருந்தது. “எங்கே தண்ணீர்”? புதுக்காகம் பரபரத்தது. “பொறு தண்ணீர் வரும்”;. சொல்லியவாறு குழாயில் இருந்தது. தனது அலகால் மூடியைத் திருகியது. தண்ணீர் சொட்டுச் சொட்டாய் வழிந்தது. அலகைக் குழாயுள் திணித்துத் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தன. தண்ணீர் விழுமிடத்தில் குழியிருந்தது. அதில் தண்ணீர் தேங்கிநின்றது. “குளிப்பமா? வாங்க” கேட்டவாறே காகங்கள் குளிக்கத் தொடங்கின். உப்பாற்றுக் காகமும் குளித்தது. உடம்புக்குச் சுகமாக இருந்தது. அலகினால் இறக்கைகளைக் கோதிவிட்டன.
அந்த நகரில் பெரியதொரு வெளியிருந்தது. மாலையானதும் நகரத்துப் பிள்ளைகளும் பெரியவர்களும் கூடுவார்கள். பிள்ளைகள் கூடி விளையாடுவார்கள். பெரியவர்கள் ஊர்ப் புதினங்களைக் கதைப்பார்கள். கடலை, கச்சான் முறுக்கு விற்பனை நடக்கும். சிறுவர்கள் கடலைகளை வீசுவார்கள். காகங்கள் பறந்து பறந்து பொறுக்கி உண்ணும். காகநடை பயின்று பார்க்கும். இரைந்து கரையும்.
காகங்கள் தரையிலும், மின்சாரக் கம்பிகளிலும் இருக்கும். பலகாகங்களின் கூடுகள் மின்சாரக் கம்பங்களில் இருந்தன. அவை மின்சார வெளிச்சத்திலும் உறங்கின. உப்பாற்றுக் காகத்துக்குப் புதினமாக இருந்தது. இருள் பரவியிருந்தது. நகரம் பகலாக ஜொலித்தது. “வா, அந்த மரத்தில் இரவைக் கழிப்போம்.” காகங்கள் அழைத்துப் பறந்தன. பின்னால் உப்பாற்றுக் காகம் சென்றது. வீதியோரத்தில் நின்ற வாகைமரத்தை அடைந்தன.
வாகை மரம் சடைத்து நிழல் பரப்பி நின்றது. ஒரு கிளையில் காகங்கள் அமர்ந்தன. மரக்கிளைகளில் பறவைகளின் கூடுகள். கூடுகளில் குஞ்சுகளின் கும்மாளம். மரத்தின் பெரிய கிளைகளில் பொந்துகள் இருந்தன. பொந்துகள் கிளிகளின் மாளிகைகள். ஒருபுறம் மைனாக்களின் ஆரவாரம். மறுபுறம் கிளிகளின் ஆரவாரம். இடையிடையே குயில்களின் குக்கூக்கு.
கடலில் இருந்து காற்று வீசியது. வாகைமரம் காற்றில் அசைந்தவாறு தாலாட்டியது. இருள்பரவி ஊரெல்லாம் அடங்கி விட்டது. மரத்தில் உள்ள உயிரினங்களும் அமைதிகாத்தன. படீரென ஒரு சத்தம் கேட்டது. உப்பாற்றுக்காகம் பயத்துடன் பறந்தது. மற்றக்காகங்கள் விழித்துக் கொண்டன. “ஏய்…எங்கே போகிறாய்…வா..வா” சத்தமிட்டுப் பின்னால் துரத்தி வழிமறித்தன.. “நில்லு..நில்லு ..சொல்வதைக் கேள்” தடுத்தன. “சுடுறாங்க .. வாங்க ஓடித்தப்புவம்” உப்பாற்றுக் காகம் பயத்தால் நடுங்கியவாறு அலறியது.
“அது வெடிச்சத்தம் இல்லை. மின்சாரக் கம்பியில வெளவால் மோதியிருக்கு. திரும்பு. வா போவம்”. காகங்கள் கூறின. அமைதியடைந்த காகம் பின்னால் சென்றது. பறவைகளும் விழித்துக் கொண்டன. “அப்படியென்றால் அது வெடிச் சத்தமில்லையா”? நடுங்கியபடியே கேட்டது. “இதுக்கெல்லாம் போய்ப் பயப்பட்டால் வாழலாமா? எங்களுக்குப் பழகிப் போச்சுது. பாவம் வெளவால்தான் மாட்டுப்பட்டிருக்கும்”. காகங்கள் அனுதாபத்துடன் கூறின. வெளவாலின் நிலையை எண்ணிப் பார்த்தன. அவற்றின் மனக்கண்முன் வெளவால் மின்சாரக்கம்பியில் தொங்குவது தெரிந்தது.
“மின்சாரக் கம்பியில போய் மோதினால் சும்மா விடுமா”? கிளிகள் கீச்சிட்டன. “கம்பியில் எப்படி நீங்க இருக்கிறீங்க? உங்களுக்கு மின்சாரம் தாக்காதா”? ஆச்சரியத்துடன் உப்பாற்றுக் காகம் கேட்டது. “ இதுகூடத் தெரியாதா? இவர் எங்க இருந்து வந்தவர்”?
புறாக்கள் புறுபுறுத்தன. “ஒரு கம்பியில் இருந்தால் பயமில்லை. இரண்டு கம்பியிலும் நமது உடல் பட்டால் மின்சாரம் தாக்கும். காலையில் பாருங்கள். வெளவால் மின்சாரக் கம்பியில் தொங்கும். இப்பொழுது உறங்குங்கள்” பறவைகள் அமைதிகாத்தன. உப்பாற்றுக் காகத்துக்கு உறக்கமில்லை.
“என்ன உறக்கம் வரவில்லையா? இருக்கும் வரை சந்தோசமாக இருப்போம்”. உப்பாற்றுக் காகம் சத்தம் வந்த திசையைப் பார்த்தது. ஒரு ஊசாட்டமும் இல்லை. அமைதியாக இருந்தது. மீண்டும் அதே சத்தம். “நான்தான் வாகை மரம்” காகம் உசாரானது. மற்றக் காகத்தின் பக்கத்தில் குசுகுசுத்தது. காகங்கள் விழித்துக் கொண்டன. மற்றப் பறவைகளுக்கும் ஆச்சரியம். “துன்பம் எல்லோருக்கும் சொந்தமானது. அது வரும் போகும். உலகமும் மாறிக்கொண்டுதான் இருக்கும். வருவதும் போவதும் வாடிக்கைதான்”. மரம் போதனையில் ஈடுபட்டது.
“என்ன இவ்வளவு காலமும் பேசாதிருந்த மரம் இன்றைக்குப் பேசுகிறது”? பறவைகள் கண்களால் பேசிக் கொண்டன. குஞ்சுகள் வஞ்சகமில்லாதவை. “அம்மா காலையில் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். வீதியை அகலமாக்க வேண்டுமாம். மரம் இடைஞ்சலாக இருக்காம். இந்த மரத்தை வெட்டியகற்ற வேண்டும் என்று கதைத்தார்கள். அதுதான் மரம் தத்துவம் பேசுகிறது. குஞ்சுகள் தெரிவித்தன. செய்தி மரமெங்கும் உள்ள உயிரினங்களுக்குப் பரவியது. யாவும் கவலையில் ஆழ்ந்தன.
“நான் போகும் இடமெல்லாம் இப்படியா? என்னால்தானே இந்த மரத்துக்கும் துயரம் வந்தது. அங்கு ஆலமரம் செத்துக் கொண்டிருக்கிறது. இங்கு இந்த மரம் தத்துவம் பேசுகிறது. இதற்கு என்ன செய்யலாம்.? எப்படித் தடுக்கலாம்.” உப்பாற்றுக்காகம் யோசனையில் ஆழ்ந்தது. பறவைகளின் திருப்பள்ளி எழுச்சி தொடங்கும் நேரம். தூரத்துக் கோழிகள் கூவத்தொடங்கின. பறவைகளும் பாடத்தொடங்கின. வாகை மரத்தில் இருந்த பறவைகள் அமைதிகாத்தன. “நான் எனது கவலையைக் கூறியிருக்கக் கூடாது.” வாகை மரத்துக்குக் கவலை. “பிள்ளைகள் உங்ஙளுக்கு என்ன நடந்து விட்டது? ஏன் சந்தோசமாக இல்லை. ஒருவரும் பாடவில்லை”. மரம் கவலையோடு கூறியது. “எங்களுக்கு எல்லாமாகி இருக்கும் உங்களுக்கு வரவிருக்கும் தீங்கை எண்ணினோம். கவலையோடு இருக்கிறோம். பறவைகள் ஒரே குரலில் கூறின. பிள்ளைகள் மாற்றம் என்பது தேவையானது. மாற்றமாம் வையகம் என்று மனிதர்கள் கூறுவார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு மரம் உங்களுக்கு அடைக்கலம் தரும். கவலையை விடுங்கள். சந்தோசமாய் இருங்கள். மரம் கூறிவிட்டுக் காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
“இந்த மரத்துக்குக் கவலையே இல்லையா? இந்த மனிதரின் நலத்துக்காக மரங்களை வெட்டி வீழ்த்துவதா? மரங்கள்தானே ஒக்சிசனைத் தருவது. அவைதானே மழைக்கும் காரணமாகின்றன. பறவை யினங்களுக்கு உறைவிடத்தை வழங்குகின்றன. வெயிலை வடித்து நிழலைத் தருகின்றன. இதனைத் தடுக்க வேண்டும்.” பறவைகள் ஒரே குரலில் ஒலித்தன. விடிந்து கொண்டு வந்தது. ஒரு காகம் “இன்று சனிக்கிழமை. எல்லாக் காகங்களும் இந்த மரத்தில் கூடவேண்டும். மற்றப் பறவையினங்களும் வரலாம். இன்று சனீஸ்வரனுக்கு உணவு படைத்து நம்மை அழைப்பார்கள். நாம் உண்டால்தான் மனிதர் உண்பார்கள். நாம் அவற்றை உண்ணாது விடுவோம். நடப்பதைப் பார்ப்போம்.” உரத்த குரலில் சத்தமிட்டது.
பறவைகள் அசையாது வாகை மரத்தில் கூடியிருந்தன. செய்தி அனைத்துக் காகங்களுக்கும் பரவியது. எல்லாக் காகங்களும் வாகைமரத்தில் வந்து கூடின. சில காகங்கள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள மஞ்சள் பட்டுத் துணிகளைக் கொண்டு வந்தன. மரத்தின் அடியில் செருகிவட்டன. பூக்களும் குவிந்திருந்தன. மரம் கோயிலாகக் காட்சி தந்தது. மக்கள் சமையலை முடித்து விட்டுக் காகங்களைத் தேடினார்கள். காகங்களைக் காணவில்லை. வாகை மரத்தில் காகங்கள் கூடியிருப்பதை அறிந்தார்கள். படயலை எடுத்துக் கொண்டு வந்தார்கள். படையலைப் படைத்து வாகையைச் சூழ்ந்து நின்றார்கள்.
ஒரு காகமும் கீழிறங்கி வரவில்லை. மக்களுக்கு ஏமாற்றம். “ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது. இந்த மரத்துக்கு யார் பட்டுச் சாத்தினார்கள்? பூக்களை யார் சூட்டினார்கள்.”? கேள்விகள் ஆளுக்காள் கேட்டார்கள். செய்தி சேகரிக்கப் பத்திரிகை நிருபர்கள் கூடிவிட்டார்கள். அவர்கள் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டார்கள்.
வீதியை அகலமாக்குவதற்காக மரத்தை வெட்டியழிக்கும் செய்தி மெல்ல மெல்ல புறப்படத் தொடங்கியது. மக்கள் கூடிவிட்டார்கள். படித்தவர்களும். படியாத பாமரர்களும் மரத்தை வெட்டக் கூடாது என்று வாதிட்டார்கள். அரச திணைக்களங்களத் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள். நகரபிதாவும் வந்தார். கோயிற் தலைவர்களும் வந்து விட்டார்கள். “மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டக்கூடாது. மரத்தின் எதிர்ப்புறமாக வீதியை அகலமாக்குங்கள்”. ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். “அதற்கான வேலையையும் இப்போதே தொடங்குவோம்.” நகரபிதாவும், வீதி அதிகார சபை முகாமையாளரும் தொடங்கி வைத்தார்கள்.
பறவைகள் பாடத்தொடங்கின. காகங்கள் கீழிறங்கி வந்தன. மக்கள் வைத்த படையலை உண்டு மகிழ்ந்தன. “ஒரு மரத்தை இப்பறவைகள் காப்பாற்றி விட்டன”. மக்களும் சந்தோசத்துடன் வீடுகளுக்குச் சென்று தங்கள் கடமைகளில் ஈடுபட்டார்கள். மரம் வழமைபோல் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. “எங்களுக்கு உதவிய மரத்தைக் காப்பாற்றி விட்டோம்”. பறவைகள் சந்தோசத்துடன் பாடிக் கொண்டிருந்தன.
“டொக்…டொக்..” சத்தம் வந்த பக்கம் பறவைகள் பார்த்தன. எங்கிருந்தோ பறந்து வந்த மரங்கொத்தியார் வீடமைத்துக் கொண்டிருந்தார். மரங்கொத்தி, பறவைகளுக்கு வீடமைக்கும் தச்சன். கிளிகளுக்குக் கொண்டாட்டம். தங்களுக்குப் பாதுகாப்பான வீடு கிடைக்கும் என்று கீச்சிட்டன. பலவகைப் பறவைகளுக்கும் அந்த மரம் உறைவிடத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மரம் நன்றியோடு பறவைகளை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கும் நிழலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உப்பாற்றுக் காகம் அந்த மரத்தை உற்று நோக்கியது. எல்லா உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இந்த உலகம் ஒரு சொர்க்கபுரிதான். தனக்கு ஆதரவளித்த ஆலமரத்தை நினைத்துக் கொண்டது. அதனை நோக்கிப் பறந்தது.

சிறுவர் கதை
செண்பகமும் நத்தையும்
சுலக்ஷிகா சாப்பிட அடம்பிடித்தாள். அம்மா சாப்பாட்டை ஊட்டிவிட முயற்சித்தார். எங்கிருந்தோ செண்பகம் பறந்து வந்தது சுலக்ஷிகா அந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கண்கள் பயத்தை ஊட்டின. தாயிடம் நெருங்கி வந்தாள். “அம்மா அது என்ன பறவை?. கண்கள் சிவப்பாக இருக்கு. கொத்துமா”? அந்தப் பிஞ்சு அம்மாவிடம் சொன்னது. அம்மாவுக்கு வாய்ப்பாகியது.
“குழப்படி செய்தால் செண்பகம் வந்து கொத்தும். அதன் கண்களைப் பார். பொல்லாதது. நல்ல பிள்ளையாட்டம் சாப்பிடு. சாப்பிட்டால் செம்பகம் ஒன்றும் செய்யாது. உனது நண்பனாக இருக்கும்.” கூறிக்கொண்டு அம்மா உணவை ஊட்டினாள். சுலக்ஷிகா பறவையைப் பார்த்தவாறே உண்டாள். செண்பகம் அங்குமிங்கும் பாய்ந்து பறந்து திரிந்தது. இடையிடையே “கூம் …கூம்..” என்று சத்தமிட்டது. சங்கு ஊதுவதுபோல் இருந்தது. அதன் சத்தமும் சுலக்ஷிகாவுக்குப் பயத்தை ஊட்டியது. ஆனால் அதனைப் பார்த்தவாறே இருந்தாள்.
செண்பகம் சுலக்சிகாவின் குழப்படியைப் போக்குவதற்கு உதவியது. “செண்பகம்! சுலக்ஷிக்குட்டி சாப்பிட்டிட்டா. இப்ப போய் நாளைக்கும் வா.” அம்மா செண்பகத்தைப் பார்த்துச் சொன்னார். “செம்பகம்! போகவேணாம். என்னோட விளையாட வா. நான் குழப்படி பண்ணமாட்டன்”. சுலக்ஷிகா சத்தமிட்டாள். செண்பகம் எதையோ பார்த்தபடி வேலியில் இருந்தது.
சுலக்ஷிகாவின் கண்கள் ஓணானைக் கண்டுகொண்டன. “அம்மா அதோ..ஓணான்.” சத்தமிட்டாள். செண்பகத்தைக் கண்டதும் ஓணான் ஒளிந்து கொண்டது. அதனைச் செண்பகம் தேடியது. காணாததால் சத்தமிட்டது.
“அம்மா செண்பகம் ஏன் ஓணானைத் தேடுது. அதுவும் குழப்படி செய்ததா”? சுலக்ஷிக்கா கேட்டாள். அம்மாவுக்கு எப்படி விளக்குவது என்று தெரியாமல் தவித்தார். “குழப்படி பண்ணியபடியால்தான் தேடுது. சரி நீ போய் விளையாடு”? அம்மா சுலக்ஷிகாவின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தார். செண்பகம் வேறு பக்கம் தாவியது.
சுலக்ஷிகா ஓணானைக் கண்டு கொண்டாள். “அம்மா அதோ ஓணான். ஓணானின் நிறத்தைப் பாருங்கள். வேலித்தடிபோல நிறம். அப்போது இளஞ்சிவப்பு. எப்படி நிறம் மாறியது?;”;. அவளுக்கு ஆச்சரியம். அப்பா பாடசாலையால் வந்தார். “அப்பா….” சத்தமிட்டவாறு படலைக்கு ஓடினாள். அவளை வாரித்தூக்கி அணைத்தபடி “சுலக்ஷிக்குட்டி சாபிட்டிங்களாடா”?. கேட்டார். “ ஓம் சாப்பிட்டன். அம்மா செம்பகத்தக் கூப்பிட்டவ. செண்பகம் வந்தது. அதுட கண் செக்கச்சிவப்பாக இருந்தது. பயத்தில் சாப்பிட்டன். அப்பா அது கொத்துமாப்பா”? அப்பாவிடம் கேட்டாள். “செண்பகம் கொத்தாது. நமக்குப் பாதுகாப்பாக இருக்கும்.” என்றார். “அம்மா கொத்தும் என்று சொன்னாவே. அங்க பாருங்க. ஓணான். ஏன் தலையை மேலும் கீழும் ஆட்டுது?” சுலக்ஷிகா ஆர்வமாகக் கேட்டாள். “ஓ…அதுவா…. அதுக்கும் பசிக்குந்தானே? சுலக்ஷிக்குட்டி சாப்பாடு தருவாவா என்று எட்டிப் பார்க்குது.” “இந்த அப்பாக்கு ஒண்டுந்தெரியாது. செண்பகத்தக் கண்டு பயந்து எட்டிப் பார்க்குது. செண்பகம் வந்தால் வேலிக்குள்ள மறைந்திடும்.”
அவள் பார்வை செண்பகத்தின் மேல் பதிந்தது. செண்பகம் பறந்து வந்தது. ஓணான் இருக்கும் பக்கம் இருந்தது. உடனே ஓணான் வேலிக்குள் மறைந்து கொண்டது. “அப்பா நான் சொன்னது சரிதானே? ஓணான் மறைஞ்சிட்டுது. செண்பகம் அதைத் தேடுது”. அப்பாவிடம் இருந்து விடுபட்டு அவற்றைப் பார்த்தாள். சின்னப்பிள்ளைகள் அவதானிப்பதை அப்பா வியந்தார்.
“செண்பகம் பூச்சி புழுக்களை உண்ணும். ஓணான், பல்லி, சிறிய பாம்பு வகைகளையும் விடாது. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத பறவை. நத்தைகளைத் தேடியுண்ணும். நன்றாக விரும்பி உண்ணும்”. அப்பா செண்பகத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தார்.
செண்பகம் பறந்து கிணற்றடிக்குச் சென்றது. கிணற்றடியைச் சூழ மரங்கள் நின்றன. பூஞ்செடிகள் செழித்துப் பூத்திருந்தன. அம்மா கச்சான் நாற்றை நட்டிருந்தார். பாத்திகளில் முளைகள் வெளிவந்திருந்தன. தலையில் தலைப்பாகை கட்டியதுபோல் எட்டிப்பார்த்தன. முளைகள் அழகாய் இருந்தன. நேற்றுத்தான் அவற்றைப் பார்த்து ரசித்தார்கள். சுலக்ஷி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள்.
முளைகளை நத்தைகள் நறுக்கி உண்டுவிடும். சில நத்தைகளை சுலக்ஷி கண்டுவிட்டாள். ஊர்ந்து வந்தன “அப்பா நத்தைகளைப் பாருங்கள்”. சத்தமிட்டாள்.. “நத்தைகள் வந்தால் பயிர்களை உண்டுவிடும். என்ன செய்வது? ஒரு இரவுக்குள் பயிர்களை அழித்துவிடும்”. அம்மாவுக்குக் கவலை.
செண்பகம் பறந்து வந்தது. அம்மாக்குச் சந்தோசம். “தோட்டத்தைக் காவல் செய்ய ஆள் வந்திட்டார்”;. அம்மா சத்தமிட்டார். “ஆரம்மா காவலுக்கு வந்திருக்கிறார்”;? சுலக்ஷி கேட்டாள். “அதோ பார். செம்பகம். அது நத்தைகளை விடாது.. நத்தைகள் எல்லாம் மாயமாக மறைஞ்சிடும்.” அம்மா சந்தோசப்பட்டார். செம்பகம் பாத்திகளுக்குள் நுழைந்தது. பறந்து பறந்து திரிந்தது. ஒவ்வொன்றாய் தூக்கிக் கொண்டு சென்றன. நத்தைகள் மாயமாக மறைந்து விட்டன.
“செண்பகம் நத்தையை என்னம்மா செய்யும்?” சுலக்ஷிகா வேடிக்கையாகக் கேட்டாள். “கொண்டுபோய் தனது குஞ்சுகளுக்குக் கொடுக்கும்”. அம்மா விடையளித்தாள்.
“குஞ்சுகள் நத்தையை என்ன செய்யும்.”“எல்லாத்தையும் சாப்பிட்டுவிடும்”. அம்மா நாற்றுக்களைப் பார்த்தவாறே சொன்னார்.“அம்மா! நத்தை ஓட்டுக்குள் மறைந்துவிடுமல்லோ. எப்படி அதைச் சாப்பிடலாம். செண்பகக் குஞ்சகளின் வாய் சின்னன். தொண்டைக்குள் பொறுக்காதா”? அம்மாவுக்கு விளக்கமளிக்க முடியவில்லை. அப்பா அவளை வியந்து கொண்டார்.
“செண்பகம் தனது அலகால் நத்தையைக் கொத்திச் சாப்பிடும். ஓட்டை வீசிவிடும்”;. அம்மாதான் பதில் சொன்னார். “அப்பா செண்பகம் கொத்தும்போது நத்தைக்கு வலிக்காதா”? சுலக்ஷிகா தொடர்ந்தால். வில்லங்கம் இனித்தான் தொடரப்போகிறது. அப்பா கதையை மாற்ற எண்ணினார்.
சுலக்ஷி அங்கே பார். வேலிமூலைக்குச் செண்பகம் போகுது. வாங்க.. பின்னால போய் பார்ப்போம். அவர் நடந்தார். சுலக்ஷி பின்னால் போனாள். வேலிமூலையில் புல்லும் புதருமாக இருந்தது. தூரத்தில் நின்றவாறே கவனித்தார்கள். செண்பகம் புகுந்து சென்றது. எட்டிப்பார்த்தார்கள். ஒரு கூடு தெரிந்தது. அதற்குள் முட்டைகளும் தெரிந்தன.“ஹாய் முட்டை .. அப்பா அங்கே பாருங்க இரண்டு முட்டைகள் தெரியுது. சுலக்ஷிகா சந்தோசத்தில் துள்ளினாள். “இது எங்கட செண்பகம். இது கொத்தாது. அப்பா! இந்த முட்டைகளைச் செண்பகம் என்ன செய்யும்.”? புருவங்களை உயர்த்திக் கேட்டாள். “அடைகாக்கும். கொஞ்சநாட்களில் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கும்.” “அப்பா! நாங்க நத்தையைக் கொடுக்காமல் சோறு கொடுப்போம். சோறு நல்லதுதானே”? அப்பாவுக்குச் சந்தோசம். அவளது மனதில் உதித்த சிந்தனையை திசைதிருப்பி விட்டார். செண்பகம் கெதியாகக் குஞ்சுகளைப் பொரி. நாங்க சோறு தருவோம். என்ன.? அப்பா நாங்க அம்மாட்டப் போவம்.” முன்னால் நடந்தாள். அவள் கண்களில் நத்தைக் கோது பட்டது. அவளுக்கு நத்தைக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டாள். பேசாது நடந்தாள்.
“இனிப்பயமில்லை. ஒரு நத்தையைக் கண்டால் போதும். அந்த இடத்துக்கு தினமும் செண்பகம் வரும். அம்மா கூறிக்கொண்டிருந்தார். “அம்மா நமது வேலி மூலையில் செண்பகம் கூடுவைத்திருக்கு. நாங்க பார்த்தோம். இரண்டு முட்டைகளும் இருக்கு. அது நமது செண்பகம்தான். குதுகலத்துடன் கூறினாள். “நான் சொன்னேன்தானே. தோட்டத்தைக் காவல் செய்ய ஆள் வந்திட்டார் என்று. அவரை எங்கட சுலக்ஷிக்குட்டி கண்டு பிடிச்சிட்டா. சுலக்ஷி கெட்டிக்காரி”;. அம்மா அவளைக் கட்டியணைத்தபடி கூறினார். சுலக்ஷி அப்பாவைப் பார்த்தாள்.“அப்பா! பாவம் நத்தைகள்.” சுலக்ஷி அனுதாபமாகக் கூறினாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மனதுக்குள் எங்கோ வலித்தது.
சிறுவர் கதை
ஆமையும் நத்தையும்
ஆமை குளத்தில் நீந்திவிளையாடியது. ஆறுதலாகக் கரையேறிக் குளக்கட்டுக்கு வந்தது. இளவெயில் இதமாக இருந்தது. உடலில் வெயில்படும்படி தலையை நீட்டியது. உல்லாசமாய் இளம் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. “ஆமையண்ணா! எப்படி இருக்கறீர்கள்.” சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்த ஆமையாரின் முன் நத்தையொன்று நின்றது.
“பொடிப்பயலே! நான் யாரென்று தெரியாமல் நலம் விசாரிக்கிறாயா? பார்த்தால் தெரியவில்லையா? நான் நலமாக இருப்பதை”. ஆமை அகங்காரமாய்ச் சொன்னது.
“ஆமையண்ணா ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பது நாகரீகமான செயல். அதைத்தான் நான் செய்தேன். நீங்கள் என்னை அவமானப்படுத்துவது சரியா”? நத்தை விநயமாகச் சொன்னது. “அதற்கும் ஒரு தராதரம் வேணும்? என்னைப்பற்றி உனக்குத் தரியாதா? இந்த ஊரில உலகத்தில இருக்கிற மனிசரிட்டக் கேட்டுப்பார். அப்ப தெரியும்”. ஆமை நத்தையைப்
பொருட்படுத்தாது கூறியது. “என்றாலும் இந்த மமதை கூடாது.” நத்தை தனக்குத்தானே சொல்லிக் கொண்டது. “ஆமையண்ணா யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்? சொல்லமுடியுமா”? நத்தை தெரிந்து கொள்ளும் ஆசையில் கேட்டது. “நீ போய் யாரிடமாவது விசாரித்துப் போட்டு வா”. கூறியனுப்பியது. நத்தை மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. வழியில் பெரிய கழுகு வட்டமிட்டது. அதிலிருந்து தப்புவதற்குத் தயாரானது. “ஆமையண்ணா கழுகு வருது. கவனம்.” சத்தமிட்டது. தனது உடலை ஓட்டுக்குள் சுருக்கிக் கொண்டது. இலைகளுக்குள் மறைந்து கொண்டது. “கழுகு வந்தால் பார்க்கலாம்”? சொல்லி முடிவதற்குள் கழுகு ஆமையைக் கண்டு கொண்டது.
இரை கிடைத்து விட்ட சந்தோசத்தில் இறங்கியது. ஆமை தனது உடலை ஓட்டுக்குள் இழுத்துச் சுருக்கிக் கொண்டது. பாறையோரத்தில் பதுங்கியது. கழுகு ஆமையின் மேல் குந்தியது. ஆமை அசையது கிடந்தது. பாய்ந்து வந்த முயலார் பற்றைக்குள் ஓடி மறைந்து கொண்டது. கண்டுகொண்ட கழுகு எழுந்து விரைந்தது. முயலைப் பிடிக்க முடியவில்லை. கழுகு மேலெழுந்து பறந்து மறைந்தது.
ஆமை அசையாது கிடந்தது. நத்தை இலைகளுக்குள் இருந்து வெளியே வந்தது. “ஆமையண்ணா கழுகு போய்விட்டது. வெளியே வாங்க”. சத்தமிட்டது. ஆமை மெதுவாகக் தலையை நீட்டியது. வெளியே எட்டிப் பார்த்தது. “ஆமையண்ணா கழுகு என்ன சொன்னது”? நத்தை கதைகொடுத்தது. “எனக்கென்ன தெரியும். நான் நல்லதொரு தூக்கம் போட்டேன்”. ஆமை மழுப்பியது. “நான் கழுகைக் கண்டபடியால் சத்தமிட்டேன். நீங்களும் தப்பிவிட்டீர்கள். இல்லவிட்டால் நாங்க இருவரும் கழுகுக்கு இரையாகி இருப்போம்.” நத்தை கூறியது. “என்னை கழுகால் அசைக்க முடியாது. நான் பலசாலி. எனது ஓடு பலமானது. உன்னிடம் என்ன கதை. எனக்கு வேலையிருக்கு”. கூறிக்கொண்டு நடந்தது. நத்தையும் பின்தொடர்ந்தது.
“ஏய் என்பின்னால் ஏன்வருகிறாய்”? ஆமை சத்தமிட்டது. “எல்லாம் ஒரு பாதுகாப்புக் கருதித்தான்”;. நத்தை ஊர்ந்து கொண்டே சொன்னது. “எனக்கா அல்லது உனக்கா”? கேட்ட ஆமைக்கு நத்தை “ஆமையண்ணா இருவருக்கும்தான்”. என்றது. “எனக்குப் பின்னால் வருவதற்கு உனக்கு அருகதை இல்லை. நீ விலகிப்போ”. ஆமை சத்தமிட்டது. “நான் பின்னால் வந்தால் உங்களுக்கு நன்மை. நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டலும் கூடவே வருவேன்”;. நத்தை கூறியதும் ஆமைக்குக் கோபம் வந்துவிட்டது. “நத்தைத் தம்பி நான் போகும் இடம் தூரமானது. எனது வேகத்துக்கு உன்னால் நடக்க முடியாது. எங்கட தாத்தாவின் தாத்தாவை உனக்குத் தெரியாது. அவர் ஓட்டப்போட்டியில் முயலையும் வென்றவர். இது உனக்குத் தெரியுமா”? நடந்தவாறே ஆமை பெருமையாகச் சொன்னது. நத்தை சிரித்துக் கொண்டது.
“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் அது முடியாத காரியம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்”. நத்தை நின்றவாறே சொன்னது. ஆமைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “நீ இப்ப என்ன சொல்ல வாறாய். என்னோடு நடைப்போட்டிக்கு வருகிறாயா”? மார்தட்டிக்கொண்டு நின்றது. “ஐயோ ஆமையண்ணா என்னால் போட்டி போடமுடியாது. நான் இப்போது சத்துள்ள உணவைத் தேடிப் போகிறேன். அதோ தெரிகிறதே பாதை. அப்படியே போனால் நல்ல தோட்டம் வரும். நல்ல உணவும் கிடைக்கும். நண்பர்களும் வருவார்கள். நாங்கள் சந்தோசமாகப் பொழுதைக் கழிப்போம். பயிற்சியும் செய்வோம்” ஊர்ந்து கொண்டே கதைத்தது.
ஆமைக்குச் சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தது. “ஏனண்ணா சிரிக்கிறீங்க”. அடக்கமாக நத்தை கேட்டது. உனது கதையைக் கேட்டால் சிரிப்பு வராதா என்ன? நீ சத்துள்ள உணவு சாப்பிடப் போகிறாயா? சாப்பிட்டு என்ன சாதிக்கப் போகிறாய்?;. என்னோடு போட்டிபோடப் போகிறாயா”? சிரித்தது.
“அண்ணா ஒரு நாளைக்கு அப்படி நடந்தாலும் நடக்கலாம். யார் கண்டது. ஆனால் இப்படித் துள்ளியவர்கள் தோல்வியைக் கண்டிருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.” நத்தை ஊர்ந்தவாறே சொன்னது.“எனக்கு வாற கோபத்துக்கு உன்னை …. “ நிறுத்திக் கொண்டது. “ஏனண்ணா நிறுத்தினீர்கள்”. நத்தை சிரிக்காமலேயே கூறியது. “அப்படியே கடித்து நொருக்கிப் போடுவன். கவனமாயிரு. அதோ எனக்கு நல்ல உணவு தெரிகிறது. சாப்பிட்டுவிட்டு உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்”;. கூறிக்கொண்டே விரைந்தது. எதிரே நாகதாளிக் கள்ளிச் செடி பூத்திருந்தது. அதன் பூவை ருசித்தது.
இயற்கை எல்லா உயிர்களையும் பொதுவாகத்தானே படைத்துள்ளது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மனிதர்கள்தான் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு. உயிரினங்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது. நத்தை சிந்தனையில் ஆழ்ந்து ஊர்ந்தது. நாகதாளி பூத்திருந்தது. மெதுவாக அருகே சென்றது. நல்ல சுவையான தேன் பூவில் சுரந்திருந்தது. அதனைச் சுவைத்து உண்டது.
உயிரினங்களைப் படைத்த இறைவன் அவற்றுக்கு உணவினையும் படைத்திருக்கிறான். இறைவன் ஒரு கொடைவள்ளல். ஏழைபங்காளி. மனதினுள் நினைந்து வியந்தது.ஆமை நத்தையைக் கண்டு கொண்டது. “ஏய் உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நான் போகும் இடமெல்லாம் வருகிறாய். நாகதாளியின் தேனைக் குடிக்கிறாய்;.” அதட்டியது. “அண்ணா உனக்கேன் கோபம் வருகிறது. நாகதாளி தனது தேனைக் குடிக்க மறுப்புத் தெரிவிக்கவில்லையே. பசித்தது. நாகதாளிப் பூ கண்ணில் பட்டது. கொஞ்சம் உண்டால் நடப்பதற்குத் தெம்பாயிருக்கும். அதுதான் வந்தேன்.நீங்கள் கோபிப்பது என்ன ஞாயம்.?” தேனைச் சுவைத்துக் கொண்டே கூறியது. “என்றாலும் உனக்கு வாய்க்கொழுப்பு அதிகம். அடக்கி வாசி”. சத்தமிட்டது. சாப்பிட்டதும் ஆமை நடையைக் கட்டியது. பின்னால் நத்தையும் ஊர்ந்து சென்றது.“ஆமை அடங்கிக் கிடந்தாலும் அகங்காரம் கொண்டது. இந்த ஆமைக்கு எப்படிப் பாடம் புகட்டுவது.” யோசித்தவாறே ஆமைக்குப் பின்னால் சென்றது.
ஆமை வேகமாக அரக்கியது. அதன் வேகத்துக்கு நத்தையால் ஈடுகொடுக்க முடியவில்லை. வேகமாக முயல் ஓடிவந்தது. நத்தை ஏதோ சொல்ல வாயெடுத்தது. ஆனால் அதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஆமை தூரத்தில் சென்று கொண்டிருந்தது. ஒரே பாய்ச்சலில் ஆமையைத் தாண்டிப் பாய்ந்து ஓடியது. அதன் பின்னால் ஏதோ துரத்தி வந்திருக்க வேண்டும். ஆமை எதிர்பார்க்க வில்லை. முயல் ஓடி மறைந்து விட்டது.
“எப்படீயும் முயலைச் சந்திக்க வேண்டும். புற்தரைக்கு முயலும் வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” மனதில் எண்ணிக்கொண்டு ஊர்ந்தது. ஒரு காய்ந்த சருகு வழியில் கிடந்தது. சருகில் மெதுவாக ஏறியது. அப்போது வேகமாக காற்று வீசியது. சருகுகளை வேகமாகக் காற்றுச் சுழற்றியது. நத்தை சருகைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. சருகுகள் அந்தரத்தில் பறந்தன. உருட்டிக் கொண்டு வேகமாக வீசியது. புற்தரைவரை சருகுகள் வந்து விழுந்தன.
சருகுகளை அகற்றி நத்தை வெளியே வந்தது. புற்தரையில் புல்லின்மேல் அமர்ந்து களைப்பாறியது. நரி புற்தரைக்கு வந்தது. பல பறவைகளும், பிராணிகளும் கூடின. காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புற்தரையில் இருந்தது. நரி காகத்தின் அருகில் சென்றது. காகம் மெதுவாகப் பார்த்தது. பக்கத்தில் உள்ள மரத்தில் தாவி இருந்தது. “என்ன காக்கத்தாரே புதினம் ஏதும் இல்லையா”? நரி கதை கொடுத்தது.
“இந்த மனிதர்கள் இன்னும் அந்தக் கதையைத்தான் கதைக்கிறார்கள்”;. காகம் கூறியது. “எந்தக் கதையை” நரி கேட்டது. “அதுதான். உங்கள் தாத்தா எங்கள் தாத்தாவை ஏமாற்றிய கதை.” “ஓ…வடை பறித்த கதையையா? அதெல்லாம் நமக்கெதற்கு? நாங்க சந்தோசமான இருப்போம்.” நரி காகத்தைப் பார்த்துக் கூறியது. பறவைக் கூட்டங்களும் பறந்துவந்து சேர்ந்தன. இந்த உரையாடலை நத்தை கேட்டுக் கொண்டிருந்தது. நத்தை மெதுவாகக் கதை கொடுத்தது. “நரியண்ணா உங்களுக்கு உலகத்தைப் பற்றி நல்லாத்தெரியுமாமே! மெய்யா”? நத்தை மெதுவாகக் கதை கொடுத்தது. சத்தம் வந்த பக்கம் நரி குனிந்து பார்த்தது. “ஹேய் …நத்தைக்குஞ்சு.. நீயா? இங்கே என்ன செய்கிறாய்”?“ நான் இந்தப் பக்கம் வருவது வழக்கம். வந்த இடத்தில உங்களைப் பார்த்தேன். அதுதான்”. நத்தை பணிவாகச் சொன்னது.“நீ நல்லாக் கதைக்கப் பழகிட்டாய். என்ன?“எல்லாம் உங்களைப் பார்த்துத்தான்”.“அடிடா சக்கை. நீ இப்ப என்னையும் வெல்லப்பார்க்கிறாய். என்ன? சரி..ஏன் அப்படிக் கேட்கிறாய்”? நரி ஆவலாய்க் கேட்டது.
“அண்ணா இந்த ஆமை எப்படி முயலாரை வென்றது? ஆமை பெரிதாகப் புழுகிக் கொண்டு திரியுது” நத்தை பக்குவமாகக் கேட்டது. நரி அட்டகாசமாகச் சிரித்தது. அது பெரிய பகுடி. இந்த முயல் சரியான நேரத்தில் குறட்டை விட்டு நித்திரை கொண்டால் ஆமை வெல்லும்தானே”? காகமும் தத்தி வந்திருந்து கேட்டது.
“என்ன பழைய கதையெல்லாம் நடக்குது”.? காகம் தொடங்கியது. “இந்த நத்தைக்குஞ்சு ஆமையாரின் கதையைச் சொல்லட்டாம். அதுதான்….” இழுத்தது. காகம் நத்தையைப் பார்த்தது. “தம்பி நீ சின்னப் பையன். ஆனாலும் நீ சுறுசுறுப்பாக இயங்கி வாழ்கிறாய். சில விசயங்கள் உனக்கும் விளங்காது. இப்ப படிக்கிற பிள்ளைகளைப் பார். படிக்கிற நேரத்தில் படிக்காமல் தூங்குவதில் காலத்தைப் போக்குகிறார்கள். சோதனை வந்தால் மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். கேள்விகளை நன்றாகப் பார்த்து வாசிப்பதில்லை. கேட்ட கேள்விக்கு விளங்காமல் விடையெழுதுகிறார்கள். நல்ல பெறுபேறு எப்படிக் கிடைக்கும்.? முயலார் தூங்கிவிட்டபடியால் ஆமையார் வெற்றிக் கொடி நாட்டினார். அவர் அப்படித்தான் பேசுவார்”;. காகம் தத்துவம் பேசியது.
“இதையெல்லாம் மதியால் மாற்றிவிடலாம்”. நரியார் பெருமையாகப் பேசினார். “எப்படி”? ஆர்வத்தோடு நத்தை முன்னகர்ந்தது. “முயலார் வரட்டும். அவருக்கு உற்சாகம் கொடுப்போம். இன்னொரு போட்டிக்கு ஏற்பாடு செய்வோம்”. நரி நம்பிக்கையை ஊட்டியது. நத்தைக்கு மகிழ்ச்சி. உற்சாகமாக ஒரு முறை குட்டிக்கரணம் அடித்தது.“அண்ணா இந்தப் போட்டி நடக்கும்போது ஒரு சிறுமியை அல்லது சிறுவனையும் அழைப்போம்.”“ஏன்”? ஒன்றும் விளங்காமால் காகம் கேட்டது.“எல்லாம் காரணமாகத்தான். இதுகூடவா தெரியாது. அவர்கள் வந்தால்தான் நடப்பதை எழுதி வைப்பார்கள். அது வரலாறாக இருக்கும்.” நரி ஒரு புன்னகையோடு கூறியது.“ அட …நத்தைக்கும் உலக நடப்புக்கள் தெரியுதே”? அதோ யானையாரும் அவரது தோழர்களும் வருகிறார்கள். காகம் கரைந்தது.தூரத்தில் அவைவந்து கொண்டிருந்தன. முயலாரும் துள்ளி வந்துகொண்டிருந்தார். “சரி உசாராவோம். முயலாரைப் போட்டியில் பங்கு கொள்ள வைப்பதுதான் நமது நோக்கம். மறக்கவேண்டாம்.” நரி எச்சரித்தது. அனைத்து விலங்குகளும் பறவைகளும் ஏற்றுக் கொண்டன. அமைதியாக இருந்தன.
முயல் வந்து சேர்ந்தது.“முயல்தம்பி எப்படிச் சுகம்.” நரியார் அமைதியாகக் கேட்டார். “நல்லசுகம். இன்றைக்கு ஏதும் விஷேசமா? எல்லாரும் ஒன்றாய் கூடியிருக்கிறீர்கள்”;. முயல் நரியைப் பார்த்துக் கேட்டது. “அப்படி ஒன்றுமில்லை. இந்த புற்தரையில் இப்படி ஒன்றாய்க் கூடுவது வழக்கந்தானே. ஒரு கலகலப்பாக இருக்கும். சிலவேளைகளில் போட்டிகள் நடக்கும். கூட்டங்கூட்டமாகச் சேர்ந்திருந்து கதை நடக்கும். சந்தோசமாக இருக்கும்.” நரி விளக்கியது.
“ஓமோம். நான்தான் மறந்துவிட்டேன். இன்றைக்கு முழுநிலவு. புற்தரையில் விளையாடிப் பலநாட்களாகி விட்டன. நானும் உங்களோட சேர்ந்து விளையாட வருகிறேன்”;. முயல் சந்தோசமாகப் பதிலளித்தது. நத்தையாருக்குச் சந்தோசம். “ஹாய் முயலண்ணா. எப்படி இருக்கிறீர்கள்? நானும் வந்திருக்கிறன். ஆமையண்ணாவும் வருவார். இன்றைக்குச் சந்தோசமாக இருப்போம்”. கூறிக்கொண்டு செடியின் இலையில் இருந்து இறங்கிவந்தது.
“ஹாய்…அதோ ஆமையண்ணாவும் வருகிறார்”. சிரித்துக் கொண்டே கூறியது. எதிர்கொண்டு வரவேற்க முன்னால் சென்றது. “ஆமையண்ணா! வாங்க. வாங்க” புன்னகையோடு வரவேற்றது. ஆமைக்குக் கடுஞ்சினம் ஏற்பட்டது. தன்னை முந்திவிட்டு நத்தை வந்ததையிட்டுச் சினந்தது. “எனக்கு முன்னால் எப்படி இங்கே வந்தாய்”? “ஆமையண்ணா இவையெல்லாம் தேவைதானா? எப்படியோ வந்து சேர்ந்து விட்டேன். சந்தோசப் படுங்கள். இன்றைக்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்.” நத்தை அடக்கத்துடன் கூறியது.
“ஆமையாரே! நத்தைத்தம்பி சொல்வது சரிதான். இன்றைக்கு முழுநிலவு. எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்.” நரி வரவேற்றது. விலங்குகளும், பறவைகளும் சேர்ந்து குரல் கொடுத்தன. புற்தரையின் மத்தியில் ஒன்று கூடின. புறாக்கள் நடந்து காட்டின. நாரைகளும் கொக்குகளும் நடைப்போட்டியில் பங்கு கொண்டன. யானைமேல் பறவைகள் பறந்து இருந்தன. தும்பிக்கையால் நத்தையைத் தூக்கியது. ஆமையையும் தூக்கியது. தனது முதுகில் வைத்தது. நத்தை யானையின் முதுகில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
“ஆமையண்ணா! விழுந்து விடுவீர்கள். கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்”. நத்தை சத்தமிட்டது. ஆமைக்குப் பிடித்துக் கொள்ள முடியவில்லை. தவித்தது.
“யானையாரே! ஆமையண்ணா விழப்போகிறார். அவரை மெதுவாக இறக்கி விடுங்கள்”. நத்தை சத்தமிட்டது. யானை தும்பிக்கையால் ஆமையை எடுத்துக் கீழே விட்டது.
வானில் நிலவு பவனிவரும் நேரம். புற்தரை கலகலத்தது. நத்தை தன்னை அவமதித்தாக ஆமை எண்ணிக்கொண்டது. முயல் தன்னை மறந்து துள்ளிப் பாய்ந்து திரிந்தது. தற்செயலாக ஆமைக்கு மேலால் பாய்ந்து சென்றது. ஆமையாருக்குக் கடுங்கோபம் பொங்கி வந்தது. “உனக்கு என்ன வந்தது. ஒரு மரியாதை இல்லாமல் பாய்ந்து திரிகிறாய்? ஆமை வெகுண்டெழுந்தது.
“ஐயோ ஆமையண்ணா தெரியாமல் செய்து போட்டன். மன்னித்துக் கொள்ளுங்க”. முயல் மன்னிப்புக் கேட்டது. “செய்வதையும் செய்து போட்டு மன்னிப்பு வேறா? ஆமை அதட்டியது. “ஆமையண்ணா இதற்கும் கோபமா? ஆமையண்ணா எதெற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது”. நத்தை மெதுவாகச் சொன்னது. “ஏய்! நீ ஏன் தலையிடுகிறாய?;. நான் உன்னிடம் கேட்டேனா”? ஆமை அகங்காரத்துடன் சத்தமிட்டது.
“ஆமையண்ணா! தெரியாத்தனமாக ஒரு பாய்ச்சல் பாய்ந்து பார்த்தேன். அதற்காக இத்தனை கோபமா”? முயல் அடக்கத்துடன் சொன்னது. “எனக்குத் தெரியும். நீ வேண்டும் என்றே செய்கிறாய். உனக்கு அந்தக் கோபம் இன்னும் போகல்ல”“எந்தக் கோபம்?”. “அதுதான். உங்கட தாத்தாவை எங்கள் தாத்தா ஓட்டப் போட்டியில் வென்ற கதையை”. பெருமையாக ஆமை கூறியது.இதைக் கேட்டதும் நரியார் பலமாகச் சிரித்தார். யானையார் தும்பிக்கையை உயர்த்திப் பிளிறினார். பறவைகள் சிறகடித்துப் பறந்து ஆரவாரித்தன. “ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க? நான் என்ன சொல்லிப் போட்டன்.? உண்மையைச் சொன்னால் என்னை அவமானப்படுத்துவதா”? ஆமை ஆத்திரத்துடன் கூறியது.
“இந்தக் கதை உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் அதை இன்றைக்கு நிரூபித்துக் காட்டினால் நம்புவோம்”. நரியார் சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கூறினார். விலங்குகளும் பறவைகளும் ஏகமனதாக ஏற்றன.
ஆமை தயங்கியது. “இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம். என்றது. “ஆமையண்ணா இவ்வளவுதானா உங்கள் தைரியம்”. நத்தை பதுங்கயிருந்து சத்தமிட்டது. “உனக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். நீயும் வா. உன்னையும் வெல்லவேண்டும். அழைத்தது.“அண்ணா உங்களோடு போட்டி போட என்னால் முடியாது. நீங்கள் வெல்லுவது நிச்சயம்.” நத்தை பின்னிழுத்தது.“நீ ஓரு கோழை. பயந்தாங்கொள்ளி.” ஆமை ஏளனமாகச் சிரித்தது. “சரி விடுங்க. நத்தைத் தம்பி நீயும் பங்கு பற்றுகிறாய். சரியா? நரியாரே போட்டிக்குரிய ஏற்பாட்டைக் கவனியுங்கள்”. யானை இறுதியாகக் கூறியது. எல்லா விலங்குகளும் பறவைகளும் ஒழுங்குகளைக் கவனித்தன. போட்டி தொடங்குமிடத்தை அடையாளம் கண்டன. முடியும் இடத்தைக் காகமும், புறாக்களும் போய்ப்பார்த்து வந்தன. விலங்குகள் நடுவர்களாக பறவைகளும், சில விலங்குகளும் நின்றன. போட்டியில் பங்குபற்றும் ஆமையும் முயலும் ஆயத்தமாக நின்றன. ஒரு ஓரத்தில் நத்தை நின்றது. போட்டியை யானையார் தொடங்கி வைத்தார். ஆமைக்குத் தெரியாமல் நத்தை அதன் முதுகில் ஏறி ஒட்டிக்கொண்டது. போட்டி தொடங்குவதற்காக யானை பிளிறியது. ஆமை வழமைபோல் அரக்கியது. முயல் பாய்ந்து வேகமாக ஓடியது.
ஆமைக்குச் சந்தோசம். இப்படித்தான் இவர் ஓடுவார். என்னைக் காணவில்லை என்று குட்டித்தூக்கம் போடுவார். நான் மெதுவாகச் சென்று வெற்றி யடைவேன். கற்பனையில் மிதந்து கொண்டு ஓடினார். நத்தையார் ஆடாது அசையாது ஆமையின் மேல் இருந்து கொண்டார். முயல் வேகமாக ஓடி ஓரிடத்தில் நின்றது. திரும்பிப் பார்த்தது. ஆமையைக் காணவில்லை. பசும்புல் வரவேற்றது. கொஞ்சம் பசியாறுவோம் என்று புல்லை நறுக்கி உண்டது. ஆமை வேகமாக அரக்கி முயலைத் தாண்டிச் சென்றது.
“ஆமையாரே விடக்கூடாது. வேகமாக ஓடுங்கள். உங்களுக்குத்தான் வெற்றி. ‘கமோன்’.” நரி ஊழையிட்டு உற்சாகப்படுத்தியது. சத்தத்தைக் கேட்ட முயல் எட்டிப்பார்த்தது. ஆமை தன்னை முந்திக் கொண்டு போவதைக் கண்டது. வானத்தில் வளர்பிறையின் நிலவு சிந்திக் கொண்டிருந்தது. முயல் ஆமையிடம் கதை கொடுத்தது. “ஆமையண்ணா! எப்படி வேகமாக நடக்கிறீர்கள். நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே
தெரியாது”. கூறிக்கொண்டு ஆமையின் வேகத்துக்கு ஏற்ப நடந்தது. போகும் வழியில் ஒரு ஓடை குறுக்கிட்டது. எப்படி இதனைத் தாண்டிப்போவது? யோசித்தது. அதனால் முடியவில்லை. “என்ன யோசனை? ஓடை ஆழமானது. எப்படித் தாண்டுவது என்று யோசிக்கிறாயா? எனது முதுகில் ஏறிக்கொள். உன்னையும் ஏற்றிக் கொண்டு எப்படி நடக்கிறேன் என்று பார்”. ஆமை சவால் விட்டது. ஆமையின் முதுகில் மெல்ல ஏறியிருந்து கொண்டது. முயலுக்குப் பயம் வந்தது. ஆமை ஓடையை அண்மித்தது. “ஓடையில் முயலாரின் கதை முடிந்து விடும். அவர் தவிப்பார். நான் வெற்றி பெற்று விடுவேன்”. யோசித்தபடி நடந்தது வழியில் சிறிய கயிறு தென்பட்டது. ஆமை அதனைக் கவனிக்கவில்லை. முயல் பாய்ந்து அதனை எடுத்தது.
“ஏய்! கண்ணயர்ந்து விழுந்து விட்டாயா”? சிரித்துக் கொண்டே நடந்தது. முயல் ஓடிவந்து ஆமைமேல் ஏறியது. மெதுவாக அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டியது. ஆமை வெற்றி பெறும் எண்ணத்தில் அதனைக் கவனிக்கவில்லை. நடந்தது. சந்தர்ப்பத்தைப் பார்த்து முயலின்மேல் நத்தை தாவியது. அதன் முதுகில் ஒட்டிக்கொண்டது. ஓடை வந்துவிட்டது. “ஏய்! முயல்தம்பி என்ன செய்யப்போகிறாய். ஓடையை எப்படிக் கடப்பாய்”? “ஆமையண்ணா! நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன பயம். நீங்கள் நன்றாக நீந்துவீர்கள். நான் உங்கள் மேல் இருந்து கொள்வேன”;. சிரித்துக்கொண்டு கூறியது. ஆமை வேகமாக தண்ணீருள் இறங்கியது. முயல் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
சிறிது தூரம் சென்றதும் ஆமை சுழியோட நினைத்தது. ஆழத்தில் புகுந்து கலக்க நினைத்தது. முயல் கயிற்றை இழுத்துப் பிடித்தது. ஆமையினால் சுழியோட முடியவில்லை. “ஏய் ஏன் என் கழுத்தில் கட்டியிருக்கிறாய். அவிழ்த்துவிடு.” சத்தமிட்டது.“ஆமையண்ணா கரைக்குப் போனதும் கட்டாயம் அவிழ்த்து விடுவேன். கவலைப் படாமல் நீந்துங்கள”;. மெதுவாகச் சொன்னது. நத்தை சிரித்துக் கொண்டது. ஆமையினால் சுழியோட முடியவில்லை. நீந்திக் கரையை அடைந்தது. முயல் கயிற்றை அவிழ்த்து விட்டது. “ஆமையண்ணா! உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நான் அந்த மரத்தடியில் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போறன்”;. கூறிவிட்டு ஓடியது. ஆமைக்குப் பொல்லாத கோபம். அது தன்பாட்டுக்கு வேகமாக நடந்தது.
பறவைகளும் விலங்குகளும் வெற்றிக்கம்பத்தில் காவல் இருந்தன. போட்டியாளர்களைக் காணவில்லை. என்ன நடந்தது. யோசிக்கத் தொடங்கின. காகம் பறந்து வந்தது. தூரத்தில் ஆமை வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது. முயலைக் காணவில்லை. திரும்பிப் போனது. “இம்முறையும் முயலாமைதான்” என்றது. “என்ன”? எல்லாம் வினாவின. “இந்த முயல் எங்காவது நித்திரை கொண்டிருக்கும். ஆமை மட்டுந்தான் ஆதோ தூரத்தில் வருகிறது. காகம் கரைந்தது. பார்வையாளர்களின் கண்கள் போட்டியாளர்களை நோக்கியிருந்தன.“முயலண்ணா களைப்பாறியது போதும். இனித் தொடரலாம். விரைவாக ஓடுங்கள். இல்லாவிட்டால் ஆமை இம்முறையும் வென்றுவிடும்”. நத்தை சத்தமிட்டது.“ஓ…நீயும் என்னோடதான் இருக்கிறாயா? நீ கெட்டிக் காரன்தான்.”
“என்னைப் புகழ்ந்தது போதும். ஆமை வெற்றிக்கம்பத்தை அடைந்து விடுமுன் விரையுங்கள்”. நத்தை இரைந்தது. “இதோ ஒரு நொடியில்…” முயல் எழுந்து ஓடியது. சொன்னதுபோல் ஒரு நொடியில் வெற்றிக்கம்பத்தில் நின்றது. நத்தையும் இறங்கிக் கொண்டது. விலங்குகளும் பறவைகளும் சத்தமிடாமல் நின்றன. ஆமையார் வந்து சேர்ந்தார். “ஆமையண்ணா வாங்க. உங்களை வரவேற்கிறோம்.” முயலும் நத்தையும் முன்னால் நின்று வரவேற்றன.
ஆமை அடக்கத்துடன் புன்னகைத்தது. “நத்தைத் தம்பி நீ எப்படி வந்தாய்? கெட்டிக்காரன்தான்.”“எப்படியோ வந்துவிட்டேன்” நத்தை மெதுவாகக் கூறியது.. “வெற்றியும் தோல்வியும் வீரனுக்குத்தான். இங்கே வென்றவரும் இல்லை. தோற்றவரும் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றே. வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம்”. ஆமை ஆடியது. “நன்மையும் தீமையும் தானே வருவதில்லை. அவற்றுக்கு நாமேதான் காரணம்”. ஆமை சொல்லிக் கொண்டு ஆடியது. யானைக்கு ஆச்சரியம். நத்தை நரியாருக்கு நன்றிகூறியது. நரியார் சந்தோசப்பட்டார். விலங்குகளும் பறவைகளும் பாடி ஆடி மகிழ்ந்தன. எங்கும் மகிழ்ச்சி பரவியது.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP