Friday, September 24, 2010

மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்
கிழக்கிலங்கையின் தவப்புதல்வனாம் சாமித்தம்பி மயில்வாகனம் எனும் சுவாமி விபுலானந்தர் பன் மொழிப் புலமையையும் ஆற்றலையும் கொண்டவர். சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகி, மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்து, மீண்டும் அதே கல்லூரியில் ஆசிரியராகி, இலங்கைத் தொழில்நுட்பக்கல்லூரியல் டிப்போமாப் பட்டம் பெற்றதும் அக்கல்லூரியில் கற்பித்தவர். யாழ் சம்பத்ரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் இலங்கையின் முதற்பண்டிதராய் விளங்கியவர். லண்டன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானப் பட்டதாரியாய் விளங்கிய பண்டிதர் மயில்வாகனம். பி.எஸ் சி அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சிறந்ததொரு அதிபராக கடமையேற்று அருந்தொண்டாற்றியவர்.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். ‘படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அவருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும்’ என்பது திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’
என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
வால்டர் ஸ்கொட.; அவர்கள் ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர். ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக ‘லேடி ஒஃப் த லேக்’;(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.
“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறுமெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதியன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு! இன்னும் ஒருமுறை எழுந்திரு”
வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது. தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் இடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார்.

1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள். அந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய டாக்டர் சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார்.
இந்த ஆராய்ச்சி பயனுடையது. இதனை விரிவாக எழுதி வெளியிட்டால் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மிகப்பயனுடையது. ஆதலால் இதனை விரிவுற எழுதித் தருமாறு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்ற சுவாமி விபுலானந்தர் நாடகத் தமிழை எழுதிக் கொடுத்தார். “இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹா மஹோ உபாத்தியாயர் சாமிநாதையர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார். ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்கும்போது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக’ என சுவாமி விபுலானந்தர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையரவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.
இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். ‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’
என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.
“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்நத்ர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.
மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். உறுப்பியல் உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.கதை தழுவி வரும் கூத்தே நாடகமாகும். கூத்தை இருவகைப் படுத்துவார்கள்சாந்திக்கூத்து – அதனை அகக்கூத்து அல்லது வேத்தியல் என்றும் அது அரசர்க்குரியதென்றும் கொள்வர்.
நாயகன் சாந்தமாக ஆடுவது சாந்திக்கூத்தாகும். – அது நான்கு வகைப்படும் எனக் காட்டுவர்.
1) சொக்கம் - இது தாள லயத்தை ஆதாரமாக் கொண்டது2) மெய்க்கூத்து - இது உள்ளக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டது. இவ்வகைக் கூத்தும் தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப் படும்.3) அவிநயக்கூத்து - இது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யுங்கூத்து4) நாடகம் - இது கதை தழுவி வருங்கூத்து - இவை யாவும் சேர்ந்து வருவதே நாடகம் என்பர்.
மற்றது விநோதக் கூத்து – அதனை புறக்கூத்து அல்லது பொதுவியல் - அது ஏனையோர்க்கு உரியது என்பர். விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்பன அடங்கும். இவை பல்வகைப்படும் நாடக உறுப்புக்கள்: சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் நாடக உறுப்புக்களாம்.
சுவை: சுவை ஒன்பது எனக்கூறுவர். இவை உள்ளத்துள் நிகழ்வதாகும். வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம். அவலம், நகை, நடுவுநிலைமை, உருத்திரம் என்றார். நடுவுநிலைமை ஐம்புலன் அடங்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமம் வெகுளி மயக்கத்தில் நின்றும் நீங்கியவர் ஆதலால் யாவரும் கண்டஞ்சும் யமனுக்கும் அஞ்சார். எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார். கல்வி நிறைந்திருந்தும் அதனைப் பொருளெனக் கொள்ளாக் காரணத்தால் பெருமிதங்காட்டார். புதுமை , பெருமை சிறுமை ஆக்கமென்பன நிலையில்லாப் பொருளென அறிவார். ஆதலின் அவற்றினைக் கண்டு வியப்புறார். வெகுளார் ஆதலினால் சமநிலை எனப்படும் நடுவுநிலை நல்லோரிடத்துப் பொருந்தியிருக்கும். ஆதலினால் நடுவுநிலையைச் சற்றுப் புறந்தள்ளி “நகையே அழுகை, இளிவரல், மருட்கை. அச்சம், பெருமிதம், வெகுளி. உவகை’ என்று அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப’ எனத் தொல்காப்பியர் கூறுவர். எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலானந்தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வதுடன் வடமொழி நாடக மரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்பத் தமிழ் நாடக மரபையும் காட்டுகிறார். ஒரு வகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந்ததென்பதையும், அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாக இருக்கலாம். சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க நாடகங்களையும் ஆட்டுப்பாடலில் இருந்து ஆத தோன்றியமையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண்டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல். நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப்பார்வையினைப் புலப்படுத்துகிறது. என பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிடுவர்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? மதங்கசூழாமணியைப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் மதங்கசூளாமணியை இக்காலத்துக்கு ஏற்றவகையில் இலகு படுத்தி வருங்கால இளையதலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்hர்கள். யார் முனவந்து செய்வார்கள் என்று தமிழர் சமூகம் எதிரபார்த்துக்கிடக்கிறது.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்.

Read more...

Wednesday, June 16, 2010

சிறுகதை
வரலாற்றை மாற்றிய காதல்
எவ்வளவுதான் முரடனாக இருந்தாலும் அவனுக்கும் மனச்சாட்சி இருக்கத்தான் செய்தது. மாதித்த ஆற்றுக்கும், அனுராதபுரம், புத்தளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தம்பபன்னிநகரின் அரசனாகி முப்பத்தேழு வருடங்கள் ஓடிமறைந்து விட்டன. முப்பத்தெட்டாவது அந்திம காலத்தில் அவனது உள்ளம் வெதும்பியது. முதுமையும் பிணியும் வாட்டியது. படுக்கையில் சாய்ந்து கிடந்தான். அவன் நிகழ்த்திய நாடகங்கள் நினைவுத் திரையில் அவிழ்ந்தன. இந்திய லாலா நாட்டின் சிங்கபுரத்தின் இளவரசனான விஜயன் தனது தகாத செயல்களினால் தலையை அரைவாசி மழித்து, அசிங்கப்படுத்தி, தந்தையினால் நாடு கடத்தப்பட்டதை எண்ணிக் கொண்டான். மும்பாயின் வடக்கே சோபராவை அடைந்ததையும், தமது காடைத்தனங்களைத் தொடங்க, அங்குள்ள மக்கள் அன்றே அடித்து விரட்டியதையும், மரக்கலங்களில் ஏறி கடலில் அலைந்து மரக்கலங்கள் சிதைவுற்ற நிலையில் ஒரு கரையை அடைந்ததை மனங்கொண்டான். எந்த இடமென்று தெரியாது வந்தவனை ஆதரித்து அரவணைத்து ஒரு இராசதானியையும் கொடுத்தவளுக்குத் தான் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்பதை நினைந்து வருந்திக் கொண்டான். “எனக்குப்பின் நான் கட்டியெழுப்பிய இந்த ராச்சியத்தை யார் ஆளுவது”? மனதில் பெரிய போராட்டம் எழுந்தது.
“எனது அரசபோகப் பேராசையும், இன்பம் துய்க்கும் மயக்கமும் என்னை வழிதவறச் செய்தது. குவேனி இயக்க இளவரசி என்று தெரிந்தும் அவளை மனதார விரும்பி இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையானேன். பாண்டிய இளவரசியை அடையவேண்டும் என்பதற்காகக் குவேனியைத் துறந்தேன். எனக்காகக் குவேனி தனது இனத்தையே அழிக்க முன்வந்தாள். தன்னையே அழித்தும் கொண்டாள். அவள் கடைசியாககக் கண்ணீர் சிந்திக் கெஞ்சும்போது எனது மனதில் கொஞ்சமாவது இரக்கம் பிறந்திருந்தால் அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது.” விஜயன் அரட்டிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது சத்தம் வெளிவரவில்லை.
அவனைச் சூழ்ந்து அவனது முதலமைச்சர் உபதிஸ்சயுடன் ஏனைய அமைச்சர்களும் நின்றனர். மதுரையில் பாண்டியகுலத்தில் இருந்து அழைத்துப் பட்டத்தரசியாக்கிய அவனது தர்மபத்தினியான பாண்டிய நாட்டின் புதல்வியும் அழுதவண்ணம் இருந்தாள். “அரசியாரே நமது அன்பான இல்லற வாழ்வில் ஒன்றை இழந்து விட்டோம். நமக்கென்று ஒரு வாரிசியைப் பெறமுடியாது போய்விட்டது. இந்த நாட்டை ஆளுவதற்கு யாருமில்லை”. அவனது முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. அரசியின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது போய்விட்டதை எண்ணி எண்ணி ஏங்காத நாட்கள் இல்லை. அரசனின் இந்தக் கொடுஞ்சொல் அவளது உள்ளத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. இப்படி எத்தனைநாட்கள் சொல்லக் கேட்டிருப்பாள். அவள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியிருப்பாள். அமைச்சர்களைப் பாரத்தான்;. “அமைச்சரே! உடனடியாக இந்தியாவில் உள்ள எனது சிங்கபுர நாட்டுக்குத் தூதனுப்பி எனது தம்பி சுமித்தயை அழைப்பியுங்கள். அவனிடம் ஆட்சியை ஒப்படைப்போம். உடனே செயற்படுங்கள்”. மன்னன் கட்டளையிட்டான். அமைச்சர்கள் விரைந்து செயற்பட்டனர்.
விஜயன் களைத்துப் படுக்கையில் கிடந்தான். அவன் கண்களை மூடும்போதெல்லாம் அந்தக் காட்சி நிழலாக ஓடியது. காதுகளில் கண்ணீராடிய கண்களோடு குவேனி நின்றிருந்தாள். அவளது அவல ஒலி ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது முகம் வரண்டு பயங்கரமாக இருந்தது. “குவேனி! நான் சொல்வதைக் கவனமாகக்; கேள். என்னை இந்த நாட்டு அரசனாக முடிசூடும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்ற ஒரு அரசிவேண்டும். அவள் அரசகுடும்பத்தில் பிறந்தவளாக இருக்கவேண்டும். அதனால் நீ என்னைப் பிரிந்து போகவேண்டும்.” பார்வையை வேறுதிசையில் திருப்பியவாறே கூறினான். குவேனி இடியேறுண்ட நாகம்போலானாள். நடுநடுங்கி வெயர்த்து நின்றாள். “கப்பல் உடைந்து உங்களது நண்பர்களுடன் அல்லல்பட்டு அபயந்தேடி வந்தபோது நான்தானே உணவு உறைவிடம் கொடுத்துக் காப்பாற்றினேன். அபயமளித்தேன். கண்டதுமுதல் உங்களை எனது மணாளனாக வரித்துக் கொண்டேன். எனது இனத்தவரையெல்லாம் உங்களுக்காக பலிதந்தேன். எதுவந்தபோதும் என்னைப் பிரியமாட்டேன் என்று சொன்னதை ஏற்றேன். எனது இளமையைக் காணிக்கை ஆக்கினேன். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தோம். இன்று பிரிந்து போகும்படி கூறுவதை என்னால் எப்படித் தாங்கமுடியும்”. அவளது கெஞ்சும் ஒலி காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது தலையசைகிறது. வேகமாக மூச்சுப் பறக்கிறது.
அன்றுதான் குவேனியை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். “உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றைத் தருவேன். வேண்டுமாயின் ஒரு இராசதானியையே தருவேன்’. குவேனி கூறியிருந்தாள். அழகாய் அலங்கரித்த அமளியிலே இளமையை ருசித்தவன் காதுகளில் ஏதோ சத்தங்கள் கேட்கின்றன. “குவேனி என்னது வேடிக்கையாக இருக்கிறது. என்ன விஷேசம் ஏதும் நடக்கிறதோ”? விஜயன் அவளது காதுகளில் இனித்தான். கலவி மயக்கத்தில் “என்னையும் தருவேன். ஒரு இராசதானியையும் தருவேன்” முணுமுணுத்தள். அந்த நேரத்தில் அவளது உள்ளம் உறுத்தியது. முன்பின்தெரியாத வேற்று மனிதருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை ஆதரித்து இன்புற்றிருப்பதை என்னினத்தவர்கள் அறிந்தால் என்னைக் கொன்றுபோடுவார்கள். அவர்களுக்கு முன் நான் உசாரடைய வேண்டும். குவேனி விளித்துக் கொண்டாள்.
“அன்பே! என்னையும் தருவேன். ஒரு இராசதானியையும் தருவேன். என்றேனல்லவா? அதற்கான தருணம் வந்துவிட்டது. இன்று போனால் இப்படியான சந்தர்ப்பம் நமக்கு வராது. லங்காபுர மன்னன் மகாகலசேனின் மகள் இளவரசி பொலமித்தவுக்கும் லக்கலயில் இருக்கும் அவர்களது உறவினர்களில் ஒருவருக்கும் சிறசவத்து நகரில் இன்றிரவு திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணவிழா தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறும். நாம் இதனைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்”. சொல்லிவிட்டு விஜயனை அரசனாகக் கற்பனையில் பார்த்தாள். அவன் அவளது அழகில் மயங்கி நின்றான். “என்ன செய்யவேண்டும். சொல்லு”. விஜயன் அவளைத் தழுவியபடியே சொன்னான்.
“அவர்கள் எல்லோரும் மதுமயக்கத்தில் இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கி அழிக்கவேண்டும். அழித்தபின் இந்நாட்டின் அரசன் நீங்கள். அரசி இந்தக் குவேனி. அதனை நான் கண்குளிரக் காணவேண்டும். உடனே கிளம்பவேண்டும். நான் வழி காட்டுகிறேன். வாருங்கள்”. அழைத்தாள். “இன்றா? இப்போதா”? என்றான். “ஆம். இப்போது தவறவிட்டால் எப்போதும் சந்தர்பம் கிடைக்காது. புறப்படுங்கள்.” விஜயன் உசாரானான். தனது தோழர்களுக்கு விளக்கமளித்தான். ஆயுதங்களோடு புறப்பட்டார்கள். இயக்கர்கள் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் விஜயனதும், அவனது தோழர்களினதும் ஆயுதங்களுக்கு இரையானார்கள். அவல ஒலியோடு இரத்த வெள்ளம் ஆறாய் ஓடியது. ஒருசிலர் லங்காபுரம் நோக்கி ஓடித்தப்பினார்கள். ஒரு கபடத்தனமான செயலினால் பெரிய வெற்றியைத் தழுவிக்கொண்டான். எஞ்சிய பழங்குடி இயக்கர்கள் லங்காபுரத்துக் காடுகளில் தஞ்சமானார்கள்.
மன்னன் மகாகலசேனின் ஆடைகளை அணிந்தவாறு விஜயன் கூத்தாடினான். அதனைப் பார்த்து குவேனி மகிழ்ந்து “இதனைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களுக்காக எதனையும் செய்வேன். என்னையும் தருவேன். ஒரு இராசதானியையும் தருவேன்”. அவனைத் தழுவியதை நினைந்து கொண்டான். அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. “பெரிய தவறினைச் செய்து விட்டேன்”. மெல்ல உடலை அசைத்துப் புரண்டு படுக்கிறான். அவன் மனதில் அமைதியில்லாது தவித்தான். பாண்டியன் மகள் வந்து பார்த்துக் கண்களிலுள்ள கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சென்றாள். அமைச்சர்கள் சிலர் அருகிலேயே இருந்தார்கள்.
மதுரையில் இருந்து பாண்டியன் மகள் மாதோட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி விஜயனுக்குக் கிடைக்கிறது. அவளோடு விஜயனின் தோழர்களுக்கும் மனைவிமார்களாக கன்னியர்கள் வந்து கொண்டிருந்தனர். அத்துடன் அவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்வதற்குமான குடும்பங்களும் வருவதை அறிந்திருந்தான். அவர்கள் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி பணித்திருந்தான். தம்பபன்னி நகர் குதூகலிக்கத் தொடங்கியது. “குவேனி இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படு. உமது பிள்ளைகளை விட்டுச் செல். நான் அவர்களுக்கு ஓரு குறையும் வராமல் பார்த்துக் கொள்வேன். நீ உடனே போய்விடு”. அவசரப்படுத்தினான். “நான் போய்த்தான் ஆகவேண்டுமா? எப்படி உங்களைவிட்டுத் தனியே செல்வேன்.? நான் எங்கே போவேன்? எவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவேன்.”? குவேனி கண்ணீர் வடிக்கிறாள். “எனது நாட்டில் எங்காவது இருக்கலாம். உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன். எடுத்துப் பிழைத்துக் கொள்”;. அதிகாரமான குரலில் விஜயன் ஆணையிடுகிறான்.
“மன்னா!” அமைச்சர் உபதிஸ்சவின் குரல் கேட்டு விஜயன் கண்களை மெல்லத்திறக்கிறான். “சிங்கபுரத்துக்குத் தூது அனுப்பியாகி விட்டது. இன்னும் சில நாட்களில் தங்கள் தம்பி வந்து விடுவார்” செய்தியை அமைச்சர் கூறினார். மீண்டும் விஜயனின் விழிகள் மூடிக் கொண்டன. குவேனி மீண்டும் அவன்முன் கண்ணீரோடு நிற்கிறாள். அவளை முதல்முதல் சந்தித்தபோது அவளது அழகில் மயங்கி நின்றான். பதினாறு வயதுப் பருவத்துக்கே சொந்தமான அழகோடு கட்டுக்குலையாத கன்னியாக நின்றாள். அவள் முதல்நாள் அணிந்திருந்த ஆடையில் எடுப்பாக இருந்தாள். அவள் காட்டிய அன்பையும் நினைத்துக் கொண்டான்.
“எனக்காக ஒரு இராசதானியையே தந்தாளே. அவளைத் துரத்திவிட்டேனே? நான் பாவி. எனக்கு எனது கௌரவம்தான் முக்கியமாகி விட்டது”. மனதில் ஈனக்கவலைகள் புகுந்து கொண்டன. “நான் எங்காவது இங்கு ஒரு மூலையில் உங்களுக்குச் சேவை செய்து கொண்டு இருக்கவிடுங்கள்”;. அவள் கெஞ்சினாள். “அது எப்படி முடியும். ஒரு இடத்தில் இருவர் இருக்கமுடியாது. நாம் பிரியத்தான் வேண்டும். பிள்ளைகள் அரச வம்சத்துக்குரியவர்களாக இல்லை. அவலட்சணமாக இருக்கின்றனர். நீ போவதுதான் நல்லது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை நீ போகலாம்.” குவேனியை நேருக்கு நேர் பார்த்தவாறே கூறினான்.
“மன்னா! உனக்காகவே வாழ்ந்தேனே. நீ இல்லாமல் நானில்லை என்றல்லவா இருந்தேன். நீ வி;ட்டுப் பிரியமாட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா? அன்று அந்த நிலவும் தென்றலும் தேனாய் இருந்ததாய்ச் சொன்னீர்கள். இன்று அவை எல்லாம் எனக்கு தீயாய்ச் சுடுகின்றன. குயிலிசை என் காதுகளில் பாயும் ஈட்டிகளாகி விட்டன. எனது இதயத்தை எப்படித் தேற்றுவேன்.? நான் யாரிடம் போவேன். எங்கள் இனத்தை அழித்தவள் என்று என்னை எனது உறவினர்கள் தாக்கிக் கொன்றழிப்பார்கள். இது உறுதி”;. அழுதவண்ணம் கூக்குரலிட்டாள். “நீ என்ன சொன்னாலும் எனது மனம் மாறப்போவதில்லை. பாண்டியன் மகள் மென்மையானவள். அவள் அரசிளம்குமாரி. நீ ஒரு இயக்கி. உனக்கு அபாரசக்தியுள்ளது. உன்னை எப்படி எனது பட்டத்து அரசியாக்குவது? உனக்கு என்ன அந்தஸ்த்து இருக்கிறது”? ஏளனமாக விஜயன் கேட்டான்.
“அந்தஸத்து வேண்டுமா? எனது இளமையை அனுபவிக்கும்போது அந்தஸ்து விளங்கியிருக்குமே? நானும் இயக்ககுலத்து இளவரசிதான். நானும் ஒரு பெண்தான். இது உங்களுக்கு முதலிலேயே தெரிந்ததுதானே. இந்த மண்ணில் பிறந்த முதற்குடி மக்களின் மகள். கல்வி அறிவில் சிறந்த மனித குலத்தவர்கள்தான் நாங்கள். மன்னா நானில்லாவிட்டால் இந்த அரச சுகபோகங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்குமா? எங்கிருந்தோ நாடுகடத்தப்பட்டு வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து நாட்டைப்பறிகொடுத்து ஏமாந்து நிற்கிறேன். இந்த நாட்டை அந்நியரிடம் பறிகொடுப்பதற்கு நான்தான் முதற் காரணகர்த்தாவாகி விட்டேன். எனது பிள்ளைகள் ஆளவேண்டிய நாட்டை அந்நியனுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க உடந்தையாக இருந்தேனே. நான் பாவி.” பொருமினாள். படுக்கையில் இருந்த விஜயனின் உடல் அசைந்தது.
குவேனி மீண்டும் தோன்றிளாள். “இன்னுமேன் நிற்கிறாய்.? இதோ ஆயிரம் பொற்காசுகள். எடுத்துக் கொண்டு போய்விடு”. உரத்துச் சத்தமிட்டான். குவேனியின் விழிகள் சிவந்து தீப்பொறிகளாகின. தனது பிள்ளைகளைப் பார்த்தாள். “ போகத்தானே வேண்டும். போகிறோம். நான் இந்த நாட்டுக்கும், என் இனத்துக்கும் செய்த துரோகத்துக்குப் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். ஜிவகத்தா!. டிசலா! வாருங்கள். போவோம்”. அவளது ஒரு கைப்பிடியில் மகன் ஜிவகத்தாவின் கை இருந்தது. மறு கையில் மகள் டிசலாவின் கையிருந்தது. கண்ணீர் ஆறாய்ப் பொலபொலத்து வடிய நடந்தாள்.
தனது சொந்த இரத்த உறவில் பிறந்த பிள்ளைகள் இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவனது வாய் “ஜிவகத்தா. டிசலா” என முணுமுணுத்ததை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு உள்ளுர சந்தோசம். குவேனி போனதும் பாண்டியன் மகளைப் பட்டத்து ராணியாக்கிக் கொண்டான். தோழர்களுக்குப் பாண்டிய குலத்துக் கன்னியரை மணம் முடித்து வைத்தான். மதுரைக்கும் தம்பபன்னைக்கும் நெருக்கமான உறவினைப் பேணிக் கொண்டான்.
குவேனி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லங்காபுரத்துக்குச் சென்றாள். பிள்ளைகளை லங்காபுரத்து எல்லையில் நிறுத்திவிட்டு நகரினுள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் ஊர்மக்கள் சூழ்ந்து கொண்டனர். “இனத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி. உளவு பார்க்கவா வந்தாய். உன்னை உயிரோடு விடமாட்டோம்”;. அடித்தார்கள். ஒருவன் ஓங்கி உதைத்தான். அந்த உதையோடு குவேனியின் உயிர் பிரிந்தது.
குவேனியின் மாமன் மயிலவளன விரைந்து நகரின் எல்லைக்குச் சென்றான். இரண்டு பிள்ளைகளையும் கண்டு விசாரித்தான். “யார் நீங்கள்?” “ நான் ஜிவகத்தா. இவள் எனது தங்கை டிசலா. குவேனியின் பிள்ளைகள்.” கூறினான்.“தம்பி இங்கே நிற்க வேண்டாம். குவேனியை இப்போதுதான் அடித்துக் கொன்றுவிட்டார்கள். இங்கிருந்தால் உங்களையும் கொன்றுவிடுவார்கள். நீங்கள் ஓடித் தப்புங்கள்”. கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான். விஜயன் குவேனியின் முடிவை அறிந்திருந்தான். இந்த நாட்டை ஆளவேண்டிய ஜிவகத்தாவும், டிசலாவும் சிவனொளிபாதமலைக் காடுகளில் ஓடத்தொடங்கினார்கள்.
“ஐயகோ” விஜயன் அலறினான். இருமிப் புரண்டான். அமைச்சர்கள் உசாரானார்கள். “மன்னா என்ன வேண்டும்”. கேட்டார்கள். விஜயனின் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. கையசைத்து “ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தான். அமைச்சர்களுக்கு விளங்கிவிட்டது. ஆளுக்காள் கண்களால் பேசிக் கொண்டார்கள். விஜயனின் இறுதி நெருங்கிவிட்டதை உணர்ந்தார்கள். அவனது உள்ளமெங்கும் நிறைந்து இந்நாட்டின் மன்னனாக வேண்டிய ஜிவகத்தா நின்றான். ஜிவகத்தாவும், டிசலாவும் சிவனொளிபாதமலைக் காடுகளில் ஆதிவாசிகளாகி புளின்டர்களாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவனது ஆவி பிரிந்தது. மீண்டும் சிங்கபுரியில் இருந்து தம்பபன்னிக்கு ஒரு இளவரசன் பாண்டுவாசுதேவ ஆட்சிசெய்ய வந்துவிட்டான்.

Read more...

Monday, June 14, 2010

கறிவேப்பிலை
அந்தப் பாடசாலைக்கே ஆசிரியராகவும், அதிபராகவும் வருவார் என்று ஆனந்தர் பாடசாலையில் படிக்கும்போதே கனவிலும் நினைக்கவில்லை. அது தற்செயலாக நடந்த விடயமென்றும் சொல்லமுடியாது. இடைநடுவில் ஏற்பட்ட ஞானமென்று சொல்லலாமா? சித்தார்த்தான் நாட்டு நடப்பைக் கண்டுதானே ஞானியானார்? தான் படிக்கும்போது அமைந்த அல்லது வாய்த்த ஆசிரியர்களும் காரணமாக இருக்கலாம். தாரமும் குருவும் தலைவிதிப்படியாமே? அதைப்போல் வைத்துக் கொள்ளலாமா?. அவர்களைப் பின்பற்றிப் பல மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப்போல் வருவதில்லையா? எந்த ஒரு நல்ல சீடனையும் ஆட்கொள்ளும் குருவின் ஆசிகளும் துணைபோவதும் உண்மை. அந்த வகையில் ஞானம் பெற்றவர்தான் ஆனந்தர்.
பிறந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று கல்வி கற்பதால் கிடைக்கும் நன்மைகள் பல. ஆனால் அங்கும் தீமைகள் ஒட்டிக்கொள்வதென்பதும் வாஸ்த்தவம்தான். எப்படித்தான் திருகோணமலை பாடல்பெற்ற திருத்தலம் என்று சொன்னாலும் கல்வியில் பின்தங்கியே கிடக்கிறது. இரண்டு மூன்று உயர்தரப்பாடசாலைகள் இருந்தாலும் கிராமத்து மக்களுக்குக் கல்வி நரிக்கொம்பாம்பாகவே இருந்தது. இயற்கைத்துறைமுகம் ஒன்று அமைந்ததால் திருகோணமலைக்கு விளைந்த தீமைகள்தாம் அதிகம். அந்நியரின் படையெடுப்புக்களுக்கு உதவியாக இருந்தது. உலகமகா யுத்தத்தில் யப்பானின் குண்டு வீச்சுக்குள்ளானது. பிரித்தானியரின் கடற்படைத்தளம், விமானத்தளம் இருந்தமையால் உயர்கல்வியின் தேவை உணரப்படவில்லை. ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். ஏதாவது வேலை கிடைத்து விடும். அதற்கேற்றால் போல் கத்தோலிக் மிசன் பாடசாலைகளும், மெதடிஸ்த மிசன் பாடசாலைகளும் தயார்ப்படுத்திக் கொடுத்தன. அதனால் கல்வி மான்களோ, அறிஞர்களோ உருவாகவில்லை. உயர்கல்விப் பீடங்களைப் பற்றிக் கதைப்பவர்களே இல்லை.
திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஐம்பதுகளில் குரல் கொடுத்தவர்களே அதனை மறந்து வேறு மாவட்டங்களில் பல்கலைக் கழகங்களை நிறுவிவிட்டார்கள். இன்றுவரை உயர்கல்வி நிறுவனம் என்று சொல்லக்கூடியதாய் ஒன்றுமில்லை. அண்மையில்தான் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், பல்கலைக்கழக வளாகமும் இயங்குகிறது. திருகோணமலை நகரில் வெளிமாவட்டத்தவரே கடமை நிமித்தம் வந்து உயர்பதவிகளில் குந்தியிருந்தனர். நெருக்கமாகக் கொட்டில்களில் குறைந்த வாடகையில் குடியிருந்து கடமை முடிந்ததும் போய்விடுவார்கள். திருகோணமலை மாவட்டக் கிராம மக்கள் தங்கள் நிலபுலங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டினார்கள். அந்நியர் ஆட்சியின் பின்னரும் அதே நிலைதான் தொடர்ந்தது.
சுதந்திரம் என்பதென்ன? ‘சு’தந்திரம்தானே? அதாவது தந்திரமாக வாழும் வழிகளைத் தேடுவது. இதனைத்தான் ‘வாழும் கலை’ என்று சொல்கிறார்களோ? படித்தவர்கள் அதனைச் செய்தார்கள். படித்தவர்கள் படியாதவர்களைச் சுரண்டத் தொடங்கினார்கள். அதுவும் ஒருவகைச் சு(ய)தந்திரம்தானே? கிராமங்களில் உயர் வகுப்புக்களைப் படிப்பதற்கு வசதிகளும் இல்லை. கிராமத்துப் பிள்ளைகள் தங்கியிருந்து படிக்க திருகோணமலை நகரில் விடுதிகளும் இருக்கவில்லை. கிறிஸத்தவப் பிள்ளைகளுக்கு விடுதி வசதி கிடைத்தது. கிராமங்களில் சுயமொழிக் கல்வியைக் கற்று தம்குலத் தொழில்களில் ஈடுபட்டனர். இலவசக் கல்வி இந்த நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதந்தான். அதனை நடைமுறைப்படுத்திய புண்ணியவாளன்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள்தான்.
அரசியல் மாற்றங்களினால் சுதேசமொழிக் கொள்கை வந்தபின் கிராமங்களும் விழித்துக் கொண்டன. சுயமொழிக்கல்வியைத் தொடர்வதில் இடர்ப்பாடுகள் இருந்தன. படிப்படியாக இந்த நிலை மாறிக் கொண்டு வந்தது. சுயமொழிக் கொள்கை என்று தனிச்சிங்கள அரசகரும மொழிச் சட்டம் பிரிவினையை ஏற்படுத்தி விட்டது. சுயமொழித் திட்டத்தைக் கொண்டு வந்த அரசியல் சாணக்கியர்கள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கல்வியைத் தொடர வைத்தார்கள். அது இற்றைவரை தொடர்கிறது. உயர்கல்வி சுயமொழியில் இருப்பது நன்மைபயக்கும் என்பது கல்விமான்களின் கணிப்பு. வசதியான மாவட்டங்களில் வசதியான பெரிய பாடசாலைகளில் கற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளையும் பெற்றார்கள்.. இந்த மாவட்டத்திலேயே வசதியற்ற கிராமப் பாடசலைகளில் சாதாரணசித்திகளை மட்டும் பெற்றார்கள். வசதியான பாடசாலைகளில் படித்தவர்கள் சிறப்பான சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகம் சென்றார்கள். கிராமங்களில் வசதிகள் குறைவாக இருந்தாலும் அவர்களிடம் ஆற்றல் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. இதனடிப்படையில் தரப்படுத்தல் முறையும், மாவட்டக் கோட்டாமுறையும் வந்ததைப் பலர் எதிர்த்தார்கள். அதிலும் சு(ய)தந்திரம் இருந்ததை நன்றாகச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பின்தங்கிய மாவட்டங்களில் கோட்டாமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டங்களை ஆக்குவோர் அதில் ஓட்டைகளை அறிவதில்லையா? அல்லது சட்ட வரைஞர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்களா? அவர்களுக்கும் அந்த ஓட்டைகள் உதவுமல்லவா? அவனுக்குத்தான் வெளிச்சம். முழுமாவட்டத்துக்கும் உரியதாகவுள்ள கோட்டாமுறை வசதியான நகர்புறத்துப் பாடசாலைகளுக்கே போய் சேர்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து மூன்று வருடங்கள் அந்த மாவட்டத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் குடும்பப் பதிவிருந்தால் சலுகை கிடைக்கும் கல்வித்தரமுடைய மாவட்டத்தில் இருந்து வந்து திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி. மன்னார். முல்லைத்தீவு மாவட்டங்களில் உத்தியோகம் பார்க்கும் அலுவலர்கள் மூளைசாலிகள்.
தங்கள் குடும்பங்களை தாங்கள் வாழும் இடங்களில் வாக்களர் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். பாடசாலைகளிலும் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள். சாதாரணதரப் பரீட்சையை இந்த மாவட்டங்களில் எடுக்க வைத்து விடுவார்கள். உயர்தரப் பரீட்சைக்கு இம்மாவட்டங்களில் விண்ணப்பிப்பார்கள். ஆனால் வசதிகள் நிறைந்த மாவட்டத்தில் கற்க விடுவார்கள். பரீட்சையையும் இம்மாவட்டங்களில் எடுப்பார்கள். பல்கலைக் கழகங்களுக்குப் போவதும் இவர்களது பிள்ளைகள்தான். தரப்படுத்தலையும். கோட்டா முறையையும் உள்ளுற வாழ்த்திக் கொண்டு, அதற்கு எதிராகப் பேசுபவர்களும் இவர்கள்தான். கோட்டா முறைகூட இவர்களுக்கு உதவியதை நினைக்கச் சிரிப்பாய் வருகுது.
இந்தநிலையில்தான் ஆனந்தர் சொந்த ஊரில் ஆசிரியராக வந்து பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் அப்பாவிப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டவர். அவருக்குப் பக்கபலமாக நல்லாசிரியராக தங்கராசா வந்து வாய்த்தார். அவர்கள் இருவரும் ஆசிரியர்களாக ஒன்றாக கற்பித்தலில் ஈடுபட்டார்கள். பாடசாலையின் முழு வளர்ச்சியிலும் அவர்கள் கண்ணாயிருந்தார்கள். அவர்களது வீடுகள் ஓலைக் கொட்டில்கள்தாம். ஊரும், பிள்ளைகளும் கல்வியில் உயர்ந்தால் தாங்கள் உயர்ந்ததற்குச் சமன் என்பார்கள்.
கிண்ணியாவில் கற்பித்த அதிபர் காசிநாதரைப்போல் அவர் வழியில் நின்று, வீடுவீடாய்போய் பிள்ளைகளைப் பிடித்துப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கற்பித்தார்கள். “ஆளே, நமது ஊரிலிருந்து பிள்ளைகள் பல்கலைக்கழகம் போகவேணும். அதற்கு உயர்தர வகுப்பு வைக்கவேண்டும். பாடசாலை மகாவித்தியாலயமாகத் தரமுயர்ந்தால்தான் உயர்தர வகுப்பு வைக்கமுடியும். அனுமதியும் கிடைக்கும். மகாவித்தியாலயமாய் தரமுயர்வதற்குப் பிள்ளைகளின் எண்ணிக்கையும் வேண்டும். அத்துடன் க.பொ.சா. பரீட்சையில் நல்ல பெறுபேறும் வேண்டும். பெறுபேறு எடுத்து விடலாம். பிள்ளைகளின் ஒத்துழைப்பு உள்ளது. எப்படிப் பிள்ளைகளது தொகையைக் கூட்டுவது”? தங்கராசா ஆனந்தரோடு ஆலோசித்தார்.
“அதற்கு வழியுண்டு” ஆனந்தர்
“என்ன வழி”“பாடசாலையிலிருந்து இடைவிலகிய பிள்ளைகளை மீண்டும் சேர்ப்பது”“அது எப்படி முடீயும்”?“அதிபர் சம்மதித்தால் சேர்க்கலாம். அதற்கு முறைசாராக் கல்விப்பிரிவு இருக்கிறது. அதற்குரிய வேலைகளைச் செய்து போட்டன்”
மாலை நேர வகுப்புக்களை வைத்தார்கள். இடைவிலகிய பிள்ளைகளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். எண்ணி மூன்று மாதங்களில் மாணவர் தொகையை சரிப்படுத்தினார்கள். இடைவிலகிய பிள்ளைகளை அவர்களது தரத்ததுக்கு ஏற்ப பாடசாலையில் சேர்க்கும் சுற்று நிருபத்தையும் வைத்திருந்தார்கள். அதிபர் வெற்றிவேல் அருமையானவர். ‘அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல்…அன்ன யாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோரேழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று பாரதிவழியில் வாழ்பவர். இருவரும் அதிபரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். பாடசாலை நேரத்தில் அதிபரோடு கதைக்க முடியாது. அவர் அதிபர் அறையில் இருக்கமாட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புக்களை நடத்திக் கொண்டிருப்பார். ஆசிரியர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. உண்மையில் அந்தப் பாடசாலையில் பன்னிரண்டு வுகப்புக்களும் ஆறு ஆசிரியர்களுமே இருந்தார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டு வகுப்புக்களைப் பார்த்தே ஆகவேண்டும். ஓரு வகுப்புக்கு எழுத்து வேலையைக் கொடுத்து விட்டு மற்ற வகுப்புக்குக் கற்பிப்பார்கள். பின் அந்த வகுப்புக்கு பயிற்சி கொடுத்து விட்டு மற்ற வகுப்பைப் பார்ப்பார்கள். இப்படிக் கடுமையாக உழைத்தார்கள்.
அதிபரிடம் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிச் சொன்னபோது அவர் துள்ளிக்குதித்தார். “பிள்ளைகளைச் சேர்த்துக் கற்பிக்கத்தானே நாமிருக்கோம். எத்தனை பிள்ளைகளும் வரட்டும். சேர்ப்போம். இடமா இல்லை. இந்தப் பாடசாலையின் மரங்கள் வகுப்புக்களை நடத்த அனுமதி தரும்.” அதிபரின் புன்னகை கலந்த சம்மதம் அவர்களை உற்சாகப் படுத்தியது. பிள்ளைகளின் தொகை அறுநூற்றைத் தாண்டியது. மகாவித்தியாலயமாகத் தரமுயர்வும் பெற்றது. எனினும் உயர்தர வகுப்புக்கள் நடத்த அனுமதி இன்னும் இல்லை. பாடசாலையில் பகலிரவு பாராது வகுப்புக்களை நடத்தி க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவைத்தார்கள். உயர்தர வகுப்பும் தொடங்குவதற்குரிய வழிவகைகளைச் செய்தார்கள். ஆனால் அம்முயற்சி இழுபறியில் கிடந்தது.
ஆனந்தர் இப்போது அதிபராகக் கடமையினை ஏற்றிருந்தார். ஆனந்தர் தற்துணிவுள்ள அதிசயப்பிறவி. உரிய அனுமதியின்றி வகுப்புக்களை நடத்தினார். அதிகாரிகள் வந்து பார்த்தால் ஏற்றபதில் சொல்லக்கூடிய வல்லமையையும் பெற்றிருந்தார். பொருத்தமான ஆவணங்களைத் தயார் படுத்தி வைத்திருந்தார். உயர்தர வகுப்பும் தொடங்குவதற்குரிய வழிவகைகளைச் செய்வதில் அலுவலகங்களையும் அதிகாரிகளையும் சந்தித்தார். அவர் பட்ட துயரங்கள் அவருக்குத்தான் தெரியும். பசி துறந்து பணியில் ஈடுபட்டார். கொழும்பில் உயர்தர அதிகாரிகளின் உதவி கிடைத்தது. பலமாத முயற்சி பயனைக் கொடுத்தது. உயர்தர வகுப்பு வைப்பதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது.
உரிய கடிதத்தோடு ஒன்று கூடல் நேரத்தில் ஆனந்தர் அதனை அறிவித்தார். ஆசிரியர் சச்சிதானந்தம் மாணவர்களிடம் கூறிருந்தார். மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தார்கள். இந்தக் கிராமத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குப் போவதென்றால் எவ்வளவு பெரிய சாதனை. சில உயர்தர மாணவர்கள் பூமாலை சகிதம் வந்தார்கள். அதிபரின் கழுத்தில் தொங்கவிட்டு அழகுபார்க்க நினைத்தார்கள். அதிபர் அவற்றை ஏற்கவில்லை. “நான் இந்த ஊரில் பிறந்தவன். வெளியூர்களில் படித்தவன். நமது ஊர்மக்களின் வறுமையை உணர்ந்தவன். என்னை எனது பெற்றோர் வறுமையில் வாடி எஸ்.எஸ்.சி வரைதான் கற்பித்தார்கள். எனது உயர்கல்வியை நானே தேடிப் படித்து இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். நீங்கள் இந்த ஊருக்குச் செய்யும் கடமைகள் பலவுள்ளன. நீங்கள் இப்பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகம் சென்று உயர்பதவிகளைப் பெறவேண்டும். இந்தப் பாடசாலைக்கு ஆசிரியர்களாக அதிபர்களாக வரவேண்டும். அதனைத்தான் மனதார நாங்கள் எற்றுக் கொள்வோம். இந்த ஊர் எனக்கு என்ன செய்தது? என்று கேட்காதீர்கள். இந்த ஊருக்காக நான் என்ன செய்தேன் என்று கேளுங்கள். பூமாலைகளைப் போடும் நீங்கள் ஒருநாளைக்கு எங்களைப் புறந்தள்ளவும் கூடும். ஆனாலும் எங்களது கடமையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.” கூறிவிட்டு வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுப்பினார்.உயர்தர வகுப்பில் அனைத்துப் பாடங்களையும் அதிபராக இருந்த ஆனந்தரே சிலகாலம் கற்பித்தார். பின்னர்தான் சில ஆசிரியர்கள் வந்தார்கள். முதற்தடவையிலேயே பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள். ஆனந்தரும், தங்கரும் கல்விப் பணிப்பாளர்களாகப் பதவியுயர்வு பெற்றுச் சென்றார்கள். முதன்முதல் பல்கலைக்கழகம் சென்றவரே அதிபராகக் கடமையும் ஏற்றிருந்தார். இப்போது இருக்கும் பல ஆசிரியர்கள் அந்தப் பாடசாலையிலேயே படித்தவர்கள்தான்.
இப்போது ஆனந்தரும், தங்கரும் பென்சனியர்கள். யுத்தக்கொடுமையினால் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள். பென்சன் நாளன்று பென்சனை எடுத்துவிட்டு ஊரில் ஓரிரு நாட்களைக் கழிப்பார்கள். வரும்போதெல்லாம் தங்களிடம் படித்து அதிபராயும். ஆசிரியர்களாயும் இருப்பவர்களைச் சந்திப்பார்கள். அறிவுரை சொல்வார்கள். அவர்களது அறிவுரைகளை வேண்டா வெறுப்பாகக் கேட்பார்கள். மெதுவாகக் கழன்றுவிடுவார்கள்.
“ஆளே பென்சன் எடுத்திட்டு ஒருக்கா நமது ஊரைப்பார்த்திட்டு வருவம். எப்படிக் கிடக்குதென்று அறிய ஆசை. பாழாய்போன இந்த யுத்தத்தினால எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்திட்டம். எத்தனை கோடி பெறுமதியான சொத்துக்களை நமது சனங்கள் இழந்து தவிக்குதுகள். அதோட எங்கட நிம்மதியான வாழக்கையும் போச்சு” தங்கர் ஆனந்தரைக் கண்டதும் சொன்னார். “ஒன்றுக்கும் பயனில்லாத அமைப்புக்களால் சொந்தச் சனங்கள் செத்ததுதான் மிச்சம். இந்த வாழ்க்கை என்பது வேடிக்கையானது. அவனவன் வாழப் பழகிக் கொண்டான். சரி பகல்உணவுக்குப்பின் ஒருக்காப் போய் இரவுப் பொழுதை அங்கேயே முசுப்பாத்தியாய் கழிப்பம் என்ன?” ஆனந்தர் கூற இருவரும் சொந்த ஊருக்குப் வஸ் ஏறினார்கள். “ சா…என்ன மாதிரியான பாலம். இப்ப வசதியாய் போச்சு. நல்ல பாலம் கட்டிப்போட்டாங்க. நம்மட காலத்தில இந்தத் துறையடியில எவ்வளவு நேரம் காத்துக்கிடந்திருப்பம்”. தங்கர் பழைய நினைவுகளில் இழையோடினார்.
ஊர் கலகலப்பாக இருந்தது. ஒலிபெருக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கு போனபின்தான் தெரிந்தது. ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். ஆனந்தரின் கண்கள் பனித்தன. “ஆளே இந்த உலகத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. நாங்க கறிவேப்பிலைகள். இன்னும் சொன்னா பற்றவைத்து காரியம் முடிஞ்சதும் தூக்கியெறிந்து விட்ட குறங்கொள்ளிக் கட்டைகள். இப்படியே போய் ஒருக்கா கோயிலைப் பார்த்துக் கும்பிட்டுட்டுத் திரும்பிப் போவம்.” கோயிலின் முன்னால் நின்று மனதை ஒருநிலைப் படுத்திக் கும்பிட்டார்கள். “ஐயா பாடசாலையில விளையாட்டுப் போட்டி நடக்குது. நீங்க போகல்லயா”? ஐயர் தீருநீறு கொடுத்தவாறே கூறினார். கண்களை மூடி மெய்மறந்து கும்பிட்ட ஆனந்தரின் செவிகளில் ஐயரின் குரல் அதிர்ந்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டார். “அதற்காகத்தான் வந்தநாங்கள். முதலில விநாயகப் பெருமானைப் பார்த்து விட்டுத்தான் மற்றது” பதிலளித்துத் திருநீற்றைப் பூசினார்.
ஐயருக்கும் தெரியும். உண்மையில் அவர்களை யாரும் அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த ஊரில் இருக்கும்போது ஒவ்வொரு வெள்ளியும் கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். ஊரில் கலைவிழாக்கள், பெருவிழாக்கள் மக்களுக்கு விழிப்பையூட்டும். பாடசாலையின் இரண்டு தூண்களான அவர்கள் இந்தக் கிராமத்துக்குச் செய்த சேவைகளை ஐயர் மனதில் நினைந்து கொண்டார். இந்த ஐயரும் இவர்களிடம் படித்தவர்தான். மனிதனின் மனம் பலத்தையும், பலவீனத்தையும் கொண்டதுதானே? அவர்களது மனங்கள் தளர்ந்து விட்டனதான். சிரிப்பாகவும் இருந்தது. ஆளையாள் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

ஊர் மாறியிருந்தது. ஓலைக்குடிசைகள் உணர்ச்சியில்லாக் கட்டிடங்களாக ஆகியிருந்தன. அந்தக் காலத்தில் வீதிகளில் விழுந்தாலும் காயமேற்படாது. மணலாக இருந்தன. மணலைப்போல் மக்களது இதயங்கள் இருந்தன. காயப்படுத்தாத உள்ளங்கள் இருந்தன. இப்போது தார் வீதிகளாக மாற்றம் பெற்றிருந்தன. உள்ளத்தாலும் உடலாலும் காயப்படுத்தும் மனிதர்கள் உள்ளனர்.
மணல்வீதிகள் தார் வீதிகளாக மாற்றம் பெற்றிருந்தன. வீதியில் விழுந்தால் காயமேற்படும். இப்போது காயப்படுத்தும் மனிதர்கள் உள்ளனர். என்ன இருந்தும் மனிதர்களின் மனங்கள் மாறிவிட்டதை உணர்ந்தார்கள். மனிதரை மதிக்காத பண்புகள் நிறைந்திருந்தன. வளர்த்த கடாக்கள்தான் மார்பில் குறிவைத்துத் தாக்கும். அன்று தனக்குப் பூமாலை சூடவந்தவர்களை முன்நிறுத்திப் பாரத்தார். அவர்களது செயலை இப்போது எண்ணிப்பார்த்தார். மனப்பாங்கை நினைத்துக் கொண்டார். அவர்கள் இந்தநிலைக்கு உயர்ந்து நிற்பதற்குத் தூண்களாகிச் சுமந்தோமே. அதிலொரு சுகமிருப்பதை அனுபவிதார்கள். புறந்தள்ளிவிட்டதை எண்ணிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது உள்ளம் அவ்வளவுதான். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் உருவான பாடசாலைக்குள் அவர்களுக்கு இனியென்ன வேலை? பாடசாலைக்குள் நுழையவேண்டாம் என்பதற்குத்தானே பென்சன் கிடைக்கிறது. கறிக்கு ருசியூட்டத்தானே கறிவேப்பிலையைப் போடுகிறார்கள். ருசியூட்டியபின் அந்த இலைகளால் பயனில்லை. அவற்றை வீசிவிடுவார்கள். இதுதான் மனித வாழ்க்கை. வந்ததுபோல் வஸ்சில் ஏறிக் கொண்டார்கள்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP