Wednesday, May 19, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

25

நித்திரையும், விழிப்புமாக இரவு, பகல் கழியும். சாய்ந்திருத்தல். எழுந்து ஆறடி நீளம், இரண்டடி அறைப்பரப்பில் நடப்பது. சற்று நேரம் குந்தி யிருப்பது எனப் பொழுது மெதுவாகக் கழிந்து செல்லும். சூரிய ஒளி அவர்களைக் கண்டு உளிந்து கொண்டதா? அல்லது, சூரிய ஒளியை இவர்களுக்குக் காட்டாமல் சூரியன் மறைக்கிறதா? கேள்விகள் எழும். விடையும் கிடைக்கும். ஆனால் விடிவு கிடைக்காது. பொழுது விடிந்து விட்டது. அதிகாலையிலேயே அவர் வந்திருந்தார். "நான்தான் சட்டத்தரணி சொர்ணன். மிஸ்டர் பாலசிங்கம் இரவு வந்து விசயத்தைச் சொன்னார். உங்கட சம்மதத்தக் கேட்டுப்போட்டு, நாளைக்கு கோட்ல ஆட்கொணர்வு மனுக்கொடுக்க யோசிக்கிறன். உங்கட விருப்பமென்ன“? சொர்ணம் அடுக்கிக் கொண்டு போனார்.

"நீங்க இவ்வளவு தூரம் அக்கறை காட்டி வந்ததற்கு நன்றி. அதற்கு என்ன செய்யவேணும்“? ஆனந்தன் அவரைப் பார்த்துக் கேட்டான். "நீங்க ஒண்ணும் செய்யத்தேவையில்ல. நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவன். இது பொல்லாத கேஸ். அவசரகாலச் சட்டத்துக்குக் கீழ் பிடிச்சிருக்காங்க. அவங்கள் டி .ஓ போட்டால்....பிறகு உங்களக் கொழும்புக்கு அல்லது வேறெங்காவது கொண்டு போயிடுவாங்க“. சொர்ணம் சொன்னதைக் கேட்டு அலெக்சாந்தரின் விழிகள் பிதுங்கின. "என்ன அநியாயம் சேர் இது. நாங்க..அரசாங்க உத்தியோகம் செய்யுறம். பாடசாலையும், பிள்ளைகளும் என்று பாடுபடுறம். எங்களுக்கு ஏனிந்த நிருவத்தத் தாறாங்க“. அலெக்சாந்தர் சொற்கள் விம்மலூடாக வந்தன.

குற்றம் செய்பவர்கள் யாரோ. ஆனால் மாட்டிக் கொள்வது ஒன்றும் அறியாத அப்பாவிகள்தான்;. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது. யாரையும் குறை சொல்லிக் குற்றமில்லை. "சேர்..இதுக்குச் செலவு எக்கச் செக்கமாச் போகுமே. எவ்வளவு போகும்“? அலெக்சாந்தர் பயத்துடன் சட்டத்தரணியைப் பார்த்துக் கேட்டான். அவ்வளவு போகாது. இந்தப் பொலிஸ்காரர், சிறூழியர்கள், கோட் செலவென்று கொஞ்சம் போகும். அவ்வளவுதான். செலவைப் பார்த்தால் சரிவருமா? "இல்ல சேர். மன்னிச்சுக் கொள்ளுங்க. இப்படி ஆயிரக்கணக்கான அப்பாவிகள். போலிஸ் நிலையங்களிலும், பல சிறைக்கூடங்களிலும் கிடக்கிறாங்க. அவங்களப் போல நாங்களும் கிடந்திட்டுப் போறம். அந்த அப்பாவிகளுக்கு உதவிசெய்ய யாராவது முன்வாறாங்களா“? ஆனந்தன் கவலையோடு தெரிவித்தான். "உங்கள எனக்கு நல்லாத் தெரியும் என்றதாலதான் நான் வந்தனான். அத்தோடு மிஸ்டர். பாலசிங்கமும் நேற்று வந்து சொன்னார். உங்களுக்கு விருப்பமில்லயென்டால் விடுவம்“;. சட்டத்தரணி சொர்ணன் இழுத்தார்.

"அதுக்கில்ல...சேர். தவறாக எடுக்காதீங்க. நீங்க வந்ததற்கு மிச்சம் நன்றி. நாளைக்குச் சொல்லுறன் சேர். குறை எண்ணாதீங்க“. ஆனந்தன் பவ்வியமாகக் கூறினான். "சரி... நீங்க மிஸ்டர் பாலசிங்கத்திடம் சொல்லிவிடுங்க. நான் வாறன்“. அவர் மெல்ல நடையைக் கட்டினார். "என்ன சேர்.. அவர் சொன்னதுபோல் மனுப் பண்ணுவமா“? அலெக்சாந்தர் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார். "இஞ்ச பாருங்க... அலெக்ஸ் நாங்க வழக்கு, கோட், என்று போனால் இன்னும் சிக்கல் வரும். எக்கச் செக்கச் செலவு வரும். அந்தச் செலவுக்கு என்ன செய்வது?. நாங்க அரசாங்க உத்தியோகத்தர்தான். ஆனால் எடுக்கிற சம்பளம் என்ன? வாழ்க்கைச் செலவுக்கே காணாது. கடனாளியாகப் போய்க் கொண்டிருக்கிறம். எந்த அரசாங்க உத்தியோகத்தர் வசதியாக வாழுறாங்க?. எல்லாரும் 'பேச்சுப் பல்லக்கு தம்பி பொடிநடைதான்’; என்றுதான் கிடக்கிறாங்க. பேசாமக் கிடப்பம்.“ ஆனந்தன் தனது ஆதங்கத்தை வெளியில் விட்டான்.

அவனது கண்கள்முன் ஆமிக்காரங்களின் அட்டகாசங்களும், சித்திரவதைக்குள் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளும் தெரிந்தனர். எந்த அரசியல்வாதி இவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறான்.? தேர்தல் காலங்களில் இளைஞர்களின் தலையில் தலைப்பகை கட்டிவிடுகிறான். மொழிவெறியையும், இனவெறியையும் தூண்டி விடுகிறான். 'இப்படை தோற்;கின் எப்படை வெல்லும்’ என்றும் 'தூக்கு மேடை பஞ்சணை மெத்தை’ என்றும் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக்கி விளையாட விடுகிறான். அவர்களும்; கோஷமிட்டு பலிக்கடாக்களாக்கி விடுகிறார்கள். விட்டில் பூச்சிகளாக விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களது சுகபோகங்களுக்காக அப்பாவி இளைஞர்கள் அணுவணுவாகச் சித்திரவதைக்குள் சிக்கிச் செத்து மடிகிறார்கள். இனவாத அரசியலால் நமது நாடு சகதியாகி விட்டது. மூவின இளைஞர்களும் சண்டையிட்டு மடியப் போகிறார்கள். பயங்கரவாதம் என்ற போர்வையில் மனித இனம் அழிந்துபோகும். ஆனந்தனது மனக்கடலில் புயல் வீசியது. கண்கள் சிவந்து கண்ணீர் கசிந்தது.

என்று இந்த இலங்கைத்தீவில் சமாதானப் புறா பறக்கும். எப்போது விடிவு வரும்? அவனது உள்ளம் கொதித்தது. "சேர் என்ன யோசனை“? அலெக்ஸாந்தர் கேட்டார். "அலெக்ஸ் கவலைப்படாமல் இருப்பம். நமது வாக்குமூலத்தைப் பதிந்து கொண்டார்கள்தானே? அந்த சீ.ஐ.டி. ஒபிசர் எங்களைக் கைது செய்த கப்ரனுக்கு ஏசியதை நினைத்துப் பார்க்கிறன். நாங்கள் நிரபராதியென்று அவர் முகம் சொன்னது. அவர் கட்டாயம் தனது றிப்போட்டைக் கொடுத்திருப்பார். எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கென்றால் நம்பிக்கை இருக்கிறது“. "என்னெண்டு சேர்“. அலெக்ஸாந்தர் சிறுபிள்ளையைப் போல் ஆனந்தனின் முகத்தைப் பார்த்தவாறே கேட்டார்.

"அலெக்ஸ்..நாங்கள் யாருக்கு என்ன குற்றம் செய்தம்?. நாங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யிறம். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். எனக்குப் பல கனவுகள் உள்ளன. மலையக மக்களைப் பேரினவாதம் விரட்டியடித்தது. காந்தியம் செய்த சேவை அளப்பரியது. வன்னியில் நூற்றுக்கும்மேலான கிராமங்களில் மலையக மக்களைக் குடியமர்த்திய பெருமை காந்தியத்திற்கு உண்டு. டாக்டர் இராஜசுந்தரம், டேவிட் ஐயா, இன்னும் பல இளைஞர்களின் அரிய முயற்சியினால் காடுகள் கிராமங்களாகின. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் அந்த மக்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் கல்வி ஒளிவீச வழி செய்யவேண்டும். இந்த வவுனியா மாவட்டத்தில் உள்ள அத்தனை கிராமங்களிலும் பாடசாலைகளை அமைக்கவேணும். அந்தக்கனவு மெய்ப்பட வேண்டும். அது மெய்ப்படும். அந்த நம்பிக்கை எனக்கு ஆன்ம பலத்தைக் கொடுத்துள்ளது. அலெக்ஸ்! இருந்து பாருங்க. எண்ணி இரண்டு கிழமைகளுக்குள் நமக்கு விடுதலை கிடைக்கும்“;. உணர்ச்சிசோடு உறுதியாக ஆனந்தன் கூறினான்.

அலெக்ஸாந்தார் ஆனந்தனை நன்றாக அறிந்தவர். ஆனந்தன் முதன்முதல் செட்டிகுளம் வந்ததையும், இரண்டு பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துத் திறந்து வைத்ததையும், இரண்டு பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களை வைப்பதற்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததையும் நினைத்துக் கொண்டார். அலெக்ஸாந்தர் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். பின்னர் அரசியல் சிக்கலால் பிரதி அதிபராக்கப் பட்டவர். அவரது செயற்திறன் மீண்டும் அதிபராகப் பதவியுயர்வு பெறச்செய்தது. அவரது மனத்திரை சற்று விரிந்தது.

அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கல்விக் கட்டமைப்பு நன்றாகச் செயற்பட்டது. மாவட்டங்களில் கல்விக்குப் பொறுப்பாக மாவட்டக் கல்விப் பணிப்பாளர் இருந்தார். அவருக்கு அடுத்து பிரதம கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி அதிகாரி எனப் பலர் இருந்தார்கள். வவுனியா மாவட்டம் நான்கு வட்டாரங்களாக எல்லையிடப் பட்டிருந்தது. முதன்முதல் ஆனந்தன் செட்டிகுளம் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று வந்தான். முன்பின் தெரியாத இடம். அறிமுகம் இல்லாத மனிதர்கள். அதிபர்களையோ, அல்லது ஆசிரியர்களையோ அவன் அறிந்திருக்க வில்லை. அவர்களைச் சந்தித்திருக்கவும் இல்லை. அவனை யாரும் முதல் கண்டதும் இல்லை. ஒவ்வொரு கல்வி வட்டாரத்திலும் அதிபர்கள் சங்கம் இருக்கும். மாதம் ஒருமுறை அதிபர்கள் கூட்டமிருக்கும். அதிபர்களே கூட்டம் நடக்கும் திகதியைத் தீர்மானித்து அறிவிப்பார்கள்.

பாடசாலைகளின் வருடாந்த வேலைத் திட்டங்கள் பற்றிய குறைநிறைகள், தேவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். சிலமாதங்களாக இந்தக் கல்வி வட்டாரத்துக்குக் கல்வி அதிகாரியில்லை. முதலிருந்தவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். தற்காலிகமாக ஒருவர் வந்து போனார். கல்விச் சேவைகள் பாதிக்கப்பட்டன. புதிய கல்வி அதிகாரி வருவதை அதிபர்கள் அறிந்திருந்தார்கள். அதிபர்கள் கூட்டத்திற்காக வந்து கொண்டிருந்தனர். பாடசாலை தொடங்கு முன்னமேயே ஆனந்தன் பாடசாலைக் கேற்றைத் திறந்து பிள்ளைகளோடு அளவளாவிக் கொண்டிருந்தான். தன்னை யார் என்று அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு ஆசிரியராக நடித்துக் கொண்டிருந்தான். பாடசாலைக்கு முதல் வருகை தருபவர் அலெக்சாந்தர்தான். அவர் அப்போது பிரதி அதிபராக இருந்தார். அவர்தான் சிரித்த முகத்தோடு வந்து விசாரித்தார். ஆனந்தன் அதிபரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினான். அதிபர் வரும்வரை பாடசாலையைச் சுற்றி உலா வந்தான்.

அதிபர் வந்ததும் ஒன்றுகூடலுடன் பாடசாலை தொடங்கப்பட்டது. தூரத்தில் நின்றவாறே யாவற்றையும் அவதானித்தான். அதிபர் தனது அலுவலகத்துள் புகுந்து கொண்டார். அலெக்சாந்தர் ஆனந்தன் பக்கம் வந்தார். "சேர் கனநேரமாக நிக்கிறீங்க. வாங்க அதிபரைச் சந்திக்கலாம்“. அழைத்தார். பின்னால் சென்றான். "சேர்.. இவர்..உங்களைப் பார்க்க வேணுமாம். கனநேரமாகக் காத்திருக்கிறார்“;. அலெக்ஸ் அதிபர் ரத்தினத்திடம் சொன்னார். ரத்தினம் அரசியல் செல்வாக்கில் அதிபராக வந்தவர். "அப்படியா.. இப்ப எனக்கு நேரமில்ல. அதிபர்கள் கூட்டமிருக்கு. இன்டைக்கென்று புதிய கல்வி யதிகாரியும் வாறார். கூட்டம் எப்பமுடியுமென்று தெரியாது. அதுதான் புறப்படுறன். நாளைக்கு வரேலுமா?. மிஸ்டர் அலெக்சாந்தர் இவரிட்ட என்ன விசயமென்று கேட்டு வையுங்க. நான் வாறன்.“ அதிபர் சொல்லிக் கொண்டே வெளியில் வந்தார். "அதுக்கென்ன நாளைக்குச் சந்திக்கிறன்“. கூறியவாறே பின்னால் சென்றான். அதிபர் விறுவிறென்டு அதிபர்கள் கூட்டம் நடைபெறுமிடத்துக்கு நடந்தார். "இவர் இப்படித்தான்..சேர். சேர் உங்களுக்கு என்னால ஏதும் உதவி செய்யமுடியுமா“? அலெக்ஸாந்தர் பதிலுக்காகக் காத்திருந்தார். அவரின் நடத்தைகள் ஆனந்தனை வெகுவாகக் கவர்ந்தது.

அதிபர் ரத்தினம் சுறுசுறுப்பற்றவர். எல்லாவற்றிலும் ஒரு அசமந்தப் போக்கு. அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டான். "மிஸ்டர் அலெக்சாந்தர் நீங்கள் அதிபர் கூட்டங்களுக்குப் போவதில்லையா“? ஆனந்தன் கேட்டான். "முதலில் நான்தான் அதிபராக இருந்தன். திடீரென இவர் கல்வித்திணைக்களக் கடிதத்தோடு அதிபராக வந்தார். நான் விலகிக்கொண்டன். அவர் கூப்பிட்டால் போவன்“. அலெக்ஸாந்தர் பதிலளித்தார். "இன்றைக்குப் போகல்லையா? ஆனந்தன் கேட்டான். "புதிய கல்வி அதிகாரி வாறாராம். வந்தபின் போகயிருக்கிறன்“. அலெக்ஸ் சொன்னார். கூட்டம் முடியும்வரை நானும் உங்களோட வந்திருக்கலாமா? நடப்பதை அறிந்தால் நல்லதொரு நியூஸ் பத்திரிகையில் போடலாம்“;. ஆனந்தன் கூறியதும் அலெக்ஸ் சந்தோசப்பட்டார். "நல்லது சேர். எங்கட புதிய கல்வி அதிகாரியும் வாறார். அவரைப்பற்றியும் பத்திரிகையில் போடலாம். வாங்க போவம்“. அழைத்தார்.

இருவரும் அதிபர் கூட்டம் நடக்கும் மண்டபத்துக்குச் சென்றார்கள். அதிபர்கள் ஒன்று கூடினால் கலகலப்பாக இருக்கும். தங்களது வீரப்பிரதாபங்களை விட்டுப் பார்ப்பார்கள். எல்லோரும் சேர்ந்து கதைப்பதால் ஒன்றும் விளங்கவில்லை. "சேர் எதுக்கும் ஒருக்கா இதில நில்லுங்க. உள்ளேபோய் எங்கட அதிபரிடம் ஓரு சொல்கேட்டுட்டு வாறன்“. சொல்லியவாறு அலெக்ஸ் உள்ளே சென்றார். வரிசையாக நின்ற வேப்பைமரங்கள் நிழலை அள்ளி வீசின. வேப்பம்பூக்கள் சொரிந்து அழகூட்டின. வாசம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சூழலை அவதானித்தான். எதிர்ப்புறமாக ஜேசு கோயில். பாலைமரத்தின் கீழ் மாதாவின் அழகுச் சிலை. எங்கும் பயன்தரு மரங்கள். வன்னிக் காடு வளத்தைத் தன்னகத்தே பொத்தி வைத்திருந்தது. வளமான மண், தோட்டங்கள் நிறைந்து பயிர்கள் சிரித்தன. உழுந்தும் பயறு, எள்ளு என எங்கும் தானிய வகைகள். உழைப்பால் உயரும் மக்கள். ஆநிரைகள் என செட்டிகுளம் செழித்திருந்தது. கதிரைகளை அரக்கித் தங்களுக்கு விருப்பமான இடங்களில் அதிபர்கள் அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள்.


தொடரும்

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

24

காலை கணபதிப்பிள்ளை வந்தார். "இன்டக்கி உங்கட வாய்மொழி விளக்கம் எடுப்பாங்க. நீங்க மூன்று பேரும் செட்டிகுளத்தோடு தொடர்புபட்டுள்ளதால அங்கதான் கூட்டிப் போவாங்க. விளக்கம் எடுத்தபின் அடுத்த கிழமை எஸ்.பி. வந்ததும் விடுதலை செய்வதாகப் பேசிக்கொண்டார்கள்“. சொல்லிவிட்டுப் போய்விட்டார். பொலிஸ் ஜீப் தயாராக நின்றது. மூவரையும் சில பொலிஸ்கரர்களையும் ஜீப் சுமந்தது. முன்னாசனத்தில் இன்ஸ்பெக்டர் திசநாயக்க இருந்தார். ஜீப் விரைந்து சென்றது. செட்டிகுளம் சோபை இழந்து கிடந்தது. கிராமப் புறங்கள் இராணுவத்தாரின் சுற்றிவளைப்புக்களுக்கு உள்ளாகின. இளைஞர்கள் காடுகளில் தஞ்சமாகினார்கள்.

செட்டிகுளத்தில் பரமனின் வீடு இருந்தது. வீட்டில் ஜீப் நின்றது. அங்கு தேநீர் வரவழைக்கப் பட்டது. சிலபேரிடம் இன்ஸ்பெக்டர் கதைத்தார். பரமனின் இரண்டு சகோதரர்கள் வந்து இன்ஸ்பெக்டரோடு கதைத்தார்கள். "சரி ஆலங்குளம் வாடிவீட்டுக்குப் போவம்“. இன்ஸ்பெக்டர் திசநாயக்க சொன்னார். ஜீப் கல்லாற்றைத்தாண்டியது. ‚மனிக் பாம்‘ கடந்து பறையனாளங்குளம் சந்தியை அடைந்தது. மோட்டார் சைக்கிளில் பரமனின் சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள். மன்னார் - மதவாச்சி வீதியும், வவுனியா - மன்னர் வீதியும் இணையும் சந்தியது. மரங்கள் நிறைந்த சோலை. அதற்குள் அழகாக அமைந்த வாடிவீடு. வாடிவீட்டுக்குப் பொறுப்பாக விமலன் கடமையாற்றினான். அவனை ஆனந்தனுக்கு நன்றாகவே தெரியும். வாடிவீட்டின் எதிர்புறமாக வீதியைக் கடந்து ஆலங்குளக் கிராமத்துப் பாடசாலை. கனகசூரியன் அதன் அதிபராகக் கடமையாற்றினார். அவர் நல்லதொரு கவிஞருமாவார். க.பொ.த. சாதாரணதர வகுப்புவரையுள்ள பாடசாலை. ஆனந்தன் அடிக்கடி பாடசாலைக்கு வருகைதருவான். ஆசிரியர்களோடு சேர்ந்து கற்பிப்பான். வாடிவீட்டில் உணவினை உட்கொள்வான்.

அதிபர் ஓடிவந்து எட்டிப் பார்த்தார். ஆனந்தன் ஒருவாறு அவரை வழியனுப்பி வைத்தான். ஆனந்தன், அலக்சாந்தர், பரமன் மூவரும் வாடிவீட்டின் ஒரு மூலையில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் தனியாக ஒரு இடத்தில் கதிரையில் இருந்தார். மூன்று பொலிஸ்காரர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டரின் முன்னாலுள்ள மேசையில் உயர்ரக மதுப்போத்தல்கள் இருந்தன. பொலிஸ்காரர்கள் மேசையிலும் வைக்கப்பட்டன. கிளாசில் ஊற்றிக் குடித்தாரகள்;. பரமனின் சகோதரர்களோடுதான் இன்ஸ்பெடர் கதைத்தார். அவர் இடைக்கிடை பொலிஸ்காரரைக் கூப்பிட்டு ஏதோ சொல்லுவார். "யேஸ் சேர்“; போட்டுவிட்டு வருவார்கள். தமது மேசைக்கு வந்து தாங்களும் போடுவார்கள். போத்தல்கள் காலியாகும் வரை குடித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் நேரத்தைப் பார்த்தார். "போவம்“ புறப்பட்டார்கள். செலவெல்லாம் பரமனின் சகோதரர்கள் கவனித்தார்கள். நேரே பரமன் வீட்டுக்கு ஜீப் விரைந்தது. மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது. செட்டிகுளம் மக்கள் பரமனின் வீட்டுக்குப் படையெடுத்திருந்தனர். மூவரையும் குளிக்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். மூவரும் கிணற்றடிக்குக் குளிக்க நடந்தார்கள். அவர்களால் நடக்க முடியாதிருந்தது. ஆனந்தனுக்குக் கால்களை நிலத்தில் வைக்கமுடியாதிருந்தது. அலக்சாந்தர் பொலிஸ்நிலையத்தில் பாதரோடு சரணடைந்ததால் அடியில்லாது தப்பமுடிந்தது. அடியின் வலி இப்போது தெரிந்தது. நொண்டியபடியே பரமனும், ஆனந்தனும் நடந்தார்கள். ஆனந்தனின் பாதங்கள் வீங்கியிருந்தன. பாதவிளிம்புகள் கருநீலநிறத்தில் தெரிந்தன. சனங்கள் பார்த்துக் கொதித்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யவும், பேசவும் முடியாது. நெட்டைமரங்களாக நின்றார்கள்.

அவர்கள் குளித்து வரும்வரை பொலிஸ்காரர்கள் வீட்டின் பின்புறமிருந்து குடித்துக் கொண்டே இருந்தார்கள். "அவங்களுக்குச் சாப்பாடு குடுங்க.“ தங்கள் வீடுபோல் பொலிஸ்காரர்கள் உத்தரவு போட்டார்கள். போலிஸ்காரர்கள் இப்போது தங்கள் தரத்தினை விட்டு ஒன்றாக இறங்கி உறவாடினார்கள். சும்மா சொல்லக்கூடாது. தண்ணி அனைவரையும் சம அந்தஸ்து உடையவர்களாக்கி வீடும். இன்ஸ்பெக்டரின் தோளில் கைபோடும் அளவுக்கு அவர்கள் மாறியிருந்தார்கள். தனியான மேசையில் இன்ஸ்பெக்டரும் பொலிஸ்காரரும் இருந்து சாப்பிட்டார்கள்.

பரமனின் சகோதரர்கள் இன்ஸ்பெக்டரோடு அளவளாவினர். "சேர்..நீங்கதான்..பார்த்து ஏதாவது செய்ய வேணும்“;. அவர்கள் பலமுறை தயவுடன் விண்ணப்பம் செய்தார்கள். "அதற்காகத்தானே..இப்படி இங்கு கூட்டிவந்திருக்கிறம். பயப்பட ஒன்றுமில்லை. நான் போடுற றிப்போட்டிலதான் எல்லாம் இருக்கு. இன்னும் மூன்று நாளையால வெளியில வந்திருவாங்க“ இன்ஸ்பெக்டர் பெருமையாகச் சொன்னார். ஆனால் அவர்கள் ஒன்றும் எழுதவில்லை என்பதை ஆனந்தன் புரிந்து கொண்டான். உணவு முடிந்ததும் இன்ஸ்பெக்டர் அப்படியே சாய்கதிரையில் சாய்ந்து உறங்கினார்.

ஐந்து மணிக்கு ஜீப் புறப்பட்டது. ஆறுமணிக்கு பொலிஸ் ஸ்ரேசனில் ஜீப் நின்றது. தங்களது மாளிகைக்குள் அடைந்து கொண்டார்கள். பசிக்குக் கொஞ்சம் சாப்பிடுவார்கள். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளையின் தயவு கிடைத்தது. கூட்டுக்குள் யாரையும் போடுவதில்லை. அக்கூடு மூவருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. கண்களை மூடுவதும், திறப்பதும், திறந்து பின் மூடுவதும் தொழிலாக இருந்தது. பொலிஸகாரர் என்ன கதைத்தாலும் தங்களைப் பற்றிக் கதைப்பது போல் உணருவார்கள். ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது. இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.

மூன்றாம் நாள் காலையில் கணபதிப்பிள்ளை வந்தார். ""சேர்.. றேமனைத் தெரியுமா..“? கேட்டார். ஆனந்தனுக்கு அவர் கேட்ட பெயருடைய ஆளைத்தெரியாது. "எனக்குத் தெரியாது“. என்றான். "எனக்குத் தெரியும் சேர்..“ பரமன் கூறினான். எனக்கும் தெரியும்“;. அலெக்சாந்தரும் கூறினார். "அவனப் பொடியள் போட்டுட்டாங்க. அவன் பொல்லாத ஆள். அவனால எத்தன அப்பாவிகள் ஆமிட்ட புடிபட்டு சித்திரவதப் பட்டிருக்காங்க. இவனுக்கு ஏனிந்த வேலையெல்லாம்“.? சொல்லிப் போட்டுப் போய்விட்டார். "அவன் ஆக்களக் காட்டிக் குடுக்கிறவன். அவனக் கண்டால் சனங்களுக்குப் பயம். செலவுக்குக் காசிகேட்பான். கொடுக்காட்டி ஆமிக்குப் பிட்டிசன் அடிப்பான்“. பரமன் சொன்னான்.

ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு பாவமாகவும் இருந்தது. அவனைத் தெரிந்திருந்தால் அறிவுரை கூறித்திருத்தியிருக்கலாம். மனதிலே கவலையை மூட்டிக்கொண்டான். பரமனின் மனைவி வந்தாள். நடந்தவற்றை ஒப்புவித்தாள். அவள் சென்றபின் பரமன் அதனைப் ஆனந்தனிடம் சொன்னான். "நேற்று இரவு பொடியன்கள் சிலர் றேமனைத் தேடி வந்தார்களாம். அவன் நல்ல வெறியில் இருந்திருக்கிறான். அவனைப்பற்றிய தகவல்களைத் திரட்டி விசாரித்தார்களாம். அவன் ஒப்புக் கொண்டிருக்கிறான். அவனை ஊர்ச்சந்தியில் ரெலிபோன் தூணில் கட்டிவைத்துச் சுட்டுப் போட்டுப் போய்விட்டார்கள். அவன்தான் நமக்கும் பிட்டிசன் அடிச்சவனாம்“. பரமன் சொல்லி முடித்தான்.

"என்னை அவனுக்குத் தெரியாது.; அவன் ஏன் எனக்குப் பிட்டிசன் அடித்தவன். அப்படிச் செய்ய வாய்ப்பில்லையே“;. ஆனந்தனுக்குச் சங்கடமாகியது. ஒரு உயிரை அழிப்பதற்கு இன்னொருவருக்கு என்ன உரிமையிருக்கிறது.? அழித்த உயிரை மீண்டும் வரவழைக்கமுடியுமா? இந்த மனிதப் பிறவியெடுப்பதே அரிதான விடயம். மனிதப்பிறவி எடுத்தாலும் கூன்குருடு நீங்கிப் பிறப்பது அரிது. இப்படிப் பாவச்செயல்களை மனிதர்கள் ஏன் செய்கிறார்கள்? அமைதியாக இருந்து சிந்தனையில் ஆழ்ந்தான். அலக்சாந்தர் கவலையில் மூழ்கியிருந்தார்.

கணபதிப்பிள்ளை வந்தார். " சேர்... எஸ்.பி வந்திருக்கிறார். ஐந்து பத்து நிமிசத்தில கூப்பிடுவார். அவர் கையெழுத்திட்டால் சரி. நீங்க போகலாம்“. அறிவித்து விட்டுச் சென்றான். பரமனுக்குச் சந்தோசம். ஆனால் ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது. "அலக்சாந்தர்..! எனக்கு நம்பிக்கையில்லை. கதை மற்றப்பக்கமாகத் திருப்பிவிட்டால்? என்ன செய்வது"? ஆனந்தன் கூறினான். பரமன்ர கதையப்பார்த்தால் சிக்கல்போல் தெரிகிறது. "அவன்தான்நமக்கும் பிட்டிசன் அடிச்சது என்றால் அவனுக்கும் நமக்கும் தொடர்பு இருப்பதாக, இவங்கள் மாற்றிவிட்டால்“? ஆனந்தன் யோசனையோடு சொன்னான். "எனக்கும் இப்பதான் விளங்குது. என்ன நடக்கப்போகுதோ தெரியாது“. அலக்சாந்தர் பயத்தோடு சொன்னார்.

"இதில பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? யோகர் சுவாமிகள் அன்றே சொல்லிப்போட்டார“;. ஆனந்தன் சொன்னான். "என்னெண்டு சேர்“? அலக்சாந்தர் குறுக்கே புகுந்தார். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் என்று“ ஆனந்தன் சொன்னான். அலக்சாந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனே தொடர்ந்தான். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கும். இது கீதாஉபதோசம். நடப்பது நன்றாகவே நடக்கும். நாமும் பார்ப்போம“;. ஆனந்தன் வரட்டுச் சிரிபோடு முடித்தான்.

போலிஸ்காரர் வந்து கூப்பிட்டார். பொலிஸ்காரர் முன்னே செல்ல மூவரும் பின்னால் சென்றார்கள். "எஸ்.பி பொல்லாதவர். பயந்தவர்கள் போல் நடிக்கப் பாருங்க“ போகும்போது பொலிஸ்காரர் சொன்னதிவை. "இவர்களும் நடிக்கிறார்களோ தெரியாது. நாடகமாம் இந்த உலகத்தில் நாமெல்லாம் நடிகர்கள்தானே“. ஆனந்தன் மனதினிலே வைத்துக் கொண்டான். ஒரு அரசனுக்குள்ள மரியாதையைவிடவும் இந்த எஸ். பி ...க்கு இருந்தது. அவரைக் கண்டு பொலிஸ்காரர்கள் பயந்து நடுங்கினார்கள். எஸ்.பி. வெகு கம்பீரமாகத்தான் இருந்தார். அவருக்கு எதிரெதிராக நின்று கதைப்பதற்குப் பொலிஸகாரர் பயந்தார்கள். அவருக்கு முன்னால் மூவரும் நின்றார்கள். அவர் கோவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவை முடிந்ததும் நிமிர்ந்து பார்த்தார்.

அவரது பார்வைக்கு முதலே இவர்கள் முந்திவிட்டார்கள். "குட் மோர்னிங் சேர்“. ஆனந்தனும், அலெக்சாந்தரும் சேர்ந்து சொன்னார்கள். பரமன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவரது வாயசையவில்லை. பயங்கரப் பார்வையை வீசினார். ஏற இறங்கப் பார்த்தார். பேரைக்கேட்டார் சொன்னார்கள். "நீங்க பெரிய இது என்ற நினைப்போ“? மேசையில் தட்டியவாறே எழும்பினார். "ஆனந்தன்...அலெக்சாந்தர்....பரமன்...எல்லாரும்.. கூட்டணி..ஆக்கள். ஈழம் கேக்கிற பெடறல் பாட்டி... சப்போட்டர்.. நல்லாப் பேசி மக்கள ஏமாத்துறது“. பெரும் சத்தத்தோடு கர்சித்தார். மேசை லாச்சியை இழுத்து ஒருகுறிப்பை எடுத்தார். „நீங்க இஞ்ச இருக்க...உங்கட ஆக்கள் றேமனைப் போட்டுட்டாங்க“. சொல்லியவாறே கீழுதட்டைப் பற்களால் கடித்தார். அவரது பார்வையில் இந்தப் பாவிகள் பஞ்சாய் எரிந்தனர்.

"இன்ஸ்பெக்டர்...புட் தெம் பிகைன்ட் த பார். கூடுவென் தாண்ட. கூட்டுக்குள்ள போடுங்க“ சொல்லிவிட்டுத் தனது கதிரையில் இருந்தார். இன்ஸ்பெக்டர் பொலிஸ்னகணஒகாரருக்கு உத்தரவிட்டார். பொலிஸ்காரர் கைகளைக் காட்டி அழைத்தார். கைகட்டி மௌனமாகி வந்தபடியே நடந்தார்கள். விதியை நோவதா? நாட்டை நோவதா? யாரை நோவது? "விதியே..விதியே.. தமிழச் சாதியை என்செயவென்று இருக்கிறாயடா“ பாரதியின் வரிகளை மாற்றியபடி மனம்துடித்தது. பழையபடி கூட்டினுள் விட்டுப் பூட்டிவிட்டார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தச் சிறைவாசம். வருவதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.

இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "இன்டைக்கென்று அவனப் போட்டுட்டாங்க... அந்த ஆத்திரத்தோட எஸ்.பி..இருக்கிறார். உங்கள்ள குற்றமில்ல. பயப்பிடாதங்க. இன்னும் கொஞ்ச நாட்களில விட்டிருவாங்க. இஞ்ச உங்களுக்குப் பிரச்சின இல்லாம பார்த்துக் கொள்வன்.“ அவரது வார்த்தைகள் தெம்பாயிருந்தன. "வேண்டியதைச் செய்துதர இதோ பண்டா றாளகாமி இருக்கிறார். இவர் நல்ல மனிசன். இவரிட்ட உதவியேதும் தேவைப்பட்டால் கேளுங்க“. பண்டாவை அறிமுகம் செய்தார். அவர் சென்று தனது கடமையில் ஈடுபட்டார். அன்று மாலை பாலசிங்கம் வந்தார். அவரது வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன. காலையிலும் மாலையிலும் தேநீர், உணவு வகைகள் என்று உதவிக் கொண்டே இருந்தார். "மனிதனுக்கு மனிதன் துன்பத்திலதான் சேர் உதவிகளச் செய்யவேணும். நீங்க காலயில நாலுமணிக்கு எழும்பி, வேலைகள முடித்துக் கொண்டு பாடசாலைகளில் ஏழுமணிக்கெல்லாம் நி;ற்பீங்க. உங்களப் பார்த்து நாங்களும் வேளைக்கே பாடசாலைகளுக்குப் போகப் பழகிற்றம். சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்த உங்கள முடக்கிப் போட்டாங்க. நினைத்துப் பார்க்க வேதனையாக இருக்குது“ இது பாலசிங்கத்தின் சித்தாந்தம். அவரின் ஆதங்கம் புரிகிறது. அதற்காக மனமார நன்றியைத் தெரிவித்தான்.

"சேர்... இஞ்சயிருந்து டி.ஒ. அனுப்பாமல் பார்க்கவேணும்.“ பாலசிங்ம் தேநீரை பிளாஸ்கில் தந்தவாறே சொன்னார். "அதென்ன டி.ஓ.“ பரமன் கேட்டான். "டிற்ரென்சன் ஓடர் அதாவது தடுத்து வைப்பதற்கான அனுமதி“ ஆனந்தன் விளக்கினான். " டி.ஓ போட்டால் மூன்று மாதமெடுக்கும் சேர். எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிட்டக் கதைக்கிறன். அவர் சட்டத்தரணி. அவருக்கு இதுல நல்ல அனுபவமிருக்கு“. எடுக்க வேண்டிய விடயங்களைப் பற்றி பாலசிங்கம் விளக்கினார். "பாலா...இதெல்லாம் தேவையில்ல. எப்படியும் வாறகிழமை நாங்க வெளியில வருவம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. இருந்து பாரப்பம்“. ஆனந்தன் உறுதியாகச் சொன்னான். சிரித்தவாறே ஆனந்தனைப் பார்த்தார். ஆனந்தனைப் பார்ப்பதற்கு அவருக்கு வேதனையாக இருந்தது. "சேர், நான் வாறன். சொல்லிவிட்டுச் சென்றார். அவர்போவதையே மூவரும் வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டு; நின்றார்கள்.

தொடரும்

Read more...

Tuesday, May 18, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

23

பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதால் அடிவிழாது என்ற நம்பிக்கை வந்தது. ஒரு உணவுப்பொடலம் வந்தது. பாதியை உண்டான். மீதியைக் குப்பைக் கூடையில் போட்டான். சுவரில் சாய்ந்தவாறே தனிமையில் இருந்தான். தனிமை பொல்லாதது. உடல் ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் உள்ளம் உலகமெல்லாம் அலைந்து வரும். மேரியின் நினைவில் மூழ்கிப் பெருமூச்செறிந்து உருகினான். பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ? நான் தனிமையில் இங்கு இருக்கிறேன். ஆனால் அவள் அங்கிருந்து இராமனை நினைந்துருகும் சீதையைப் போல் நினைந்து நினைந்துருகி மூர்ச்சிப்பாளே. அவனது கண்கள் பனித்தன. கண்ணீர் மல்க ஏங்கித்தவித்தான்.

மூன்று மணியிருக்கும். ஒருவரைக் கொண்டு வந்தார்கள். அவன் பரமன். செட்டிகுளத்தில் பொதுச்சேவை செய்வதில் வல்லவன். பிறருக்கு உதவுவதிலும் முன்னிற்பவன். சூதுவாது தெரியாத அப்பாவி. காது கொஞ்சம் மந்தம். ஆனந்தனைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம். அவனைக் குட்டியென்றுதான் அழைப்பார்கன். ஆனந்தனை பரமனால் அடையாளம் காணமுடியவில்லை. பரமனை அந்த அறையில் போட்டுப் பூட்டிவிட்டுச் சென்றார்கள். ஆளுக்காள் ஆறுதலாக இருந்தது. மெதுவாக உரையாடினார்கள். அவனையும் ஆமிபிடித்து வதைத்ததைச் சொன்னான். இப்போது இந்த அறையில் இருவர் மட்டுமே இருந்தார்கள். ஆனால் அடுத்த அறையில் பலர் இருந்தார்கள். வெளியில் நடப்பதை அறியமுடியாது. இருவரும் அறையில் இருந்த மேடைக்கட்டிலில் சாய்ந்திருந்தார்கள். சாய்ந்தவாறே கண்ணயர்வதும், விழித்தெழுவதுமாகப் பொழுது கழிந்து கொண்டிருந்தது.

மாலை ஐந்து மணியாகிவிட்டது. கதவு திறக்கப்பட்டது. "அத்துளட்ட யன்ட. உள்ளே போ“. போலிஸ்காரர் இன்னொருவரை உள்ளே தள்ளினார்கள். "அலெக்ஸ் வாங்க. எங்களுக்குத் துணையா அல்லது காவலா“? கேட்டவாறே அலக்சாந்தரை வரவேற்றார். பேயறைந்த முகமாக இருந்த அலெக்சாந்தரின் முகத்தில் ஒரு மின்வெட்டுப் புன்னகை பளிச்சிட்டது. அவர் யாவற்றையும் மறந்து "சேர்..“ மெய்மறந்து தழுவிக் கொண்டார். அலக்சாந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலத்தது. "என்னை ஆமிக்காரர் வந்து தேடினார்களாம். எனக்குத் தெரியாது. அவர்களிடம் அகப்பட்டால் சித்திரவதை செய்வார்கள். பயந்துபோனன். நமது பாதர் அருட்தந்தை ஜோசப் அவர்களோடு வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தன். என்ன அநியாயம் சேர். உங்களையுமா சேர்...? அலக்சாந்தர் கண்ணீர் சிந்தினார். "நான் மட்டுமென்ன விதிவிலக்கா? கடவுளை இவர்கள் இன்னும் காணவில்லை. கண்டால் அவரையும் பிடிச்சிச் சித்திரவதை செய்வார்கள்“;. ஒரு சிரிப்போடு ஆனந்தன் பதிலளித்தான்.

அலெக்சாந்தர் செட்டிகுளம் கல்லூரியின் பதில் முனைவராகக் கடமையாற்றுபவர். ஒரு கிறிஸ்தவருக்கு உரிய அடக்கம், நேர்மை, கடமையுணர்வு கொண்டவர். பிறரை மதிப்பதிலும், மாணவர்களை உயர்த்தி விடுவதிலும், உதவிகள் செய்வதிலும் முன்னிற்பவர். சிறந்த விளையாட்டு வீரர். ஊரவரால் மதிக்கப் படுபவர். நல்லதொரு மனைவி, மூன்று பிள்ளைகள் அவரது சொத்து. பாடசாலை வளர்ச்சியில் முழுநேரத்தையும் போக்குபவர். சிறியதொரு குறையைக் கண்டாலும் அதற்காக வருந்துபவர். அவரையும் இந்தக் கூண்டுக்குள் போட்டு விட்டார்களே. என்ன ஆட்சியிது. தமிழராகப் பிறந்தால் இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டுமா? இங்கு நடக்கும் இந்த ஆட்சிமுறைகளை எந்த நாட்டு மக்களாவது அறிந்திருக்கிறார்களா? சாதாரண மக்கள் வேற்றுமையில்லாது வாழும்போது, அவர்களைப் பிரித்து, முரண்பாடுகளைத் தோற்றுவித்து அவற்றில் தங்களை வளர்த்து இன்பங்காணுகிறார்களே. ஆனந்தனது உள்ளம் கொதித்தது.

நடுச்சாமம் கதவு திறபட்டது. பத்துப்பேர்களைக் கொண்டு வந்து அடித்தார்கள். அவர்கள் அலறினார்கள். அறையில் தள்ளிப் பூட்டினார்கள். இருக்கவும் இடமில்லை. சிலர் நின்றார்கள். அவர்களில் பலர் தண்ணி யடித்திருந்தார்கள். சாராயநெடில் வீசியது. அத்தனைபேரும் கிராமப்புறச் சிங்களவர்கள். சிங்களத்தில் கதைத்துக் கொண்டார்கள். ஆனந்தன் எழுந்து குந்திக்கொண்டான். அவர்களில் சிலர் கிராமத்துச் சண்டியன்கள். முரட்டுத்தனமான பார்வை தெரிந்தது. "மொக்கட்டத ஆவே..“? ஒருதனிடம் விசாரித்தான். "மாடு கொண்டு போகும்போது பிடிச்சாங்கள்“. ஒருதன் சொன்னான். திருட்டு மாடு கடத்திப் பிடிபட்டுவிட்டார்கள் என்பது பின்னர்தான் தெரியவந்தது. "ஆநிரை கவர்தல் பண்டைய மன்னர்களின் செயலாக வழிவழிவந்த கலையல்லவா..? கிரேக்கர்களும் இச்செயலில் வல்லவர்கள். அது வீரமாகப் போற்றப்பட்டது. இப்போது இவர்கள் செய்தால் அது திருட்டு. என்ன ஞாயம்.? ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. 'சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா..சமரசம் உலாவும் இடமே’ பாடலடிகள் அவன் மனதில் வந்து குந்தியிருந்து கும்மாளமடித்தது.

'இடுக்கண் வருங்கால் நகுக’. வள்ளுவன் கூற்று வாயில் வந்தது. மாட்டுக் கள்வர்களுடன் ஆனந்தனும், அப்பாவி அதிபரும், பரமனும் ஒன்றாகக் கூண்டினுள் இருக்கும் காலம். கிளியும் பருந்தும் ஒருகூட்டில் நளனது ஆட்சியில் இருந்ததாம். புகழேந்தி பாடினான். நமது ஜனநாயக ஆட்சியில் கல்விப்பணிப்பாளரும், அதிபரும் முரட்டு மாட்டுக் கள்வர்களும் ஒரு கூட்டில் உள்ளார்களே. அற்புதமான ஆட்சியல்லவா? எந்தப் புலவன் பாடப்போகிறானோ? மெல்லச் சிரித்தான். "என்ன சிரிக்கிறீங்க..“? பரமன் கேட்டான். "மாட்டுக்கள்வர்களுடன் கள்வர்களாக நாங்களும் கிடக்கிறோம். அதுதான்“. பரமனுக்கும் சிரிப்பு வந்தது. அலக்ஸாந்தர் மௌனித்திருந்தார். அவருக்கு முரட்டு ஆசாமிகளைக் கண்டாலே பயம். சிறுநீரின் மணம் அறையெங்கும் பரவி மூக்கைத்துளைத்தது. கண்களை மூடியபடியே எண்ணவோட்டத்தில் மிதந்தான். குந்தியிருந்தவாறே பாதியிரவு கழிந்துபோனது.

விடிந்து விட்டது. பொலிஸ்நிலையம் சுறுசுறுப்பானது. கடமை மாற்றம் இடம் பெற்றது. இரண்டு மூன்று பேர்களாகக் கழிவறைகளுக்குக் கூட்டிச்சென்றார்கள். ஆயதமேந்திய பொலிஸ்காரர் காவலிருந்தார்கள். கைவிலங்கு போடவில்லை. பெரியதொரு தண்டனை குறைந்திருந்தது. மனதில் உரமற்றவர்களாக மனிதர்களை மாற்றுவது இவ்வாறான செயல்களே என்பதைப் புரிந்து கொண்டான். உளவியல் ரீதியான தண்டனை மன அழுத்தங்களை ஏற்படுத்துவன. அந்த அழுத்தத்திலிருந்து விடுபட நாட்கள் எடுக்கும். ஆனந்தன் உளவள உறுதியுள்ளவன். அவனால் இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தியிருந்தது.

காலை எட்டரை மணிக்கு மாட்டுத்திருடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய வேண்டுமாம். அவர்களை ஆயத்தமாகும்படி சில பொலிஸ்காரர்கள் வந்து கூறினார்கள். அடிக்கடி பலதரப்பட்ட பொலிஸ்காரர்கள் வந்து கதவினூடாகப் பார்த்தார்கள். கதைத்தார்கள். போலிஸ்காரரைக் கண்டால் பயந்தமாதிரி இருப்பார்கள். அவர்கள் போனதும் ‚கைவாறு’ அடிப்பார்கள். தங்கள் வீரதீரச் செயல்களைப் பரிமாறிக் கொள்வார்கள். எல்லாம் திருட்டுச் சம்பவங்களாகவே இருந்தன. சில பொலிஸ்காரர்கள் அவர்களிடமிருந்து வெற்றிலை பாக்குப் பெற்றுச் வாயில் போட்டுச் சென்றார்கள். ஒருவர் அவர்களைப் பார்த்தபடி வந்தார். அவரது கண்களில் ஆனந்தனின் உருவம் பட்டுவிட்டது. அவர் உசாரானார். மீண்டும் எட்டிப் பார்த்தார். "சேர்... நீங்களா...ஓ..மைகோட்...“ பெரும் ஆச்சரியத்தோடு கேட்டார். "மே..றாளஹாமி... என்ட“ ஒரு போலிஸ்காரரை அழைத்தார். உடனடியாக மாட்டுக்கள்வர்களை வெளியில் எடுக்குமாறு பணித்தார். பல பொலிஸ்காரர்கள் வந்து அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.

"சேர்.... நான் லீவில போயிருந்தன். இப்போதுதான் வந்தேன். இவங்களோடு எப்படி இருந்தீங்க? நான் இருந்திருந்தால் விட்டிருக்கமாட்டன்“. கவலையோடு சொன்னார். "பரவாயில்ல..அவர்களும் மனிதர்கள்தானே? பார்க்கப் போனால் அவர்களுக்கு நாங்களும் திருடர்களாகத்தான் தெரிந்திருக்கும்“. வழமையான தமாசோடு பதிலளித்தான். "இவங்கள் அடிக்கடி இங்கு வாறவாங்கதான். சரியான திருட்டுப் பேர்வழிகள். ஆனால் இனக்குரோதம் இல்லாத அப்பாவிகள்“. கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தார். பொலிஸ்காரர் சிலர் வந்தார்கள். கதவினைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்கள். "மே...றாளஹாமி... மே...மாத்தயளா இன்ன கூடுவே .. சிங்களத்தில் விளக்கி..."இந்த ஐயாமார் இருக்கிற கூட்டுக்குள்ள வேறு யாரையும் போடவேண்டாம்.“ கட்டளை பிறப்பித்தார்.

"நான் உங்கட பைலைப் பார்க்கிறன். ஏச். கியு... வருவார். அவரிட்டயும் கதைக்கிறன். சரியான வேலையிருக்கு. கொஞ்ச நேரத்தில வந்து பார்க்கிறன்“. சொல்லிவிட்டு நடந்தார். அவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை. நல்ல மனிதநேயமுள்ள அதிகாரி. ஆனந்தனை நன்றாக அறிந்தவர். பரீட்சைக் காலங்களில் இந்தப் பொலிஸ்நிலையத்தில்தான் பரீட்சை வினாப் பொதிகளை வைப்பது வழக்கம். கல்விவிடயமான கூட்டங்களில் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அதனால் ஆனந்தனுக்குப் பலபொலிஸ் உயரதிகாரிகள் பழக்கமாக இருந்தார்கள். கணபதிப்பிள்ளையின் மனைவியும் ஒரு ஆசிரியை. அதனால் ஆனந்தனிடம் மிகவும் மரியாதை வைத்துள்ளவர். அவர் மூலம் ஆனந்தன் பொலிஸ்நிலையத்தில் இருக்கும் செய்தி ஆசிரிய சமூகத்துக்குப் பரவியது.

பத்து மணி. கணபதிப்பிள்ளை வந்தார். "சேர்...யோகதாசுக்குச் சொல்லியனுப்பி இருக்கிறன். அவர் இப்ப உங்களுக்கு வேண்டிய உடுப்புக்களக் கொண்டு வருவார். உங்களப் பார்க்கக் கவலயாக் கிடக்கு. கிழிஞ்ச சட்டை. அழுக்கான காற்சட்டை. தாடி மீசை. எத்தன நாளாய் குளிக்கல்ல“? அக்கரையோடு வினவினார். "இன்ஸ்பெக்டர்.... இது எனக்கு மடடுமல்ல. நமது தமிழ் இளைஞர்களுக்கும், ஓரு தவவாழ்க்கை. இரண்டரை மாதங்களாக சுத்தமான சுகவாழ்க்கை அனுபவிக்கிறன். தினமும் சேவ் எடுப்பதில்லை. பல்தேய்த்து முகங்கழுவி, சோப் போட்டுக் குளிப்பதில்லை. உடைமாற்றுவதில்லை. பௌடர் போடுவதில்லை. பாய், படுக்கை விரித்துத் தலையணையில் உறங்குவதில்லை. ஆனால் எனக்குத் தினமும் பூசைநடக்கும். இப்ப அது குறைஞ்சிற்று. இதெல்லாம் எல்லாருக்கும் கடைப்பதில்லை. என்னைப்போன்ற ஒருசிலருக்கே கிடைக்கிறது. இது ஒரு தவவாழ்க்கைதானே“? புன்சிரிப்போடு ஆனந்தன் விளக்கினான். அலக்சாந்தருக்குக் கண்கள் கலங்கின. பரமன் பார்த்துக் கொண்டிருந்தான்.

யோகதாஸ் வந்தார். ஆனந்தனைக் கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார். "சேர்....நாங்க நினைக்கேல்ல... இப்பதான் போனமூச்சி வந்தமாதிரிக் கிடக்கு“. அவரது கையில் சாரம், சவர்க்காரம், துவாய் இருந்தது. "சேர்...போட்டிருக்கிற உடுப்புக்களைத் தாங்க. நான் லோன்றிக்குக் குடுத்து எடுத்து வைக்கிறன்“;. யோகதாஸ் கேட்டார். "யோகதாஸ்...இந்தக்கால்சட்டை சேட்டோடு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கிடக்கிறன். இது கின்னர்ஸ் சாதனை. என்ன“? சொல்லியவாறு சாரத்தை மாற்றினார் யோகதாஸ் கொண்டுவந்த உடுப்புக்களை மாற்றினான். கிழிந்து அழுக்கடைந்த உடுப்புக்களைச் பேப்பரால் சுற்றிக் கொடுத்தான்.
கணபதிப்பிள்ளை வந்ததும் மூன்றுபேரையும் குளிப்பதற்கு வெளியில் வருமாறு அழைத்தார்.

பொலிஸ்காரர் சுற்றிக் காவலுக்கு நின்றார்கள். ஆளுக்கொரு குளியலைறைக்குள் புகுந்தார்கள். தண்ணீர் பட்டதும் இதமாக இருந்தது. ஆனால் ஆனந்தன் அந்தச் இதத்தை அனுபவிக்கவில்லை. உடலெல்லாம் வலித்தது. சோப்பைத் தலைக்குப் போட்டுத் தேய்த்தான். கைவிரல்களோடு கற்றை கற்றையாகத் தலைமுடி கழன்று வந்தது. தண்ணீரில் மிதந்து அடையலாகச் சென்றது. எவ்வளவு முடி? மனம் முனங்கியது. அந்தநேரத்திலும் மேரியை நினைந்துருகினான். மனம் சற்று நேரத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது. எத்தனையாயிரம் நினைவுகளைச் சுமந்து வருகிறது. அந்த நினைவுகள் எவ்வளவு சுகத்தைத் தருகிறது. அதேவேளை எத்தனை துயரங்களைச் சொல்லிச் செல்கிறது.

"அத்தான் எவ்வளவு அடர்த்தியான முடி. சுருள் சுருளாக என்னைக் கிறங்கச் செய்கிறது“. ஆனந்தனின் தலைமுடிக்குள் தனது விரல்களை விட்டு அளைந்து கோதிக் கொண்டே மேரி அனுபவித்துக் கூறியதை நினைவிலிருத்தினான். அவளின் ரசனையை அனுபவித்தவன். "மேரி.. நீ இதனைக் கண்டால் எவ்வளவு கவலை கொள்வாய். நீ இதனைப் பார்க்காது விட்டது நல்லது“. பெருமூச்செறிந்து தனது உணர்வுகளை உதிர்த்து விட்டான். காற்றோடு அவைகளும் கரைந்து போயின. குளித்து வெளியில் வந்தார்கள். ஆனந்தனுக்கு உடற்பாரம் குறைந்து காற்றாய் இருப்பதுபோல் ஒரு உணர்வு. பகல் உணவு வந்தது. பரமனின் மனைவி கொண்டு வந்திருந்தார். அவர் பரமனைப் பார்த்து அழுதார். அலக்சாந்தரையும், ஆனந்தனையும் பார்த்து "உங்களுக்கும் இந்த நிலையா சேர்“? கேட்டுக் கண்கலங்கினார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் வரத்தொடங்கி விட்டார்கள். அதிபர் பாலசிங்கம் அற்புதமான பிறவி. காலையில் பெரிய வெந்நீர்;;க் குடுவையில் தேநீர் கொண்டு வருவார். இரவில் பலவிதமான உணவுவகைகளைச் சுமந்து தருவார். "சேர் கடவுள் இல்லசேர். இருந்தா இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பாரா? உங்களக் கூட்டுக்குள்ள கம்பிக்குப் பின்னால் காணும்போது எங்கட மனம் துடிக்குது சேர்“;. கண்ணீர் சிந்தியவாறே திருச்செல்வம் அதிபர் அழுதார். "அதிபர் சின்னப்பிள்ளைகளாட்டம் அழுவதா“? ஆனந்தன் அவரைத் தேற்றினான். "திரு ......நான் இங்கிருந்து பார்த்தால் நீங்கதான் உள்ளே இருப்பது போல் தெரிகிறது“. ஆனந்தன் நகைச்சுவையோடு கூறினான். "எப்படி சேர்......உங்களால இப்படிக் கதைக்க முடியுது“.? திருச்செல்வம் கேட்டார். சுண்ணாம்புக் காளைவாயில் நாவுக்கரசரைப் போட்டார்கள். அவருக்கு சுண்ணாம்புக் காளவாய் 'வீசுதென்றலும், வீங்கிள வேனிலும், மூசும் வண்டறைப் பொய்கையும் போன்ற’தாயிருந்ததாகப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறீர்கள் அல்லவா? நமது மனதில் சத்தியம் நிறைந்துள்ளதால், வைராக்கியம் அப்பரின் மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும்“. தத்துவக் கருத்துக்களை உதிர்த்தான். வருகிறவர்களுக்கு ஆனந்தனே ஆறுதல் கூறினான்.

தொடரும்

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP