Friday, December 11, 2009

கரோலின்

மேற்கு வானத்தில் வண்ண விளையாட்டு. சூரியனின் ஒளிக்கற்றை மேகத்தினிடை புகுந்து விளையாடி, வண்ணம் பூசுகிறது. .செவ்வந்திமலர்க் கூட்டம் சோடித்து வண்ணம் வண்ணமாய் கோலம் போடுதல்போல் மேகக் கூட்டங்கள் வானில் மிதந்து வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தன. தீவுகளாய், விலங்குகளாய். வண்ணக்கடல்களாய், மலைகளாய், கற்பனைக்கெட்டாத அற்புதக் காட்சிகள் விரிந்து கிடக்கின்றன. கண்ணிமைக்குமுன் காட்சிகளை மாற்றி மாற்றிப் புதுப்புதுக் காட்சிகளைப் படரவிட்ட வண்ணம் அவை நெளிந்து அசைந்து கொண்டிருந்தன. வானத்தில்தான் எத்தனை புதுமைகள்.? இயற்கை இத்தனை அழகை எங்கிருந்து பெற்றது?. ஏத்தனை விதமான மாயாஜாலங்களைக் காட்டி மனித மனங்களை ஈர்த்தெடுத்து விளையாட்டுக்களைக் காட்டுகிறது. வாழ்க்கை பொய்கலந்த உண்மை போலவும், உண்மைகலந்த பொய்போலவும், சித்துவிளையாட்டினைக் காட்டுகிறது. இளம் உள்ளங்களில் மலர்ச்சியின் உன்னதத்தையும், கிழம்தட்டிய வயதானவர்களது உள்ளங்களில் வாழ்க்கையின் நிலையாமையையும் காட்டி நிற்கிறது. நாளாந்தம் இந்தப்புதுமைகள் சொல்லி வைத்ததுபோல் நிகழ்ந்தாலும், இதனை எத்தனை மனிதர்கள் உணர்வு பூர்வமாக உணர்ந்து ரசிக்கிறார்கள். புரிந்து அனுபவிக்கிறார்கள். பலருக்கு இந்த உலகம் ஓரு போராட்டக்களமாக மாறிவிடுகிறது. இயற்கையை ரசிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் கிடையாது.
இமயத்தில் ஊற்றெடுத்து நிலமடந்தையை முகர்ந்து கிளுகிளுப்பேற்றி, சிலிர்க்கவைத்து, வளைந்து நெளிந்து இனம், மதம், சாதிபேதங்களைக் கடந்து அனைத்து உயிர்களுக்கும் தாகம் தீர்க்கும்; கங்கைநதி பலகிளைகளோடு பாய்கிறது. அதில் ஒருகிளையாக கூக்கிளி கொல்கொத்தா நகரை அணைத்துச் செல்கிறது. கொல்கத்தா இன்னும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நகரினை வளப்படுத்தி, வண்ணம் சேர்த்து கூக்கிலி நதி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. கடலும், நதியும் சங்கமிக்கும் காட்சி அற்புதமானதொரு சிலிர்ப்பை ஊட்டுகிறது. அனலாகக் காற்று வீசுகிறது. கோல்கொத்தா நகரின் எதிர்புறத்தில் கூக்கிளியின் மறுகரையில் அமைந்திருக்கும் ஹோட்டல் றடிசனில் நானிருந்து பார்க்கிறேன். நதியின் நீராவி புகைமண்டலமாகக் கூத்துக்காட்டுகிறது. கொல்கொத்தா நகர் புகைமண்டலத்தினுள் புகுந்துள்ளது போல் தெரிகிறது. கூக்கிலி நீரில் காற்றுப் புகுந்து குளிரினை அள்ளியெடுத்து அனல்காற்றின் வெப்பத்தைத் தணிக்க முயல்கிறது. நதிப்படுக்கை வண்டற்படைகளினால் வளமுற்றுக்கிடக்கிறது. கரைகளில் தாவரப்போர்வை விரிந்து கிடக்கிறது. அடர்ந்து உயர்ந்த மரங்களை வளைத்துப் பற்றிப் படர்ந்து ஏறுகொடிகள் வானை எட்டிப்பார்க்கின்றன. வாழ்க்கை என்பது மனிதருக்கு மட்டுந்தான் போராட்டமாக இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிங்களும் வாழ்வதாற்காகப் போராடுகின்றன. ‘தக்கன பிழைக்கும்’ என்று எவ்வளவு அற்புதமாக நமது முன்னோர்கள் கூறிவைத்தனர்.
ஆவியாக்கத்தினால் வெயிலின் கொடுமை புரியவில்லை. மப்பும் மந்தாரமாகவும் இருந்தாலும் அனல்காற்று வறுத்தெடுக்கிறது. மரங்கள் காற்றிலாடிச் சிலிர்த்து நிற்கின்றன. காட்டுப்பூக்கள் விரிந்து அற்புதங்களை உலகினுக்குச் சமர்ப்பிக்கின்றன. பறவைகள் பாடிப்பறந்து தமது நடிபங்கை நிறைவு செய்கின்றன. மெல்லிய இளந்தென்றல் அசைந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் வருவார்கள். தமது நடிபங்கை நிறைவு செய்வார்கள். போவார்கள். உலகம் சுழலும். மாற்றங்கள் நிகழும். வையக வாழ்வு அற்புதமானது. இந்த உடலில் உயிர் உள்ளபோதுதான்; அதன் மகத்துவத்தை உணரமுடியும்.
எனது கண்களும், மனமும் வானைத் தொட்டு நிற்கும் அற்புதமாக வடிவமைக்கப் பெற்ற ஹோட்டலை வியப்புடன் அளைகிறது. எவ்வளவு அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள். 1783ல் கட்டப்பட்ட கோட்டை. இரண்டாம் உலகப் போரின்போது யப்பனியரின் குண்டு வீச்சால் சிதைந்து போனது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் கோட்டை செப்பனிடப்பட்டது. அதன் வரலாற்றுச் சின்னங்களையும் சிறப்புக்களையும் ஒன்று சேர்த்து பழைய அமைப்பைக் கலையாது அதே கலைவண்ணத்தோடு புதுக்கட்டிடங்களும் கட்டப்பட்டு எடுப்பாக ‘ஹொட்டல் றடிசன்’; என்ற பெயரோடு நிலைத்திருக்கிறது. கூக்கிளி ஒருபுறம் கொல்கொத்தா நகர் பரந்து கிடக்கிறது. நகரின் எதிர்புறமாக கூக்கிளியின் மறுபுறமாக ஹோட்டல் றடிசன் நிமிர்ந்துள்ளது. நதிக்கரையோர நிலப்பரப்பின் தாவரப் போர்வை பசுமை விரித்துக் குதூகலிக்கிறது.
ஹோட்டல் றடிசனில் நான் தங்கியிருக்கிறேன். எனது அறையிலிருந்து வெளியில் வருகிறேன். அறையினைப் பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே அழகான ஒரு கட்டிளம் கன்னியின் படம். வசீகரமான கண்கள். வடித்தெடுத்த அமைப்போடு கூடிய உருவம். தெய்வச்சிலையாகத் தெரிந்தாள். தொடர்ந்து பல படங்கள். தனித்தனியாகவும், குடும்பமகவும் காட்சியளித்தன. இவை பெரிய வரலாற்றைத் தாங்கியுள்ளதை அங்கு வேலை செய்யும் சிப்பந்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். உணவகம் கூக்கிளியின் கரையோரமாக இருந்தது. செவ்வந்தி மாலைப்பொழுதில் கூக்கிளி குதூகலிக்கும். படகுகள் அசைந்து திரியும். அக்கரையில் கொல்கொத்தா நகரம் மங்கலாகத் தெரிகிறது. தேநீரை வரவழைத்து இருக்கையில் அமர்ந்தேன். ஹோட்டல் உதவி மனேஜர் உலாவந்தார். அவரிடம் ஹோட்டலின் வரலாறு பற்றிக் கேட்டேன். அவர் கூறியதும் உசாரானேன். வரவேற்பறைப் பக்கம் விரைந்தேன். சில தகவல்கள் கிடைத்தன. தகவல்களை மனக்கொம்பியூட்டர் பதிந்து கொண்டது. கண்கள் படங்களில் நிலைகுத்தி மேய்ந்தன. கதானாயகனின் படம்மட்டும் அங்கிருக்கவில்லை. கட்டழகுக் கன்னி கரோலின், அவளது தாயார் மேரி, தந்தை ஜெனரல் வாற்சன் ஆகியோரின் படங்களும் என்னைக் கற்பனையில் மிதக்கவிட்டன. எனது மனக்குதிரை கட்டுப்பாட்டுடன் விரைந்து செயற்படுகிறது.
வழமைபோல் அந்த வெண்குதிரை தனது பயணத்தில் ஈடுபட்டிருந்தது. குதிரையின்மேல் அழகெல்லாம் ஒன்றிணைந்து உருவாகின சாயலில் கரோலின். பதினாறு வயதுக் கட்டழகி. அவள் உள்ளம் கற்பனையிலும். ஓப்பனையிலும் மிதந்து கொண்டிருந்தது. கூக்கிலியில் இருந்து புறப்பட்ட சிற்றலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவளது அழகை ரசித்துச் சிரித்து ஒலியெழுப்பி எட்டிப்பாத்துப் பின்வாங்குகின்றன. பார்த்து ரசித்த பறவையினங்கள் மெய்மறந்து பாடிக்களித்தன. குளிர் தென்றல் கட்டியணைத்துச் சுகம் சொன்னது. அவள் அமர்ந்திருந்த குதிரை அவளது மெல்லுடலைச் சுமந்து கொண்டு உடலுக்கு நோகாதவாறு ஒரு அற்புதக் குலுக்களுடன் போய்க்கொண்டிருந்தது. அவளைச் சுமப்பது அதற்கு ஒரு இன்பம்போலிருந்தது. அவளது குறிப்பறிந்து செயற்பட்டது. குதிரை சற்று வேகமாக விரையும். பின் தொங்கோட்டத்தில் ஓடும். ஓட்டத்திற்கு ஏற்றவாறு அவளது மேனியெங்கும் தொடரலைபோல் பரவும். மெல்லக் குலுங்கி அசையும். சிலவேளைகளில் தனியாகவும், சிலவேளைகளில் தனது அன்னையுடனும் செவ்வந்தி மாலைப்பொழுதில் பயணப் பொழுதுபோக்கு நிகழும்.
அவளது அன்னை மேரி வெகு தூரத்தில் குதிரையில் வந்து கொண்டிருந்தாள். கரோலினின் குதிரை சற்று வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. மேரியின் குதிரை மெல்ல மெல்ல ஆற்றோரத்தின் அழகில் மயங்கிப் போய்க்கொண்டிருந்தது. மேரி இயற்கையழகை நேசிப்பவள். பசுமை விரிந்த மரஞ்செடிகளையும், பூக்களையும், பறவைகளின் குரல்களிலும் தன்னை மறப்பவள். குதிரையில் அமர்ந்தவாறும், இறங்கி மலர்களைத் தொட்டழைந்தும் ரசிப்பவள். குறிப்பிட்ட தூரம் வரை இருவரும் சென்று ஓய்வெடுத்துத் திரும்புவார்கள்.
“அம்மா இந்த நதி எவ்வளவு உயிரினங்களை மகிழ்விக்கிறது. உயிரூட்டுகிறது. அற்புதமாக இல்லை”? வினாவாக மலர்ந்தாள்.

“அதனால்தான் இந்தியர்கள் நதியினைத் தாயாக, சக்தியாக மதிக்கிறார்கள். நதிகளை இந்து சமயம் சக்தியாகப் போற்றுகிறது”. மேரி நதியின்மேலுள்ள பற்றினை வெளிப்படுத்தினாள்.

இரக்க சுபாவமுள்ள மேரி தனது மகள்மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்தாள். கரோலினது கண்களில் கண்ணீரைக் கண்டால் அவளது நெஞ்சில் உதிரம் கொட்டும். மகளின் துடுக்கும், நகைச்சுவைப் பேச்சும், இயற்கையினை ரசிக்கும் பாங்கும் மேரிக்கு மகிழ்ச்சியினை ஊட்டியது. கரோலின் நதியைப் பார்த்தாள். தனது தாயைப் பார்த்தாள்.
“அம்மா இந்த நதிநீரில் நான் சங்கமித்தால், உயிரினங்களுக்கு உரமாவேனல்லவா? நானும் அந்தச் சக்தியோடு சேரமுடியுந்தானே”?
மேரி அதிர்ந்து விட்டாள். கண்கள் பனித்தன. “என்ன வந்தது உனக்கு? அப்படியெல்லாம் பேசக்கூடாது. நாம் மனிதர்கள். நதியினைத் திசைதிருப்பி அனைத்து உயிரினங்களுக்கும் உதவமுடியும். அதனைச் செய்யலாம் அல்லவா”? இருவரும் உரையாடி உலாப் போனார்கள்.
இந்தியா ஐரோப்பியரின் பிடியில் சிக்கிவிட்டிருந்தது. மன்னராட்சி மக்கள் மனங்களில் நிறைவு தந்திருந்தது. மன்னர்களைத் தங்களது ரட்சகர்கள் என்று மக்கள் இறுமாந்திருந்தனர். மன்னர்களின் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. மன்னர்கள் பரம்பரை செல்வச் செழிப்போடு வாழ்ந்தது. மன்னர்களுக்கு இனமத மொழி வேற்றுமையில்லை. மன்னர்கள் மன்னர் பரம்பரையிலேயே திருமணம் செய்து கொள்ளும். ஆனால் குடிமக்கள் அவ்வாறு செய்யமுடியாது. அவர்களுக்கு மட்டும் சாதி, இனமத , மொழி வேறுபாடிருந்தது. மன்னர்களுக்குள் போட்டி, பொறாமை, பதவிமோகம், நிறைந்திருந்தது. அரசர்களின் நன்மைக்காகவும், பதவிக்காகவும் மக்கள் பயன்படுத்தப் பட்டார்கள். பதவியாசைகளால் ஆளையாள் காட்டிக் கொடுத்து அழிந்தார்கள். மக்கள் அந்நியர் வசம் சிக்கி அடிமைகளானார்கள். வணிபநோக்கில் வந்த ஐரோப்பிய கம்பனிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இந்தியாவும் அவர்களின் பிடியில் சிக்கிவிட்டது. 1783ல கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்குள் இந்தியா வந்து விட்டது.
இந்தியாவை ஒல்லாந்தர் கைப்பற்றியதும் கூக்கிளி நதிக்கழி முகத்தில் பிரமாண்டமான கோட்டை அமைக்கப் பெற்றது. பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பனி; ஒல்லாந்தரை விரட்டியடித்து கைப்பற்றியதும் அந்தக் கோட்டை பிரித்தானியர் வசமானது. படையணிகள் குவிக்கப் பெற்றுப் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டது. இந்தியாவின் செல்வமனைத்தும் சுரண்டப்பட்டது. கூக்கிளி நதியின் துறைமுகம் பிரபலமடைந்தது. துறைமுகத்தில் பல்வேறுநாட்டுக் கப்பல்கள் வந்து போயின. எனினும் போத்துக்கீசக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் சவாலாக இருந்தது. அதனால் பிரித்தானியப் போர்வீரர்களது தேவை அதிகமாயிருந்தது. சாதாரண போர்வீரர்களையும், கூலிப்படைகளையும் தெற்காசிய நாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டனர். கொல்கத்தாவைத் தாலாட்டித் தட்டிக் கொடுத்துச் செழிப்பாக்கி கூக்கிளி நதி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. நதியைப் போல் மனிதர்கள் இருந்திருக்கலாம். நுதி அழுக்கை அகற்றி, அடியில் படியவைத்து ஒழுக்காறாக ஓடுகிறதல்லவா?; வேறுபாடில்லாமல் நீரை ஏல்லோருக்கும வழங்குகிறது.
கொல்கத்தாவுக்கு ஜெனரல் றெஜினோல்ட் வாற்சன்; அனுப்பப்பட்டார். ஜெனரல் வாற்சன் கடமை தவறாதவர். கட்டுப்பாடானவர். அவருடன் மனைவி மேரியும், மகள் கரோலினும் வந்திருந்தனர். பெரும் படையணிக்கும், பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பனிக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக ஜெனரல் விளங்கினார். அவரது படையணியின் சாதாரண போர்வீரனாக ஹென்ற்லி கடமையாற்றினான். ஹென்ற்லி கட்டழகன் மட்டுமின்றி கடமையிலும் கண்ணானவன். கூக்கிலிக் கரையோரப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தான். நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டையாளும் அதிகாரிகள், அவர்கள்தம் குடும்பத்தவர்களது பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருக்கவேண்டும். செவ்வந்தி மாலைப் பொழுதில் மேரியும், கரோலினும் உலாப் போவதைப் பார்த்திருக்கிறான். அவர்களது ரசனையை மெய்மறந்து ரசித்திருக்கிறான். அவன் கடமையாற்றும் காவல்நிலையைத் தாண்டி குதிரைகள் விரைந்து செல்லும். அவர்கள் போவதை அவதானித்தவாறு இருப்பான்.
அன்று அதிசயமாக அது நடந்தது. கரோலினது குதிரை சற்று வேகமாக முன்னால் விரைகிறது. தூரத்தே மேரியின் குதிரை வந்து கொண்டிருந்தது. காற்றும் பலத்து வீசிக்கொண்டிருந்தது. காற்றுக்கு எதிர்த்திசையில் குதிரை வந்து கொண்டிருந்தது. காவல்நிலையைத் தாண்டும்போது கரோலினின் அழகான தொப்பி காற்றோடு விளையாடியது. அதனைக் காற்று மெல்லெனப் பறக்கவிட்டது. இன்னும் தாமதித்திருந்தால் தொப்பி கூக்கிளியோடு சங்கமித்து நீந்திவிளையாடும். தொப்பி தலையிலிருந்து நழுவியதை கரோலின் உணர்ந்து கொண்டு குதிரையைத் திருப்பினாள். காவல்நிலையத்தில் ஹென்ற்லி கடமையிலிருந்தான். ஹென்ற்லி கட்டழகன். படையணியில் இருக்கும் இளைஞர்களைக் கன்னியர் ஏறெடுத்துப் பார்ப்பது அரிது. தனது எஜமானனின் மகள் அவள். அவளது பாதுகாப்பு அவனது கடமையானது. தொப்பி தண்ணீரில் விழுந்தால் என்ன கதி? “பார்த்துக் கொண்டிருந்தாயா”? தனக்கு ஏதும் நடக்கலாம். நினைத்துப் பார்க்குமுன் ஹென்ற்லி உசாராகிவிட்டான்.
ஒரே பாய்ச்சல். தொப்பியைத் தண்ணீரில் விழவிடாது பிடித்துக் கொண்டான். கெரோலினின் குதிரை திரும்பியது. அவன் பாய்ந்து பிடிக்கும் லாவண்யத்தை கரோலின் ரசித்தாள். குதிரை தன்னை நோக்கி வருவதைக் கண்டான். தான் தண்ணீரில் நனைந்துள்ளதை பொருட்படுத்தவில்லை. குதிரையை நோக்கி நடந்தான். கரோலினுக்கு மரியாதை செலுத்திவிட்டு தொப்பியை நீட்டினான். அவள் குதிரையை விட்டுக்கீழே இறங்கினாள். தோப்பியைப் பெறுவதற்காகப் பார்த்தாள். அவளது இதயத்தில் ஒரு மின்வெட்டின் பாய்ச்சல். புhர்வை ஹென்றலியைத் தாக்கியது. அவனும் அதிர்ச்சிக்குள்ளானான். ஒரு புன்னகையை எறிந்து நன்றி சொன்னாள். தொப்பியைப் பெற்றுக் கொண்டாள். நான்கு கண்களும் சந்தித்துக் கொண்டன. மனங்கள் கலந்தன. இனந்தெரியாத இன்ப அதிர்ச்சி. “என்ன வந்ததெனக்கு?. அவனிடம் காந்தம் இருக்கிறதா? என்னை இழுத்தெடுக்க”. அதிசயித்து நின்றாள். அற்புதமான உணர்வு உள்ளங்களில் படிந்து கிளர்ந்து வேர்விடத் தொடங்கியது. அவர்கள் உள்ளங்களில் அது துளிர்விடத் தொடங்கியது. அவர்களது உள்ளங்களைப் புரிந்த உணர்வில் கூக்கிளி சிற்றலைகளைக் கரையில் வீசி எறிந்து சிரித்துக் கொண்டிருந்தது. அலைகள் கரையில் மோதிக் கலகலத்தன. கூக்கிளி செம்புலப் பெயல்நீரைச் சுமந்து சலனமற்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த இளம் உள்ளங்களில் ஒரு மலர்வு. உதடுகளில் அன்புப் பரிமாற்றம் துளிர்விடத் தொடங்கியது. மேரி நடந்ததைக் கவனித்தாள். மேரி அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஹென்ற்லி சாதாரண படைவீரன். தனது மகள் ஜெனரலின் மகள். ஒரு எஜமானிக்குச் செய்யும் கடமையாகவே மேரி நினைத்துக் கொண்டாள். அவளும் ஹென்ற்லிக்கு நன்றி சொன்னாள். அவனுக்குப் பெரும்பேறாக இருந்தது.
கண்கள் மட்டும் உருவங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டன. கரோலின் உள்ளத்தில் ஹென்ற்லி சிறைப்பட்டான். ஹென்ற்லியின் உள்ளத்தில் கரோலின் குந்திக் கொண்டாள். இயற்கை எவ்வளவு அற்புதமானது. இளமையைக் கொடுத்து அளப்பரிய கற்பனைகளைக் காண்பித்து, துணிச்சலையும், சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறது. அதேவேளை தடைகளையும் போட்டு அவற்றை உடைத்தெறியும் வல்லமையையும் கொடுத்துள்ளது. தக்கன பிழைக்க வழியும் செய்துள்ளது. இப்போது கரோலின் தனிமையில் செல்லவில்லை. உள்ளத்தின் உள்ளே ஹென்ற்லியைச் சுமந்து கொண்டு சென்றாள்..

கரோலினின் வாழ்க்கையில் அந்நிகழ்வு ஒரு அற்புதத்தை ஏற்படுத்திவிட்டது. கண்ணை மூடிப்ப் பார்த்தாள். ஹென்ற்லி முன்னின்றான். அவளுக்கு உறக்கம் வரமறுத்தது. அடிக்கடி அந்நிகழ்வு மனத்திரையில் விழுந்து பூச்சாண்டி காட்டியது. அவள் நிலைதடுமாறித்தான் போனாள். ஹென்ற்லியின் முகமும், அவனது செயலும் அவளை வசீகரித்து விட்டது. அவனைத் தொடர்ந்து பார்க்கவேண்டும், பேசவேண்டும் போல் தோன்றும். கனவுலகில் வலம் வந்தாள். மாலையில் மட்டும் குதிரைச் சவாரி செய்த கரோலின் காலையிலும், நினைத்த நேரங்களிலும் கூக்கிளி நதிக்கரையோரம் உலாவரத் தொடங்கினாள். பறவைகளின் இசைக்கோலம் அவளுக்கு இனித்தது. மலர்களின் வண்ணங்களும், அவற்றின் நறுமணமும் அவளை ஈர்த்தது. இளந்தென்றல் சுவாசப்பையை நிறைத்துப் புதுமைகளைப் புகுத்தியது. சூழல் சுகத்தைப் பரப்பி உற்சாகத்தைக் கொடுத்தது.
ஹென்ற்லியின் உள்ளத்தில் கரோலின் இருந்தாலும் கரோலினின் தந்தையை நினைக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. உலகம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது சூழன்று கொண்டேதான் இருக்கும். பருவகாலங்கள் வரத்தான் செய்யும். நாட்கள் நகர்ந்தன. தென்றல் வீசும். புயலடிக்கும். சூறாவளி பேரலைகளைத் தள்ளும். கடல் கொந்தளிக்கும். இவை இயற்கையின் நியதி. மனித வாழ்க்கையிலும் இவை வித்தியாசமான முறையில் நிகழும். கரோலின்-ஹென்ற்லியின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் காற்றில் கலந்து மனிதவாய்களில் நுழைந்து வானலையில் கலந்து ஜெனரல் வாற்சன் செவிகளில் முழக்கமிட்டது. இடிமின்னல். புயல் குடும்பத்தில் தாக்கிச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அழுத்தம் இறுக்கமாகும்போது அதற்கு வலிமை அதிகரிக்கும். கரோலின் ஹென்லி சந்திப்புக்கள் தொடர்ந்தன. கடிதங்கள் பரிமாறப்பட்டன. இதயங்கள் கலந்தன. இனியென்ன? இருவரும் பிரிவதில்லை என்ற வைராக்கியம் தனது கட்டினை வலிமையாக்கியது.
மேரி தனது கணவனுடன் கலந்துரையாடினாள். வாற்சன் எரிமலையானார். “ மேரி, சொல்வதைக் கொஞ்சம் கேள். நான் ஒரு ஜெனரல். இந்த சாம்ராச்சியத்தின் ஏகபோகத்தளபதி. பலருக்குப் பதில் சொல்லவேண்டியவன். நமது கௌரவம் என்னவாவது? ஒரு ஜெனரலின் மகள் சாதாரண படைவீரனைக் கைப்பிடிக்க அனுமதிக்க முடியாது. இந்த ஜேனரல் வாட்சன் ஒரு இரும்பு மனிதன். அதனால்தான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.” வாட்சன் இறுகிக் கொண்டு போனான். “நான் சொல்வதைக் கேளுங்கள். தளபதி என்பது நீங்கள் பார்க்கும் உத்தியோகம். கரோலின் நமது மகள். அவளது வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும்.” “அதைத்தான் நானும் சொல்லுகிறேன். உனக்கு விளங்காது. கரோலின் ஹென்ற்லியைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். இனி இதைப்பற்றிக் கதைக்க வேண்டாம்.” வாட்சன் விலகிச் சென்றுவிட்டான். மறைந்திருந்து கரோலின் கேட்டிருந்தாள். “அம்மா இனி எதுவந்தாலும் ஹென்ற்லிதான் எனது கணவன். இது உறுதி” கரோலின் அறையினுள் நுழைந்தாள். மேரி துடிதுடித்துப் போனாள். யாருக்காக அழுவது?

கரோலின் -ஹென்ற்லி சந்திப்புக்கள் இறுக்கமாகின. அந்த இறுக்கம் வேகத்தைக் கூட்டி விட்டது. அந்தி மயங்கும் மாலைப் பொழுது கூக்கிளியை குதூகலிக்க வைத்தது. அலைகளை எறிந்து விளையாட்டுக் காட்டியது. கரோலின் ஹென்ற்லியின் அணைப்பில் இருந்தாள். “ ஹென்ற்லி என்னால் பொறுக்கமுடியாது. நமது நட்புக்கு அப்பா எதிர்ப்புக் காட்டுறார். நாம் இங்கிருந்து போய்விடலாம்” அவன் மௌனமானான்.. “என்ன மௌனம்?’ “ஒன்றுமில்லை. எப்படிப் போவது என்றுதான் யோசிக்கிறேன்”. “அடுத்த வாரம் கப்பல் வருகிறது. அதில் போய்விடலாம்.” கரோலின் பதிலளித்தாள். “எப்படித் தெரியும்.? ஹேன்ற்லி வினவினான். “நான் யார்? ஜெனரல் வாட்சனின் மகள். அப்பாவுக்குள்ள ஆற்றல் எனக்கும் இருக்காதா?” ஹென்ற்லிக்குச் ‘சரேல்’ என்றிருந்தது. “இவள் தான் சாதாரண படைவீரன் என்பதைக் குத்திக் காட்டுகிறாளா”?. அவன் கதையை மாற்றினான். “நேரம் போய்விட்டது. ஜேனரலின் ஆட்கள் வரும் நேரம்.” அவன் விலகிப் போகத்தயாரானான். “நான் சொன்னதென்னவாகிறது”? கரோலின் கோபத்தோடு சொன்னாள். “சரி பார்ப்போம். நீ போ. நேரமாகிறது.” தூரத்தில் குதிரைகள் வருவது தெரிந்தது. “ஹென்ற்லி ஆயத்தமாகு. கப்பலில் போகிறோம். சரியா”?. கூறிக்கொண்டே கரோலின் புதரூடாக மறைந்தாள்.
கப்பல் ஒன்று கரைதட்டிநின்றது. கப்பலில் பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதுமாகப் பலர் தொழிற்பட்டனர். ஜூலை பதினைந்தில் கப்பல் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. கப்பலின் கப்ரன் தோமஸ் இரக்கமுள்ளவன். அவனைக் கரோலின் சந்தித்தாள். தனது நிலைப்பாட்டைக் கூறிக்கப்பலில் புகலிடம் கோரினாள். கரோலினுக்காகப் பலர் பரிந்துரை செய்தார்கள். கப்ரன் இணக்கத்துக்கு வந்துவிட்டான். ஹென்ற்லியிடம் தனது ஏற்பாட்டைக் கூறினாள். முதலில் ஹென்ற்லி மறுத்தான். அவனும் கரோலினை உயிருக்கு உயிராக நேசித்தான். சாதார படைவீரனான தன்னை அவள் காதலிப்பதை முதலில் அவன் வெறுத்தான். “காதலுக்கு என்ன அந்தஸ்த்து வேண்டிக்கிடக்கிறது. கரோலின் உனக்கு ஏற்றவள். அவளைக் கைவிட்டு விடாதே.” நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். “ஹென்ற்லி! நீ கரோலினைக் காதலிக்கிறாயா”? ஜேம்ஸ் கேட்டான். “ஆமாம்.” இவன் பதிலளித்தான். “சரி அவளோடு கப்பலேறு. நாங்கள் உதவுவோம். யோசிக்காதே”, ஜேம்ஸ் உறுதியாக நின்றான்.
இருள் மெல்லப் பரந்து மூடிக்கொண்டிருந்தது. கப்பல் புறப்படத் தயாரானது. இருளில் இரண்டு உருவங்கள் சனங்களோடு சனங்களாக கப்பலில் ஏறிக் கொண்டன. கூக்கிளி நதியில் கப்பல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. காற்று மெல்ல மெல்ல ஊதத்தொடங்கியது. அலைகளை அள்ளி வீசத் தொடங்கியது. திடீரெனப் போர்த்துக்கேய கடற்கொள்ளையர்களின் கப்பல் புகுந்து கொண்டது. காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றோடு கடும் மழையும் சுழன்றடித்தது. கடற் கொள்ளையரும் ஒரே நேரத்தில் கப்பலைத் தாக்கினர். கப்பல் பேயாட்டம் ஆடியது. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தங்கள். கரையிலிருந்து பீரங்கிகள் முழங்கின. இருளில் தீப்பிளம்புகளைக் கக்கியவண்ணம் பீரங்கிக் குண்டுகள் பாய்ந்தன. இருபுறமும் இருந்து பீரங்கிகள் முழங்கின. சூறாவளி சுழன்றடித்தது. மேரி கவலையில் தவித்தாள். ஜெனரலுக்குச் செய்தியனுப்பினாள். கோள்ளையரும், சூறாவளியும் ஒரே நேரத்தில் தாக்கிதால் ஜெனரல் ஆடிப்போய் விட்டான். செய்வதறியாது திகைத்தான். வெகுநேரத்தின் பின் சூறாவளி ஓய்ந்தது. கப்பல்களைக் காணவில்லை. கொள்ளையர்கள் தப்பிவிட்டார்களா? கப்பலில் ஏறிய மக்களும் கரோலினும் ஹென்லியும் எங்கே? தெரியவில்லை. ஓரிருவர் உயிர்தப்பினார்கள். அவர்கள் நீந்தி கொல்கத்தாக் கரையை அடைந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி கப்பல் கூக்கிளி ஆற்றினுள்; அமிழ்ந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கப்பலினுள் கரோலினைப் பார்த்துள்ளார்கள். அவளும் ஹென்ற்லியும் கப்பலோடு கூக்கிளி நீரில் சங்கமித்து விட்டார்கள். ’கரோலின்’ வாய் முணுமுணுத்தது. எனது கண்கள் பனித்தன. வெப்பக் காற்றோடு எனது வெப்பமான பெருமூச்சும் கலந்து கொண்டது. கூக்கிளி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஹொட்டல் றடிசன் சோகமாக நிமிர்ந்து நிற்பது போல் தெரிகிறது. அந்தக் குயில்களின் சோகக்கூவுகை என்னை ஆட்கொண்டது.(கற்பனை கலந்த உண்மை.)

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP