Monday, December 14, 2009

மணல்திட்டு

அலை வீசி ஆர்ப்பரித்தது. கும்மிருட்டில் அலையின் இரைச்சல் படுபயங்கரமாக இருந்தது. கடற்கரையில் சிலதோணிகள் தரித்து நின்றன. மக்கள் மனங்களில் பயங்கரம் குடிகொண்டு விட்டது. உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடுவதுதான் திட்டம். தோணிகளில் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். பலதோணிகள் மக்களை ஏற்றிக் கொண்டு ஏற்கனவே சென்றுவிட்டன. தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. செல்வந்து விழுந்து வெடித்துச் சிதறி நிலமதிருவதை உணர்ந்தார்கள். கடலிலும் செல்கள் விழுந்து வெடித்தன. பல தோணிகள் சென்றுவிட்டன. அத்தோணிகளுக்கு என்ன நடந்தது? ஒன்றும் தெரியாத நிலை. தோணியில் ஏறியவர்கள் சகுனம் சரியில்லை என்று இறங்கி விட்டார்கள். அழகன் கடற்கரைப் பக்கமாக ஓடிவந்தான். “இண்டைக்கு நிலமை சரியில்லை. பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாயிருக்கும் போலத்தெரியுது. . கெதியா வீட்டுக்குப் போய்ச் சேருங்க.” சொல்லிவிட்டு வந்த வழியே ஓடினான். சனங்கள் செய்வதறியாது தவித்தார்கள். சற்று நேரத்துக் கெல்லாம் அழகன் போனதுபோல் ஓடிவந்தான். “இனிச் சுணங்க வேண்டாம். நாளைக்கு இந்த ஊரைச் சுற்றி வளைக்கத்திட்டம் போட்டிருக்கிறார்கள.; இவங்கட கையில பட்டால் மகசீன் சிறைக்கைதிகளுக்கு நேர்ந்த கதிதான் கிடைக்கும்.” அழகன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். சிதறுண்டு அங்குமிங்குமாக ஓடிய மக்கள் ஒன்று கூடினார்கள். தரித்து நின்ற தோணிகளில் ஏறிக்கொண்டார்கள். “கடல்தாயே எங்களைக் காப்பாற்று.” தோணியில் ஏறியவர்கள் ஒரே குரலில் வேண்டுதல் செய்தார்கள். தோணிகள் அலையைக் கிழித்துக் கொண்டு பறந்தன. கடற்கரையோரம் வெறிச்சோடிக் கிடந்தது.

அந்த ஊர் வெறிச்சோடிக்கிடந்தது. கிழக்கு வானம் இருட்டியிருந்தது. இன்னும் வெளிக்கவில்லை. வெடிச்சத்தங்கள் ஓய்ந்திருந்தன. ஆளுக்காள் தெரிந்தும் தெரியாமலும் பலர் புறப்பட்டு விட்டார்கள். பலர் தூரத்தே உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாகப் போய்விட்டார்கள்;. அழகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். அவன்தான் அவர்களது நெருக்கடி நேர எச்சரிக்கைக் குழுவின்தலைவன். அவன் எச்சரிக்கை செய்யும் தனிமனிதனாகச் செயற்பட்டான். கிராமங்கள் அமைதியாய்க் கிடந்தன. நாய்கள் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.
கும்மிருட்டில் படகுகள் பறந்தன. அலைகளைக் கிழித்து முன்னேறின. மக்கள் உயிரைக் கைகளில் பிடித்தபடி நடுங்கினார்கள். கடலலைகளும், படகுகளின் இயந்திரங்களும் சேர்ந்திரைந்தன. இரைச்சல் காதுகளில் அறைந்து செவிடாக்கின.. அடிக்கடி கடல் படகினுள் அலைகளை வீசி அச்சுறுத்தியது. கண்களை மூடிப் பயணித்தார்கள். ஒரு முடிவில்லாமல் படகுகள் சென்றுகொண்டிருந்தன. படகுகள் மணற்திடலில் தரித்தன. “கரை வந்தாச்சு இறங்குங்க. அப்படியே நடந்து போனால் ஊருக்குள் போய்விடலாம். கேதிப்படுத்தி இறங்குங்க” படகோட்டிகள் வற்புறுத்தினார்கள். அந்த மணற்திடல் கரையில் இறக்கி விட்டுச் சென்றுவிட்டன. அந்த இருளில் ஒன்றுந்தெரியவில்லை. சுற்றிவரக் கடல்தான் தெரிந்தது. உண்மையாக அவை கரையல்ல. மணற்திட்டுகள். கடலுள் வற்றுப் பெருக்கினால் ஏற்படுபவை. வற்று நேரத்தில் மணல்திட்டுக்களாகப் பரந்து தெரியும். பெருக்கு நேரத்தில் கடலலையால் சிலநேரம் மூடப்பட்டுவிடும். ஒருபகுதிமட்டும் சிறு தீவாகத் தெரியும். இறக்கியதும் படகுகள் மாயமாக மறைந்து விட்டன. ஒரு அரைக்கிலோ மீற்றர் சுற்றளவுள்ள தீவில் அவர்கள் விடப்பட்டார்கள்.

படகுக்காரர்கள் அதிக பணத்துக்காக ஆசைப்பட்டு அதிகமான சனங்களை ஏற்றுவதால் விபத்துக்கள் ஏற்படுவதும் உண்டு. படகுகள் கவிழ்ந்து உயிரிழப்புக்களும் ஏற்படும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். என்று விதியை நோவதும் உண்டு. இலங்கை சுதந்திரம் பெற்றதும் இனஅடிப்படையிலான முரண்பாடுகள் முளைத்து வேர்விடத்தொடங்கின. இனரீதியாக அரசியல் கட்சிகள் செயற்பட்டன. மொழிச்சட்டம் முளைவிட்டது. மோட்டார் பதிவிலக்கம் சிங்கள ‘சிறி’யில் தொடங்கப்பட்டது. தமிழர்கள் எதிர்த்தார்கள். இனக்கலவரம் ஆரம்பமாகியது. சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களது சொத்துக்கள் காடையர்களால் சூறையாடப்பட்டன. அது புரையோடி 1983ல் இனக்கலவரமாக மாறி அகோரத்தாண்டவம் ஆடியது. தமிழர்களது சொத்துக்களோடு அவர்களது உடல்கள் வெட்டியும், சுட்டும், எரியூட்டப்பட்டும் உயிர்களும் அழிக்கப்பட்டன. கன்னியர்கள் கற்பழிக்கப்பட்டு எரியூட்டிப் புதைக்கப் பட்டார்கள். தமிழ்ச் சிறைக் கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டனர். எதிர்கட்சித் தலைவராக இருந்த தமிழரது அலுவலகம், வீடு அத்தனையும் எரியூட்டப்பட்டன. தமிழர்கள் உயிரைக்கையில் பிடித்தபடி தோணிகளிலும், விமானம் மூலமும் புலம்பெயரத் தொடங்கினர். இந்தியா அவர்களுக்கு ஆதரவளித்து அரவணைத்தது.


சற்றுநேரத்துக்கெல்லாம் இராணுவ வாகனங்கள் அந்த ஊர்மனைகளைச் சுற்றி வளைத்தன. ஆங்காங்கே குழுமிக் கூட்டங்கூடட்டமாக இராணுவத்தினர் பதுங்கிக் காத்திருந்தார்கள். இப்போது இருள்விலகி கிழக்கில் விடிவெள்ளி முளைக்கத் தொடங்கியது. வானைநோக்கிச் சில வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அது இராணுவத்தினருக்கு வழங்கும் கட்டளை வெடி. இராணுவத்தினர் உசாரானார்கள். அரச உயரதிகாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் பயங்கரவாதிகள்தான். ஆனால் சாதாரண சிப்பாய்களுக்கு களநிலவரம் புரியும். பதுங்கிப் பதுங்கி, ஊர்ந்தும். தவழ்ந்தும் பெரிய எடுப்பில் கிராமத்தினுள் நுழைந்தனர். சந்திகளில் காவல் இருந்தனர். யாரும் தப்பிவிடக் கூடாது என்பது அவர்களது எதிர்பார்ப்பும் இடப்பட்ட கட்டளையுமாகும். ஆளரவங்களைக் காணவில்லை. ஒரு மனிதப்பிறவியும் கண்ணில் படவில்லை. வீடு வீடாக ஏறி இறங்கினார்கள். “எல்லாரும் தப்பிவிட்டார்கள். நாங்க ஏமாந்து விட்டோம்.” ஆளையாள் ஏமாற்றத்தோடு பார்த்தார்கள். கப்ரன் சாந்தவுக்கு நிம்மதிப் பெருமூச்சு.

காலை பத்து மணியிருக்கும். அந்தப்பிரதேசக் கட்டளைத் தளபதி வந்திறங்கினார். அவர் அந்தப் பிரதேசத்துக்குப் புதிதாக அனுப்பப்பட்டவர். இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் வந்தவர். அவரது கண்கள் துளாவின. இராணுவத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை “எங்கே பயங்கரவாதிகள். கூட்டி வாங்க. அவர்களைப் பந்தாட வேண்டும்”. அவரது கண்கள் அனல்கக்கின. பற்களைக் கடித்தபடி சத்தமிட்டார். “தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்கள் சிங்கள இனத்தை அழிக்கப் புறப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.” இந்தக் கருத்தே அவனுக்கு ஊட்டப்பட்டது. அதிலே ஊறியவர்தான் இந்தக் கட்டளைத்தளபதியும். அவர் அதனை உறுதிப்படுத்துமாப் போல் நின்றார்.

“சேர்! கிராமம் எங்கும் வலைபோட்டுத் தேடினோம். ஒரு மனிசரும் இல்லை. போட்ட பொருட்கள் போட்டபடியே கிடக்குது. ஊரைவிட்டே போய்விட்டார்கள். எப்போது எப்படி, எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியாது. எங்களுக்கு இரவில் ரோந்து போக்ககூடாது என்ற கட்டளை உண்டு.” சார்ஜன் விமல் சிங்களத்தில் கூறினான். “இந்தக்கிராமத்தில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதை உளவுப்பிரிவு அறிவித்தது. அது தெரிந்துதானே சுற்றி வளைப்புச் செய்யக் கட்டளை வந்தது.? அப்படி இருந்தும் கோட்டை விட்டு விட்டீர்களே. சே... அவமானம்.” பாய்ந்து சத்தமிட்டார். இராணுவத்தினர் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். இது எல்லைக் கிராமம். சில சுயநலவாதிகளின் அநாமதேய செய்திகளை உளவு அறிக்கையாக ஏற்றுக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளையும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளையும் கண்டு கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வேதனையடைவதைத் தவிர வேறுவழியில்லை. இந்தக் கிராமத்தில் அப்பாவிகளைத் தவிர வேறுயாரும் இல்லை என்பது கீழ்மட்ட இராணுவத்தினர் சிலருக்குத் தெரிந்த விடயம். ஆனாலும் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். சுற்றி வளைப்பு நடந்தது. கப்ரன் சாந்த பக்கத்தில் நின்றிருந்தான். அவனுக்கு ஏதோ சொல்லவேணும் போலிருந்தது. அவன் வித்தியாசமானவன். அவன் துணிந்துவிட்டான். “சேர் இந்தச் சனங்கள் அப்பாவிகள். அன்றாடம் காய்ச்சிகள். இவங்களும் நம்ம நாட்டு மக்கள்தானே? பாவம். ஏன் சேர் கொடுமைப்படுத்தவேணும்.? அவர்கள் என்ன செய்தார்கள்? அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இராணுவம் அடிபணிவதா”? விறுவிறு என்று கொட்டிவிட்டான். கட்டளைத் தளபதியின் உடல் கொதித்தது. கைகள் விறுவிறுத்தன. விறுவிறுத்த கைகள் கப்ரன் சாந்தவின் சட்டையை இறுக்கிப்பற்றின. மறுகணம் கன்னங்களில் விளையாடின. அவன் நிலைகுலைந்து போனான். “டேய் .. துரோகி... அரசாங்கச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வக்காளத்து வாங்கிறாயா? இரண்டு பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுத்தால் எனக்கு இரண்டு பட்டியேறும். அதைக்கெடுத்து விட்டுக் கதையளக்கிறாயா? நீதான் பயங்கரவாதி.” கட்டளைத் தளபதி அதிர்ந்தான்.

பக்கத்தில் நின்ற இராணுவ சார்ஜனை அழைத்தான். “ சார்ஜன், இவனுக்கு சஸ்பென்ஸ் ஓடர் கொடு. ஒரு கிழமைக்கு ‘டிற்ரென்சன்.’ கூட்டுக்குள்ள போடு” கட்டளை பறந்தது. அங்கிருந்த இராணுவத்தினர் செய்வதறியாது திண்டாடினர். அவர்கள் பலமுறை இந்தக் கிராமத்துக்குச் சென்றிருக்கின்றார்கள்;. மக்களோடு பழகியும் உள்ளார்கள். மக்களது ஏழ்மை வாழ்க்கையை எண்ணி வருந்தியும் உள்ளார்கள்;. காக்கிச் சட்டை போட்ட உடம்புக்குள்ளும் நல்ல இதயம் இருக்கின்றது. கப்ரன் சாந்த அந்த வகையைச் சார்ந்தவன். அவன் புத்தரின் போதனைகளில் மூழ்கியவன். கௌதம புத்தரின் போதனைகளையும், கீதையின் உபதேசங்களையும் வாழ்வியலில் கடைப்பிடிப்பவன். கர்ம வினை பற்றி நன்கு கற்றறிந்தவன். நாம் செய்யும் கர்மத்திற்கேற்ற பிரதிபலன் கிடைக்கும். அவனது தாய் தந்தை புத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். கப்ரன் சாந்த பட்டப்படிப்பை முடித்ததும் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. சமூகவியலை ஒரு பாடமாகக் கற்றவன். இலங்கையின் வரலாற்றை நன்கு படித்தவன். இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும், நாகரும்தான். விஜயன் இந்தியாவில் இருந்து வந்தவன். அவன்தான் சிங்களவர்களது மூதாதையர் என்பதனை ஏற்கமறுப்பவன். இயக்க இளவரசி குவேனியை விஜயன் ஏமாற்றி அவளது இராச்சியத்தைக் கைப்பற்றியவன். அவர்களைக் காட்டுக்குத் துரத்தியவன். நாகர் இலங்கையின் வடக்கை ஆண்டவர்கள். அவர்களது பிணக்கைத் தீர்த்து வைக்கப் புத்தபெருமான் இலங்கைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த நாகர் என்ன ஆனார்கள். அவர்களது வரலாறு எங்கே? விஜயன் பாண்டியனின் மகளைத் திருமணம் செய்தான். அவனது தோழரும் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். அவர்களது வாரிசுகள் யார்.? விஜயனின் வழித்தோன்றல்கள்தான் சிங்களவாரா? அப்படியென்றால் நாங்கள் யார்? தமிழர்கள் சகோதர்கள் அல்லவா?

சாந்தவுக்குள் ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரே கேள்விகளைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான். “சாந்த நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? உனது கடமைகள் என்ன? நிலையில்லா வாழ்வில் எதனை நீ சாதிக்கப் போகிறாய்? மனிதன் எப்போது பிறந்தானோ அப்போதே அவனது இறப்பும் தீர்மானிக்கப் பட்டுவிடும். இடையில் உயிர்களைக் கொல்வதற்கு நீ யார்.? நல்லதை நினை. நல்லதைச் செய். நினைவு நல்லது வேண்டும். அதனைச் செய். பலன் தானே தேடி வரும்.” அவனது மனம் அவனோடு போராடிக் கொண்டிருந்தது. அவன் இராணுவத்தில் சேர்ந்து கடமைக்குச் செல்லும் போது அவனது தந்தையும் தாயும் சொன்னவற்றை அடிக்கடி நினைவு கூருவான். அதனை சார்ஜன் விமலோடும் பகிர்து கொள்வான். இப்போது தளபதியின் கட்டளையால் விமலுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. நல்லதொரு கடமை வீரனுக்கு இப்படிப்பட்ட தண்டனையா? இதுதானா தார்மீகம்.? அவன் உள்ளம் குமுறியது. கப்ரன் சாந்தவின் முகம் நிலம் நோக்கியிருந்தது. தனது தார்மீகத் தன்மையைச் சுட்டிக்காட்டிய திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே. பலன் கன்னங்களில் கிடைத்தது. இது தற்காலிகமானது. மனித மனம் திருந்துவதற்கு ஒரு அக்கினிக் குஞ்சைக் காட்டினேன். பற்றிக் கொள்வதும் பற்றாததும் அவரவர் மனத்தின் அளவைப் பொறுத்தது. அவன் கவலைப் படவில்லை.
கட்டளைத் தளபதி இராணுவத்தை முகாமுக்குத் திரும்புமாறு பணித்தான். பின் ‘பிக்கப்’ வாகனத்தில் ஏறி முகாமுக்குப் போய்விட்டான். இராணுவத்தினர் சாந்தவைச் சூழ்ந்து கொண்டனர். “வீரர்களே! நம்மைப் பெற்றவள் ஒரு தாய். நமக்கு அக்கா, தங்கைமார் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழர்களும் நமது சகோதரர்கள்தான். இதனை நினைவு கொள்ளவேண்டும். அவர்களது துன்பத்தைத் துடைப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு துன்பமும் வராது. புத்ததர்மத்தின் வழி நடப்போம்.” அடிக்கடி இதனை தனது வீரர்களுக்குக் கூறுவான். தங்களுக்கு உதவும் கப்ரனாகச் சாந்த திகழ்ந்ததை அவர்கள் மறக்கவில்லை. ஆறுதல் கூறிக்கொண்டனர். முகாமுக்குத் திரும்பினார்கள். முகாமில் வழமையான கடமையில் ஈடுபட்டனர்.
அழகன் மணல்திட்டியில் நின்றவாறு வானைப் பாத்தான். கடலைப்போல் வானமும் நீலம்பூத்திருந்தது. வெயில் தகதகத்துக் கொழுத்தியது. சிறிய வட்டத்துக்குள் சிறைப்பட்ட பாவிகளாக இலங்கையின் ஆதிக்குடி மக்கள் அந்தரித்தார்கள். வாய்க்கு வந்தபடி அரட்டிக் கொண்டிருந்தார்கள். “கவலைப் படாதீங்க. எப்படியும் தமிழ்நாட்டுக்குள் போய்விடலாம். நாம் தொப்புக் கொடியினால் பிணைக்கப்பெற்ற உறவுகள். நமது தமிழ் உறவுகள் காப்பாற்றும்.” அழகன் மக்களிடையே புகுந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். நமது மக்கள் எல்லோரும் ஒரேமாதிரி இல்லை. செய்வதைச் செய்துவிட்டு பழியை யார்மேலாவது போடுவார்கள். இது வழிவழிவந்த மரபு. “இஞ்சவந்து இந்த வேகாத வெயிலில சாவதைவிட, அங்க சிங்கள ஆமிக்காரனால செத்திருக்கலாம்.” சின்னாச்சி முணுமுணுக்கத் தொடங்கினாள். “எங்கட சனங்கள் சரியான சுயநலக்காரர். முதலில தோணியில போனவங்க எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமெல்லோ.”? தோட்டத்து முத்தர் தொணதொணத்தார். “ஐயா பொறுமையாயிருங்க... வாழ்வா ..சாவா என்ற நிலையில் இருக்கிறம். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதீங்க? இப்ப நமக்குத் தேவை பொறுமை. எல்லாத்தையும் ஆண்டவனிட்ட விடுவம். அவன் பார்த்துக் கொள்வான்.” அழகன் மிகப்பணிவாகக் கேட்டுக் கொண்டான். அவனது பார்வை தூரத்துக் கடலில் இருந்தது.

தூரத்தே விசைப்படகுகள் வருவதைக் கண்டு கொண்டான். அவனுக்குச் சந்தேகம். ஒருவேளை இலங்கை கடற்படைப் படகுகாகளாக இருக்குமோ? ‘அப்படி இருக்கக்கூடாது’ என அவனது உள்ளம் இறைவனை நோக்கி இரந்தது. அவர்களது நல்ல வேளை. தமிழக மீனவப் படகுகள் வந்து கொண்டிருந்தன. அழகன் கையசைத்துச் சைகை காட்டினான். படகுகள் மணல்திட்டியைச் சூழ்ந்து கொண்டன. அழகன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அத்துடன் உதவியையும் கோரினான். அவர்கள் அனைவரும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். மக்களது பரிதாபநிலையைக் கண்டார்கள். அவர்களது மனம் இரங்கியது. இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவிப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நல்லன நினைப்பதும், செய்வதும் ஆபத்தில் உதவுவதும் மனிதப் பண்பு. உற்சாகமாகத் தலையை ஆட்டினார்கள். அவர்களது சம்மதம் கிடைத்து விட்டது. அழகன் அனைவரையும் பத்திரமாக ஏற்றிவிட்டான். அவர்களுக்கு நன்றி கூறினான். தானும் தொற்றிக் கொண்டான். படகுகள் தமிழகக் கரையை நோக்கி விரைந்தன. கரை நெருங்கிவிட்டது. கரையும் மக்களும் தங்களை நோக்கி வருவது போல் உணர்ந்தார்கள். மண்டபம் கடற்கரை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அழகன் கரையில் நடப்பதை ஊகித்துக் கொண்டான். தோணிகளில் ஏறும்போதே அளவாக ஏற்றும்படி கேட்டுக் கொண்டான். நான் முந்தி. நீ முந்தி என்று ஏறியவர்களை இறக்கியும் விட்டான். ஆனாலும் அளவுக்கதிகமாக மக்கள் ஏறினார்கள். அப்படி ஏறிய தோணிகள் என்னவாயினவோ? கரையை அடைந்ததும் இறங்கிப் பாய்ந்து ஓடினான். மக்கள் திரண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். “ஒன்று இரண்டு மூன்று.. இருபத்தொன்பது...”. அவன் மயங்கிவிட்டான். ஒன்றாகப் புறப்பட்ட இருபத்தொன்பது உறவுகள் சடலங்களாகக் கிடத்தப் பட்டிருந்தனர். தமிழக அரசின் அலுவலர்களும் பொது அமைப்புக்களும் கரிசனையோடு கவனிப்பதை அழகன் உணர்ந்து கொண்டான். அவர்களுக்கு மனதார நன்றி கூறினான். அவனது மனக்கண்முன் இந்த மக்கள் பட்ட துன்பமனைத்தும் தென்பட்டன. இலங்கை அரசபடைகளின் அடாவடித்தனங்களில் இருந்து தப்புவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி எண்ணிலடங்காதன. வீட்டில் அவர்கள் நிம்மதியாக உறங்கினது கிடையாது. “ஆமி வருது.. ஆமி வருது’ என யாரோ சொல்வார்கள். “எந்தப்பக்கமாம்?” வாய்கேட்டுக் கொண்டிருக்கும். கால்கள் திசைதெரியாது ஓடிக் கொண்டிருக்கும். உணவு சமைத்தமாதிரி அடுப்பில் இருக்கும். ஆனால் பசியோடு பக்கத்து ஊருக்கு அபயந்தேடி உடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். பிடிபட்ட இளைஞர்கள் திரும்பியதில்லை. அதிர்ஸ்டமுள்ள சிலர் பூசா சிறைச்சாலையில் பூட்டப்படுவார்கள். அவர்கள் செய்த குற்றம் என்ன? தமிழனாகப் பிறந்ததுதான் அவர்கள் செய்த பெரிய குற்றம். அழகனது உள்ளம் கேள்வித் தீயில் வெந்து கொண்டிருந்தது.

செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. காது கொடுத்துக் கேட்டனர். ‘இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் கடலில் மூழ்கினர். இருத்தொன்பது பேர்பலி. ஏனையோர் இந்திய கடற்படையினராலும், மீனவர்களாலும் காப்பாற்றப்பட்டு மண்டபம் முகாமுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்’. செய்தி கேட்டு சாந்த உள்ளம் பொருமினான். “இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கை அன்னையின் பிள்ளைகள் அல்லவா?. சொந்த நாட்டில் வாழமுடியாமல் அகதியாகி வேற்று நாட்டுக்கு ஓடுவதா? என்ன கொடுமை.” சாந்த வேதனையில் வெந்தான். விமல் ‘சஸ்பென்சனுடன் டிற்ரென்சன்’ ஓடரையும் ரைப் செய்து கட்டளைத் தளபதியின் ஒப்பத்தைப் பெற அவரது அறையினுள் சென்றான். வாசலில் நின்று “மே ஐ கம் இன் சேர்” “உள்ளே வரலாமா? ‘ குரல் கொடுத்துக் காத்திருந்தான். கதவு திறந்துதான் இருந்தது. ”என்ட, வா” பதில் வந்தது. விமல் உள்ளேசென்று சலூற் அடித்து நின்றான். தளபதி அவனை நிமிர்ந்து பார்த்தார். “சேர், ஓடர். தங்கள் ஒப்பத்துக்காக.” நீட்டினான். அதனைப் பெற்று அப்படியே வைத்தான்.


“சார்ஜன்.. றேடியோ..செய்தி கேட்டாயா?”

“இல்லை சேர்”

“இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் கடலில் மூழ்கினர். இருத்தொன்பது பேர்பலி.” கூறிக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தான். “அவர்களைப் பிடித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா?” பொறியினுள் சிக்க வைக்கும் கேள்வியல்லவா கேட்கிறான். விமலுக்குச் சந்தேகம் பிறந்தது. இவன் என்ன சொல்கிறான். “எங்கே பயங்கரவாதிகள். கூட்டி வாங்க. அவர்களைப் பந்தாட வேண்டும். பட்டி கிடைக்கும்” என்றானே? இப்போது இப்படிச் சொல்கிறான். அவன் இந்தத்தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்ளத்தயாரில்லை. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “சேர்! டீட்சென்ரன் ஓடரும் இருக்கு. ஒப்பமிட்டால் மற்றதை நான் கவனிப்பேன் சேர்.” மீண்டும் சொன்னான். தளபதி ஓடரைக் கையில் எடுத்து வாசித்தான். அதனை விமலிடமே நீட்டினான். “கிழித்தெறி. பயங்கரவாதிகளுக்கு நாம் தண்டனை கொடுக்காமல் விடலாம். ஆனால் கடல் கொடுத்துவிட்டது. அவர்கள் அகதிகள் இல்லை. பயங்கரவாதிகள்.” கூறிவிட்டுப் பயங்கரமாகச் சிரித்தான். “அவர்களை நாம் பிடித்துக் கொடுத்திருந்தால் நம் எல்லோருக்கும் ‘புறமோசன்’ கிடைத்திருக்கும். அவர்கள் நம்மிடம் சிக்காமல் போய்விட்டார்கள். அதுதான் கவலை”. சடுதியாக அவனது முகம் மாறியது. “ஓடரைக்கிழித்தெறி. போ”. சத்தமிட்டான்.
விமலுக்கு அவனது செயல் அசிங்கமாக இருந்தது. அவனது முகம் அமவாசையாக இருண்டது. அங்கிருந்து நடந்தான். “இவனெல்லாம் இலங்கையன்தானா? இவன்தான் பேரினவாதி. இலங்கை அரசின் அதிகாரிகள் அனைத்து மக்களையும் தன்நாட்டு மக்களாகக் கருதவேண்டும். ஆனால் இனவேறுபாடு காட்டி அப்பாவிகளை வருத்துவது என்ன நியாயம்,? இவனைப் போன்றவர்கள்தான் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைக்கிறார்கள். மடியிலே குண்டுகளைக் கட்டிக்கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொண்டு தற்கொடையாளியாகிறார்கள். அப்பாவிகளைப் பிடித்துப் பயங்கரவாதிகள் என்று ஒப்புக்கொள்ளச் செய்து பதவி உயர்வு பெறும் புல்லுருவிகள். இயற்கையும் அப்பாவிகளைத்தானா தண்டிக்கிறது? இவையெல்லாம் ஏன்?” விமல் நடந்து கொண்டே சிந்தனையில் மூழ்கினான். அவன் கொண்டு வரும் கட்டளையை எதிர்பார்த்து நின்றவர்கள் அவனை எதிர்கொண்டு முன்னே வந்தனர். அவர்களைக் கண்டதும் விமல் கட்டளையைக் கிழித்தான். நேரே சாந்தவிடம் சென்றான். தளபதியின் செயலைக் கூறினான். ஒருபக்கம் சந்தோசம். அது தண்டனை இல்லை. மறுபக்கம் வேதனை. சாந்தவிடமும் நண்பர்களிடமும் கூறி வேதனைப் பட்டான். “விமல் கவலைப் படாதே. நாம் கர்ம வீரர்கள். வீரர்கள் அழக்கூடாது. எதுவென்றாலும் நன்மைக்கே என்றிருப்போம்” சாந்த அனைவரையும் தேற்றினான்.
“தம்பி உங்கள் பெயரென்ன?” சத்தம் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “அழகன்.” வாய் கூறியது. “சரி எழும்புங்க. வாங்க எங்க பின்னால்” அழைத்தார்கள். அவனால் எழும்பி நடக்க முடியவில்லை. சமாளித்து எழும்பி நடந்தான். பசியும் பட்டினியும் வாட்டியது. அது இலங்கை அகதிகளுக்கான ஒரு முகாம். அந்த முகாமில் அவனது உறவினர்கள் இருந்தார்கள். அவனைக் கண்டதும் ஓவென்று அழுதார்கள். “முதலில் அவருக்கு இதைக் கொடுங்கோ. நல்ல பசியோடு களைத்திருக்கிறார். பிறகு பதியச் சொல்லுங்கோ. பின்னேரம் நாலு மணிக்கு பிரேதங்களை அடக்கம் செய்யவேணும். நாங்க ஆயத்தம் செய்யப் போறம். பிறகு வாறம்”. சொல்லி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அழகனுக்குப் பசி. பசி யாரைத்தான் விட்டு வைத்தது. பசிதானே உயிரினங்களை இயக்குகிறது. கவலை ஒருபுறம். “தம்பி அழகன், சாப்பிடு. நடப்பது நடக்கட்டும். பிறந்திட்டம். என்ன செய்வது. இருக்குமட்டும் வாழத்தானே வேணும்”. துரையர் தத்துவம் பேசினார். சாப்பிட்டான். ஊர்மக்கள் பக்கத்தில் இருப்பது ஆறுதலாக இருந்தது. எனினும் ஆழ்மனதில் இருபத்தொன்பது உயிரற்ற உருவங்களும் வந்து நின்றன.
நாலுமணிக்குப் பிரேத அடக்கம். இப்பவே போகவேணும். கிளம்பினான். சனங்கள் மொய்த்திருந்தார்கள். சொந்தங்களை இழந்தவர்களைப் போல் இந்த மக்களும் கண்ணீர் விடுகிறார்களே. அவனது உள்ளம் உருகியது. “நம்ம தமிழ்ச்சனங்களுக்கு இப்படியா ஆகவேணும். இதனை நம்ம நாட்டு அரசு சும்மா விடக்கூடாது. இலங்கை மக்கள் எமது தொப்பிள்கொடித் தொடர்புள்ள உடன்பிறப்புக்கள்.” பல கருத்துக்கள் சூழநின்ற மக்களிடம் இருந்து வந்தன. மனதுக்கு ஆதரவாக இருந்தன. உயிரிழந்த மக்களை இனங்காட்டி பெயர், முகவரிகளை கொடுத்திருந்தார்கள். பட்டியலை சில பத்திரிகைகள் படங்களோடு பிரசுரித்திருந்தன. பெயர்ப் பட்டியலையும், படங்களைப் பார்த்ததும் அழகன்”விதியே! விதியே ...என்செயப்போகிறாய் இந்த இலங்கைத் தமிழச் சாதியை? ஓ வென்று அழுதான். ஒருகிராமத்தின் எல்லையில் பிரேத அடக்கம் நடைபெற்றது. அரச அலுவலர்களும், சமூகநிறுவனங்களும் நல்லடக்கத்தின் போது வேண்டிய உதவிகளைச் செய்தன. எங்கேயோ பிறந்து எங்கேயோ அனாதைகளாக தனது சொந்தங்கள் புதைக்கப்படுவதை அழகனால் பொறுக்கமுடியவில்லை. காலம் யாருக்காகவும் காத்திருப்தில்லை.

முகாமில் ஆயிரக்கணக்கில் இலங்கை அகதிகள் குவிந்து கொண்டனர். சடுதியாக அரச அலுவலர்கள் வந்தார்கள். சில அகதிகளையும் கூப்பிட்டார்கள். அவர்களது கருத்துக்களையும் கேட்டார்கள். “எங்களது உயிர்களுக்குப் பாது காப்பு இல்லை. எங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதமில்லை. ஊனுறக்கம் இல்லாது பயங்கரப் பயணத்தைச் செய்து வந்திருக்கிறம்.” ஓத்த குரலில் கூறினார்கள். “ஐயா இதுதான் இலங்கையின் இன்றைய நிலமை. அதனாலதான் இந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு கட்டொழுங்குக்குள் கொண்டு வர முனைகிறோம். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கவேண்டும் அதற்குரிய ஒத்தாசைகளை வினையமாகக் கேட்கிறோம்.” நீதிமன்றில் வழக்காடும் துணிவுடன் அகதிகள் சார்பில் நடுத்தர வயதுடையவர் வேண்டுகோள் விடுத்து நின்றார். தமக்காகக் குரல் கொடுக்கவும் இருக்கிறார்கள் என்ற துணிவு அகதிகளிடையே பிறந்தது. அந்தக்குரலை அழகன் கேட்டிருக்கிறான். குரலின் சொந்தக்காரரைக் காண அவன் விழிகள் அலைந்தன.யாவும் கற்பனை.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP