Sunday, December 6, 2009

ஏன் வந்தாய்?

மார்கழி மாதத்தின் பின்நிலவு வானில் பவனிவந்து கொண்டிருந்தது. கருமுகிற் கூட்டம் நிலவுக்குப் பட்டுச்சாத்திப் பார்க்க முனைகிறது. விரைந்து வரும் காற்றலை முகிற்கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தது. நிலவுப் பெண் முகத்தைக் காட்டுவதும் மறைப்பதுமாய் பூச்சாண்டி காட்டி விளையாடியது. கருநீல வானில் பால்நிலவின் விசிறல். அற்புதமாய் பிரகாசித்தது. மழைத்தூறலின் பின் இடைவிட்ட பனிகலந்த கடுவலின் தாக்கம் உடலைத் தொட்டுச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது.ஆலங்கேணிக் கிராமத்தின் மேற்கெல்லையாக ஊடறுத்து ஓடும் பாசியாற்றின் அழகு மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையெங்கும் வெண்கண்ணாவின் ஆட்சி. கண்டல் வகையின் ஊடுருவல் இடையிடையே குத்திட்டுக் குவிந்து கூத்திடுகின்றன. உப்புநீரில் வாழும் உயிரினங்களின் ஊசலால் தோன்றும் சிறிய அலைகள் கண்ணாக்களில் மோதி உடைந்து கலகலத்துக் கொண்டிருந்தன. கண்ணாவின் மூச்சுவேர்கள் சேற்றைப் பிளந்து 'இச் இச்' என்ற ஒலியோடு வெளிக்கிளம்பும் கிசுகிசுப்பு. சிள்வண்டின் கீர்த்தனைகள். உப்புநீரும், நன்னீரும் கலந்த வெள்ளம் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது. மீன்களின் துள்ளல். இறால்களின் பாய்ச்சல். கானாங்கோழிகளின் கெக்கலிப்பு. ஆக்காண்டியின் இனிய எச்சரிக்கை. கிராமத்தின் சூழல் இனிமையானதுதான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தன. நாட்டுப் பிரச்சினைகள் இல்லாதபோது கிராமத்தின் மக்கள் அனுபவித்த சுகம் ஆனந்தமானது. இந்தச் சமாதான நடவடிக்கைகள் நிரந்தரமானதாக அமையவேண்டும் என்று ஏங்காத மனங்கள் இல்லை. இந்நிலை நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்காத மக்களும் இல்லை.
சோமசுந்தரனின் கால்களை பனியும் மழைத்துளியும் கலந்த நீரில் குளித்த வயல் வரம்புப் புல் தொட்டுத் தடவிக் கொண்டிருந்தன. அந்த நெருடல் பட்ட கால்கள் சில்லிட்டன. அவன் வயற்பரப்பில் நடந்து கொண்டிருந்தான். மாதங்களில் மார்கழிதான் அற்புதமானதாம். மழைத்தூறலும் பனிகலந்த காற்றும் இயற்கையின் இங்கிதம். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதிகாலை ஐந்து மணி. கருமைக் கடலாகக் காற்றில் அசைந்து பனிநீரைச் சுமந்து தலைகுனிந்து நிற்கும் வேளாண்மையை உற்றுப் பார்த்தான். குடலைப் பருவத்து வேளாண்மையிலிருந்து வீசும் வாசைன அவனைக் கிறங்கடித்தது. தனது கைகளால் தடவி விட்டபடி நடந்தான். வரம்புகளின் ஓரத்தில் நட்டிருந்த சோளம் அவனைக் கண்ட உற்சாகத்தில் சுழன்று அசைந்தன. அவற்றைப் பார்த்தபடி வயலைச் சுற்றி வந்தான்.அந்த வயற்பரப்பின் மேற்கே வெண்கண்ணாதான் வேலி. எல்லை வரம்பில் நின்று கிழக்காகத் திரும்பிப் பார்த்தான். மேற்கு வானில் நிலவின் பவனி. அந்த ஒளியில் அவனது உருவ நிழல் வரம்பில் படுத்திருந்தது. நிமிர்ந்த கண்களில் அவனது வீடு பளிச்சிட்டது. வீட்டுப் பக்கம் கோழிகளின் கூவல். வீதியால் போகும் மாட்டு வண்டிகளின் மணியோசையும், தூரத்து வயல்வெளிகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கதையும் பாட்டுமாகக் கும்மாளம்.
உயர்ந்து வளர்ந்த இரண்டு மூன்று பனைகள் கருமை நிழலாக அசைந்து கொண்டிருந்தன. அவற்றின் ஊடாக வெள்ளை வெளேரென்று வீடு தெரிந்தது. சோமசுந்தரனின் நெற்றிப் பொட்டில் மின்னல் பாய்ந்த உணர்வு. அந்த வீடு அந்த இடத்தில் அமைவது பொருத்தமானது என்று கூறிச் சென்றவர் தனது அதிபர் கந்தவனத்தார்தான் என்பதை நினைத்தான்.' வீடு என்பது நாம் வாழ்வதற்காக மட்டுமல்ல. நல்லறம் புரிந்து தெய்வத்துள் நம்மை வைத்து ஒப்பிட வேண்டிய வழியைத் தேடித்தரும் இடமாகவும் உள்ளது. மனை உதவுவதுபோல் மக்கள் உதவுவதில்லை. இதனைப் பலர் புரிந்து கொள்வதில்லை. படிப்பது நமது அறிவை அகண்டமாக்குவதற்காகத்தான். அதனை அனுபவமாக்கி வாழ்க்கையைச் செவ்வனே நடத்தினால்தான் மனித குலத்துக்கு மேன்மையாகும். அதற்கு முதற்படி வீடுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு போவதற்கு ஆயத்தம் செய்யுமிடமுமாகும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்லன செய்வதால் மோட்சமும், அல்லன செய்தால் நரகமும் வாய்க்கும், என்பது ஆன்றோர் வாக்கு. வீடு பொருத்தமானதாக அமையவேண்டும்.' அவரே எதிரே நின்று உரையாடுவது போன்ற பிரமை. அவர் எவ்வளவு தத்துவக் கருத்துக்களை அள்ளித் தந்தார். மானசீகமாக அதிபருக்கு நன்றி கூறினான்.சுமார் ஒரு ஏக்கர் வயல்நிலம் வீட்டுக் காணியோடு இருந்தது. கிராமத்தின் வீதிகளுக்கு அந்தக்காலத்தில் பெயர்கள் இல்லை. ஆனால் ஆலங்கேணிக் கிராமத்தின் வீதிகளுக்குப் பெயரிட்டு விட்டார்கள். அந்தப் பெருமை இந்தக் கிராமத்தில் பிறந்து வெளியிடங்களுக்குச் சென்று கல்வி கற்று இந்த ஊரின் எழுச்சிக்காகச் சேவை செய்த இரண்டு அதிபர்களுக்கே உரியது. அவர்களை நினைந்து நெஞ்சுருகினான். மணல் பரந்த பிரதான வீதிக்குப் பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பெயர் வைக்கப்பட்டது. பாரதி வீதியில் அவனது பரம்பரைக் காணி இருந்தது. நமது மூதாதையர் தேடித்தந்த செல்வங்களை அழிப்பது தவறு என்ற கொள்கையில் நம்பிக்கையுடையவன். வீட்டையண்டி வயல்நிலம் கொண்டதாக அந்த நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. பிரச்சனையின் பின் காடாகக் கிடந்த காணியைத் திருத்தி வீட்டை அமைத்துக் குடியேறியிருந்தான். பச்சைப் பசேலென பயிர்கள் சிலிர்த்து அவனது உள்ளத்தை மகிழச் செய்தன.கைகளால் வேளாண்மையைத் தடவிக் கொண்டும் அவற்றோடு உரையாடிக் கொண்டும் வரம்புகளில் உலா வந்தான். தாவரங்கள் கதைக்குமா? அவற்றுக்கு நாம் சொல்வது விளங்குமா? அவனது சிந்தனை விரிந்தது. சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் கற்பது பின்னர் வாழ்க்கையில் உதவுவதை ஒப்புக் கொண்டான். 'சுந்தரா.. நமது பிள்ளைகளைப் போலதான் பயிரினமும். நமது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். அவர்களின் விருத்தி மரபணுக்களால் தீர்மானிக்கப் பட்டாலும், பெரும்பாலும் அவர்கள் வாழும் சூழலில் தங்கியுள்ளது. அதற்கேற்ற சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதேபோல்தான் பயிரினத்தைக் கவனித்தால் நம்மை அவை வாழவைக்கும். நாட்டை உயர்த்தும். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. தேவையானபோது அது தானே உன்னைத் தேடிவரும்.' அவன் காதுகளில் அதிபரின் குரல் ஓங்கி ஒலித்தது. ;ஐயா, நீங்கள் அன்று கற்றுத்தந்த அறிவுரைகள் எனது வாழ்க்கையை உயர்த்தியுள்ளது. மனம் நிறைந்த நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்தான்.கல்வி வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல. அது சிறந்த வாழ்க்கை முறை. கற்றபடி ஓர் அளவுக்காவது வாழ்ந்தால்தான் வாழ்க்கையின் பயனை அனுபவிக்கலாம். படித்தவர்கள் எல்லோரும் சான்றோர்கள் இல்லை. கற்றபடி வாழ்பவர்களுக்குத் தோல்விகள், அவமானங்கள் வரலாம். ஆனால் அவை தற்காலிகமானவை. நிறைகுடம் தளம்புவதில்லை. அதிபர்களான கந்தவனத்தாரும், கந்தையரும் தமது முதுமைக் காலத்தைச் சொந்த ஊரில் கழிக்க வேண்டும். பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டும். கோயில் புனருத்தாரணப் பணிகளில் ஈடுபட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஊரவர்களோடு உறவாடி சந்தோசமாக இருந்து சாகவேண்டும்.என்ற எண்ணங்களோடுதான் ஊருக்கு வந்தார்கள்;. ஊர்மக்களோடு அளவளாவி மகிழ்ந்தார்கள். பாடசாலைப் பக்கம் செல்வதும் ஆசிரியர்களோடு கல்வி தொடர்பாகக் கதைப்பதும், மாணவர்களிடம் பாடங்களில் வினாக்கள் கேட்டு வழிகாட்டுவதும், கோயில் வேலைகளில் ஈடுபடுவதும், அறிவுரைகள் சொல்வதும் அவர்களுக்குப் பொழுது போக்காக இருந்தது. அவர்களது வரவு ஊரவர்களுக்குப் பிடித்திருந்தது. அனுபவசாலிகளது வழிகாட்டல் இந்தக் கிராமத்தை நல்லநிலைக்குக் கொண்டு செல்லும். இதனை சோமசுந்தரன் எண்ணி புளகாங்கிதம் அடைந்தான்.
'சுந்தரண்ணே.. எங்கே இருக்கிறீங்க..?' குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான். அங்கே செல்வன் வந்து கொண்டிருந்தான். 'என்ன செல்வன்.. விடியமுதல் இந்தப் பக்கம்.?' 'இந்த அனியாயத்தைப் பாருங்கண்ண.' கையிலிருந்த அந்தத் தாளை நீட்டினான். 'என்னது..? கொண்டா பார்ப்போம்.' கையை நீட்டினான். செல்வனது கையிலிருந்த தாள் சோமசுந்தரனின் கையில் ஒட்டிக் கொண்டது. மையிருட்டில் ஒன்றும் விளங்கவில்லை. வெள்ளைத் தாளில் கோடுகள், புள்ளிகள்தான் தெரிந்தன. விறுவிறு என்று வீட்டுக்கு வந்தார்கள். அறையைத் திறந்து வெளிச்சத்தைப் போட்டார்கள். சோமசுந்தரனுக்குத் தலையில் சம்மட்டியால் அடித்த துடிப்பு. அவனது இதயம் கனத்தது. கண்கள் சுழன்றன. பலமுறைகள் அந்தத் தாளையெடுத்துப் பார்த்தான். இரண்டு பக்கங்களில் தட்டச்சு செய்து, அசிங்கமான படமும் வரைந்து, அதனை றோனியோ செய்திருப்பதையும் கண்டுகொண்டான். படித்தான். அவனால் படிக்க முடியாதிருந்தது. இதனைச் செய்தவர்கள் மனநோயாளிகள்தான். அவனுக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டதுபோல் தோன்றியது. எங்களை வாழவைத்த தெய்வங்களுக்கா இந்தக் கதி? அவர்களது வயதுக்கு மதிப்பளித்தார்களா?. அவனது உடல் துடித்தது.'செல்வா.. இது யாருடைய வேலையாக இருக்கும்.' சோமசுந்தரன் கேட்டான். 'யாரென்று சொல்லமுடியும்.? ஆனால் நமது அதிபர்களது வரவை விரும்பாதவர்கள் தான் செய்திருக்க வேண்டும்.' செல்வன் கரகரத்த குரலில் கூறினான். ' நானறிந்தவரை அப்படி யாருமில்லையே. இது யாருடைய வேலையாக இருக்கலாம்.' சோமசுந்தரன் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டான். விடைகாண முடியாது தவித்தான்.'இப்ப என்ன செய்வது.? ஊரவர்களுக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை. பலர் படிக்காத பாமர மக்கள். அவர்களுக்குத் தங்கள் முயற்சிதான் பெரிதாக இருக்கும். இவற்றைப் பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. அதிபர்கள் இருவரும் இங்கில்லை. இன்று காலை ஒன்பது மணிபோல் வருவதாகச் சொன்னவர்கள். எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.?' அவர்களுக்கு ஒன்றும புரியவில்லை. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வேலைகள் அனைத்தும் போட்டது போட்டபடியே கிடந்தன. சிலையாக இருந்து விட்டார்கள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சோமசுந்தரன் நேரத்தைப் பார்த்தான்.'செல்வா. ஒன்று செய்வோம். இப்ப எட்டரை மணி. இப்பவே கிண்ணியாத் துறையடிக்குப் போவோம். அதிபர்கள் வருவார்கள். கதையோடு கதையாகச் சொல்லி விடுவோம். என்ன.?' சோமசுந்தரன் அமைதியைக் கலைத்து ஆலோசனை சொன்னான். அந்தத் தாளை மடித்துத் தனது சட்டைப் பையினுள் வைத்தான். முகத்தைக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினான். காற்சட்டைக்குள் தன்னைத் திணித்துக் கொண்டான். தனது சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தான். செல்வன் ஆயத்தமாகவே வந்திருந்தான். இரண்டு சைக்கிள்களும் துறையடியை நோக்கிப் பறந்தன. மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை. இரவு பெய்த மழையால் நிலம் குளிர்ந்து மழைநீரால் போர்த்தி இருந்தது.கிண்ணியாத் துறையில் இரண்டு படகுப் பாதைகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. அண்மையில்தான் புதியதொரு சொகுசான பெரிய படகுப்பாதை சேவையில் ஈடுபடுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது. கொஞ்ச நாட்களில் பழுதாகிவிட்டதாகக் கரையொதுக்கி விடப்பட்டுள்ளது. விண்வெளியைக் கடந்து சந்திரனில் கால் பதித்து உலகமயம் என்றெல்லாம் பேசப்படும் இலங்கையில், ஒரு பாலத்தை அமைத்து மக்களின் துயர்துடைக்க யாரும் முயலவில்லை. அனைத்தும் பத்திரிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தியாக வருகின்றன. நம்நாடு சுதந்திரம் பெற்று விட்டதா? என்ற வினாவோடுதான் இந்தப் பிரதேச மக்கள் வாழுகிறார்கள். சோமசுந்தரன் மனம் மக்கள் துயர்கண்டு கனத்தது.ஒரு படகுப்பாதை இக்கரையில் இருந்து புறப்படும். அதேநேரம் அக்கரையிலிருந்து மற்றப் படகுப்பாதை இக்கரையை நோக்கி வரும். இரண்டும் நடு ஆற்றில் சந்திக்கும். அக்கரையில் இருந்து படகுப்பாதை வந்து கொண்டிருந்தது. சோமசுந்தரனின் கண்கள் படகுப் பாதையைத் துளாவின. 'அதோ அதிபர்.' செல்வன் சுட்டிக்காட்டினான். கந்தவனத்தாரின் உருவம் தெரிந்தது. சோமசுந்தரன் கண்டு கொண்டான். அவர்களது இதயம் அடித்துக் கொண்டது. எப்படி அவரிடம் கூறுவது. சங்கடமான நிலையில் தவித்தனர். படகுப் பாதை 'டாங்' என்ற ஒலியோடு கரையில் மோதி நின்றது. எவ்வளவு காலமாக இந்தப் படகுப் பாதையில் பணிபுரிகிறார்கள். சரியாகக் கரையில் சேர்ப்பதில்லை. மக்கள் முட்டி மோதிக் கொண்டுதான் ஏறியிறங்க வேண்டும். அதிபர் கந்தவனத்தார் மட்டும்தான் வந்திருந்தார்.அவரை சோமசுந்தரன் உற்றுப்பார்த்தான். இவருக்கு அறுபத்தெட்டு வயதா? அவனது கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. தலையில் வழுக்கை முழுநிலாவாகப் பிரகாசித்தது. சாடையான வழுக்கை எங்கும் வியாபித்திருந்தது. உள்ள தலைமுடியும் வெண்மையாக மாறத் துடித்து நின்றன. துடிப்புள்ள இளைஞனைப் போல் அட்டகாசமான சிரிப்போடு இறங்கி நடந்து வந்தார். அவரைப் பலருக்குத் தெரியும். அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஒருகையில் அன்றையத் தினசரியும் சிறியதொரு பையும் இருந்தன. மறுகையில் குடை இருந்தது. அவரது கண்கள் பேருந்தைத் தேடின. அவரைத் தேடி சோமசுந்தரன் கால்கள் நடந்தன. செல்வன் பின் தொடர்ந்தான். அவர்களை அவர் கவனிக்க வில்லை. ஊருக்குப் போகும் பேருந்து அங்கு இல்லை. அதனைத் தேடினார். அவரது கண்கள் பேருந்தைத் தேடும் படலத்தில் இறங்கின. 'ஐயா.. ' குரல் கேட்டுத் திரும்பினார். அங்கே சோமசுந்தரனும் செல்வனும் காட்சி கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்த வசீகரமான புன்னகையை வீசினார். பதிலுக்கு அவர்களது முகத்தில் சிரிப்பு வர மறுத்தது.'என்ன சுந்தரா.. சுகமா? செல்வா எப்படி சுகம்? எங்க போறியள்?' ஒன்றும் அறியாதவர்போல் கலகலப்போடு உரையாடினார். 'சும்மா துறையடிக்கு வந்தோம். வீட்டுக்குத்தான் போகிறோம். உங்களைக் கண்டதும் சந்தோசப் பட்டோம். வாருங்கள் சைக்கிளில் போவோம்.' அன்போடு அழைத்தார்கள். 'சைக்கிள் சவாரி சுகமானதுதான். நீங்கள் இருவரும் ஒரு சைக்கிளில் வாருங்கள். நான் மற்றச் சைக்கிளில் வாறன்.' அந்த வசீகரச் சிரிப்போடு கூறினார். அவரது பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். கந்தவனத்தார் உற்சாகத்தோடு சைக்கிளில் ஏறினார். பொத்தற் சேலைபோல் குன்றும் குழியுமாகப் பழய மட்டக்களப்பு திருகோணமலை வீதி படுத்திருந்தது. கந்தவனத்தரின் சைக்கிள் குதிரையோட்டம் காட்டியது. பள்ளத்தில் விழும்போதும் எழும்போதும் சைக்கிள் ஒரு துள்ளுத் துள்ளும். அந்தத் துள்ளலில் அவரையும் துள்ளச் செய்யும். அவரது உடல் குலுங்கி அடங்கும். சோமசுந்தரனுக்குச் சிரிப்பு வந்தது. செல்வன் சிரிப்பையே மறந்து விட்டான்.
கந்தவனத்தாரும், கந்தையரும் ஆசிரியர்களாக இருக்கும் போதும், அதிபர்களாக இருக்கும் போதும், நகைச்சுவையோடுதான் கற்பிப்பார்கள். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பார்கள். அதனால் மாணவர்கள் அவர்களது கற்பித்தலைப் பாராட்டினார்கள். அவர்கள் காலத்தில் கட்டொழுங்கு இருந்தது. சமய எழுச்சி இருந்தது எந்தப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடமாட்டார்கள். இலகுவான முறைகளைக் கையாண்டு கற்பிப்பார்கள். அவர்களது சேவைத் திறனால் கிராமப்புற மாணவர்கள் பலர் பல்கலைக் கழகம் சென்று பட்டதாரியானார்கள். இவர்களை எங்கள் தலைமுறையினர் தூற்றுவதா? செல்வனின் உள்ளம் கொதித்தது.
எப்படி அவரிடம் எடுத்துரைப்பது.? யோசனையோடு சைக்கிள் ஓட்டினார்கள். சற்று நேரம் மயான அமைதி நிலவியது. என்ன சத்தமில்லாமல் வாறியள்? என்ன புதினம். சொல்லுங்கோ? புன்னகையோடு கேட்டார். அவரது சைக்கிள் ஒரு பள்ளத்தில் ஏறிக் குதித்து நின்றது. விழாமலிருக்கத் தன் இடது காலை நிலத்தில் ஊன்றிக் கொண்டார். சோமசுந்தரனும் சைக்கிளை நிறுத்திக் கொண்டான். சைக்கிளை விட்டு இறங்கினார்கள். மெதுவாகச் சைக்கிளை உருட்டி நடந்தார்கள்.
'ஐயா நமது ஊர் இப்ப கெட்டுப் போச்சுது. மனிதர்களை மதிக்கத் தெரியாத சமூகம் உருவாகி விட்டதுபோல் தெரிகிறது.' செல்வன் விடயத்தை உடைக்க ஆயத்தமாகி விட்டான். 'ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?' அவர்களைப் பார்த்துக் கேட்டார். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார்கள். மனந்துணிந்து கேட்டார்கள். 'ஐயா.. நமது ஊரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?' 'நினைப்பது என்ன? 'எந்த ஊர் என்றாலும் அது நம்ம ஊர் போலாகுமா'?' பாட்டாகவே பதிலளித்தார். அவரது வெள்ளை உள்ளத்தைக் கண்டு மனம் பூரித்தாலும் அதற்காக அவர்கள் வருந்தினார்கள்.'தம்பி; உங்களது ஏக்கம் எனக்குப் புரிகிறது? இதுதானே உங்களுக்கு வேணும்? கேள்வியோடு சட்டைப் பையிலிருந்த தாளை எடுத்து விரித்தார். இதைச் சொல்லத்தானே தயக்கம்'. சிரித்தவாறே காட்டினார். அசிங்கமான படங்களோடு 'ஏன் வந்தாய்? என்ற வினா தெரிந்தது. அவர்கள் சிலையானார்கள். இவருக்கு எப்படி இது கிடைத்தது?. 'ஐயா.. உங்களுக்கு.. இந்த விசயம் .. தெரியுமா?' ஆச்சரியத்துடன் வினாவினார்கள். 'தெரியுமாவா? என்னைத் தெரிந்த அத்தனைபேரிடமும் இந்தத் தாள் உலா வந்துள்ளது. தம்பி நான் உலகத்தைப் புரிந்தவன். பலரது உள்ளங்களையும் அறிந்தவன். ஏன் வந்தாய்? என்று கேட்பவர்களுக்கு நாங்கள் ஊருக்கு வந்ததன் நோக்கம் நல்லாகவே தெரியும். ஏதோ பயத்தினால் சேற்றை அள்ளித் தங்கள் முகத்திலேயே பூசியுள்ளார்கள். பாவம். அவர்களை மன்னிப்போம். இதைப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டாம்.' அலட்சியப் படாமல் சொல்லிக் கொண்டு நடந்தார். 'எப்படி ஐயா பொறுத்துக் கொள்ளலாம். இதற்குப் பொறுப்பானவர்களும் உங்கள் இருவரிடமும் கற்றவர்கள்தானே?' நடந்தவாறே கேட்டார்கள்.

'கற்றவர்கள்தான். எல்லோரும் நல்லவர்கள்தான். ஆனாலும் மாணவர்கள் பலவிதம். நீங்கள் நன்னூலைப் படித்தவர்கள்தானே?. மாணவர்களை நன்னூலார் மூவகைப் படுத்துவார். அல்லவா? அவர்களை அன்னத்துக்கும், கிளிப்பிள்ளைக்கும், ஓட்டைக்குடத்துக்கும், பசுவுக்கும், பன்னாடைக்கும் இன்னும் பலவற்றுக்கும் ஒப்பிடுவார். பன்னாடை போன்றவர்கள் நல்லனவற்றை விட்டு விடுவார்கள். அல்லனவற்றை எடுத்துக் கொள்வார்கள். பன்னாடை போன்றவர்கள் நமது ஊரில் மட்டுமல்ல எங்கும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நினைக்கும்போது கவலை கொள்கிறேன். அவர்களது மனம் அவர்களைச் சுட்டெரிக்கும். இப்போது அவர்கள் சிந்திக்காது எதனைச் செய்கிறார்களோ அதனை அவர்களுக்கு மற்றவர்கள் நிட்சயம் செய்வார்கள். பன்னாடை போன்றவர்களுக்குப் பாடம் புகட்டவே வந்துள்ளோம். ஊரையும் ஊர்மக்களையும் குறைகூறாதீர்கள். ஏறுங்கள் போவோம்.' கூறிக் கொண்டு சைக்கிளை மிதித்தார். அது ஊர்க்குருவி போல் பறந்தது. கந்தவனத்தரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் உறுதியாக இருந்ததை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் மனதிலும் ஒரு அமைதி நிலைகொண்டது.ஆலங்கேணிக் கிராமத்தின் கிழக்கே கொட்டியாரக் குடாக்கடல் மட்டும் இரைந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தார்கள். கடல் பொங்கி எழுந்து துரத்துவதுபோல் தெரிந்தது. வழக்கத்துக்கு மாறாக அலைகள் ஆர்ப்பரித்து வந்தன. ஆழிப்பேரலைகள் ஊர்களை வாரி விழுங்கவேண்டும் என்று பாய்ந்தெழுந்து சீறியது.


யாவும் கற்பனை –

1 comments:

மு.மயூரன் December 7, 2009 at 1:57 AM  

அருளானந்தம் ஐயா, உங்களை இணையத்தில் வலைப்பதிவோடு காண்பதில் பெருமகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் நிறைய எழுதவேண்டும்.

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP