Sunday, December 13, 2009

சலனமற்ற வாழ்க்கை.

“அந்தச் சந்தியால திருப்பு. வலப்பக்கமாக மூன்றாவது வீடு. அதில நிற்பாட்டு. கவலை தோய்ந்த முகத்துடன் நந்தன் கூறினான். அவனது மனம் அடித்துக் கொண்டது. புழுதியைக் கிளப்பியவாறு அந்த வாகனம் விரைந்து வந்து நிற்கிறது. அதிலிருந்து பலர் இறங்குகிறார்கள். வாகனத்தில் இருந்து இறங்கியதும் இளையமகன் நந்தன் படுக்கையில் கிடக்கும் கந்தவனத்தாரின் பக்கம் விரைகிறான். அவனது மனைவியும் பிள்ளைகளும் தொடர்ந்து செல்கிறார்கள். சனம் புதினம் பார்க்க வெளிக்கிட்டு வந்தாச்சு. விடுப்புக்களும் விதண்டாவாதங்களும் தூள் பறக்கிறது. சிலர் உண்மையான அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். சிலர் நமட்டுச் சிரிப்போடு நிற்கிறார்கள். மூத்த மகனும் மருமகளும் சற்றுமுன்தான் வந்தார்கள். இப்போது இளைய மகனும் மருமகளும் பிள்ளைகள் சகிதம் வந்து விட்டார்கள். அபிராமிக்குச் சற்று நிம்மதி. மருமகள்மார் பக்கத்தில் வந்தார்கள். “மாமா, எப்படி இருக்கு மாமா”? விசாரிக்கிறார்கள். அவரையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். அவரது கண்கள் மெல்லத் திறந்து மூடுகின்றன. கண்ணீர் வழிகிறது. ஊரவர்களில் சிலர் இவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் சுகம் விசாரிக்கிறார்கள். நந்தன் அப்பாவை உற்றுப் பார்க்கிறான். “நாங்க இஞ்ச இருக்கிறதால அவருக்கு உதவிதான். காலமையும் வந்து பார்த்து விட்டுத்தான் போனனான்”. பக்கத்து வீட்டுப் பொன்னி முகத்தைச் சுளித்தவாறு கூறிக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவள் எட்டிப் பார்ப்பதே இல்லை. விண்ணாணம் பார்ப்பதில் கெட்டிக்காரி. அவளது குத்தலும் பார்வையும் அபிராமியை ஊடுருவுகிறது. உன்னை என்ன செய்கிறேன் பார். என்பதுபோல் பொன்னியின்பார்வை தெரிந்தது.
கந்தவனத்தார் படுக்கையில் இளைத்துக் கிடந்தார். உள்ளத்தில் பட்ட அந்த அடி வேதனையாகி அவரை வீழ்த்தி விட்டது. அது ஆறாதது. காலம்தான் அதனை ஆற்றக்கூடியது. இதயப்பை சிறுகச் சிறுகத் தன் சக்தியை இழந்து கொண்டு வருவதுபோலத் தெரிந்தது. அவரால் பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விரல்களைக் காட்டிச் சைகை செய்கிறார். அதன் பொருள் விளங்காது ஆளுக்காள் தமது கருத்துக்களைக் கந்தப் புராணத்துப் பாடல்களுக்குப் பொருள் கூறுவதுபோல் கூறிக்கொண்டிருக்கின்றனர். கந்தவனத்தார் மீண்டும் தலையை அசைத்துக் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். சொற்கள் வெளியேவர மறுக்கின்றன. “மனுசன் ஏதோ சொல்லுது. என்னண்டு கேளுங்க.” பொன்னிதான் கூறிக்கொண்டிருந்தாள். இளைய மகன் நந்தனுக்குக் கோபம் வந்திருக்க வேணும். முகத்தை வேறுபக்கம் திருப்பினான். அங்கு அபிராமி அழுதவண்ணம் வேலைகளில் மூழ்கியிருந்தாள். அவளிடம் கேட்கிறான். “அப்பாவுக்கு என்ன நடந்தது”?

“அவர் நல்லாத்தான் இருந்தார். போனகிழமை திடீரென்று “காய்சல்போல வருது” என்றார். படுத்தவர்தான். எழும்பல்ல. பிள்ளயள ஒருக்கா பார்க்க வேணும்போல கிடக்கு என்றும் சொன்னார். அதுதான் வியளம் அனுப்பினன்.” அபிராமி சொல்லிக்கொண்டே வந்தாள். அவள் அனுப்பிய செய்தியை நந்தன் அசைபோட்டுப் பார்த்தான். “உங்களுக்காகத்தான் காத்துக் கிடக்குப் போல. வந்து ஒருக்காப் பாருங்க. இண்டக்கி அல்லாட்டி நாளைக்கு போய் விடும்போலவும் கிடக்கு. நீங்க வந்தாத் தென்பாக இருக்கும். ஒருக்கா வந்திட்டுப் போனால் நல்லது.” அபிராமி இப்படிச் செய்தி அனுப்பியதில்லை. இந்தச் செய்தி நந்தனின் உள்ளத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு ஓடோடி வந்துள்ளான்.

தனது அப்பாவை எண்ணிப் பார்த்தான். அவர் செய்த தியாகங்கள் அவன் கண்முன்னே வந்து பூச்சாண்டி காட்டின. பிள்ளைகளுக்காகக் கந்தவனத்தார் பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. பிள்ளைகள் உத்தியோகம் பார்ப்பதால் வெளியூர்களில் இருக்கிறார்கள். அபிராமிதான் கந்தவனத்தாரின் நலனில் அக்கரையுள்ளவள் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அப்பாவை அவள் கவனித்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஏதோ பழக்கதோசம் போலிருக்க வேண்டும். அல்லது முற்பிறவியில் விட்டகுறை தொட்டகுறை என்பார்களே அதுவாகவும் இருக்கலாம். வந்தவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுத்து உபசரிப்பவளும் இந்த அபிராமிதான். இந்த அபிராமிக்குக் கூறிக்கொள்ள சொந்தபந்தம் என்று ஒன்றும் கிடையாது. இதுவரை அபிராமியின் சொந்த ஊரை கந்தவனத்தார் விசாரித்து அறியவும் இல்லை. அபிராமி சொல்லவும் இல்லை. இந்த யுத்தபூமியில எல்லாரும் அகதிகள்தான் என்ற நினைப்பில் இருந்துவிட்டார்.கந்தவனத்தார் கைகளை மேலே உயர்த்தி விரல்களை அசைக்கிறார். “மனிசன் ஆரையோ தேடுது. என்னண்டு கேளுங்கவன். பார்த்துக் கொண்டு இருக்கிறியள்.” பொன்னியின் சத்தம் நந்தனின் காதுகளைத் துளைக்கிறது. அபிராமியை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பொன்னிக்குப் பரமதிருப்தி. அபிராமியை இங்கிருந்து அனுப்பினால் போதும் என்று நினைப்பவள். பொன்னியின் அவசரம் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. “ஆச்சி, கொஞ்சம் பேசம இருங்க. அவருக்கு ஒன்றுமில்லை. ஆறுதலாகக் கேட்கலாம். இப்ப டாக்டரைக் கூட்டிவந்து காட்டிப் பார்ப்போம்.” நந்தன் கூறிக் கொண்டு எழுகிறான். “தம்பி எதுக்கு டாக்குத்தர். இண்டைக்கோ, நாளைக்கோ போற மனுசனுக்கு இதல்லாம் தேவையா? கேக்கிறதக் கேளுங்கவன்.” பொன்னியின் இந்தச் நச்சரிப்பு நந்தனுக்கு நாராசம் பாய்ச்சுகிறது. அவளை முறைத்துப் பார்க்கிறான். கந்தவனத்தாரின் பார்வையும் பொன்னியின் பக்கம் சாய்கிறது. அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவருக்கு பொன்னியின்மேல் எந்தவிதக் கோபமும் இல்லை. பொன்னியின் முகம் அமவாசையைக் காட்டுகிறது. இவளுக்கு ஏனிவ்வளவு கோபம்?. அபிராமிக்கு வேதனை அதிகரிக்கிறது. “இப்படியும் மனிதர்களா? ஒருவருடைய சாவில் எவ்வளவு சந்தோசம் இவங்களுக்கு. சாகாவரம் பெற்ற மனிசர்களா நீங்க.? மனதினுள் பேசிக் கொள்கிறாள். நந்தன் பேசாமல் எழுந்து டாக்டரை அழைத்துவரப் போகிறான்.

டாக்டர் வந்து கந்தவனத்தாரைப் பார்க்கிறார். கையைப் பிடித்து நாடி பார்க்கிறார். பார்த்து விட்டுக் கொடுப்புக்குள் சிரிக்கிறார். “என்ன டாக்டர் அப்பாவுக்கு எப்படி இருக்குது.?” பதறியடித்துக் கொண்டு மூத்தமகன் மூர்த்தி கேட்கிறான். “இஞ்ச பாருங்க மூர்த்தி. உங்க அப்பாவின் உடல் சக்தி வாய்ந்தது. உழைப்பால் வலுவடைந்தது. பெரியவரின் இதயத்துடிப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் பலவீனமாய் இருக்கிறார். நல்ல சத்துள்ள உணவும் ஓய்வும் கொடுத்தால் எழும்பி பழயபடி நடமாடவும் கூடும். அவருக்கு ஏதோ கவலை இருக்கிறது. மனஅமைதி தேவை”. டாக்டரின் இந்தப் பதில் இதயத்துள் பாலை வார்க்கிறது. “இண்டைக்கு அல்லது நாளைக்கு ஆள் குளோஸ்” என்று நம்பியவர்களுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு கந்தவனத்தார் கிடக்கிறார். பிள்ளைகளைக் கண்டதும் அவருக்குத் தென்பு பிறந்துவிட்டதுபோலும். புதினம் பார்க்க வந்தவர்களது உதடுகள் பிதுங்குகின்றன. கந்தவனத்தாரின் மனைவி மறைந்து ஆறுவருடங்கள் உருண்டுவிட்டன. எத்தனை நாளைக்குப் பிள்ளைகள் பார்ப்பார்கள்.? அவர்களும் மனிதர்கள்தானே? கஷ்டநஸ்டம் அவர்களுக்கும் இருக்கும்தானே? பொறுமையைக் கட்டிக் கொண்டு எவ்வளவு காலம் ஜீரணிப்பார்கள். அவர்களுக்கு வீண்சிரமத்தைக் கொடுப்பானேன்? மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பது பாவம் அல்லவா? படுத்த படுக்கையில் கிடவாமல் போய்ச்சேரவேணும். இதைத்தான் தினமும் இறைவனிடம் ஒப்புவிப்பார். பிறந்து வளர்ந்த ஊரில் போய் இறுதிநாட்களைத் தனியாகக் கழிக்கத் தீர்மானித்து விட்டார். சகோதரி வீட்டில் கொஞ்சக் காலத்தைக் கழித்தார். ஆனால் அதில் அவருக்கு திருப்தியில்லை.; தாயின் பரம்பரைக் காணியில் கொட்டிலை அமைத்துக் கொண்டு அங்கு தஞ்சமானார். அங்குதான் பிரச்சினையே தொடங்கியது.
அந்தக் காணிக்குள் கந்தவனத்தார் வந்ததைப் பலரும் விரும்பவில்லை. பக்கத்து வீட்டுப் பொன்னிக்கு விருப்பமில்லை. பொன்னியின் மகன் கந்தவனத்தாரின் காணியின் பொது எல்லைக்கல்லை அசைத்துத் தனது காணியுடன் ஒரு பாகத்தரையைச் சேர்த்துக் கட்டுகிறான். “தம்பி குணம் ஏனிந்த வேலை. வேலியைப் பொதுவாகப் போட்டால் நல்லதுதானே. பிரச்சினை இல்லையே.” கந்தவனத்தாரின் இந்தக்குறுக்கீடு குணசேகரனுக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேற காணி இருக்கு. ஏன் இந்தக் காணியில வந்து வீடு கட்டவேணும்.” இந்தக் கேள்வியினால் கந்தவனத்தார் ஆடித்தான் போனார். அவருக்குச் சிரிப்பு ஒருபுறம். மறுபுறம் வேதனை. அவரது வருகையை பலர் விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டார். அபிராமியும் வந்து சேர்ந்து கொண்டாள். பிரச்சினைகள் தன்னை நோக்கி நகர்வதை பெரிதாக அவர் பொருட்படுத்த வில்லை. அடிக்கடி இந்தப் பிரச்சனை தலைதூக்கும். அப்படியிருந்தும் கந்தவனத்தார் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனாலும் பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விட்டார். “இவன் தொலைவான் இன்னும் போகாமல் கிடக்கிறானே. இவளொருத்தி புதுசாக வந்து சேர்ந்திட்டான். கோள்மூட்டி அபிராமியத் தொலைக்க வேணும். இவள்தான் காட்டிக்குடுக்கிறவள்.” என்று மனதுக்குள் கறுவிக்கொள்வாள். அபிராமியை அவதூறாகப் பேசுவதில் அவளுக்கு நிகர் அவளேதான். எல்லாவற்றையும் மனதினுள் போட்டு அடைந்து கொண்டு பொறுமை காப்பதில் அபிராமி கெட்டிக்காரி. அபிராமி கந்தவனத்தாருடன் வந்து சேர்ந்தது ஒரு விபத்துத்தான். சுறுசுறுப்பாக இயங்குவாள். தேவையானபோது மட்டும் வாய் திறப்பாள். பொறுமையாக வேலைகளைச் செய்வாள். அவளது பொறுமையைக் கந்தவனத்தார் மெச்சியும் இருக்கிறார்.

கந்தவனத்தாருக்குத் தன்கிராமத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தது உண்மைதான். அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் முதுகெலும்பாக உழைத்தவர். பாடசாலை செல்லாத பிள்ளைகளை வீடு வீடாகச் சென்று பாடசாலைக்கு அனுப்பியவர். தனது ஊரிலிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். அந்தச் சாதனையையும் நிறைவேற்றியவர். முதல்முறையாகத் தனது கிராமப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைப் பாராட்டிப் பரிசும் கொடுத்தவர். அவர்களை எண்ணி வியந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தவர். அதனால் ஊர்மக்களின் மனதில் பெருமதிப்பைப் பெற்றவர். அரச உத்தியோகம் இடமாற்றத்துக்கு உரியதென்பதால் பல காலம் வெளிமாவட்டங்களில் இருந்தவர். இளைய தலைமுறையினரின் நடத்தை மாற்றங்கள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. பலவிடயங்களில் தலையிட்டுப் புத்திமதி கூறினார். அவருக்குக் கிடைத்தது பிரச்சினையும் அவமரியாதையும்தான். அதற்காக அவர் ஒதுங்கவும் இ;ல்லை. அந்த பவளவிழா வயதிலும் ஒரு துடிப்புள்ள இளைஞனைப் போல சுழன்று வருவார். அதிகாலையில் ஊரைச் சுற்றி வலம் வருவார். அன்றும் அப்படித்தான் மணல் பரந்த தெருவில் நடந்து வந்தார். ஊர்த்தெரு வேலிகளில் வேம்புகளும் பனை மரங்களும் விசாலித்திருந்தன. வெயிலை வடித்து குளிர்தடவி நிழலைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வளைவில் சாய்ந்த மரத்தில கட்டிய விளம்பரம் தெரிந்தது.
கிராமங்களில் இவைதான் வியம்பரப் பலகைகள். ‘என்னைப் பார். என்னைப் பார்’. என்று காற்றில் ஆடியது. அதனை உற்றுப் பார்த்தார். அவரின் தலை சுற்றியது. தன்னைச் சதாகரித்துக் கொண்டார். அந்த வசனங்களை வாய் முணுமுணுத்தது. நடந்தார். “இந்தக் கிழடுக்கு இந்த வயதிலயும் ஒரு பொண் வேணும். ஊரை விட்டு ஓட்டங்காட்ட வேணும்”. அவரைக் கண்டுதான் சொன்னார்களோ தெரியாது. அந்தச் சொற்கள் அவரது காதுகளில் பாய்ந்து உள்ளத்தை ஊடுருவித் தாக்கியது. இராமனின் அம்பு பட்ட இராவணனது நிலையாய் மாறினார். சொல்லம்புகள் மனதில் தைத்து வேதனையைப் பரப்பியது. தலைசுற்றியது போன்ற உணர்வு. இதயத்தைச் சுட்டெரித்தது. மெல்லிய வலியேற்பட்டது. அப்படியே தெருவோரத்தில் குந்திவிட்டார். உடலெங்கும் வெயர்த்தது. அவருக்குத் தெரியும். தன்னோடு சேர்த்து அபிராமியைத்தான் குத்திக் காட்டுகிறார்கள் என்று. அந்திம காலத்தில் உதவிக்காக ஒரு பெண் உடனிருப்பது தவறா? இவர்கள் சொல்வதுபோல் எந்தப் பிசகும் இல்லையே. யாரும் இல்லாத அனாதைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பது தவறா? அவரது உள்ளத்தில் பெரும் போராட்டம் தொடங்கி விட்டது. அபிராமியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். காலை தொடக்கம் மாலைவரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். உ;ள்ள பயிர்களுக்கெல்லாம் தண்ணீர் இறைப்பாள். அவளைக் கண்டு பயிர்கள் பச்சைப் பசேலலெனச் சிரிக்கும். தலையெடுத்தாடும். அவற்றுக்குள்ள நன்றி மனிதர்களிடம் இல்லையா? உடுதுணிகளைக் கழுவி வைப்பாள். பொருட்களைப் பாதுகாத்து வைப்பாள். தனக்கென்று ஒன்றையும் சேர்த்து வைக்காத அற்புதப் பிறவியவள். நேரத்துக்குச் சமைத்துத் தருவாள். தானும் கொஞ்சம் சாப்பிடுவாள். வேலைகளை முடித்ததும் ஒருமூலையில் சுருண்டு படுத்து விடுவாள். அவள் பாயில் படுத்ததை கந்தவனத்தார் கண்டதில்லை. விரதம் காப்பவர்போல் நிலத்தை ஒரு துணியால் தட்டிவிட்டு தலைக்குத் தலையணையாகக் கைகளை மடித்துக் கொண்டு உறங்கி விடுவாள். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் “ஐயா தேத்தண்ணி குடியுங்க“ என்று கோப்பையோடு நிற்பாள். அவளுக்கென்று உறவுகள் இல்லை. எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை.
கந்தவனத்தாரின் உள்ளமெல்லாம் அபிராமி ஆக்கிரமித்திருந்தாள். இதுவரை அபிராமியைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை. தனது குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நினைத்திருந்தார். மனைவி ஸத்தானத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இப்போது அவளைப் பற்றிய சிந்தனைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஏன் இந்தச் சமூகம் இப்படி? இளம் வயதினர் ஒன்றாக இருந்தால் சிக்கல்தான். ஆனால் உடல்வளம் குன்றி உள்ளத்து உணர்ச்சிகள் வற்றிய அந்திம காலத்தில் விபரீத எண்ணங்கள் தோன்றுமா? தோன்றினாலும் உடல் ஒத்துழைக்குமா? கடவுளுக்குச் செய்யும் தொண்டாக ஒரு பெண் ஒரு ஆணுக்குச் செய்வது எந்தவகையில் பொருத்தமற்றது. மனைவியை இழந்த வயதுபோன ஆணும், கணவனை இழந்த இளம் பெண்ணும் சேர்ந்து ஆளுக்காள் துணையாக இருப்பது தவறாகுமா? அவர்கள் சேர்ந்து வாழ நினைப்பது வெறும் பாலியல் சந்தோசத்துக்கு மட்டுந்தானா? பாலியல்தான் வாழ்வாகுமா? அதற்கு வயதும் உடலும் ஒத்துப் போகுமா? இந்தச் சமூக அமைப்பில் யோசிக்கத் தெரிந்த மனிதரே கிடையாதா? உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு பெண் உணவைப் பரிமாறுவது போல்தானே இதுவும். அது தவறில்லை என்றால் இது எப்படித் தவறாகும்?. இந்த அப்பாவி எனது நிழலில் இருப்பதை ஏன் இந்தச் சனங்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.? கந்தவனத்தாரின் உள்ளம் கேள்விக் களமானது.

மெதுவாக நடந்து வீட்டுப் படலையை அடைந்தார். பொன்னி அபிராமியோடு சச்சரவில் ஈடுபட்டிருந்தாள். அவரைக் கண்டதும் பொன்னி பெட்டிப்பாம்பாக அடங்கிச் சென்றுவிட்டாள். அபிராமி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அவளை இன்றுவரை உற்றும் பார்க்கவில்லை. தற்செயலாகப் பார்த்தார். அவள் கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டதை அவதானித்து விட்டார்.

“அபிராமி இங்கவா. என்ன நடந்தது”? கேட்டார். அவள் அப்படியே நின்றாள். சந்தோசம் என்பதை அவள் கண்டதில்லை. தன்னை அலங்கரிப்பதும் இல்லை. அவள் முகம் வாடிக்கிடந்தது. ஏதும் பிரச்சினையா? அவர் தொடர்ந்தார். அவள் மௌனம் காத்தாள். அவருக்குக் கோபமே வருவதில்லை. அவளின் மௌனம் அதனை வரவழைத்தது. “சொல்லித் தொலை” கடுகடுத்தார். நிலத்தைப் பார்த்தவாறே “ஒன்டுமில்ல” கூறினாள். “ஒன்றுமில்லாட்டி ஏன் கண்கலங்கியிருக்கு”? அவளுக்கு ஆச்சரியம். தன்னை அவர் ஏறெடுத்துப் பார்த்ததைக் கண்டதில்லை. அவர் தன்னைப் பார்த்துள்ளார் என்பதை அறிந்து விட்டாள். மனதினுள் கொஞ்சம் ஈரம் கசிந்தது. அவரின்மேல் அளப்பரிய மரியாதை துளிர்த்தது. அதனை அவள் வெளிக்காட்டவில்லை. மனதினுள் போட்டு மூடீவிட்டாள். அவள் பேசாது தனது வேலைகளில் ஈடுபட்டாள். “அபிராமி இஞ்ச பார். எனக்கு எல்லாம் தெரியும். ஊரார் கண்டபடி பேசத்தான் செய்வார்கள். இதுக்கெல்லாம் போய் கலங்கி விடக்கூடாது. இங்க இருக்க விருப்பமில்லாட்டி எங்காவது போகலாம். சரியா”? கூறிக் கொண்டு போய்விட்டார். ஆனாலும் அவரது மனதினிலே அமைதியில்லை. தன்னாலேயே சகிக்கமுடியாத போது இவளால் எப்படிச் சகிக்கமுடியும். தாங்கிக் கொள்ளமுடியும். மீண்டும் மனம் குருசேத்திரம் ஆனது. அன்று மாலை முழுவதும் யோசித்த வண்ணமே இருந்தார்.
பெண்மை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனை எதிர்த்து அடிமை விலங்கை ஒடிப்போம். ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்று வீராப்புப் பேசி போர்க்கொடி மட்டும் தூக்கும் மனிதர்களை எண்ணிச் சிரித்தார். யாருக்கு யார் அடிமை.? இன்று பெண்களுக்குப் பெண்கள்தானே எதிரியாகிறார்கள். கணவனை இழந்த பெண்ணைக் கொடுமைப்படுத்துவது ஆண்களா? வீதியில் செல்லும் அந்தப் பெண்pன் உள்ளத்தைச் சிதைப்பது யார்? வார்த்தைகளால் கொல்லுவது யார்.? மனித உரிமை என்பது இதுதானா? கணவனை இழந்த பெண் நல்ல உடையணியவும் உரிமையில்லையா? அவளுக்கென்று ஆசைகள் இருக்காதா? சாகும் வரையும் இந்தக் கோலம்தானா? இந்த யுத்தபூமியில எத்தனை விதவைகள். இவர்களுக்கு மறுவாழ்வு என்பதே இல்லையா? வாழ முனைந்தாலும் சமூகம் விடுமா? சமூகம் என்பது திறந்த சிறைச்சாலை. சித்திரவதை செய்யும் பலிபீடம். ஆண்கள் வேண்டுமானால் எதனையும் செய்யலாம். ஆனால் பாவம். இந்தப் பெண்கள்..? யுத்தம் ஓயலாம். சமாதானம் வரலாம். ஆனால் விதவைகளாக்கப் பட்ட பெண்களது மனதில், வாழ்வில்; சமாதானதின் நிழலாவது படுமா? எதிரி விளைத்த கொடுமையைவிட எங்கள் சனங்கள் செய்யும் சித்திரவதையை நிறுத்தமுடியாதா? . வினாக்கள் வந்து விரிந்தன. சாதகமான பதில் யாருமே கூறமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலையை மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். பாரதியைப் போல் பலயுகக் கவிஞர்கள் வந்தாலும் இந்தச் சமூகக் கட்டுமானங்கள் உடைபடப் போவதில்லை. அவரால் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியவில்லை. அபிராமியைச் சுற்றியே மனம் அலைபாய்ந்தது. ஒரு ஆறுதலுக்காக வெளியே புறப்பட ஆயத்தமானார். “அபிராமி எனக்கு மனம் சரியில்லை. காய்ச்சல் குணமாயிருக்கு. ஒருக்காப் பிள்ளையளப் பார்க்கவும் வேணும்போல கிடக்கு. வியளம் சொல்லி அனுப்பவேணும். இப்ப கோயிற் பக்கம் போய்வாறன். எங்கையும் போகாத..என்ன?” புறப்பட்டு விட்டார்.
அவர் போவதையே உற்றுப் பார்த்தாள். அவரது நடையில் உற்சாகம் இல்லை. அவரது கம்பீர நடையில் ஒரு தள்ளாட்டத்தை அவதானித்தாள். அபிராமிக்கு மனதினிலே பெரிய போராட்டம். ‘என்னால்தானே ஐயாவுக்கு அவப்பேர். இங்கிருக்க மனமில்லாட்டி எங்காவது போகச் சொன்னாரே. எங்காவது தொலைந்து போய்விட்டால்? என்போன்ற அபலைகள் நிம்மதியாக வாழமுடியாது. “என்ரவர் போனதோட நானும் போயிருக்க வேணும். நாசமாய்ப் போன யுத்தம் என்னை விதவையாக்கியது. இந்தச் சமூகம் நித்தமும் கொல்லுகிறது.” மனம் அலுத்துக் கொண்டது. “நான் என்ன தவறு செய்துபோட்டன். அவருக்குரிய வேலைகளைச் செய்து போட்டு ஓரு பாதுகாபு;புக்காக இந்த வீட்டில் ஒட்டிக் கொண்டு கிடப்பது தவறா? எங்காவது போ என்றாரே. நான் எங்க போவன்?” அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் தாரைதாரையாகப் பீறிட்டுப் பாய்ந்தது. வேலைகளை இயந்திரமயத்தில் செய்து முடித்தாள். சில நாட்களில் நேரம் பறந்து போகும். இன்றுமட்டும் நாள் நகர மறுக்கிறது. தன்னை நொந்து கொண்டாள். “எங்காவது ஆத்தில கடலில விழுந்து சாவமா? சீச்சீ.. பிறகு ஊர்வாயை மூடேலாது. ஐயாவுக்குக் கெட்ட பேர் வந்திரும்.” மனது பேசிக் கொண்டே இருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கந்தவனத்தார் இன்னும்வரவில்லை. விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் புறப்பட்டு விட்டாள். கால்கள் களைத்து நிற்கும்வரை நடந்தாள்.
செவ்வானம் மறைந்து இருள் படியத் தொடங்கியது. நீலவானத்தில் வெள்ளிப் பூக்கள் சிரித்தன. வழமைபோல் கோயிலில் தியானத்தில் இருந்தார். மனம் அமைதியாக இருந்தது. அதிக நேரம் இருந்து விட்டதை உணர்ந்தார். எழுந்து ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார். வீட்டை நோக்கி நடந்தார். வீடு திறந்தபடி கிடந்தது. ஆளரவமற்ற சூழலைப் புரிந்து கொண்டார். அபிராமி சில சமயங்களில் வீட்டின் பின்புறமாக ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருப்பாள். அதனால் அவர் அவளைபபற்றி அலுத்துக் கொள்ளவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. அபிராமியைக் காணவில்லை. எழுந்து அடுக்களைப் பக்கம் நோட்டம் விட்டார். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தார். அவரது மனம் குழம்பி விட்டது. இந்தச் சனங்களில் வக்கரிப்பை எத்தனை நாளைக்குத்தான் ஜீரணிப்பாள். எங்க போனாளோ? என்ன ஆனாளோ? எங்கு தேடுவது. கவலையோடு கட்டிலில் படுத்தவர்தான். எழும்பவில்லை. அபிராமி வெகுநேரம் கழித்துத்தான் வந்தாள். அவளுக்குத் துயரம் ஏற்படும்போதெல்லாம் அம்மன் கோயிலுக்குப் போய் அழுது தீர்த்துவிட்டு வருவாள். அன்றும் அப்படித்தான் செய்தாள். வந்து எழுப்பியும் அவர் எழும்பவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது. அவருக்காக அவள் வேதனைப் பட்டாள். அவரைத் தூக்கி விட்டால் என்ன? அது முடியாத காரியம். அதனை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். சாப்பிடவும் இல்லை. தன்னை நொந்து கொண்டாள். அப்படியே சுருண்டு கிடந்தாள். கவலையும் களைப்பும் அவளை ஆட்கொண்டிருக்க வேண்டும். உறங்கி விட்டாள். விடிந்துவிட்டிருந்தது. எழுந்து தேநீர் தயாரித்தாள். கந்தவனத்தாரால் எழும்ப முடியவில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. கைகொடுத்து எழுப்ப முனைந்தாள். அதனைத் தடுத்து விட்டார். அவராகவே மெதுவாக எழுந்தார். உடல் அனலாய்க் காய்ந்தது. காய்ச்சல் அடித்தது. அவர் பேசவில்லை. வெளியில் போய் வந்தார். வாயலம்பி தேநீரைக் குடித்தார். மீண்டும் சாய்ந்து படுத்துக் கொண்டார்.அபிராமி அவரையே பார்த்தாள். அவர் பேசாது ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார். அவளால் தாங்கமுடியவில்லை. அவரது கால்களைப் பிடித்தபடி அப்படியே இருந்து விட்டாள். “ஐயா என்னை மன்னிச்pருங்க. நீங்க பேசாதிருந்தால் நான் செத்துப் போயிருவன். எனக்கென்று யாரிருக்கார். நான் எங்க போவன்.” கேவிக்கேவி அழுதாள். கந்தவனத்தாரின் உள்ளம் நடுங்கியது. மெதுவாக அவளது தலையை வருடி விட்டார். “நீ என்ன செய்வாய். இது ஒருவித தவவாழ்க்கை. இந்தச் சமூகம் பொல்லாதது. நல்லதை உணராதது. நீ எங்கயும் போய்விடாதே. நான் கிடக்குமட்டும் என்னோடு கிட. நான் இல்லாத காலத்திலயும் இந்த இடத்தில கிட. நான் பிள்ளயளுக்குச் சொல்லுறன். அவங்கள வரச் சொல்ல வேணும். இப்ப வேணாம். சுகமாகட்டும்.” ஒரு வாஞ்சையுடன் கூறினார்.
ஒரு கிழமையாகியும் அவரது உடல் தேறவில்லை. அபிராமிக்குப் பொறுக்கவில்லை. பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டாள். இப்போது அவர்கள் வந்து விட்டார்கள். பேரப்பிள்ளைகளின் குதூகலம் அவரை ஆட்கொண்டது. கண்கள் திறந்து சுழன்றன. பேரப் பிள்ளைகள் வந்ததும் வராததுமாக சுற்றி நின்று “தாத்தா” சத்தமிட்டார்கள். கந்தவனத்தாரின் செவிகளில் தேன் பாய்ந்த உணர்வு. விழிகள் திறந்து சுழன்றன. கிட்டவந்து தொட்டுப் பார்த்தார்கள். அவரது உடலில் ஸ்பரிசம் பாய்ந்தது. சிலிர்த்துக் கொண்டார். அவர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். அவரது முகத்தில் மலர்ச்சி வந்து சில கோடுகளை வரைந்தது. விழிகள் அகன்று மலர்ந்தன. பேரப்பிள்ளைகள் ஓடியொளிந்து விளையாடினார்கள். ஓடிவந்து கந்தவனத்தாரைத் தொட்டார்கள். அவ்வளவுதான் எட்டி ஓடிவிட்டார்கள். சின்னஞ்சிறிசுகள். அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்துவிட்டது. குதூகலத்தில் துள்ளக் குதித்துச் சத்தமிட்டார்கள். மீண்டும் தொட்டு ஓடினார்கள். அந்தத் தொடுகை கந்தவனத்தாரின் நாடிநரம்புகளில் பாய்ந்து உயிரூட்டியது. முறுவல் உதடுகளில் நடந்தது. நந்தனின் முகத்தில் மலர்ச்சி. “அப்பா எப்படி இருக்கு.? கேட்டான். புன்னகைக்க முயன்றார். அவரது கைகளை வாஞ்சையோடு பற்றினான். “அப்பா எங்களுக்கு எல்லாம் தெரியும். அபிராமி உங்களோடு இருப்பா. உங்களுக்குத் துணையாக இருப்பா. ஒன்றுக்கும் கவலைப் படாதீங்க. நாங்க இருக்கிறம். உங்கட சந்தோசம்தான் எங்கட சந்தோசம்.” நா தளுதளுக்கக் கூறினான். பிள்ளைகள் கூறியதைக் கேட்டுத் தன்னை மறந்தார். தான் எதனைக் கேட்கவேண்டும் என்று காத்திருந்தாரோ அதனைப் பிள்ளைகள் கூறிவிட்டார்கள். அவரது முகத்தில் சந்தோசம் வந்து குந்தியது. அவரது கண்களிலிருந்து கண்ணீர் மடைபுரண்டது. அவருக்குப் பெருமையாக இருந்தது. “எனது பிள்ளைகள் முற்போக்கானவர்கள்”. மனதில் பெருமை கொண்டார். அவரது உடல் உறுதி பெற்ற உணர்வினைப் பெற்றுவிட்டார். அபிராமியை திரும்பிப் பார்த்தார். அவளது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அவள் வாழ்வது ஒருவித தவவாழ்க்கைதான். அவள் சலனமற்ற வாழ்க்கையில் அனுபவம் பெற்றுவிட்டாள்.யாவும் கற்பனை.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP