Friday, December 11, 2009

பொறுமைக்கும் ஒரு எல்லை.

செக்கர் வானம் மேற்கில் வண்ணம் தீட்டி விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய புளிய மரத்தடியில் சிறுசுகளின் களியாட்டம்.. அவர்களுக்கு இந்த உலகத்தைப் பற்றிய கவலையோ அல்லது நாளைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்போ அறவே கிடையாது. ஓடியாடி ஒழிந்து ‘கீரடிமாரடி’ என்று சொல்வார்களே அதேபோல் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்குமிங்குமாக சின்னச் சின்னக் குழுக்களாகப் பெரிசுகள். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் இன்னொரு புறமுமாகக் கூடியிருந்தனர். சில குழுக்களில் ஆணும் பெண்ணுமாகக் கலந்திருந்தனர். எல்லோர் முகங்களிலும் துன்பத்தின் தாக்கம் துல்லியமாகத் தெரிந்தது. கவலை அவர்களது உடம்பை இளைக்க வைத்து நரையும் திரையுமாக கிழப் பருவத்துக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தது. சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலாலியை அண்டிய பிரதேசங்களின் மக்கள் சொந்த இடங்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வீடு வாசல்களையும் சொத்துப் பத்துக்களையும் விட்டு விட்டு உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடியவர்கள்தான். மல்லாகத்தில் அந்த அகதிமுகாமில் தஞ்சமாகி இன்றும் அகதி வாழ்க்கை தொடர்கதையாக மாறிவிட்டது.
பலாலியை அண்டிய பிரதேசங்கள் எல்லாம் இன்று அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் எனப் பேரினவாத அரசு பிரகடனம் செய்திருக்கிறது. சுமார் பன்னிரெண்டாயிரம் குடும்பங்கள் தங்கள் இல்லிடங்களை இழந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இந்த அரசு ஜனநாயக முறையைப் பின்பற்றுகிறது என்று சொன்னாலும் நடப்பது என்னவோ வேறொன்றுதான். ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சிமுறை என்பார்கள். ஆனால் இலங்கையில் இனரீதியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து சிறுபான்மை மக்களைக் கொடுமைப் படுத்துகிறது. தமிழ்பேசும் மக்கள் இன்று அகதிகளாக ஆக்கப் பட்டுவிட்டனர். பலமொழி பேசும் மக்கள் வாழும் இந்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பலம் ஓங்கி விட்டது. அதனால் சிறுபான்மை மக்கள் கொடுமையின் பிடியில் சிக்கி அனுபவித்த துயர் கணக்கில்லை. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக இந்த நாட்டின் பல ஊர்மனைகள் எரியூட்டப்பட்டன. அழித்தொழிக்கப் பட்டன. இன்று அகதி முகாங்கள் அதிகரித்துள்ளன.

மழைபெய்து விட்டிருந்ததற்கான ஆதாரமாக பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. மழைநீரில் அங்குள்ள சிறுசிகள் கடதாசிக் கப்பல்களைச் செய்து ஓடம் விட்டனர். கால்களால் சேற்று நீரை வீசி அடித்தனர். பெரிசுகளிளிடம் ஏச்சு வாங்கிக் கட்டியும் கொண்டனர். அந்த இடத்தில் பல தற்காலிகக் கொட்டில்கள். மழைகாலங்களில் அந்தக் கொட்டில்களுக்கும் குடைபிடித்தால்தான் தாக்குப் பிடிக்கும். புளியமரத்தடியை ஒட்டினாற்போல் பழயகாலத்துப் பெரிய கட்டிடம்.. அந்தக் கட்டிடத்தைக் கட்டிய புண்ணியவான் வெளிநாட்டில் இருப்பதாகக் கேள்வி. இந்த நாட்டின் பிரச்சனையினால் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டனர். அந்த ஈழத் தமிழ் மக்கள்தான் இன்று பாரதியின் ‘தேமரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் சுவரையொட்டிய தூணில் சாய்ந்து கொண்டு நாகம்மா வானத்தை அளந்து கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் செல் விழுந்து வெடித்தாலும் காதில் வாங்காத யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சிறுவர்கள் அவளைக் கடந்து ஓடி இடறி விழுந்து எழுந்து சென்றனர். அவள் இந்த உலகத்தில் இல்லை. கடைவாயில் பாதி எரிந்தும் எரியாத புகையிலைச் சுருட்டு. எந்தத் தீய பழக்கமும் இல்லாத நாகம்மாவை அவல வாழ்க்கை இந்தச் சுருட்டுப் புகைக்கும் பழக்கத்தைக் கொடுத்து விட்டது. இடைக்கிடை உள்ளிழுத்து வெளிவிடும் புகைக்காக உதடுகள் கடைவாய்ப் பக்கம் திறந்து மூடிக்கொள்ளும்.. அப்பொழுது ‘பக்..புக்’ என்ற ஒலி மட்டும் எழும்.. அவளுக்கு வயது நாப்பது இருக்கும். ஆனால் அறுபதைத் தாண்டிய தோற்றம்..
ஒரு காலை வாசலுக்குக் குறுக்காக நீட்டியிருந்தாள். மறுகாலை மடித்து இரு கைகளாலும் பற்றிப் பிடித்திருந்தாள். நீட்டிய காலை நீட்டியே வைத்திருப்பாள். வீட்டுக்குள் செல்பவர்கள் அவளது காலைக் கடந்துதான் செல்வார்கள். அவள் இந்த உலகத்தில் இல்லை. அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வடிந்து கொண்டிருந்தது. மயிலிட்டி அவளது சொந்த ஊர். அந்த ஊரை ஊதி விளையாடும் உப்புக் காற்றும்இ காற்றில் சரசரக்கும் பனையோலைகளின் கிசுகிசுச் சத்தமும் நாகம்மாவுக்குப் பிடித்தவை. கடற்கரையில் ஈரமணலில் கால்களைப் புதைத்தும் மணலை உருண்டைகளாக்கி கடலுள் வீசியும்இ தோழிகளோடு விளையாடிய நாட்கள் பாழாய்ப் பழங்கதையாய்ப் போயின. கடலன்னையின் கருணையில் அந்தக் கிராமம் வாழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்கள் பெரும் பணக்காரர்கள் போல் இருப்பார்கள். அப்படியானால் கடலன்னையின் கடைக்கண் பார்வை கிட்டியதாக மகிழ்வார்கள். பல நாட்கள் அந்தப் பார்வை அவர்களுக்குக் கிடைப்ப தில்லை. என்றாலும் அந்த நிம்மதி அவர்களது சொந்தமாகியிருந்தது. நாகம்மா கடந்தகால வாழ்நாட்களில் தனது நினைவலைகளை வீசிக் கொண்டிருந்தாள்.
சுழன்றடிக்கும் அலைச் சுருளில் புகுந்து தோணியைக் கடலில் செலுத்தி வலையெறிந்து மீன்களைக் கரையில் சேர்க்கும் ஆறுமுகம் நாகம்மாவின் மனதைக் குழப்பி விட்டிருந்தான். அவனது முறுக்கேறிய வாலிபம் நாகம்மாவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. நாகம்மா சற்றுக் கறுப்புத்தான். ஆனால் அவளது கரிய விழிகளும் கனிவான கிள்ளை மொழியும் கண்டாரைக் கிறங்கச் செய்யும். ஆறுமுகத்தானுக்கும் நாகம்மாவில் ஒரு கண்தான். தோழிகளோடு கருவாட்டுக் காவலில் இருக்கும் போதுதான் சாடைமாடையாய் உள்ளங்களின் இரகசியங்கள் வெளியாகும்..

“என்ன! நாகம்மா ஆறுமுகம் நல்ல அழகன்தானே? உனக்குப் பொருத்தம்தான்”
தோழி அன்னம் சொன்னதும் நாகம்மா கிறங்கிப் போனாள். அந்த வெளிப்பாடு அவரவர் வீடுகளுக்கும் எட்டிவிட்டது.. ஊரார் வாய்க்கு இடங்கொடாது, இரண்டு குடும்பங்களும் இருவருக்கும் முடிச்சுப் போட்டுவிட்டன. அந்த இன்பமான வாழ்க்கையில் இந்தத் துயர் குறுக்கிடும் என்று அவள் நினைத்திருக்க முடியாது. ஆறமுகத்தோடு வாழ்ந்த இன்ப வாழ்க்கையின் சின்னமாக மூன்று பெண் குழந்தைகள் அவளைச் சூழ்ந்துள்ளன. அவர்களைக் காக்க வேண்டியது அவளது தலையில் வந்து விழும் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அந்த நிகழ்வு எதிர்பாராமலேயே வந்துவிட்டது.கடலில் இருந்து பீரங்கிப் படகுகள் வேட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்தன. உயரப் பறந்த புக்காராக்களும் ஹெலிகளும் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தன. சனங்கள் சிதறுண்டு ஓடத் தொடங்கினர். ஆறுமுகம் பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு பனங் கூடலுக்கூடாக ஓடினான். பின்னால் நாகம்மாள் சில பொருட்களையும் கொண்டு ஓடினாள். ஆறுமுகம். வடலிகளுக்குள் புகுந்து ஓடும் போது ஓரு காலில் முள் குத்திய உணர்வை உணர்ந்தான்.
“நாகம்மா புறங்காலில ஏதோ குத்திப் போட்டுது.”
பாம்பு ஓடியதை நாகம்மா கண்டு விட்டாள். அவள் இதயம் துடித்துக் கனத்தது.

“ ஐயோ.. நில்லுங்க பார்ப்பம்”

“ பாக்கிறத்துக்கு நேரம் இல்ல. செல் விழுந்து செத்துப் போடுவம்.இ வா கெதியா” சொல்லிக் கொண்டு ஓடினான். அவனுக்குக் கால் கடுமையாக வலித்தது. அவனால் முன்னேற முடியவில்லை. மயங்கிக் கீழே சாய்ந்தான். அந்த விரியனின் விசம் வேலைசெய்யத் தொடங்கி விட்டது. வாயிலிருந்து நுரை கக்கியது. உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அவனிடமிருந்து பதிலே வரவில்லை. ஆறுமுகம் பிரியாவிடை பெற்றுவிட்டான். பிள்ளைகளோடு இந்த அகதி முகாம் அவளையும் ஏற்றுக் கொண்டுவிட்டது. நாகம்மாவின் நினைவலைகள் பார்வதியின் குறுக்கீட்டினால் திடீரெனக் கலைந்தன.

“ எணேய் காலை இப்படியே நீ நீட்டியிருந்தால் உதுகள் விழுந்து உடைஞ்சு போங்கள். அங்கால ஒருக்கால் அரக்கி இருவணணை”.

பார்த்துக் கொண்டிருந்த பார்வதி நச்சரித்தாள். பதிலுக்கு ஒரு பார்வை மட்டுமே நாகம்மாவிடம் இருந்து வந்தது. கைகளை ஊன்றி நீட்டிய காலை அப்படியே இழுத்த படியே வசதியாக முதுகைச் சுவரோடு சாய்த்துக் கொண்டாள். சிறுசுகள் குறுக்கும் மறுக்கும் பாய்ந்து துரத்திப் பிடித்துத் திரிந்தனர்.
தூரத்தே யாரோ வருவது தெரிந்தது. இரண்டு வெளிநாட்டு வெள்ளைக்காரரோடு நமது நாட்டவர்கள் சிலரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை இடைமறித்துச் சிலர் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சூழ்ந்து சிறுசிகள். ஓரு திருவிழாவை நடத்திக் கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருந்த சின்னத்துரைக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். அவர் குந்தியிருந்த புளிய மரத்தின் வேரைவிட்டு எழுந்தார். அந்தப் புளிய மரத்தின் வேர்கள் நிலத்துக்கு மேல் இரண்டடி உயரத்துக்குப் புடைத்திருந்தன. அந்த வேர்கள்தான் அவர்களுக்கு கதிரையாகவும் கட்டிலாகவும் பயன்படுகின்றன. பாழாய்ப் போன போரினால் சின்னத்துரையரைப் போல் பலர் தங்கள் கால்களை இழந்திருக்கிறார்கள். தான் கழட்டி வைத்த செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு வந்தார். சனங்கள் கையில் கிடைத்த பழைய உரப்பைகளை எடுத்துக் கொண்டு ‘நீ முந்தி நான் முந்தி’ என முண்டியடித்த வண்ணம் புடைசூழ்ந்;து கொண்டனர். யாராவது அகதிமுகாமுக்கு வருகிறவர்கள் ஏதேனும் தருவார்கள் என்ற நப்பாசையை வளர்த்துக் கொண்டு விட்டார்கள். வாகனங்கள் முகாமுக்குள் நுழைந்தால் போதும் சனங்களைக் கட்டுப் படுத்துவது பெரும் சிரமமாக இருக்கும்.. பல வயிறுகளுக்குச் சோறிட்டவர்கள் தங்கள் வயிற்றுக்குப் போராட வேண்டிய கொடுமை. கொடுத்துச் சிவந்த கைகள் இரந்து கிடக்கின்றன. உழைத்து வாழ்ந்த சனங்களை அகதி வாழ்க்கை உழைக்கவிடாது சோம்பேறிகளாக்கி விட்டது. சொந்த நாட்டிலேயே சொந்த மண்ணில் அகதியாகி கையேந்தி வாழவேண்டிய விதி இந்த மக்களுக்கு ஏற்பட்டதேன்?.இப்படியே இவர்களை விட்டால் அடிமைகளாகிக் கையேந்தும் நிலையை உருவாக்கி விடலாம் என்ற திட்டமும் இருக்கலாம்.. ‘விதியே!விதியே என்செய நினைத்தாய் தமிழச் சாதியை.’ .பாரதியின் கவிதையடிகள் அமரத்துவமானவை. இங்கே ஈழத்தமிழ்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை அன்றே தீர்க்கதரிசனத்தில் கண்டிருப்பானோ?


“ சின்னத்துரை! இத்தனை ஆயிரம் சனத்துக்கும் இருக்கிற கக்கூசையும் கிணத்தையும் ஒருக்கா அவையளுக்குக் காட்டு. பார்க்கட்டுமேன்.”
கந்தையர் ஒருபக்கத்தில் இருந்து சத்தம் போட்டார். இப்போது சின்னத்துரையருக்கு உசார் வந்துவிட்டது. கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினார்.

“இஞ்சால கொஞ்சம் வழி விடுங்கோ”

சனங்கள் விலகி வழி விட்டனர். சிலர் குறுக்கே நின்றனர். அவர்களது கையில் ; வெறுமனாய்க் கிடக்கும் உரப்பை. அவர்களுக்கு ஒன்றும் கிடையாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. சின்னத்துரையர் சனங்களை விலக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டார். நாகம்மாவுக்கு இது புதிய அனுபவமல்ல. இப்படி இந்தப் பன்னிரெண்டு வருசங்களாக எத்தனைபேர் வந்திருக்கிறார்கள். அவள் கண்டிருப்பாள். அவள் அப்படியேதான் இருந்தாள். எந்த மாற்றமும் அவளிடம் இல்லை. வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காக வாழ்கிறாள். இங்கு நடப்பதெல்லாம் அவளுக்கு வேடிக்கையும் இல்லை. விளையாட்டும் இல்லை. சின்னத்துரை வந்ததும் வராததுமாகக் கேட்டார்.


“ஐயாமார்களே! உங்களுக்குக் கோடி புண்ணியம். எங்களை ஒருக்கா எங்கட சொந்த இடத்தில இருக்க ஏற்பாடு செய்யுங்கோ அதுபோதும் எங்களுக்கு”
கோரிக்கை விடுத்தார்.

“எங்கள எப்ப எங்கட சொந்த இடத்தில இருக்க விடுவினம்.? எங்கட இடத்தில ஆமிக்காரங்கள் இருக்கலாம் என்றால் ஏன் நாங்க இருக்கேலாது? எங்கள இங்க அடைச்சி வைச்சிருக்கினம். என்ன அனியாயம்.? அகதிமுகாம் என்ற பேரில திறந்த சிறைச்சாலையில கிடக்கிறம்.”? கந்தையர் அவர்களைப் பார்த்தபடி கேட்டார். .அங்கே பதில் சொல்லத் திராணி அற்றவர்களே நின்றிருந்தனர். நாகம்மா சற்றுத் திரும்பி இருந்தாள்.

“ கந்தையாண்ணே! என்ன இவங்களிட்ட கதைக்கிறியள். இவங்களால முடியுமே? பாவம். அவங்களும் எங்களக் காட்டிப் பிச்சை எடுத்து வாழுகினம். நாங்க அகதியாக்கப் பட்டதாலதான் அவங்களுக்கு இப்படி சொகுசு கிடைச்சிருக்கு. எங்கள இப்படி இருக்கச் செய்தால்தானே இவங்களும் வாழலாம்.”

நாகம்மா நறுக்கெண்டு சொல்லிப் போட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“ பொல்லாத வாயாடி என்ன?”

வந்தவரில் ஒருவர் கூறியதை நாகம்மாவின் காது கேட்டுவிட்டது. அவர்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்? நாகம்மா பேசவில்லை. உண்மையைக் கூறினால் உறைக்கும் என்று அவளுக்குத் தெரியும். அவள் கடந்த கால வாழ்க்கையில் மூழ்கிவிட்டாள். அந்தப் பயங்கர நிகழ்வு அவளை உலுக்கியது.

“நாகம்மா! அடுப்பு பத்தவைக்க ஒன்டுமில்லை. போய் கொஞ்சம் விறகு பொறுக்கி வருவமே”?

இராசம்மா தலையில் ஒரு சீலைத்துண்டைப் போட்டபடி கேட்டாள்.
“ஓம் ராசம். நானும் கேக்கத்தான் இருந்தனான். நீ முந்திற்றாய். போவமே.”
கயிற்றுத் துண்டுகளோடு சென்றனர். பக்கத்ததுக் கிராமம் பாழடைந்து போய்க் கிடந்தது. முதலில் இராணுவமுகாம் அந்தக் கிராமத்தில் இருந்தது. அங்கிருந்து வேறு இடத்துக்கு இராணுவம் இடம் மாறியது. அந்தக் கிராமம் காடாய் மாறிக் கிடந்தது. அங்குதான் இவ்வளவு நாளும் விறகெடுத்தவர்கள். பூவரசு மரத்தின் கிளைகள் காய்ந்திருந்தன. கிளைகளை வெட்டிக் கட்டினர். ஆளுக்காள் உதவித் தலையில் தூக்கி வைத்து நடந்தனர். பட்பட் என்று பெரும் சத்தத்தோடு முழங்கியது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். யாழ் மருத்துவமனையில் நினைவு திரும்பிய பின்னர்தான் முழங்காலுக்குக் கீழ் ஒருகால் இல்லை என்பது புரிந்தது. கவலை சூழ்ந்த முகத்தோடு தான் பொருத்திய பொய்க் காலைப் பார்த்தாள். இங்கு எத்தனை பெண்களுக்குக் கால்கள் இல்லை. அவர்களை நினைத்துக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் தாரைகள் ஊற்றெடுத்துப் பாய்ந்தன. இந்தக் கொடூரங்களால்தானே நான் வாயாடியானேன். தனக்குள்ளேயே புலம்பினாள்.
சின்னத்துரை வந்தவர்களை முகாமின் பகுதிகளுக்குக் கூட்டிச் சென்றார். ஒவ்வொரு பகுதியாகக் காட்டிச் சென்றார். இடையிடையே விளக்கம் கொடுக்கத் தொடங்கினார். “ஐயா! இஞ்ச மூன்று கிணறுதான் இருக்குது. ஒரு கிணற்றின் சொந்தக்காரர் வந்திட்டார். அங்க தண்ணி எடுக்கேலாது.

“ஏன் அந்தக் கிணற்றில தண்ணி எடுக்கேலாது”? சொந்தக்காரர் விடமாட்டார் என்பதை இவர்களுக்கு எப்படிச் சொல்வது? அவர் சொல்லத் தயங்கினார்.சொல்லவில்லை. கதையை மாற்றினார்.

“அதோ இருக்கு. அந்தக் கிணறு பாவிக்கேலாது. அது உவர்த்தண்ணீர். மற்றக் கிணற்றிலதான் இந்தச் சனங்களெல்லாம் தண்ணி எடுக்குதுகள். தண்ணி குறஞ்சி கொண்டு போகுது. தண்ணீருக்குத்தான் பெரும் தட்டுப்பாடு."

“அப்படியா”? அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பன்னிரெண்டாயிரம் குடும்பங்களும் பாவிக்கும் ஒன்பது மலசல கூடங்கங்களையும் காட்டினார். அனுதாபமாகப் பார்த்தவர்கள் வந்த வழியே போய்விட்டார்கள். சின்னத்துரையரின் கோரிக்கைக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. அவருக்குக் கிடைத்த பதில் ‘இதெல்லாம் அரசியல் விவகாரம்’ என்பதே.
அந்தப் புளியமரத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. கந்தையர் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுயன்றார். சின்னத்துரையர் தலைமையில் கணபதியாரைச் சந்தித்துச் சமாதானமான முறையில் தண்ணீரைப் பெற முடிவெடுத்தனர். அகதிமுகாம் உருவானபோது மூன்று கிணறுகளையும் துப்பரவு செய்து பாவித்தனர். கணபதியார் ஊர் திரும்பியதும் பிரச்சினை உருவாகிவிட்டது. “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தச் சிறையில் கிடப்பது? ஏலாது. பொறுக்கமுடியாது. எங்கட சொந்த ஊர்களுக்குப் போயாகவேணும். ஏதாவது செய்ய வேணும். அதைச்செய்யுங்கோ”? செயற்கைக் காலை நீட்டிக் குனிந்து எழுந்தவாறே நாகம்மா கூறினாள்.

“முதலில் இந்தத் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு வேணும்.. அதை இப்ப செய்வம்..கணபதியாரோட கதைப்பம். முதலில் பேச்சு வார்த்தை. மிஞ்சினால் பார்ப்பம்.” கந்தையர் எடுத்த முடிவு சரியாகப் பட்டது.


சின்னத்துரையர் தலைமையில் அகதிகள் அனைவரும் குடங்களோடு நடந்தனர். கணபதியாரின் வீட்டுப் படலையில் நின்றனர்.
“ஐயா!” கணபதியரைக் கூப்பிட்டனர்.

“ யாரது” கேட்டுக் கொண்டு கணபதியார் வெளியில் வந்தார்.

" நாங்கதான்.. எங்களுக்குத் தண்ணி வேண்டும். தண்ணி எடுக்கப் போறம். அதுதான்..” சொல்லிக் கொண்டு நின்ற சின்னத்துரையரை எரித்து விடுவதுபோல் கணபதியார் பார்த்தார். அது அவரையும் கூடவந்தவர்களையும் எரிப்பதுபோல் இருந்தது. கூனிக் குறுகி நிலத்தைப் பார்த்தார்கள். அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள். எழுந்து நிமிர்ந்து நிற்கத் திராணியற்றவர்கள். பழக்க தோசம் அதனால் பயந்து விட்டனர்.


“ஏனடா.. உங்களுக்குத் திமிரோ? இவ்வளவு காலமும் இல்லாத திமிர் இப்ப வந்தற்று என்ன? என்னட்ட வந்து.. என்ர கிணத்தில தண்ணி கேட்கிறியள்.. என்ன தைரியம் உங்களுக்கு”.
கணபதியார் ஆணவத்தோடு பேசினார். சின்னத்துரையருக்குப் பக்கத்தில் நின்ற இளையவனுக்குக் குறுகுறுத்தது. அவன் இளைஞன். பயமறியாத பருவம்.. பக்குவமாகப் பேசினான்.


"ஐயா கோவிக்கக் கூடாது. குடாநாட்டில குழப்பம் என்டதும் ஊரைவிட்டு ஓடினியள். எங்களால ஓடமுடியல்ல. எங்களுக்குப் போறதுக்கு இடமும் இல்ல. எங்க போறதெண்டும் தெரியாது. சமாதானம் என்டதும் வந்திட்டியள். ஆமிக்காரனிட்ட அடியுதை வாங்கி நாங்க இஞ்சதான் செத்துக் கொண்டிருக்கிறம். இந்தக் கிணத்துத் தண்ணிய எடுக்க உரிமை இல்லயெண்டு சொல்ல நீங்க யார்”? அவன் ஆவேசத்தோடு சொற்களைக் கொட்டிப்போட்டான்.
"இஞ்சபாருங்க தம்பியவள்.. தேவையில்லாத கதையெல்லாம் என்னட்;டக் கதைக்க வேண்டாம். எழிய சாதியெல்லாம் இஞ்ச தண்ணி எடுக்கேலாது தெரியுமோ?. வந்த வழியப் பார்த்திட்டுப் போங்கோ..ல்லாட்டி நடக்கிறதே வேற”. அவரது பேச்சு அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பதிலாக அனுதாபத்தை ஏற்படுத்தியது. அவரது திமிர் இங்குமட்டுந்தான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
“எழியசாதி என்று பார்த்ததாலதான் இப்படித் தமிழன் சிதறுண்டு போய்க்கிடக்கிறான். உங்களப்போல ஆக்கள் இருக்கும் வரை தமிழன் தலைநிமிராது.. ஐயா எங்கட ஊர்ல உங்கட கனவு பலிக்காது” முகுந்தன் அவரைப் பார்த்துக் கூறினான். கணபதியார் எதற்கும் காத்திராது படலையை இழுத்து மூடிவிட்டுக் போய்விட்டார். அவரின் அந்தச் செயல் ஆத்திரத்தை ஊட்டியது..
“அண்ணே என்ன பாத்திற்று நிக்கிறியள். ஆமிக்காரனும் அடிக்கிறான். நம்மடவனும் அடிக்கிறான். இன்னும் பொறுத்தமென்டால் நமக்கு விடுதலையே இல்லை.” ஆனந்தன் ஆவேசத்தோடு கூறினான். “நாங்க இப்படிக் கிடப்பதால்தான் எல்லாரும் ஏறி மிதிக்கிறாங்க. எங்கட உரிமையை அடைய ஒற்றுமை வேணும்.. எங்கடவனே எங்கள மதிக்கிறான் இல்ல. மிதிக்கிறான். பிறகு அயலவன் எப்படி மதிப்பான்.? அவனும் மிதிப்பான். டேய்! படலையை உடைங்கடா”
சொல்லிக் கொண்டு கந்தன் படலைக்கு ஒரு உதை விட்டான். படலை தெறித்துத் துரத்தே விழுந்தது. சனங்கள் ஆரவாரித்தனர். “இனிமேலும் அடிமைகளாய் இருப்பதை விட செத்துப் போவோம்.. எங்கட விடுதலைக்காய் இனியொரு விதி செய்வோம்.. எங்கட மண்ணில இருந்து அந்நியனை விரட்டுவோம்.. எல்லாரும் வாங்கோ” ஆனந்தன் உரத்த குரலில் கூவினான்.


கந்தையர் துள்ளி வந்தார். அவரது உடலில் ஒரு சன்னதம் தெரிந்தது. என்றுமில்லாதவாறு இறுமாந்திருந்தார்.

“இன்;னும் என்ன பாத்திட்டு நிக்கிறியள்.. எல்லாரும் போய்த் தண்ணி அள்ளுங்கோ.”
கட்டளை இட்டுவிட்டு நிமிர்ந்து நின்றார். நடப்பது கனவா அல்லது நினைவா? கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. கணபதியார் செய்வதறியாது சிலையாகி நின்றார். கணபதியாருக்குப் பின்னணி பாடியவர்கள் மெல்ல நழுவினர். அவர் அவர்களைத் தடுக்க முயற்சிக்க வில்லை. தண்ணீர் அள்ளுபவர்களையும் தடுக்கவில்லை. சனங்கள் தண்ணீரை அள்ளிக் கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் சந்தோசம் குந்தியிருந்தது. அவர்கள் இப்போது தங்கள் உரிமையை உணர்ந்து கொண்டார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் சொந்த நிலங்களை விடுவிக்கத் துணிந்து விட்டார்கள். அதி உயர்பாதுகாப்பு வலயம் அவர்களுக்கு ஒரு தடையாகத் தெரியவில்லை. அந்தப் பாதுகாப்பு வலயங்களைத் தகர்த்தெறியப் புறப்பட்டு விட்டார்கள்..

2 comments:

Karthick December 13, 2009 at 2:12 AM  

அழகான எழுத்துக்கள். உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. ஆனால்
நானும் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் http://eluthuvathukarthick.wordpress.com/ .
உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

Jeya December 14, 2009 at 1:16 PM  

அருமை...........
தொடருங்கள் வாழ்த்துக்கள்

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP