நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
6
அம்மா அப்பா இப்போது யாருக்காக வாழ்கிறார்கள்.? இவர்களுக்குப் பிள்ளையாகப் பிறக்க நான் என்ன தவம் செய்தேன்? என்னால் இவர்களுக்கு என்ன கைமாறு செய்யமுடியும்? அவர்களைக் கடைசிவரை என்நிழலில் பாதுகாப்பதுதான் நான் செய்யக்கூடிய கைமாறு. மனதினிலே எண்ணியவாறு அம்மாவின் பக்கம் சென்றாள். வேலைகள் துரித கதியில் நடந்தேறின. இருள் கௌவிக்கொண்டு வந்தது. பரந்த வெளியில் நின்று செவ்வானத்தைப் பார்த்தாள். அந்தி வானம் செம்மை சூடி வண்ணம் பூசியிருந்தது. பார்க்கப் பார்க்கப் பரவசமாகியது. எவ்வளவு துன்பமாக இருப்பினும் காலம்தான் அதனைப் போக்கவல்லது. ஆற்றில் மாலைநேரம் தலைவெள்ளம் ஏறிக் கொண்டிருந்தது. மீன்களின் துள்ளல். நீந்திக் களைத்த மீனினம் நீரின் மேல்வந்து மூச்சுவிட்டுப் போயின. அவற்றின் அசைவினால் நீரலைகள் உருவாகிக் கரையில் மோதி உடைந்தன.
ஒரு காரியத்துக்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. கண்டல்களில் பதுங்கியிருந்த இருள் இப்போது வெளிவரத் தொடங்கியது. பாலைக்காய்ச்சி ஒரு அளவான சூட்டில் உறைமோரை விட்டால் அது ஊர்ந்து பாலைத் தயிராக்கும் அதேபோல் இருள் பரவி எங்கும் கும்மென்றிருந்தது. செல்லச்சாமி நீண்ட வயர்களுடனும், மின்குமிழ்களுடனும் வந்தார். சில மின்குமிழ்களைப் பொருத்தினார். நீண்ட தடியினைப் பயன்படுத்தி வயர்களை மின்சாரக் கம்பிகளில் கொழுவினார். வளவெங்கும் மின்சார வெளிச்சம் பரவி களைகட்டியது. கயலுக்கு ஆச்சரியம். அவள் படிக்கும் காலத்தில் கட்டைபறிச்சானுக்கு மின்சாரம் வரவில்லை. குப்பிலாம்பிலும், அரிக்கன்விளக்கு வெளிச்சத்திலும்தான் படித்தாள். காலம் மாறிவிட்டது.
“இன்று அப்பா அம்மாவோடு எனது சொந்த வீட்டில் இருக்கிறேன். எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது” மனதினுள் நினைந்து கொண்டாள். மெல்லிய காற்று வந்து அவள் மேனியை வருடிச் சென்றது. அது பட்டதும் அவள் மேனி சிலிர்த்தது. அப்பாவின் சிறிய ரேடியோவை முடுக்கி விட்டாள். இனிமையான பாடல்கள் ஒலித்தன. அந்த இசையில் மூழ்கியிருந்தாள். மாலையானதும் உறவினர்கள் வீட்டில் கூடினார்கள். தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இறுக்கமான பிணைப்பினை கயல் உணர்ந்தாள். எப்படித்தான் திருகோணமலை நகரில் இருந்தாலும் கிராமப் புறமக்களுக்;கு அது ஒரு திறந்த சிறைதான். நகரத்தில் பல பிரதேச மக்களும் வந்து வாழ்கிறார்கள். அங்கே தாங்களுண்டு தங்கள் கடமையுண்டு என்றிருப்பார்கள். பக்கத்தில் என்ன நடந்தாலும் எட்டியும் பார்க்கமாட்டார்கள். கிராம அமைப்பு நட்புரிமையுடையது. அதனை நினைந்தாள். பகல் முழுவதும் வேலை. அதனால் உடல் அசதி. அன்று இரவு நிம்மதியாக உறக்கங்கினாள்.
அதிகாலையில் கண்டல்களில் இருந்து விடியாலாக்கள் சத்தமிட்டன. கோழிகள் கூவித் துயில் எழுப்பின. பறவைகள் திருப்பள்ளியெழுச்சி பாடிக் குதூகலித்தன. இன்று கயலுக்கு வித்தியாசமான விடியற்பொழுதாக இருந்தது. சந்தோசத்தோடு கண்களைத் திறந்தாள். அப்பாவைக் காணவில்லை. அம்மா குசினியில் இருந்தார். மெதுவாக எழுந்து வெளியில் வந்தாள். இருள் இன்னும் கலையவில்லை. பனிபெய்து நிலம் குளிர்ந்திருந்தது. தாவரங்கள் பனிநீராடிச் சிலிர்த்து நின்றன. அப்பா அந்தக் குளிரிலும் மண்வெட்டியுடன் நின்றார். “அப்பா பனிக்குள்ள நின்று வேலை செய்யிறீங்களே. பிறகு செய்யலாம்தானே”? கயல் அன்போடு கேட்டாள். “அதிகாலையில் வேலை செய்வது சுகமாயிருக்குமம்மா. வெயில் ஏறினால் களைப்பு அதிகரிக்கும். நீ வீட்டுக்குள் போ.” வேலை செய்து கொண்டே சொன்னார்.
அம்மா தேநீரைக் கொடுத்தார். அப்பாவுக்கு எடுத்துச் சென்று கொடுத்தாள். அம்மாவும் தேநீரோடு வந்தார். அப்பா வெளியாக்கிய தரையில் குந்தியிருந்தவாறே குடித்தார்கள். அப்பா மண்வெட்டியினால் தரையைக் கொத்தி மண்ணைப் புரட்டிச் சமப்படுத்தி இருந்தார். பக்கத்தில் முதல்நாள் துப்பரவு செய்த கழிவுகள் வெயிலில் உலர்ந்து கிடந்தன. அவற்றுக்குத் தீயிட்டாள். அவை பற்றிக் கொண்டு எரிந்தன. பனிக்குளிருக்கு இதமாக இருந்தது. தனது கால்களைப் புதைத்து மணலால் மூடினாள். அது சுகமாக இருந்தது. சிறுபிள்ளையாக மாறியிருந்தாள். அம்மா அவளின் செயலைப் பார்த்தார். “இவள் உங்கட மகள். இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி விளையாடுறாள். பார்த்து ரசியுங்க”. செல்லமாகத் தங்கம் கூறினாள். நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவ நமது செல்லப் பிள்ளைதானே. இப்ப பட்டதாரிப் பிள்ளை. அவளுக்கு எல்லாம் தெரியும்.” ஒரு முறுவலோடு சொன்னார். கயலுக்குப் பெருமையாக இருந்தது.
வீடு திருத்தும் வேலைகள் தொடங்கப் பட்டுவிட்டன. கட்டுமானப் பொருட்கள் வந்திறங்கின. மேசன்மார் கட்டத் தொடங்கி விட்டனர். ஒரு லட்சம் ரூபாய்க்குள் திருத்தஞ் செய்யலாம். அதற்கு மேல் ஒரு சதமும் செய்யவியலாது என்று அந்த நிறுவனம் தீர்மானமாகச் சொல்லிவிட்டது. மேசன் கூலியை மட்டும் மேசனுக்குக் கொடுத்தார்கள். மேசனுக்கு வேண்டிய வேலைகளை வீட்டுக்காரர் செய்தால் அந்தக் கூலியை மிச்சப் படுத்தலாம். என்று அந்த அதிகாரி விளக்கினார். சுந்தரத்தாருக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காயாய் இனித்தது. தான் கூலி வேலையைச் செய்தார். கூலியாளுக்குரிய கூலியினைத் தானெடுத்தார். அதனை மற்றைய அறைகளைத் திருத்துவதற்குப் பயன்படுத்தினார்.
வீடு திருத்தம் முடிந்து விட்டது. நாட்கள் விரைந்தோடின. கயல்விழி நாட்கள் விரைந்ததை எதிர்பார்க்கவில்லை. திருகோணமலைக்கு வந்த கடிதத்தை செலச்சாமி கொண்டு வந்து கொடுத்தார். திருமங்கையின் கையெழுத்து அது. ஆர்வத்துடன் பிரித்துப் படித்தாள். இருவரும் விஷேட சித்தியினைப் பெற்றிருந்ததை எழுதியிருந்தாள். பட்டமளிப்பு விழாவுக்கான திகதியையும் அறிவித்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து தனது வீட்டில் நிற்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. அப்பாவிடம் தெரிவித்தாள். அம்மா வாய்மலர்ந்து சிரித்தார். இன்றுதான் அம்மாவின் முகத்தில் சந்தோசமான சிரிப்புத் தெரிந்தது.
பட்டமளிப்பு விழாவுக்குப் புறப்பட்டாள். அப்பாவையும், அம்மாவையும் கூட்டிச் சென்றாள். திருமங்கை அவர்களை வரவேற்றாள். பல மாதங்களுக்குப் பின் தோழிகள் சந்தித்தனர். வீட்டில் ஒரே கொண்டாட்டம்தான். திருமங்கையின் வீடு சிறியதொரு ஓலைவீடுதான். ஆனால் அவர்களின் மனம் மாளிகையாக ஒளிவீசியது. அன்பு கலந்த பாசம் வீட்டில் விளையாடியது. திருமங்கையின் அம்மா கற்பகம் தங்கத்தின் தோழியானார். சுந்தரத்தார் மங்கையின் அப்பா கந்தப்புவின் கூட்டாளி ஆகிவிட்டார். தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கயல் பெற்றாள். மறுநாள் காலையில் பட்டமளிப்பு விழா இருந்தது. விடியவிடியக் கதைத்தார்கள். பட்டம் கிடைத்தபின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வினாக்கள் விடைதெரியாது மறைந்தன.
“கயல் நானும் உன்னோடு வந்து விடட்டா? எனக்கு எனது வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. படிச்சுப்போட்டு சம்மா இருந்தால் எப்படி? ஊர்ச்சனங்கள் வேடிக்கைப் பொருளாகப் பார்க்கிறாங்க. எங்கட மாமி வீட்டுக்காரர்தான் நெருக்கிறாங்க. தங்கட மகனுக்குக் கலியாணம் கட்டித்தரச் சொல்லி அம்மாவை நச்சரிக்கிறாங்க. என்ன செய்யிறதெண்டு தெரியாமல் தவிக்கிறன். அம்மா பாவம். அப்பா அதைவிடப் பாவம். அவங்களிட்ட கொஞ்சம் கடன் பட்டிருக்காங்க. அதையிப்ப தரச்சொல்லிக் கேக்கிறாங்க. இல்லாட்டி மகளைக் கட்டித்தா என்று நிக்கிறாங்க. சரியான குப்பைச் சனங்கள்”;. கண்கள் கலங்கியவாறு சொல்லிமுடித்தாள். கயல்விழி என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். “சரி அப்பா அம்மா என்ன சொல்லுறாங்க? அதைக் கேட்டியா”? அவளை உற்றுப் பார்த்தவாறே கேட்டாள்.
கந்தப்பரும் கற்பகமும் அப்பாவிகள். கடன்பட்டவர்கள் கதி கலங்கி நின்றார்கள். “முதலில் எங்கட புள்ள ஒருவேலையில சேரட்டும். பிறகு பார்ப்பம் என்று சொல்லிவாறாங்க. ஆனால் அவங்க விடாப்புடியாக நிற்கிறாங்க. சங்கரன் என்ர மச்சான்தான். அவன் படிக்கவும் இல்ல. வேலையும் இல்ல. எனக்கு விருப்பமும் இல்ல. அவனிட்ட நான் நேரில கதைச்சனான். எனக்;கொரு போய்பிறன்ட் இருக்கு. அவரத்தான் கட்டப்போறன் என்று சொல்லிப் போட்டன்.” மங்கை நிறுத்தினாள். கயல்விழி கலகலத்துச் சிரித்தாள். “ஏய் கள்ளி! யார் அந்த போய்பிறன்ட். சொல்லு. எனக்குத் தெரியாமல் லவ் பண்ணியிருக்கிறாயா? எங்க பல்கலைக் கழகத்திலா அல்லது வேறெங்கேயுமா”? சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.
“பிள்ளைகள் சிரிச்சிக் கதைக்குதுகள். பாவம். நாலஞ்சி மாதம் தனியக் கிடந்ததுகள்தானே? இன்டைக்குத்தான் சிரிக்குதுகள். இவள் மங்கை ஒரே உம்மென்றுதான் கிடப்பாள். புள்ளைக்கு ஒரு வேல வந்திற்றென்டால் கொஞ்சம் நிம்மதியாக்கிடக்கும்”. பெற்றமனங்கள் பெருமூச்சுடன் கலந்து கொண்டன. “ஏய் கயல்விழி. உளறாதே. என்னை எவன்டி காதலிப்பான்.? சும்மா சங்கரனிட்டப் பொய் சொன்னன். அவன் நம்பிட்டான். அவன் இதப்பற்றிக் கதைப்பதில்லை. ஆனால் எங்கட மாமி பொல்லாதது. குத்துக்கதை சொல்லிக் கொண்டே இருக்கும். அம்மாவும் அப்பாவும் பேசாமல் கேட்டுக் கொண்டு இருப்பாங்க. பாவம். கெதியக ஒருவேலை தேடவேணும். அவங்கட கடனையெல்லாம் அடைக்க வேணும். தம்பி தங்கைகளைப் படிப்பிக்க வேணும். இதுதான் என்ர லச்சியம்”. கூறிக் கொண்டே போனாள்.
“கயல்விழி என்ர அண்ணன் இருந்திருந்தால் இந்தக் கஸ்ரத்தில விடுவானா? அவன் இயக்கத்துக்குப் போயிற்றான். அவன் விரும்பிப் போகல்ல. பாலத்காரமாகக் கூட்டிற்றுப் போனாங்க. கடைசியில் என்ன நடந்தது. ஆளுக்கொரு திக்கில போய் அழிஞ்சி போனங்க. கஸ்ரப்படுறது நாங்கதானே. தமிழரின் தலைவிதியை யாராலும் மாற்றேலாது”. அவள் சொல்லும்போது கண்ணீர் சொரிந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். “நமக்கு அரசியல் தேவையில்லை. நாங்கள் வாழப்பழக வேண்டும். நிமிர்ந்து நின்று நமது கஸ்ரங்களைப் போக்க வேண்டும்”. மங்கை சொன்னாள். கயல்விழி அமைதியாக்கக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் சொல்வது உண்மைதான். தமிழரை வழிநடத்தும் தலைமைகள் தவித்த முயலடிக்கும் சந்தர்ப்பவாதிகள். சுயநலக்கும்பல். இன்னும் சொல்லப் போனால் பதவிக்காக விலைபோகும் பேர்வழிகள். கயல்விழியின் உள்ளம் கொதித்தது.
எனினும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. மங்கையைச் சமாதானப்படுத்த முயன்றாள். “சரி எப்படி உன் போய்பிறன்ட். அவர் எங்கே இருக்கிறார். சொல்லு கேட்போம்”. ஓரு முறுவலோடு கதையை மாற்ற முயன்றாள். “நீ அடுத்த லூஸ் கேஸ். எனக்கு எங்கேயடி போய்பிறன்ட் இருக்கு. சங்கரனுக்குப் பொய்தான் சொன்னன். அவன் நம்பிட்டான். அவன் என்னைப் பார்ப்பதுமில்லை. பாவம். அவன் நல்ல பொடியன்”. விளக்கிக் கொண்டு போனாள். “மங்கை! நம்மைச் சுற்றி எத்தனைபேர் வலம் வந்தார்கள். அவங்களிட்ட மாட்டுப்பட்டிருந்தால் வீதியிலதான் நிக்கவேணும். நாங்க இரண்டு பேரும் தப்பிச்சம். சிலர் மாட்டிக் கொண்டு தவித்ததையும் பார்த்தோம்தானே”? சொல்லும்போது கயலுக்கு அருணின் நிiவு எட்டிப் பார்க்கும். அது மெதுவாக மறைந்த போகும்.
பல்கலைக்கழகத்தின் நினைவுகளுக்கு மங்கையை இழுத்தாள்.பல்கலைக்கழகத்தில் பொடியன்கள் பொழுது போக்குக்காகக் காதலிப்பார்கள். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் ஊருக்குப் போய்விடுவார்கள். பிறகு சீதனத்தில் வந்து நிற்பார்கள். அவர்களையும் குறை சொல்லமுடியாது. அவர்களும் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இவையெல்லாம் நாமே நமக்குப் போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியாத முடிச்சுக்கள். சமூகத்தை மாற்றவேண்டுமானால் அதற்கு மனித மனங்களை மாற்றவேண்டும். இப்போது கயல்விழியின் மனதுக்குள்ளே பெரிய புரட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. “மங்கை! இப்ப நித்திரை கொள்வோம். நாளை பட்டமளிப்பு விழா இருக்குதல்லவா”? கூறிக்கொண்டு புரண்டு படுத்தார்கள்.
தொடரும்
0 comments:
Post a Comment