நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
21
வடக்குத் தெற்காக கிறேவல் வீதி நீண்டு கிடந்தது. வீதிக்குக் கிழக்காக நிலம் விரிந்து கிடந்தது. படிப்படியாக கீழ் நோக்கி இயற்கையாகச் சாய்ந்திருந்தது. நிலஅளவையாளர்கள் சுறுசுறுப்பானார்கள். அவர்கள் அளந்து கூனியடித்துச் சென்றார்கள். பிரதேசச் செயலாளரின் அலுவலர்கள் பெயர்ப்பட்டியலை எடுத்தார்கள். பயனாளிகளை வாசித்தார்கள். காணித்துண்டுகளுக்கு இலக்கமிட்டார்கள்;. இலக்கங்கள் எழுதிய துண்டுகளைக் குலுக்கல் முறையில் எடுக்கும்படி பணித்தார்கள். பயனாளிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் நின்று நெறிப்படுத்தினார்கள். அதிபர் ஆலோசனைகளை வழங்கினார். கிராமசேவையாளர் அறிவுறுத்தினார். மிஸ்டர். டேவிட் வந்து எல்லாவற்றையும் அவதானித்தார். அவர் பயனாளிகளைக் கவனித்தார். அவர்கள் அனைவரும் இளைஞர்களும் யுவதிளும்தான். அவருக்கு மிகத்திருப்தியாக இருந்தது.
இளைஞர்களின் கட்டுப்பாடும் ஒழுங்கும் டேவிட்டுக்குப் பிடித்துக் கொண்டது. குலுக்கல் முறை முடிந்ததும் பயனாளிகளுக்குக் காணிகளை அடையாளம் காட்டினார்கள். பயனாளிகள் தங்கள் காணிகளுக்குள் நின்றார்கள். லொறிகளில் காணிதுப்பரவு செய்வதற்கான உபகரணங்கள் வந்தன. அதனைச் சாந்தன் பெற்றான். அருண் உபகரணங்களைக் கொடுத்துதவிய நிறுவனத் தலைவரோடு உரiயாடினான். அவர் சம்மதம் தெரிவித்தார். லொறி காணிகளை நோக்கிச் சென்றது. சாந்தன் அவர்களுக்கு ஒதுக்கியிருந்த உபகரணங்களை அவர்கள் நற்கும் இடத்துக்குக் கொண்டு சென்று கொடுத்து வந்தான். விவசாயப் பணிப்பாளரும், பிரதேசச் செயலாளரும் வந்து பார்த்தார்கள். அவர்களுக்கச் சந்தோசம்.
“கயல்விழி! இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒரு நூறு இளைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம். காணி இருக்கிறது. இளைஞர்களுக்கு வழியைக் காட்டினால் அவர்கள் சமுதாயத்தைத் தாங்கும் தூண்களாக மாறிவிடுவார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஆரசாங்க உத்தியோகம் செய்யவேணும் என்ற எண்ணங்களும் மறைந்து விடும். அருண் எல்லாவற்றையும் செய்வார். பிரதேசச் செயலாளர் சொல்லிக் கொண்டிருந்தார். காணியை அளந்து விடுவார்கள். இந்தப் பிரதேசத்தில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளைத் தெரிவு செய்வோம். அடுத்த கிழமை அவர்களை அழைத்துக் கொடுக்கலாம்”;. சொல்லிக் கெண்டே விவசாயப் பணிப்பாளரைப் பார்த்தார். அவரும் அதனை ஆமோதித்தார். “நல்லயோசனை” என்றார்.
காணியைப் பெற்றவர்கள் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். கயல்விழி ஒரு இடத்தில் நின்று கொண்டே தனது தொண்டர்கள் சேவை செய்வதை அவதானித்துக் கொண்டிருந்தாள். மிஸ்டர் டேவிட் அருணை அழைத்தார். இருவரும் கயல்விழியிடம் சென்றார்கள். அவர்கள் தன்னிடம் வருவதற்குள் அவள் அவர்களை நோக்கி முன்னே வந்தாள். “மிஸ் கயல்விழி உங்கட வங்கிக்கணக்கு இலக்கம் தேவை தரமுடியுமா”? கேட்டார். மங்கை “இதோ” என்று நீட்டினாள். டேவிட் அசந்து போனார். எள் என்று சொன்னால் எண்ணெய்யாக இயங்குகிறார்களே. எப்படி முடீகிறது? அதிசயித்தார்.
“எனக்கு நல்ல திருப்தி. இந்த நிதி வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவி. இதனை உதவியாக அளிக்கிறது. நீங்க திருப்பிக் கட்டத்தேவையில்லை. ஒரு நபருக்குப் பதினைந்தாயிரம் வீதம் மானியமாக இருநூற்றைம்பது நபர்களுக்கு உதவு தொகையாக நாளைக்கு உங்கட வங்கிக் கணக்கில வைப்பில் இடுவோம். மாதாமதம் நிதி அறிக்கையும், விவரண அறிக்கையும் அனுப்பி வைய்யுங்கள். அடிக்கடி எங்கள் நிறுவனம் வந்து வழிகாட்டும். இடையிடையே நானும் வருவேன். எனது வாழ்த்துக்கள்”;. சொல்லி தனது சாரதிக்குக் கையைக் காட்டினார்.
வாகனம் வந்தது. அதிலிருந்து சாரதி ஒரு கோவையைக் கொண்டு வந்தார். அதனைப் பெற்றுச் சில பத்திரங்களை எடுத்தார். “இது உடன்படிக்கை. நீங்கள் கையெழுத்தைப் போட்டுத் தாங்க”. என்றார். மங்கை பக்கத்தில் நின்றாள். கயல்விழி ஒப்பமிட்டான். மங்கை நிறுவனத்தின் றப்பர் முத்திரையை இட்டுத் திகதியையும் எழுதிக் கொடுத்தாள். டேவிட் ஒரு பிரதியை கயல்விழியிடம் கொடுத்தார். கைகுலுக்கினார். விடைபெற்றுச் சென்றார். கயல்விழி தனது ஒவ்வொரு செயலின் போதும் அருணைப் பார்த்து மெல்லப் புன்னகைப்பாள். ஒவ்வொரு திட்டமும் அவனால் செயலுருப் பெறுவதை அவள் மட்டும்தான் அறிவாள். ‘எல்லாம் உங்களால்தான்’ என மனதுள் நினைந்து கொள்வாள்.
சாந்தன் நில அளவையில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கினான். சாரதா வந்திருந்த நிறுவனத்தினருக்கு உணவுவகைகளை எடுத்து வந்தாள். எல்லோரும் உணவினை மகிழ்ந்து உண்டார்கள். குளம் தூர்ந்து கிடந்தது. அதனைத் திருத்தினால் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாய்சல் செய்யலாம். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் முறையிட்டிருந்தாள். அவர்கள் உரிய செலவு மதிப்பீட்டைச் செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய நிதியைப் பெறமுடியாதுள்ளதை அறிவித்தனர். அதனை வைத்துக் கொண்டு பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்குத் தனது முன்மொழிவுகளை அனுப்பி யிருந்தாள். “இந்தக் குளத்தைத் திருத்திவிட்டால் நமது திட்டம் பூரணமாகும்”;. மங்கையிடம் சொன்னாள். இரண்டு நிறுவனங்கள் இணைந்து குளத்தைத் திருத்தித் தருவதற்கு முன்வந்திருந்தன. “விரைவில் குளத்தைத் திருத்த உதவிகள் வரும்” மங்கை உறுதியாகச் சொன்னாள். “தொடர்ந்து வேலைகள் நடைபெறும். இரண்டு கிழமைகளுக்குள் வெளியாக்கி விடவேண்டும். இது நமது வேலை என்று எடுத்துக்குக் கொண்டார்கள். “இன்றைய நாள் நமது மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் நாள்.” சொல்லிக் கொண்டார்கள். வேலைகளை முடித்து அனைவரும் சென்றார்கள்.
வீட்டை அடையும்போது இருட்டி விட்டிருந்தது. நல்ல களைப்பு. அருண் நன்றாகக் குளித்துவிட்டு முற்றத்தில் கதிரையில் சாய்ந்திருந்தான். கயல்விழியும் மங்கையும் வந்தார்கள். “இன்றைக்கு வேலைகளைப் பற்றிய கதை வேண்டாம். சந்தோசமாக ஏதாவது கதைப்பம். என்ன கதைக்;கலாம்.” கயல்விழி தொடங்கினாள். அருண் அதிசயமாகப் பார்த்தான். “மங்கை இப்ப கட்டாயம் மழை பெய்யும்.” அருண் சிரிப்போடு சொன்னான். “வானத்தில் இருளைக் காணல்ல. வானம் தெளிவாய் இருக்கு. நிலவு ஆற்றுக்குள்ளும் வெளிச்சத்தைப் பாச்சுது. மழை இப்போதைக்கு இல்லை. மங்கையும் பொடிவைத்துப் பேசினாள். “என்ன இரண்டு பேரும் பேசுவது எனக்கும் விளங்கும்”. கயல்விழி சிணுங்கினாள்.
“கயல்விழி நாளைக்கு நான் மூதூர் போகவேணும். பிறகு திருகோணமலைக்குப் போகவேணும்.” சொல்லிக் கொண்டிருந்தான். அவள் பதறியடித்தாள். “என்ன அதற்குள்ளாகவா? வந்தவேலைகள் முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களாவது நில்லுங்க.” படபடப்போடு உளறினாள். “என்ன வேலையிருக்கு? முக்கியமான வேலைகள் செய்தாச்சு. இனி உங்கட நிறுவன வேலைகள்தான். அதனை நீங்க செய்யலாம்.” அவன் தொடர்ந்தான். “நாளைக்கு நமது விவசாயத் திட்டத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அடுத்த திட்டம் பற்றிக் கதைக்க வேணும். அவர்களுக்கு எப்படி நிதியை வழங்குவது பற்றி விளக்க வேணும். குளம் திருத்துவதற்கான முதற்கட்டச் சிரமதானம் ஒழுங்கு செய்ய வேணும்”. அடுக்கிக் கொண்டு போனாள்.
“அது சரி. இப்பதானே வேலைகள் பற்றிக் கதைக்கக் கூடாது என்று சொன்னிங்க. மறந்திட்டிங்களா”? சொல்லிக் கொண்டு சிரித்தான். அவள் உண்மையில் கொஞ்சம் சோர்ந்துதான் போனாள். அருணைப் பார்த்தாள். “நான் இயங்குவது உங்களால்தான். நீங்க இல்லாட்டி என்னால் இயங்க முடியாது. இதை உணரமாட்டிங்களா?” மனதில் உள்ளதைக் கண்களால் சொல்லிக் கொண்டாள். “கயல்; நான் உனக்காகத்தானே தவங்கிடக்கிறன். நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையா இன்னும்? அவன் தனது மனதுக்குள் கிடந்தவற்றை தன் பார்வையால் சொல்லிக் கொண்டான். இருவரது உள்ளங்களிலும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. “இவள் என்மேல் கொண்டிருப்பது நட்பா? என்னை நண்பனாகப் பார்த்துப் பழகுகிறாளா? புரியவில்லையே. நண்பானாகப் பழகிக் கொண்டிருக்கும் உரிமையில்தான் இப்படி பழகிக் கொண்டிருக்கிறாளா? இன்னும் சில நாட்களில் புரிந்து விடும்” கடும் யோசனையில் ஆழ்ந்தான்.
“என்ன யோசனை? அமைதியைக் கயல்விழி கலைத்தாள். “ஒன்றுமில்லை. நாளைய திட்டங்களை யோசித்தேன்”. என்றான். “நாளைய திட்டங்களை நாளை பார்ப்போம். இப்ப அம்மாவைப் பற்றிச் சொல்லுங்க. அம்மா எப்படி இருக்கிறா”? கதையை மாற்றினாள். “அம்மா சுகமாக இருக்கிறா. அடுத்த முறை அம்மாவை ஒருக்கா இங்க கூட்டிவர யோசிக்கிறன்”. தனது அடுத்த கட்ட நகர்வை முன்வைத்தான். “கட்டாயம் கூட்டி வாங்க. எனக்கும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கு. அவவுக்கு இந்த இடம் நல்லாப் பிடிக்கும்”. ஓரு துள்ளலோடு சொன்னாள். நேரம் போனது தெரியவில்லை. உணவின்பின் ஓய்வெடுத்தார்கள்.
அருண் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து கிராம அபிவிருத்தி வேலைகளைக் கவனித்தான். அதகிமான காடுகள் அந்நிலங்களில் இருக்கவில்லை. அதிகமான காணிகள் வெளியாக்கப் பட்டன. வீதியோரமாக மேட்டு நிலமாக அமைந்திருந்தது. கொட்டில்களை அமைக்க இது வசதியாக இருந்தது. பலர் கொட்டில்களை அமைத்து விட்டார்கள். வீதியோரமாக புதிதாக ஒரேவரிசையில் கொட்டில்கள் இருந்தன. சிலவற்றைக் கிடுகினால் வேய்ந்தார்கள். பொதுவாக எல்லா இளைஞர் யுவதிகளும் தங்களை வேலையில் ஈடுபடுத்தி யிருந்தார்கள்.
மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வேலையிருந்தால் அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வேலை இல்லாதிருந்தால் மற்றவரகளுடைய விவகாரங்களில் தலையிட்டுத் தவித்த முயலடிப்பார்கள். கட்டைபறிச்சான் மாறியிருந்தது. எவரைப் பார்த்தாலும் கேட்டாலும் நேரமில்லை எனறுதான் சொன்னார்கள். அவரவர் வேலைகளில் மற்றவர்கள் தலையிட நேரமில்லாதிருந்தது. ஆனால் பொது வேலைகளுக்கு அனைவரும் சமூகம் கொடுத்தார்கள். பாடசாலைக்குப் பிள்ளைகள் போனார்கள். கல்வி அபிவிருத்தியில் முன்னேற்றம் எற்பட்டது. சமய வழிபாடுகள் தொடர்ந்தன.
மரவட்டகுளப் பகுதி பெரிய கிராமமாகிவிட்டது. திடீரெனக் குளம் திருத்துவதற்கான நிறுவனங்கள் வந்திறங்கின. பிரதேசச் செயலாளரின் ஆலோசனையின்படி அருண் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்தான். நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையுடன். பொறியியலாளர்களின் நேரடி மேற்பார் வையில் வேலைகள் துரிதமாகின. தொடக்க நாள் மக்களின் சிரமதானத்தோடு தொடங்கியது. பாடசாலைப் பிள்ளைகள் தொடக்கம் கிராமத்தின் பெரியவர்கள் வரை கலந்து கொண்டார்கள்.
கிராம மக்கள் தொழிலாளர்களாக இயங்கினார்கள். தங்கள் சொந்த வேலையாகச் செய்தார்கள். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். குளக்கட்டுக்களைப் புனரமைக்கும் வேலைகள் நடந்தன. கயல்விழி பாடசாலை, நிறுவன மேற்பார்வை என பம்பரமாய் இயங்கினாள். மங்கையிடம் கயல்விழி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். அதனைப படித்ததும் அவள் கண்களில் இருந்து ஆறாய்ப் பெருகியது. “; மகள் ..நீ அனுப்பிய பதினைந்தாயிரம் ரூபாயும் கிடைத்தது. அப்படியே மாமாவின் கடனைக் கொடுத்து விட்டோம். நீ எப்படி இருக்கிறாய். கயல்விழிக்கும் அம்மா, அப்பாவுக்கும் சுகம் சொல்லு. பதில் அனுப்பு.” என்றிருந்தது. “யார் அப்பாவுக்குப் பணம் அனுப்பியது. கயல்விழியை அப்படியே கட்டிப்பிடித்து அழுதாள். “கயல் எப்படி உனக்குக் கைமாறு செய்யப்போறன்.? தேம்பினாள். “அடி பைத்தியமே நீ என்ர உயிர்த்தோழியடி.”சரி உன்ர வேலையைக் கவனி” கூறிவிட்டு வேலையில் ஈடுபட்டாள்.
தொடரும்
0 comments:
Post a Comment