Thursday, October 7, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
10
கயல்விழி காலை புறப்பட்டுப் பிரியாவுடன் அந்தப் பாடசாலைக்குப் போனாள். கூடவே மங்கையும் சென்றாள். பிரியாவின் வகுப்பு ரீச்சரைச் சந்திப்பதற்கு அதிபரின் அனுமதியைப் பெறச்சென்றாள். “கயல்விழி! வாவா. நான் இப்ப இங்குதான் இருக்கிறன். இங்க வந்து ஒருவருடமாகிறது. என்ன இந்தப்பக்கம்.? சுகமாக இருக்கிறாயா”? அவளைக் கதைக்க விடாது அதிபரே வினாக்களால் திணறிடித்துக் கொண்டிருந்தார். அதிபர் முடிக்கும்வரை அமைதி காத்தாள். “மடம்! நான் நன்றாக இருக்கிறன். மாமாவின் மகள் பிரியா இங்குதான் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். அவவின் வகுப்பாசிரியரிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும். அதுதான் வந்தேன்”;. என்றாள். “என்ன விசயம் கதைக்கப் போகிறாய். நான் ரீச்சரை இங்க வரச் சொல்லுறன். கதைக்கலாம். கூறிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினார். சிற்றூழியர் வந்தார். விசயத்தைச் சொன்னார். வந்தமாதிரி சிற்றூழியர் சென்றுவிட்டார்.
சற்று நேரத்தில் வகுப்பாசிரியர் சுமதி வந்தார். கயல்விழிக்குத் தூக்கி வாரிப் பொட்டது. “என்ன கயல்விழி அதிசயமாக இருக்கு. நான் இங்கிருக்கிறன் என்று எப்படித் தெரியும்? கூறியவாறே ஆவலோடு ஓடிவந்து தழுவிக் கொண்டாள்.
“நீதானா ஐந்தாம் வகுப்பு ரீச்சர். நான் வேறொருவர் என்றல்லவா நினைத்து வந்தேன்”. கயல்விழி அவளது விழிகளைப் பார்த்துக் கூறினாள். “இன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புக்கு நான்தான் பொறுப்பு. அதிபரின் அன்புக் கட்டளையை மீறமுடியாதுள்ளது”. சுமதி அதிபரைப் பார்த்துக் கூறினாள். அதிபர் சிரித்துக் கொண்டார். “கயல்விழி நீ எதற்கு வந்ததென்று தெரியும். இப்படிப் பலர் வந்தார்கள். நான் யாருக்கும் மனம் நோகாது சில மாற்றங்களைச் செய்திருக்கிறன். நான் நேரில் பார்த்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன்”. அதிபர் சிரிப்போடு கூறினார். இந்த அதிபருடன் இந்தச் சிரிப்பும் கூடவே பிறந்ததோ? கயல்விழி மனதில் வியந்து கொண்டாள். “மிகவும் நன்றி மடம்.” நெக்குருகிக் கூறினாள். “சரி நீ சுமதியோடு கதைத்துவிட்டுப் போ. எனக்கு வேலையிருக்கு. கயல்விழி இங்கே உயிரியல் விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு உதவ முடியுமா? அடுத்த கிழமை சொன்னால் போதும்.” கூறிவிட்டு அதிபர் சென்றுவிட்டார்.
சுமதியிடம் தான் வந்தவிசயத்தைச் சொன்னாள். “இதனால்தான் அதிபர் என்னை இந்த வகுப்புக்கு மாற்றியிருக்கிறார். நீ கலைப்படாத. நான் கவனிச்சிக் கொள்வன். எதற்கும் வகுப்புக்கு ஒருக்கா வந்தால் பிரியாக்குச் சந்தோசமாக இருக்கும்”. சொல்லி அழைத்துச் சென்றாள். வெளியில் இருந்த மங்கையும் சேர்ந்து கொண்டாள். வகுப்பறைக்குள் சென்றதும் பிரியா சந்தோசத்துடன் சிரித்தாள். “அக்கா இது எங்கட புது ரீச்சர். எங்களோட அன்பாக இருக்கிறா”. ஒடிவந்து கயல்விழிக்கு முன்னால் சொன்னாள். “பிரியா! அக்கா போய்வாறன். ரீச்சர் அன்பாக இருப்பார். கவனமாகப் படி.” என்றாள். சுமதி வழியனுப்பி வைத்தாள். இருவரும் வெளியில் வந்தார்கள். மாமாவின் வீட்டுக்குப் போனார்கள். மாமா வரும்வரை காத்திருந்தார்கள். அவர் பகலுணவுக்கு வந்தார். மாமியும் வந்துவிட்டார். அவர்களோடு சாப்பிட்டார்கள். பிரியாவின் விசயத்தைக் கூறினாள். அவர்கள் சந்தோசப் பட்டார்கள். இரண்டரை மணிக்குக் கப்பலுக்குப் புறப்பட்டார்கள்.
ஜெட்டிக்குச் சென்று கப்பலில் ஏறிக்கொண்டார்கள். மேல்தளத்தில் காற்று வீசும் பக்கம் இருந்தார்கள். கப்பல் புறப்பட்டது. இப்போதெல்லாம் உள்நாட்டுச்சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம். இலங்கைத்துறை ‘லங்காபட்டுன’ ஆகிவிட்டது. இலங்கைத்துறை முகத்துவாரத்தில் ஒரு உயர் குன்று இருக்கிறது. இதில் முருகன் கோயில் இருந்தது. அது இப்போது புத்தரின் புனிததலமாக மாறி வெற்றிச்சின்னமாகப் பெரும்பான்மையினருக்கு மாறிவிட்டது. லங்காபட்டுனவைப் பார்க்கத்தான் இவ்வளவு மக்களும் படையெடுத்துப் போகிறார்கள். இன்றும் வழமைபோல் சனங்கள் ஏறியிருந்தார்கள். மங்கை மறக்காமல் அன்றையத் தினசரிகளை வாங்கிக் கொண்டாள். கப்பலுக்குள் சென்றதும் எடுத்து விரித்தாள். பத்திரிகையைப் படித்ததும் தூக்கிவாரிப் போட்ட உணர்வு. ‘பாராளுமன்றப் பிரதிநிதிகளின் தலையீட்டால் போராட்டம் நிறுத்தம்’ என்றிருந்தது. கயல்விழிக்கு உண்மைக்காரணம் தெரியும். அவள் போலிகளை இனங்கண்டு கொண்டாள்.
“பதவிகளைத் தக்கவைக்கும் தலைவர்களால மக்களுக்கு நன்மை வருமா?” இரண்டு கிண்ணியா இளைஞர்கள் விவாதித்தது கேட்டது. கவனமாக உற்றுக்கேட்டார்கள். கிண்ணியா முஸ்லிம்களின் பேச்சொலி கேட்பதற்குச் சுவையாக இருக்கும். “என்னா பேப்பரில கெடக்கு”? ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டார். “நம்மட எம்பிமார் பெயித்துக் கதைச்சித்தானாம் பட்டதாரிப் பிரச்சினை தீர்ந்திருச்சாம் என்டு கெடக்கு. என்னா கதச்சிருப்பாங்க. சனங்களோட கதைக்கத் தெரியாத இவங்க பாராளுமன்றத்தில என்னா கதைப்பாங்க எண்டு தெரியாதா? தாருக்குக் கணக்கு விடுறாங்க? ”. பேப்பரைப் படித்தவர் சொன்னார். “அவுங்களுக்கென்னா? நாம வோட்டுப் போட்டு ‘யொப்பு’ எடுத்துக் குடுத்தா இதுவும் செல்லுவாங்க. இன்னமும் செல்லுவாங்க.” சிரிப்போடு கதைத்தார்கள். “கயல்விழி நன்றாகக் கவனித்தாயா? அவர்கள் கதையில் உண்மையிருக்கு. படிக்காத பாமர மக்களுக்கே அரசியல் தெரிந்திருக்கிறது. நாம் ஏமாந்த பேர்வழிகள்தான்”. மங்கை பெருமூச்சுடன் கூறினாள்.
மங்கை! நான் ஒரு தீர்க்கமான முடிவோடு இருக்கிறன். தீக்குச்சி இருக்கிறதல்லவா? அது சும்மா இருந்தால் பற்றாது. அதனை தீப்பெட்டியின் ஓரத்தில் உரைசினால் பற்றிக் கொள்ளும். அந்தத் தீக்கொழுந்தால் ஆக்கவும் செய்யலாம். அழிக்கவும் செய்யலாம். நமது இளைஞர்கள் ஒவ்வொருவரும் தீப்பெட்டிக்குள் உள்ள தீக்குச்சி போன்றவர்கள். அவர்களை உரைசிவிட ஒரு ஆள் வேண்டும். அது ஏன் நாமாக இருக்கக் கூடாது. கட்டைபறிச்சான் கிராமத்தைச் சூழப்பல கிராமங்கள் உள்ளன. அதற்கப்பால் பலகுளங்கள் நல்ல விளைநிலங்களாகப் பரவிக் கிடக்கின்றன. மனித வளத்தை, இயற்கை வளத்தோடு இணைத்தால் அதன் பயன் உச்சம் பெறும். அதற்கான வழிகளைத் திட்டம் போட்டிருக்கிறன்”.
சாரதா நல்லதொரு யுவதி. புரடசிகரமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறாள். அவளும் பல்கலைக் கழகப் பட்டதாரிதான். கெட்டிக்காரி. அவளுக்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி நல்லன செய்யப்போகிறன். அவளிடம் நிறையவே கதைச்சிப் போட்டன். ஒரு விசயத்தைக் கிராமத்தில் முன்னெடுக்கிறதென்றால் பாடசாலையை அல்லது கோயிலை மையமாகக் கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் சாரதா செய்கிறாள். இன்றைக்கு நமக்கு நல்ல வேலையிருக்கு. கோயிலில் முதற்கூட்டம் நடைபெறும். நீயும் என்னோட கொஞ்ச நாட்கள் இரு. எனக்கு ஒத்தாசையாக இருக்கும். வீட்டுக்கு அறிவித்துவிடு”. கயல் கூறிக்கொண்டே இருந்தாள். அவளையே மங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கப்பல் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. எத்தனை விதமான மனித மனங்களைச் சுமந்து செல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. நமது கவலையை நாம்தான் போக்க வேண்டும். ஜெட்டியை அடைந்ததும் கட்டைபறிச்சானுக்கு விரைந்தார்கள். சுந்தரத்தார் எதிர்பார்த்த வண்ணம் இருந்தார். பிள்ளைகளைக் கண்டதும்தான் அவருக்கு நிம்மதி.
“பிள்ளைகள் களைத்து வந்திருக்குதுகள்”.சொல்லிக் கொண்டு தங்கம் தேநீரைக் கொடுத்தார். களைப்புக்குத் தேநீர் அமுதமாக இருந்தது. சற்று நேரத்தால் குளித்தார்கள். அப்படியே கோயிலுக்குச் சென்றார்கள். இன்று மக்கள் அதிகமாக இருந்தார்கள். சிறப்பாக இளைஞர்களும் யுவதிகளும் கூடியிருந்தார்கள். அடுப்பில் பானையிருந்தது. பொங்கல் வெந்து கொண்டிருந்தது. சாரதா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
கயல்விழியும் மங்கையும் கோயிலை வலம் வந்தார்கள். கண்களை மூடியபடியே இறைவனைத் தியானித்தார்கள். கைகளைகத் தலைமேல் குவித்து வணங்கினார்கள். தரையில் வீழ்ந்து கும்பிட்டார்கள். எழுந்து கண்களை விழித்துப் பார்த்தார்கள். அவர்கள் எதிரே சாரதாவோடு யுவதிகள் நின்றார்கள். “அக்கா உங்களைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போயிருந்தோம். நீங்க திருகோணமலைக்குப் போயிருப்பதாக அம்மா கூறினார். நீங்கள் சொன்னதுபோல் ஒழுங்குகளைச் செய்து விட்டோம்”. மிகப்பணிவாகக் கூறினார்கள். “உங்கள் உதவி எப்போதும் தேவை. நமது கால்களில் நாம் நிற்க வேண்டும்? அதைச் செய்யுங்க”. அவர்களைப் பார்த்தவாறே கயல்விழி கூறினாள்.
“அக்கா நமது ஊரின்நிலை உங்களுக்குத் தரியும். வீடுகளில் பல கன்னிப் பெண்கள் சோம்பேறிகளாய் கிடக்கின்றார்கள். அவர்களை கோயிலுக்கு வரச்செய்ய வேண்டும். கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபடுத்த வேண்டும். நாங்கள் சொன்னால் வரமாட்டார்கள். நீங்கதான் உதவவேண்டும். இன்றைக்கு கோயிலில் நாங்கள் பொங்குகிறோம். பூசைநடக்கும். அதிகமானவர்கள் வருவார்கள். நீங்கள் சொன்னதுபோல் சங்கத்தைத் இன்றைக்குத் தொடங்குவம்.;”. தங்களது செயற்பாட்டை ஒப்புவித்தார்கள். கயல்விழிக்கு ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. ஒவ்வொருவர் மனதிலும் நல்ல விசயங்களுக்கான ஊற்றுக்கண் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கண்டறிந்து திறந்துவிட்டால் உலகம் செழிக்கும்.
“நாங்க வீட்டுக்குப்போய் அப்பாவிடம் சொல்லிப்போட்டு வாறம். இதோ போறதும் வாறதும்தான்”. கூறிப் போனார்கள். யுவதிகளுக்குச் சந்தோசம். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். கயல்விழியும், மங்கையும் வந்தார்கள். இப்போது ஏராளமான யுவதிகள் வந்திருந்தனர். பூசை தொடங்கவிருந்தது. “பூசை முடிந்ததும் சங்கத்தைத் தொடங்குவோம்.” என்றார்கள். தேவாரம் பாடுவதற்குப் பலர் தயங்கினார்கள். மங்கை அக்குறையைப் போக்கினாள். மங்கை இசை கற்றவள். அவளது குரலும் இனிமையானது. அவளது தேவார இசை அனைவரையும் காந்தம் போல் ஈர்த்து விட்டது. பூசை முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருமணம் முடித்தவர்கள் வீட்டில் வேலையென்று சென்றுவிட்டார்கள்.
யுவதிகள் அனைவரும் பதினைந்து தொடக்கம் இருபத்தியைந்து வயதினர்கள். அவர்கள் கோயில் மண்டபத்து முற்றத்தில் அமர்ந்தார்கள். நமது பாரம்பரியம் போற்றப்பட்டுப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்தது. முற்போக்குக் கருத்துள்ளவர்கள் பலர் இருந்தார்கள். இவர்களை ஒன்றுதிரட்டி விட்டால் பல சாதனைகளைப் படைக்கலாம். அடுப்பூதும் பெண்களாக இருந்தால் நமக்கு விடிவு கிடைக்காது. கயல்விழி ஒருதீர்மானத்துக்கு வந்துவிட்டாள். சாரதாவை அழைத்தாள். சாரதா முதலில் நீங்க தொடங்குங்க. நான் சொன்னபடி நிகழ்ச்pநிரல் தயாரா? அதையே பின்பற்றுவோம். சரி தொடங்குங்க.” தொடங்கும்படி கேட்டுக் கொண்டாள். சாரதா சம்பிரதாயப்படி தேவாரம் பாடினாள். எல்லோரும் எழுந்து நின்றார்கள். “இது ஒன்றே போதுமே இவர்களை ஒன்றிணைக்க.” மனதில் உறுதி கொண்டாள். கட்டைபறிச்சானின் விடிவு பிறப்பதற்காகக் கிராமத்தின் பழமை பேசப்பட்டது.
“நாம் இங்கு கூடியிருப்பது நமது கிராமத்தை எழுச்சி மிக்கதாய் ஆக்குவதற்காக என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இக்கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும். அவற்றை நடைமுறைப் படுத்தி வெற்றி காண்பதே இக்கூட்டத்தின் நோக்கம். நமது கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் போய் பட்டதாரியாகி நமது கிராமத்துக்கே அக்கா கயல்விழி வந்திருக்கிறார். அவரை உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரது தலைமையில் நாம் ஒன்று திரண்டு, கிராமத்தை முன்னேற்றுவோம். நமது அக்கா கயல்விழி நாம் முன்னேறுவதற்கான திட்டங்களை விளக்குவார்கள்”. சாரதா கூறிவிட்டு அமர்ந்தாள்.
கயல்விழி எழுந்தாள். வணக்கம் சொன்னாள். “அன்பான தோழிகளே! அருமைத் தம்பி தங்கையரே”! எல்லோரையும் பார்த்து விழித்தாள். “நமது கிராமம் அழிக்கப்பட்டது. அழிவின் காரணகாரியங்களை அலசுவதை விடுத்து அதிலிருந்து மீளவழிபார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் வாழவேண்டும். நமது சந்ததியினருக்கு நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதிலிருந்து தவறினால் நம்மை நமக்குப்பின் வரும் சமூகம் பழித்துச் சபிக்கும். நமது அனைத்தும் அழிக்கப்பட்டாலும் அதனை மீண்டும் கட்டியெழுப்புவோம். நமக்கு கல்வி மிகமுக்கியமானது. இவற்றையிட்டுக் கதைப்பதற்காகத்தான் இக்கூட்டம் கூடப்பட்டுள்ளது. நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். பல மக்களைப் பார்த்திருக்கிறேன். நாம் நினைத்தால் நமது கிராமத்தை மாற்றி அமைத்து விடலாம்”;. சற்று நிறுத்தித் தொடர்ந்தாள். அவளைது பேச்சைக் கேட்டுக் கொண்டு இளைஞர் கூட்டம் அமர்ந்திருந்தது.
“நமது கிராமத்தில் உள்ள பலத்தையும், பலவீனத்தையும் பார்ப்போம். பாடசாலைகள் இரண்டு உள்ளன. படிப்பதற்கு மாணவர்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. படித்தவர்கள் உள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் தோட்டஞ்செய்யக்கூடிய காணி உண்டு. ஆனால் அதற்குரிய முதலில்லை. செய்யும் அக்கறையில்லை. தோட்டவேலை செய்யக்கூடிய மனிதவலு உள்ளது. அதற்குரிய ஆயுதங்கள் இல்லை. உடல்வலு உண்டு. அனால் சோம்பல் விடுவதாக இல்லை. கடல் வளம் உண்டு. நாம் கண்டு கொள்ளாது இருக்கிறோம். நமது உப்பு நீர்ச்சிற்றாறு விதையாத வயலாக உள்ளது. அதன் பயனை அனுபவிக்காது இருக்கின்றோம்.
சின்னஞ்சிறார்கள் இருக்கிறார்கள், பாலர் பாடசாலைகள் இல்லை. பாலர்பாடசாலைகளில் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதிவசதியில்லை. கோயில் இருக்கிறது அதற்கெனப் பூசை செய்ய அர்ச்சகர் இல்லை. அவருக்குக் கொடுக்க நிதிவசதியும் இல்லை. வயல்நிலங்கள் உண்டு. அவை பற்றைக் காடுகளாக உள்ளன”. இளைஞர்களைப் பார்த்தாள். அவர்கள் அமைதியாகப் புன்னகைத்தார்கள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP