Monday, October 11, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

15
“பல்கலைக் கழகத்தில் சந்தித்தபின் இன்றுதான் கண்டிருக்கிறன்.” அருண்தான் தொடக்கினான். “அம்மா இதுதான் அருண். எங்களோட பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் எங்களுக்குச் சீனியர். இப்ப மூதூர் பிரதேச செயலாளர் கந்தோரிலதான் வேலை. இரண்டு வருசத்துக்குப் பிறகு இன்டைக்குத்தான் சந்தித்திருக்கிறம்”. ஒரு புன்னகையுடன் அம்மாவுக்கு அறிமுகம் செய்தாள். அம்மா ஒரு சிரிப்போடு தன்னை அறிமுகப்படுத்தினார். “முதல் திருகோணமலையில் தானே இருந்தீங்க. எப்ப இங்க வந்தீங்க? அருண் தொடர்ந்தான். “அருண் இதுதான் எங்கட சொந்த ஊர். இங்கிருந்துதான் ஏ.எல் எடுத்தனான். பிரச்சினையினால் ஒருவாறு உயிர் தப்பி திருகோணமலையில் வாடைக்கு இருந்தோம். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அது முடியும் வரை திருகோணமலையில்தான் இருந்தோம். இப்ப இங்கு வந்திட்டம்”;. விளக்கமாகச் சொன்னாள்.
“நீங்க எப்படி இருக்கிறீங்க”. அவனிடம் வினாவினாள். “எனக்கென்ன குறை. ராசா மாதிரி இருக்கிறன். அம்மா நல்லாச் சமைத்துத் தாறா. சாப்பிட்டுப் போட்டு ஊர்சுத்துறதான் வேலை. அதுக்கு அரசாங்கம் சம்பளம் தருது”. பெரிய சிரிப்போடு சொன்னான். “கயல்! அருண் இன்னும் தமாசாத்தான் பேசுறார். ஒரு மாற்றமும் இல்ல.” மங்கை சுட்டிக்காட்டினாள். “நான் உண்மையைச் சொன்னன். நான் சமூகவியலை ஒரு பாடமாக எடுத்ததால சமூகத்தோடு சேர்ந்து சேவை செய்யச் சந்தர்ப்பம் கிடச்சிது. ஆர்.டி.ஓ. அதாவது கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை செய்யிறன். எனக்குப் பொருத்தமான வேலை”. சொல்லிக் கொண்டு சாப்பிட்டான். சாப்பாடு முடிந்ததும் மரநிழலில் கதிரைகளை எடுத்துச் சென்று அமர்ந்து கதைத்தார்கள்.
“அருண்! இப்ப வேலைகிடைப்பது மிகக்கஸ்டம். பட்டதாரிகள் பெருகி விட்டனர். நாட்டில பிரச்சினைகள் வந்து எல்லாம் தலைகீழாப் போச்சு. இனி நாங்க எங்கட காலிலதான் நிற்க வேணும். அரசியல்வாதிகளை நம்பி நமது இளைஞர்கள் படுகுழியில் விழுகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து எங்களால முடியும் என்று காட்டப் போறம். அதுதான் மங்கையும் என்னோட வந்திருக்கிறா. அவவுக்கு ஒரு வேலை கிடைக்குமட்டும் இங்கு என்னோட இருப்பா. அதுவரை நாங்கள் சமூக சேவை செய்யப்போகிறோம்”. கயல்விழி மரக்கிளைகளைப் பார்த்தவாறே கூறினாள். “கயல் உங்களுடைய பாதை தெளிவானது. என்னால் உதவக்கூடிய வழிகளில் உதவக் காத்திருக்கிறன்.” உறுதியுடன் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டுச் சந்தோசப்பட்டாள். “நான் இப்ப மூதூ; போய் செயலாளரிடம் கதைச்சிப் போட்டு திருகோணமலை போவன். நாளைக்கு யூனிசெவ் அதிகாரிகளைச் சந்திப்பன். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்து ஊர்நிலைமைகளை விளக்கிக் கூறுவன். உங்கட போன் நம்பரைத் தாங்க. உங்களத் தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்”. அவன் கேட்டான். கேட்டதும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தாள். பெற்றுக் கொண்டு விடைபெற்றான். வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள். புளுதியைக் கிளப்பிக் கொண்டு மோட்டார் சைக்கிள் போய்மறைந்தது.
கோயிலடியில் மக்கள் கூடியிருந்தார்கள். பிரதேச செயலாளர் கொடுத்த கடிதங்களைச் சாந்தன் கொண்டு வந்திருந்தான். ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தைப் பதியும் படிவங்களையும் எடுத்து வந்தான். ஒவ்வnhரு கடிதங்களிலும் ஒவ்வொரு பிரதியையும் சேர்த்து அனுப்பியிருந்தாள். அக்கடிதங்களில் தனது சிபார்சினை எழுதி அனுப்பிப் பிரதிகளிலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். மோசடிகளும், தில்லுமுல்லுகளும் தலைவிரித்தாடும் அரச திணைக்களங்களில் பிரதேச செயலாளர் சிவநாயகம் ஒரு வித்தியாசமான பிறவிதான். அவர்தானே கிராம அபிவிருத்தி அதிகாரியை அனுப்பியிருந்தார். அவரை நினைந்து நெக்குருகினாள். மனதார நன்றி கூறினாள்.
நாட்கள் யாருக்காகவும் காத்திருப்தில்லை. சூரியன் மறந்தும் உதிக்காது விடுதில்லை. பகல் வரும். பொழுது பட்டு இரவு வரும். பூமிப் பந்து சுழலும் பருவகாலங்கள் நிகழும். வாழ்க்கை வண்டில் சக்கரம் போன்றது. அது சுழன்று கொணடுதான் இருக்கும். அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். அருணை நினைத்தாள். அவன் தன்னோடு பழகிய நாட்களை நினைந்தாள். மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். எவரது மனமும் புண்படாத வகையில் பேசுவான். அவனை கயல்விழிக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் அது காதலல்ல. காதலிக்கும் எண்ணத்துக்கு நாட்டு நடப்புகள் இடங்கொடுக்கவில்லை. அவள் தனது அண்ணனை நினைந்து கொள்வாள். வாழ்க்கை வெறுமையாகத் தெரியும். அருண் வந்து போனதிலிருந்து அவள் மனம் படபடத்தது. அடிக்கடி நினைந்து கொள்கிறது. என்ன மனமிது. தனது மனதைக் கடிந்து கொண்டாள்.
கயல்விழியின் தொலைபேசி இசையோடு ஒலித்தது. “ஹலோ” சொன்னாள். “கயல் நான் அருண” அருண், இப்பதான் உங்கள நினைச்சனான்.” சொன்னாள். “அப்படியா? அதுசரி, நாளைக்காலை உங்கள் ஊருக்கு யூனிசெவ் அலுவலர்கள் வருகிறார்கள். ஆயத்தமாகி இருங்கள். அவர்களுடன் நானும் வரலாமா”? இடையில் ஒரு தமாஸ் விட்டான். “நீங்கள் கட்டாயம் வரவேண்டும். காத்திருப்பன்.” சொல்ல வாயெடுத்தாள். ஆனால் முடியவில்லை. நீங்களும் வாறது நல்லதல்லவா? வாங்க.” ஒருவாறு சொன்னாள்.
“கயல் இன்னுமொரு நல்ல செய்தி. அங்க எத்தனை வொலிபோல் ரீம் இருக்கு”. கேட்டான். “இன்னும் நாங்க தொடங்கல்ல. நெற்போல் ரீம் நான்கு இருக்கு. ஆனால் ஒரு உபகரணமும் இல்லை”. விபரத்தைச் சொன்னாள். “சரி நீங்க இளைஞரிடம் சொல்லி இரண்டு இடங்களில் வொலிபோல் விளையாடக் கூடியதாக ஆயத்தம் செய்து வையுங்க. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள கட்டிடம் வெறுமையாகக் கிடக்கு அதை நான் கண்டனான். அதைத் துப்பரவாக்கி வையுங்க. அதில் ஒரு படிப்பகத்தைத் தொடங்குவம். பாடசாலைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் வரும். நாளைக்குச் சந்திக்கிறன். வைக்கிறன்”. அருண் தொலை பேசி இணைப்பைத் துண்டித்தான்.
“மங்கை இஞ்ச வா. நல்ல சேதி. அருண் இப்ப கோல் எடுத்தவர். நாளைக்கு யூனிசெவ் வருதாம். சாரதாவைக் கூப்பிடு. முன்பள்ளியில படிப்பிக்கிற ஆசிரியர்களின் பெயர், சுயவிபரம். கல்வித்தகைமை எல்லாவற்றையும் தயாரிக்கச் சொல்லுங்க. அதே போல் பாடசாலைகளில் கற்பிக்கும் நமது தொண்டர் ஆசிரியர்களது விபரங்களையும் தயாரியுங்க. சாந்தனை இரண்டு ‘வொலிபோல் கோட்’ போடச் சொல்லுங்க. கோயிலுக்குப் பக்கத்தில இருக்கிற கட்டிடத்தைத் துப்பரவு செய்யச் சொல்லுங்க”, அடிக்கிக் கொண்டே சென்றாள். சாரதா ஒடிவந்து கயல்விழி சொல்லச் சொல்லக் குறிப்பெடுத்தாள். அதிபரைச் சந்திக்க வேணும். “சாரதா நீங்க இந்த ஒழுங்குகளச் செய்யுங்க. நாங்க அதிபரைச் சந்தித்து விசயங்களைச் சொல்லிவிட்டு வாறம். மங்கை வா போவம்.” சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்..
அதிபர் பாடசாலையில் இல்லை. அவர் பகல் உணவுக்குச் சென்றவர். இன்னும் திரும்பவில்லை. பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. இரண்டு வகுப்புக்களுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. ஆளுக்கொரு வகுப்பில் நுழைந்தார்;கள். பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். எப்பொழுதும் பாடத்தையே கற்பித்தால் பிள்ளைகளுக்கு அலுப்புத் தட்டும். அவர்களுக்க விளையாட்டு மூலம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் விரும்பிக் கற்பார்கள். அவர்களை அந்த நிலைக்குக் கொண்டுவருவது ஆசிரியர்களின் கடமையாகும். நமது பிள்ளைகள் பாதிக்கப்பபட்டவர்கள். அவர்களது மனம் நொந்துபோய்க் கிடக்கிறது. கண்ணுக்குத் தரியாத அந்தக் காயங்களை அவர்களிடம் இருந்த அகற்றுவதற்குரிய முறைகளைக் கையாள வேண்டும்.
சிலர் மனவடுக்களைப் போக்குவதாய் சொல்லிக் கொண்டு மக்களை மென்மேலும் துன்பத்துக்குள் ஆஆழ்த்துகிறார்கள். அவர்கள் மனம் விட்ட அழுதால் அந்தத் துயரம் நீங்கிவிடும் என்று நம்புகிறார்கள். அனால் அதனால் அவர்களுத துன்பத்தைத் தூண்டிவிடுகிறார்கள். விளையாட்டு சிறந்த மருந்து. ஆடல்பாடல் அபிநயத்தல் போன்ற கலை நிகழ்வுகள் மக்களின் துயரங்களுக்கு வடிகால்களாக அமையும் அபபடிச் செய்தால் விரைவில் அவர்கள் தங்கள் துயரங்களை மறந்து விடுவார்கள்; மனவடு மெல்ல மெல்ல நீங்கிவிடும். ஆடிக்கடி மங்கையுடன் இதனையிட்டு ஆராய்வாள். இருவரும் இவ்வகைச் செயற்பாடுகளைச் செய்து பார்த்துள்ளனர்.
கயல்விழியைக் கண்டதும் “ரீச்சர் விளையாட்டு ஒன்று சொல்லித் தாங்க” என்று குதூகலித்தார்கள். “சரி. ஒரு கொப்பியை எடுங்கள். சொன்னாள். பிள்ளைகள் தயங்கினார்கள். “எழுதுவதற்கு இல்ல. விளையாடத்தான். கொப்பியை எடுத்துக் குழல்போல் சுற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்ய வேணும்”. செய்து காட்டினாள். “சரி அப்படியே கொப்பிகளை மேசையில் வையுங்கள்.” வைத்தார்கள். “இப்போது உங்கள் கைகள் இரண்டையும் விரித்து உங்கள் உள்ளங்கைகளில் ஓட்டை தெரிகறதா என்று பாருங்கள்”. சொன்னதும் பிள்ளைகள் செய்து பார்த்தார்கள். தெரிகிறதா? சிலர் “ஓம் ரிச்சர்.” என்றார்கள். பலர் “இல்லை” யென்று சொன்னார்கள். என்கும் தெரியவில்லை. எப்படி உங்களுக்குத் தரியும்? என்றாள்.
“இப்ப சொல்லுங்கள். தெரிகிறதா”? எல்லோரையும் பார்த்துக் கேட்டாள். “இல்லை. இல்லை’ என்ற பதில் வந்தது. அப்படியென்றால் உங்கள் உள்ளங்கையில் வெட்டித் துளை போடுவோமா? சிரிப்போடு கேட்டாள் “நோகும் ரீச்சர்.” சத்தமிட்டார்கள். “சரி நோகாமல் துளை போடுவம். சரியா”? “சரி ரீச்சர்”. பிள்ளைகள் ஒத்துக் கொண்டார்கள். என்னைப் பார்த்து நான் செய்வதுபோல் செய்ய வேண்டம். “தயாரா? கோப்பிய எடுங்கள். குழல்போல் சுற்றுங்கள். இடது கையால் அதனைப் பிடியுங்கள். இடது கண்ணில் அதனை வைத்துப் பிடியுங்கள்”. என்றாள்.
சொன்னதுபோல் செய்தார்கள். “இப்போது வலது கையை விரித்து இடது கையில் இருக்கும் குழாயோடு இணைத்துப் பிடியுங்கள். இரண்டு கண்களையும் திறந்தபடியே குழாயூடாகப் பாருங்கள். உங்கள் உள்ளங்கையில் ஓட்டை தெரிகிறதா? அதற்கூடாக என்னைப் பாருங்கள். நான் தெரிகிறேனா? பார்த்துச் சொல்லுங்கள்”;. என்றாள். “ஓம் ரீச்சர். ஓம் ரீச்சர்”. என்றார்கள். வகுப்புக் கலகலத்தது. அதிபர் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தார். “நமது பிள்ளைகளை நீங்கள் நல்லாப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதுதான் நமது மாணவர்களுக்குத் தேவை. அவர்களது மனங்களில் உள்ள உட்காயங்கள் ஆறுவதற்கு இப்படிப்பட்ட விசயங்கள் கட்டாயம் தேவை”. அதிபர் பாராட்டினார்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP