Friday, October 29, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
24
மரவட்டக்குளத்தில் தண்ணீர் போதாதிருந்தது. குடியிருப்புக் களில் மலசல கூடங்கள் வீட்டுத்திட்டத்தோடு கட்டப்பட்டன. கிணறுகள் தேவைப் பட்டன. படிப்படியதக அவை நிறைவேறி வந்தன. முன்னூறு இளைஞர்களில் பல பட்டதாரிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனம் தொழில் வசதிகளை அளித்தது. பொது வேலைகளில் படித்த இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டனர். வீட்டில் பெண்கள் சுயதொழில்களில் ஈடுபட்டனர். கோழி வளர்ப்பில் பலர் ஈடுபட்டனர். மரவள்ளிக் கிழங்கைச் சீவி பொரித்துச் சிறு பொதிகளில் அடைத்தார்கள். தள்ளுவண்டியில் சிற்றுண்டிகளை வைத்துத் தெருக்களில் விற்றார்கள். அவர்களுக்கு நிதியுதவியினை சுய உதவிக் குழுக்களே உதவின. ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்திடம் நிதி சேர்ந்து விட்டது. முன்னூறு இளைஞர்களும் அந்த நிதியின் உதவியினால் தங்கள் காணிகளைத் திருத்தி விட்டனர். நிறுவனச் சேமிப்பு சுழற்சிமுறைக் கடன்களைக் கொடுக்க உதவியாக இருந்தது.
கயல்விழி தனிமையில் இருந்தாள். அவளது மனம் இருண்டு கிடந்தது. ஒரு இனந்தெரியாத தனிமையை உணர்ந்தாள். .ந்த மனமே இப்படித்தான். சற்றுநேரம் துள்ளிக்குpக்கும்; பின் தடார் என்று கீழே விழுந்து தவிக்கும் இதைத்தான் குரங்கு மனம் என்றார்களோ? அவளது இருண்ட மனதைப்போல் வானமும் இருண்டு கிடந்தது. வானில் நட்சத்திரப் பூக்களைக் காணவில்லை. கருமேகக் கூட்டத்தின் பவனி. மழைக்கான முன்னாயத்தம். காற்றுச் சில்லிட்டது. இடையிடையே சிறியதான மின்னல் கீற்றின் விளையாட்டு. தூரத்துக் கடலில் முழக்கத்தின் ஒலி. ஊர்மனையில் வாழமுடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஏன் அந்த நிலை உருவாகியது? யார் இதற்கெல்லாம் காரணம்? அவள் மனம் வினாக்களின் விளைநிலமாகி, விடையை நோக்கிய பயணத்தில் இருந்தாள்.
திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அவளது சிந்தனை கலைந்தது. நல்ல வேளை வேலைகளை முடித்து ஒய்வாக இருக்கும்போது மழை பெய்தது. சுந்தரத்தார் ஏரிக்கரை வீட்டுக்கு வந்தார். தங்கமும் அங்குதான் இருந்தார். அருண் கயல்விழி சாந்தன் ராகினி சுலோச்சனா முக்கிய விடயங்களை ஆராய்ந்தனர். மங்கை அவர்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு தேநீரோடு வந்து சேர்ந்தாள். தேநீரை எல்லாருக்கும கொடுத்தாள். குடித்துக் கொண்டே கதைத்தார்கள். மங்கை எப்போது அருண் கயல்விழி கதையை எடுப்பார்கள் என்று எதிபார்தாள். அவர்கள் பல கதைகளைக் கதைத்தார்களே தவிர இதைப்பற்றிக் கதைக்கவில்லை.
“என்ன அம்மா இந்தக் கயல்விழி எப்ப பார்த்தாலும் ஊர், மக்கள் என்று திரியிறா. ஒருக்கா கண்டிக்கக் கூடாதா”? அருணின் அம்மாவுக்குச் சாடை காட்டினாள். “ஓம் பிள்ள. நான் அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். அண்ணரும் வரட்டும் என்றுதான் இருந்தன். இப்ப மங்கை நினைவு காட்டினது நல்லதாய் போச்சு”. அவர் தொடங்கினார். சுந்தரத்தாருக்குத் தூக்கிவாரிப் போட்டது.. திடீரென்று மகளை மாட்டிவிடப் பார்கிறாள் போலத் தெரியுது. யோசித்தார். அமைதியாய் இருந்தார். “அண்ணன் அருண் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே கயல்விழியை விரும்பி இருக்கிறான். அவவுக்கும் விரப்பம் இருக்குது. ஆனால் இரண்டு பேரும் அதைப்பற்றிப் பேசல்ல.” தொடங்கினார்.
“யார் முதல் சொல்வது என்ற தயக்கத்தில இருக்கிறாங்க. அருண் கலியாணம் செய்தால் கயல்விழியைத்தான் செய்வன் என்று பிடிவாதமாயிருக்கிறான். அவங்கட போக்கைப் பார்த்து முடிவுக்கு வரத்தான் வந்தனான். எனக்கு கயல்விழியில நல்ல விருப்பம். இந்த மங்கை ஒரேயடியாய் அம்மா கதையுங்க, கதையுங்க என்று முன்னும் பின்னும் அலையுது. உங்கட சம்மதத்த நான் அறிய வேணும். சம்மதம் என்றால் எப்பவும் அதை முடிச்சுப் போடலாம்.” முற்றுப்புள்ளி வைத்தார். தங்கத்துக்கு கொள்ளை மகிழ்சி. “தங்கச்சி அருணை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கன். உண்மையகச் சொன்னால் அருணை மருமகனாக அடைவதற்கு நாங்க குடுத்து வைச்சநாங்க”. உணர்ச்சி பொங்கச் சொன்னார்.
“எங்களுக்கு இரண்டு மகள். ஓன்று கயல்விழி. மற்றது இவள் மங்கை. இவளுக்கும் நல்ல இடத்தில பாத்திருக்கன். அவளுக்கும் தெரியும். அந்தப் பொடியன் நல்ல பிள்ள”. அவர் சொல்லும்போது மங்கை தனது நாக்கைக் கடித்துக் கொண்டாள். “இந்த அப்பா எப்படிக் கண்டு பிடித்தார். சரியான உளவாளி;போல் தெரிகிறது.” தன்னுடைய குட்டு அம்பலமாகி விட்டதே. அப்படியே குந்தியிருந்தாள். “கயல்விழி என்னிடம் ஒருநாள் சொன்னாள். அப்பா உங்களுக்கு இரண்டு பிள்ளயள். ஓன்று நான். மற்றது மங்கை. மங்கை சாந்தனை விரும்புறா, சாந்தனும் விரும்புறான். சாந்தனிடம் கயல்விழி கேட்டிருக்கிறாள். அவன் ஓமென்று சொல்லிப் போட்டான். இதுதான் இவங்க இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை” அவர் சொல்லிக் கொண்டே போனார். மங்கை அப்படியே தான் கீழே விழுவதை உணர்ந்தாள். அருணின் அம்மா குலுங்கிச் சிரித்தார்.
கலந்தரையாடல் முடிந்து அருண் வந்து கொண்டிருந்தான். அம்மா சந்தோசமாகச் சிரித்து மகிழ்வதை இன்றுதான் கண்டிருக்கிறான். அவனுக்குச சந்தோசம். “அம்மா இன்றைக்குத்தான் நீங்க சிரித்துச் சந்தோசமாய் இருப்பதைப் பார்க்கிறன். அவனும் சிரித்தான். “கயல்விழி எங்க”? மங்கை கேட்டாள். “இப்பதான் பொக்கற்றில இருந்து இறக்கி விட்டுட்டு வாறன்”. சிரிப்போடு சொன்னான். “இவன் இப்படித்தான். ஒரே தமாசாய் பேசுவான்.” அருணைப்பற்றி அம்மா சொன்னார். “இன்றைக்கு நல்ல மழை பெய்திருக்கு. குளத்தில் தண்ணீர் பிடித்திருக்கும். எல்லாம் சந்தோசமான செய்திதான்”. மங்கை சொல்லிக் கொண்டு கயல்விழியிடம் ஒடினாள்.
“மங்கை நாளைக்கு முதல்வேலை மரவட்டக் குளத்தைப் பாரக்கணும். எவ்வளவு தண்ணீர் பிடிச்சிருக்கும். எனக்குச் சந்தோசமாயிருக்கு”. கயல்விழி குதூகலித்தாள். “என்ர தோழிக்குச் சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம்தான். இன்றைக்குச் சரியான சந்தோசம்தான்”;. மங்கை சிரித்தபடியே சொன்னாள். அருண் குளித்தான். உடையை மாற்றி வந்தான். சுந்தரத்தார் சாப்பிட அழைத்தார். புறப்பட்டார்கள். சாப்பாட்டு மேசையை தோழிகள் சேர்ந்து தயார்ப் படுத்தினார்கள். “சாப்பிடுவமா பிள்ளயள்’. அப்பா குரல் கொடுத்தபடி வந்தார். “வாங்க எல்லாம் தயார். சாப்பிடுவம்.” கயல்விழி அழைத்தாள்.
“ஓன்றாக இருந்து சாப்பிடுவம்” மங்கையின் கட்டளை. “என்ன விஷேசம்”? அருணின் வினா. “நல்ல மழைபெய்திருக்கு”. கயலின் விடை. சுந்தரத்தார் சிரித்தார். “எல்லாம் நல்லபடி நடக்கும். அருணின் அம்மா ஜானகி சொன்னார். “நாங்க பல்கலைக் கழகத்தில் இப்படித்தான் சுற்றியிருந்து சாப்பிடுவம்.” மங்கை கூறினாள். “ஆனால் ஒன்று. ஆண்கள் வேறு பெண்கள் வேறாக இருந்து சாப்பிடுவம்’. அருண் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தான். “பல்கலைக் கழக வாழ்க்கை மறக்கமுடியாதது. அது ஒரு தனி உலகம். இளைஞர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி சுயமாக முடிவை எடுக்கும் காலம். எப்ப படிப்பை முடித்து வெளியில வாறமோ அன்று எங்களுக்கு நாங்களே விலங்கை மாட்டிக் கொண்டு வாறம். அதுவரை எதைப்பற்றியும் கவலைப் படுவது கிடையாது.” மங்கை விவாதித்தாள்.
“மங்கை இன்றைக்கு உனக்கு என்ன நடந்தது.”? கயல்விழி கேட்டாள். “ஒன்றுமில்லை. வழமையாகத்தான் இருக்கிறன். ஏன்? எதும் வித்தியாசமாய் இருக்கிறேனா”? கள்ளச்சிரிப்போடு கேட்டாள். “ஏதோ எனக்கெண்டா வித்தியாசமாத்தான் தெரியுது. ஒருக்கா மரவட்ட குளத்துக்கு அனுப்பியெடுத்தால் சரிவரலாம்.” கயல்விழி புன்னகையோட சொன்னாள். “பல்கலைக் கழக ராக்கிங்கை விட இது பொல்லாததா”? சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள். ராக்கிங் என்றதும் அருண் கயல்விழியைப் பார்த்தான். அவனுக்குப் பழைய நினைவு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவளுக்கு வெக்கமாயிருந்தது.
அவள் கதையை மாற்றினாள். “அப்பா அடுத்;த கிழமை விளையாட்டுப் போட்டியும், கலைவிழாவும் நடக்கப் போகுது. இந்த முறை நல்லாகச் செய்யவேண்டும் என்று அதிபர், ஆசிரியர்கள், பெற்றார் எல்லாரும் ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆயத்தங்கள் நடக்குது. மங்கை சொல்லலையோ?” கயல்விழி கேட்டாள். “மங்கைக்கு எங்க நேரம் இருக்கு. அவள் உனக்குப் பின்னாலதானே திரியுறா.” சுந்தரத்தார் சொன்னார். நாளைய திட்டங்களை கயல்விழி கூறினாள். சாப்பாடு முடிந்து ஓய்வெடுத்தார்கள்.
மரவட்டக்குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ள செய்தியைச் சுந்தரத்தார் சொன்னார். கயல்விழி துள்ளிக் குதித்தாள். இன்பபுரியில் பிரதேச செயலாளர் பத்து ஏக்கர் நிலத்தை ‘சேர்ந்து வாழ’; நிறுவனத்துக்கு வழங்கியிருந்தார். நிலத்தைப் பண்படுத்தி கூட்டுப்பண்ணையாக உருவாக்கியிருந்தார்கள். சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டார்கள். கயல்விழி அடிக்கடி பண்ணையைப் பாரக்கப் போவாள். மாட்டுத் தொழுவம் இருந்தது. ஆட்டுப்பட்டி ஒருபுறம் இருந்தது. கோழிப்பண்ணை இன்னொரு புறம் இருந்தது. மரக்கறித் தோட்டம் செழித்திருந்தது. வேளாண்மை விளைந்து கிடந்தது. பண்ணையைப் பட்டதாரிகள் பராமரித்தார்கள்.
கயல்விழி பண்ணையில் உலா வந்தாள். பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அவளைக் கண்டதும் அவை மகிழ்ந்து சரசரத்தன. அவற்றை அளைந்து மகிழ்ந்தாள்; படித்த இளைஞர்களின் முயற்சியாகப் பண்ணை காட்சி தந்தது. இன்பபுரி விவசாயக் குடியிருப்பாக மாறிவிட்டது. பால் சேகரிக்கும் நிலையத்தில் பலர் வேலை செய்தார்கள். அரிசி ஆலை நெல்குற்றுவதிலிருந்து எல்லாவற்றையும் அரைக்கும் ஆலையாகவும் இயங்கியது. பலர் தொழில் வாய்ப்பைப் பெற்னர். ஓவ்வொருவரும் தத்தம் இயலுமைக்கேற்ற தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மது ஒழிப்பு வலுப்பெற்றது. வறுமை ஒழிந்திருந்தது. சேமிப்பு அதிகரித்திருந்தது.
கட்டைபறிச்சான் கிராமம் குதூகலிப்பில் ஆழ்ந்திருந்தது. பாடசாலை இரண்டும் ஒன்றாக விளையாட்டு விழாவை நடத்தின. மாவட்டத்தில் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். மாலை ஊர் விழாக் கோலம் பூண்டிருந்தது. பாடசாலை விளையாட்டுத் திடல் பந்தலால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பாலர் முதல் பாட்டி பாட்டாவரை அனைவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். கிராமியக் கலைகள் அரங்கங்களை நிறைத்தன. இசையரங்கு மனங்களைக் கொள்ளை கொண்டன. கவிதையரங்கு கட்டைபறிச்சான் கனகசிங்கத்தின் தலைமையில் நடந்தது. இளைஞர்கள் கவிமழை பொழிந்தனர். யுவதிகளின் கும்மி. கோலாட்டம், கண்கவர் நடனங்கள் மெய்மறக்க வைத்தன.
நிறைவு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிரதேச செயலாளர் தலைமை தாங்கினார். அவர் தனது நிறைவுரையை நிகழ்த்தினார். “இங்கு இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கும் பெரியவர்களைப் பாரக்கிறேன். சகல திணைக்களத் தலைவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். உங்களது உழைப்பு அவர்களை இங்கே அழைத்திருக்கிறது. கல்வியில் நீங்கள் காட்டும் அக்கறை தெளிவானது. சுயஉதவிக்குழுக்களின் சேவை மகத்தானது. ஒரு நாட்டின் பொருளாதாரத் தன்னிறைவை சுய உதவிக் குழுக்களால் முழுமை பெற வைக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள். படித்தவர்கள் எல்லாரும் அரசாங்க உத்தியோக் பார்க்கவேணும் என்ற நிலை உங்களால் மாறியிருக்கிறது”. மக்கள் ஆரவாரித்தனர்.
“ஒரு பரட்சிகர மாற்றத்தை இந்தக் கிராமம் செய்துள்ளது. இங்கு படித்த பட்டதாரிகளின் உழைப்பு மகத்தான மாற்றத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. கல்வி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அந்தச் சிந்தனை கட்டைபறிச்சான் கிராமத்தில் செயல்வடிவம் பெற்றுள்ளது. ஒரு கயல்விழி தனது பலத்தையும் பலவீனத்தையும் சீர்தூக்கி, பலவீனத்தையும் பயனுள்ளதாக்கி தன்னைப் போன்றவர்களைத் தன்னோடு இணைத்து மகத்தான செயற்திட்டத்தை வெற்றி பெறவைத்துள்ளார். அவரது கனவு நிறைவேறியுள்ளது. இன்றையப் பிரச்சினைகளில் பலியாக்கப் படுபவர்கள் இளைஞர்கள்தான்.”
“அவர்களையே தங்களது அழிவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இன்றைய நாசகாரச் செயல்களைப் புரிவதற்கு இளைஞர்களே துணைபோகிறார்கள். அவர்கள் விரும்பிப் போவதில்லை. அவர்களை வழிநடத்தக் கூடியவர்கள் இல்லை. அதனால் அவர்களைத் தீயசக்திகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் வெறும் தண்டச்சோறு என்பதை கயல்விழியும், அவரது சகபாடிகளும் உடைத்தெறிந்து உள்ளார்கள். அவ்ரகளால் சாதிக்க முடியாதவை எவையும் இல்லை என்பனைக் காட்டியுள்ளாரகள்;. ஒவ்வொரு அரசாங்க அலுவலரும் தான் மக்களில் ஒருவர் என்று நினைக்க வேண்டும்”. ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார்.
“அந்த மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும். இந்த வைபவத்தில் ஓரு அரசியல்வாதிகளையும் காணவில்லை. உங்களுக்காக உங்களோடு தோள்கொடுத்து உழைத்தவர் எங்கள் கிராம அபிவிருத்தி அலுவலர் திரு.அருண். அவரது அயரா முயற்சியின் பயனால் பலநன்மைகள் கிடைத்துள்ளன. அவரையும் இயக்கி, உங்களையும் இயக்கி, இந்த கிராமத்தை புரட்சிகர மாற்றத்துக்குக் கொண்டுவந்த சக்தியாக செல்வி. கயல்விழியைப் பாரக்கிறேன். அத்துடன் சாந்தன், மங்கை. சாரதா, ராகினி, சுலோச்சனா அவர்களது குழுவினர் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பிரதேச செயலாளர் வாழ்த்தினார்.
இந்தக் கிராமத்தின் அபிவிருத்திக்குப் பல நிறுவனங்கள் பலவகைகளில் உதவிகளை வழங்கியுள்ளன. ‘சேர்ந்துவாழ்’ நிறுவனம் இன்று பெரியதொரு நிறுவனமாகப் பல வளங்களைக் கொண்டுள்ளது. அதற்கென வாகன வசதிகள் உண்டு. கிராம மருத்துவ மனைக்கு அம்புலன்ஸ் வண்டியை அன்பளிப்புச் செய்துள்ளதைப் பாராட்டுகிறேன். செல்வி. கயல்விழி, சூழவுள்ள கிராமங்களுக்கும் தனது நிறுவன சேவையை விரிவுபடுத்தி வருகிறார். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” தனது நிறைவுரையை முடித்தார்.
பெருவிழாவாக நடந்து முடிந்தது. ஊர்மக்கள் சந்தோசப் பட்டார்கள். பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு விருந்தளித்து வழியனுப்பி வைத்தார்கள். வீடுபோய் உடைமாற்றி ஆறுதலாக ஏரிக்கரை வீட்டின் முன் இருந்தார்கள். சுந்தரத்தார் ஜானகியிடம் அதனைக் கொடுத்தார். “மங்கை அந்த வெளிச்சத்தைக் கொண்டுவா பிள்ள. குரல் கொடுத்தார். மங்கை மின்குமிழைப் போட்டுப் பற்ற வைத்தாள். சுந்தரத்தார் கொடுத்த பேப்பரைப் படித்தார். “அண்ணன் எப்பகுடுக்கப் போறிங்க”? கேட்டார். “குடுத்திட்;;டன். பிழைதிருத்தம் பாரக்க எடுத்து வந்தனான். அதுதான் தந்தனான். நல்லா இருக்கா. பார்த்துச் சொல்லுங்க.” சுந்தரத்தார் கேட்டார். “நல்லா இருக்கு. இரண்டையும் ஒன்றாகச் செய்தால் நல்லது’ ஜானகி சொன்னார். “அப்படித்தான் போட்டிருக்கிறன்;”. ஒரு சிரிப்போடு சொன்னார். “மங்கை என்ன நடக்குது. ஓன்றும் விளங்கல்ல. பார்த்துச் சொல்லு”? கயல்விழி மங்கையை உசார்படுத்தினாள். “அவர்கள் இருவரும் என்ன கதைக்கிறார்கள்”? மங்கைக்கு ஒன்றும் விளங்க வில்லை. தங்கம் பேசாதிருந்தார்.
“என்ன மங்கை! வேவு பார்க்கிறமாதிரித் தெரியுது? இது பெரியவங்க பார்க்கிற விசயங்கள். நீங்க உங்கட பாட்டப் பாருங்க.” அலுத்துக் கொண்டது போல் ஜனகி பாசாங்கு செய்தார். “என்னம்மா கோவத்தோட சொல்லுற மாதரியிருக்கு. என்ன பிழை செய்தனாங்க”? மங்கை அழுவதுபோல் சொன்னாள். செய்வதெல்லாம் செய்துபோட்டு இப்ப கேட்கிறிங்க. சரி இந்தாங்க. இதக் கொண்டு போய்; படிச்சிப் போட்டுச் சொல்லுங்க. இரண்டு துண்டுகளைக் கொடுத்தார். மங்கை அதிர்ந்து விட்டாள். கயல்விழிக்கும் பதட்டமாக இருந்தது. “மங்கை இஞ்ச கொண்டுவா. பார்ப்பம்”. கயல் கூறிக்கொண்டு எழுந்தாள்.
இருவரும் வெளிச்சத்தில் அத்துண்டுகளை விரித்தார்கள். உள்ளமெல்லாம் படபடத்தது. படித்தார்கள். அவர்கள் இந்த உலகத்தில் இல்லை. ஆகாயத்தில் பறந்து திரிந்தார்கள். இருவரும்; திகைத்தார்கள். அம்மா அப்பா கால்களில் விழுந்தார்கள். அவர்கள் பிள்ளைகளைத் தூக்கி ஆசிரிவதித்தார்கள். அப்படியே ஜானகியின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்கள். அருண் அக்காட்சியைப் பாரத்து வேர்த்தான். செய்தி ஊரெங்கும் பரவியது.“அருமையான முடிவு”. சனங்கள் ஆரவாரித்தார்கள். மங்கை சாந்தனோடு சல்லாபித்திருந்தாள். அருணின் மார்பில் கயல்விழி சாய்ந்திருந்தாள். மங்கை மெதுவாக கயல்விழியின் அருகில் வந்தாள். அவளது கைகளைப் பிடித்தாள். “தோழி நான் அன்றும் சொன்னன். இன்றும் சொல்லுறன். உன்னை என் தோழியாய் அடைந்ததற்கு உண்மையில் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டு;ம். என்ர கடனையெல்லாம் எனக்குத் தெரியாமல் அடைச்சிப் போட்டாய். சாந்தனையும். என்னையும் ஒன்று சேர்த்து வைத்தாய். இபபோதும் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறாய”;. சொல்லிக்கொண்டு கண்ணீர் சிந்தினாhள். “நீ மட்டும் என்னவாம். எனக்காக எவ்வளவு போராடி யிருக்கிறாய். கஸ்டங்கள் வந்தபோது நீ என்னுடன் பக்கபலமாக நின்றாய். நானும் உன்னைப் போலதான். உன்னைத் தோழியாக அடைஞ்சது நான் செய்த தவப்பயன்தான். கலங்கியவாறு சொன்னாள்.
“வாழ்க்கை ஒரு போராட்டம். போராடியவர் வெற்றி பெறுவார். ஒரு நல்ல இலட்சியத்தை முன்வைத்து உழைக்க வேண்டும். ‘நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று அயராது உழைத்தால் அது கைப்படும்”. அருண் சிரித்தபடி கூறிக்கொண்டான். “ பாரதி என்ன பாடினான்? மங்கை கேட்டாள். “நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்” என்று பாடினான். கயல்விழி பதிலளித்தாள். இன்பபுரி மக்களுக்கு இன்பத்தை வாரி வழங்குகிறது.
நிறைவு.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP