Thursday, October 21, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
20
சாந்தன் வந்தான். “வாங்க சாந்தன்”. கூறிக் கொண்டு மங்கை கதிரையை எடுத்துக் கொடுத்தாள். சாந்தன் இருந்ததும் “நாளைக்கு எப்படி நமது நிகழ்ச்சிகள் இருக்கும்? சொல்லுங்க”. அருண் தொடங்கினான். ‘அக்காதான் சொல்லவேணும். அவ எப்பவும் திட்டம் போட்டுத்தான் செயற்படுவா. போட்ட திட்டங்கள் இதுவரை தோல்வியைச் சந்திக்க வில்லை”. சாந்தன் தப்பிக் கொண்டான். சாந்தனுக்கு இப்போது இருபத்து மூன்று வயது. கயல்விழியின் வயதை ஒத்தவன். ஆனாலும் அவள்மேல் கொண்ட அன்பினால் அக்கா என்றே அழைப்பான். வௌ;வேறு பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். “மங்கைதான் எங்கட நிறைவேற்று முகாமையாளர். அவர் சொல்வதுதான் சரி”. கயல்விழி மங்கைமேல் தட்டிவிட்டாள். “அதெப்படி தலையிருக்க வாலாடுவது. கயல்விழிதான் சொல்ல வேணும்.” அவள் தப்பிக்கொண்டாள்.
“என்ன இது? ஆளையாள் தட்டிக் கழிக்கிறீங்க. சரி நான் சொல்லுறன்.” அவனே விளக்கினான். தான் போட்ட திட்டத்தை அப்படியே அவன் சொல்கிறானே. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் நிகழ்ச்சிகளை ஒன்று விடாது சொல்லி முடித்தான். “இதுதான் உங்களின் தலைவியின் திட்டம். என்ன அப்படித்தானே மங்கை” என்றான். “அது சரி எனக்குத் தெரிந்த அத்தனையும் உங்களுக்குத் தெரியுதே. ஆச்சரியமாய் இருக்கிறது”. மங்கை கூறினாள். “இதைத்தானே அக்கா என்னிடமும் கூறினார். எப்படி உங்களுக்குத் தெரியும்”? சாந்தன் எடுத்து வைத்தான்.
“அதுதான். அப்படி வாங்க. எல்லாருக்கும் தெளிவாகச் சொல்லி, எல்லோரது ஒத்துழைப்புக்களையும் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தலைமைத்துவம். ஒரு திட்டத்தை முன்வைக்கும் போது ‘நடைமுறைப்படுத்துவது எப்படி’ என்பதை விளக்க வேண்டும். அது ஒரு படிமுறையாக இருக்கும். கயல்விழி எழுதும் ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்திலும் நடைமுறை மிகத் தெளிவாக இருக்கும். எந்த நிறுவனமும் அதைப்படித்துத்தான் தீர்மானத்தை எடுக்கும். அதில இன்னொரு விசயமும் இருக்கு”. சொல்லும்போது சாந்தன் “என்னது. சொல்லுங்க”. குறுக்கே கேட்டான்.
“ஒரு திட்டத்தினால் ஏற்படும் குறுங்காலப் பயனும், நெடுங்காலப்பயனும். அத்துடன் அந்தத் திட்டத்தை தக்க வைப்பதற்கான வழிமுறைகளும் சரியாக இருக்கவேணும். கயல்விழியின் திட்டங்களைப் படித்தால் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் அந்தத்திட்டத்தினால் பெற்ற பயன் நம் கண்முன் வந்து நிற்கும். இதை நான் சொல்லவில்லை. பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏற்றுக் கொண்ட உண்மை. அதனால்தான் உங்களுக்கு உதவ எல்லாரும் ஓடி வாறாங்க”. பெருமையாக விளக்கினான். கயல்விழி குனிந்த தலை நிமிராது இருந்தாள்.
“சரி…. மிகுதியை நாளைக்குப் பார்ப்போம். இப்போது சாப்பிடப் போவம் எழும்புங்க. வாங்க அம்மா தயாராய் காத்திருப்பா.” கயல்விழி கூறிக் கொண்டு எழுந்தாள். “அக்கா நான் காலையில வாறன்.” சாந்தன் புறப்பட்டான். அவனையும சாப்பிட அழைத்தார்கள். அவன் சாப்பிட்டாகிவிட்டது என்றான். அவனை வழியனுப்பி விட்டு வந்தாள். “ நீங்க வாங்க” அழைத்து நடந்தாள். அருண் பின்னால் சென்றான்.
“இதற்குள் கைகளைக் கழுவுங்கள்”. தண்ணீர்க் கிண்ணத்தை நீட்டினாள். “அம்மா! அப்பா எங்கே? சாப்பிட்டாரா”? கேட்டாள். “முதல்ல நீங்க சாப்பிடுங்க. பிறகு நாங்க சாப்பிடுறம்”. அம்மா சாப்பாட்டு மேசையருகில் நின்றபடி “தம்பி வாங்க சாப்பிடுங்க.” அழைத்தார். மேசையில் சாப்பாடு இருந்தது. மூன்று பேருக்கும் தானே பரிமாறினாள். மங்கை உதவினாள். கதைத்தவாறே உணவினை உண்டார்கள்.
சுந்தரத்தார் வந்தார். “அப்பா இவர்தான் அருண்.” என்றார். தம்பியை எனக்கு நல்லாத் தெரியும். சாப்பிடுங்க.” கூறிக் கொண்டு கிணற்றடிக்குச் சென்றார். தயிர் இருக்கு. உங்களுக்குத் தயிர் விருப்பம் என்று தெரியும். ஒரு ரம்ளரில் அளவாகச் சீனிபோட்டுத் தயாரித்திருந்தாள். “வாங்க வெளி முற்றத்தில் இருந்து தயிர் சாப்பிடுவம். “மங்கை” அழைத்தாள். “நான் இங்க நிக்கிறன். வாங்க” முற்றத்தில் இருந்து மங்கை சத்தமிட்டாள். அவள் கதிரைகளோடு முற்றத்தில் நின்றாள். கயல்விழி “வாங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டு வெளியில் நடந்தாள். அவன் வந்ததும் தயிரைக் கொடுத்தாள். அவன் விருப்பத்தோடு பெற்றுக் கொண்டான். மூவரும் இருந்து ருசித்துச் சாப்பிட்டார்கள். “நல்ல ருசி;. இப்படியான சூழலில் இருந்து கதைச்சிக்கொண்டு சாப்பிடுவது உண்மையில் சந்தோசம்தான்”. சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
“தங்கம் சாப்பிடுவமா? சுந்தரத்தார் கூறிக்கொண்டே வந்தார். “நாங்க அங்க போவமா? கொஞ்ச நேரம் கதைச்சிட்டு ஒய்வெடுப்பம். வாங்க போவம்”. கயல்விழி அழைத்தாள். “மங்கை வா”. சொல்லிக் கொண்டு முன்னால் நடந்தாள். அந்த வீட்டினுள் நுழைந்து கட்டிலை ஒழுங்கு செய்தாள். படுக்கையை உதறி விரித்துத் தலையணையை சீராக்கி வைத்தாள். எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதைப் பார்த்தாள். வெளியே வந்து இருந்தாள். நிலவு முகங்களைத் தெளிவாகக் காட்டியது. “நிலவு அழகா அல்லது உன் முகம் அழகா” மனதுக்குள் கேட்டுக் கொண்டான். கயல்விழியின் முகத்தைப் பார்த்தான். அவள் நிலத்தைப் பார்த்தாள். மங்கை இரு உள்ளங்களின் தவிப்பைக் கண்டு கொண்டாள்.
“அப்பாவும் உங்களோடுதான் இங்கதான் இருப்பார். அவர் வந்ததும் நாங்க போவம். அதுவரை கதைப்பம்.” கயல்விழி சொன்னாள். “எனக்குப் பயமில்லை. ஏன் எனக்குக் காவல். நான் ஒடமாட்டன்.”? சொல்லிச் சிரித்தான். “அதுக்கில்லை. ஒரு துணை வேணும்தானே? அதுக்குத்தான்”. என்றாள். “கயல் இருங்க. இந்தா வாறன்” சொல்லிவிட்டு மங்கை வெளியில் சென்றாள். கயல் பெரிய சங்கடத்தில் மாட்டிய உணர்வினைப் பெற்றுவிட்டாள். அருணுக்கு என்ன கதைப்பதென்றே தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள்.
கயல்விழி துணிந்தாள். “அருண்; பல்கலைக் கழகம் முடிந்ததும் என்ன செய்தீங்க”? கேட்டாள். “வேலைதேடியலைந்து கடைசியில் மனதுக்குப் பிடிச்சமாதிரி இல்லை என்டாலும் ஒரளவு திருப்தியோடு இந்த வேலை கிடைச்சிது. அம்மாவோடு இருக்கிறன். அம்மாவுக்கு நானும், எனக்கு அம்மாவுமாக இருக்கிறம்.” சொன்னான். நீங்க அம்மாவுக்குச் செல்லப்பிள்ளயென்று தெரியும். அம்மா எப்படி இருக்கிறாங்க? கேட்டாள். “ நல்ல சுகமாயிருக்கிறா. அம்மா தனியத்தான் இருக்கிறா. அதுதான் எங்கயிருந்தாலும் இரவில் வெளியில தங்கிறதில்ல. உங்கட வேலயென்ட படியால்தான் வந்து நிக்கிறன். கட்டபறிச்சானில் உங்கட வீட்டிலதான் தங்கவன் என்று சொன்ன பிறகுதான் சம்மதித்தவ.” ஒரு அர்த்ததோடு சொன்னான். “அம்மாக்கு என்னை எப்படித் தெரியும்? கேட்டாள். நான் உங்களைப் பற்றி அம்மாட்ட நிறையச் சொல்லியிருக்கிறன்” பெருமையாகக் கூறினான்.
“அம்மாவை ஒரு நாளைக்கு இங்க கூட்டிவாங்களன். ஒரு மாற்றமாக இருக்கும். இந்த இடம் அவருக்குப் புதுமையாக இருக்கும்”. அவள் சொன்னாள். “அது நல்லதுதான். யோசிப்பம். கயல்விழி ஒரு பொருள் நமது பக்கத்தில் நெருங்கி இருந்தாலும் அது நமக்குக் கைப்பட வேணும். அப்பொழுதுதான் மனதில் இன்பமும் வாழ்க்கையின் அர்த்தமும் புரியும். வாழ்ந்ததற்கான நிறைவும் இருக்கும். இல்லையா? வினாவாக விளக்கினான். “அது உண்மைதான். ஆனால் எது உண்மை. எது பொய் என்று சரியாக இனங்கண்ணடபின்தான் தீர்மானிக்க முடியும். இல்லையா”? வினாவாக முடித்தாள்.
“நாம் விரும்பிய பொருள் கைப்படுமா? படாதா என்பதை அறிவது சுலபமாக எனக்குப் படவில்லை.” வானத்தைப் பார்த்தபடி கூறினான். அவளுக்கு இவன் என்ன சொல்கிறான். இவன் யாராலும் எமாற்றப்பட்டானா? என்பது புரியவில்லை. அவள் தவித்தாள். என்றாலும் பதிலுக்கு அவளும் ஏதும் சொல்ல வேண்டும். “நீங்க சொல்வது சரிதான். பாரதிகூட ‘நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று பாடியிருக்கிறார். அப்போதுதான் நீங்க சொன்னதுபோல் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் வாழ்ந்ததுக்கான திருப்தியிருக்கும்”. மனதில் பட்டதைச் சொன்னாள். “நான் என்ன நினைக்கிறேனோ அதை நீங்க சரியாகச் சொல்றீங்க. உங்களுக்கு ‘மைண்ட் றீடிங்’ மனதை அறிந்து சொல்லும் கலை தெரியுமா”? வேடிக்கையாகக் கேட்டான். அவள் கலகலத்தாள்.
“நீ சிரிக்கும் போதும் அழகுதான்” சொல்ல வாயெடுத்தான். சுந்தரத்தார் வரும் நிழல் அசைந்தது. “அப்பா வாறார். நாளைக்குச் சந்திப்பம். நல்லாத் தூங்குங்க. நாளைக்கு உங்களுக்குத்தான் அதிக வேலையிருக்கு. நான் வரட்டா”, சொன்னாள். “வாங்க” இரண்டு கருத்துப்படச் சொன்னான். அவள் போனாள். “என்ன வரட்டா என்று போறீங்க.”? சொல்லிச் சிரித்தான். அவளும் கூடவே சிரித்து அவன் உள்ளத்தைத் திருடிக் கொண்டு தனது உள்ளத்தை அவனிடம் விட்டுவிட்டுச் சென்றாள்.
“குட் மோர்னிங். இந்தாங்க தேநீர்”. கதவில் தட்டி ஒரமாகி நின்றாள். அவன் கதவைத் திறந்து வந்தான். அவனது கையில் தேநீரைக் கொடுத்துக் “குடியுங்க” என்றாள். குளித்து ஆயத்தமாகுங்க.. சாப்பாட்டுக்கு நான் வந்து கூப்பிடுறன்”. கொடுத்து விட்டுச் சென்றாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையிலேயே தேவதையாகக் காட்சி தந்தாள். எனக்கு ‘நெருங்கின பொருள்’ நீதான். “ஒரு சமூகசேவகி எனது மனைவியாகக் கிடைத்தால் எனது பிறவியின் பயனை அடைந்தவனாவேன்.” மனதில் எண்ணிக்கொண்டான்.
கடமைகள் கண்முன்னால் நின்று அவனை விரட்டின. ஆயத்தமானான். கயல்விழி சாப்பாட்டு மேசையில் நின்றாள். மங்கை “மயங்குகிறாள் ஒரு மாது” இராகமிழுத்தாள். “மங்கை என்ன குதூகலிப்பு. என்ன விஷேசம்.” கயல்விழி ஒழுங்கு படுத்தியவாறே கேட்டாள். “இல்ல பாட்டு வந்தது. பாடிப்பார்த்தேன்”. சிரித்தபடியே சொன்னாள். “இன்றைக்கு நமது விசயமெல்லாம் நல்லபடி நிறைவேறிய பின் பாடு. உனக்கு முன்னால் இருந்து ரசித்துக் கேக்கிறன். அதுவரை கடவுள மன்றாடு”. கயல்விழி கடுகடுத்தாள்.
“எல்லாம் நல்லபடி நடக்கும். என்ர தோழியின் கனவுகள் பொய்க்காது. அதுக்காகத்தான் அவளுக்காகத் தினமும் மன்றாடி வாறன்”. மங்கையின் பதிலுக்குச் “சா…கேக்கிறதுக்கு புளிப்பாக இருக்கு. வாவா விசயத்தக் கவனிப்பம்”. கயல்விழி கூறிக்கொண்டு போனாள். “இவள் என்ன பிறவியோ தெரியாது. இவளை எப்படிப் புரியப் போறனோ தெரியாது”. அருணை அழைத்து வந்தாள் சாப்பாடு முடிந்ததும் பம்பரமானார்கள். பாடசாலை சென்று அதிபரோடு கதைத்தார்கள். அப்படியே மரவட்டகுளப் பகுதிக்குச் சென்றார்கள். சொன்னபடி இளைஞர் யுவதிகள் மரவட்ட குளப்பகுதியில் கூடியிருந்தார்கள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP