Saturday, October 16, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
18
கட்டைபறிச்சான் புதுமெருகு பெற்றுவிடத் துடித்துக் கொண்டிருந்தது. மூதூர் வங்கியிலிருந்து முகாமையாளர் வந்தார். சுய உதவிக்குழுக்களைச் சந்தித்தார். கயல்விழி ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தின் பெயரில் பொதுவாகக் கணக்கைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தாள். அப்படிச் செய்வது மக்களுக்கு நல்லது. அவர்கள் மூதூருக்குப் போகவேண்டியதில்லை. பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்தி அலுவலர். அதிபர் ஆகியோரின் வழிகாட்டலில் வங்கியில் சேமிப்புக்கணக்குத் தொடங்கப்பட்டது. “முதற்தடவையில் அறுபதாயிரம் வைப்பில் இடப்பட்டது. இது பெருஞ்சாதனை”. முகாமையாளர் புகழாரம் சூட்டினார். “ஒவ்வொரு குழுவும் தமது குழு உறுப்பினர்களுக்குக் கடன் கொடுக்கலாம். யாருக்கு அவசியமாகக் கடன் தேவைப் படுகிறதோ அவர் குழுவின் சிபார்சில் பெறலாம். விளக்கினார்கள்.
அருண் போன் பண்ணவே இல்லை. அவன் சொன்னதுபோல் வரவுமில்லை. பகல் முழுவதும் பாடசாலையில் வேலை. மிகுதி நேரமெல்லாம் ஊரின் முன்னேற்ற வேலை. ஓய்வில்லாது உழைத்தார்கள். பாடசாலையில் இருந்து களைத்து இருவரும் வந்தார்கள். சாந்தன் பின்னால் வந்தான். “அக்கா நாளைக்குப் பிரதேசச் செயலாளர் கட்டாயம் வரச்சொன்னவர். வரும்போது இளைஞர்களது பெயர்ப்பட்டியலைக் கொண்டு வரச்சொன்னவர்”;. என்றான். “எத்தனை மணிக்;கு. கேட்டிங்களா? வினவினாள். “ஓம் அக்கா. காலை பத்து மணிக்கு வரச் சொன்னவர்”.? “சரி நீங்க போங்க. நாளைக்குப் போவம்”. கூறிவிட்டுப் படலையைத் திறந்து உள்ளே சென்றார்கள். “மங்கை! நாங்க இரண்டு பேரும் போகவேணும். அத்துடன் சாரதா ராகினி, சுலோச்சனா, சாந்தனும் சேர்ந்து போகவேணும். அதிபரிடம் சொல்ல வேணும். முதலில் ‘வயிற்றுக்குச் சோறிட வேணும்’. பாடலாக இழுத்தாள்.
உணவின்பின் அதிபரிடம் சென்றார்கள். நாளையத் திட்டத்தை முன்கூட்டியே சொன்னார்கள். அதிபர் ஒரு புன்னகையை உதிரவிட்டு ‘சென்று வாருங்கள்” என்றார். மாலை வகுப்புக்கள் நடந்தன. வகுப்புக்கள் முடிந்ததும் சிலர் தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்தார்கள். சிலர் விளையாடினார்கள். இரண்டு விளையாட்டுத் திடலிலும் ‘வொலிபோல்’ நடந்தது. பெண்பிள்ளைகள் வலைப்பந்து விளையாடினார்கள். ‘சேர்ந்து வாழ’; நிறுவனத்தின் குழுவினர் அதன்பின்னர்தான் கூடினார்கள். அன்றைய வரவு செலவு பார்க்கப்பட்டது. அடுத்தநாள் பிரதேச செயலாளர் அலுவலகம் செல்வதற்குரிய ஆயத்தங்களைச் செய்தார்கள். முடிந்ததும் வீடுகளுக்குச் சென்றார்கள்.
சைக்கிள்கள் மூதூரை நோக்கிப் பறந்தன. கட்டைபறிச்சான் பாலத்தைக் கடந்து சென்றன. வீதியின் இருமருங்கிலும் நாணற்புல் வளர்ந்தோங்கி பூங்கொத்துக்களுடன் காற்றில் ஆடின. அற்புதமான காட்சியாக இருந்தது. பிரதேசச் செயலாளர் அலுவலகத்தில் சொன்ன நேரத்துக்கு நின்றார்கள். தங்கள் வரவை அறிவித்துக் காத்து நின்றார்கள். அழைப்பு மணி கேட்டதும் உள்ளே சென்றார்கள். பல அதிகாரிகள் இருந்தார்கள். விவசாயப் பணிப்பாளரும் புன்னைகையோடு இருந்தார். “ எல்லாருக்கும் வணக்கம் சேர்”. மிக மரியாதையாகச் சொல்லி நின்றார்கள். “வணக்கம் வாங்க. இருங்க. இவர்கள் அனைவரும் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். தொடங்குவோமா”? பிரதேசச் செயலாளர் தெரிவித்தார். “சரி சேர்.” கயல்விழி சொன்னாள். மிஸ்டர் டேவிட்! இவங்கதான் நான் சொன்ன ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் கயல்விழி, இவர் மங்கை, சாரதா, சுலோச்சனா, ராகினி, சாந்தன்” அறிமுகம் செய்தார். இவர்கள் மீள்குடியேற்றக் கிராமத்தில் இருந்து சேவை செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவைசெய்தாலும் இவர்களது இலக்குக்குழு இவர்களைப் போலுள்ள இளைஞர் யுவதிகள்தான். ஊர் மக்கள் அனைவரையும் அணிதிரட்டி வலுப்படுத்தி தங்களை உணரச் செய்துள்ளார்கள். சுமார் முன்னூறு இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வளிக்க நினைத்துள்ளார்கள். விவசாயம், சிறுகைத்தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி பொருளாதார மறுமலர்ச்சியைக் காணத்துடிக்கிறார்கள். நாங்கள் அரச காணிகளை நாளை கொடுக்கிறோம். ஒருவருக்கு ஒரு ஏக்கர் குடியிருப்பு நலமும், இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் கொடுக்கிறோம்.” அவர் விபரித்துக் கொண்டு சென்றார்.
அவசரமாக அருண் உள்நுழைந்தான். “சேர் எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன். நிலஅளவையாளர்கள் நாளைக் காலை கட்டைபறிச்சானில் நிற்பார்கள். ஏற்கனவே அளந்து கூனியடித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லைகளைக் காட்டுவார்கள். பட்டியலில் உள்ளவாறு கொடுக்கலாம்”;. விபரமாகச் சொன்னான். பிரதேசச் செயலாளர் டேவிட்டுக்கு அவனை அறிமுகம் செய்தார். “இவர் மிஸ்டர்.அருண். கிராம அபிவிருத்தி அலுவலர். கெட்டிக்காரர். கிராம முன்னேற்றத்தில் இவரது பங்கு அதிகம்”. கூறிவிட்டுத் தொடர்ந்தார். அவனை அமரச்சொன்னார்.
“நமது கடமை இளைஞர்களை வழிநடத்துவதுதான். அவர்களின் ஆற்றலை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். உங்கள் முன்னே இருக்கிறவர்கள். எல்லோரும் பட்டதாரிகள். வேலைவேண்டும் என்று மறியற்போராட்டங்கள் நடத்துபவர்கள் மத்தியில் இவர்கள் வித்தியாசமானவர்கள். மனித வளத்தை முயற்சியில் மூலதனமிட்டு உழைப்பவர்கள். இவர்களுக்கு இப்போது நிதியுதவி தேவை. சிறிய முதல் கொடுத்தால் பெரிய பயனை அடையலாம். அதற்கு உங்கள் உதவியைக் கோருகிறார்கள். நீங்கள் அவர்களோடு சென்று இடங்களைப் பாருங்க. பிறகு முடிவெடுங்க”. சொன்னார்.
டேவிட் கடுமையாக யோசித்தார். “நான் இவங்கட முன்மொழிவைப் பார்த்துத்தான் வந்தனான். நல்லதொரு திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முறையை நல்லாக விபரித்திருந்தாங்க. நான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறன். “ஒரு ஆளுக்கு பத்தாயிரம் வீதம் முதற்கட்டமாகக் கொடுக்கலாம். பின்னர் ஐயாயிரம் கொடுப்போம். அந்த நிதியை இவர்களின் நிறுவனத்தில் வைப்பிலிடுவோம். எங்களுக்கு மாதாமாதம் முன்னேற்ற அறிக்கை தரவேண்டும். கணக்கறிக்கை வேறாகத் தரவேண்டும். எங்கள் நேரடி மேற்பார்வை இருக்கும். இதை மட்டுந்தான் இப்போது எங்களால் செய்ய முடியும். முதல்கட்ட நிதியை நான் கொழும்புக்குப் போனதும் இவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவேன். அந்த இடங்களைப் பார்த்தால் நல்லது. நாளை பார்க்கலாம் என்றிருக்கிறோம்”. டேவிட் அழுத்தம் திருத்தமாக விபரித்தார். அருணை கயல்விழி பார்த்தாள். அவன் புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு இருந்தான்.
“மிஸ் கயல்விழி அதற்குரிய எற்பாட்டைச் செய்யுங்க. சரியாக பட்டியல் இருக்குதா? அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி வருமா”? விழிகளை உயர்த்தியவாறு கேட்டார். அப்போது அவரது நெற்றிசுருங்கி விரிந்தது. அதனைப் புரிந்து கொண்டாள். “சம்பூர் சனங்களும் இப்ப கட்டைபறிச்சானில்தான் முகாமில் இருக்கிறாங்க. அவர்களையும் இதில் சேர்க்கலாமா”? சாரதா கேட்டாள். பிரதேச செயலாளர் டேவிட்டைப் பார்த்தார். “நான் இருநூற்றி ஐம்பது பேருக்கு நிதியொதுக்கீடு செய்திருக்கிறன். போய்ப் பார்த்தபின்தான் சொல்லுவன். மீள்குடியேற்றம் என்றபடியால் பார்க்கலாம்”; என்றார்.
“அருண்! நீங்க நாளைக்கு இவங்களோட போங்க. இதெல்லாம் உங்கட ஏற்பாடுதானே. அதனால் திருப்தியாகச் செய்ய வேண்டும்”. “சேர் நீங்க சொன்னதை நான் நிறைவேற்றுறன். அவ்வளவுதான். இன்றையில் இருந்து ஒரு கிழமைக்கு கட்டைபறிச்சானில் தங்கி நிற்கப்போறன். நில அளவையாளர்கள் வாறாங்க. மிஸ்டர் டேவிட்டும் வாறார். இன்னும் சில நிறுவனங்களும் வரவிருக்கிறன. சம்பூர் மக்களையும் கவனிக்க வேண்டும்தானே?” தனது திட்டத்தைச் சொன்னான். கயல்விழியின் கண்கள் மலர்ந்தன. அருண் போன் எடுக்காததற்கான காரணங்களைப் புரிந்து கொண்டாள். “அருண் ஒருக்கா இவங்களோட போயிருந்து அந்தப் பட்டியலைச் சரிபாருங்க. என்ன? அப்ப இவங்கள அனுப்புவம். கயல்விழி நீங்க நல்ல திட்டங்களத் முன்வைச்சிங்க. அதைச் செய்து முடிப்பது உங்கள் எல்லோருடைய கடமையுமாகும் வாறவங்கள நல்லாக் கவனிச்சு மக்களுக்குச் சேவை செய்யுங்க”. கூறி விடைகொடுத்தார்.
மலர்ந்த முகங்களோடு வெளியில் வந்தார்கள். அருணுக்காகக் காத்திருந்தார்கள். அருண் வந்தான். “கயல்விழி எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. ஒரு நாலு மணிபோல வாறன். பிறகு கதைப்பம். சொல்லிவிட்டுச் சென்றான். சைக்கிள்கள் வந்தவழியே திரும்பின. நேரே பாடசாலைக்குச் சென்றார்கள். அதிபர் வகுப்பில் இருந்தார். அவர்களைக் கண்டதும் அலுவலக்தினுள் சென்றார். “வாங்க இப்படி இருங்க. நல்லாக் களச்சிட்டிங்க. மங்களேஸ்! இங்க வாம்மா”. ஒரு பிள்ளையை அழைத்தார். “இப்பதானே ரீ போட்டிங்க. எடுத்துட்டு வாங்க”. அவள் போனாள். “போன விசயம் எப்படி”? விசாரித்தார்.
“சேர் உங்கட ஆசி எங்களுக்கு இருக்கு. நாளைக்கு காணிகளைக் கொடுக்க வாறாங்க. அதுமட்டுமல்ல, சேர,; ஓரு ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் நிதியையும் ஓரு நிறுவனம் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. நாங்க முதல் இருநூறு பேர்களைத்தான் குடுத்தம். பிரதேச செயலாளர் பட்டியலில் மாற்றங்கள் வருமா? என்று ஒரு சைகையோடு பார்த்தார். நல்ல வேளை. சாரதா கெட்டிக்காரி. சம்பூர் மக்களும் இருக்கிறார்கள். என்று சொன்னா. இருநூற்றைம்பது பேருக்கு நிதியுள்ளதாம். தான் நாளைக்கு வந்து பார்த்தபின் முடிவெடுப்பாராம். எங்களுக்கு வழி காட்டுங்க சேர்”. கயல்விழி படபடத்தாள்.
“கயல்விழி நீங்க நம்மட ஊர், மக்கள் என்று சிந்தித்து அவங்கள ஒருவாறு அணிதிரட்டி இப்ப நீங்க என்ன சொன்னாலும் செய்யும் நிலையில் இருக்கிறாங்க. நிதி நமது நிறுவனத்துக்கு வருவது நல்லது. அதை எப்படிக் கையாள்வது என்று உங்களுக்கு நல்லாத் தெரியும் மங்கை, சாரதா, ராகினி. சுலோச்சனா. சாந்தன் எல்லாரும் உங்கட பக்கம் இருக்கிறார்கள். முழு ஊருமே உங்கட பக்கம் இருக்கு. நான் பக்கமலமாக இருப்பன். கவலப்படத் தேவையில்லை. எல்லாம் நல்லபடி நடக்கும்”;. அதிபரின் ஆசி கயல்விழியின் காதுகளில் வந்து விழுந்து இனித்தது. களைத்து வந்தவர்களுக்குச் சூடான ரீ புதுத் தெம்பைக் கொடுத்தது.
யூனிசெவ் நிறுவனத்தின் வாகனம் வந்து நின்றது. குலேந்திரன் இறங்கி வந்தார். அதிபர் வரவேற்றார். வகுப்பறைகளைப் பார்வையிட்டார். கற்றல் பற்றி மாணவரிடம் விசாரித்தார். தாங்கள் சந்தோசமாகக் கற்பதாகச் சொன்னார்கள். சில பயிற்சிக் கொப்பிகளைப் பார்வையிட்டார். பாடசாலை நூலகத்தினுள் சென்றார். அதற்குப் பொறுப்பான ஆசிரியர் பதிவுகளை எடுத்துக் காட்டினார். ஒரு நாளைக்கு எத்தனைபேர் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக பதிவுகளையும் வைத்திருந்தார். அதனைப் பார்த்துச் சந்தோசப்பட்டார். அலுவலகத்தினுள் சென்றதும் அதிபரோடு பேசினார். அதிபர் யூனிசெவ் நிறுவனம் உதவி செய்யும் ஆசிரியர்களை வரச் சொன்னார்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP