Tuesday, October 5, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
8
“எனக்கு எனது தோழியின் கைகள்தான் மென்மையாகவும் மிருதுவாகவும் தெரிகிறது.” மங்கை தான் தொட்டுணர்ந்ததைக் கூறினாள். பக்கத்தில் தொட்டாற்சிணுங்கி இரண்டு மூன்று பூக்களோடு படர்ந்திருந்தது. அதன் இலைகளை உசுப்பினாள். அச்செடி இலைகளைச் சுருக்கிக் கொண்டது. “மங்கை பார்த்தாயா .. மரஞ்செடி கொடிகளுக்கும் உயிருண்டு. அவை சந்தர்ப்பத்துக்கேற்றாற் போல் இசைவாக்கம் பெறுகின்றன. இவையாவும் இறைவன் கொடுத்த வரம். இல்லையா”? விளக்கிக் கொண்டு போனாள். பொழுது விரைந்தது. மாலை வந்து சூழ்ந்தது.
“மங்கை! மயக்கும் மாலைப் பொழுதென்று ஏன் சொன்னார்கள். நீதான் பெரிய கவிஞராயிற்றே. சொல்லேன். பார்ப்போம்”. என்றாள் கயல்விழி. மங்கை சிரித்தாள். நீ உயிரியல் படித்தவள். அவற்றின் வாழ்வியல் புரிந்தவள். மானும் மயிலும் ஆடுவதையும் அதற்கான காரணங்களையும் தெரிந்தவள். மழைகாலத்தில் தவளைகள் சத்தமிடுவதேன் என்று விளக்கமும் சொல்பவள். இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதற்கான விபரங்களையும் புரிந்தவள். உனக்கு அதனையிட்டுத் தெரிந்தும் என்னிடம் கேட்கிறாய். இது ஞாயமா..”? சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“நம்மைப் போன்ற படித்த வேலையற்ற பட்டதாரிகள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டு நிலைமைகளைப் பார்ப்பார்கள். அந்தச் சூழல் அவர்களுக்கு மயக்கத்தைத் தருவதால் மயக்கும் மாலைப் பொழுது என்று சொல்வார்கள்”;. கயல்விழி சொல்லிவிட்டுச் சிரித்தாள். “கயல்விழி நீ சொல்வதுதான் சரியான விளக்கம். வேலையற்ற பட்டதாரிகளின் பரிதாபகர நிலையை நன்றாக விளக்கினாய். அதுதான் உண்மையான நிலை. இன்றைக்கு எத்தனை ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்று ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு நமது நாட்டில் நடைப்பிணமாகக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு எப்பொழுது விமோசனம் கிடைக்கும்?. நாளை வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் என்று எல்லாப் பேப்பர்களிலும் வரும். பத்திரிகை நடத்துபவர்களுக்கு நமது தேவைகள் செய்தியாகி விடுகிறது. பிழைப்பு நடக்கிறது. நமக்கு வேதனையாகிறது. என்ன செய்வது. நமது தலைவிதி”? சொல்லும்போது மங்கையின் கண்கள் பனித்தன.
“நமது கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும். பிரித்தானியர் தமது கல்வி முறையை வலியுறுத்தித் திணித்தார்கள். அவர்களுக்கு உதவாத அல்லது பயனளிக்காத திட்டங்களை தமது பிடியிலிருந்த நாடுகளில் திணித்து விட்டார்கள். நமது கல்வி ஏட்டுச்சுரைக்காய்தான். நமது பட்டதாரிகளால் எதனைச் சாதிக்க முடியும். பேப்பரை மடித்துக் கப்பல் செய்யவும் தகுதியில்லாத படிப்பு. எனது படிப்புக்கு ஏற்ற வேலையென்றால் ஆசிரியத் தொழில் ஒன்றுதான் உள்ளது. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆனால் நாட்டின் கணக்கெடுப்பின்படி மேலதிக ஆசிரியர்கள் இருக்கிறார்களாம். எப்படி நமது நாட்டின் ஆட்சிமுறை”?. மங்கையின் உள்ளம் பொங்கி எழுந்தது.
“சரி..சரி.. பொறுமை காக்க வேண்டுகிறேன். நமக்கும் காலம் வரும். காலம் கனியும் வரை காத்திருப்போம். நிதம் இப்படியேவா இருக்கப் போகிறோம்”. கயல்விழி ஆறுதல் கூறினாள். “நாளையச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் என்ன நடக்கப் போகிறதோ தெரியாது. போய்ப்பார்ப்போம்”. எழுந்து கிணற்றடிக்குச் சென்று முகம் கைகால் கழுவினார்கள். பக்கத்தில் கற்பக விநாயகர் ஆலயம் இருந்தது. சென்று இறைவனை வணங்கி வந்தார்கள். அம்மா வேலைகளை முடித்து ஆறுதலாக இருந்தார். அவர்களைக் கண்டதும் “பிள்ளயள் சாப்பிடுவமா? அப்பாவும் பசி என்றவர். வாங்க”. சொல்லிக் கொண்டு ஆயத்தமானார். சுந்தரத்தாரும் காத்திருந்தார்.
உணவுக்குப்பின் உல்லாசமாகக் கதைத்தார்கள். பல்கலைக் கழக வாழ்க்கையை மீட்டுப் பார்த்தார்கள். அதன் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஆற்றில் மீன்களின் குதூகலிப்பு. “என்ன கயல் தண்ணீருக்குள் சத்தம் கேட்கிறது”.? மங்கைக்கு அது புதினமாக இருந்தது. விசாரித்தாள். “கடலில் இருந்து தண்ணீர் பெருகி நீர் மட்டம் உயரும். அப்போது கடல்நீர் பரவி வெளியேறும். ஆறுகளுக்குப் பாயும். இப்போது பெருக்கு நேரம். தலைவெள்ளம் ஏறும்போது மீன்கள் துள்ளும். தண்ணீர்ப் பெருக்கோடு மீன்களும் பயணிக்கும். மீனுணவும் வெள்ளத்தோடு பரவி வரும். மீன்களுக்குக் கொண்டாட்டம். வீச்சு வலைகாரருக்கும் கொண்டாட்டம்தான். நல்லா மீன்படும்”. கயல்விழி விளக்கினாள். “நாங்களும் மீன்பிடித்து விற்கலாம். பட்டதாரிகள் மீன்பிடித்தால் என்ன குறையப்போகுது”? மங்கை விளையாட்டாச் சொன்னாள்.
“இந்த ஆற்றில சின்னப்படகில போய் மீன்பிடித்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்”;. மங்கை உற்சாகத்துடன் சொன்னாள். “அப்படி ஒருகாலம் இருந்தது. ஆனால் இப்ப அப்படி இயலாது. ஆற்றில் பகலில் மட்டும்தான் மீன் பிடிக்க அனுமதியுண்டு. இரவில் போனால் தப்பிவரமுடியாது”. சுந்தரத்தார் விளக்கினார்.“நாங்க அந்தக் காலத்தில் செக்கல் பட தோணியில போவம். காய்ந்த தென்னோலைகளைச் சூழாகக் கட்டியெடுத்துக் கொள்வோம். ஆற்றில் தோணியில் இருந்து சூழைப் பற்றவைத்துப் பிடிப்போம். அந்த வெளிச்சத்தக் கண்டு மீன்கள் சூழ்ந்து கொள்ளும். ஒரு வீச்சில எக்கச்செக்கமான மீன்படும். இறால் எங்கட ஆற்றில தொகையாகப் பிடிபடும்” இளமைக்காலத்தைச் சுந்தரத்தார் மீட்டெடுத்து வைத்தார்.
அதிகாலை புறப்பட்டு திருகோணமலை சென்றார்கள். நேரே மாமாவின் வீட்டுக்குச் சென்றார்கள். மாமா கச்சேரில் காணிப்பரிவில் கிளாக்கராகக் கடமையாற்றுகிறார். மிகவும் நல்ல மனிதர். அரசரத்தினக் கிளாக்கரைத் தெரியாதவர்கள் இல்லை. வருகிறவர்களுக்கு உதவி செய்வதில் முன்நிற்பவர். களங்கம் இல்லாத கை. கயல் வந்ததில் அவருக்குச் சந்தோசம். மாமாவில் அன்பும் பாசமும் கொண்டவள். பிரச்சினைகளின் போது கயல்விழி மாமா வீட்டிலேயே தங்கி இருந்து படித்தாள்.
மாமி ஒரு ஆசிரியை. மிகவும் அன்புள்ளவர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள்தான் கயல்விழியின் தோழர்கள். அவர்களோடுதான் பொழுது போகும். அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவாள். இருவரும் பாடசாலைக்குச் செல்பவர்கள். கயலைக் கண்டதும் ஓடிவந்து மடியில் ஏறினார்கள். அவளை அக்கா என்றே அழைப்பார்கள். அவளைக் கண்டதும் எழுப்பும் முதல் கேள்வி ‘எப்ப போவீங்க’ என்பதுதான்;. இரண்டுநாள் நின்றுதான் போவேன் என்றால் சந்தோசத்தோடு துள்ளுவார்கள். நாளைக்கு என்றால் கதைக்கவே மாட்டார்கள். குழந்தைகளிடம் பெரியவர்கள் கற்க வேண்டிய விசயங்கள் நிறையவே உண்டு.
வஞ்சகம், சூது, கள்ளம் கபடம் ஒன்றுமே இல்லாத பிஞ்சுகள். பிரியா மூத்தவள். அடுத்து அவளது தம்பி குமணன். பிரியா ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். அவளுக்கு ஓய்வே கிடைப்பதில்லை. அப்பா மட்டும் கொஞ்சம் இரக்கங் காட்டுவார். அம்மா சதா படி என்று வற்புறுத்துவார். காலையில் இருந்து படுக்கைக்குப் போகும் வரை பிள்ளைக்கு ஓய்வே இல்லை. ஸ்கொலசிப் சோதனை என்று பிள்ளையை வாட்டி எடுக்கின்றார்கள். மாமாவிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள். அவர் உன்னிப்பாகக் கேட்டறிந்தார்.
பத்து மணியளவில் கல்வி அமைச்சின் முன்னால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் சூழ்ந்திருந்தனர். பலதொழிற் சங்கங்களும் ஒத்தாசை கொடுத்தன. படங்குகளால் பந்தலிட்டு அதற்குள் படங்குகளை விரித்து அமர்ந்திருந்தனர். பதாதைகள் காற்றில் அசைந்தவண்ணம் இருந்தன. அரசியல் தலைவர்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனுதாபம் காட்டுவதுபோல் வந்து பார்த்துப் போனார்கள். திங்கள் தொடங்கிய போராட்டம் தொடர்ந்தது. பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்தது. முன்பக்கமெல்லாம் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி இருந்தன. பட்டதாரிகளின் படங்கள் பேப்பர்களை நிறைத்தன.
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் நாவண்ணன் பட்டதாரிகளின் நிலையை நன்கு உணர்ந்தவர். அனுதாபமாகப் பார்த்தார். தனது அலுவலர்களை அழைத்தார். அரசியல் தலைவர்களையும் அழைத்தார். “நான் ஒரு அரசாங்கப் பணியாளன். என்னால் அரசாங்கம் முன்வைக்கும் கடமைகளைத்தான் செய்ய முடியும். பட்டதாரிகளுக்கு வேலை கொடு என்று அரசாங்கம் சொன்னால் உடனே கொடுக்கலாம். ஆனால் அரசின் எழுத்து மூல அறிவித்தல் இல்லாது செயல்பட முடியாதே. அரசியல் தலைவர்கள் இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் கேட்கலாம். பாராளுமன்றத்தில் அமைச்சர்களோடு வாதிட்டு உரிமையைப் பெறலாம். அதைச் செய்யுங்கள். வேண்டுமானால் நான் ஒன்றை மட்டும் செய்யலாம்.” அமைதியாகச் சொன்னார்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP