Wednesday, October 20, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
19
குலேந்திரன் அதிபரிடம் ஒரு பெரிய உறையைக் கொடுத்தார். இது இந்த ஆசிரியர்களுக்கான உதவு தொகை. அவர்களிடம் கொடுங்கள். அதிபர் பெரிய உறையைத் திறந்தார். அதற்குள் ஆசிரியர்களின் பெயர்கள் எழுதிய சிறு உறைகள் இருந்தன. பெயரை வாசித்து அவர்களிடம் அதிபர் கையளித்தார். “சாந்தனுக்கு நூலகருக்கான உதவுதொகையும் இருக்கிறது”. எடுத்துக் கொடுத்தார். அதற்குள் இருந்த படிவத்தையும் கொடுத்தார். படிவத்தில் கையெழுத்தை இட்டனர். “திறந்து பாருங்கள். இது இந்த மாணவருக்காக நீங்கள் செய்யும் சேவைக்கான யூனிசெவ் உதவுதொகை.” அதிபர் புன்னகையுடன் சொன்னார். ஒவ்வொரு உறையுள்ளும் பத்தாயிரம் எட்டிப் பார்த்தது. நன்றி சொன்னார்கள்.
“நாங்க எல்லாருக்கும் ஒரேயளவான உதவிதொகை வழங்குவது உங்களுக்குள் சங்கடமாக இருக்கும். நீங்கள் உயர்கல்வி கற்றவர்கள். உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் உதவு தொகை போதாது. ஆனால் எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து தருகிறோம்.” குலேந்திரன் விளக்கம் அளித்தார். “சேர் இதுவே எங்களுக்குப் பெரிய தொகை. இது போதும். இன்னும் உற்சாகமாகச் செய்வோம்”;. கயல்விழி நன்றியோடு சொன்னாள். மேலதிக வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உதவு தொகை வழங்கப்பட்டது. விபுலானந்த வித்தியலயத்து ஆசிரியர்களும் வந்தார்கள். அவர்களுக்குரிய உதவு தொகையையும் கொடுத்தார். பெற்றதும் அவர்கள் பாடசாலைக்குப் போய்விட்டார்கள். அதிபர் சிற்றுண்டி வழங்கினார். குலேந்திரன் விடைபெற்றுச் சென்றார். அதிபருக்குச் சந்தோசம்.
“கயல்விழி உண்மையில் உங்களைப் பற்றிப் பெருமைப் படுகிறேனம்மா. நீங்க ஒரு புதுப்பிறவி. உங்களச் சுற்றி இருக்கும் இந்தக்கூட்டம் பெரிய ஆற்றல் கொண்டது. உங்களுக்குப் பின்னால நின்று படிப்பிக்கிறாங்க. ஊரை நிறுவனமாக்கி இயங்க வைக்கிறாங்க” அவர் அடுக்கிக் கொண்டு போனார். “சேர் எங்களப் புகழாதிங்க. புகழ் மனிதனை வீழ்த்திவிடும். எங்கள உற்சாகப்படுத்துங்க. அதுதான் எங்களுக்கு வேண்டும்.” கயல்விழி இடையில் புகுந்து சொன்னாள். “அப்படி இல்லம்மா. நான் கண்ணால காண்பதைத்தான் சொல்லுறன். இன்றைக்கு உன் முயற்சி இல்லையென்றால் இந்த ஊர் விழிப்புற்றிருக்காது. சரி. அதவிடு. நாளைக்கு என்ன செய்யலாம்?” வினவினார்.
“நீங்க சொன்ன காணிப்பகுதிகளுக்குப் போகவேணும். எங்களுக்கு அது பற்றிய அறிவு இல்ல. நீங்களும் வந்தால் நல்லதாயிருக்கும்.” மெதுவாக எடுத்துச் சொன்னாள். “நில அளவையாளரிடம் அதன் படம் இருக்கும். அவங்க சரியாக அடையாளம் காட்டுவாங்க. கிராம சேவையாளருக்கு நான் சொல்லுறன். அவரும் வருவார். சரி நானும் வாறன்.” அவர் ஒத்துக் கொண்டார். கயல்விழிக்கு மனம் நிறைந்திருந்தது. ஒரு ஊரில் சேவை செய்வதன் வெற்றி அங்குள்ள அனைவரையும் அணைத்துக் கொள்வதில்தான் தங்கியுள்ளது. இதனை அனுபவத்தில் கண்டுகொண்டாள். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போனார்கள். இன்று சாரதா, ராகினி, சாந்தன் அத்தனை பேரும் படு சந்தோசத்தில் இருந்தார்கள்.
மங்கை வீட்டுக்குப் போனதும் அப்பாவைத் தேடினாள்.“ அம்மா!, அப்பா எங்கே”? அம்மாவிடம் கேட்டாள். “அப்பா கிணற்றடியில் நிற்கிறார். கைகால் கழுவிற்று வருவார். வாங்க எல்லாரும் சாப்பிடுவம்”. அம்மா ஆயத்தம் செய்தாள். அப்பா உள்ளே வந்தார். “அம்மா இப்படி வாங்க”. அம்மாவின் கைகளைப் பிடித்து அப்பாவின் பக்கத்தில் நிறுத்தி “இப்படி நில்லுங்க.” கேட்டுக் கொண்டாள். அவர்கள் கைகளைப் பிடித்துத் தனது உதவுதொகை இருந்த உறையைத் திணித்துவிட்டுக் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். கயல்விழியின் கண்கள் பனித்தன. கயல்விழியும் பக்கத்தில் கிடந்தாள். அம்மா பதறிப்போனார். “எழும்புங்க பிள்ளையள். நீங்க நல்லா இருக்கணும். கடவுள் உங்களக் கைவிடமாட்டார்”. வாழ்த்தினார். “சரி வாங்க சாப்பிடுவம்”. சுந்தரத்தாரின் கண்கள் பனித்திருந்தன.
“அப்பா மங்கையின் உறையினுள் பத்து இருக்கு. என்ர உறையினுள் பத்து இருக்கு. என்னுடைய உறையிலிருந்து ஐந்தை எடுத்து பதினைந்தாக மங்கையின் அப்பாவுக்கு அனுப்பி விடுங்க. பாவம் அதுகள் கஸ்டப்படுதுகள். அவங்களுக்குக் கடன் தொல்லை. நான் சொன்னேன்தானே மங்கையின் கஸ்டநிலையை”. விளக்கமாகச் சொன்னாள். மங்கைக்குச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். “அப்பா இப்ப நாலுமணி போல அருண் வருவார். நாளைக்குக் காணி அளந்து கொடுக்க நிலஅளவையாளர்களை பிரதேசச் செயலாளர் அனுப்புகிறார். அருணை எங்க தங்க வைப்பம்”?. கேட்டாள்.
“அந்தா இருக்குது. நமது சிறிய ஏரிக்கரை வீடு. அது நல்லது. அதை வடிவாகத் திருத்திப் போட்டன். கட்டிலும் கிடக்கு. எல்லா வசதியும் இருக்கு. அவருக்குப் பொருத்தமான இடம். அதோட சாப்பாட்டுப் பிரச்சினையும் இருக்காது. எங்களோட சாப்பிடலாம்தானே. அருண் நல்லபிள்ள”. அப்பாவின் பேச்சிலிருந்து அருணை அப்பாவுக்குப் பிடித்திருப்பதை உணர்ந்து கொண்டாள். அவளுக்கு மனதுக்குள் மத்தாப்பு விரிந்தது. அப்பாவை மனதுக்குள் போற்றிக் கொண்டாள். “மங்கை வா. அந்த வீட்டைத் துப்பரவு செய்வோம்.” கயலின் உரையாடலை அப்பா கேட்டார். “மகள் அதெல்லாம் நான் துப்பரவாக்கி வைச்சிருக்கன். மூன்றுபேர் தங்கலாம். நீங்க உங்கட வேலையளப் பாருங்க”. அப்பா சத்தமாகச் சொன்னார். “மங்கை சாந்தனை வரச் சொன்னனான். நாளைக்கு நில அளவையாளர்களுக்குப் பகல் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்ய வேணும். அப்பாட்டச் சொன்னா அவர் ஏதும் ஒழுங்கு செய்வார். சொல்லுவமா?” கயல்விழி கூறினாள். “கயல் ராகினிடம் சொல்லுவம். மற்றது மிஸ்டர் டேவிட்டும் வாறார். அவர நல்லாக் கவனிக்க வேணும். நல்ல மனிதர்”. மங்கை தனது திட்டத்தைச் சொன்னாள்.
“அப்பா நாங்க பாடசாலைக்குப் போறம். அருண் வந்தால் அறையைத் திறந்துவிடுங்க. எங்களுக்குச் சொல்லி அனுப்புங்க”. சொல்லிவிட்டுப் போனார்கள். வகுப்புக்கள் கலகலத்தன. ஆசிரியர்கள் அனைவரும் சந்தோசமாகப் பாடங்களை நடத்தினார்கள். மாலை நேர வகுப்புக்களுக்கும் பிள்ளைகள் தவறாது வந்தார்கள். இரண்டு வகுப்புக்களை நடத்தியதும் திரும்பினார்கள். நேரே கோயிலடிக்குச் சென்றார்கள். சாந்தன் விளையாட்டுத் திடலில் ஒழுங்குகளைக் கவனித்து விட்டுத் திரும்பினான். ராகினியும், சாரதாவும் உமாவும் சம்பூர் மக்கள் இருந்த முகாமுக்குப் போனார்கள். தகவல்களைச் சேகரித்தார்கள்.
சனங்கள் கூடியிருந்தார்கள். சுலோச்சனாவும் அவளது குழுவினரும் சுயஉதவிக் குழுக்களோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். வீட்டுத்தோட்டங்கள் செழித்து வளர்ந்துள்ளதைத் தெரியப் படுத்தினார்கள். காய்கறி வகைகளை வேற்றாக்களுக்குக் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். வியாபாரம் செய்யச் சைக்கிள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பல இளைஞர்கள் தோணிகளைப் பயன் படுத்திப் போதுமான வருவாயைப் பெறுவதையும் சொன்னார்கள். பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவதைக் கல்விக்குழு விபரித்தது. ஊரில் என்ன நடந்தாலும் மாலை கோயிலடியில் விவாதிக்கும் பழக்கம் வந்துவிட்டது. காணி கொடுபடும் விசயத்தைப் பரப்பிவிட்டார்கள். பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
சரியாக ஐந்து மணி அருண் வந்தான். நேராகக் கோயிலடிக்கே வந்தான். காணிவிசயத்தைக் கதைத்தார்கள். அருணைக் கண்டதும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். ஒரு கதிரையை நகர்த்தி அவனை அமரும்படி கூறினார்கள். “நாளை காலை நாங்கள் மரவட்டகுளத்துக்குப் போகிறோம். துண்டு குலுக்கிப் தெரிவு செய்து காணிகளைக் கொடுப்போம். காணிகளைத் துப்பரவாக்க வேண்டியது உங்களது கடமை. துப்பரவு செய்தவர்களது காணியை அளந்து அதற்கான கூலியைத் தருவோம். துப்பரவாக்காத காணிகளை வேறு ஆக்களுக்குக் கொடுப்பார்கள். இது இளைஞர்களுக்கான திட்டம். ஆனால் குடும்பத்வர்கள் சேர்ந்து வெளியாக்கலாம். பயிரிடலாம்.” அருண் விபரமாகச் சொன்னான். சாந்தன் தான் காணிகளைப் பார்த்து வந்ததாகச் சொன்னான்.
“நில அளவையாளர்கள் காலையில் வருவார்கள். அவர்கள் வருமுன் நாம் அங்கே நிக்கவேணும். நீங்க செய்யிற வேலையிலதான் உங்களுக்குரிய நிதியைத் தருவார்கள்;. அதனைப் பார்வையிட நாளை மிஸ்டர். டேவிட் வாறார். உங்கட கெட்டித்தனத்திலதான் எல்லாம் தங்கியிருக்கு. கயல்விழி நல்ல செயற்திட்டங்களை முன்மொழிவுகளாக அனுப்பிக் கொண்டே இருக்கிறா. காணி துப்பரவாக்க வேண்டிய ஆயுதங்களும் நாளைக்கு வரும். சரி நேரமாகிறது. எங்களுக்கும் நிறைய வேலைகள் இருக்கு”. அவனுடைய பங்கினை நிறைவு செய்தான். சனங்கள் கலையத் தொடங்கினார்கள்.
“சாந்தன் பிறகு வாங்களன். கதைப்பம்”. அருண் சாந்தனைப் பார்த்துக் கூறினான். “அருண் வாங்க வீட்டுக்குப் போவம். எல்லா ஏற்பாடும் செய்திருக்கு. வாங்க”. அழைத்தபடி கயல்விழி நடந்தாள். “நீங்க நடங்க. நான் மோட்டார் சைக்கிளை எடுத்திட்டு வாறன்”;. சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கினான். பின்னால் மெதுவாகப் போனான். கயல்விழி நேரே அருணுக்காக ஒழுங்கு செய்திருந்த வீட்டுக்குப் போனாள். கதவினைத் திறந்து வசதிகளைப் பார்த்தாள். எல்லா ஏற்பாடுகளையும் அப்பா செய்திருந்தார். கழிவறை துப்பரவாக இருந்தது. துவாய், பற்பசை, சோப், பௌடர் யாவும் தயாராய் இருந்தது. அருண் வந்ததும் அவனிடம் யாவையும் காட்டினாள். “குளியுங்க. நாங்களும் குளிச்சிட்டு வாறம். கதைப்பம்”;. சொல்லிக் கொண்டு சென்றாள்.
அருண் அந்தச் சூழலைக் கண்களால் துளாவினான். ஆற்றோரத்தில் அமைந்த வீடு. கண்டல்களில் மறைந்திருக்கும் பசுமை. கூடவே ஒளிந்திருக்கும் குளிர்மை. அமைதி. அற்புதமாக இருந்தது. பல்கலைக் கழகத்தில் கயல்விழியோடு எதனைக் கதைப்பது என்று மௌனமாய் இருந்த காலங்கள். எல்லாம் நிழலாய் வந்து போயின. “இதுவரை அவள்தான் தனது இதயக்கோயிலில் குடியிருக்கும் தேவதை என்பதை இதுவரை வெளியில் சொல்லவில்லை. என்மேல் அவள் வைத்திருக்கும் பிரியம் எப்படியானது? எனது எண்ணங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேட்கவில்லையே. எப்படியும் இம்முறை அறியத்தான் வேணும்”. நினைத்துக் கொண்டு குளித்தான்.
அருண் குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் கதிரைகளைப் போட்டு இருந்தான். காற்று வீசிச் சுகம் காட்டியது. ஆற்றின் குதூகலிப்பு அவன் உள்ளத்தைத் தொட்டது. “சா…என்ன அருமையான இடம். வானில் பவனி வரும் நிலவின் நிழல் தண்ணீரில் பிரவாகித்தது. மீன்களின் துள்ளலால் எழும் சிற்றலைகளால் நிலவின் பிம்பம் அசைந்து கொண்டிருந்தது. தன்னிலை மறந்து இயற்கையோடு ஒன்றித்திருந்தான். அவன் இளைஞனல்லவா?. மனதில் கிளர்ச்சிகள் துளிர்விடத் தொடங்கின. கயல்விழி வந்ததையும் அவன் கவனிக்கவில்லை.
“என்ன சிந்தனை? தனிமையில் விட்டுப் போட்டு போய்விட்டாங்க என்ற யோசனையா”? குரல் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தான். “அப்படி ஒன்றுமில்ல. இந்த அருமையான இடத்தைப் பார்த்து ரசித்தேன். வாங்க.” வரவேற்றான். கதிரைகளில் இருந்தார்கள். “சாந்தனை வரச் சொன்னனான். அவர் வந்தால் நாளைய விசயங்களைப் பற்றிப் பேசலாம்”. என்றான். “மங்கை எப்படி கட்டைபறிச்சான்? பிடிச்சிக் கொண்டதா”? அருண் மங்கையிடம் கேட்டான். “கயல்விழி எங்க இருக்கிறாவோ அங்க எனக்கும் பிடிக்கும். நான் இன்றைக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறதெண்டால் அதுக்கக் காரணம் இந்தக் கயல்விழிதான்.” குலுங்களோடு சொன்னாள். “மங்கை சும்மா ஐஸ் வைக்காதே. வேறு எதையாவது சொல்லு. கேட்கச் சந்தோசமாக இருக்கும்.” கயல்விழி நாணத்தோடு சொன்னாள்.
“மங்கை! கவனம். கயல்விழி கனல்விழிகளாக மாறிவிடும். பிறகு புலிவேட்டையும் நடக்கலாம்.”. கூறிக்கொண்டு அருண் சிரித்தான். கயலும் சிரித்தாள். “இவன் இன்னும் அதை மறக்கல்லையே”. தனக்குள் அந்த நினைவினை மீட்டுப் பார்த்தாள். “என்ன அருண். இன்னும் அதை நீங்க மறக்கல்லயா”? நாணத்தோடு கேட்டாள். ‘எப்படி மறக்கமுடியும்.? அது அற்புதமான காட்சியல்லவா? எனக்கு இன்னும் அந்தக் கண்களை நினைத்தால் பயமாக இருக்கும்”;. சொல்லிவிட்டுச் சிரித்தான். அவளும் சிரித்தாள்;. மங்கைக்குப் புரியாத புதிராக இருந்தது.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP