Wednesday, October 13, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

16
அவர் அலுவலகத்துள் சென்றார். பின்னால் கயல்விழியும் சென்றாள். மங்கை வந்து சேர்ந்தாள். “என்ன ஏதும் விஷேசமா”? அதே புன்னகையோடு கேட்டார். “ஓம் சேர். நாளைக்கு நமது பாடசாலைக்கு யூனிசெவ் அலுவலர்கள் வருகிறார்கள். நமது புது ஆசிரியர்களின் விபரங்களை அவர்களிடம் நீங்கள் கொடுக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் தயாரித்து விட்டோம். யூனிசெவ் அவர்களுக்கு ஓரு கொடுப்பனவு செய்தாலும் செய்வார்கள். விளையாட்டுப் பொருட்களும், நூலகத்துக்குப் புத்தகங்களும் வரும். நீங்கள் நன்றாகக் கதைப்பிர்கள். சேர் அவர்களுக்குப் பகல் உணவு கொடுப்போமா”? கேட்டார்கள். “நமது ஊருக்கு வாறவர்களுக்கு விருந்து கொடுப்பது நமது பண்பாடு. அதை மறப்பேனா?, செய்வோம். உங்கள் முயற்சிக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி”. வாழ்த்தி அனுப்பினார். வந்த பணிமுடிந்த சந்தோசத்தில் கோயிலடிக்குப் பறந்தார்கள்.
சாந்தனின் குழு கரப்பந்தாட்டத்துக்குரிய இடத்தினைத் தெரிவு செய்துவிட்டனர். நான்கு தென்னங்குற்றிகள் வந்தன. இரண்டை கோயிலடியில் நட்டார்கள். மற்றவைகளை பாடசாலைக்குப் பக்கத்தில் அளந்து நட்டார்கள். “‘வொலிபோல் கோட்’; தயார்”. சுhந்தன் உற்சாகமாகச் சொன்னான். ‘நெற்போல்’ பற்றிய சிந்தனை கயல்விழிக்குத் தட்டியது. “மங்கை நெற்போல் விசயத்தை மறந்து விட்டோமே. என்ன செய்வது? அவளைப் பார்த்துக் கேட்டாள். “அதெல்லாம் தயார்”;. சிரித்துக் கொண்டே மங்கை பதிலளித்தாள். கயலுக்குச் சந்தோசமாக இருந்தது.;. ஒருகுழு படிப்பகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டது. பாடசாலையில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த தளபாடங்களை அதிபர் படிப்பகத்துக்குக் கொடுத்தார். அவை திருத்தப் பட்டுப் பாவிக்கக் கூடியதாக மாறிவிட்டதை கயல்விழி கண்டுகொண்டாள்.
ஊரில் நடைபெறும் வேலைகளுக்கு கட்டைபறிச்சானில் உள்ளவர்களுக்குக் கொடுக்கும் கட்டாய உத்தரவை பிரதேச செயலாளர் வழங்கி இருந்தார். அதிபர் வீட்டுத் தோட்டத்துக்கான நாற்றுக்களை வழங்கினார். தோட்டங்கள் வீடுகளில் உருவாகின. புhடசாலைகளில் கற்பித்தல் சிறப்பாக நடந்தது. கல்விக்குழு பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளைக் கவனித்து அனுப்பி வைத்தது. மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை. மனித மனங்களில் ஒரு துணிவை ஏற்படுத்தி உற்சாகத்தைக் கொடுத்தால். செயல்வடிவம் பெறுவதை அவதானித்தாள். நாளைய நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். “சுயஉதவிக்குழுக்கள் நிலை என்ன. இதுவரை எத்தனை குழுக்கள் உருவாகியுள்ளன.”? வினவினாள்.
“இதுவரை இருபத்தைந்து குழுக்கள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு குழுவிலும் பத்துப் பேர் உள்ளனர். ஒரு உறுப்பினர் ஒரு நாளைக்கு இரண்டு ரூபா வீதம் சேர்த்து வருகிறார். ஒருகிழமைக்கு ஒருவர் பதினைந்து ரூபாய் கட்டுறார். அவர்களே இதனைத் தீர்மானித்தார்கள். ஒரு மாதம் ஒருவர் அறுபது ரூபாய் கட்டுறார். ஒரு மாதத்தில் ஒருகுழுவுக்கு அறுநூறு ரூபாய் சேருது. நாங்கள் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. வங்கியில் சேமிப்புக்கணக்குத் தொடங்க வங்கி முகாமையாளரோடு கதைத்து விட்டோம். வங்கியில் இருந்து ஒரு அலுவலரை அனுப்புவதாக முகாமையாளர் அறிவித்துள்ளார்.” பொருளாளர் ராகினி விளக்கமாச் சொன்னார்.
சுய உதவிக்குழுவினால் நமது கிராமம் தன்னிறைவு பெறும். இது நமது கனவு. மனிதர்கள் கனவு காணவேண்டும். அந்தக் கனவு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும். அந்தக் கனவின் பொருளை நாம் அனுபவிக்க வேண்டும். நாம் நினைக்கும் பொருள் நம்மை நெருங்கி வரவேண்டும். நெருங்கின பொருள் கைப்படவும் வேண்டும். அதற்கு நமது விடா முயற்சிதான் முக்கியம். நமக்குள் எந்தப் பிரச்சினைகளும் தலைதூக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.” பெரிய பிரசங்கத்தைக் கயல்விழி செய்தாள். “இவ்வளவையும் இவள் எங்கே கற்றாள்.”? மங்கை வியப்போடு மனதில் கேட்டுக் கொண்டாள்.
வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் போது பத்தரை மணிக்கு மேலாகிவிட்டது. “பிள்ளையள் ஒரே வேலையென்று அலையாமல் உடலையும் பார்த்துக் கொள்ள வேணும். சுவர் இருந்தால்தான் சித்த்pரம் வரையலாம்”. அம்மா சற்றுக் கடிந்து கொண்டார். அப்பா சிரித்துக் கொண்டார். தங்கம் அவங்க சின்னப் பிள்ளைகள் இல்ல. படித்த பட்டதாரிகள். அவங்களுக்குத் தெரியும். இந்த ஊர் மக்கள் நல்லாக இருக்க வேணும் என்றுதானே பாடுபடுதுகள். இப்ப நம்மட ஊர் எவ்வளவு சந்தோசமாக இருக்கு. எல்லோரும் எதோ தங்கள் வேலைகளையாவது செய்து கொண்டு இருக்குதுகள். அதற்கு யார் காரணம்.? நம்மட இந்த இரண்டு பிள்ளயளும்தானே?”. அப்பா சொல்லிக் கொண்டு போனார். அம்மா கேட்டு ரசித்தார்.
மங்கையின் உள்ளம் உணர்ச்சியில் பொங்கியது. “என்னையும் தன் மகளாக மதித்துப் போற்றுகிறார்களே. நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்”. அவளது கண்கள் பனித்தன. “என்ன சென்டிமென்டா”? கயல்விழி கலகலத்தாள். “இது சென்டிமென்ற் இல்ல. உண்மை. எங்கட வீட்டில கிடைக்காத அன்பும் பாசமும் எனக்கு இங்க உன்னால கிடைக்குது. உன்னில் காட்டும் அதே அன்பை உன் அப்பா அம்மா என்மேல் காட்டுறாங்க. இதற்கு என்ன கைமாறு செய்யப் போறனோ தெரியாது”. மீண்டும் கண்கலங்கினாள். “மங்கை வீணான கற்பனையில குழம்பாத. நமக்குத் தலைமேல வேலை கிடக்கு. அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்ப்பம்”;. அவளைத் தேற்றினாள்.
நல்ல நிலவு காய்ந்தது. நிலவின் ஒளி ஆற்றில் பட்டு வளவெங்கும் பளிச்சிட்டது. “வெளியில் கொஞ்சம் இருப்போமா? இந்த நிலவில் ஆற்றில் தோணியில் போய் ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும்.”? மங்கை கூறினாள். “திடீரென என்ன கற்பனை உனக்கு? இன்றைக்குப் போயா நாளில்லையே”? சிரித்துக் கொண்டே கயல்விழி கூறினாள். அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். ஆற்றிலிருந்து மீன்கள் துள்ளும் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. “இந்த மீன்கள் தூங்குவதில்லையா”? மங்கை கேட்டாள். “மீனின் வாழ்க்கை அற்புதமானது. மீன்களும் தண்ணீரில் நீந்தியவாறே உறங்கும். சுதந்திரமாக மீன்கள் நீந்தித் திரிவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவற்றுக்கு நிறையவே ஆபத்துக்கள் உண்டு. பெரிய மீன்கள் சிறிய மீன்களை வேட்டையாடி விடும். பறவைகள், மற்ற உயிரினங்களினால் உயிராபத்துக்கள் உண்டு. மனிதர்களின் அச்சுறுத்தல்தான் அதிகம். விளக்கம் கயல்விழி கொடுத்தாள்.
“நாளைக்கு என்னம்மா விஷேசம்”? அப்பா வினவினார். “நாளைக்கு யூனிசெவ் வருது. இன்னும் பல நிறுவனங்களும் வரலாம்.” மங்கை விளக்கினாள். “ஏதோ ஊருக்கு நல்லது நடக்க வேணும். இந்தச் சனங்களின்ர கஸ்டம் தீரந்ததென்றால் எவ்வளவு நல்லது. ஆண்டவா நீதான் என்ர பிள்ளையளுக்கு உதவவேணும்”. அவர் கடவுளை வேண்டினார். கொஞ்ச நேரம் கதைத்தார்கள். “அப்பா அவர்களுக்கு உணவு கொடுக்க வேணும். அதிபர் ஓமென்டவர். ஆனாலும் நாங்களும் ஆயத்தமாக இருந்தால் நல்லதில்லையா”? கயல்விழி கூறினாள். நான் நாளைக்குக் காலை அதிபரோடு கதைத்து ஒழுங்கு செய்யிறன். நீங்க நித்திரைக்குப் போங்க.” அப்பா அவர்களை அனுப்பினார்.
வீதிகளில் பாடசாலைப் பிள்ளைகளின் ஊர்கோலம். கல்விக் குழுவினரின் வீதியுலா. பெற்றோரின் பரபரப்பு. பார்ப்பதற்கு இங்கிதமாக இருந்தது. மங்கை ஆசிரியர்களது சுயவிபரக் கோவைகளை எடுத்துக் கொண்டாள். வேண்டிய அறிவுறுத்தல்களை அவரவருக்கு வழங்கினாள். கயல்விழியோடு பாடசாலைக்கு விரைந்தாள். பாடசாலை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. “இன்னும் யூனிசெவ் வரல்லையே. அருண் ஏன் இன்னும் போன் எடுக்கல்ல.” அவளது மனம் அடித்துக் கொண்டது. சரியாக பத்து மணி. கயல்விழியின் தொலை பேசியின் இசை ஒலித்தது. முடுக்கிவிட்டுக் காதில் வைத்தாள்.
“ஹலோ” என்றாள். “கயல் நான் அருண். இதோ வந்து கொண்டிருக்கிறம். இன்னும் பத்து நிமிசத்தில பாடசாலைக்கு வந்திடுவம். சுரியா”? சொல்லி முடிந்ததும் வைத்து விட்டான்.
சொன்னதுபோல் வாகனங்கள் வந்து நின்றன. பலர் இறங்கினார்கள். அதிபரின் அலுவலகத்துள் சென்றார்கள். அவர் எழுந்து வரவேற்றார். கதைத்தார்கள். அதிபருடன் வகுப்பறைகளைப் பார்வையிட்டார்கள். பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலைப் பார்த்தார்கள். இந்தக் கஸ்டமான நெருக்கடி நிலையிலும் இப்படியொரு பாடசாலையா? வியந்தார்கள்.
பாடசாலைத் தோட்டம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் அவர்கள் கண்களைக் குளிரச் செய்தன. வகுப்புக்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களால் நிரம்பியிருந்தன. அத்தனை கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் மறுசீராக்கப் பொருட்களால் ஆனவை. வகுப்பறைகளுள் சென்றார்கள். பிள்ளைகள் பண்பாக வரவேற்றனர். வினாக்களையும் வினவினார்கள்.
“யார் உங்கள் ரீச்சர்?” விடைகளைப் பிள்ளைகள் சொன்னார்கள். குறித்துக் கொண்டார்கள். முன்பள்ளியினுள் சென்றார்கள். பிள்ளைகள் தரையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்கள். மீண்டும் அதிபரின் அலுவலகத்தினுள் வந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். உபசரிப்பில் நிரந்தர ஆசிரியர்களே பங்கு கொண்டார்கள். அதிபரின் மதியூகம் அப்படிச் செய்தார்கள். தேநீர் சிற்றுண்டி பரிமாறப் பட்டது. ஆசிரியர்களது கூட்டம் ஒன்றை அதிபர் ஒழுங்கு செய்திருந்தார். ஆசிரியர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள். அதிபரிடம் பல வினாக்களை வினாவினார்கள். ஆசிரியர்களோடும் உரையாடினார்கள். அவர்களது மனங்களில் வாழத்துடிக்கும் கிராம மக்களது ஏக்கங்கள் புகுந்து கொண்டன.
அதிபரிடம் ஆசிரியர்களது விபரங்களைக் கேட்டனர். ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். “நீங்கள் இந்தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கொண்ட கரிசனையைப் பாராட்டுகிறோம். எங்களாலான உதவிகளைச் செய்வோம்” உறுதியளித்தார்கள்.. தற்காலிகமாகத் தொண்டு அடிப்படையில் கஸ்டப்படும் ஆசிரியர்களின் விபரங்களை அதிபர் கொடுத்தார். யூனிசெவ் தொண்டு அடிப்படையில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்க மாததந்தம் ஒரு தொகை நிதியை ஊக்குவிப்பாகத் தரும். இங்குள்ள இரண்டு பாடசாலைகளிலும் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்காக மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு ஊக்குவிப்புத் தரமுன்வந்துள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். இங்குள்ள இரண்டு பாடசாலைகளுக்கும். முன்பள்ளிகளுக்கும் தளபாட வசதி செய்து தரப்படும். நூல்நிலையங்களுக்கு நூல்கள் வழங்கப் படும்” யூனிசெவ் நிறுவனர் குலேந்திரன் உறுதியளித்தார். ஒரு தொகை உபகரணங்களையும் கொடுத்தார்.
யூனிசெவ் நிறுவனம் வந்த செய்தி பரவியது. சாரதா, ராகினி, சுலோச்சனா, சாந்தன் ஆயத்தமாக இருந்தார்கள். சாந்தன் ஓடி வந்தான். கயல்விழியிடம் சென்றான். “நாங்கள் தயாராய் இருக்கிறோம்.” கூறிவிட்டுப் பறந்தான். “சேர், உணவு விசயம்.? கயல்விழி இழுத்தாள். “அதெல்லாம் ரெடி. நமது ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முதலில் இந்த வேலைகளைப் பார்ப்போம். ஒருமணிக்குச் சாப்பிடத் திரும்பி வரலாம். எல்லாத்தையும் அவர்களிடம் சொல்லி அனுமதியும் வாங்கிட்டன். அதிபர் உற்சாகமாகச் சொன்னார்.
அதிபர் வந்தவர்களை ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்தார். புறப்பட்டார்கள். கயல்விழியையும் மங்கையையும் கூடவே வரும்படி கேட்டுக் கொண்டார்கள். பிரதேசச் செயலாளர் கோயிலடியில் மக்களோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். சாரதா, ராகினி. சுலோச்சனா சாந்தன் மற்றையத் தொண்டர்களும் உற்சாகமாகச் செயற்பட்டனர்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP