Wednesday, October 6, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
9
அவர் என்ன சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.“எனது வேலையை விட்டு விலகிச் செல்லலாம். அவ்வளவுதான் அரசாங்க அலுவலர் என்ற வகையில் என்னால் செய்யக்கூடியது. “இந்தப் பிள்ளைகள் எல்லாரும் இவ்வளவு காலமும் படித்துப் போட்டு வேலைக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்குதுகள். என்ன கொடுமை. இதற்கு யார் பொறுப்புச் சொல்வது”? அவர்களிடம் தனது நிலையை விளக்கினார். அலுவலர்களுக்கு நிலைமை விளங்கியது. அரசாங்கம் எடுக்க வேண்டியவற்றை எப்படி ஒரு அரசாங்க அலுவலர் செய்ய முடியும்.? அவர்களே தமக்குள் பேசிக் கொண்டார்கள். கலைந்து சென்றார்கள்.பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தது. இரண்டு கிழமைகளாகியும் ஒருமுடிவும் இல்லை. கல்விச் செயலாளரால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாதிருந்தது. நேரே போராட்டத்தில் இருக்கும் பட்டதாரிகளிடம் வந்தார். எல்லோரையும் உற்றுப் பார்த்தார். தமிழர், முஸ்லிம் சிங்களவர் என்ற பேதமில்லாது பட்டதாரிகள் என்ற ஓரு குடைக்குக் கீழ் அனைவரும் இணைந்திருந்ததைக் கண்டு ஒருபுறம் அவருக்கு மகிழ்ச்சி. இளம் பட்டதாரிகள் தொடக்கம் முப்பத்தைந்து வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களைப் பாரத்ததும் அவரது மனம் கனத்தது. பசிக்கு முன்னால் இன மத மொழி வேறுபாடுகள் பொடியாகிவிடும்.
அவர் மிகவும் பணிவாக “உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுவதை நான் பாராட்டுகிறேன். எனது நிலைப்பாட்டையும் உங்களுக்குச் சொல்லவேண்டிய கடமையுண்டு. உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. நான் ஒரு அரசாங்கப் பணியாளன். வேலை கொடுப்பது எனது வேலையல்ல. அரசாங்கம் சொன்ன வேலையை மட்டும் என்னால் செய்ய முடியும். நமது பிரதேசத்தில் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் உண்டு. அதனை நான் மத்திய கல்வி அமைச்சுக்கு அறிவித்துப் போட்டன். மேலதிகமாக ஒன்றை உங்களுக்குச் சொல்லுறன். எங்கட நாட்டில கல்விக்கேற்ற வேலை வாய்ப்புகள் இல்லை. வேலைக்கேற்ற கல்வி இல்லை. இந்த நவீன காலத்தில் எங்களது கல்வித்திட்டத்தில் மாற்றம் வேண்டும். அதனை அரசியல் வாதிகளும் கல்விமான்களும் செய்யவேண்டும்”;. சற்று அமைதியாக நின்றார்.
நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் இளைஞர்கள். உங்களை நம்பி இந்த நாடு இருக்கிறது. கல்வி கற்றால் மட்டும் போதாது. அதனை வாழ்க்கையாக மாற்றம் வேண்டும். நம்மைச் சிந்திக்க வைப்பதற்கான அடிப்படையைக் கல்வி தருகிறது. அரசாங்கம் நீங்கள் படியுங்கள். வேலை தருவோம் என்று சொல்லியிருக்கிறதா? ஒரு பிணையில் கைச்சாத்திட்டுள்ளதா? இல்லையே. திருகோணமலையில் எத்தனையோ அமைச்சுக்களும், திணைக்களங்களும் இருக்கின்றன. கல்வி அமைச்சின்முன் மட்டும் ஏன் இவ்வகையான போராட்டங்களை நடத்துகிறீர்கள். உங்களுக்கு கல்வியை மட்டும்தான் தெரியும். பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுந்தான் தெரியும். இந்த உலகம் விரிந்தது. நமது கல்வித்திட்டம் ‘வைற் கொளர் யொப்’ உடை நலுங்கா உத்தியோகத்தை மட்டும் மையமாகக் கொண்டது. அதனால் வந்தவினைதான் இது”. காரின் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். இரண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பகட்டான கார்களில் இருந்து இறங்கி வந்தார்கள்.
அவர் அவர்களை அலட்சியம் செய்யாது தொடர்ந்தார். “நாம் யார் கைகளையும் எதிர்பார்க்கக் கூடாது. முடிந்தவரை நமது கால்களில் நிற்க முனையவேண்டும். சுனாமியும், யுத்தமும் பேரிழப்புகளும் நம்மை வாட்டி வதைத்துள்ளன. இங்கு போராட்டம் நடத்துவது ஒருவகையில் நல்லது. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மற்றது அவற்றை உலகுக்கு உணர்த்துகிறிர்கள். இப்படிப் பிரச்சினைகள் உள்ளன என்பதைப் பத்திரிகைகளும் புரிந்து எழுதுகின்றன”. அவர் பேசிக்கொண்டிருந்தார். அரசியல் வாதிகள் வந்து பட்டதாரிகளின் மத்தியில் அமர்ந்து கொண்டனர்.
“நான் உங்களைப் போல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவன்தான். பட்டம் பெற்று இரண்டு வருடங்களின் பின்தான் எனக்கு வேலை கிடைத்தது. நான் சும்மா வெறுமனே சோம்பி இருக்கவில்லை. அந்த இரண்டு வருடங்களும் எங்கட வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டத்துக் காணியில புகையிதை; தோட்டம் செய்தனான். பின்னேரத்தில் பொடியளுக்கு ரியூசன் கொடுத்தனான். போட்டிப் பரீட்சைகளுக்காகப் படித்தனான். இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறன். சுயமுயற்சி தேவை. நமது நாட்டில் உள்ள வளங்களை உங்களால் பயன்படுத்த முடியாதா? முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. நமது கிராம மக்களின் உழைப்பை நினையுங்கள். அவர்களது முயற்சியைப் பெறுவதற்கு வழிகளைப் பாருங்கள். அவர்களை அணிதிரட்டுங்கள். ஒரு தீக்குச்சியைப் பாருங்கள். அது ஊருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கப் போதுமானது. அந்தத் தீக்குச்சி ஏன் நீங்களாக இருக்கக் கூடாது”? அவர் தொடர்ந்தார்.
“இன்றைக்கு உங்களத் தேடி அரசியல் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கதைக்கவேண்டும். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படத் தூண்டவேண்டும். அப்போதுதான் அது சட்டமாகி உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு வரும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. எல்லோருக்கும் ஆசிரியர் பதவிகள் கிடைக்காது. கொஞ்ச நாளைக்குத் தொண்டர்களாகிப் பாருங்கள். படித்த படிப்புக்களைக் களத்தில் விதைத்துப் பாருங்கள். நீங்கள் இயங்கி மக்களை இயக்கும் சக்தியாக மாறிவிடுவீர்கள்.” அவர் நிறுத்திக்கொண்டு வணக்கம் சொன்னார். அப்படியே சென்றுவிட்டார். கயல்விழியின் மூளையில் ஒரு தீப்பொறி பளிச்சிட்டது. அவளது மனத்திரையில் படமாக விரிந்தது அவள் தீர்மானித்து விட்டாள்.
பட்டதாரிகளின் மூளையில் வெளிச்சம் படர்ந்தது. உண்மை புலப்படத் தொடங்கியது. இனித் தொடர்ந்தும் போராட்டம் நடத்துவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். தூரத்தில் இருந்து வந்தவர்கள் கலையத் தொடங்கினார்கள். தருணம் பார்த்திருந்த அரசியல்வாதிகள் பேசத் தொடங்கினார்கள். வேறுவழியின்றி பட்டதாரிகள் பொறுமை காத்தார்கள். “உங்கள் பிரச்சினைகளை உரிய இடத்துக்குக் கொண்டு சென்று நல்ல தீர்வைத் தருவோம். நீங்கள் அமைதியாகக் கலைந்து வீடுகளுக்குச் செல்லுங்கள். அவர்கள் சொல்லுமுன்பே பட்டதாரிகள் கலையத் தொடங்கினார்கள்.
“கயல்விழி நமது நிலைப்பாடு புரிந்து விட்டது. நாங்கள் கப்பலையும் விட்டிற்றம். என்ன செய்வது”?. மங்கை கேட்டாள். “இன்றைக்கும் மாமா வீட்டில நிற்போம். நாளைக்காலை கட்டைபறிச்சான் போவம். நீ கொஞ்ச நாளைக்கு என்னோட நில். பிறகு நீ விரும்பினால் உன் வீட்டுக்குப் போகலாம். என்ன”? கயல் விளக்கினாள். “நீ என்ன சொன்னாலும் நான் தட்டமாட்டன். சரி அப்படியே செய்வோம்”. கூறிக்கொண்டே மாமா வீட்டுக்குச் சென்றார்கள்.;
மாமி வரவேற்றேர். பிள்ளைகள் உற்சாகமின்றிக் காணப்பட்டனர். பிரியாவின் கண்கள் கலங்கியிருந்தன. முகம் வாடிக்கிடந்தது. சோர்ந்து போயிருந்தாள். “பிரியாக் கண்ணு என்னம்மா கண்கள் கலங்கியிருக்கு? ஏன் சோர்ந்திருக்கிறாய்”? கயல்விழி கேட்டாள். “அக்கா ஸ்கொலசிப் என்னைக் கொலசெய்யிது. அது ஸ்கொலசிப் இல்ல. எங்களக் கொலசெய்யிற ‘கொலசிப்’. எங்கட ரீச்சர் அன்பு காட்டாமல் அடிக்கிறா. பிசாசுகள் என்று திட்டி ஏசுறார். விளையாடினா அடிக்கிறா. எனக்குப் பள்ளிக்குப் போக விருப்பமில்ல. என்னை கூட்டிட்டுப் போங்க. இல்லாட்டி வேற பள்ளியல சேர்த்துவிடச் சொல்லுங்க.” அழுதழுது பிரியா கூறினாள். கயல்விழிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
குழந்தைகள் தெய்வத்துக்குச் சமனென்று சொல்கிறார்கள். அந்தத் தெய்வங்களை வதைப்பதா? நாம் அன்பைப் பிள்ளைகள் மேல் சொரிந்தால்தானே அன்பானவர்களை இந்த உலகில் உருவாக்கலாம். என்ன மனிதர்கள் இவர்கள்.? “பிரியாக்கண்ணு! நாளைக் காலை உன்னுடன் பாடசாலைக்கு வந்து ரீச்சருடன் கதைக்கிறன். சரியா.. இப்ப விளையாடுவமா”? கேட்டாள் “ஓம் வாங்கோ: என்றாள் பிரியா. சற்று நேரம் ஓடியொழிந்து விளையாடினார்கள். குமணன் கட்டிலில் பாய்ந்து ஓடியொளிந்து சந்தோசமாக விளையாடினான். பிரியா சந்தோசநிலைக்கு வந்து விட்டாள். “விளையாடியது போதும். மணி இப்போ ஆறரை. போய் முகம் கைகால் கழுவி வாருங்கள்”. அம்மாவின் கட்டளை வந்தது. அவர்கள் பம்பரமானார்கள்.
மாமா ஓய்வாக இருந்தார். மாமியும் கலந்து கொண்டார். அவரோடு சற்று நேரம் அளவளாவினார்கள். அவர்களும் பட்ட தாரிகளின் போராட்டம் பற்றித்தான் கதைத்தார்கள். “அரசாங்கம் சட்டமூலத்தை உருவாக்கி அதனைப் பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை பற்றிய அறிவித்தல்கள் வர்த்தமானியில் பிரசுரமாகி வெளிவந்தால்தான் நடைமுறை சாத்தியப்படும்.” மாமா தெளிவாக விளங்கப் படுத்தினார். எதிர்காலம் சூனியமாகத் தெரிந்தது. “எனினும் இருக்கும் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானிக்கலாம். அங்குகூட அரசியல்வாதிகளின் திருவிளையாட்டும் தில்லுமுல்லுகளும் தலைவிரித்தாடும். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆக்களுக்குத்தான் செல்வாக்குண்டு. இதுதான் இன்றைய நிலை”. மாமா அனுபவசாலி. விளக்கினார். .

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP