நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
7
கற்பகம்தான் எழுப்பினாள். “அதற்குள் விடிந்து விட்டதா”? கேட்டுக்கொண்டே எழும்பினார்கள். விரைவாகக் குளித்து ஆயத்தமானார்கள். அந்தக்கிராமத்தைச் சூழ்ந்து பலசிறிய கிராமங்கள் இருந்தன. பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ஒன்று சேர்ந்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். வாகனம் வந்ததும் ஏறிக்கொண்டார்கள். வாகனம் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்தது. தங்கள் பெற்றோர்களை உரிய இடங்களில் இருக்கையில் இருத்திவிட்டுச் சென்றார்கள். ஒலிவாங்கி நிகழ்வதை ஒலிபெருக்கிக் கொண்டிருந்தது. பட்டதாரிகள் அதற்கான உடைகளுடன் ஊர்வலமாக வந்தார்கள். வாழ்க்கையில் எல்லோருக்கும் பல்கலைக் கழகக் கல்வி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தைப் பல்கலைக் கழகக் கல்வி அளிக்கிறது.
தங்கள் பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்து ஒரு பட்டதாரியாகப் பவனி வருவதைப் பார்த்து எத்தனை பெற்றோர்களது உள்ளங்கள் களிப்படையும்? அதேபோல் ‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என்பதை அத்தனை பெற்றோரும் சான்றாக முறுவலோடு முகம் மலர்ந்து இருந்தனர். ‘மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல’;. என வள்ளுவர் கூற்றுக்கிணங்க வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் பண்பாட்டுப் பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து மேளவாத்தியங்கள் முழங்கி வந்தன. அவற்றுக்குப் பின்னால் பேராசிரியர்கள் புடைசூழப் பின்னால் பட்டதாரிகள் பவனி வந்தார்கள். சுந்தரத்தாருக்கு அது கண்கொள்ளாக் காட்சியாகத் தெரிந்தது. தங்கத்தின் கண்கள் கயலைத் தேடியலைந்தன. ஒவ்வொரு பெற்றமனமும் தத்தமது பிள்ளைகளிலேயே மொய்த்தன.
பெயர்களை அழைத்தார்கள். இப் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பரீட்சையில் சித்தியடைந்தமையினால் இப்பட்டத்தைப் பல்கலைக் கழகம் இவருக்கு வழங்குகிறது. எனப் பல்கலைக்கழகத் தலைவர் அறிவித்தார். பட்டத்துக்குரிய ஆவணங்களை உபவேந்தர் அளித்தார். ஒவ்வொருவராகச் சென்று தங்கள் பட்டங்களைப் பெற்;றார்கள். பட்டத்துக்குரிய அழகிய மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் சான்றிதழ்ப் பட்டயத்தைக் குழாய்வடிவான உறையினுள் இட்டு வழங்கினார்கள். வைபவம் முடிந்ததும் அனைவரும் வெளியில் வந்து கலகலத்து உரையாடினார்கள். பல்கலைக் கழக வளாகம் பொலிவுற்றுத் திகழ்ந்தது. பட்டத்தைப் பெற்றவர்களின் கைகளில் ஒரு பட்டயம் இருந்தது. அது அவர்களின் அடிமைச் சாசனம். ‘இனி நீ சமதாயத்துக்காக உழைக்க வேண்டும். நீ சார்ந்து வாழும் சமூகத்தின் உயர்வுக்காக உன்னை அர்ப்பணிக்க வேண்டும். உனது சந்தோசமெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடு. பணம், பதவி, அந்தஸ்த்து என்று சதா உழைத்துக் கொண்டே இரு’. என்பதற்கான சாட்சிப் பத்திரம். இனி வரவில்லாது செலவில்லை. உழைத்தால்தான் உணவு. உழைப்பதெல்லாம் உனக்காக அல்ல. என்பதை உணர்த்தும் சாசனம் அவை. இவற்றை உணராமல் கலகலத்துச் சிரித்தபடி பட்டதாரிகள் நின்றனர்.
“மச்சான் இனிமேல்தான் நமக்கு இருக்குது ஆப்பு. தொழில் தேடும் படலம் இன்று முதல் தொடங்குகிறது. நமது எதிர்காலம் எப்படி அமையப்போகின்றதோ யாருக்குத் தெரியும்”? அவன் அமலன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டான். “இன்று மட்டுந்தான் நமது நட்பு. இனியெங்கேயடா சந்திப்பது? அவனவனுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கும். அவற்றைப் பார்க்கவே நேரம் போதாது. என்றாலும் இப்ப செல்போன் இருக்குத்தானே? மறந்திராமல் தொடர்பு கொள்ளுங்க. நாங்க போய்வாறம்”. கூறிக்கொண்டு அந்த இளைஞர்கள் பிரிந்தார்கள். அவர்களின் உரையாடல் கயல்விழியின் செவிகளிலும் விழுந்தது.
“கயல்விழி நாங்க வந்த வாகனம் அதோ நிற்கிறது. அப்பா அம்மா அங்கேதான் நிக்கிறாங்க. நாங்க போவம்”. தோழிகளோடு கதைத்துக் கொண்டு நின்றவளை நினைவுக்குக் கொண்டு வந்தாள் மங்கை. ஏற்கனவே அப்பா அம்மா வாகனத்தின் பக்கம் காத்திருந்தார்கள். “ஐயய்யோ அப்பா அம்மா காத்திருப்பதை மறந்து விட்டோம் சரி போவோம்”. சென்றார்கள். வாகனம் மங்கையின் வீட்டுக்குச் சென்றது. இறங்கியதும் எல்லோருக்கும் நன்றி சொன்னார்கள். வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். உணவுக்குப் பின் எதிர்காலத் திட்டங்களை விவாதித்தார்கள். எதிர்காலம் சூனியமாகவே தென்பட்டது. தொழில் வாய்ப்பினைத் தேடுவதே நோக்கமாக இருந்தது.
கயல்விழி புறப்பட ஆயத்தமானாள். மங்கை கண்கலங்கி நின்றாள். “மங்கை எங்கட வீட்டு நிலை உனக்குப் புரியும் இன்னும் கொஞ்சநாளில் வீட்டு வேலைகள் முடிந்து விடும். நீ இங்கேயும் வேலையைத் தேடு. நானும் அங்கே முயற்சிக்கிறேன். இப்பதான் நாங்க மீள்குடியேறியுள்ளோம். நிறைய வீட்டு வேலைகள் உண்டு. அவற்றை முடிக்கவேணும். இனியென்ன நமக்கு? வேலைதேடும் படலம்தானே? நமது எதிர்காலத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்தா, இதனை வைத்துக் கொள். இது எனது அன்புப்பரிசு”. கூறிக்கொண்டு ஒரு புது கையடக்கத் தொலைபேசியைக் கொடுத்தாள். மங்கை பிரமித்துப் போனாள். அதனைக் கையிலெடுத்துப் பார்த்தாள். அது நவீன செல்போனாக இருந்தது. மங்கை அவசர தேவைகளுக்காக தோழிகளிடம் தொலைபேசியினைப் பெற்றுக் கொள்வாள். சொந்தமாக ஒரு கையடக்கத் தொலைபேசி வைத்துக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை.
அதேபோல்தான் கயல்விழியும் இருந்தாள். பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வறுமை அவளை வாட்டியது. அப்பாவை வருத்துவதற்கு அவளுக்கு மனமில்லை. நான்கு வருடங்களைக் கழித்துவிட்டாள். கயல்விழியின் படிப்பு முடிந்து கட்டைபறிச்சானுக்கு வந்தபின்தான் மகளின் நிலையை உணர்ந்தார். படிக்கும்போதே பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கிறார்கள். தனது மகள் இதுவரை தன்னிடம் கேட்கவில்லை. அதனை வாங்கிக் கொடுக்கும் பொருளாதார வசதியும் இல்லை. ஆனாலும் அவரது மனதில் அது குடைந்து கொண்டிருந்தது.
சுந்தரத்தாரின் நண்பர் ஒரு கையடக்கத் தெலைபேசியைக் காண்பித்தார். “சுந்தரம் இப்ப கட்டைபறிச்சானில் இருக்கிறாய். அவசரத் தேவைகளுக்கு இது நல்லது. ஆறுதலாகக் காசைத் தா. உனக்கு உதவாட்டியும் உன்ர மகள் படிச்சவ. அவளுக்காவது உதவும்”;. சொல்லிக் கொடுத்தார். மகளின் பரீட்சை முடிவு வந்ததும் அவருக்குச் சந்தோசம். “இந்தா மகள். இது அப்பாவின் பரிசு”. சொல்லிக் கொடுத்தார். அவள் மெய்மறந்து போனாள். ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார்.
கயல்விழியிடம் ஒரு குணமிருந்தது. அளவோடுதான் செலவு செய்வாள். மிஞ்சும் சில்லறைக் காசு உண்டியலில் சேரும். மாதமுடிவில் எண்ணிப்பார்ப்பாள். அதனைத் தொடமாட்டாள். வங்கிக்குப் போகும்போது தனது சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து விடுவாள். பட்டமளிப்பு விழாவுக்குச் செல்லும்போது மங்கையை நினைத்துக் கொண்டாள். அவளின் தேவையை கயல் நன்கறிவாள். தனது சேமிப்பில் உள்ள பணத்தை அப்பாவிடம் கொடுத்தாள். தன்னிடம் உள்ள கையடக்கத் தொலைபேசிபோல் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டாள். அப்பா அதனை வாங்கிக் கொடுத்தார். அதனையே மங்கைக்குக் கொடுத்தாள்.
மங்கை மகிழ்ந்து போனாள். கயல்விழியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். “உன்னைப் போல் தோழி கிடைக்க நான் என்ன தவம் செய்திருக்கிறன்”. அவள் கண்கள் பனித்தன. அவள் கொடுத்த கையடக்கத் தொலைபேசியில் கயலோடுதான் முதன்முதல் பேசினாள். கயலைப் படமெடுத்துக் கொண்டாள். மாறிமாறி எல்லோரும் சேர்ந்து நின்று படமெடுத்துக் கொண்டார்கள். “மகள் நேரமாகுது. நாங்க போய் வாறம்”;. சுந்தரத்தார் நினைவு படுத்தினார். திருகோணமலை பேருந்து வந்தது. ஏறிப்புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பி விட்டுக் கண்கலங்க மங்கை நின்றாள்.
திருகோணமலை வாடகை வீட்டை விட்டுப் பறப்பட்டார்கள். சொந்த ஊரில் குடியிருப்பதில் ஒரு சுகமிருந்தது. எந்தநேரமும் சுறுசுறுப்பை ஏற்படுத்திவிடும். இடம்பெயர்ந்ததால் காடு பற்றி அழிந்து போன கட்டைபறிச்சான் கிராமம் புத்துயிர் பெற்று விட்டது. அகதிமுகாம்களில் அல்லலுற்ற சனங்கள் நிம்மதியைச் சிறிது சிறிதாக உள்வாங்கிக் கொண்டனர். ஆனாலும் இளசுகளின் எண்ணங்கள் விசித்திரமாய்த் தெரிந்தன. அவர்களது போக்கில் கலாச்சாரச் சீர்கேடுகள் தென்பட்டன. இளைஞர்களிடம் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் தென்பட்டன. கல்வியறிவு தொடரவில்லை. படிப்புத் துண்டிக்கப்பட்டு விட்டது. சினிமாப் போக்குகள் அவர்களை ஆட்கொண்டு விட்டன. அவர்களைச் சினிமா கதாநாயகப் போக்குகளில் சிக்கவைத்து விட்டது. பெரியவர்களை மதிக்கத் தெரியாத பாரம்பரியம் உருவாகிவந்து கொண்டிருப்பதைப் பலரும் உணர்ந்தார்கள். அவர்களை மீட்டேடுப்பதற்கு வழி தெரியவில்லை
பாடசாலைகளில் இடைவிலகல் அதிகமாகிவிட்டது. பாடசாலைக்கு ஏன்போகவேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்திருந்தது. வீட்டுத்தோட்டக் காணிகள் பற்றை பற்றிக்கிடந்தன. உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். சுந்தரத்தார் வித்தியாசமான போக்குடையவராக இருந்தார். அவருக்கு உழைப்புத்தான் முக்கியம். நாம் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று பாடுபட்டார். பல இளைஞர்களும் யுவதிகளும் வேலையின்றிக் குந்தியிருந்தார்கள். நிலம் இருந்தும் முதலில்லாமல் பலர் தொழில்களைக் கைவிட்டார்கள்.
கயல்விழி வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் பதிந்திருந்தாள். கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள சேதியைத் தெரிவித்து அதில் கலந்து கொள்ளுமாறும் செய்தி வந்தது. ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவளும் இருந்தாள். மங்கைக்கும் செய்தி போனது. அவள் புறப்பட்டுவிட்டாள். வரும் திங்கள் முதல் சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்தது. சனிக்கிழமை பகல் கயல்விழியின் படலையில் மங்கை நின்றாள். கயல்விழிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. மங்கையைக் கண்டதும் அவ்வளவு சந்தோசம். சுந்தரத்தாரும் தங்கமும் அவளை வரவேற்றார்கள்.
கயல்விழியும், மங்கையும் மாலை கட்டைபறிச்சானைச் சுற்றிச் சைக்கிளில் வலம் வந்தார்கள். குடியேறிய மக்கள் தங்கள் வளவுகளைத் துப்பரவாக வைத்திருந்தனர். முடிந்தளவு பயிர்களை நட்டிருந்தனர். தென்னைகள் தலையை இழந்து நின்றன. பெரிய மரங்கள் தறிபட்டுக் கிடந்தன. பல வளவுகளில் பற்றைகள் வளர்ந்து செழித்திருந்தன. எங்கும் வீடுகளின் இடிபாடுகள் தென்பட்டன. கூரையில்லா வீடுகள் சிரித்தன. திருத்த வேலைகள் நடந்தன. பல கோயில்கள் அழிபாட்டுடன் பாழடைந்து காட்சிதந்தன. பொது வேலைகளுக்கான தேவைகள் இருந்தன. வீடுகளில் இளம்யுவதிகள் சோம்பிக்கிடந்தனர். பலதையும் பார்த்தவாறு உலாவந்தார்கள். நமது இனத்தவர்களை அடிமை வாழ்வு வாழ வழிப்படுத்திவிட்டாரகள்;. உழைக்காமல் உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இந்த நிலையை எவ்வாறு மாற்றியமைக்கலாம்.? கயல்விழியின் உள்ளத்தில் ஒரு காட்சி உதயமாகத் தொடங்கியது.
உலாமுடிந்து வீட்டுக்கு வந்தார்கள். கயல்விழியின் தோட்டத்தில் கத்தரி, மிளகாய் போன்ற பயிர்கள் நேசறியில் உள்ள பிள்ளைகள் போல் துள்ளி வளர்ந்திருந்தன. நிரைநிரையாய் பூஞ்செடிகள் மொட்டுகளைத் தள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு செடியாய் தொட்டு அளைந்து வந்தாள். அவளது செயல்கள் மங்கைக்குப் பிடித்திருந்தன. அவளும் கயல் செய்வதைப் போல் செய்தாள். கயல்விழியின் கைகளைப் பற்றித் தடவினாள். பின் பூத்திருந்த ரோஜா இதழ்களைத் தடவிப் பார்த்தாள். புன்னகைத்தாள். “ஏன் மங்கை சிரிக்கிறாய்”? வினோதமாகக் கேட்டாள். “இல்லை இந்த ரோஜா இதழ்கள் மென்மையானவையா? அல்லது என் தோழியின் உள்ளங்கை மென்மையானதா என்று பரிசோதனை செய்தேன்”? பதிலளித்தாள். “எது மென்மையானது. ரோஜா இதழோடு நமது கைகளை ஒப்பிடலாமா…ஃ ம்….. சொல்லு”. மெல்லக் குலுங்கினாள்.
தொடரும்
0 comments:
Post a Comment