Saturday, October 9, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
11
“இங்கே பெண்கள் மட்டுமல்ல. நமது இளைஞர்களையும் காண்கிறேன். தம்பி தங்கைகளைக் காண்கிறேன். சொன்னால் செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் உண்டு. நாளையில் இருந்து இல்லயில்லை. இன்றிலிருந்து நாங்கள் எல்லோரும் புதுமனிதர்களாவோம். எங்களால் முடியும். சாதித்துக் காட்டுவோம். நாம் ஒன்றென எழுவோம்”. கனல் பறக்கக் கயல்விழி பேசினாள். கோயில் முற்றத்தில் திரண்டிருந்தவர்கள் அனைவரும் இளயவயதினர். எதனையும் சாதித்துக் காட்டும் சக்தி கொண்டவர்கள். அவர்கள் தோள்கள் தினவெடுத்தன. நிமிர்ந்திருந்தார்கள்.
“முதலில் ஒரு செயல்திறன்மிக்க தலைவரைத் தெரிவோம். செயலாளரைத் தெரிவோம். நல்லதொரு பொருளாளரைத் தெரிவோம். ஏழுபேர் கொண்ட செயற்குழுவைத் தெரிவோம். உடனடியாக அதனைச் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் பேசித்தீர்மானியுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்.” அமர்ந்து கொண்டாள். மங்கை கயல்விழியின் செயற்பாடுகளைக் கண்டு பிரமித்தாள். “இவ்வளவும் உன் உள்ளத்தில் எப்படி உருவானது?” வியப்போடு கேட்டாள். “பல்கலைக் கழகத்தில் கற்கும்போது நமது மக்கள் படும் வேதனைகள் தந்த பாடங்கள். நீகூடச் சொல்வாயே. எப்படி நமது மக்களுக்குச் சேவைசெய்வதென்று. அதனைத்தான் இப்போது தொடங்கியுள்ளோம்”. கயல்விழி கூறினாள்.
“தொடங்கியுள்ளோம் என்றால் நானுமா”?" ஆச்சரியத்துடன் மங்கை கேட்டாள். “ஆமாமாம் நீயில்லாமலா? நீதானே என்னை உன்னோடு கூட்டிச் செல்லென்று சொன்னாய். நமக்கு நல்லதொரு வேலை கிடைக்கும் வரை மக்களுக்குத் தொண்டாற்றுவோம். அவர்களை வலுப்படுத்தி அவர்களிடமே ஒப்படைப்போம். அதுவரை அவர்களை வழிநடத்துவோம்”. கலகலத்துச் சிரித்தாள். மங்கையும் சேர்ந்து கொண்டாள். “சரி இத்திட்டம் நிறைவேறுமா”? மங்கை கேட்டாள். “முயற்சிப்போம். வெற்றி நிச்சயமே. ஜெயமுண்டு. பயமில்லை”. இராகத்தோடு காதில் ஓதினாள்.
இளைஞர் பக்கமிருந்து குரல்கள் ஒலித்தன. உற்றுக் கேட்டாள் “அக்கா நாங்களும் இதில் பங்கு கொள்ளலாமா? எங்களையும் சேர்த்தால் எல்லோரும் சேர்ந்து தேரை இழுக்கலாம். வெற்றி கிடைக்கும். எங்களுக்குள்ளும் பட்டதாரிகள் இருக்கிறார்கள். ஏ. ஏ. எல் படித்தவர்கள் இருக்கிறார்கள்.”. இளைஞர்கள் சார்பில் சாந்தன் எழுந்து விண்ணப்பித்தான். “நீங்கள் இல்லாமலா? நாம் எல்லோரும் சேர்ந்துதான் நமது ஊரை அபிவிருத்தி செய்யப் போறம். அதுதான் நமது எல்லோரதும் அபிலாசைகளாகும். சரி நீங்களும் இப்படி வந்து அமருங்கள்.” சொன்னதும் அமைதியாக வந்திருந்தார்கள். “முதலில் சபைக்குரியவர்களைத் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்யும்போது தானாக முன்வந்து செயல்களில் ஈடுபடுபவர்களாக இருப்பது நல்லது”. அவள் முடிக்கவில்லை.
“செல்வி. கயல்விழி அவர்களை நாங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்கிறோம். அவர் எந்தவித மறுப்புமில்லாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.” வேண்டுகோளோடு முன்மொழியப்பட்டதோடு வழி மொழிதலும் செய்தாகி விட்டது. அதேபோல் செல்வி சாரதாவை செயலாளராகத் தெரிவு செய்தார்கள். பொருளாளராக சாந்தனைத் தெரிவு செய்தார்கள்.
சாந்தன் எழுந்து “முதலில் பெண்களே இருக்கட்டும். பின்னர் நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். எப்போதும் உங்களோடு சேர்ந்து செயற்படுவோம்”. என்றான். “செயற்குழுவில் “எல்லோரும் கலந்திருப்போம். அப்போதுதான் இணைந்து செயற்படலாம். எல்லோரும் பொறுப்புக் கூறுபவர்களாக மாறவேண்டும்”. பெண்கள் பகுதியில் இருந்து குரல்கள் வந்தன.
பொருளாளராக திருமங்கையை முன்மொழிந்தார்கள். திருமங்கை அதனை மறுத்தாள். “ உங்கள் வளர்ச்சிக்கு எனது பூரணமான வாழ்த்துக்கள். நான் ஊருக்குப் புதுசு. சில நேரம் நான் எனது ஊருக்குப் போய்விடலாம். அதனால் உங்களில் ஒருவரைத் தெரிவு செய்யுங்கள்”;. மங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்பபடுத்தினாள். “திருமங்கைதான் நமது சங்கத்தின் இணைப்பாளராகச் செயற்பட இருக்கிறார். அவர் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பாளராக இருப்பார். அத்துடன் கல்விக்கும் பொறுப்பாக இருந்து நமக்காக உழைப்பார்”;. கயல்விழி விளக்கினார். “யாராவது தாங்கபளாகவே விரும்பிப் பொருளாளராக இருப்பதற்கு முன்வந்தால் சந்தோசமாக இருக்கும். முன்வாருங்கள்.” என்றாள்.
“நான் வருகிறேன்.” என்ற குரல் ஒலித்தது. சத்தம் வந்த திசையைப் பார்த்தார்கள். அங்கே ராகினி எழுந்து நின்றிருந்தாள். ராகினி கிராமத்தின் எழுச்சிக்கா உழைக்கக் கூடியவர். அத்துடன்; அவர் ஒரு பட்டதாரி என்பதும் கயல்விழிக்கு நன்கு தெரியும். “மிகப் பொருத்தமானவர்.” அனைவரும் ஆரவாரித்தனர். நல்லதொரு செயலாற்று சபையும் தெரிவாகியது. சபைக்குச் ‘சேர்ந்துவாழ்’ என்ற பெயரை ஏகமனதாகத் தெரிவு செய்தார்கள்.
கல்வி, கலாசாரக் குழு, முதலுதவிக்குழு, சுகாதாரக் குழு, சிரமதானக்குழு எனப்பல குழுக்களைத் தெரிவு செய்தார்கள். பெண்களை மட்டும் எழுந்து நிற்கும்படி கயல்விழி கூறினாள். அவர்கள் எழுந்தார்கள். “என்னைச் சுற்றி எல்லோரும் வட்டமாக நில்லுங்கள்.” என்றாள். “நான் கைகளைத் தட்டிக் கொண்டே இருப்பேன். நீங்கள் ஒருவருக்குப் பின்னால் ஒருவர் வட்டமாக ஓடவேண்டும். ஓடிக்கொண்டே ஏதாவது ஒரு இலக்கத்தைச் சொல்வேன். அதனை நன்கு கேட்டுச் சோடி சேரவேண்டும். நான் இரண்டு சொன்னால் இருவராகச் சேரவேண்டும். ஐந்து சொன்னால் ஐந்து பேர் சேரவேண்டும்”. விளக்கினாள். முதலில் ஓடும்படி கூறினாள். இலக்கம் இரண்டைக் கூறினாள். இருவராகச் சோடி சேர்ந்தார்கள். ஒவ்வொரு இலக்கமாகச் சொல்லி வந்தாள்.
விளையாட்டு சந்தோசத்தைக் கொடுத்தது. “பலவருடங்களுக்குப் பிறகு இன்றைக்குத்தான் சிரித்திருக்கிறோம். மனமெல்லாம் இறுக்கமாக இருந்தது. இப்போது இளகி இலகுவாகிறது. சந்தோசமாக இருக்கிறது” என்றார்கள். திருமங்கையைப் பார்த்தாள். “கயல் உனக்கு மனவளக்கலை தெரியும் என்ன”? ஆச்சரியத்தோடு கேட்டாள். “நமது மக்கள் மனவடுவுக்குள்ளாகித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெரிய சுமையாக இருப்பதாக நினைக்கிறார்கள். இதற்கு மருந்து இவ்வகையான சின்னச்சின்ன செயற்பாடுகள்தான். இதனைத்தான் ‘சைக்கோ சோஷியல் ரீட்மென்ட்’ என்று சொல்வார்கள். எதனை எதனால் தீர்க்கலாம் என்று யோசித்தால் விடை வந்தே தீரும். நமது ‘சேர்ந்துவாழ்’; சங்கம் மக்களை வாழ வளப்படுத்தும்” ஒரு புன்னகையோடு சொன்னாள்.
இப்போது நிறைவாக பத்து என்றாள். பத்துப் பத்துப் பேர்களாகச் சேர்ந்தார்கள். “சரி இன்னொரு தடவை விளையாடுவோம். அதன்பின் கடமையைத் தொடருவோம்.” என்றாள். உற்சாகமானார்கள். இளைஞர்களுக்கும் விளையாட்டு வேண்டும் என்றார்கள். “உங்களுக்கும் தரப்படும்”. என்றாள். விளையாட்டுத் தொடர்ந்தது. பல இலக்கங்களைச் சொன்னாள். விளையாடினார்கள். ஐந்து என்றாள். ஐந்தைந்து பேராக நின்றார்கள். சரி ஒவ்வொரு ஐந்து பேரும் ஒரு குழு. நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களை எழுதிக் கொள்ளுங்கள். என்றாள். ஒவ்வொரு குழுவும் உங்கள் குழுவில் நமது ஊரில் உள்ள இன்னும் ஐந்து பேரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருகுழுவில் பத்து அல்லது பன்னிரெண்டு பேர் இருக்கலாம். அதற்குமேல் ஒருகுழுவில் இருப்பது நல்லதல்ல”. தொடர்ந்து விளக்கிநாள்.
“ஒவ்வொரு குழுக்களும் இன்னும் ஐந்து பேரை அடுத்த கிழமைக்குள் சேர்த்து விடவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாயாவது சேமிக்க வேண்டும். ஒரு கிழமைக்குப் பதிநான்கு ரூபாய் இலகுவாகச் சேர்த்து விடலாம். ஒவ்வொரு குழுவும் உங்களுக்குள் ஒரு தலைவர், செயலாளர், ஒரு பொருளாளர் எனத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தக் குழுக்கள் ஒவ்வொருகிழமையும் சந்திக்க வேண்டும். மாதமொருமுறை குழுக்கள் கூடிச் சேர்ந்த பணத்தை வங்கியில் சேமிப்பில் இடவேண்டும். இந்தச் சேமிப்பு முறையை கட்டாயப் படுத்திக் கொள்வது உங்களது கடமையாகும்.” சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள்.
“இளைஞர்களும் ஏனைய யுவதிகளும் நமது ஊரில் உள்ள வீடுகள் அத்தனைக்கும் செல்லவேண்டும். கணப்பெடுப்புப் பதிவுகனை மேற்கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், வயது, பால், கல்வித்தகைமை, செய்யும் தொழில், மாதவருவாய், வீட்டின் தன்மை, முற்றாக உடைந்துள்ளதா? கிணறு, மலசலகூட வசதி அனைத்தையும் பதிந்து தரவேண்டும். இவை இருந்தால் நமது கிராமத்தின் தேவைகளை விரைவில் இனம் கண்டு கொள்ளலாம். செயலாளர் சாரதா இதற்கான கொப்பிகளைத் தருவார். இரண்டு மூன்று பேராகச் சேருங்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பதிவினை மேற்கொள்ளுங்கள். நான் சொல்வது விளங்குகின்றதா”? கேட்டாள். “ ஓம்” பதில் வந்தது.
“இந்தப் பதிவின்படி யாருக்கு என்னதொழில் தெரியும் என்பது தெரிந்து விடும். பாலர் பாடசாலைகள் தேவை. அதனை தற்காலிகமாக பொதுவான இடத்தில் தொடங்குவோம். முதல் வேலையாக நாளைக் காலையில் இந்தக் கோயிலில் சிரமதானப்பணியைச் செய்வோம். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நீங்கள் பார்த்திருக்க நமது கிராமம் விழித்தெழும். நமது செயற்திட்டம் அழகானது. பயன்தரக்கூடியது. ஒரு தேன்கூடு கட்டுவதற்கு எத்தனை தேனீக்கள் பாடுபடுகின்றன. உயிரினங்கள் நமக்குப் தமது வாழ்கை முறையினூடாகக் கற்றுத்தரும் பாடங்கள் நிறையவே உண்டு. அவற்றைப் பின் பற்றுவோம். உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்”;. என்றாள்.
சபையில் அமைதி நிலவியது. “என்ன பேசாமல் இருந்தால் எப்படி? அக்கா முன் வைத்த கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோம். நல்லதொரு பொருளை அவர் நமகுக்குக் காட்டியுள்ளார். அந்தப் பொருளை நாம் அடையவேண்டும். அதற்கு உழைப்போம். நாங்கள் அதில் உறுதியாக இருக்க்pறோம்”. சாந்தன் உறுதியான முடிவினைத் தெரிவித்தான்.“அக்கா விபரிக்கும் போது நமது கிராமம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். பாரதியை நினைத்துக் கொண்டேன். பாரதி ‘நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று பாடினான். அதனையே இந்தக் கற்பக விநாயகரிடம் கேட்டு நிற்கிறோம். எங்கள் வாழ்வு சிறக்க அவன் அருளை வேண்டி நிற்கிறேன்”. உணர்வுபூர்வமாக மலர்விழி தெரிவித்தாள்.
“அக்கா எங்களுக்கும் ஒரு விளையாட்டு” சாந்தன் கேட்டுக் கொண்டான். சரி இதில் எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம். எல்லோரும் கலந்து நிற்போம். மூன்று பேர்வீதம் ‘அஹ்கன்னா’ அதாவது அடுப்புக்கல் பேன்று நில்லுங்கள். இரண்டு பேர் கைகளை உயர்த்திக் கூரையாக நிற்க வேண்டும். அது வீடாகும். மற்றவர் அதன் கீழ் குந்தியிருக்க வேண்டும்.” இருவரை அழைத்துச் செய்து காட்டினாள். “எங்கே செய்யுங்கள்.” அவள் சொன்னபடியே செய்தார்கள். கயல்விழியின் சத்தம் மட்டும் ஒலித்தது. “இப்போது ‘ஆடு’ என்று சொல்வேன். குந்தியிருப்பவர்கள் தங்கள் வீட்டைவிட்ட ஒடிச் சென்று வேறு வீடுகளுக்குள் இருக்க வேண்டும். செய்து பார்ப்போமா”? கேட்டாள். “ஓம் “என்ற பதில் வந்தது. “ஆடு” சத்தமிட்டுச் சொன்னாள். சின்னப் பிள்ளைகள் போல் ஆரவாரித்துச் சிதறியோடினார்கள். வேறு வீடுகளுக்குள் சென்று குந்தினார்கள்.
“சரி. இப்பேது ‘வீடு’ என்று சொல்வேன். வீடாக நிற்பவர்கள் கலைந்தோடி ஆடுகள் இருக்கும் இடங்களுகளில் வீடாக நிற்கவேண்டும். விளங்கினதா”? கேட்டாள். “ஓம் “என்ற பதில் வந்தது. “வீடு” என்றாள். ஆரவாரித்துச் சிதறியோடினார்கள். முடிந்ததும் ஆடு, வீடு என்று மாறி மாறிச் சொன்னாள். கலகலப்பாகச் செய்தார்கள். சிரித்து மகிழ்ந்தார்கள்.
“இன்னுமொரு முறை கவனியுங்கள். இப்போது ‘எல்லாம்’ என்று சொல்வேன். அப்போது எல்லோரும் கலைந்து ஓடி முதல் நின்றது போல் நிற்கவேண்டும். ஆனால் ஒன்றாக நின்றவர்கள் மீண்டுமொரு முறை சேரக்கூடாது. கலந்து நிற்க வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்”;. விளக்கினாள். புரிந்து கொண்டார்கள். சொல்லத் தொடங்கினாள். முதலில் “வீடு” என்றாள். செய்தார்கள். “ஆடு” என்றாள். செய்தார்கள். “எல்லாம்” என்றாள். கலகலத்தார்கள் சந்தோசமாய்ச் செய்தார்கள். மாறி, மாறிச் சொல்லிக் குதூகலிக்க வைத்தாள். கயல்விழியில் இருந்த மதிப்பு பன்மடங்காக அதிகரித்தது. “அக்கா நல்லாயிருந்தது. சந்தோசமாக இருந்தது.” என்றார்கள்.
“நீங்கள் என்னைத் தலைவராகத் தெரிவு செய்துள்ளீர்கள். எங்களது பயணம் இன்றிலிருந்து தொடங்குகிறது. முதற்கட்டமாக கோயிலில் சிரமதானம் செய்வோம். அடுத்து நீங்கள் இப்போது இருக்கும் உங்கள் காணியை நீங்களே துப்பரவாக்குகிறீர்கள். அதற்கு ஒரு கிழமைதான் அவகாசம். நமது காணியில் நடுவதற்குப் போதுமான பயிர் வகைகள் ஒருகிழமைக்குள் வந்து சேர்ந்து விடும்”. திடுதிப் என்று அறிவித்தாள். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கிராமத்தின் எழுச்சி பற்றிய கனவில் மிதந்தார்கள்.
“அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை. எங்கள் கால்களில் நாங்கள் நிற்போம். எங்கள் வீடுதான் தற்காலிக அலுவலகமாகப் பயன் படுத்துவோம். உங்கள் அபிப்பிராயம் என்ன”? வினவினாள். “அதுதான் பொருத்தம்”. ஏற்றுக் கொண்டார்கள். புதிய கனவுகளோடு கலைந்து சென்றார்கள். கூட்டம் கலைந்தது. கயல்விழி திருமங்கையுடன் புறப்பட்டாள். வீடுவரை தொடர்ந்து தொண்டர்கள் வந்தார்கள். கயல் “நாளை சந்திப்போம்”; கூறிக்கொண்டு படலையைத் திறந்து கொண்டு சென்றாள். அவளோடு வந்தவர்கள் தமது வீடுகளுக்குச் சென்றார்கள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP