Friday, October 15, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
17
மூன்று வாகனங்கள் நின்றன. அருண் முக்கியமான பாதைகளை சாரதியிடம் சொல்லியிருந்தான். யூனிசெவ் வாகனத்தில் அவன் ஏறிக்கொண்டான். அதில் கயலையும், மங்கையையும் ஏறும்படி குலேந்திரன் கேட்டுக் கொண்டார். வழியில் சந்தேகங்களைக் கேட்டறியும் நோக்கம் அவருக்கு. சில இடங்களில் வாகனங்கள் நின்றன. வீட்டுத் தோட்டங்களைப் பார்வையிட்டனர். மக்களோடு அளவளாவினார்கள். கோயிலடிக்குச் சென்றார்கள். பெருந்திரளான சனங்கள் நின்றார்கள். “ஊரைப்பார்க்க அழகாக இருக்கிறது. தெருக்கள் துப்பரவாக உள்ளன. மிஸ். கயல்விழி உங்களப்போல ஒவ்வொரு ஊரிலும் சிலர் இருந்தால் மக்கள் பயனடைவார்கள். நீங்கள் இருவர் இங்கிருந்து எப்படி எல்லா மக்களையும் அணிதிரட்டினீர்கள்?” கேள்வியாகத் தொடுத்தார். அருணை ஓரவிழியால் பார்த்தாள்.
“உங்களைப் போல் சிலநல்ல உள்ளங்கள் இருந்து உற்சாகம் தருவார்கள் என்ற நம்பிக்கைதான் சேர்”. சொல்லித் தலை கவிழ்ந்தாள். அவள் முகம் நாணத்தால் சிவந்து மலரந்;தது. யூனிசெவ் நிறுவன வாகனத்துள் விவசாயப் பணிப்பாளரும் இருந்தார். கயல்விழிக்கு இது தெரியாது. “அடுத்த கட்ட நடவடிக்கையென்ன”?. வினவினர். “சேர் இங்கிருக்கும் இளைஞர் யுவதிகளை விவசாயத்தில் ஈடுபடுத்தப் போகிறோம். அவர்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் நிலத்தைப் பார்த்திருக்கிறோம். விவசாயப் பணிப்பாளரைச் சந்தித்து அவரது உதவியைப் பெறப் போகிறோம். எல்லாருக்கும் வேலையிருந்தால் பிரச்சினைகள் வராது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தங்கள் காலில் தாங்களே நிற்பார்கள்.” விளக்கினாள்.
“விவசாயப் பணிப்பாளரிடம் எப்படியான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?” விவசாயப் பணிப்பாளரே கேட்டார். “விவசாயப் பணிப்பாளர் நல்ல மனம் கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறம். இன்னும் சந்திக்கவில்லை”. அருண் தனக்குள் சிரித்துக் கொண்டான். கயல்விழியின் வெகுளித் தனத்தை ரசித்தான். அவள் சொல்லத்தொடங்கினாள். “விவசாய சம்பந்தமான அறிவுரைகள், அடிக்கடி வயல்களையும். தோட்டங்களையும் பார்த்து, நோய் பீடைகள் இருந்தால் அதற்குரிய வழிகளைக் காட்டும்படி கேட்போம். இந்த நிலத்துக்குப் பொருத்தமான நல்ல விதைகளை அறிமுகம் செய்யும்படி கேட்க இருக்கிறோம். இந்த இளைஞர் யுவதிகளுக்கு விவசாயத்தில் பயிற்சிகளை வழங்கும்படியும், நல்ல பயன்தரக்கூடிய நாற்றுக்களையும், மரக்கன்றுகளையும் கேட்கவிருக்கிறோம். விவசாயப் பணிப்பாளரை விரைவில் சந்திக் இருக்கிறோம்”. அவள் அடுக்கிக் கொண்டு போனாள். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
வாகனங்கள் கோயிலடியில் தரித்தன. இறங்கிக் கொண்டார்கள். பிரதேச செயலாளர் அவர்களை வரவேற்றார். கூட்டம் கூடுவதற்கான ஏற்பாடுகளை சாந்தன் குழு செய்திருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மக்களைப் பார்த்தார்கள். பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட முகங்கள். ஓடியோடிக் களைத்து மெலிந்த உடல்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவேசத்தோடு போராடும் துணிவுடன் நின்றார்கள். அவர்கள் மேல் அனைவருக்கும் அனுதாபம் ஏற்பட்டது. வசதியாக வாழ்ந்த மக்கள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டார்கள். அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகள் வழிநடத்துகிறார்கள்.
“அரசாங்க உத்தியோகத்தர் நாங்கள். எங்களால் ஒரு குறிப்பிட்ட உதவிகள்தான் செய்யலாம். உங்கள் ஒத்துழைப்புக் கிடைத்தால் அவற்றை இருமடங்காகச் செய்யலாம். உங்களுக்கும், எங்களுக்கும் பெருமைதரக்கூடிய செயல்களில் இந்த ஊர் இளைஞர்களும். யுவதிகளும் இயங்குகிறீர்கள். செல்வி. கயல்விழியும் அவரது குழுவும் இந்த ஊர் முன்னேற்றத்துக்கு எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவர்கள் எல்லாவற்றையும் செயலில்தான் காட்டுகிறார்கள். இந்த ஊரின் தேவைகளை ஆவணப்படுத்தியுள்ளார்கள். எல்லாத்தரவுகளையும் வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் எவ்வாறு இயங்குவதென்று திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஓன்று கல்வி. மற்றது சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றம். இளைஞர் யுவதிகளுக்குக் காணிகள் கேட்டுள்ளார்கள்”. அவர் நிறுத்தினார். அவரது கண்கள் ஒரு சுற்றுச் சற்றிப் பார்த்தன.
“நமது மாவட்டத்தில் உள்ள அனைத்துத் திணைக்களத் தலைவர்களுக்கும் உங்கள் நிலை பற்றி செல்வி. கயல்விழி எழுதியுள்ளார். அவற்றை எனது சிபார்சுடன் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன். இங்கே விவசாயப் பணிப்பாளர் இதோ வந்திருக்கிறார்” அவரைச் சுட்டிக் காட்டினார். கயல்விழியின் கண்கள் விவசாயப் பணிப்பாளரைத் தேடியது. அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவரோடுதான் தான் கதைத்து வந்தததை நினைந்து கொண்டாள். “சே..தெரியாது போய்விட்டதே. இந்த அருணும் சொல்லவில்லையே”. அவனைப் பார்த்தாள். அவன் தெரியாதது போல் சிரித்துக் கொண்டான். “காணிக்கு நான்தான் பொறுப்பு. அதனால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க சிபார்சு செய்து விட்டேன்”. கூறினார்.
“இந்தக் கிராமத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்ட இன்னொருவரையும் அறிமுகம் செய்கிறேன். அவர்தான் திரு.அருண். அவரது சிபார்சில்தான் இத்தனை நிறுவனங்களும் வந்துள்ளன”. சொல்லிக் கொண்டு போனார். கயல்விழியின் கண்கள் அருணை வலம் வந்தன. நன்றியால் நனைந்தாள். “இன்று பகல் உணவுக்குப் பின் நாங்கள் அனைவரும் உங்களோடு இருந்து உங்கள் தேவைகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இப்போது நூலகத்தினை யூனிசெவ் நிறுவனர் திரு.குலேந்திரன் பார்வையிட்டு நூல்களை அன்பளிப்புச் செய்வார்.’ பேச்சை நிறுத்தினார்.
குலேந்திரன் நூலக அறையை நோட்டம் விட்டார். கயல்விழியையும், மங்கையையும் அழைத்தார். “இந்த நூல்களை இவர்களிடம் ஒப்படைக்கின்றேன். பயன் பெறுவது உங்களது பொறுப்பாகும்.” என்றார். நூல்களை வழங்கினார். “பூ..இவ்வளவுதானா”? சிலரின் வாய்களில் இருந்து வார்த்தைகள் வழுக்கி விழுந்தன. அங்கே பக்கத்தில் நின்ற லொறியைப் பார்த்தார். கையை அசைத்தார். பல பெட்டிகள் இறக்கப்பட்டன. சாந்தன் குழுவினர் புத்தகங்களை அறையினுள் கொண்டு சென்றார்கள். நீண்ட மேசைகள் ஐந்தும், கதிரைகளும் இறக்கப்பட்டன. “இவ்வளவும் நமக்கா?” அதே மக்கள் கூறினார்கள். புத்தகங்கள் வைப்பதற்கான அலுமாரிகள் ஐந்தும் இறக்கப்பட்டன. “இதற்குப் பொறுப்பாக சாந்தன் அவர்களை செல்வி கயல்விழி சிபார்சுவு செய்துள்ளார். அவர் பொறுப்பாக இருப்பார். அவருக்குத் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு யூனிசெவ் மாதாமாதம் நிதியுதவி செய்யும்”;. சாந்தனுடைய கைகளைக் குலேந்திரன் பிடித்து உயர்த்தியவாறு கூறினார். மக்கள் ஆரவாரித்தனர்.
‘மக்களுக்காக’ என்ற நிறுவனத்தின் வாகனங்கள் வந்தன. அந்த நிறுவனத்தின் முகாமையாளர் திரு. கங்காதரன் இறங்கி வந்தார். அருண் அவரை அழைத்து வந்தான். கயல்விழியை அழைத்தான். “நான் சொன்ன பெயரப்பட்டியல் இருக்கிறதா? எடுங்க பார்ப்பம்.” என்றான். மங்கை “இதோ” என்று நீட்டினாள். “இரண்டு பேரும் ரெடியாகத்தான் இருக்கிறிங்க”. சிரிப்போடு பெற்றுக் கொண்டான். அருண் கங்காதரனை அறிமுகம் செய்தான். உங்கள் கிராமத்தின் வளங்களை இனங்கண்டு எங்கள் நிறுவனத்திடம் உதவி கேட்டிருந்தீர்கள். அதனை பிரதேசச் செயலாளர் முன்னுரிமை கொடுத்துச் சிபார்சு செய்திருந்தார். மீன், இறால், நண்டு பிடிப்பதற்கான தோணி. வலைகளையும், அதற்கான பயிற்சிகளையும் தருவதற்காக வந்துள்ளோம். தோணிகள் வந்து கொண்டிருக்கி;ன்றன. எப்படியம் இரண்டு மணியாகும். வந்தவுடன் நீங்கள் தந்த பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களுக்கு அவற்றைத் தருவோம்.” என்றார். சனங்களுக்குச் சந்தோசம். கைதட்டி மகிழ்ந்தார்கள்.
பிரதேசச் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கி விளையாட்டு உபகரணப் பொதிகளை ஒரு நிறுவனம் வழங்கியது. பாடசாலைக்குரிய விளையாட்டுப் பொதிகளைப் பாடசாலையில் வழங்க முடிவெடுக்கப் பட்டது. அதிபரின் அழைப்பை ஏற்றுப் பாடசாலைக்குச் சென்றார்கள். கல்வித் திணைக்களத்தின் வாகனம் வந்தது. அதிபர் வாசலுக்குப் போய் கல்விப் பணிப்பாளரை “நீங்கள் சொன்னபடி வருவீர்கள் என்று தெரியும். வாங்க சேர்” வரவேற்றார். ஒரு வகுப்பறையில் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுந்தரத்தார் சுறுசுறுப்பாக இயங்கினார். ஆசிரியர்கள் இன்முகத்துடன் விருந்தினர்களை வரவேற்றார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களும், மாணவியரும் ஒத்துழைத்தார்கள். கயல்விழியும் மங்கையும் பகிர்தலில் ஈடுபட்டார்கள். ஏனைய ஆசிரியர்களும் பங்கு கொண்டார்கள்.
“நமக்காகத்தானே இவர்கள் வந்துள்ளார்கள். அவர்களை அன்போடு உபசரிப்பது நமது கடமை” என்று ஊர்மக்கள் செயற்பட்டார்கள். அடிக்கடி அருணை கயலின் கண்கள் வட்டமிட்டன. அவளை அறியாமலேயே அவனைப் பார்க்க மனம் ஆவலாய் இருந்தது. உண்டு கொண்டே பாடசாலைத் தேவைகளை கல்விப் பணிப்பாளர் குலேந்திரனுக்க விளக்கினார். குலேந்திரன் தான் எடுத்த முடிவுகளை விளக்கினார்.
“மூதூர் கிழக்கில் பதினைந்து பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளோம். அதுபற்றி நீங்கள்தானே சிபார்சு செய்திருந்தீர்கள். அதில் மேலதிகமாக வகுப்புக்களை நடத்தி இழந்த கல்வியை ஈடுசெய்யும் திட்டத்தை நடைமுறைப் படுத்த நிதிவசதியிருக்கிறது. அத்துடன் கட்டைபறிச்சானில் இரண்டு பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக் குறைபற்றி நீங்கள் சிபார்சு செய்ததைப் பர்த்தேன். அந்த வகையில் பத்து ஆசிரியர்களுக்கு இரண்டு வருடத்துக்கான கொடுப்பனவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஆறு முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு வழங்கவுள்ளோம்.” குலேந்திரன் விளக்கமாகச் சொன்னார். கல்விப்பணப்பாளர் நன்றியைத் தெரிவித்தார்.
அலுவலர்களோடு வந்த அனைவரையும் அழைத்து உணவு கொடுத்து உபசரித்தார்கள். “இந்த மக்கள் எவ்வளவு நன்றி விசுவாசம் உள்ளவர்கள். தங்களுக்கு இல்லாவிட்டாலும் தங்களை நாடிவருபவர்களுக்குக் கொடுக்கும் பண்பு கொண்டவர்கள்.” வந்தவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள். உணவின் பின் அதிபர் அலுவலகத்தினுள் சென்றார்கள். குலேந்திரன் தொண்டர் ஆசிரியர்களது கடிதத்தில் கல்விப் பணிப்பாளரின் சிபார்சினைப் பெற்றுக் கொண்டார். பாடசாலைக்குரிய புத்தகங்களையும் விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்தார்கள். இரண்டரை மணிக்குக் கோயிலடிக்குச் சனெ;றார்கள்.
மீன்பிடி உபகரணங்கள் முப்பது பேர்களுக்கு வழங்கப்பட்டன. பதினைந்து பேருக்கு வியாபாரம் செய்வதற்கான பெட்டி, தராசு அடங்கிய சைக்கிள் வழங்கப்பட்டன. அவரவர் தமது பெயர்களை அறிவித்ததும் வந்து பெற்றுக் கொண்டனர். “கிராம அபிவிருத்தி அலுவலர் என்ற வகையில் வந்திருக்கும் நிறுவனங்களின் அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். சிறப்பாக எனக்கு வழிகாட்டும் பிரதேச செயலாளரருக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். இதற்கெல்லாம் மூலகாரண சக்தியாக இருந்து இயக்கும் கயல்விழிக்கும் அவரது குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்”. அருண் கூறிமுடித்தான்.
கயல்விழி இருகரம் கூப்பினாள். “எனக்கு என்ன கூறுவதென்று தெரியாமல் தவிக்கிறேன். நான் பலருக்குக் கடமைப் பட்டுள்ளேன். முதலில் எனக்கு வலது கரமாக இருக்கும் திருமங்கை, சாரதா, ராகினி, சுலோச்சனா, தம்பி சாந்தன் மற்றும் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் இல்லாவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது. எங்கள் அதிபர் திறமைசாலி. எங்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர். நாங்கள் மதிக்கும் ஒரு மாமனிதன் இருக்கிறார் என்றால் அவர் எங்கள் பிரதேசச் செயலாளர் சிவநாயகம்தான். அவர்தான் இந்தச் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தை அமைப்பதற்கான வழிகாட்டி”. கயல்விழியின் கண்கள் உணர்ச்சியினால் கலங்கின. அவள் தொடர்ந்தாள்.
“யூனிசெவ் நிறுவனத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். அதேபோல் கல்விப்பணிப்பாளர், இங்கே வந்து பேருதவி செய்த அத்தனை நிறுவனர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எங்களுக்கு உதவுபவர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் என்ன நினைக்கிறோமோ. அதனை அவர் உணர்ந்து செயலில் காட்டிவிடுகிறார். பிரதேச செயலாளரினால் அனுப்பட்ட எங்கள் கிராம அபிவிருத்தி அலுவலர் திரு.அருண் அவர்கள். அவருக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். எல்லோரையும் தொடர்ந்தும் அனர்த்தங்களால் அல்லல் உற்ற மக்களுக்குச சேவையாற்ற அழைக்கிறோம்”. பேசிமுடித்தாள்.
அனைவரும் விடைபெற்றார்கள். வாகனங்களில் ஏறிக் கnhண்டார்கள். “அருண்! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாது. சொல்லாமலே பலவற்றைச் செய்திருக்கிறீங்க.” அவள் உருகிநின்றாள். “கயல் உங்கள எனக்கு எப்பவோ தெரியும். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது எனது கடமை. போகப் பொகத் தெரியும். மனதைப் போட்டுக் குழப்பாமல் வேலையைக் கவனியுங்க. நான் நாளை மறுநாள் வாறன்”. அவன் புறப்பட்டான். “போன் பண்ணுங்க”. கூறினாள். வாகனங்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP